போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 11

This entry is part 16 of 28 in the series 10 மார்ச் 2013

போதி மரம்

பாகம் ஒன்று – யசோதரா

அத்தியாயம் – 11

சத்யானந்தன்

மகாராணி பஜாபதி கோதமி அனுப்பிய பணிப்பெண் யசோதராவின் மாளிகையில் அவளது சயன அறை வாசலில் நின்றாள். அங்கே தயாராக நிற்கும் இரு பணிப்பெண்களைக் காணவில்லை. மெதுவாக அறைக்குள் எட்டிப் பார்த்தாள். அங்கே யசோதாரா ராகுலன் இருவருமே இல்லை. பூஜையறையின் வாசலில் நின்ற பணிப்பெண்ணிடம் விசாரித்தாள். இளவரசி ராகுலனுடன் நந்தவனத்துக்குச் சென்றார் என்று பதில் வந்தது. பிரதான நுழை வாயிலுக்கு வந்து படிகளில் இறங்கி நந்தவனத்தில் நுழைந்தாள். பூப்பறிக்கும் பெண்கள், தோட்டக்கார ஆண்கள் இவர்களே தென்பட்டனர். விரிந்த நந்தவனம் முழுவதும் தேடி எப்போது மகாராணிக்கு விவரம் சொல்வது? பூப்பறிக்கும் பெண்களுக்கும் நந்தவனத்தில் எந்தப் பக்கம் இளவரசி இருக்கிறார் என்பது தெரியாமலிருக்கலாம். திரும்ப மாளிகையின் படிக்கட்டுகளில் ஏறி முன் வாயிலைக் கடந்ததும் வலதுபுறம் படிகளில் ஏறி இந்தமுறை யசோதராவின் அறைப்பக்கம் செல்லாமல் உப்பரிகைப் பக்கம் சென்றாள். அங்கே இருந்த காவற் பெண் “எங்கே செல்கிறாய்?” என்று மிரட்டினாள்.

“உப்பரிகைக்கு’

‘அங்கே யாருமில்லை”

“தெரியும். நந்தவனத்தில் இளவரசி இருக்கிறாரா இல்லையா என்ற சரியான விவரத்தை மகாராணியிடம் சொல்ல வேண்டும்”

“இதை நீ என்னிடம் முறையாகக் கூறி அங்கே செல்ல முயற்சித்திருக்க வேண்டும்’

“மகாராணியின் ஆணைப்படி நான் செயற்படுகிறேன் என்பதை நினைவிற்கொள்”

மேலும் பேச்சுக் கொடுக்காமல் உப்பரிகையின் கிழக்குப் பக்க மூலையில் இருந்து பார்த்தாள். செடிகள், கொடிகள், பூத்துக் குலுங்கி சீராக வரிசையாக இருந்தன. காலை இள வெய்யிலில் பட்டாம் பூச்சிகளும், சிறு பறவைகளும் சிறகடித்தன. நந்தவனம் அரண்மனை மதில்கள் வரை பச்சைப் பசேல் என விரிந்திரிந்தது. மேற்குப் பக்கம் பார்த்தாள் .இளவரசி தென்படவில்லை.

வெளியில் வந்து படியிறங்கிப் போனவள் மறுபடி காவற் பெண்ணிடம் “இளவரசி எங்கே போயிருக்கிறார் என்று தெரியுமா?”

“இதை நீ முன்பே கேட்டிருக்க வேண்டும். அவர் நந்தவனம் போகவில்லை”

‘பிறகு?”

“கோசாலை போயிருக்கிறார்”

“இதை நீ முன்பே கூறியிருக்கலாம்’

“நீயும் கேட்டிருக்கலாம்”

ராணியின் பணிப்பெண் படிகளில் இறங்கி முன் வாயில் வழியே வெளியேறி வலது பக்கமாகத் திரும்பி நடப்பதற்கென பதிக்கப்பட்டிருந்த மெல்லிய செங்கற்களால் ஆன பாதையில் நடந்து நெடுக மாளிகையின் பிரதான முடிவு வரை செல்லும் போது மூச்சு வாங்கியது. பின் கட்டை அடைந்ததும் வலது பக்கம் திரும்பியவள் சமையற்கூடத்துக்கான படிகளில் ஏறி அதன் உள்ளே போனாள். அது பணியாளர்களுக்கான பொது சமையலறை. பெரிய அண்டா ஒன்றில் பால் காய்ந்து கொண்டிருந்தது. மற்றொன்றில் ஏதோ ஒரு கீரை வகை இஞ்சி மஞ்சள் மிளகு சீரக வாசனையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. சோறு வெந்து விட்டதால் அதன் கீழ் எரிந்த விறகுகல் தணிக்கப் பட்டு அந்தப் பாத்திரத்திலிருந்து அரிசி நறுமணத்துடன் ஆவி பெருக்கிக் கொண்டிருந்தது. ஒரு பக்க மேடையில் கோதுமை மாவை ஒரு பெண் தண்ணீர் சேர்த்து ரொட்டி செய்யும் பதத்துக்குக் கலந்து பிசைந்து கொண்டிருந்தாள். வெல்லமும் பாலும் நெய்யும் முந்திரியுமாய் பாயசம் மற்றொரு பாத்திரத்தில் இருந்து மணம் வீசியது. இளவரசர் சித்தார்த்தர் மாளிகையில் உணவு அரசரின் மாளிகையைவிட சிறப்பானது என்று கேள்விப்பட்ட போதெல்லாம் அதை வதந்தி என்று நிராகரிப்பாள். ஆனால் இன்று தெளிவாகத் தெரிகிறது. அடுத்த முறை ராணியுடன் வரும் போது சுவை பார்க்க வேண்டும்.
தண்ணீர் நிரப்பிய பெரிய பாத்திரங்களே முதலில் தென்பட்டன. ஒரு சிறிய மேடையில் காய்கறிகளுடன் ஒரு மண் ஜாடியும் வெண்கல லோட்டாவும் தென்பட்டன. லோட்டாவில் தண்ணீர் நிரப்பிக் குடித்தாள். சமையற்கூடத்திலிருந்து படிகளிலிறங்கி ஒரு சிறிய சுவர்த்தடுப்பின் மையப் பட்ட கதவுகளைத் தாண்டி திறந்த் வெளியாயிருந்த கூடத்தை அடைந்தாள். மத்தியில் கற்கள் பதித்த நடைபாதையும் இரு புறமும் பாத்திரங்கள் கழுவும் சிறு சிறு மேடைகளும் இருந்தன. மேடைகளைச் சுற்றி சீராக நீர் ஓடி வெளியேற ஜல தாரைகள் இருந்தன. உயரம் குறைவான வட்ட வடிவ பாத்திரத்திரங்களில் நீர் நிரப்பப் பட்டிருந்தது. அதில் தண்ணீர் குறையக் குறைய கூடத்தில் வடகிழக்கு மூலையில் இருந்த கிணற்றிலிருந்து நீரைக் குடங்களில் இரைத்து தூக்குத் தூக்கியாக இரு பக்கமும் கயிறுகளுக்குள் வைக்கப் பட்டிருந்த பெரிய குடங்களில் ஒருவர் நிரப்பினார். மற்றொருவர் அதைத் தோளில் தூக்கி வந்து கழுவு மேடைகளுக்கு அருகே இருந்த பாத்திரங்களில் நிரப்பினார். ஆற்று மணலையும், சாம்பலையும், தேங்காய் நாரையும், சிறு செங்கற்களையும் வைத்து பாத்திரம் தேய்ப்பவர்கள் சுறுசுறுப்பாகப் பாத்திரங்களை சுத்தம் செய்து கழுவிக் கொண்டிருந்தனர். இந்தக் கூடம் மட்டுமே இளவரசர் குடும்பத்துக்கான சமையலுக்கும் ஏனையருக்கும் பொதுவாக இருந்தது. ராஜ குடும்பத்துக்கான சமையல் சிறிய அறையில் பாதுகாப்பாகச் செய்யப் பட்டது.அந்தக் கூடத்தைக் கடந்து சிறிய தடுப்புச்சுவரின் பின் பக்கம் இருந்த கோசாலையை அடைந்தாள். பல கொட்டில்கள் இடைவெளிகள் விட்டு இருந்தன. கழுநீர், புற்கள், புண்ணாக்கு என மரத் தொட்டில்களில் உணவு நிரப்பப் பட்டு ஒரு தொட்டிலுக்கு சுமாராக பத்து மாடுகள் இருந்தன. சாணத்தை சுத்தம் செய்து எடுத்துப் பெரிய குவியலாகப் பின்புறம் கொண்டு சென்றார்கள் பல பணியாளர்கள். மேலே கூரையிடப்பட்டு நாலாப் பக்கமும் திறந்து இருந்த கொட்டில்களில் இளவரசி எங்கே இருக்கிறார்? அவர் இங்கே என்ன செய்கிறார்? கையை ஓங்கித் தட்ட ஒரு பணியாள் ஓடோடி வந்தான். “இளவரசி எந்தக் கொட்டிலில் இருக்கிறார்?” “வாருங்கள்” என்று அழைத்துச் சென்றான்.

ராணியின் பணிப்பெண்களே போகாத இடம் கோசாலை. யசோதரா எதோ வினவிக் கொண்டிருக்கப் பணியாளர்கள் அதைப் பணிவாக அவளைச் சுற்றி நின்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஓரிரு நிமிடங்கள் தயங்கி நின்ற பணிப்பெண் பின்னர் அருகே சென்று வணங்கி “மகாராணி தானே வந்து தங்களைக் காண விரும்பினார்” . “நானே சற்று நேரத்தில் அங்கே வருகிறேன்”. திரும்பி நடந்த பணிப்பெண் ஏதோ நினைவு வந்தவளாக அங்கே நின்றிருக்கும் அனைவரையும் கூர்ந்து கவனித்தாள். ராகுலன் ஒரு பணிப்பெண்ணின் தோளின் மீது தூங்கிக் கொண்டிருந்தான்.

*****************************

“மாமன்னர் “யசோதரா ஏன் ராகுலன் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை?” என்று வினவினார்” என ஆரம்பித்தார் ராணி கோதமி.

“அத்தை, ஜோதிடம் கணிக்கும் பலன்கள் மாற்ற முடியாதவை என்றால் நாம் அதைத் தெரிந்து கொண்டு எதுவும் செய்வதற்கில்லை. குழந்தைக்கு எது உகந்ததோ அவனுக்கு நம் கடமை எதுவோ அதை எப்படியும் நாம் செய்யத்தான் போகிறோம். ராகுலன் வளர்ப்பை அவனது அப்பாவின் குழந்தைப் பருவத்தோடு ஒப்பிட்டால் நாம் ராகுலனை இயல்பாக வளர விடுகிறோம் இல்லையா?” ராணி பதிலேதும் சொல்லாமல் “கோசாலை போயிருந்தாயாமே?” என்று பேச்சை மாற்றினார்,

“இளவரசர் மட்டுமல்ல நானுமே இத்தனை நாள் வெளி உலகத் தொடர்பு இல்லாமல் தானிருந்தேன். முதலில் நம் அரண்மனையிலேயே நான் தெரிந்து கொள்ள எவ்வளவோ இருக்கிறது. எப்போதுமே ஏதோ ஒரு காட்சி இருக்கிறது. நம் விழிப்புதான் வித்தியாசம்”

ராணிக்கு இது தனக்கே பொருந்தும் என்று தோன்றியது. யசோதராவிடம் எத்தனை மாற்றம்? இது ஏன் எனக்குப் பிடிபடாமற் போனது?

“ராகுலன் தன் அப்பாவின் கண்காணிப்பில் வளரும் காலம் அதிக தூரத்தில் இல்லை என்றே என் உள்ளுணர்வுக்குத் தோன்றுகிறது. என்னை அதுவரை அவன் முன்னுதாரணமாகக் காணக் கூடும். நான் அதைப் பற்றி மிகவும் கவனமாக இருக்கிறேன்” விடைபெற்றாள் யசோதரா.

************

அமர கலாமவின் ஆசிரமம் தன்னிறைவு பெற்றதாக இருந்தது. காய்கறிகளுக்கு செடிகள், பாலுக்கு மாடுகள். நெல், கோதுமை எதையுமே சீடர்கள் பயிர் செய்தார்கள். அவர்களே சமைத்து உண்டார்கள். தியானம் செய்தார்கள். ஆசிரமத்தை சுத்தம் செய்தார்கள். சித்தார்த்தனை விட அனைத்து மாணவருமே இளையவர்கள்.

சித்தார்த்தன் பிட்சை எடுப்பதை நிறுத்தவேயில்லை. அவர்களோடு தோட்ட வேலை செய்வதும் வழக்கம். எப்போதாவது அவர்கள் சமைப்பதை உண்பதும் உண்டு. ஆனால் பிட்சை எடுக்காத நிலையில் உள்ள ஒரு விவசாயி போல சித்தார்த்தனால் தன்னை உருவகித்துக் கொள்ள இயலவில்லை.

பூரணமானது எது என்னும் ஞானம் சித்திக்கும் நேரம் இன்னும் எத்தனை தூரம் என்று தெரியவில்லை. அமர கலாம சற்றே தன்னை அதன் அருகில் அழைத்துச் சென்றிருக்கிறார். புறப்பட்டதும் போக வேண்டியதும் நானே தான். ஒரு வைராகியாக, பிட்சை எடுத்து உண்பவனாக மட்டுமே என்னால் இருக்க முடியும். ஆசிரமம் என்பது ஒரு நிறுவனம். ஒன்றை நிறுவி அதைச் சார்ந்து வாழ்வது என்பது நான் தேர்ந்தெடுத்த திசைக்கு சம்பந்தமில்லாதது.

பிட்சை எடுக்கும் போது மட்டுமே அன்றாடம் சமுதாயத்தின் அங்கங்களான பலவித மக்களைச் சந்திக்கிறேன். அப்படிப்பட்ட தரிசனம் இல்லாமல் உலக நன்மைக்கு நான் எதுவும் செய்ய வாய்ப்பில்லை.

அரச மாளிகையில் இருந்த காலம் எதை என்னிடமிருந்து மறைத்ததோ அதை இந்த பிட்சை ஏந்தி உண்ணும் காலம் தான் மீட்டுத் தருகிறது.

“நேற்று நகரில் என்ன கண்டீர்கள்?” அமர கலாம திடீரெனக் கேட்டார்.

முதல் நாள் சித்தார்த்தன் குழந்தைகளின் விளையாட்டைக் கூர்ந்து கவனித்தான். ஆண் குழந்தைகளாகட்டும் பெண் பிள்ளைகளாகட்டும் விரும்பி விளையாடியது ஒளிந்து கண்டுபிடிப்பதே. பெண் குழந்தைகள் மரச் சொப்பு பொம்மைகளை வைத்து சமைக்க, குழந்தை வள்ர்க்க விளையாட்டில் முயன்றார்க்ள். ஆண்பிள்ளைகள் கத்தியாக குச்சிகளை உருவகித்து சண்டை இட்டார்கள். அவர்கள் மேலும் மரத்தில் யார் முதலில் ஏறுவது, ஒரு அணில் அல்லது ஓணானை அடித்துக் கொல்வது, செங்கற்களை வைத்து சிறிய வீடு கட்டுவது, குத்துச் சண்டை, சிறிய குச்சிகளில் வில் அம்பு சண்டை என பெரியவர்களை நகலெடுத்து ஒத்திகை பார்த்தார்கள். ஒரு வேளை பெரியவர்களும் தம் மூதாதையரின் நகல்களாகவே அதில் ஒருவரை ஒருவர் விஞ்ச முயல்கிறார்க்ளோ?

“நகரத்தில் செய்தி என்னவென்று கேட்டேன்?” என்றார் அமர கலாம மறுபடியும்.

சித்தார்த்தன் செய்தி என்னும் கோணத்தில் யோசித்தான். பல கிராமங்களிலும் நகரங்களிலிலுமிருந்து மக்கள் நதிக்கரையில் குவிந்திருந்தார்கள். “நாளை கும்பமேளா. அதுதான் முக்கிய செய்தி” என்றான்.

அடுத்த நாள் அமர கலாம நதிக்கரைக்குக் கிளம்பும் சித்தார்த்தனுடன் சேர்ந்து கொண்டார்.அபூர்வமாகத்தான் அப்படி நிகழும்.
சீடர்கள் அவரின் கருத்தை அவரது செயற்பாடுகள் மற்றும் அரிதான சுருக்கமான பேச்சுக்கள் வழி புரிந்து கொள்ளப் பழகி இருந்தனர். சித்தார்த்தனுக்குத் தனது தேடலை ஒட்டிய கவனங்கள் இருந்தால் அவர் கற்றுத் தரும் நேரம் மிக முக்கியமானதாக இருந்தது.

நதியை நெருங்க விடாமல் மாட்டு வண்டிகளும், குதிரை வண்டிகளும் நிறுத்தப்பட்டிருந்தன. கூட்டம் கூட்டமாக ஆண்கள், பெண்கள், குழந்தைகள் நெரிசல்.
வைதீக மதம் தொடர்பான சடங்குகளில், சம்பிரதாயங்களில் அமர கலாம ஈடுபாடே காட்டியதில்லை. இன்று கும்பமேளாவுக்காக அவர் வருகிறாரா? வழக்கமான படித்துறையை அவர்கள் இருவரும் சிரமப்பட்டே அடைந்தனர்.

சித்தார்த்தன் நெரிசலில் சிக்கி ஒரு வழியாகக் குளித்து விட்டு வெளியே வரும் போது அமர கலாம எங்கே என்று கூடத் தேடத் தோன்றவில்லை. சில அடிகள் முன் வைக்கும் போடு அவனது தோளைப் பற்றி அழுத்தினார். அவர் சைகை காட்ட அவனும் பின் சென்றான். கதிரவன் மெல்ல மெல்ல மேலெழும்பத் துவங்கி இருந்தான்.

படித்துறை அருகே ஒரு மண்டபம் இருந்தது. அதன் தூண்கள் மீது தொற்றி எக்கி அவர் மண்டபத்தின் மேற்பகுதியை அடைந்த லாகவம் வியப்பளித்தது.
அவனும் அவரைப் பின்பற்றி மேலேற நான்கந்து ஆட்கள் அமரும் அளவு இடம் இருந்த மேற்பரப்பை அடைந்தான். அமர கலாம கிழக்கு நோக்கி அமர்ந்தார். சித்தார்த்தன் பத்மாசனத்துக்கு மாறி நிஷ்டையில் ஆழ்ந்தான். அமர கலாம தொட்டு அசைத்து போதுதான் புற உலகின், மனித நெரிசலின் சத்தமும் சுட்டெரிக்கும் சூரியனும் சித்தார்த்தனுக்கு உறைத்தன.

“சித்தார்த்தரே தாங்கள் வெப்பம், குளிர், புற உலக நிகழ்வு அனைத்தையும் தாண்டி ஆழ்நிலைத் தியானம் புரியுமளவு தேறி விட்டீர்கள். இதைப் பரிட்சிக்கவே இங்கே அழைத்து வந்தேன். அந்தப் பரிட்சையின் முடிவு இதுதான். என் பயிற்சி அனைத்தையும் உங்களிடம் பகிர்ந்து விட்டேன். இனி என்னைத் தாண்டி உங்கள் தேடலைத் தொடரும் வேளை இது” என்றபடி எழுந்து மண்டபத்துக்குக் கீழே இறங்கினார்.
சித்தார்த்தனும் அவரைப் பின் தொடர்ந்து ஆசிரமத்தை அடைந்தான்.

அவரின் ஆணை கிடைத்து விட்டது. இனி மேற்செல்வது அவசியமானது. இது வரையில் உந்திய சக்திக்கே இனிச் செல்லும் திசை தெரியும்.

Series Navigationவெள்ளி வீதி – (அல்ஜீரியா நாட்டுச் சிறுகதை)மண்ணில் வேரோடிய மனசோடு கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *