க.நா.சு.வின் ”அவரவர்பாடு” நாவல் வாசிப்பனுபவம்

This entry is part 6 of 29 in the series 28 ஏப்ரல் 2013

சிதம்பரத்தில் என் தகப்பனார் கண்முன் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து அதற்கு கண், காது, மூக்கு, கால், மனம், காலம் என்று எல்லாம் சேர்த்து “அவரவர் பாடு” என்கிற இந்நாவலை எழுதினேன். இன்னும் பல மர்ம நாவல்கள் எழுதிப் பார்க்க ஆசை உண்டு என்கிறார் க.நா.சு.

க.நா.சு. நூற்றாண்டு சிறப்பு வெளியீடாக நற்றிணை பதிப்பகம் மூலம் கொண்டுவரப்பட்டுள்ள நாவல் இது.

இன்னும் பல மர்ம நாவல்கள் எழுதிப் பார்க்க ஆசை என்று சொல்கிறார். எழுதிப் பார்க்கிறேன். அது நன்றாய் வருவதும், வராததும் சொல்வதற்கில்லை என்பதாயும், படிப்பதும், படிக்காததும் உங்கள் பாடு என்பதாயும் க.நா.சு. பாணியிலேயே இதைக் கொள்ளலாம்.

அவர் உயிரோடிருந்தால் நிச்சயம் இப்படித்தான் சொல்வார். ஏனென்றால் எழுதியது யார் என்று பார்க்காது, எழுத்து என்ன சொல்கிறது, அந்தப் படைப்பு நன்றாக வந்திருக்கிறதா, தரமானதா, இல்லையா என்று தாமரை இலைத் தண்ணீராய் விலகி நின்று, வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று விமர்சனம் செய்தவர் அவர்.

அம்மாதிரியான நிலைப்பாடே அவர்கள் மீது நாம் மதிப்புக் கொள்ளச் செய்யும் விஷயமாக இருக்கிறது. அந்த மதிப்பு மரியாதையின்பாற்பட்டே என்னதான், எப்படித்தான் எழுதியிருக்கிறார் பார்ப்போமே என்று வாங்கிப் படிக்கத் தோன்றுகிறது. அப்படி வாங்கி, ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டதுதான் இந்த ”அவரவர் பாடு”.

பின்னோக்கு (ஃப்ளாஷ் பேக்) உத்தியில் தீவிரமாக யோசித்து, வடிவமைத்து, முதலில் உதித்த மர்மம் விலகாதபடிக்கு, அடுத்தடுத்து தவிர்க்க இயலாமல் உருவாகும் மர்மங்கள் சேர்ந்து கொண்டே போவது போல் காட்சிகளை உருவாக்கி, பார்வையாளனை இருக்கையின் நுனியிலேயே வைத்திருப்பதுபோல் திரைக் கதையை அமைத்து, முழுத் திரைக்கதையும், அடுத்தடுத்த காட்சிகளும், வசனங்களும் மனதிற்குள்ளேயே மொத்தத் திரைப்படமாகப் பதிய வைத்துக் கொண்டு, படப்பிடிப்பு செய்தால், ஒரு சிறந்த மர்மக் கதையாக அந்த நாளில் வந்த ”அந்த நாள்” போல் ஒரு அழுத்தமான திரைப்படமாக உருவாகும் நல் வாய்ப்பு இந்நாவலுக்கு உண்டு.

ஒரு எழுத்தாளன் கதை கேட்பது போலவும், கதையின் எல்லா நிகழ்வுகளையும் அறிந்தவனும், அவற்றின் பலவற்றிற்கும் காரணமாக இருந்தவனும், மொத்தக் கதையையும் அவரிடம் மனமுவந்து சொல்பவனுமாகிய சம்பந்தம் என்கிற கதாபாத்திரம் வழியாக மொத்த நாவலையும் முன் வைக்கிறார் க.நா.சு.

அத்தனை நிகழ்வுகளையும் அடுத்தடுத்த காட்சிகளாய், படம் பிடித்ததுபோல் தெளிவாகச் சொல்லிச் செல்லும் சம்பந்தத்தின் கூடவே அந்த எழுத்தாளரோடு சேர்ந்து நாமும் பயணிக்கிறோம்.

மனிதனுடைய எல்லாத் தவறுகளுக்கும் ஆசைதான் பிரதானம். ஆசையின்பாற்பட்டு செய்யத் துணியும் முதல் தவறு, அடுத்தடுத்த தவறுகளுக்கு வழி வகுக்கிறது. ஒன்றை மறைக்க ஒன்று, அந்த இன்னொன்றை மறைக்க வேறொன்று என்று ஆசை துன்பமாய் உருவெடுத்து ஆடுவதைக் கண்டு வெதும்பி, இந்தத் துன்பங்களிலிருந்து எப்படியாவது விடுபட்டே ஆக வேண்டும் என்கிற முடிவிலோ, இதுதான் கடைசி, இதற்குப்பின் எல்லாக் கஷ்டங்களும் விலகி விடும் என்கிற நம்பிக்கையிலோ அடுத்துச் செய்யும் காரியங்களைத் தவறாகவே செய்து கொண்டு போவதால் ஏற்படும் பின் விளைவுகள், ஒருவன் வாழ்க்கையை ரகசியமான குகைக்குள்ளேயே நகர்த்திக் கொண்டு போகின்றன.

கதை மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கும்போது நமக்கு ஏற்படும் சந்தேகங்கள் எல்லாவற்றையும் அந்த எழுத்தாளன் வழி விடுவித்துக் கொள்ள நாம் முயல்கின்றோம். இது இப்படித்தானே இருக்க வேண்டும், இருக்க முடியும் என்றும், அவர் இவர்தான் என்றும் நாம் ஊகிக்க முயலும் நேரங்களில் அது அந்த எழுத்தாளர் வழி நமக்குப் புலப்படுகிறது.. தெளிவான கதை சொல்லல். வார்த்தை ஜாலங்கள் இல்லாத யதார்த்தமான நடை. செய்திருக்கும் முயற்சியில் கடைசி வரையிலுமான ஆழ்ந்த ஈடுபாடு இதுவே இந்த நாவல். படைப்பாளிகள் கற்றுக் கொள்ள வேண்டிய அம்சம் இவைகள்.

தமிழ் இலக்கியம் உலக இலக்கியத்துக்கு நிகராக நிற்க வேண்டும் என்று கவலைப்பட்டு பல உலக இலக்கியங்களைத் தமிழுக்கு மொழியாக்கம் செய்து தந்த பெருமகனார் திரு க.நா.சு. அவர்கள்.

சொல்ல ஆசைப்பட்டதைச் சொல்லியாயிற்று. படிப்பதும் படிக்காததும் அவரவர் பாடு. அவரின் விமர்சனப் போக்கிலேயே இப்படித்தான் சொல்லியாக வேண்டியிருக்கிறது.

Series Navigationஎட்டுத்தொகை : வடிவம் குறித்த உரையாடல்சுஜாதாவின் கடவுள் வந்திருந்தார் நாடகம் – விமர்சனம்
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

4 Comments

 1. Avatar
  Dr.G.Johnson says:

  க.நா.சு. வின் ” அவரவர்பாடு ” நாவலுக்கு அருமையான முன்னுரை தந்துள்ள உஷாதீபன் அவர்களுக்கு நன்றி. என் சொந்த ஊர் சிதம்பரம் என்பதால் அங்கு நடந்த இக் கதையைப் படிக்க அதிக ஆவல். ஆனால் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு இந்த நாவல் எங்கு எப்படி கிடைக்கும் என்ற குறையும் உள்ளது. நாவல் கிடைக்கும் முகவரி தந்தால் தபால் மூலமாவது பெற்று படிக்க அதிக ஆவல்..டாக்டர் ஜி.ஜான்சன்.

  1. Avatar
   உஷாதீபன் says:

   Dear Sir, வணக்கம். அவரவர் பாடு நாவலை வெளியிட்டுள்ள நற்றிணைப் பதிப்பகம் முகவரி வருமாறு. நற்றிணை பதிப்பகம், ப.எண்.123ஏ, புதிய எண்.243ஏ, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை-600 005. தொலைபேசி எண். 044-43587070 மொபைல்-9486177208, 9442956725. E.Mail.natrinaipathippagam@gmail.com நன்றி. உஷாதீபன்

 2. Avatar
  உஷாதீபன் says:

  சென்னை டிஸ்கவரி புக் பேலஸ் – புத்தகக் கடையிலும் கிடைக்கிறது.-

 3. Avatar
  கவிஞர் இராய. செல்லப்பா says:

  க.நா.சு அவர்கள் இன்னும் நன்கு புரிந்துகொள்ளப்பட்டிருக்கலாம், அவரது வாழ்நாளில். அவரை இலக்கிய விமர்சகர் என்ற கூண்டுக்குள் தள்ளிவிட்டு அவரது படைப்பாற்றலைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது ஒரு வலுவான கூட்டம் என்று தில்லி தமிழ்ச் சங்கத்தில் இருந்தபோது கேள்விப்பட்டிருக்கிறேன். -நியுஜெர்சியிலிருந்து கவிஞர் இராய. செல்லப்பா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *