முறுக்கு மீசை

author
6
0 minutes, 8 seconds Read
This entry is part 26 of 29 in the series 24 மார்ச் 2013

டாக்டர் ஜி. ஜான்சன்

 

அப்போது நான் நான்காம் ஆண்டு மருத்துவ மாணவன்.தமிழ் நாடு வேலூரில் கிறிஸ்துவ மருத்தவக் கல்லூரியில் பயின்ற காலம்.

22 வயதுடைய இளைஞன் நான். வாட்டசாட்டமான உடல் வாகுடன் தலை நிறைய சுருள்சுருளான கேசத்துடன் இருந்த அருமையான பருவம் அது. வெள்ளை நிற ‘ கிளினிக்கல் கோட் ‘ அணிந்து, கழுத்தில் ஸ்டெத்தஸ்கொப் தொங்க உடன் பயிலும் தோழிகளுடன் வார்டுகளில் பெருமையுடன் பவனி வந்த நாட்கள் இன்றும் நினைத்தாலே இனிக்கும் அனுபவமே!

எப்படியோ மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன .

முதல் இரண்டு ஆண்டுகள் ‘ பிறீ கிளினிகல் ‘ ( pre – clinical ) என்று அழைக்கப்படும். இந்த இரு ஆண்டுகளும் கல்லூரியில் உள்ள வகுப்பு அறைகளில்தான் பாடங்கள் சொல்லித் தரப்படும். முதலாம் ஆண்டில் இயற்பியல் ( physics ), வேதி இயல் ( chemistry ), தாவர இயல் ( botany ), விலங்கியல் ( zoology ) கற்றோம். இப் பாடங்களை நான் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் புகுமுக வகுப்பில் கற்றுள்ளதால் இங்கு சுலபமாக இருந்தது.

ஆனால் இரண்டாம் வருடமும் மூன்றாம் வருடமும் மிகவும் கடினமான உள்ளமைப்பியல் ( anatomy ), உடலியல் ( physiology ) பயில வேண்டும். இவற்றில் தேறினால்தான் மேற்கொண்டு மருத்துவக் கல்வியைத் தொடர முடியும்.இவற்றில் ஒரு முறை தொல்வியுற்றால் மீண்டும் ஆறு மாதங்கள் கழித்து மறு தேர்வு எழுதவேண்டும். கால விரயத்துடன் பணமும் வீணாகும்.

ஒரு சிலர் இந்த இரண்டாம் ஆண்டைத் தாண்டவே இரண்டு மூன்று வருடங்கள் எடுப்பதுண்டு. ஒரு சிலர் ” போதுமடா சாமி ” என்று கும்பிடு போட்டுவிட்டு போய்விடுவதும் உண்டு!

இந்த இரண்டாம் ஆண்டில் இந்த இரு கடினமான பாடங்கள் போதாதென்று கரிம வேதியியல் ( organic chemistry ) என்ற குழப்பமான பாடம் வேறு பயில வேண்டும்.மூன்றாம் ஆண்டில் மருந்தியல் ( pharmacology ) பயின்றாக வேண்டும்.

மூன்றாம் ஆண்டில்தான் மருத்துவமனை செல்வோம். அப்போதுதான் முதன்முதலாக ஸ்டெத்தஸ்கோப் கழுத்தில் அணிந்து செல்வோம். முதல் சில நாட்கள் பெருமையாக இருக்கும். எனக்கு அப்பா சிங்கப்பூரிலிருந்து ஒரு புதிய லித்மேன்ஸ் ஸ்டெத்தஸ்கோப் அனுப்பியிருந்தார்.

காலை எட்டு மணிக்கு காலேஜ் பஸ் எங்கள் விடுதியிலிருந்து கிளம்பும். மாலை ஐந்து மணிக்குதான் மருத்துவமனையிலிருந்து திரும்பும்.

நான்காம் ஆண்டும் ஐந்தாம் ஆண்டும் மருத்துவமும் ( medicine ), அறுவை சிகிச்சையும் ( surgey )பயில்வோம். இரண்டு வருடங்கள் பயிலும் இந்த இரு முக்கிய பாடங்களில் தேர்ச்சி பெற்றால்தான் மருத்துவ பட்டம் பெறலாம்.

இந்த இடைப்பட்ட காலத்தில் நிறைய சம்பவங்கள் நடந்திருந்தாலும் நான்காம் ஆண்டில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் சுவையானதால் அதை இன்றும் மறக்கமுடியவில்லை.

நான்காம் ஆண்டில் நுண்ணுயிரி இயல் ( microbiology ) ஒரு ஆண்டு பயிலவேண்டும்.

அது மருத்துவமனை வகுப்பறையில் நடைபெறும். நுண்ணுயிர்கள் ( கிருமிகள் ) எல்லாவற்றையும் படித்தும், நுண்ணோக்கிமூலம் பார்த்தும், அவற்றை வரைந்தும் பயில்வோம்.

வகுப்பு பெரும்பாலும் மாலை நான்கு முதல் ஐந்து வரை நடைபெறும். எங்கள் வகுப்பில் முப்பத்தைந்து ஆண்களும் இருபத்தைந்து பெண்களும் இருந்தோம்

வகுப்பு ஆசிரியை அன்னம்மா தாமஸ். அவர் மலையாளப் பெண்மணி. வயது முப்பது. திருமணம் ஆகாதவர். பழுத்த ஆரஞ்சு நிற சிவப்பு.வடிவான முக அமைப்பு. சேல் விழிகளும் சிவந்த வதனமும் அவரை சாதாரண அழகைவிட ஒரு படி மேலேயே காட்டியது. மணமாகாத இளமையின் எழுச்சி ஒருவித கவர்ச்சியையும் காட்டியது.

வகுப்பு ஆசிரியையைப்பற்றி இப்படி தத்ரூபமாக வர்ணிப்பது தேவைதானா என நீங்கள் நினைப்பது தெரிகின்றது. ஆனால் என்ன செய்வது. இந்தக் கதைக்கும் அன்னம்மாவின் அழகிற்கும் நிறைய தொடர்பு உள்ளதே?

தினமும் அழகான சேலை உடுத்தி வண்ண மயில்போல் வரும் அவர் பாடம் நடத்தும்போது நாங்கள் அனைவருமே, குறிப்பாக ஆண்கள் அவரைக் கண்டு மகிழ்வதுண்டு. ( அவரைவிட பன்மடங்கு அழகுள்ள பெண்கள் வகுப்பிலும் இருந்தனர் என்பதும் உண்மையே )

அவர் பாடம் நடத்தும்போது அவரைப் பார்த்துதானே ஆகவேண்டும். அவரைப் பார்க்காமல் வேறு எங்காவது பார்த்துக்கொண்டு அவர் கூறுவதை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தால் பாடத்தில் கவனம் செலுத்தவில்லை என்றன்றோ பொருள்படும்? அதனால்தான் அவரின் கண்களையே உற்று நோக்கியவண்ணம் கவனத்துடன் குறிப்புகள் எழுதுவேன்.

இவ்வாறு அவருடன் ஒரு வருடமும் முடியும் தருவாயில்தான் அந்த அசம்பாவிதம் அரங்கேறியது!

அன்று கல்லூரி முதல்வர் டாக்டர் கோஷி என்னை அவருடைய அலுவலகம் வரச் சொல்லி கடிதம் அனுப்பியிருந்தார். அவரின் அலுவலகம் பாகாயத்தில் இருக்கும் கல்லூரி வளாகத்தில் இருந்தது.

மாலையில் காலேஜ் பஸ் விடுதி திரும்பியதும் நேராக அவரின் அலுவலகம் சென்றேன்.

மனதில் இனம்தெரியாத எதோ பயம் ஆக்கிரமித்தது. நான் அறிந்து ஏதும் தவறு செய்ததில்லை. என் வகுப்பு மாணவிகள் இருபத்தி ஐந்து பேர்களில் ஒரிருவர்மீது ஒரு கண் இருந்தாலும் தவறாக நடந்ததே இல்லை. இரவு இரண்டாம் ஆட்டம் ஆங்கில படத்திற்கு சில நாட்களில் போயுள்ளேன். அதுவும் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பெண்ணுடன்தானே போயுள்ளேன்? இதுவரை எந்த பெண்ணுடனும் எனக்கு காதலோ வேறு பிரச்னையோ இல்லையே? வகுப்பிலும் நான் பாடங்களில் கவனமாகத்தானே உள்ளேன் அவர் ஏன் என்னை அழைத்துள்ளார் என்பது குழப்பத்தையே உண்டுபண்ணியது.

டாக்டர் கோஷி கோபமாகவே காணப்பட்டார். சாதாரணமாக சிரித்த முகத்துடன்தான் இருப்பது அவரின் சிறப்பு. என்னிடம் மிகவும் அன்பாகவே பழகுபவர். ஒருசில நாட்களில் நான் காலையில் தூங்கிவிட்டு கல்லூரி பஸ் பிடிக்க முடியாமல் டவுன் பஸ் ஏற வீதியில் காத்திருக்கும்போது அந்த வழியாக வரும் அவர் என்னை காரில் ஏற்றிச் சென்றதுண்டு. அப்போதுகூட தாமதமாக வகுப்புக்குச் செல்வது குறித்து ஏதும் சொல்லாமல் நான் ஏதாவது புது கதை எழுதியுள்ளேனா என்றுதான் கேட்பார். அவ்வளவு நல்லவர் எங்கள் கல்லூரி முதல்வர் டாக்டர் கோஷி .அவரும் ஒரு மலையாளிதான்.

மாலை வணக்கம் கூறிவிட்டு இருக்கையில் அமர்ந்தேன்.

” உன்மேல் ஒரு குற்றச்சாட்டு வந்துள்ளது .” ஆங்கிலத்தில் கூறினார்

” டாக்டர்  ? ” புரியாமல் அவரைப் பரிதாபமாகப் பார்த்தேன்.

கையில் வைத்திருந்த ஒரு கடிதத்தை என்னிடம் நீட்டி , ” படித்துப் பார். ” என்றார்.

” கல்லூரி முதல்வர் அவர்களுக்கு வணக்கம்.

வகுப்பில் ஜி.ஜான்சன் எப்போதும் மீசையை முறுக்கிக்கொண்டு என்னையே ஒருமாதிரி பார்ப்பது எனக்கு பயத்தை உண்டுபண்ணுகிறது. தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன்.

நன்றி.

இப்படிக்கு.அன்புள்ள,

அன்னம்மா .”

படித்து முடித்ததும் கை நடுங்கியது! வாய்கூட குளறியது! அந்த குளிர் சாதன அறையிலும் வியர்த்துக் கொட்டியது!

அப்போது என்னையுமறியாமல் வழக்கம்போல் என்னுடைய கை மீசையை முறுக்கியது.

” அன்னம்மாவிடம் முறுக்கியது போதாதென்று என்னிடமும் உன் மீசையை முறுக்குகிறாயா? ” கோபத்துடன் உறக்க அவர் கூறியது கேட்டு கையை மீசையிலிருந்து எடுத்துவிட்டேன்.

” இப்படி முறுக்கு மீசையும் பெரிய கிருதாவும் வைத்திருந்தால் யாருக்குதான் பயம் வராது? ”

” வகுப்பு ஆசிரியையே உன்னைக்கண்டு பயப்படுகிறார்! இதற்கு நீ என்ன சொல்லப் போகிறாய்? ”

” டாக்டர், நான் தவறான எண்ணத்துடன் அவரைப் பார்த்ததில்லை.மீசையை முறுக்குவது எனக்குப் பழக்கமாகிவிட்டது. அதோடு என்னுடைய சாதாரணப் பார்வையே அப்படித்தான். முறைத்துப் பார்ப்பது போன்றுதான் தெரியும். இதற்கு நான் என்ன செய்வது? ”

அப்போது நான் மொத்தமான முறுக்கு மீசையை மகாகவி பாரதியைப்போல் வைத்திருந்தேன். அடர்த்தியான நீண்ட கிருதாவையும் காதுவரை நீட்டியிருந்தேன். சக மாணவர்கள்கூட அவர்களால் இதுபோன்று மீசையும் கிருதாவும் இல்லையே என்றுகூட வருந்தி என்மேல் பொறாமையும் கொண்டதுண்டு அதேவேளையில் என் வகுப்புப் பெண்களில் பலர் என் முறுக்கு மீசை மீதும் நீண்ட கிருதாமீதும் மையல் கொண்டுள்ளதையும் நான் நன்கறிவேன். அன்னம்மா மட்டும்  இதை இரசிக்காமல் ஏன் பயந்தார்  என்பது புரியாமல் தவித்தேன்!

” உன் சாதாரணப் பார்வையே அப்படிதான் என்று நீ கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது உன்மேல் புகார் வந்துள்ள்ளது.அதுவும் எழுத்துப் பூர்வமாக. இதற்கு நான் சரியான நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும். அதற்குமுன் உன்னிடம் ஒன்று கேட்கலாமா? ”

” கேளுங்கள் டாக்டர். ”

” இதைச் சொல்ல எனக்கு அதிகாரம் இல்லைதான். ஆனாலும் சொல்லிவிடுகிறேன். உன் முறுக்கு மீசையை உன்னால் எடுத்துவிட முடியுமா? கிருதாவின் நீளத்தைக் குறைத்துக்கொள்ள முடியுமா? ”

இது கேட்டு நான் திக்குமுக்காடிப் போனேன் நான் அருமையாக வளர்த்துவரும் இந்த மீசையையும் கிருதாவையும் கேவலம் அந்த அன்னம்மாவிற்குப் பயந்துகொண்டா இழப்பது? முடியாது! முடியவே முடியாது! நான்  ஒரு வீரத் தமிழ் மகன் அல்லவா? என் முறுக்கு மீசையை எடுப்பது கோழைத்தனமன்றோ !

நான் மௌனம் சாதித்தேன்.

” உன் மௌனத்தின் பொருள் எனக்குப் புரிகிறது. நீ மீசையை தியாகம் செய்ய மாட்டாய் என்பது எனக்குத் தெரியும். அதனால் உன்னை இந்த வருட தேர்வில் இருந்து விலக்கி வைக்க எண்ணுகிறேன். ”

இது கேட்டு என் தமிழ் வீரமெல்லாம் எங்கோயோ பறந்து வெலவெலத்துப்போனேன்!

” டாக்டர், ஒரு மீசைக்காக நீங்கள் தரும் தண்டனை கொடுமையானது. இதனால் நான் ஆறு மாதங்கள் இழந்துவிடுவேன்.தயவு செய்து வேறு தண்டனைத் தாருங்கள் ” வேறு வழியின்றி கெஞ்சினேன்.

சிறிது நேரம் மௌனம்.

என் இருதயம் படபடத்தது!

” சரி. நீயும் மீசையை எடுக்கப்போவதில்லை. நானும் தண்டனையை விடப்போவதில்லை. இப்போது அன்னம்மாவை எப்படியாவது சமாதானப்படுத்த வேண்டிய பொறுப்பு என்னிடம் உள்ளது. அதனால் இந்த சிக்கலைத் தீர்க்க ஒரே வழிதான் உள்ளது. முள்ளை முள்ளால் எடுக்கும் வழி இது. நாளையிலிருந்து ஒரு வாரம் வகுப்பு முடிந்ததும் நீ அன்னம்மாவுடன் ஒரு மணி நேரம் மாலை ஆறு வரை கூடுதல் பாடம் ( extra lesson ) செய்ய வேண்டும். அதன் முடிவில் அன்னம்மாவிற்கு உன் மீசை மீது உள்ள பயம் போகுதா என்று பார்ப்போம்.” இறுதி தீர்ப்பு இது!

இதை எதிர்த்து நான் முறையிடவில்லை. ஆறு மாதங்கள் வீணாவதைவிட இது எவ்வளவோ மேல் என்று ஏற்றுக்கொண்டு விடைபெற்றேன் .

விடுதி திரும்பியதும் என்னுடைய வகுப்பு மாணவர்கள் ஆர்வத்துடன் என்ன நடந்தது என்று கேட்டனர். நானும் எதையும் மறைக்காமல் அவர்களிடம் விவரித்தேன். இந்த நான்கு ஆண்டுகளில் நாங்கள் அனைவருமே ஒரு குடும்பமாக மாறிவிட்டோம்.

மறுநாள் மாலை ஐந்து மணிக்கு வகுப்பு முடிந்ததும் அனைவரும் எனக்குக் கைக் கொடுத்து வாழ்த்திவிட்டு விடை பெற்றனர்.

நிசப்தம் . எங்கள் இருவரைத் தவிர வகுப்பறையில் வேறு யாரும் இல்லை.

வழக்கமாக என் இருக்கை கடைசி வரிசையில்தான். ஆனால் இப்போது முதல் வரிசையில் அவருக்கு நேராகவே அமர்ந்துகொண்டேன். நான் அவரைப் பார்க்கவில்லை. அவரும் என்னைப் பார்க்கவில்லை.

நுண்ணுயிரி இயல் பாட நூலில் குளோஸ்ட்டிரிடியம் பெர்பிரின்ஜென்ஸ் ( Clostridium Perfringens ) எனும் கடினமான பெயரைக்கொண்ட கிருமி பற்றி அரை மணி நேரம் படிக்கச் சொல்லி கரும் பலகையில் எழுதிவிட்டு அவரின் இருக்கையில் அமர்ந்து எதையோ படித்துக்கொண்டிருந்தார்.

நான் இந்த கிருமி பற்றிய பகுதியைப் படித்துக்கொண்டிருந்தேன். இது மலத்தின் வழியாக வயிற்றுப் போக்கும் கடுமையான வயிற்று வலியையும் உண்டுபண்ணும். இது பற்றிய முழு விவரங்களைத் தெரிந்துகொள்வதுகூட எனக்கு சிரமமாக இல்லை. என்னையுமறியாமல் என்னுடைய வலது கை மீசைக்குப் போவதைத் தடுப்பதுதான் சிரமமாக இருந்தது!

இதுபோன்ற ” ஏகாந்த ” சூழலில் அந்த பாழாய்ப்போன கிருமியின்மீது கவனம் செலுத்துவது சற்று சிரமமே. எவ்வளவு நேரந்தான் புதிய மணப்பெண் போன்று குனிந்த தலை நிமிராமல் கண்ணுக்குத் தெரியாத அந்த கிருமியின் மீது கவனம் செலுத்துவது?

அவர் என்னதான் செய்கிறார் என்று ஒரு கணம் தலையை மெல்ல உயர்த்தினேன். அவர் என்னையே பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்து சட்டனெ குனிந்துகொண்டேன். அந்த ஒரு வினாடியில் எங்களின் கண்கள் சந்தித்துக்கொண்டன!

” கண்ணோடு கண்ணினை நோக்குஒக்கின் வாய்ச்சொற்கள்

என்ன பயனும் இல. ” என்ற வள்ளுவரின் குறளுக்கொப்ப இருவரும் ஏதும் பேசிக்கொள்ளவில்லை.

அவர் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பது எனக்குத் தெரிந்துவிட்டது  அவரின் விழிகளில் அந்த ஒரு கணத்தில் மானின் மருட்சியைக் கண்டேன் !

அவர் என் ஆசிரியையாக இருந்தால் என்ன? அவரும் ஒரு பெண்தானே! எல்லா பெண்களுக்கும் உள்ள உணர்வுகள் அவருக்கும் இருக்கத்தானே செய்யும்? செய்யும் வேலை எவ்வளவு உயர்வாக இருந்தாலும் பெண் உணர்வுகள் எல்லாருக்கும் உள்ளதுதானே?

சரியாக அரை மணி நேரம் ஆனதும் , ” சரி. படித்தது போதும். கேள்விகள் கேட்கலாமா? ” என்ற அவரின் குரல் கேட்டு தலை நிமிர்ந்தேன்.

” குளோஸ்ட்ரிடியம் பெர்பிரின்ஜென்ஸ் பற்றி நீ தெரிந்துகொண்டது என்ன? ” கேள்விகளை கேட்கத் தொடங்கினார்.

என்னிடம் ஒரு தன்மை உள்ளது. முழுதாக கவனம் செலுத்தி எதைப் படித்தாலும் அது அப்படியே மனதில் பதிந்துவிடும். வெகு சுலபமாக படித்து தெரிந்துகொண்டதை அப்படியே அவரிடம் விளக்கிக் கூறியதோடு கரும்பலகையிலும் படங்கள் வரைந்து விளக்கினேன்.என்னுடைய விளக்கத்தைக் கண்டு அவர் வியந்து போனதை அவரின் முகம் பிரதிபலித்தது .

” சரி. இன்றைய அசைன்மென்ட் முடிந்தது. நாளை மீண்டும் பார்ப்போம் ” அவர் வெளியேற தயார் ஆனார்.

நான் கையை உயர்த்தி , ” உங்களிடம் ஒன்று கூறலாமா? ” என்று கேட்டேன்.

” எஸ் ? ” என்று மீண்டும் இருக்கையில் அமர்ந்துகொண்டார்.

” என்னைப் பார்த்தால் உங்களுக்கு பயமாக உள்ளதா? ஏன் அப்படி? நான் மீசையை முறுக்குவது பழக்கமாகிப் போனது. உங்களை தவறாகப் பார்த்து அப்படிச் செய்யவில்லை.நான் நல்லவன்.” எப்படியோ தடுமாறி அவரிடம் கூறிவிட்டேன்.

அது கேட்டு அவர் புன்னகைத்தார்!

இது போதுமே எனக்கு!

” சரி. கிளம்பலாமா? நேரம் ஆகுது.” இருக்கையிலிருந்து எழுந்தார்.

” உங்கள் பயம் தீர்ந்தது என்பதற்கு அடையாளமாக என்னோடு கேன்டீனுக்கு வாருங்கள். டீ குடித்துவிட்டு செல்வோம். ” என்றவாறு அவரை நோக்கினேன்.

வராந்தாவில் நடந்தபோது . ” ரொம்ப துணிச்சல்தான் உனக்கு. ” என்று அவர் கூறியது கேட்டு மனதில் கிளுகிளுப்பு உண்டானது.

தேநீர் அருந்தும்போது என்னிடம் மனம்விட்டு பேசலானார்.

இரண்டாம் நாள் தண்டனை அவ்வளவு இறுக்கமாக இல்லை. இருவரும் பேசிக்கொண்டே காரினிபேக்டீரியம் டிப்தீரியே ( Corynebacterium diphtheriae ) நுண்ணுயிரி பற்றி தெரிந்துகொண்டோம்.

அன்று மீசையை முறுக்க கை சென்றபோது நான் அதைத் தடைச் செய்யவில்லை . அவரும் அதை கண்டுகொள்ளவில்லை.

இது வெற்றி மீது வெற்றியன்றோ?

ஆறு மணிக்கு நாங்கள் இருவரும் ஜோடியாக மருத்துவமனைக்கு எதிரேயுள்ள ” மெட்ராஸ் ஹோட்டல் ” செல்வதை பல கழுகுக் கண்கள் பொறாமையுடன் வியந்து நோக்கின!

மூன்றாம் நாள் கல்லூரி முதல்வர் மாலை ஐந்து மணிக்கு வரச் சொல்லி கடிதம் வந்தது.

அவர் தந்த தண்டனைப்படி ஒழுங்காகத்தானே நடந்துகொண்டேன்? பிறகு ஏன் மீண்டும் இந்த அழைப்பு? ஒருவேளை அன்னம்மா வேறு ஏதாவது சொல்லிவிட்டாரோ? அவர்தானே என் அருகில் நெருக்கமாக அமர்ந்துகொண்டு உணவு அருந்தினார்? கலகலவென்றுதானே என்னிடம் பேசி சிரித்தார்? இல்லை. அப்படி இருக்காது. வேறு ஏதாவது சொல்ல அழைத்திருக்கலாம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவர் அறைக்குள் நுழைந்தேன்

” வெல்கம் மிஸ்டர் ரோமியோ .” சிரித்த முகத்துடன் என்னை வரவேற்றார் டாக்டர் கோஷி ! எனக்கு ஒரே ஆச்சரியம் !

என்ன ஆனது என்று நான் யூகிப்பதற்குள் அவர் தொடர்ந்தார்.

” உன்மேல் மேலும் பல புகார்கள் வந்துள்ளன . அதற்கு இப்போ தண்டனை தர வேண்டும்.” நான் புரியாமல் விழித்தேன்.

” புரியலையா? ” இல்லை என்பதுபோல் தலையசைத்தேன்.

” நீ மைக்ரோபையாலஜி வகுப்பில் அன்னம்மாவைப் பார்த்து மீசையை முறுக்கியதால் தண்டனைத் தந்தேன்.ஆனால் அதே முறுக்கு மீசையால் அவளையே மயக்கிவிட்டாய்.! உங்கள் இருவரையும் ஜோடியாக வெளியில் பலர் பார்த்துள்ளனர்! ஆகவே உடனடியாக தண்டனை ரத்துசெய்யப்படுகிறது! நீ உண்மையில் ரோமியோதான்! ” உரக்க சிரித்து கை குலுக்கி விடை தந்தார் கல்லூரி முதல்வர் டாக்டர் கோஷி!

( முடிந்தது)

 

Series Navigationகுரல்வளைவெளுத்ததெல்லாம் பால்தான்!
author

Similar Posts

6 Comments

 1. Avatar
  சி. ஜெயபாரதன் says:

  கலிகால மெடிகல் ரோமியோ ஜூலியட் காதல் கதையை இப்படிச் சுவையோடு ஷேக்ஸ்பியர் கூட எழுத முடியாது.

  இதுபோல் சுவையாக மருத்துவக் கட்டுரைகள் சிலவும் எழுத வேண்டும் டாக்டர் ஜி. ஜான்சன்

  சி. ஜெயபாரதன்.

 2. Avatar
  சி. ஜெயபாரதன் says:

  மருத்துவக் கதைகள் எழுதி அரிய மருத்துவக் கருத்துக்களை அறிவிக்கும் டாக்டர் ஜி. ஜான்சன் திண்ணையில் மருத்துவக் கேள்வி-பதில் பகுதியை ஆரம்பிக்கலாம். பலர் தமது ஐயப்பாடுகளைத் தீர்க்கலாம்.

  தமிழில் அழகாக எழுதிக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் மருத்துவ நுணுக்கத் தமிழர் கோடியில் ஒருவர்.

 3. Avatar
  Dr.G.Johnson says:

  அன்புள்ள நண்பர் ஜெயபாரதன் அவர்களே , வணக்கம். எனது ” முறுக்கு மீசை ” சிறுகதை தங்களை வெகுவாகக் கவர்ந்தது என்பதை தங்களின் பின்னூட்டத்திலிருந்து புரிந்துகொண்டேன். ஷேக்ஸ்பியர் கூட இதுபோன்ற நவீன மருத்துவ ரோமியோ ஜூலியட் காதல் கதை எழுதமுடியாது என்று கூறியுள்ளது கண்டு புளகாங்கிதம் அடைகின்றேன் ….நன்றி நண்பரே!….டாக்டர் ஜி. ஜான்சன்.

 4. Avatar
  சி. ஜெயபாரதன் says:

  நண்பர் டாக்டர் ஜி. ஜான்சன்,

  அந்த பாரதி முறுக்கு மீசைப் படத்தைத் திண்ணை வாசருக்குக் காட்டுவீர்களா ? காதல் மீசை எப்படி இருக்கும் என்று காண ஆவல் !

  நீங்கள் காதலித்த, உங்கள் காதலை ஏற்றுக் கொண்ட அந்த அன்னம்மாவைத் திருமணம் செய்தீர்களா ? அல்லது ….. ????

  சிறுகதை தொடர்கிறது … !
  முடிவில் என்ன நடந்தது டாக்டர் ?

 5. Avatar
  Dr.G.Johnson says:

  அன்பு நண்பர் ஜெயபாரதன் அவர்களுக்கு வணக்கம். அந்த பாரதி முறுக்கு மீசை படம் பழைய ஆல்பத்தில் தேடி கிடைத்தால் திண்ணையில் போடுகிறேன். சிறுகதை தொடர்கதையாகவே மாறலாம்–திண்ணை நிர்வாகம் இடம் தந்தால். 4ஆம் ஆண்டு மைக்ரோபயோலாஜி வகுப்புடன் அன்னம்மாவின் காதல் முடிந்தது.அதன்பின் இறுதி ஆண்டு பிரசவ வார்டு போஸ்டிங் பொது முதல் குழந்தையை பிரசவம் பார்க்க உதவிய ஸ்டாப் நர்ஸ் கிரிஸ்ட்டில்டா மேரி காதல் உள்ளதே. அது பற்றி விரைவில் எதிர்ப் பாருங்கள்!….டாக்டர் ஜி.ஜான்சன்.

 6. Avatar
  வாணிஜெயம் says:

  அருமையான நடை.இரசிக்க வைத்தது.செவி வழி அறிந்த கதையை புனைவாக பார்த்ததில் மகிழ்ச்சி.வாழ்த்துக்கள் டாக்டர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *