விசுவும் முதிய சாதுவும்

This entry is part 1 of 30 in the series 17 பிப்ரவரி 2013
(ஜப்பானியக் கதை)
(ஜப்பானில் வழிபாட்டின் முக்கியத்துவத்தைச் சொல்லும் அதே நேரத்தில், தங்கள் வேலைகளைச் செய்வதும் எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துக் காட்டும் கதை)
பற்பல வருடங்களுக்கு முன்பு, சுருகா என்ற தரிசு நில வெளியின் நடுவில் காட்டுவாசிகள் வாழ்ந்து வந்தனர்.  அதிலொருவன் விசு.  அவன் உருவம் பெரியது.  அவன் நிலத்தில் பயிர் விளைத்துத் தன் மனைவியுடனும் குழந்தைகளுடனும் வாழ்ந்து வந்தான்.
ஒரு நாள் அவன் குடிசைக்கு ஒரு முதிய சாது வந்தார்.  அவனது மனைவி பெரியவருக்கு உணவளித்து  அமர வைத்தாள்.  அப்போது அவர் அவனிடம், “காட்டுவாசியே.. நீ எப்போதும் வேலையை மட்டுமே செய்கிறாய். கடவுளை வழிபடுவதில்லை என்று எண்ணுகிறேன். சரிதானே?” என்று கேட்டார்.
அதற்கு விசு மிகவும் பணிவுடன், “உங்களுக்கு மனைவியும் பெரிய குடும்பமும் இருந்தால், நீங்களும் எப்போதும் கடவுளை வழிபட மாட்டீர்கள் என்பது நிச்சயம்..” என்று மறுமொழி கூறினான்.
அவனுடைய வார்த்தைகள் சாதுவை கோபப்படுத்தியது.  கடவுளை வழிபடாமல் இருப்பதால், மறுபிறப்பில் தவளையாகவோ, எலியாகவோ, சின்ன பூச்சியாகவோ பல இலட்சப் பிறப்புகளைப் பெற வேண்டியிருக்கும் என்று அச்சுறுத்தினார்.  அவர் சொன்ன விஷயங்கள் விசுவிற்கு சற்றும் பிடிக்கவில்லை.  சாதுவோ, அவனை விடுவதாக இல்லை.  சாது பலவாறு சொன்ன சொற்கள், கடைசியில் அவனை மாற்றியது. அவன் “நான் இனிமேல் வழிபாடு செய்கிறேன்” என்று சத்தியம் செய்தான்.
சாது கிளம்பும் போது, “வேலை செய்.. வழிபாடும் செய்..” என்று அறிவுறுத்திச் சென்றார்.
விசு சாது சொன்ன கடைசி வார்த்தைகளில், “வழிபாடு செய்..” என்பதை மட்டும் வேதவாக்காகக் கொண்டு, அன்றிலிருந்து வழிபடுவதை மட்டுமே தன் வேலையாகக்  கொண்டான்.
நாள் முழுவதும் வேறு வேலை எதுவுமே செய்யாமல், வழிபட்டுக் கொண்டே இருந்தான்.  அவன் வயலில் பார்பாரற்று நெற்கதிர்கள் காய்ந்து போயின.  எவ்வளவு தான் முயன்றும், மனைவியால் வீட்டிற்குத் தேவையான பொருட்களையும் உணவுகளையும் வாங்கும் அளவிற்கு சம்பாதிக்க முடியவில்லை.  மனைவியும் குழந்தைகளும் பட்டினியால் வாடினர்.  ஒரு போதும் கடுஞ்சொற்கள் சொல்லியிராத மனைவி கூட, அவனது போக்கைக் கண்டு பெரிதும் வருந்தி, கோபப்பட்டு, மிகவும் மெலிந்து போயிருந்த குழந்தைகளின் உடல்களைக் காட்டி, “விசு.. எழுங்கள்.. கோடாரியை எடுத்துக் கொண்டு கிளம்புங்கள்.  வழிபடுதலை விட்டு எங்களுக்கு உதவி செய்யுங்கள்..” என்று ஆத்திரத்துடன் சொன்னாள்.
மனைவியின் இந்தப் பேச்சு, அவனைப் பெரிதும் பாதித்தது.  சரியான பதிலைத் தேட எத்தனித்தான்.  சற்று யோசனைக்குப் பின், அவன் சொன்ன வார்த்தைகள் மனைவியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
“பெண்ணே.. கடவுளுக்குத் தான் முதலிடம். நீ ஒன்றிற்கும் உதவாத ஜீவன்.  உன்னிடம் எனக்கு இனி எதுவும் கிடையாது..” என்று கூறிவிட்டு, கோடாலியை கையில் எடுத்துக் கொண்டு, கிளம்புவதாகக் கூட சொல்லாமல், வீட்டை விட்டுக் கிளம்பினான்.  புஜியாமா மலையின் மீது ஏறினான்.  சிறிது நேரத்தில் மேக மூட்டத்தின் நடுவே மறைந்தும் போனான்.
மனைவி செய்வதறியாது ஸ்தம்பித்துப் போனாள்.
விசு மலையின் மேல் ஏறி, பாறைகளைக் கடந்து உச்சியை நோக்கிச் சென்றான்.  களைப்பினால், சற்று இளைப்பாற எண்ணி ஓரிடத்தில் அமர்ந்தான்.  வழிபாடு செய்ய ஆரம்பிக்க எண்ணினான்.  நன்கு அமர்ந்து கொண்டு வழிபாடு செய்ய எத்தனித்த போது, மிக மெல்லிய ஓசை கேட்டது.  அங்கிருந்த ஒரு புதரிடையே ஒரு நரி ஓடியதைக் கண்டான்.  நரியைக் கண்டது அதிர்ஷ்டம் என்று எண்ணிய விசு, வழிபடுவதை மறந்து, வேகமாக எழுந்து, அந்தக் கூரிய மூக்குக் கொண்ட சின்ன ஜந்துவைத் தேடி இங்குமங்கும் ஓடினான்.
ஓடிக் களைத்து தேடுவதை நிறுத்தத் துணிந்த போது, ஒரு பெரிய வெட்ட வெளிப் பகுதிக்கு வந்து விட்டிருந்தான்.  அங்கு ஒரு சிறிய ஓடையருகே இரண்டு பெண்கள் விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டான்.  அவர்களைக் கண்டு, அவர்கள் ஆடும் விளையாட்டைக் கண்டு அப்படியே மெய்மறந்து போன விசு, அப்படியே அங்கேயே அதைப் பார்த்துக் கொண்டு உட்காருவதை விட்டு வேறு எண்ணம் கொள்ளவில்லை.
முடிவேயில்லாத அந்த விளையாட்டில், சிறுசிறு காய்களை நகர்த்தும் சத்தமும் ஓடையின் மெல்லிய சலசலப்பும் தவிர வேறு எந்த சத்தமும் இல்லாமல், அமைதியாக இருந்தது.  பெண்கள் இருவரும் விசுவைக் கண்டு கொள்ளவேயில்லை.  அந்த முடிவற்ற விந்தையான விளையாட்டை மிகவும் கவனமாக விளையாடினார்.
அந்தப் பெண்களை விடுத்து வேறு எதிலும் திசை திருப்ப முடியாமல், விசு விளையாட்டிலேயே ஒன்றிப் போனான்.  அவர்களது பெரிய கரிய கூந்தலையும் காய்களை நகர்த்த அவர்கள் நீண்ட ஆடையிடையே கை மட்டும் வெளியே வந்து வந்து போவதை மட்டுமே கண்டான்.
நீண்ட நெடுநேரம் அப்படியே பார்த்துக் கொண்டிருந்த பின்னர், ஒரு கோடை மதியம் என்று மட்டுமே எண்ணிய விசு, அவர்களில் ஒருத்தி தவறாகக் காய் நகர்த்துவதைக் கண்டு, “தவறு அழகிய பெண்ணே..” என்று உற்சாகத்துடன் கூறினான்.
அந்த நொடியில், இருவரும் அவன் இருப்பதை உணர்ந்ததும், நரியாக மாறி ஓடி ஒளிந்தனர்.
விசு அவர்களைத் துரத்த எண்ணி, எழ முயன்றான்.  நெடுங்காலம் ஆகியிருந்ததால், அவன் திகிலடையும் அளவிற்கு, அவனது கைகள் கெட்டியாகிப் போயிருந்தன. தலை முடி வெகுவாக வளர்ந்திருந்தது.  தாடி நிலத்தைத் தொட்டது.  அவனது கோடாலி உழுத்துப் போய் துகளாகிவிட்டிருந்தது.
மிகவும் பிரயத்தனப்பட்டு, கடும் வலியுடன் எப்படியோ எழுந்து நின்றான்.  சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின்னர், மிகவும் மெல்ல மெல்ல எட்டு வைத்து நடந்தான்.  பல மணி நேரம் கழித்து, மலையடிவாரத்தை அடைந்தான். பின்னர் தன் வீட்டை நோக்கி நடந்தான். அவன் வீடு இருந்த இடத்தை அடைந்ததும், அங்கு குடிசை இல்லாததைக் கண்டு அதிர்ந்தான்.  அங்கிருந்த மூதாட்டியி;டம், “அம்மா.. என்னுடைய வீடு இங்கு தான் இருந்தது.  அதைக் காணவில்லையே?” என்று கேட்டான்.
மூதாட்டி எதோ பைத்தியம் என்று எண்ணி, அவன் பேசுவதைக் கேட்க விரும்பாமல் நகர்ந்தார்.  ஆனால் விசு, மேலும், “நான் இன்று மதியம் தான் வீட்டை விட்டுச் சென்றேன்.. மாலையில் அது எப்படி இல்லாமல் போனது.. அதிசயமாக இருக்கிறதே..” என்றான்.
ஏதோ விநோதமான ஆசாமியாக இருப்பதாக எண்ணிய மூதாட்டி “உன் பெயரென்ன?” என்று கேட்டார்.
“என் பெயர் விசு..” என்றான் உடனே.
“அடடா.. விசுவா?  முட்டாளே.. விசு என்பவன் முன்னூறு வருஷங்களுக்கு முன்பு இங்கு இருந்ததாகச் சொல்லிக் கேள்விப்பட்டு இருக்கிறேன்.  அவன் ஒரு நாள் வீட்டை விட்டுச் சென்றவன் திரும்பவில்லை என்று தான் சொன்னார்கள்..” என்ற பழங்கதையைக் கூறினாள்.
“முன்னூறு வருடங்களா? இருக்கவே இருக்காது.. எங்கே என்னுடைய மனைவியும் குழந்தைகளும்..” என்றான் அதிர்ச்சியுடன்.
“பூமிக்குள் புதைக்கப்பட்டிருப்பார்கள்.  நீ சொன்னது உண்மையானால், உன்னுடைய குழந்தைகளும், அவர்களது குழந்தைகளும் கூட மண்ணுக்கடியில் போயிருப்பார்கள்.  மனைவிக்கும் குழந்தைகளுக்கும் நீ செய்த கொடுமைக்குத் தண்டனையாக கடவுள் தான் உனக்கு முன்னூறு வருடங்கள் வாழ்க்கையை நீடித்திருப்பார் போல..” என்று தன் கருத்தை வெளியிட்டார் மூதாட்டி.
விசுவின் கண்களில் இதைக் கேட்டு, நீர் சுரந்தது.  கண்ணீருடன் மிகவும் மெல்லிய குரலில், “என்னுடைய மானுட வாழ்க்கையை முழுவதுமாக இழந்து விட்டேனே.. என்னுடைய அன்பானவர்கள் வாடிய போது, என் உதவி தேவைப்பட்ட போது, நான் கடவுளே முதன்மையானவர் என்றெண்ணி, வழிபாடு மட்டுமே செய்தேன்.  என்னுடைய கடைசி வார்த்தைகளை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வழிபாட்டை வேலையைச் செய்து விட்டுச் செய்யுங்கள்..” என்றான்.
இந்த விந்தையான அனுபவத்திற்குப் பிறகு, விசு எவ்வளவு காலம் வாழ்ந்தான் என்பது யாருக்கும் தெரியாது.  இன்று வரையிலும், அவனது வெள்ளை ஆவி நிலவொளி மிகவும் அதிகமாக இருக்கும் போது, புஜியாமா காட்டில் நடமாடுவதாக சொல்லிக் கொள்கின்றனர்.
Series Navigationஎழுத்து
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Comments

  1. Avatar
    Sivakumar N, New Delhi says:

    வழக்கம் போல நல்ல ஒரு நாடோடிக்கதை தந்துள்ளீர்கள் நன்று!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *