அக்னிப்பிரவேசம்-32 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

This entry is part 28 of 29 in the series 28 ஏப்ரல் 2013

அக்னிப்பிரவேசம்-32
தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்
yandamoori@hotmail.com
தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்
tkgowri@gmail.com
yandamuri veerendranathசாரங்கபாணிக்கு இருபத்தைந்து வயது இருக்கும். அழகாய், கவர்ச்சியான தோற்றத்துடன் இருப்பான். பணத்தால் உண்டாகும் கர்வம் கண்களில் தேன்பட்டுக் கொண்டிருந்தது. வந்தது புதிய நபர்தான் என்றாலும் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தான்.
“என் பெயர் பாவனா. ஹரிணி விஷயமாய்ப் பேச வந்திருக்கிறேன்.”
நெற்றியில் வந்து விழுந்த கேசத்தை அலட்சியமாய் ஒதுக்கிக் கொண்டே “எந்த ஹரிணி?” என்று கேட்டான்.
“உங்களுக்கு எத்தனை ஹரிணிக்களை தெரியும்? தெரிந்த அத்தனை ஹரிணிக்களையும் நம்ப வைத்து ஏமாற்றி இருக்கீங்களா?
“நீங்க என்ன பேசுறீங்க என்று எனக்கு புரியவில்லை. எனக்கு எந்த ஹரிணியையும் தெரியாது.”
“இந்தப் பெண்தான்.” போட்டோவை எடுத்துக் காட்டினாள் பாவனா.
“தெரியாது, இவளை எங்கேயுமே பார்த்தது கிடையாது.” அவன் கண்களில் பயம் தெரிந்தது. நிலையாய் ஒரு இடத்தை பார்க்க முடியாமல் இருந்தான்.
“அப்படியா? உங்களுக்கோ, உங்க நண்பர்களுக்கோ இவளைத் தெரியாது. அப்படித்தானே?”
“தெரியாது.. தெரியாது.” எழுந்து உள்ளே போய் விட்டான்.
****
“வணக்கம். வாம்மா. பாரதிதேவி அனுப்பியிருக்கிறாள் என்றால் ஏதாவது தொண்டு காரியமாக இருக்கும். ஆளும் கட்சியிடம் அனுப்பாமல் என்னைப் போன்ற எதிர்க்கட்சிகாரனிடம் அனுப்பியிருக்கிறாள் என்றால் ஒருக்கால் நிதி உதவி சரியாக கிடைக்க வில்லை என்று நினைக்கிறேன். என்ன விஷயம் சொல்லு?” என்றார் சிதம்பர சுவாமி.
பாவனாவுக்கு அருவருப்பாய் இருந்தது. என்ன விஷயம் என்று தெரிந்து கொள்ளாமலேயே அரசியல் பூச்சு பூசுகிறார்.
“ஹரிணி என்ற பெண்ணைப் பற்றிப் பேச வந்திருக்கிறேன். அவள் உங்க மகனின் சிநேகிதி. வேலை வேண்டும் என்று வந்த போது நீங்க சிபாரிசு செய்து அவளுக்கு வேலை வாங்கிக் கொடுத்திருக்கீங்க.”
“வாங்கிக் கொடுத்திருப்பேனாய் இருக்கும். அவ்வப்பொழுது யார் யாரையோ அழைத்து வருவான். அவனுக்கு இளகிய மனசு. முடிந்த வரையில் உதவி செய்து கொண்டே இருப்பான்.. அதுசரி, இப்போ என்ன நடந்தது? வேலையில் ஏதாவது பிரச்சனையா? நிரந்தரம் ஆக்கவில்லையா?”
“அதெல்லாம் இல்லை. உங்க மகன் அவளை ஏமாற்றிவிட்டான். அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லி உங்க மகனிடம் சொல்லுங்கள்.”
“ஏமாற்றுவதா? அவன் அப்படிப்பட்ட ஆள் இல்லையே? அவனுக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறேன், கல்யாண விஷயத்தில். அவனுக்குப் பிடித்த பெண் யாராக இருந்தாலும் தைரியமாக என்னிடம் வந்து சொல்லுவான்.”
“அவனுக்குக் கல்யாணம் பண்ணிக் கொள்ளும் உத்தேசம் இல்லை.”
“பாரும்மா. முன்பின் தெரியாத நீ வந்து ஏதேதோ கதையை ஜோடித்து சொல்வதை நம்பி கல்யாணத்தைப் பண்ணுவதா? என்ன விஷயம் என்று என் மகனிடம் கேட்டுத் தெரிந்து கொள்கிறேன். இரண்டு நாள் கழித்து வா. விஷயம் கேட்டு சொல்கிறேன்.”
“இல்லை. இப்பொழுதே உங்க மகனைக் கூப்பிட்டுக் கேளுங்கள்.”
‘அவன் வீட்டில் இல்லை.”
“எங்கே போனான் என்று தெரியாதா?”
“எனக்கு எப்படி தெரியும்? எந்த காரியமாய் போயிருக்கிறானோ?”
“ஆமாம். உங்களுக்கு ஒன்றுமே தெரியாது. உங்க மகன் என்ன பண்ணுகிறான்? எங்கே போகிறான்? அவன் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள்? இதையெல்லாம் தெரிந்துகொள்ள நேரம் இல்லை உங்களுக்கு. ஒரு பெண்ணைக் காதலிப்பது போல் நடித்து ஏமாற்றிவிட்டான் உங்க மகன். அது மட்டுமில்லை. ஒரு நாள் கெஸ்ட் ஹவுஸுக்கு அழைக்கச் செய்து தன் நண்பர்களுக்கு பரிசாக தந்திருக்கிறான். அப்பாவியாய் வந்த அந்தப் பெண்ணை நாலு பேருமாய்ச் சேர்ந்து மிருகத்தை விட கேவலமாய் அனுபவித்திருக்காங்க. காதலனே இந்த விதமாய் ஏமாற்றி விட்டதால் உலகத்தையே நம்ப முடியாமல் தற்கொலையை நாடிவிட்டாள் அந்தப் பெண். இதற்கு உங்க மகன்தான் பதில் சொல்ல வேண்டும்.”
அவளுடைய ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டு சிதம்பர சுவாமியின் முகம் கோபத்தால் சிவந்தது.
“வார்த்தைகளை அளந்து பேசும்மா. பாரதிதேவி அனுப்பியிருக்கிறாள் என்று மரியாதை கொடுத்து உள்ளே வர அனுமதித்தேன். இனி நீ போகலாம். திரும்பவும் வரத் தேவையில்லை.” கோபமாய்ச் சொன்னார்.
“வர வேண்டியதில்லை என்று நீங்க சொன்னாலும் நான் இதை விடப் போவதில்லை. இந்த ரகளை இத்துடன் நின்று போய் விடும் என்று நினைக்காதீங்க. இது ஆரம்பம் மட்டும்தான்” என்று எழுந்து வந்துவிட்டாள் பாவனா.
சிதம்பர சுவாமி யோசனையில் ஆழ்ந்தார். தேர்தலுக்கு முன்னால் இந்த ரகளை கொஞ்சம் தலைவலிதான். ஆனால் இதற்கு எந்த சாட்சியமும் இல்லை. அந்தப் பெண் தானாகவே கெஸ்ட் ஹவுஸுக்கு வந்திருக்கிறாள். அவள் வந்ததற்கு சாட்சிகள் இல்லை. சாரங்கபாணியை, அவன் நபர்களை வாயைத் திறக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டால் போதும். அதற்கு மேல் யாரும் எதுவும் பண்ண முடியாது. அப்போழுதோ நடந்த கற்பழிப்பை இப்பொழுது நிரூபிப்பது கஷ்டம். முதலமைச்சராகப் போகும் தனக்கு மருமகளாய் ஆக வேண்டும் என்று திட்டம் போட்டு செய்த சதி இது என்று சொல்லி விடலாம்.
இந்த விதமாய் யோசித்து அவர் அதற்கு மேல் இந்த விஷயத்தைப் பற்றி கவலைப் படுவதை விட்டுவிட்டார்.
சாரங்கபாணியின் கும்பலில் பாஸ்கர் ராமமூர்த்தியும் இருக்கிறான் என்றும், அவனை எந்த இடத்தில் எப்படித் தட்டினால் விஷயம் வெளியே வரும் என்று அவனுடைய மாஜி மனைவியான பாவனாவுக்கு தெரிந்தாற்போல் வேறு யாருக்குமே தெரியாது என்ற விஷயம் சிதம்பர சுவாமிக்கு தெரிந்திருக்கவில்லை.
ஹரிணியைச் சம்மதிக்கச் செய்வதற்கு பாவனாவுக்கு இரண்டு நாட்கள் ஆயிற்று. அதற்காக எந்த விதமாகவும் வற்புறுத்தவும் இல்லை. “ஹரிணி! இப்போ உனக்கு இரண்டே வழிகள்தான் இருக்கு. நடந்ததை எல்லாம் மறந்துவிட்டு உங்க ஊருக்குப் போய் ஏதோ ஒரு வரனைப் பார்த்து பண்ணிக் கொள்வது. அல்லது உனக்கு அநியாயம் செய்தவர்களை ஒரு கை பார்த்து விடுவது. இரண்டில் ஏதோ ஒன்றை தீர்மானித்துக்கொள்.”
“அவர்களை ஒரு கை பார்த்துவிடணும்’ என்றாள் ஹரிணி.
“இன்னும் கொஞ்ச நேரம் எடுத்துக் கொண்டு யோசித்துப் பாரு. ஒரு முறை இந்த விஷயம் வெளிப்பட்டு விட்டது என்றால், காட்டுத் தீயாய் பரவி விடும். உன் முன்னாடி எல்லோரும் இரக்கம் காட்டினாலும், உனக்குப் பின்னால் காதைக் கடிப்பார்கள். நாலு பேர் சேர்ந்து கற்பழித்த போது நீ எந்த நிலைமையில் இருந்திருப்பாய் என்று கற்பனை செய்து பார்ப்பார்கள். இன்றைக்கு நீ எடுத்துக் கொள்ளும் முடிவை நினைத்து நாளைக்கு வருத்தப் படக் கூடாது.”
“படமாட்டேன்.” ஹரிணி பாவனாவைப் பார்த்து மெல்லச் சிரித்தாள். அவள் குரலில் உறுதி தெரிந்தது. “அன்றைக்கு டாக்டர்கள் என்னைக் காப்பாற்றி இருக்காவிட்டால், இதற்குள் மேல் உலகத்திற்குப் போயிருப்பேன். யோசித்துப் பார்க்காமல் நான் எடுத்துக்கொண்ட முடிவு அது. அந்த முடிவு அல்லாமல் வேறு எதுவாக இருந்தாலும் நன்றாகத்தான் இருக்கும். உயிரை மாய்த்துக் கொள்வதற்கு துணிந்து விட்ட நான் அதைக் காட்டிலும் பெரிதாய் இழப்பதற்கு வேறு என்ன இருக்கு? இதில் தோற்று போனாலும் பரவாயில்லை. முயற்சி செய்து பார்ப்போம்.”
பாவனா திருப்தியுடன் தலையை அசைத்தாள். அன்று மாலையில் அவள் பெண்கள் நலத்துறையின் டைரக்டரைச் சந்தித்தாள். பெண்கள் உரிமை பாதுகாப்பு சங்கத்திற்கும் அவள்தான் கௌரவ காரியதரிசி. அவள் பாவனாவைப் பார்த்ததுமே அடையாளம் கண்டுகொண்டாள். இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள்.
“நீ விஸ்வம் வாத்தியாரின் மகள்தானே?”
“ஆமாம் மேடம்.”
“வாத்தியார் சௌக்கியமா? என்ன இப்படி வந்திருக்கிறாய்?”
‘அப்பா நலம்தான். உங்களுக்கு சங்கரன் வாத்தியாரை தெரியும் இல்லையா?”
“தெரியும். என் மகளுக்குப் பத்து வருஷம் அவர்தான் அந்த ஊரில் வீணைக் கற்றுக் கொடுத்தார்.”
“அவருடைய மகள் ஹரிணி விஷயமாய் பேச வந்திருக்கிறேன்.”
“ஹரிணியை எனக்கு நன்றாகத் தெரியும். நல்ல பெண். ரொம்ப சாது. அவளுக்கு என்ன பிரச்சனை?”
“அவளை ஒருத்தன் ஏமாற்றிவிட்டான். கல்யாணம் பண்ணிக்கொள்ளச் சொல்லி கேட்கப் போனால் ஏளனம் செய்து அனுப்பி விட்டான். தான் அனுபவித்ததோடு அல்லாமல் நண்பர்களைக் கொண்டு கற்பழிக்கச் செய்துவிட்டான். அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்திருக்கிறாள்.”
“மை காட்! இவ்வளவு நடந்ததா? இதெல்லாம் அவள் அப்பாவுக்குத் தெரியுமா?”
‘தெரியாது. நான் அந்தப் பையனிடம் போய் கேட்டேன். ஹரிணி யார் என்றே தெரியாது என்று டபாய்த்தான். அவன் எழுதிய கடிதங்கள் இருக்கு. ஆனால் கையெழுத்தை நிரூபிக்க வேண்டும். அவன் தந்தை ரொம்ப செல்வாக்கு இருப்பவர். போலீசார் இந்த விஷயத்தில் எவ்வளவு தூரம் உதவி செய்வார்கள் என்று சொல்ல முடியாது. நான் அவன் தந்தையையும் சந்தித்தேன். திட்டி அனுப்பி விட்டார். உங்களால் அவன் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா?”
“இந்த விஷயத்தை அத்தனை சுலபமாய் விட்டு விடக்கூடாது. சொல்லு, யாரும்மா அந்தக் கயவன்?”
“உங்க தம்பி சாரங்கபாணியே தான்.”
******
அலுவலகத்தில் வேலை பண்ணிக்கொண்டிருந்த பாஸ்கர் ராமமூர்த்தி அன்று ரொம்ப உற்சாகத்துடன் இருந்தான். சாரங்கபாணி அவன் நண்பனாகி விட்டதை அறிந்து அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளச் சொல்லி ஓரிருவர் யோசனை வழங்கி இருந்தார்கள்.
“மாஜி முதலமைச்சரின் மகன் நண்பனாகி விட்ட பிறகு இன்னும் இந்த வேலை எதுக்கு? ஏதாவது ஏஜென்சியாவது, லைசென்சாவது கிடைக்கும்படி செய்துகொள்” என்றார்கள்.
ஒருநாள் துணிந்து சாரங்கபாணியிடம் அவன் கேட்டுவிட்டான். சாரங்கபாணி உல்லாசமாய் சிரித்துவிட்டு, ‘அதற்கென்ன வந்தது? அப்படியே செய்து விடலாம்” என்றான்.
ராமமூர்த்தியின் சந்தோஷத்திற்கு அதுதான் காரணம். அந்த சந்தோஷத்தில் அவன் வேலை செய்து கொண்டிருந்த போது, விசிட்டர்களின் அறையில் யாரோ வந்து காத்துக் கொண்டிருப்பதாய் ப்யூன் வந்து சொன்னான். ராமமூர்த்தி எழுந்து போனான். அங்கே ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்கார்ந்திருந்தார். பாஸ்கர் ராமமூர்த்தியின் இதயமே நழுவி விட்டாற்போல் இருந்தது. முகமெல்லாம் வியர்த்துக் கொட்டியது.
“நீங்கதானா ராமமூர்த்தி!” கேட்டார் அவர்.
தொண்டை உலர, வார்த்தைகள் வெளிவர முடியாமல் அவன் தலையை அசைத்தான்.
“இப்படியே கேண்டீன் வரைக்கும் போய்ப் பேசுவோமா?” கேட்டார் இன்ஸ்பெக்டர். கசாப்புக் கடைக்காரனைப் பின் தொடரும் ஆட்டைப் போல் அவரைப் பின் தொடர்ந்து போனான்.
கேண்டீனில் போய் உட்கார்ந்த பிறகு சொன்னார். “ஹரிணி என்ற பெண் உங்க எல்லோர் மீதும் புகார் கொடுத்திருக்கிறாள், கற்பழித்து விட்டதாக.”
ராமமூர்த்தி மேஜையின் விளிம்பை அழுத்தமாக பற்றிக் கொண்டான். அவன் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன.
“எனக்கு… எனக்கு ஒன்றும் தெரியாது” என்றான்.
“அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு போனது நீங்கதானே?”
ராமமூர்த்திக்கு நினைவு தப்பிவிடும் போல் இருந்தது. சாரங்கபாணி பக்கத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
”மிஸ்டர்! நீங்க பதில் சொல்லித்தான் ஆகணும்.”
“எனக்கு எதுவும் தெரியாது. ஹரிணி யாரு என்றுகூட எனக்குத் தெரியாது.”
“அவளுடைய ஹாஸ்டலுக்கு நீங்க போகவில்லையா?”
“ஹரிணி யார் என்றே எனக்குத் தெரியாது.”
‘என்னுடைய கேள்வி அது இல்லை.”
“எனக்கு எதுவும் தெரியாது.”
இன்ஸ்பெக்டர் அவனைக் கூர்ந்து பார்த்தார். மெல்ல அவரிடம் தீவிரம் மறைந்து முறுவல் இடம் பெற்றது.
“மிஸ்டர்! நீ ரொம்ப பயந்தாங்கொள்ளியாய் இருக்கிறாய். இப்படிப்பட்ட விஷயங்கள் உனக்கு புதிது என்று நினைக்கிறேன்.”
“எனக்கு எதுவும் தெரியாது.”
“எனக்கு எல்லாமே தெரியும். அந்தப் பெண் எல்லோருடைய பெயருடன் சேர்த்து அத்தனை விவரங்களையும் புகாரில் எழுதிக் கொடுத்திருக்கிறாள். எஞ்சிய இருவரும் பெரிய பெரிய பதவியில் இருப்பவர்கள். நீதான் அனாவசியமாய் இதில் சிக்கிக் கொண்டு விட்டாய்” என்று நிறுத்திவிட்டு, கொஞ்ச நேரம் கழித்து மெதுவாய்ச் சொன்னார். “ஒரு பத்தாயிரம் கொடு.”
ராமமூர்த்தி குழப்பத்துடன் நிமிர்ந்து பார்த்தான். இன்ஸ்பெக்டர் மெதுவாய் தலையை அசைத்தார். “ஆமாம். நான் ஒருத்தன்தான் உன்னை இந்தக் கேசிலிருந்து தப்பிக்க வைக்க முடியும். எப்பொழுதோ பத்து நாட்களுக்கு முன்னால் நடந்த கற்பழிப்பு இது. அந்தப் பெண் இப்போது ரிப்போர்ட் கொடுத்திருக்கிறாள். ஆனாலும் கேசு என்றால் கேசுதானே? மீதி எல்லோரும் தப்பித்துக் கொண்டு விடுவார்கள். அந்தப் பெண்ணுக்காக ஹாஸ்டலுக்குப் போனவன் நீதான். முதலில் உன்னை அரெஸ்ட் பண்ணனும். மீதியை கோர்ட் முடிவு செய்யும் என்று வைத்துக்கொள். ஒரு பெண்ணை ராத்திரி வேளையில் அழைத்துக் கொண்டு போனது தவறுதானே? லாயர், கோர்ட் என்று நிறைய செலவு ஆகும். இதெல்லாம் எதுக்கு? ஒரு பத்தாயிரம் கொடு. கேசு இல்லை என்று எழுதிக்கொண்டு பைலை முடித்து விடுகிறேன்” என்று இன்ஸ்பெக்டர் எழுந்து கொண்டார்.
“நாளைக்கு வருகிறேன். பணத்தை ரெடி பண்ணி வை. பை தி பை இந்த விஷயம் இரண்டாம் பேருக்குத் தெரிய வேண்டாம்.”
என்று சொல்லிவிட்டு அவர் போய்விட்டார். ராமமூர்த்தி அப்படியே சிலையாய் நின்று விட்டான். அதற்குப் பிறகு விடுவிடென்று போனை அணுகி சுமார் இரு மணிநேரம் சாரங்கபாணிக்காக முயற்சி பண்ணினான். தேர்தல் ரகளையில் அவன் கிடைக்கவில்லை. இனி லாபம் இல்லை என்று நேராகவே போனான். ஊரில் இல்லை என்றார்கள். நேரமாக ஆக பதற்றம் அதிகரித்தது.
இரவு எட்டு மணியாவதற்குள் நடைபிணமாகிவிட்டான். அந்த நிலையில் வீட்டை அடைந்தவன் உள்ளே நுழைந்ததுமே வசந்தியின் மடியில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழுது தீர்த்துவிட்டான். சுமார் அரை மணி நேரம் அழுத பிறகு விஷயத்தையெல்லாம் சொன்னான்.
“நீ தான் ஒண்ணும் பண்ணவில்லையே? இதில் உன் தவறு என்ன இருக்கு?” என்றாள்.
“எங்க பெரியப்பாவின் மகனுடைய ஷட்டகன் டூடவுன் போலீஸ் ஸ்டேஷனில் ஹெட்கானிஸ்டேபிள். அவனைச் சந்தித்தால் என்ன?” என்றான்.
“கோர்ட்டுக்குப் போனால் வேலையிலிருந்து சஸ்பென்ட் பண்ணி விடுவார்களோ என்னவோ?” என்றாள் வசந்தி.
“இல்லை. சமீபத்தில் எங்க ஆபீஸ் குமாஸ்தாவை நிலத் தகராறு விஷயத்தில் கோர்ட்டுக்குக் கூப்பிட்டார்கள். அப்போ சஸ்பென்ட் பண்ணவில்லை” என்றான் தன்னையே தான் தேற்றிக் கொள்வதுபோல்.
“போகட்டும். பத்து நாட்களுக்கு எங்கேயாவது போய்விட்டு வந்தால் கேசை தள்ளி விடுவார்கள் இல்லையா?” என்றாள் அவள்.
“போதுமே. அப்போ கேஸ் சி.பி. ஐ. க்குப் போய்விடும்” என்றான்.
மிகச் சாதாரணமாக நடக்கும் விஷயம் இது. ஆபத்து என்றால் என்னவென்றே தெரியாதவர்களுக்கு சிறிய தொல்லை வந்தாலும் வெலவெலத்துப் போய்விடுவார்கள். தூக்கு மேடை வரையிலும் அவர்களுடைய எண்ணங்கள் போய் விடும். பக்கத்தில் இருப்பவர்கள் தமக்குத் தெரிந்த எல்லையில் பால்கிவாலா, ஜெத்மலானி லெவலில் அறிவுரை வழங்கிக் கொண்டிருப்பார்கள்.
“ஒண்ணும் ஆகாது” என்று தமக்குத் தாமே தைரியம் சொல்லிக் கொள்வார்கள். அடுத்த நிமிடமே தளர்ந்து போய் விடுவார்கள்.
அன்று இரவு முழுவதும் வசந்தியும், ராமமூர்த்தியும் பேசிப் பேசி களைத்துப் போனார்கள்.
“சாரங்கபாணியைப் போய் சந்தித்துப் பார். அவன்தானே இத்தனையும் பண்ணியது”
“அவன் ஊரில் இல்லை.”
“வரும் வரையில் காத்திருக்கச் சொல்லு.”
“இன்ஸ்பெக்டர் பத்தாயிரம் கேட்கிறார். நாளைக்கு ஆபீசுக்கு வந்து அரெஸ்ட் பண்ணிவிட்டால்?” வசந்தி பதில் பேசவில்லை.
சின்ன சத்தம் கேட்டாலும் மிரண்டுப் போகத் தொடங்கினான் ராமமூர்த்தி. எட்டு மணியளவில் ஒரு முடிவுக்கு வந்தவனாய் எழுந்திருந்தான்.
“ஆபீசுக்கா? அங்கே போனால் இன்ஸ்பெக்டர் வருவாரோ என்னவோ?” என்றாள்
“வரணும் என்று நினைத்தால் நம் வீட்டு அட்ரெஸ் கூடத் தெரியும். இங்கே இருந்தால் கூட வந்து அரெஸ்ட் பண்ணுவேன் என்று சொன்னார் இச்ன்பெக்ட்ர். நான் நன்றாக யோசித்துப் பார்த்துவிட்டேன். இதையெல்லாம் அந்த ராட்சசி பாவனாதான் கூட இருந்து செய்ய வைத்திருக்கிறாள். அன்று இரவு ஹாஸ்டல் கேட் வாசலில் என்னை ஒரு மாதிரியாக பார்த்தாள். இன்ஸ்பெக்டர் நல்லவராக இருந்ததால் முன்னாடியே வந்து சொல்லிவிட்டார். பத்தாயிரம் கொடுத்து மீளுவதே நல்லது.”
“பத்தாயிரம் இப்போ எங்கே கிடைக்கும்?”
“லட்சாதிபதி ஆவதற்காக ஒரு ரகசியத்தை இவ்வளவு நாளாய் எனக்குள்ளேயே வைத்துக் கொண்டிருந்தேன். பத்தாயிரதிற்காக அதை இப்போது விற்கப் போகிறேன்.
(தொடரும்)

Series Navigationவேர் மறந்த தளிர்கள் – 2குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 8
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *