துளித்துளியாய்…

This entry is part 12 of 26 in the series 24 பிப்ரவரி 2013

நிலாவண்ணன்

அது அழகும் எழிலும் ஒருங்கே கைகோர்த்துக் கொண்டு நிற்பதைப் போன்ற ஒரு கிராமம். அக்கம் பக்கத்தில் சில கிராமங்கள் இருந்தாலும் இந்த கிராமத்திற்குத் தனி மகத்துவமும் பெருமையும் இருந்தன.

அதிக உயரம் இல்லாத மலைகளும் சிறு குன்றுகளும் கிராமத்தைச் சூழ்ந்திருந்தன. அந்த மலைகளில் பச்சைக் காடுகள் சூழ்ந்திருந்தது. அந்தக் காடுகள் வற்றாத மழை வளத்தை அந்த கிராமத்திற்கு வாரி வழங்கிக் கொண்டிருந்தது. மலையில் உருவாகிய அருவிகள் ஒன்றாகி பலவாகி சம தரைக்கு வரும்போது சிறு நதியாகி பள்ளத்தாக்கில் ஆறாகப் பெருகி ஓடியது.

கிராமம் முழுமையும் எங்கு நோக்கினும் பச்சைப் பசேலென்ற காட்சி கண்ணுக்கு நிறைந்திருந்தது. பாதிக்காய்ந்த கொம்பை நட்டால் கூட துளிர்த்துத் தளதளவென்று வளரும் மண் வளம். வயல் வெளிகளும் இருந்தன. ரப்பரும் எண்ணெய்ப்பனையும் சிறு தோட்டக்காரர்களுக்குச் சொந்தமாயிருந்தன.

இதன் அருகிளுள்ள சில கிராமங்களில் மக்கள் வசதியற்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தபோது இந்த கிராமத்தில் மக்கள் வசதியான செழிப்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அது அக்கம் பக்க கம்பத்து மக்களுக்கு ஓரளவு பொறாமையாகக் கூட இருந்தது.

ஆரம்பத்தில் இந்தக் கிராமத்திற்கு பெயர் இல்லாமல்தானிருந்தது. அதன் பின்பு, மலைகள் சூழப்பட்டிருந்ததால், ‘மலையகம்’ என் பெயர் மறுவிக் கொண்டது.

செழிப்பான இந்த மலையகம் அமைதியாக வெளித் தோற்றம் கொண்டிருந்தாலும் உள்ளுக்குள்ளே எல்லா கிராமங்களைப் போன்றும் பூசல், பொறாமை, சிறு சிறு வன்முறை திடீர் திடீர் குழப்பங்கள் தோன்றிக் கொண்டுதானிருந்தன.

அப்படிப்பட்ட திடீர்க் குழப்பத்தால் கிராமம் திணறிக் கொண்டிருந்ததால்தான் கிராமத்தில் உள்ள பொது மண்டபத்தில் இன்று அவசரக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது..

கிராம செயலவைக்கு அன்று தொட்டு இன்று வரை பல தலைவர்கள் தலைமைப் பீடத்தை அலங்கரித்திருக்கிறார்கள். இப்போது..! நடைமுறை தலைவருக்கு முன்னெப்பொழுதையும் விட சுமைகளும் பொறுப்புகளும் அதிகமாகவே தோள்களை அழுத்திக் கொண்டிருக்கின்றன. தலைமுறைகள் மாற்றங்காண்கிறதல்லவா…! அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இவ்வளவு காலமாக ஓரளவு அமைதியின் வடிவிலும் பிடியிலுமிருந்த அந்த மண் இன்று அந்தப் பிடியின் இறுக்கம் தளர ஒரு சொல்தான் காரணமாகிப் போயிருந்தது.

ஓர் இளைஞன் இன்னொரு வாலிபனைப் பார்த்து நீ இந்த கிராமத்துக்கு ‘அந்நியன்’ எனக் கூறிவிட்டானாம்.

அந்த ஒரு சொல் அந்தச் சிற்றூர் முழுமையும் தீயைப் போன்று பரவி ஒரு கொந்தளிப்பையே உண்டாக்கி விட்டது. அவனைச் சார்ந்த பலருக்கு அந்தச் சொல் உணர்விலே ஊடுருவி இவ்வளவு நாள் அந்த மண்ணின் மேல் வைத்திருந்த பற்றையே சோதனை செய்யும் களமாக ஆகிவிட்டிருந்தது.

சொன்னவன் தரப்பிலிருந்தும் சில நியாயங்கள் மறைமுகமாக முன் வைக்கப் பட்டன.

ஒருசாரர் இந்த மண்ணில் பூர்வீகமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்றும் இன்னொரு பகுதியினர் குடியேற்றப் பட்டவர்கள் என்ற கருத்தும் சில காலமாகவே உருவாகிப் பரவி ஒரு வகையான வெறுப்பை இருசாரார் மனங்களிலும் உருவாகிக் கொண்டிருக்கிறது. இதன் வெளிப்பாடே அந்த சொல்லுக்குக் காரணமாகிப் போயிருந்தது.

எது எப்படி இருந்தாலும் இந்த அழகான அமைதியான கிராமத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதே பெரியோர்களின் பரவலான கருத்தாக இருந்தது.

சிற்றூரின் பொது மன்றம் மக்கள் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது. சிலர் உட்கார இடம் கிடைக்காமல் வெளியேகூட நின்று கொண்டிருந்தார்கள். இளைஞர்கள் இரு பிரிவாக இருந்ததைப் பார்க்கும்போது அங்கே இரு குழுக்கள் உருவாகி இருந்தது பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டுக் காட்டியது. இவ்வளவு நாள் இல்லாத ஓர் இறுக்கம் இன்று நன்றாகவே அங்கு கூடி இருந்தோர் மத்தியில் வெப்பமாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

இந்தச் சூழலையும் மனங்களின் புழுக்கத்தையும் தலைவர் நன்றாகவே அறிந்தவராக இருந்தார். அந்த ஏற்றுக் கொள்ளவியலாத வார்த்தையை உபயோகித்தவன் அவர் குடும்பத்தைச் சார்ந்தவனாக இருந்தது அவருக்கு ஒரு மனச் சங்கடத்தைக் கொடுத்தாலும் அவனை அவர் தற்காக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டிருந்தார்.

ஓர் இளைஞன் எழுந்து நின்று பேசினான்.

தலைவர் அவர்களே, நாங்களும் இந்த மண்ணில்தான் தாயாய் பிள்ளையாய் பல காலம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்கள் குடும்பமும் எங்களைச் சேர்ந்தவர்களும் இதன் வளப்பத்திற்கு இரத்தத்தைத் துளித் துளியாய் வியர்வையாக்கி உழைத்திருக்கிறோம். அதனால் இந்த மண் செழிப்பாகவும் வளப்பத்தோடும் இருப்பதைக் கண்கூடாகக் காண முடிகிறது. அடர்ந்த காடுகள் எல்லாம் இன்று சிறு சிறு வீடமைப்புக்களாக மாறியுள்ளன. மண் மேடுகளும் குன்றுகளும் வளங்கொழிக்கும் நிலங்களாக வடிவங்கொண்டுள்ளன. நம் கிராமத்திலுள்ள பல விளை பொருட்கள் பக்கத்துத்து கிராமங்களில் விற்று நல்ல ஆதாயத்தைக் கண்டு வருகின்றோம்.

அந்த இளைஞன் கூறிய கருத்துக்கு எதிர் தரப்பிலிருந்து ஒரு குரல் ஓங்கி ஒலித்தது. நீங்கள் என்ன இலவசமாகவா உழைத்தீர்கள்..? அதற்கெல்லாம்தான் கூலி வாங்கிக் கொண்டுதானே உழைத்தீர்கள்..! எங்கிருந்தோ வந்த நீங்கள் எடுத்ததற்கெல்லாம் உரிமை கொண்டாட முடியாது… நாங்கள் கொடுப்பதைத்தான் நீங்கள் வாங்கிக் கொண்டு வாய் மூடிக்கொண்டு இருக்க வேண்டும்.

இப்படி எடுத்தெறிந்து பேசிய இளஞனை அவன் தரப்பைச்சார்ந்த சில நியாயவாதிகள் அடக்கி அமர வைத்த பின்பு முன் பேசிய இளைஞனைத் தொடர்ந்து பேசும்படி அழைத்தார் தலைவர்.

அந்த இளைஞன் தன் மனக் குமுறலை இவ்வளவு நாள் தன் உள்ளத்துகுள் பூட்டி வைத்திருந்த உணர்வுகளை வெளிப்படுத்தத் தொடங்கினான்.

ஐயா, இந்த கிராமத்தில் இரண்டு தரப்புக்கள் இருப்பது எல்லோருக்கும் வெட்ட வெளிச்சமாகத் தெரியும். அதில் எங்கள் தரப்பு குறைவான தொகை கொண்டவர்கள் என்பதும் ஊரறியும். இருந்தாலும்…!

இளைஞன் சற்று தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டான். தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் உரிய மதிப்பு கொடுக்காமல் புறந்தள்ளுகிறார்களே என்னும் ஆதங்கம் அவன் உள்ளத்தில் அனலாகக் கொழுந்து விட்டு எறிந்து கொண்டிருந்தது.

பெரியோர்களே, இந்த கம்பத்து முன்னேற்றத்துக்கு எங்கள் வழித்தோன்றல்கள் மாடாய் உழைத்தார்கள். வெயிலென்றும் மழையென்றும் பாராமல் இரத்த வியர்வை சிந்தியுள்ளார்களய்யா… இந்த கம்பத்தித்தின் ஒவ்வொரு அடி தாய் மண்ணையும் விசாரித்துப் பாருங்கள். எங்கள் இனம் தன்னலமற்று சிந்திய வியர்வைத்துளிகளின் கணக்கைக்கூறும். உங்களில் ஒருவர் நாக்கில் நரம்பில்லாமல், செய்த வேலைகளுக்குக் கூலி கொடுக்கப் பட்டு விட்டதே இன்னும் என்ன அதிகமாக எதிர்பாக்கிறீர்களென மனசாட்சியில்லாமல் கேட்கிறார். நாங்கலென்ன கூலிக்கா மாறடித்தோம். இந்த மண்ணின் செல்வச் செழிப்புக்குத்தானே உழைத்தோம். ஐயா எங்கள் பெரியவர்கள் துண்டுக் கோவணமும் தாய்மார்கள் ரவிக்கை என்பதும் எங்கோ தேவதைகள்தான் அணிவார்கள் என்னும் மனப்பான்மையுடன் உழைத்து வளமைப் படுத்தியுள்ளார்களே…! இந்த கிராமத்தின் வரலாற்றுப் புத்தகத்திலேகூட வெளியிட்டுள்ளீர்களே… இதையெல்லாம் ஒரு சிலர் மறந்து விட்டுப் பேசுகிறார்களே… அய்யா, இன்னும் கொஞ்சம் பேர் உங்களுக்குப் பிடிக்கவில்லையானால் உங்கள் பூர்வீகக் கிராமத்திற்கே போய்விடுங்கள் என்று வாயில் விஷத்தோடு கூவுகிறார்களே… இது எந்த வகையில் நியாயமாகும்…

கொஞ்ச நேரம் இடியென வார்த்தைகளால் அதிரச் செய்த அந்த இளைஞனை அவன் தரப்பைச் சார்ந்தவர்கள் சமாதானப்படுத்தி அமர வைத்தார்கள்.

ஆமாம், ஆமாம் இந்த குடும்பத்தினர் வந்த பின்புதான் இந்த நிலம் நல்ல முன்னேற்றம் கண்டது. காடுகளை அழித்து விளைச்சல் காணியாக மாற்றினார்கள். ஆரம்பத்தில் நல்ல சாலைகள் இல்லாமல் இருந்தது. இந்த குடும்பத்தினர் வெயிலுக்கு அஞ்சாத உழைப்பாளிகள். அதனால், நல்ல சாலைகள் அமைத்துக் கொடுத்தார்கள். இவர்களுக்கு நாம் நன்றி சொல்லாமல் விட்டாலும் இப்படிப்பட்ட சில தரமற்ற வார்த்தைகளைச் சொல்லாமல் இருக்க வேண்டும்.

அந்த நடுநிலையான முதியவர் பேசி அமருமுன்னே அவர் தரப்பிலிருந்தே ஒருவர் எழுந்தார். அவர் முகத்தில் எண்ணெய் ஊற்றினால் மீன் பொறித்து விடலாம் போலிருந்தது.

என்னய்யா பேசுறீங்க… நாம இந்த இடத்துக்கு பூர்வீகச் சொந்தக்காரவங்க… இவங்க இடையில வந்தவங்க… அது உங்களுக்குத் தெரியாததா…? ஒரு நூற்றாண்டுக்கு முன்னால இந்த குடும்பத்த ஒரு முதலாளி தன்னோட தோட்டத்துக்கு பயிர் செய்ய கொண்டு வந்தாரு. இவங்களும் இது வளப்பமான பூமின்னு இங்கயே தங்கிட்டாங்க… அதனால, நமக்குள்ள சகல உரிமயும் இவங்க கேக்க முடியாது. அதுக்கு எங்க தரப்பு வண்மையா எதிர்க்கிறோம்.

அவர் கூறி அமருமுன்னே ஏகப்பட்ட கூச்சலும் குழப்பமும் மண்டப முழுமையும் எதிரொலித்தது. யார் என்ன பேசுகிறார்கள் என்பதையே கேட்க முடியாமல் போனது.

தலைவர் அமைதியற்றுப் போயிருந்தார். இரு தரப்பைச் சார்ந்த பெரியவர்களும் ஓரளவு கூட்டத்தைக் கட்டுப் பாட்டுக்குக் கொண்டு வந்தார்கள்.

தலைவர் தன் பேச்சைத் துவங்கினார்.

இப்போது, இந்த உணர்ச்சி மயமான கொந்தளிப்பான விஷயத்துக்கு ஒரு தீர்வு கண்டுதான் ஆகவேண்டும். இதை இப்படியே வளர விட்டுக் கொண்டு போனோமானால் நமக்குள்ளே குழப்பமும் பிரச்சினையும் அதிகமாகி இந்த ஊரின் முன்னேற்றமே பாதிக்கும். அதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது. இப்படி பல ஊர்களில் மக்களுக்கிடையே ஒற்றுமை இல்லாமல் போனதால் அவர்களால் முன்னேற்றம் அடையாம போனதா சரித்திரமே இருக்கு.

தலைவர் சற்று தன்னை அமைதிப் படுத்திக் கொண்டார்.

நாம் இந்த நிலத்துக்கு பூர்வீக மக்கள். அதை யாரும் மறுக்கவில்லையே. அவங்கள இடையில வந்தவங்கன்னும் சொல்ல முடியாதே. அவங்க வந்த பின்னாடிதானே இங்க அபரிதமான சுபிட்சம் ஏற்பட்டிருக்கு. நாம மழைக்கும் வெயிலுக்கும் அச்சப்பட்டு ஒதுங்கி இருந்த போது அவங்க வானத்தையே கூரையா நெனச்சு வியர்வை சிந்தி உழைத்து கிராமத்த வளப்படுத்தி இருக்காங்களே..!. ஒரு தலைமுறை குடியேறினவங்கன்னு சொன்னாலும் அடுத்த தலைமுறையைச் சார்ந்த பிள்ளைகள் இங்கதான பிறந்து வளர்ந்து இந்த இடத்தையே தங்களோட சொந்த பூமியா கொண்டாடிக்கிட்டு இருக்காங்க…அவங்களப் போய் இப்படியெல்லாம் சொல்லலாமா…?

தலைவர் தன் நடு நிலைக் கருத்தைச் சொன்னாலும் ஒரு தரப்பினர் அதை ஏற்றுக் கொள்வதாக இல்லை.

என்ன இருந்தாலும் பூர்வீகமாக இருக்கிற நம்ம சலுகைகளை அவங்களுக்கு விட்டுக் கொடுக்க முடியாதுங்க தலைவரே..!

இந்த கிராம நிர்வாகத் தலைமைப் பொறுப்பை அவங்களுக்கு தர முடியாதுங்க… அதோட, இந்த இடத்தில எந்த நிகழ்ச்சிகள் நடந்தாலும் எப்போதும் நாமதான் தலைமை ஏற்கணும். அவங்களுக்கு வேணுமின்னா சின்ன சின்ன பொறுப்புகள் பகிர்ந்து கொடுக்கலாம்.

குறைந்த எண்ணிக்கையில் உள்ள குடும்பத்தைச் சார்ந்த ஒரு பெரியவர் எழுந்தார். அவர் அத்தரப்பின் தலைவர் எனவும் அறியப் பட்டவர்.

முன்ன சொன்ன நண்பர் கருத்த நாங்க ஏத்துக்கிட்டுதான இவ்வளவு நாளா செயல் பட்டிகிட்டிருக்கோம். இருந்தாலும் இங்கதான சில சமயம் என்ன பல சமயங்களில பிரச்சினயே உருவாகுது. அது எங்களுக்கு எவ்வளவு மன வேதனய தருது தெரியுங்களா…! எங்க பிள்ளங்க எங்களயே கேள்வி கேக்குறாங்க… நாங்களும் இந்த மண்ணுலதானே பிறந்து இந்த மண்ணுலதான பாதங்கள் தேய நடந்தோம்..? எங்களுக்கு ஏன் உரிமைகள் மறுக்கப்படுகின்றன… என கேள்வி எழுப்புகிறார்கள்… எங்களால அதுக்கு சரியான பதில சொல்ல முடியல…!

அது என்னங்க பிரச்சன… கொஞ்சம் தெளிவா விளக்கமாதான் சொல்லுங்களேன்.

என்னங்க தலைவரே… தெரியாத மாதிரி கேட்கறீங்க… இதப்பத்தி எத்தன தடவ நம்ப கிராம நிர்வாகக் கூட்டத்தில முறையிட்டிருக்கேன்… நீங்களும் கவனிக்கிறதாதான் சொல்றீங்களே தவிர இதுவரைக்கும் எந்த ஒரு இறுதி முடிவும் எட்டல…

கிராமத்தின் வளப்பத்தில நீங்க அள்ளி எடுத்துக்கிறீங்க… எங்களுக்கு கிள்ளியாவது கொடுக்கலாமில்லியா… நிர்வாகப் பதவிகள்ல உங்க தரப்பினரே ஆக்ரமிச்சுக்கிறீங்க… எங்க குடும்பத்துக்குத் தகுந்த மாதிரி பதவிகள் கொடுக்கலாமில்லியா… தலைவரே நம்ப பெரியவங்க சரியான நியதிய அமச்சு வச்சுட்டுத்தான் போயிருக்காங்க… அவங்கள குறை சொல்ல முடியாது. ஆனா எப்போது உள்ள சிலர் மறைமுகமாக எங்கள ஓரங்கட்டுராங்க… இதைக் கண்டு நீங்க உடனடியா நிவர்த்தி செய்யணும்… அதுதான் எல்லோருக்கும் நல்லது.

இது எனக்கும் தெரியுங்க. நான் இத செய்யுங்க அத செய்யுங்கண்ணு கட்டளை இடதான் முடியும். கீழ உள்ள சிலர் இப்படி கீழறுப்பு செய்யறத நெனைச்சா எனக்கும் எரிச்சலாத்தான் இருக்கு. என்ன செய்யறது…!

ஊர்த் தலைவர் தலையைச் சொறிந்து கொண்டார்.

ஐயா, நாம எதுக்கு கூடினமோ அத விட்டு கடந்து போய்கிட்டிருக்கோம். அது சாதாரண விஷயமில்லீங்க எங்களோட இந்த பூமிப் பற்றையே பரீட்சித்துப் பாக்கறதா இருக்கு… அதுக்கு ஒரு நிச்சயமான முடிவு கட்டுங்க… அதோட, இங்க உள்ள சிலர் இந்த இடம் தங்களுக்கு மட்டுமே சொந்தம்னு பேசி எங்க மனத்த நோக அடிக்கிறாங்க… சிலர் வரம்பு மீறிய வார்த்தய முரட்டுத்தனமா பயன் படுத்துறாங்க… இதுக்கெல்லாம் ஒரு முடிவு வேணுங்க தலைவரே…!

பாதிக்கப்பட்ட குழுவைச் சார்ந்த குடும்பத்தின் பேராளர் ஒருவர் தன் நெஞ்சின் வருத்தத்தை வெளிப்படுத்தி விட்டு அமர்ந்தார்.

மன்றம் சற்று நேரம் அமைதியில் மூழ்கிக் கிடந்தது. அந்த இடைவெளியில் தலைவர் குறிப்பாக தன் குடும்பத்தைச் சார்ந்தவர்களின் முகங்களை உற்று நோக்கினார். அதில் சிலரின் முகங்களில் உண்மையாகவே வருத்த ரேகை ஓடிக் கொண்டிருந்ததைக் கண்டார். அடுத்த குடும்பத்தினர் தங்களுக்கு ஒரு நல்ல நியாயமும் எதிர் காலமும் அமைய வேண்டிக் கொண்டிருப்பதையும் கவனித்தார்.

இனிமேல், இந்த கிராமத்தில் இந்த வளமான பூமியில் ஒருவரைப் பார்த்து இன்னொருவர் வந்தேறிகள், அந்நியர்கள் என்னும் சொல்லையோ மற்ற இழிவான வார்த்தைகளையோ பயன் படுத்தக் கூடாது. அப்படிப் பார்த்தால் இந்த உலகத்துக்கு எல்லாருமே வந்தவர்கள் அதாவது வந்தேறிகள்தாம். நாம் எப்போது பறவைகளாகாக – சுதந்தர எண்ணத்தோடு வானில் பறக்கிறோமோ அப்போதுதான் இதற்கெல்லலம் ஒரு முடிவு பிறக்கும். இதற்குத்தான் ஒரு தமிழ்க் கவிஞன் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றான். அதனால் இனிமேற்கொண்டு இப்படிப்பட்ட மற்றவர்களைப் புண்படுத்தும் இழிவைக் கொண்டு வரும் நமக்கிடையே பகைமையை உண்டாக்கும் சொற்களைக் கூறக்கூடாது. அப்படி மீறி பயன்படுத்தினால் கடுமையான தண்டனைக்குள்ளாவார்கள்.

உங்களுக்கு இனிமேல் உங்கள் குடும்ப எண்ணிக்கைக்கும் உழைப்புக்கும் ஏற்ற சலுகைகள் வழங்கப்படும். இது உறுதி. நானே ஒரு குழு அமைத்து கண்காணிப்பேன்.

எல்லோரும் தலைவரின் நடு நிலையான கருத்துக்கு மதிப்பளித்து எழுந்து நின்று கைதட்டி மகிழ்ச்சியும் பாராட்டும் தெரிவித்தார்கள்.

அதன்பின்பு, கிராமத்தின் எதிர்கால வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் மனத்தில் இறுத்தி அமைதியாகக் கலைந்து சென்றார்கள்.

அப்போது…! இவ்வளவு நேரம் பேசிக்கிட்டங்களே ‘அந்நியன்’ னு… அப்படின்னா என்ன தாத்தா.. அப்படி ஒரு படந்தான் வந்திருக்கு… இவிங்க பேசறக் கேட்டா அது இல்லன்னு தெரியுது… வேற அதுக்கு என்ன அர்த்தம் தாத்தா…? என தன் சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள உழைத்துக் காய்ப்பேறிப்போன தலைமுறை தாண்டிய தன் தாத்தனின் கையைப் பற்றிக் கொண்டு நடந்து சென்ற ஒரு சிறுவன் வினவினான்.

வியர்வை சிந்தி இந்த பூமிய – இதிலுள்ள காணிகளை வளப்படுத்தனவங்கன்னு அர்த்தம்யா.. இத எந்த அகராதியிலும் படிக்க முடியாதுய்யா… இதையும் அழிச்சுடுவாங்களோன்னுதான் அச்சமா இருக்கு…!

###########################

Series Navigationகுறட்டை ஞானம்சுழலும் நினைவுகள்
author

நிலாவண்ணன்

Similar Posts

4 Comments

  1. Avatar
    Sivakumar N, New Delhi says:

    ஒரு சிறிய ஆனால் உணர்வு பூர்வமான கதை/சம்பவம்… நன்று!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *