மண்ணில் வேரோடிய மனசோடு கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

author
0 minutes, 6 seconds Read
This entry is part 17 of 28 in the series 10 மார்ச் 2013
தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
பல சந்தர்ப்பங்களில் வானொலி, தொலைக்காட்சிகளின் கவிதை நிகழ்ச்சிகளை அலங்கரித்து வருகின்றவரும், ஆசிரியராக கடமையாற்றி வருகின்றவருமான கலாபூஷணம் யாழ் அஸீம் அவர்களின் மண்ணில் வேரோடிய மனசோடு என்ற தொகுதி 125 பக்கங்களி;ல் ஸூபைதா பதிப்பகத்தினால் வெளிவந்திருக்கிறது. தேசிய நூலபிவிருத்தி ஆவணவாக்கல் சபையின் அனுசரணையுடன் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூலில் 23 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. கவிஞரின் கன்னித்தொகுதியான இதில் காத்திரமான கவிதைகள் வெளிவந்திருக்கின்றன.
Yarl Azeem`கவிஞர்கள் சிலர் பிறக்கிறார்கள். சிலர் உருவாகிறார்கள். யாழ் அஸீம் அவர்களால் மரபுக் கவிதையும் எழுத முடிகிறது. புதுக் கவிதையும் எழுத முடிகிறது…’ என தாஜூல் உலூம் கலைவாதி கலீல் அவர்களின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளவாறு அஸீம் அவர்களின் கவிதைகளை வாசித்த மாத்திரத்தில் அவற்றின் தன்மைகளையும், சிறப்புக்களையும் புரிந்துகொள்ளலாம். இலகுவில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில், சிறந்த சொல்லாட்சியுடன் எளிமையாக கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன.
வட புல முஸ்லிம்கள் மொத்தமாக துடைத்தெறியப்பட்ட வேதனைகளின் விசும்பல்கள் கவிதைத்தொகுதி முழுவதிலும் முகாரியாக ஒலிக்கிறது. `வேரோடு பிடுங்கி வீசப்பட்டு வலிகளுக்குள் வாழும் வடபுல முஸ்லிம்கள் யாவருக்கும்’ இத்தொகுதி சமர்ப்பிக்கபட்டிருக்கின்றது. சொந்த மண்ணைவிட்டு இடம்பெயர்ந்து வாழும் ஒட்டுமொத்த இதயங்களின் ஓலமாக மிளிர்ந்திருக்கிறது மண்ணில் வேரோடிய மனசோடு என்ற இந்தக் கவிதைத்தொகுதி.
Yarl Azeem (1)இது கவிதையல்ல (பக்கம் 06) என்ற முதல் கவிதை காயம்பட்ட இதயத்தை கண் முன்னால் நிறுத்தி வைக்கிறது. ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளாய் கூடி வாழ்ந்தவர்கள் இடையில் துவேசம் கொண்டவர்களாக ஆனதில் உள்ள விரக்தியைக் காண முடிகிறது. ஆரம்பத்தில் தமிழ் பேசுவதால் இஸ்லாமியத் தமிழர் என உறவு கொண்டாடி மகிழ்ந்தவர்கள்தாம் முஸ்லிம்களும், தமிழர்களும். ஆனால் இடையில் ஏற்பட்ட இனச் சுத்திகரிப்பு முழு முஸ்லிம் சமுதாயத்தையும் இடம்பெயரச் செய்துவிட்டது. இப்போது எம்மை எந்தத் தமிழரென அழைக்கப்போகிறீர் என கவிஞர் கேட்டிருக்கும் கேள்வி, இதற்கு தூண்டுதலாக அமைந்தவர்களின் நாக்கைப் பிடுங்கவல்லது எனலாம்.
இது கவிதையல்ல
கற்கள்
நேயம் கொண்ட இதயம்
காயப்பட்டதால்..
இதயத்திலிருந்து
இதயத்துக்கு வீசும்
கவிதைக் கற்கள்
ஒட்டி வாழ்ந்த உறவுகளை
வெட்டி வீழ்த்திய வீரர்களே!
இஸ்லாமியத் தமிழரென
எமை அழைத்தீர்
இப்போது
எந்த வகைத் தமிழரென
எமை வெறுத்தீர்!
வாழ்க்கையில் எந்த பதவி உயர்வு கிடைத்தாலும், அந்தப் பதிவியுயர்வாலோ அல்லது கல்வியாலோ வேறு தேசம் சென்றாலும் தாய் மண்ணின் சுகத்தை நினைக்கையில் ஆன்மா கதறியழும்.  ஊர்மண்ணில் வெறுங்காலில் திரிய மனம் அவா கொள்ளும். இப்படியிருக்க துரத்தியடிக்கப்ட்வர்கள் இனி எப்போது ஊருக்கு செல்வோம் என்றே தெரியாமல் இருக்கும்போது அவர்கள் மனம் எத்தகைய பாடுபடும் என்பதை மண்ணின் காலடிக்கு.. (பக்கம் 20) என்ற கவிதையிலுள்ள கீழுள்ள வரிகள் மூலம் நமக்கு உணர்த்துகின்றார். தாய்
பொன்னிழந்து வாழ்ந்திடலாம்
பொருளிழந்து வாழ்ந்திடலாம்
மண்ணிழந்து வாழ்வதொரு வாழ்வோ
கண்ணிழந்த வாழ்வு போலன்றோ?
பால்ய வயதுகளில் நண்பர்களோடு இணைந்து செய்த குறும்புத்தனங்கள் இப்போது நினைவு வந்தாலும், தூறல் மழையில் நனைவது போன்ற இதத்தை ஏற்படுத்திச் செல்லும். அவ்வாறே சிறுவயதில் சாப்பிட்ட இனிப்புக்கள், பலகாரங்கள், ஊரின் விசேட சாப்பாடுகள் என்பன ஞாபகத்துக்கு வரும் வேளைகளில் சிறுகுழந்தையாய் இதயம் தடுக்கிவிழும். அவ்வாறானதொரு நிகழ்வையும், அந்தச் சுகம் இனி சொந்த மண்ணில் கிட்டுமா என்ற எதிர்பார்ப்போடும் கவிஞர் கீழுள்ள வரிகளை கூறியிருக்கிறார். மண்ணில் வேரோடிய மனசோடு (பக்கம் 41)
கணங்கள் யாவுமே
கதைகள் பல சொல்ல
கனவுகளாய் விர்ந்து
கண்ணுக்குள் நிழலாட
நெஞ்சுக்குள் இனிக்கிறது
மண்ணில் வேரோடிய
மனசோடு வாழுகிறோம்
மீட்டிடும் பொழுதுகள் யாவும்
மீளாதோ மீண்டும்
நிஜங்களாய் நாளை!
எந்த மதத்தவர் என்றாலும் தத்தமது மதத்துக்குரிய பக்தி அவர்களிடம் காணப்படுதல் இயல்பே. அவ்வகையில் புனித இஸ்லாம் மதத்தைக் கொண்ட நாங்களும் அல்லாஹ்வுக்கு அடிபணிந்து அவன் தூதர் வழி நடப்பதுதான் வெற்றியைத் தரும். எது நடப்பினும் எனக்குக் கவிலையில்லை. எனது குருதியின் ஒவ்வொரு துளியும் உச்சரிக்கும் கலிமாவை என்று ஈமானிய ரசம் பொங்க உறுதியாக கூறி நிற்கிறார் யாழ் அஸீம் அவர்கள். இது எங்கள் வரலாறு (பக்கம் 55)
என்னை
வெட்டித் துண்டாக்கு
சுட்டுப் பொசுக்கு
வேரோடு பிடுங்கி வீசு!
வீழும் உடலின்
ஒவ்வோர் அணுவும்
ஓடும் குருதியின்
ஒவ்வொரு துளியும்
உச்சரிக்கும் கலிமாவை!
முகாம்களில் அடைந்து வாழும் வாழ்க்கையப் பற்றியும் கவிதை எழுதத் தவறவில்லை யாழ் அஸீம் அவர்கள். எந்தவித சுகாதார வசதிகளும் அற்று, அடுத்த வேளை உணவுக்காய் அல்லல்படும் மனிதர்களின் மனங்கள் எத்தகைய துன்பத்தை அனுபவிக்கும். பணக்காரராக வாழ்ந்தவர்கள் பரதேசிகளாக ஆன நிலையில் காலத்தை கடத்தும் வேதனையை யாரிடம் சொல்லி அழுவார்கள்? வெளிச்சம் வெளியேயும் இல்லை (பக்கம் 63) என்ற கவிதை வரிகள் எம் மனதையும் நெகிழ வைக்கின்றன.
புன்னகையை விற்றுக்
கண்ணீரைக் கடன் வாங்கிய
இவர்கள் வியாபாரத்தில்
எஞ்சியது சில மூச்சுக்கள்தான்!
கிழிந்த ஆடைகளைப் பற்றிக்
கவலைப்படுவதில்லை
இவர்கள் கவலையெல்லாம் – நம்
கிழிந்த வாழ்க்கையைப் பற்றித்தான்!
பல்வேறுபட்ட ஆளுமைகளைக் கொண்டிருக்கும் கவிஞர் யாழ் அஸீம் அவர்கள் சிறந்த கவிதைத் தொகுதியை வெளியிட்டு, அவற்றை மக்கள் மனதில் பதியச் செய்துவிட்டார். அவர்; இன்னும் பல படைப்புக்களை எழுதி புத்தகங்களாய் வெளியிட வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.
நூலின் பெயர் – மண்ணில் வேரோடிய மனசோடு
நூலாசிரியர் – யாழ் அஸீம்
வெளியீடு – ஸுபைதா பதிப்பகம்
முகவரி – 228/1, ஜும்ஆ மஸ்ஜித் வீதி, மாளிகாவத்தை, கொழும்பு – 10.
தொலைபேசி – 0717 268466
விலை – 300 ரூபாய்
 
 
நன்றி!
இப்படிக்கு,
தியத்தலாவ 
எச்.எப். ரிஸ்னா
 
Series Navigationபோதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 11சூளாமணியில் சமயக் ​​கொள்​கையும் நிமித்தமும்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *