இரண்டு ஏக்கர் நிலம்- சிறுகதை

This entry is part 3 of 26 in the series 24 பிப்ரவரி 2013

‘ஏம்மா… கூடைய ஒரு ஓரமா சீட்டுக்கு அடியில தள்ளலாமில்ல..  இப்படி
மத்தியில வச்சிருக்கியே..  மத்தவங்களும் நிக்க வேண்டாம்’ கடா மீசையோடு
வெள்ளை வேட்டி சட்டையுமாய் நின்று கொண்டு  வந்த  அந்த ஆஜானுபாவமான மனிதர்
நெற்றி புருவம் மேலேறியபடி சொல்ல…
‘ஆங்… கூடைக்கும் சேத்துத்தான் டிக்கெட் வாங்கிருக்கேன்… அது
அப்படித்தான் இருக்கும்… நீ வேணுமின்னா உடம்பு நோகாம சொகுசா கார்ல
வரவேண்டியது தானே…’ வெடுக்கென்று அந்த மூதாட்டி சொல்ல…

‘ஒரு கூடைக்கு டிக்கெட் வாங்கிட்டா… பஸ்சையே  வெலைக்கு வாங்கிட்டதா
நெனெப்பா.. கொஞ்சம் தள்ளி வை பாட்டி… அந்த இடத்தில ரெண்டு பேரு
நிக்கலாம்…’

‘அதெல்லாம் முடியாது… கூடையில பழம் இருக்கு.. உள்ளே இருக்கிற பழம்
நசுங்கினா நீயா பணம் கொடுப்ப.. சும்மா வாயை மூடி நின்னுட்டு வாய்யா…’
வாயில் வெற்றிலையை குதப்பியபடி.. அவள் பேசப் பேச வாயிலிருந்து வெற்றிலைச்
சாறு சிதறியது…

‘என்னமோ இடத்த பட்டா போட்டு கொடுத்த மாதிரியில்ல பேசற… உன்னச் சொல்லி
குத்தமில்ல..  இதையெல்லாம் ஏத்தின கண்டக்டர சொல்லனும்…’ பேச்சில் தன்
பெயர் அடிப்பட்டவுடன்…. நடப்பதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த
கண்டக்டர்…

‘என்னம்மா காலையிலே தகராறு பண்ண வந்திட்டியா… கொஞ்சம் தள்ளித்தான்
வைம்மா கூடையை… மத்தவங்களும் நிக்கவேணாம்’  தானும்  ஒரு  அதட்டு
அதட்ட…  ‘கறாரா பேசி கூடைக்கும் சேர்த்து டிக்கட் வாங்கிட்டு…
பேசறதப்பாரு…’ முனகியபடியே சீட்டுக்கு அடியில் கொஞ்சம்  நகர்த்தினாள்.

நடந்த களேபரத்தில்… கண்ணயர்ந்திருந்த சிவராமனுக்கு விழிப்பு
தட்டுப்பட்டு… தன் . இரண்டு  ககைகளால் கண்களை  துடைத்தபடியே தான்
இறங்கும் ஊர் வந்துவிட்டதா என்று கண்களைச் சுருக்கி பஸ்ஸின் ஜன்னல் வழியே
வெளியே பார்க்க… காரணோடை… இரண்டு கிலோ மீட்டர் என்று மைல்கல்
பின்னோக்கி   சென்றபடியே  அறிவித்தது.

‘ஏண்டா சின்னசாமி… என்ன காலாங்காத்துல தூங்கி வழியிறயா..  எத்தனமுற போன
அடிக்கறது… கரண்ட்  மூணு  மணிக்குத்தான்  வருமாம்…  நீ என்ன பண்ற
விழுப்புரத்துக்கு போயி உரத்தையும் விதை நெல்லையும் வாங்கிட்டு
வந்திடு… ஒரு வேளையாவது ஒழுங்கா முடியும்..  மசமசன்னு கொல்லையிலே
தூங்கி வழியாதே…’ கைப்பேசியில் காட்டு கத்தலில் யாரையோ அதட்டிக்
கொண்டிருந்தார் ஒருவர்.

அவ்வளவு கூட்ட நெரிசலிலும் பஸ்ஸில் அமர்ந்திருப்பவர்கள் ஆர்வமாக பஸ்ஸில்
ஓடிய வீடியோவில் படத்தை பார்த்தவாறு இருந்தனர். ஒரு நிறுத்தத்தில்
பள்ளிச் சீருடை அணிந்த பையன்களும் பெண்களும் முண்டி அடித்துக் கொண்டு
பஸ்ஸில் ஏற… மேலும் பஸ்ஸில் நெருக்கம் அதிகரித்தது.

‘ஓசில பஸ் விடறாங்கன்னு… அடுத்த ஸ்டாப்பில இருக்கிற ஸ்கூலுக்கெல்லாம்
பஸ்ல ஏறுதுங்க… நாங்க எல்லாம் ரெண்டு மைல் நடந்து போயி படிச்சோம்… ’
பக்கத்தில் இருந்த பெரியவர் தன்னிடம் பழைய புராணத்தை ஆரம்பித்து வைக்க…

‘பஸ்ஸுல சும்மாவா வருதுங்க… படிக்கிற வயசிலே செல்போன்… காதில எதையோ
மாட்டிக்கிட்டு… தலையை இங்கையும் அங்கையும் ஆட்டி… அதையே முறச்சி
பாத்துகிட்டு… அதில பாட்டு கேக்குதா…இல்ல படம் பாக்குதான்னு தெரில..
ம்.. காலம் ரொம்பத்தான் கெட்டுப் போச்சு…’ பின்னால் இருந்தவர் மேலும்
தொடர்ந்தார்.

அவர்கள் சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை… முன்பெல்லாம் கிராமத்திற்கு
செல்லும் வழியெங்கும் விவசாய உரங்ககள், பூச்சிக்கொல்லி மருந்து,
துணிக்கடல் விளம்பரங்கள் நிறைந்து இருந்த காலம் போய்… செல்போன் விளம்பர
பேனர்களும்… மொபைல் ஷாப்புகளும்… வயல்களின் இடையே  செல்போன்
டவர்களும் அந்த இடங்களை ஆக்கிரமித்து இருந்தன. காலம் தான் எவ்வளவு
முன்னேறிவிட்டது…  கிராமங்களும் கொஞ்சம் கொஞ்சமாக தன் சுய முகத்தை
தொலைத்து   நகர வாசனையை அப்பிக் கொண்டு வந்ததை கண் கூடாக பார்க்க முடிந்தது.

‘இங்க பாருங்க.. ஊருக்கு போனோமா… உங்க அண்ணன் சொன்னபடி சொத்த
பிரிச்சோமா.. வீட்டுக்கு வந்தோமான்னு இருக்கனும் தெரிஞ்சதா… அங்க
போனதும்  அவுங்க கஷ்டத்த பார்த்து.. மனசு  மாறிப்போச்சுன்னு..  கர்ண
பரம்பரையில வந்தவர் மாதிரி கெடக்கறதையும் கோட்ட விட்டுட்டு
வந்திடாதிங்க…’

‘நமக்கு எதுக்கு சங்கீதா அந்த சொத்து…  நம்ம ரெண்டு பேரு வருமானமே
போதுமெ… பாவம் அண்ணன்… ரெண்டு பொண்ணுங்க வச்சிருக்கார்…  நெலத்தில
வர்ர வருமானம் மட்டும் தான்.. வேற என்ன வருமானம் இருக்கு… அவர்தான்
வச்சிக்கிட்டுமே…’

‘பாத்தீங்களா… இங்கேயே இப்படி பேசறீங்க… அங்க போய் அப்படியே அள்ளி
கொடுத்திட்டு வந்தீங்க… அப்புறம் நான் பொல்லாதவளா மாறிடிடுவேன்… என்ன
சொல்றதெல்லாம் காதில விழுதா…’

‘சரி… சரி… ‘ பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டினான்.

‘அது நமக்கு வரவேண்டிய பூர்விக சொத்துதான்..  நானும் அடுத்தவங்க
சொத்துக்கு ஒன்னும் ஆசைப்படல…
தான் நியாயமாக பேசுவதா அவள் பதில் சொல்ல… மனைவி சங்கீதாவின்  நேற்றைய
குரல் வந்த வேலையை ஞாபக மூட்டியது..

‘காரனோடை புளிய மரம்… ’ கண்டக்டர் விசில் அடித்து பஸ்ஸை நிறுத்த..
இறங்கியவர்களோடு  சேர்ந்து  சிவராமனும் இறங்கினான். திருமணமான கடந்த
பத்து வருடத்தில்… வருடத்திற்கு மூன்று… நான்கு  முறை வருபவன்…
படிப்படியாக கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக… வருடத்திற்கு
இரண்டு அப்பறம் அதுவும் குறைந்து ஒரு முறை… இறுதியில் ஏதாவது விசேஷம்
என்றால் மட்டும் வருவது என்றாகி.. சுத்தமாக பிறந்த கிராமத்திற்கு வருவதே
நின்று விட்டது. அதற்கு காரணம் சிவராமனின் காதல்  மனைவி… அவள்
சென்னையிலே  பிறந்து  வளர்ந்தவள்…  கிராமத்து   வாசனை  அறவே
பிடிப்பதில்லை…  சென்னையில்  ஏசியிலே  உழன்றவளுக்கு  கூறை  வீடும்…
கப்பி  சாலையும்..  பனையோலை  பாத்ரூமும் பிடிக்காமல் போனதில் ஆச்சிரியம்
இல்லை தான்.

கடந்த மூன்று வருடங்களாக சொந்த கிராமத்திற்கே வருவதையே
நிறுத்திவிட்டவன்…  கடைசியாக ஆறு மாதத்திற்கு முன் வந்ததுதான்..
அதுவும்  அம்மாவின் மரணத்திற்காக…  அதற்கு மட்டும் இரண்டு நாட்கள்
பல்லை கடித்து இருந்த அவன் மனைவி… தன்  வேலையை  சாக்காக  சொல்லி
சென்னை திரும்பி விட… பெற்ற அம்மாவுக்காக  காரியம்  வரைக்கும்  இருந்து
விட்டு  சென்ற  சிவராமன் இப்பொழுது தான் வருகிறான்… அதுவும் மனைவியின்
வற்புறுத்தலால் பூர்விக சொத்தை பாகப்பிரிவினை பண்ணவேண்டி. அதில் அவனுக்கு
துளியும் விருப்பம் இல்லைதான்… என்ன செய்ய…

‘அடடே.. சிவராமா… எப்படி இருக்கே…. அம்மா சாவுக்கு பாத்தது’  டீயை
லாவகமாக வானத்திற்கும் பூமிக்கும் ஆற்றியபடியே நண்பனும் டீக்கடை
முதலாளியுமான மாரிமுத்து கேட்க.. வழக்கம் போல டீக்கடை பெஞ்சில்
பெரிசுகளும் ஒரு சில வெட்டி பேர்வழிகளும் ஊர்க்கதையை பேசியபடி
தினத்தந்தியை படித்துக் கொண்டிருந்தனர்.

‘நல்ல இருக்கேன் முத்து… நீ எப்படி இருக்கே…’

‘அதான் பாக்கறயே.. என்ன நீ மட்டும் தனியா.. பெண்டாட்டி பிள்ளைங்கல
கூட்டிட்டு வரல..‘

‘அவசரமா ஒரு ஜோலியா வந்தேன்..   நாளைக்கே கிளம்பிடுவேன்… எதுக்கு
அவங்களையும் கூட்டிட்டு… உன் பிஸினஸ் எப்படி போயிட்டு இருக்கு..’

‘நமக்கு என்னப்பா… எப்பவும் போலத்தான்…’

‘சரி.. சாயந்திரமா பேசறேன்’  சொல்லிவாறே அண்ணனின் வீட்டை நோக்கி நடையை கட்டினான்.

கிராமத்து தெரு வீதிகள் தங்கள் பழைய அடையாளங்களை விட்டு மாறிப்போய்
இருந்தன… முன்பெல்லாம் கூரை வீடாக இருந்தாலும் திண்ணை வைக்காத வீடுகளை
விரல் விட்டு எண்ணிவிடலாம்… இன்றும் விரல் விட்டு எண்ணலாம் திண்ணை உள்ள
வீடுகளை.. அவை ஓட்டு வீடுகளாகவும்…. கான்கீரிட் வீடுகளாகவும் மாற்றம்
அடைந்திருந்தன. நடுநடுவே ஒன்றிரண்டு மாடி வீடுகளும் முளைத்திருந்தன…
ஆடு, மாடுகள்,  வீட்டின் வாசல்களில் கட்டாமலும்.. நாற்றம் அடிக்காமலும்..
. வீதியில் கண்டமேனிக்கு மேயாமலும் தெரு சுத்தமாக இருந்தது கொஞ்சம்
ஆறுதல் தந்தது… அதற்குப் பதில் பைக் வண்டிகள்  எருமை மாட்டைப் போல
வாசலில் நிறுத்தபட்டிருந்தன… சில வீடுகளில் கார்களும் நிறுத்தி
இருக்க… கிராமத்தின் முன்னேற்றத்தைக் காட்டியது..

சிவராமன் எட்டாவது படிக்கும் போதே அப்பா இறந்துவிட.. தன் இரண்டு
பிள்ளைகளையும் வளர்க்க அம்மா பட்ட கஷ்டத்தை நினைத்தப் பார்த்தான்.
அதிலும் பிளஸ்2 இறுதித் தேர்வில் அந்த கிராமத்திலே முதலாம் மாணவாய் வந்த
போதிலும்… அப்பாவின் திடீர் இறப்பால் வீட்டையும் வயலையும் கவனிக்க தன்
படிப்பை தொடராமல் பாதிலே நிறுத்திய அண்ணன் கணேசன் மேல் சிவரானுக்கு
கொள்ளைப் பிரியம். அண்ணனின் அயராது உழைப்பால் அப்பா விட்டுச் சென்ற
இரண்டு ஏக்கர் நிலம் சிறுக சிறுக உயர்ந்து  நான்கு ஏக்கராக பெருகியது.

தான் படிக்க ஆசைப்பட்ட கல்லூரிப் படிப்பை தன் தம்பி சிவராமனாவது படிக்க
வேண்டுமென அவனை சிரமம் பாராமல் படிக்க வைத்தது. அதற்கேற்றாப் போல
சிவராமனும் வீட்டின் பொருளாரத்தையும் அண்ணனின் கஷ்டத்தையும் உணர்ந்து
பிளஸ்2வில்  நல்ல மதிப்பெண்கள் எடுத்து.. எஞ்ஜினிரீங் படித்து… காம்பஸ்
இன்டெர்வியு மூலம் தானே வேலையைத் தேடியது எல்லாம் நடந்த முடிந்த கதை…
அவர்களின் அண்ணன் தம்பி உறவைப் பார்த்து ஊரே பார்த்து வியந்தது. அப்படிப்
பட்ட அண்ணனிடம் சொத்தைப் பிரித்து வருமாறு மனைவி சொன்னதை அவனால்
ஜீரனிக்கமுடியவில்லைதான்.. என்ன செய்ய… அந்தப் பிரச்சினை மட்டும்
வராமலிர்ந்தால்…

அம்மாவுக்கு காரியம் முடிந்து சொந்த பந்தங்கள் எல்லாம் வந்த வேலை
முடிந்து கிளம்பிருக்க… காரியத்துக்கான செலவை சிவராமன்  ஐயர்,
சமையல்காரர், பால்காரர், மளிகை கடைக்காரர், பந்தல் போடுபவர்கள் என வேலை
செய்தவர்கள் அனைவருக்கும் எண்ணிக் கொடுத்து முடித்து.. களைப்பாய்
திண்ணையில் சாய… அருகில் வந்த சங்கீதா..

‘ஏங்க… நமக்கும் ஒரு பையன் இருக்கான் தெரியுமில்ல..’

‘ஆமா.. அருண்… அவனுக்கென்ன.. எங்க காணமா…. இப்பத்தானே பார்த்தேன் இங்க..’

‘என்ன நக்கலா உங்களுக்கு…. ‘

‘என்ன சங்கீதா.. என்ன சொல்ல வர்ற…’

‘இப்படி வர்ற போறவங்க எல்லாருக்கும் நீங்களே வாறி கொடுத்திட்டே
இருந்தா… நாமா தெருவில நிக்க வேண்டியது தான்… ஆமா.. தெரியாமத்தான்
கேக்கறேன்… நீங்க மட்டும் தான் உங்க அம்மாவுக்கு போறந்தீங்களா..

‘ஏய்.. என்ன பேசோரோம்ன்னு தெரிஞ்சிதான் பேசரீயா…’ அவள் போட்ட
சத்தத்தில் பக்கத்து வீடுகளில் இருந்து தலைகள் எட்டிப் பார்த்தன….

‘எல்லாம் தெரிஞ்சிதான் பேசறேன்… உங்க  அண்ணன்னு  ஒருத்தர் இருக்காரே..
அவரு உங்கம்மாவுக்கு பொறந்தாரா.. இல்ல  கூத்தியாளுக்கு  பொறந்தாரா..
இப்படி நீங்களே தானம் பண்ணிட்டு இருந்தா…’

சிவராமன் கண்கள் சிவக்க.. ஆவேசம் வந்து மனைவியை ஓங்கி ஒர் அறை விட…
கேட்டுக் கொண்டிருந்த அண்ணனும் அண்ணியும்  எவ்வளவோ சமதானப் படுத்தியும்..
ஒருவர் மாற்றி ஒருவர் விடாமல் பேச.. பேச்சு திசை மாறி.. சொத்து
பிரச்சினைக்கு வித்திட்டு… அன்றே பாகப்பிரிவினைக்கு அச்சாரம்
போடவைத்தது… இன்று அதன் இறுதி கட்டமாய் பாகத்தைப் பிரித்து
தனித்தனியாய் ரெஜிஸ்டர் செய்யத்தான் வந்திருக்கான் சிவராமன்.

திண்ணையோடு இன்னும் பழைமை மாறாமல் இருந்த அந்த வீட்டை நெருங்கி…
வாசலில் காலணியை கழற்றிவிட்டு… திறந்த வீட்டினுள் நிழைந்தான்…

‘வாடா… சிவராமா …  உள்ள  வா…  இப்பத்தான்  உன்ன  நெனெச்சிட்டு
இருந்தேன்..’  அண்ணன்  அன்பொழுக  வரவேற்றவர் தோட்டத்து பக்கம் தலையை
திருப்பி….

‘காமாட்சி… தம்பி வந்திருக்கான்…. சுருக்க ஒரு காபி போட்டு கொண்டு வா…’

‘இப்பத்தான் விழுப்புரத்துல சாப்பிட்டு வந்தேன்… குளிச்சிட்டு டிபன் சாப்பிடலாம்’

‘ஆமா.. எங்கடா  சங்கீதா, அருண… கூப்பிட்டு வரல…

‘இல்லண்ணே..’

‘ம்..ம்.. சங்கீதாவுக்கு இன்னும் எங்க மேல கோவம் போகலப்போல.. அருண்
வந்திருந்தா  கற்பகம், சுகுணா கூட விளையாடிட்டு இருப்பானே..’ அண்ணனுக்கு
இரண்டு  பெண்கள்..  பெரியவள் பிளஸ் 2 படிக்கிறாள்…. சின்னவள்
எட்டாவது…

‘வாங்க… ‘  தோட்டத்திலிருந்து வந்த அண்ணி மலர்ந்த முகத்துடன் வரவேற்க…

‘அண்ணி… எப்படி இருக்கீங்க…. எங்க கற்பகம், சுகுணா…’

‘கற்பகம் டியூஷன் போயிருக்கா…  சின்னவா இப்பத்தான் கடைக்கு
அனுப்பினேன்… சங்கீதா, அருண் சௌக்கியமா…’

‘எல்லாம் சௌக்கியம்தான் அண்ணி…’

‘அவுங்களையும் அழைச்சிட்டு வந்திருக்கலாமில்ல… அருணுக்கு
பிடிக்குமேன்னு வெள்ள புட்டும்… பணியாரமும் பண்ணியிருக்கேன்.‘

‘அதானால என்ன அண்ணி.. ‘

‘சங்கீதாவுக்கு உடம்பு எப்படி இருக்கு… மாசமா இருக்கான்னு தெரிஞ்சதில்
இருந்து.. அவளுக்கு புடிச்ச பலகாராம் பண்ணி ரெண்டு நாள் வாய்க்கு ருசியா
ஆக்கி கொடுக்கலாம்ன்னு நெனெச்சேன்…. என்ன இப்படி பண்ணிட்டீங்களே..
டாக்டருக்கு காமிச்சிங்களா… என்ன சொன்னாரு..’

சங்கீதாவுக்கு இது ஐந்தாவது மாசம்… அருண் பிறந்து இரண்டு
வருஷத்திற்குப் பிறகு மறுபடியும் உண்டாகி இருக்கிறாள்…

‘நீயும் வாயேன் சங்கீதா…. அண்ணன், அண்ணி பசங்கள பாத்திட்டு
வந்திடலாம்… அப்படியே இந்த நல்ல விஷயத்தை ஊருக்கு சொன்ன மாதிரி
இருக்கும்… அவுங்களும் சந்தோஷப்படுவாங்க…’

‘அங்க வந்தா உங்க அண்ணி… தேனொழுக பேசி… வாய்க்கு ருசியா
சமைக்கிறேன்னு சொல்லிட்டு… உங்க மனச மட்டும் இல்லாம… என் மனசை
மாத்திடுவாங்க…  அந்த ஜெகஜாலவித்த எல்லாம் அவங்களுக்குத்தான் அத்துபடி
ஆச்சே…’ அமிலத்தை தோய்த்த வார்த்தைகளை அள்ளி வீச… ‘எப்பத்தான் இவள்
திருந்தப் போறாளோ…’ தலையில் அடித்தபடியே அங்கிருந்து நகர்ந்தான்..

‘அவளுக்கென்ன டாக்டர் செக்கப்… மருந்து மாத்திரை எல்லாம் ஒழுங்கா
சாப்பிட்டுட்டு  இருக்கா.. டாக்டர்தான்… இந்த நெரத்தில எதுக்கு அவ்வளவு
தூரம் பஸ் பயணம் வேண்டாம்னு சொன்னாரு….’ ஒருவகையாய் அவள் வருகையைப்
பற்றிய பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தான்.

‘அருண் பைய… என்  கண்ணுலே இருக்கு… என்ன வால்தனம்.. இங்கன ஒடறதும்…
அங்கன ஓடறதும்… துருதுருன்னு… பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல
இருக்கு…’ தனக்கு ஒரு பையன் இல்லையே என்ற ஆதங்கத்தில் அண்ணி கூறிவிட்டு
அடுக்களைக்குச் சென்றாள்.

நடுக்கூடத்தில் அம்மா அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார் போட்டோவின்
வாயிலாக…  அம்மா இருந்தால் மிகவும் சந்தோஷப் படுவார்.. ஆடம்பரம்
எதுவும் அற்ற  ஆனால்  அதீத  பாசமும்  அன்பும் நிறைந்து ஓடியது அந்த
வீட்டினுள்..

‘அப்புறம்… நெலத்த பேசி முடிச்சிட்டேன்… அப்பா விட்டுட்டு போன ரெண்டு
ஏக்கர் நிலம் உனக்கும்… இந்த வீட்டையும் மத்த நிலத்தையும் என்
பேருக்கும் எழுத மேலத்தெரு வக்கீல் கிட்ட சொல்லிட்டேன் இதுல உனக்கு
விருப்பம் தானே… ‘

‘எனக்கு இதுல விருப்பமே இல்ல அண்ணே…’

‘என்னடா.. மாத்துனுமான்னு சொல்லு.. மாத்திடலாம்…’ அவர் திகைப்புடன் கேட்க..

‘நீங்க புரியாம பேசறீங்க… சொத்தே எனக்கு வேண்டாம்ன்னு சொல்றேன்.. என்ன
பண்றது… சங்கீதா குணம்தான் உங்களுக்குத் தெரியுமே… அவளுக்காகத்தான்
பிரிக்கவே சம்மதிச்சேன்..’

‘உனக்கு வேனுமின்னா சொத்தில இஷ்டம் இல்லாம இருக்கலாம்… சங்கீதாவோட
எதிர்காலத்துக்காக அவ எதிர் பாக்கறதுல தப்பு ஒன்னும் இல்லையே..’

‘அவதான் புரியாம பேசறான்னா நீங்களும் அவளுக்கே சப்போர்ட் பண்ணி பேசறீங்க…..’

‘குடும்பம்ன்னு ஒன்னு இருந்தா.. இந்த மாதிரி சண்டை சச்சரவு வரத்தான் செய்யும்..’

‘அதுக்கில்ல.. அன்னிக்கு அவ பேசினதுக்கு அவளுக்குப் பதிலா நான் மன்னிப்பு
கேட்டுக்கறேன்… இதுல அண்ணிக்கு ஒரு வருத்தமும் இல்லையே’

‘சிவராமா.. அதை அப்பவே நாங்க மறந்திட்டோம்… இப்ப இந்த ரெண்டு ஏக்கர்
நெலமும் எங்க ரெண்டு பேரோட முழு சம்மதத்தோட தரோம்…’

அந்நேரம் அடுக்களையிலிருந்து அண்ணி காபியோடு வர… அவள்  கொடுத்த  காபியை
உறிஞ்சி விட்டு… தான் கொண்டு வந்த பழங்கள், இனிப்பு, கார வகைகளை
அண்ணியிடம் கொடுத்தான்..

‘நாளைக்கு காலைல ரெஜிட்ரேஷன் இருக்கு… டிபன் சாப்பிட்டு வக்கீல
பாத்திட்டு வந்திடலாம்..’

‘சரியண்ணே…’

சிவராமன்.. சென்னையில் ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணி செய்ய..
நல்ல சம்பளம்… பணிபுரியும் இடத்திலே சங்கீதாவைக் கண்டு காதலுற்று…
கைப்பிடித்தவன்… இருவரும் கைநிறைய சம்பளம் வாங்க…அருண் பிறந்தபிறகு..
இருவரும் சேர்ந்து லோன் போட்டு தற்போது தங்கி இருக்கும் இரண்டு பெட்ரூம்
வீட்டை வாங்கி இருந்தனர்.

‘சரிடா.. நான் போயிட்டு உனக்கு பிடிச்ச மட்டன், வஞ்சிரம் மீன் வாங்கிட்டு
வந்திடறேன்… அப்புறம் தீர்ந்துப் போச்சுன்னு சொல்லிடப்போறான்.. நீ
குளிச்சிட்டு டிபன் சாப்பிடு… எனக்காக காத்திட்டு இருக்காதா…’

‘ஹய்யா… சித்தப்பா….’ கடைக்கு சென்று திரும்பிய சுகுணா ஓடி வந்து மடியில் அமர..

‘எப்படி படிக்கிற சுகி குட்டி..’  பாவாடை சட்டை அணிந்திருந்தாள்… அவள்
வளர்ந்து விட்டதை உடம்பு காட்டி  கொடுத்தது.

‘நல்ல படிக்கறேன் சித்தப்பா… எங்க அருண கூட்டிட்டு வரலையா…சித்தி எங்க…’

‘இல்லம்மா…

‘சித்திக்கு உன்ன மாதிரி ஒரு குட்டிப் பாப்பா வரப்போகுதில்ல… அதனால
இப்ப வரல… அடுத்த முறை வரும்போது குட்டி பாப்பாவோட வரேண்டா செல்லம்…’
பாக்கெட்டில் இருந்த பேனாவை எடுத்து…  கையில் எழுதிப் பார்த்து ‘நான்
எடுத்திக்கவா… ‘ கண்களாலே கேட்க… ‘எடுத்திக்கோடா.. ‘ அவள் புதுப்
பேனா கிடைத்ததில் சந்தோஷப்பட்டு உள்ளே ஓடினாள்.

அண்ணன் சென்ற பிறகு… குளித்து சட்டை மாற்றி வருவதற்குள்.. அண்ணி
சுடச்சுட தட்டில் ஆவி பறக்கும் இட்டியோடு… அவனுக்கு பிடித்த தேங்காய்
சட்டினி.. புட்டு,  மெது வடை, கேசரி  என்று பிரமாதமாக செய்து
வைத்திருந்தாள்…

‘எதுக்கு அண்ணி…. இத்தன அயிட்டம்….’

‘மாசாமா இருக்கான்ணு சங்கீதாவுக்காக செஞ்சது… எப்பவோ ஒரு வாட்டி
வர்றீங்க… அங்க எல்லாம் பொறுமையாய் இதெல்லாம் செய்ய முடியுமா….’

அவள் சொல்வதிலும் உண்மை இருக்கத்தான் செய்தது… இரண்டு பேரும்
வேலைக்குச் செல்வதால்… எங்கே சமைத்து சாப்பிடறது… வேலைக்காரி
செய்வதைத்தான் உண்ணமுடிகிறது… அண்ணன் சொன்னபடி வக்கீலைப் பார்த்து…
மதியம் மட்டன் கறியோடு, வஞ்சிரமீன் வறுவல், முட்டை பொறியல்.. மறுபடியும்
ஒரு கை பார்த்து… கொஞ்சம் அசந்து தூங்கி எழ.. மணி நான்காகியது…

ஒரு எட்டு நிலத்தைப் பார்க்க போகலாம் என்று காலில் செருப்பை மாட்டி
கிளம்ப.. அண்ணன் அசந்து உறங்கிக்கொண்டிருந்தார்.

அண்ணனின் உழைப்பு நிலத்தின் விளைச்சலில் தெரிந்தது…

‘நீங்க இப்ப போல எப்பவும் ஒண்ணா இருக்கணும்… அப்பா செத்தப்பிறகு….
உங்கள எப்படி ஆளாக்கிறதுன்னு கவலைப்பட்டேன்.. ஆனா உங்க அண்ணன் தான்
உனக்கு அண்ணனா அப்பாவா இருந்து… நிலத்தில  கடுமையா உழைச்சி.. இந்த
பூமியை  பொன் விளையற பூமியா மாத்தினான்… அதவிட அந்த மகாலஷ்மி… அதான்
உன் அண்ணி.. இந்த வீட்டுக்கு வந்தப்புறம்.. அண்ணனோட சேர்ந்து கஷ்டத்த
உணர்ந்து உழைச்சதாலதான் நம்ம குடும்பம் இந்த நிலைக்கு வந்தது.
சிவராமா… உன்ன பெத்த தாயா சொல்றேன்… உனக்கு அவ அண்ணி மட்டும்
இல்லடா..  எனக்கு அப்புறம் உனக்கு அவளும் ஒரு பெறாத தாய் தான்…
எப்பவும் அவுங்க ரெண்டு பேரு மனசு கோணாம நடந்துக்கோ…’ அன்று இதே
வயல்காட்டில் அம்மா சொன்னது பசுமரத்தாணி போல பதிந்தது நினைவிற்கு வந்தது.

வீட்டுக்கு வந்தவன் இரவு உணவை முடித்து பயண அசதியில் உறங்க… சட்டைப்
பையில் இருந்த செல்போன் அடித்தது… சங்கீதா தான்..

‘என்னங்க போன காரியம் என்ன ஆச்சு..’ ச்சே… காரியத்திலே குறியாய்
இருக்கிறாள்… சங்கீதாவின் மேல் கோவம் கோவமாய் வந்தது.

‘அண்ணன் எல்லா ஏற்பாடும் பண்ணிட்டாரு…. நாளைக்கு ரெஜிஸ்டெரேஷன்
முடிஞ்சிடும்… சாயந்திரத்துக்குள்ள வீட்டுக்கு வந்திடறேன்..’ அதற்கு
மேல் அவள் பதில் எதுவும் சொல்லாதால்….
போனை கட் செய்தான்..   உறக்கம் வர மறுத்து.. எப்படியோ உறங்க அப்பாவும்
அம்மாவும் கனவில் வந்து போனார்கள்.

மறுநாள்…

உறங்கி எழுந்த கணேசன்.. தன் தம்பியைத் தேட..

‘எங்க தம்பிய  காணோம்… ‘ தன் மனைவி காமாட்சியிடம் கேட்க…

‘அவரு.. காலையிலே எழுந்து, குளிச்சி. பலகாரம் சாப்பிட்டு
கெளம்பிட்டாரு… பிரெண்ட  பாத்திட்டு….  அப்படியே  ரிஜிஸ்டர் ஆபீஸ்
வந்திடறேன்னு சொன்னாரு…’

‘என்ன எழுப்பி சொல்லவேண்டியது தானே….’

‘சொன்னேன்… அண்ணன எழுப்ப வேண்டாம்…. நான் அங்க பார்த்து பேசிட்டு
அப்படியே ஊருக்கு போறேன்னு கிளம்பிட்டாரு…’ கணேசனுக்கு மனசே
சரியில்லை…. ஒருவேளை பாகம் பிரித்ததில் தம்பிக்கு இஷ்டம் இல்லையோ..
அரக்க  பறக்க  குளித்து  முடித்து  ரிஜிஸ்டர்  ஆபீஸ்  சென்றவன்….
அங்கு  சிவராமனைக்  கண்டவுடன்  தான் மூச்சு  வந்தது.

‘வாங்கண்ணே… உங்களுக்கு தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்… எல்லா
டாகுமென்ட்ஸ்ஸும் ரெடியா  இருக்கு…. நீங்க கையெழுத்து போட வேண்டியது
மட்டும் தான் பாக்கி… ரெஜிஸ்டர் ஆயிடும்..’

‘நீ சொல்லாம வந்ததால பயந்திட்டேன்டா சிவராமா…’

‘அதான்.. அண்ணிக்கிட்ட சொல்லிட்டு தானே வந்தேன்..’

அவர்கள் இருவரும் ரெஜிஸ்டர் ஆபீஸ் உள்ளே சென்று.. அங்கு தயாராய் இருந்த
டாகுமெண்டில் கையெழுத்து போட…

வந்த வேளை சுபமாய் முடிந்ததில் சிவராமனின் முகத்தில் திருப்பதி தெரிந்தது.

‘சரியண்ணே நான் கெளம்பறேன்…’

‘பத்திரம் தயார் ஆயிடுச்சினா… நானே பட்டணம் வந்து நேரிலே தரேன்…

அதற்கெல்லாம் அவசியம் இல்லண்ணே… எனக்கு நீங்க கொடுக்கிறதா சொன்ன ரெண்டு
ஏக்கர் நெலத்தை… கற்பகம்… சுகுணா… ரெண்டு பேருக்கும் ஆளுக்கு ஒரு
ஏக்கரா எழுதிட்டேன்… இது அவுங்க கல்யாணத்துக்கு நான் கொடுக்கிற
சீர்வரிசையாய் இருக்கட்டும்…உங்க படிப்ப நிறுத்தி…  நான்
படிக்கணும்னு உங்க ஆசையை மனசிலே பூட்டி வச்சி தியாகம் பண்ண உங்க
உழைப்புக்கு இதுக்கு மேலேயே  செய்யனும்… என்னால முடிஞ்சது இதுதான்
அண்ணே… அதுக்குதான் முன்னாடியே வந்து  வக்கீல் கிட்ட பேசி டாகுமெண்ட்டை
மாத்தி எழுதச் சொன்னேன்..சங்கீதாவா நான் எப்படியோ சமாதானம்
பண்ணிக்கறேன்.. மனத்திற்குள் சொல்லிவாறு பஸ்ஸில் ஏறினான் சிவராமன்.

(முற்றும்)

Series Navigationஅவநம்பிக்கையிலும் கேலியிலும் பிறக்கும் கவிதை‘விஸ்வரூபம்’ நாவல் நூல் வெளியீட்டு விழா மார்ச்2 சனிக்கிழமை சென்னையில்
author

ரிஷ்வன்

Similar Posts

5 Comments

  1. Avatar
    Sivakumar N, New Delhi says:

    மிக அருமையான கதை… பாசம் நெஞ்சைப் பிழிகின்றது… நன்று!

  2. Avatar
    தேமொழி says:

    அருமையான கதை ரிஷ்வன். நன்றி.

    ….. தேமொழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *