அக்னிப்பிரவேசம்-33

This entry is part 29 of 29 in the series 12 மே 2013

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

yandamoori@hotmail.com

தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com

லேட் சந்திரனின் வீட்டிற்கு பாஸ்கர் ராமமூர்த்தி போய்ச் சேர்ந்த போது மணி எட்டு அடிக்கவிருந்தது. கூர்க்கா கேட்டிற்கு அருகில் தடுத்து நிறுத்தினான்.

“ரொம்ப முக்கியமான விஷயம் என்று நிர்மலா அம்மாவிட்டம் போய்ச் சொல்லு” என்றான். கூர்க்கா போய்விட்டுத் திரும்பி வந்து “வரச் சொன்னாங்க” என்றான்.

ராமமூர்த்தி உள்ளே போனபோது நிர்மலா உட்கார்ந்திருந்தாள்.

“யார் நீங்க? என்ன வேண்டும்?” என்று கேட்டாள்.

“நான் ஆதிலக்ஷ்மியின் மகன். ஆதிலட்சுமி என்றால் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் உங்களுக்கு பிரசவம் பார்த்த நர்ஸ். என் தாய் சாகும் தருவாயில் என்னிடம் ஒரு ரகசியத்தைச் சொன்னாள். அதை உங்களிடம் சொல்லணும் என்றுதான் வந்திருக்கிறேன்” என்று பொருள் போதிய பாதியிலேயே நிறுத்திக் கொண்டான்.

‘சொல்லுங்கள்” என்றாள் நிர்மலா.

நள்ளிரவில் ஒரே சமயத்தில் இரு குழந்தைகள்  பிறந்ததையும், பதிமூன்றாம் தேதி, வெள்ளிக்கிழமை தன் தாய் குழந்தைகளை மாற்றியதையும் விவரமாய்ச் சொன்னான். “அந்த விதமாய் உங்கள் உண்மையான மகள் விஸ்வம் என்பவரின் வீட்டில் வளர்ந்தாள். சாஹிதி உங்களுடைய மகள் இல்லை” என்று முடித்தான்.

நிர்மலாவுக்கு இதையெல்லாம் நம்புவதா வேண்டாமா என்று தெரியவில்லை. குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள். “அந்தப் பெண் இப்போது எங்கே இருக்கிறாள்?” என்று கேட்டாள்.

“நான் தற்சமயம் ரொம்ப சிக்கலில் இருக்கிறேன். பத்தாயிரம் கொடுத்தால் உங்க மகள் எங்கே இருக்கிறாள் என்று சொல்லுவேன்” என்றான்.

பத்தாயிரம் என்றதும் நிர்மலாவின் புருவம் உயர்ந்தது. “நீ உண்மையைச் சொல்கிறாயா, போய் சொல்கிறாயா என்று எப்படித் தெரியும்? இரு, இப்போதே போன் பண்ணி வரச் சொல்கிறேன்.”

“யாரை?”

“பரமஹம்சாவை.”

பரமஹம்சாவின் பெயரைக் கேட்டதுமே ராமமூர்த்தி நடுங்கிவிட்டான். துணிச்சலை வரவழைத்துக் கொண்டு எழுந்து நின்றவன் “எனக்கு நேரம் இல்லை. நீங்க உடனே பணம் தந்தால் சொல்கிறேன். ஒரு தடவை போய்விட்டேன் என்றாள் திரும்பி வரமாட்டேன்.” மிரட்டினான்.

“பரமஹம்சா அவதார புருஷர். அவருக்குத் தெரியாதது எதுவுமே இல்லை. நாங்கள் அவரிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்கிறோம்” என்றாள் நிர்மலா.

”உங்கள் மகள் யாரென்று அவருக்குத் தெரியாது.” டபாயித்தான்.

“அவருக்குத் தெரியாமல் நான் எந்தக் காரியத்தையும் செய்ய மாட்டேன்.”

“எத்தனை மோசமானவர்கள் நீங்கள்? உங்க ரத்தத்தைப் பகிர்ந்து கொண்டு பிறந்த குழந்தை எங்கேயோ அநாதையாய் இருக்கிறாள் என்று சொல்லியும் எப்படிச் சாதாரணமாய் இருக்க முடிகிறது உங்களால்?”

நிர்மலா எழுந்து கொண்டாள். அவள் மனம் முழுவம் ஏதோ போல் சூனியமாக இருந்தது. அது வருத்தமா, அதிர்ச்சியா, வேதனையா என்று தெரியாத நிலை.

“அவர் ஒரு வாரம் கழித்து வருவார். அப்போ வந்து பார்” என்று உள்ளே போகத் திரும்பியவள் “யாரோ வந்து ஏதோ சொன்னால், பத்தாயிரத்தைத் தூக்கிக் கொடுத்து விட்டாயா என்று கோபித்துக் கொள்வார்” என்றாள்.

நிர்மலாவின் ஆதாரப்படும் குணத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. அவ்வளவு பயங்கரமான விஷயம் தெரிந்த போதுகூட (அது உண்மையாக இருக்கட்டும், இல்லாமலும் போகட்டும்) அவள் பரமஹம்சாவையே நம்பினாள். அவ்வளவு தூரம் அவன் அவளை ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தான்.

பாஸ்கர் ராமமூர்த்தி அப்படியே நின்றுவிட்டான். மிகச் சுலபமாய் நடந்து முடிந்து விடும் என்று எண்ணியிருந்தது இவ்வாறு திசைத் திரும்பி விட்டது. அவனை குழப்பத்தில் ஆழ்த்தி விட்டது.

“நீங்கள் ஏதாவது மனம் மாறி விஷயத்தைத் தெரிந்து கொள்ளநணும் என்று நினைத்தால் இதோ என் முகவரி. பத்தாயிரத்தைக் கொண்டு வாங்க. ஒரு மணி நேரம்தான் அவகாசம். ஒரு மணி நேரம் கழித்து நான் கிடைக்க மாட்டேன்’ என்று முகவரி இருந்த சீட்டை அவ்விடத்தில் வைத்துவிட்டு வெளியேறினான்.

*****

இரு கட்சிகளும் தங்களுடைய கட்சி சார்பில் வேட்பாளரைத் தேர்தெடுக்கும் பணியில் மும்முரமாக இருந்தன. ஆளும் கட்சியில் இருந்தவர்களுக்கு பிற்படுத்த வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும், பெண்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய கட்டாயம். எதிர்க்கட்சியில் இருந்த சிதம்பரசுவாமி பெரும் அளவில் பணத்தைச் செலவழித்துக் கொண்டிருந்தார். போர்கால நடவடிக்கையைப் போல் தேர்தலுக்கு ஏற்பாடுகள் பண்ணிக் கொண்டிருந்தார். வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கு இன்னும் மூன்று நாட்களே இருந்தன.

சிதம்பரசுவாமியின் வீடு சந்தடியாய் இருந்தது. தேர்தலில் அந்தக் கட்சியின் சார்பில் நிற்க விரும்பியவர்கள் அதிகாலையில் ஐந்து மணிக்கே சிதம்பர சுவாமியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். சாரங்கபாணியும் தந்தைக்கு உதவி செய்யும் பணியில் மும்முரமாய் ஈடுப்பட்டிருந்தான். ஹரிணியின் விஷயத்தை அவன் பெரும்பாலும் மறந்து போய் விட்டிருந்தான்.

நேரம் ஆறுமணி ஆயிற்று. சூரியன் நன்றாக மேலே வந்துவிட்டான். பேப்பர்களைப் புரட்டியபடி எதற்காகவோ வெளியே பார்வையிட்ட சிதம்பரசுவாமி ஜன்னலுக்கு அப்பால் தென்பட்ட காட்சியைப் பார்த்துவிட்டு புருவத்தைச் சுளித்தார். “என்னடா? வெளியே என்ன நடந்து கொண்டு இருக்கிறது?” என்று கேட்டார். சாரங்கபாணியும் வெளியே பார்த்துவிட்டு சிலையாகி விட்டான்.

வீட்டிற்கு முன்னால் எதிர்ப்பு தெரிவிப்பதற்காக கூடாரங்களை நட்டுக் கொண்டிருந்தார்கள்.

“அநியாயம் பண்ணியவர்களை அரெஸ்ட் செய்ய வேண்டும்.”

“ஹரிணிக்கு நிகழ்ந்த அநியாயம் பெண் இனத்திற்கே அவமானம்” போன்ற பெனர்களைக் கட்டிக் கொண்டிருந்தார்கள்.

தந்தையும் மகனும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டார்கள். சாரங்கபாணியின் முகம் கோபத்தால் சிவந்தது. அந்த சமயத்தில் நாளேடு வந்தது. முதல் பக்கத்திலேயே ஹரிணியின் போட்டோ இருந்தது. தான் கற்பழிக்கப் பட்டிருப்பதாய் ஹரிணி வெளிப்படையாய் ஸ்டேட்மென்ட் கொடுத்தத்தில் சலசலப்பு ஏற்பட்டு விட்டது.

ஹரிணியின் சார்பில் தான் போய் கேட்டதற்கு சிதம்பரசுவாமி சொன்ன பதிலும், சாரங்கபாணியின் நண்பர்களைப் பற்றிய விவரங்களையும் பாவனா கட்டுரை வடிவத்தில் எழுதி இருந்தாள்.

“அறிமுகம் ஏற்படுத்திக் கொண்டு, காதலிப்பது போல் நடித்து, தந்தையிடம் சிபாரிசு பெற்று வேலை வாங்கிக் கொடுத்து, அனுபவித்த வரையிலும் அனுபவித்துவிட்டு, கெஸ்ட் ஹவுசில் நண்பர்களுக்கு விருந்தாய் பகிர்ந்தளித்த மாஜி முதலமைச்சர் மகனின் லீலைகள்” என்று விவரமாய் எழுதி இருந்தார்கள்.

‘அதிகாரத்தில் இருக்கும் தலைவர்களின் அநியாயச் செயல்களை வெளிப்படையாய் விமரிசிக்கும் எதிர்க்கட்சித் தலைவர், தன் வீட்டில் நடந்த அநியாயம் தெரிந்திருந்தும், துணை போனது கண்டிக்கத் தக்கது’ என்று காரசாரமாக விமரிசித்து இருந்தார்கள்.

“பத்து லட்சதிற்குக் குறையாமல் மானநஷ்ட வழக்குப் போடுகிறேன்” ஆவேசத்தோடு கத்தினார் சிதம்பரசுவாமி. “தேர்தலுக்கு முன்னால் முகத்தில் சேற்றைப் பூசும் முயற்சி இது. அந்த ஆளும் கட்சிக்காரர்களை நடுத்தெருவுக்குக் கொண்டு வருகிறேன். இந்த குற்றச்சாட்டை எப்படி நிரூபிக்கப் போகிறார்கள் என்பதையும் பார்த்து விடுகிறேன்.”

காலையில் ஏழு மணிக்கு… அதாவது இங்கே இவ்வாறு உரையால்கள் நடந்து கொண்டிருக்கும் சமயத்திற்கு அங்கே முதலமைச்சரும் நாளேட்டை பார்த்துவிட்டார். அதற்குள்ளாகவே அவருக்கு எதிர்ப்பு சிபிரத்தைதைப் பற்றிய செய்தி எட்டியிருந்தது. பாரதிதேவிக்குப் போன் செய்தார். இதற்குப் பின்னால் இருந்தது பாவனா என்று தெரியவந்தது.

“யார் இந்த பாவனா? நீங்க அன்றைக்குச் சொன்னது அவளைப் பற்றிதானே?”

“ஆமாம். அந்தப் பெண்ணேதான். நீங்க அவளுக்கு தகுதிகள் போறாது என்று சொன்னீங்க. அவள் யூனிவர்சிடியிலேயே முதலாவதாய் வந்திருக்கிறாள்.”

“எந்த தைரியத்தில் எழுதியிருக்கிறாள் இதையெல்லாம்? எந்த சாட்சியும் இல்லாமல் போனால் நாளைக்குப் பெரிய ரகளை ஆகிவிடும்.”

“அவளுடைய மாஜி கணவனே பெரிய சாட்சி. ஹரிணியை இங்கே இருந்து அன்றைக்கு அழைத்துக் கொண்டு போனவனே அவன்தான்” என்றாள் அவள்.

காலையில் ஒன்பது மணிக்கு… அதாவது இந்த இந்த உரையாடல் நடந்த இரண்டு மணி நேரம் கழித்து, நிர்மலாவின் வீட்டிலிருந்து பாஸ்கர் ராமமூர்த்தி வீட்டிற்குத் திரும்பி வந்த போது அங்கே இன்ஸ்பெக்டர் காத்துக் கொண்டிருந்தார்.

ராமமூர்த்தி அவரைப் பார்த்து “இன்னும் அரைமணி நேரம் பொறுத்திருங்கள். பத்தாயிரம் கைக்கு வந்து சேரும்” என்றான் வேதனை கலந்த முறுவலுடன்.

”இதேதோ சின்ன கேசு என்று நினைத்தேன். எங்க எஸ்.பி. உடனே உன்னை அரெஸ்ட் பண்ணி அழைத்து வரச் சொன்னார்” என்றார் இன்ஸ்பெக்டர், அதே வேதனை நிரம்பிய முறுவலுடன். பத்தாயிரம் கை நழுவிப் போய் விட்ட வருத்தம் அவருக்கு.

காலை பதினொரு மணிக்கு… அதாவது மேற்கண்ட உரையாடல் நடந்த இரண்டு மணிநேரத்தில் இந்தக் கேசு சி.பி.சி.ஐ.டி. இடம் ஒப்படைக்கப்பட்டது. அதற்குப் பிறகு விஷயங்கள் வேகமாய் நடந்தேறின. பத்திரிக்கை நிருபர்கள் சாரங்கபாணியைச் சந்தித்தப் பொழுது இந்த விஷயயம் தனக்கு எதுவுமே தெரியாது என்றும், அரசியல் எதிரிகள் தன் தந்தையை வீழுத்துவதற்கு செய்த சதி திட்டம்தான் இது என்றும் சொன்னான். ஆனால் இந்த இன்டர்வ்யூ நடந்த ஒரு மணி நேரத்தில், பாஸ்கர் ராமமூர்த்தியை அரெஸ்ட் பண்ணிய விஷயம் தெரிந்தது. தந்தையும், மகனும் கலவரமடைந்தார்கள்.

அன்று மாலை ஆறரை மணிக்கு பாஸ்கர் ராமமூர்த்தி போலீசாரிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டான். அதுவரை எப்படியோ வீம்புடன் இருந்து வந்த அவன், மன உளைச்சலை தாங்க முடியாமல் நடந்த விஷயத்தை எல்லாம் சொல்லிவிட்டு, ஹரிணியைத் தான்தான் அழைத்துச் சென்றதாய் ஒப்புக்கொண்டுவிட்டான்.

மறுநாள் பேப்பரில் முதல் பக்கத்தில் வலது கோடியில் “எனக்கு ஒன்றும் தெரியாது” என்ற சாரங்கபாணியின் வாக்மூலமும், இடது பக்க கோடியில் “ஹரிணியை நான்தான் அழைத்துச் சென்றேன்” என்று பாஸ்கர் ராமமூர்த்தி போலீசாரிடம் ஒப்புக்கொண்ட விதமும் பிரசுரிக்கப்பட்டடிருந்தன. நாமினேஷன் போடுவதற்குச் சரியாக இரண்டே நாட்கள் கெடு இருந்தது.

*******

தொடர்ந்து எல்லா விஷயங்களும் வரிசையாய் நடந்தேறின. “நடந்தது என்னவோ நடந்துவிட்டது. ஹரிணியைத் தன் மருமகளாக ஏற்றுக்கொள்கிறேன்” என்று சிதம்பரசுவாமி செய்தியை அனுப்பினார். தேர்தல் வரப் போகும் சமயத்தில் இவ்வளவு ரகளை நிகழ்ந்தது அவருக்குப் பெரிய தலைவலியாய் இருந்தது. கற்பழிக்கப்பட்ட ஒரு பெண்ணை மகனுக்கு பண்ணிக்கொண்டால் அதன் மூலம் நல்ல பெயர் கிடைக்கும் என்றும், செய்த தவறு மூடி மறைக்கப்பட்டு விடும் என்பதும் அவருடைய உத்தேசம். ஆனால் ஹரிணி சம்மதிக்கவில்லை. பாவனாவும் ஒப்புக்கொள்ளவில்லை. “இதொன்றும் சினிமா இல்லை. இறுதி காட்சியில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதுமே ‘நான் உங்கள் காலடியில் விழுந்து கிடக்கும் அடிமை’ என்று பெண்ணானவள் கண்ணீர் மல்க வேண்டிக்கொள்வதற்கு” என்று சொல்லிவிட்டாள்.

சம்பந்தப்பட்ட இளைஞர்களை போலீசார் அரெஸ்ட் செய்தார்கள். அதற்கு மறுநாள் ஹரிணியின் தந்தை வந்து அவளை அழைத்துகொண்டு போய்விட்டார்.

“தவறு செய்தது என் மகள் இல்லை. அவளை நான் தண்டிக்க மாட்டேன்” என்றார் அவர். அப்பொழுதே ஒரு சீர் திருத்தவாதி ஹரிணியை மணந்து கொள்வதற்கு முன் வந்தான்.

ஹரிணிக்கு ஜீவனி காரியாலயத்தில் எல்லோரும் விடை கொடுத்து அனுப்பினார்கள். நியாயத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி அது. இதில் ஹரிணிக்கு தனிப்பட்ட முறையில் எந்த லாபமும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு அநியாயத்தை எதிர்த்து நின்றோம் என்ற திருப்தி அவள் கண்களில் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

ஹரிணி கிளம்பிப் போன கொஞ்ச நேரத்தில் போன் மணி அடித்தது. பாரதிதேவி எடுத்துப் பேசினாள். அவள் முகத்தில் வியப்பு கலந்த திகைப்பு!

“யாரு மேடம்?” கேட்டாள் பாவனா.

“முதலமைச்சரின் அலுவலகத்திலிருந்து. உன்னை நாளைக்கு ஒரு முறை வரச் சொன்னார்கள்.”

“என்னையா? எதிர்கட்சித் தலைவரை அடக்கியதற்கு இவர்களுடைய பாராட்டுகளும், பரிசுகளும் எனக்கு வேண்டாம். அரசியலை இதில் கலக்க வேண்டாம்.”

“அது இல்லை பாவனா. அரசியலை கலக்கணும் என்று நினைத்தால் பேப்பரில் வந்த போதே முதலமைச்சர் உன்னைச் சந்தித்து இருப்பார். அப்போ கூட எந்த அறிக்கையும் தரவில்லை. அந்த அவகாசத்தை விட்டுவிட்டு, இப்பொழுது வரச் சொல்லி இருக்கிறார் என்றால், வேறு காரணம் ஏதாவது இருக்கணும். போய்ச் சந்தித்துவிட்டு வா” என்றாள் பாரதிதேவி.

பாவனா சரியென்று தலையை அசைத்தாள்.

அவளுக்கும் முதலமைச்சருக்கும் இடையே உரையாடல் பத்து நிமிடங்கள்தான் நிகழ்ந்திருக்கும்.

“அடுத்த மாதத்தில் தேர்தல் வருகிறது. எங்கள் கட்சியின் சார்பில் தேர்தலில் நிற்கணும்” என்றார் முதலமைச்சர். பாவனா சிலையாய் நின்றுவிட்டாள். தான் கேட்டுக் கொண்டிருந்தது கனவா நினைவா என்று புரியவில்லை. தானாவது தேர்தலில் நிற்பதாவது? ஆளும்கட்சி கூப்பிட்டு சீட் தருவது சாதாரண சமாச்சாரம் இல்லை. அது வேறு விஷயம்.

“நானா? எனக்கு அரசியலைப் பற்றி எதுவுமே தெரியாது. ஆர்வம் கூட இல்லை” என்றாள் குழப்பத்துடன்.

“அந்தத் தலைவரை தோற்கடித்து பாடம் கற்பித்ததற்காக இல்லை நான் இவ்வாறு கேட்பது. உன் கட்டுரைகளைப் படித்தேன். அநியாயத்திற்கு இலக்கான பெண்களுக்கு நீ செய்யும் உதவிகளைப் பற்றி கேள்விப்பட்டேன். உன்னைப் போன்ற படித்த பெண்கள்தான் நாட்டுக்குத் தேவை. அநியாயத்தைக் கண்டித்து எதிர்த்து நில். அதிகாரம் உன் கையில் இருந்தால் அதை இன்னும் சிறப்பாக செய்ய முடியும். சாரங்கபாணி அத்தனை அக்கிரமம் ஏன் செய்தான்? தந்தையின் கையில் அதிகாரம் இருந்ததால். அப்படிப்பட்ட அதிகாரம் உன் கையில் இருந்தால் நீ எவ்வளவு நல்ல வழியில் அதை பயன்படுத்தி இருப்பாய்? யோசித்துப் பார்.”

பாவனா கொஞ்ச நேரம் யோசித்தாள். சமயம் அதிகம் இல்லை. எங்கே தொடங்கிய வாழ்க்கை எங்கே போய் முடிகிறது?

இன்னொரு திருப்பம் .. திரும்பட்டுமே.

அவள் சம்மதிப்பது போல் தலைய அசைத்தாள். ஆளும் கட்சியின் சார்பில் சிதம்பரசுவாமிக்குப் போட்டியாய் பாவனாவை அதே தொகுதியில் நிற்க வைத்தார்கள்.

அரசியல் சதுரங்கத்தில் மிகப் பெரிய திருப்பம் அது. யாராலும் வீழ்த்த முடியாதது.

************

“மேடம்! நீங்க ஊக்கம் தந்தீங்க. உற்சாகத்துடன் ஒப்புக் கொண்டுவிட்டேன். ஆனால் இப்போது நினைத்துப் பார்த்தால், ரொம்பவும் பயமாக இருக்கிறது. நானாவது? தேர்தலில் நிற்பதாவது? எனக்கு அந்த சாமர்த்தியம் இருக்கா என்று சந்தேகமாய் இருக்கு.”

“இவ்வளவு சின்ன வயதில் இப்படிப்பட்ட வாய்ப்பு கிடைப்பது அதிர்ஷ்டம்தான்.!”

“இரண்டு லட்சம் பேரை சம்மதிக்க வைக்கணும். பல ஆயிரக்கணக்கான பேருக்கு முன்னால் நின்று சொற்பொழிவு ஆற்றணும். இதெல்லாம் என்னால் முடியும் என்று நினைக்கிறீங்களா?”

“ஒருகாலத்தில் இந்தப் படிப்பும், வேலையும் உன்னால் முடியும் என்று நினைத்தாயா? உழைப்பால் முடியாதது எதுவுமே இல்லை என்று நீயே நிரூபித்துக் காட்டிவிட்டாய். இந்த வாய்ப்பு உனக்கு வந்தது உன்னுடைய உழைப்பின் பலன்தானே தவிர, வேறு இல்லை. இனிமேல் நீ கொஞ்சம் கூட நேரத்தை வீணாக்காதே. தினமும் எல்லா நாளேடுகளையும் படி. நாட்டின் அரசியல் நிலவரத்தை நன்றாகத் தெரிந்து வைத்துக்கொள். இந்த விஷயத்தில் நீ எவ்வளவு அறிவை வளர்த்துக் கொள்கிறாயோ அவ்வளவு நல்லது.”.

அன்றைய தினத்திலிருந்து பாவனா படிக்கத் தொடங்கினாள். உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் விவகாரங்கள், வெளிநாட்டு உறவுகள் முறைகள்.. இவற்றைப் பற்றிப் படிக்கப் படிக்க ஆர்வம ஏற்படத் தொடங்கியது.

*******

“நீங்க பண்ணுவது எதுவுமே நன்றாக இல்லை” என்றாள் பாவனா. அவள் முகம் சிவந்து விட்டிருந்தது. கோபத்தால் மூக்கின் நுனி அதிர்ந்து கொண்டிருந்தது.

“இதில் நன்றாக இல்லை என்று எதைக் குறுப்பிடுகிறீங்க?” கேட்டார் கட்சித் தலைவர்.

“நீங்க என்னைப் பற்றிக் கொடுத்து வரும் விளம்பரம். நான் வாழ்க்கையில் ரொம்ப கஷ்டத்தை அனுபவித்தவள், உண்மைதான். ஆனால் நான் ஏதாவது சாதித்து இருந்தால் அதை பெரிது பண்ணி டமாரம் அடித்துக் கொள்வதற்காக மட்டும் இல்லை.”

கட்சித் தலைவருக்கு அறுபத்தைந்து வயது இருக்கும். அரசியலில் நாற்பது ஆண்டுகள் அனுபவம் இருப்பவர்.

“அப்படி உட்காரும்மா.” அமைதியாய் சொன்னார் அவர்.

பாவனா உட்கார்ந்தாள்.

பிரபல பத்திரிக்கை ஒன்றில் பாவனாவின் போட்டோவைப் போட்டு, அவளே சுயமாய் எழுதியது போல் அவள் வாழ்க்கைக் கதையைப் போட்டிருந்தார்கள். சில இடங்களில் மிகைப்படுத்தியும் இருந்தார்கள். இன்னும் சில பத்திரிகைகளில் அவள் எழுதிய கட்டுரைகள் திரும்பவும் இடம் பெற்றிருந்தன. அவற்றைப் பற்றி பிரமுகர்களின் கருத்துகளை சேகரித்துப் போட்டார்கள். இந்த விளம்பரம் எல்லாம் எதுக்கு என்பதுதான் பாவனாவின் கோபம்.

‘பாரும்மா, நீ எப்போதாவது சதுரங்கம் ஆடியிருக்கிறாயா?” கேட்டார் அவர்.

“ஏன்? அதையும் ஒரு போட்டோ எடுத்து நேஷனல் சாம்பியன் ஆக வேண்டிய பெண். ஆனால் அவளுடைய தந்தை ஆடுவதற்கு அனுமதிக்கவில்லை என்று பேப்பரில் போடப் போறீங்களா?” கோபமாய்க் கேட்டாள்.

அவர் சிரித்தார். “அப்படிப் போடணும் என்றால் உனக்கு அந்த ஆட்டம் தெரிந்திருக்க வேண்டிய தேவை கூட இல்லை. அது போகட்டும். உனக்கு அந்த மாதிரி ஆட்டமாவது அல்லது வேறு ஏதாவது ஆட்டமாவது நன்றாகத் தெரியுமா?

“கேரம்ஸ் ஒன்றுதான் எனக்குத் தெரிந்த ஆட்டம்” என்றாள் பாவனா கூச்சத்தோடு.

“அப்போ ஒரு கேள்விக்கு நேர்மையாக பதில் சொல்லு. போர்ட்டில் உன் எதிரியின் ஒரே ஒரு காயின் இருக்கு. அதைப் போட்டுவிட்டால் அவனுடைய ஆட்டம் முடிவடைந்து விடும் உன்னுடையது இரண்டோ மூன்றோ காயின்கள் இருக்கின்றன. அப்போ என்ன செய்வாய்?”

“ரூலை மீறாத வரையில் என்னுடைய காயினைக் கொண்டு தடுக்க முயற்சி செய்வேன்” என்றாள் தயங்கிக்கொண்டே.

“கேரம்ஸ் போன்ற ஆட்டத்திலேயே கடைசி வரையில் ஜெயிப்பதற்கு நீ முயற்சி செய்வாய். அரசியல் ரொம்ப பெரிய விளையாட்டு பாவானா! வெற்றி தோல்வி எல்லாம் அப்புறம். கடைசி வரையிலும் ஜெயிக்கணும் என்கிற உறுதியோடு விளையாடி தீரனும்.”

“அவ்வளவுதான் என்று சொல்றீங்களா?” பாவானா அமைதியடைந்தாள்.

“அவ்வளவுதான். ஆனாலும் உன்னைப் பற்றி இவ்வளவு விளம்பரம் எதுக்கு பண்ணுகிறோம் என்று கொஞ்சமாவது யோசித்துப் பார்த்தாயா? நீ கணவனை விட்டுவிட்டு வந்து விட்டாய் என்று நாலு பேருக்குத் தெரியும். நாளைக்கு உன் பெயரை நாமிநேஷனுக்கு அறிவிததுமே உன் எதிரி பண்ணப் போகும் முதல் காரியம் என்ன தெரியுமா? உன்னைப் பற்றி இல்லாதது போல்லாததைக் கற்பித்து வெளியிடுவது. அந்த விதமாய் மக்கள் பார்வையில் உன்னை குற்றவாளியாய் சித்தரிப்பார்கள். அவர்களுக்கு அந்த வாய்ப்பை நாம் தரக்கூடாது. உன் கதை இப்பொழுது மக்கள் மனதில் நன்றாகப் பதிந்து போய் விட்டது. அந்த விதமாய் நீ அவர்களுக்கு நெருக்கமாகிவிட்டாய். நாளைக்கு நீயே அவங்க தொகுதியில் நிற்கப் போகிறாய் என்று கேள்விப் பட்டதுமே ஒரு சிநேகிதியாய் நினைத்து ஓட்டுப போடுவார்கள். இப்போ நாம் எழுதியதில் பொய் எதுவும் இல்லை. அதானால் யாருமே விமரிசிக்க மாட்டார்கள். அப்படியே விமரிசித்தாலும் யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். அதுதான் நமக்கு வேண்டியது.”

“உண்மைதான். நான் அவ்வளவு தூரம் யோசித்துப் பார்க்கவில்லை. சாரி.”

அவள் வீடு திரும்பிய பொது அங்கே விஸ்வம் காத்திருந்தான்.

“எல்லோரும் சொக்கியமா அப்பா? ஏன் இப்படி இளைத்துப் போயிட்டீங்க? உடம்பு சரியாக இல்லையா?” பரிவுடன் விசாரித்தாள்.

“என் உடம்புக்கு ஒன்றும் இல்லை. நான் உன்னுடன் சில விஷயம் சீரியாஸாய் பேசணும்.”

“சொல்லுங்கள் அப்பா.” நிதானமாய் கேட்டாள், கட்சித் தலைவரின் வார்த்தைகளை நினைவுப் படுத்திக்கொண்டு.

“பத்திரிகையில் அதென்ன அப்படி எழுதுகிறாய்? எந்த உத்தேசத்தில் அப்படி எழுதுகிறாய்?” விஸ்வத்தின் குரலில் கோபம் பிரதிபலித்தது.

“என்னப்பா? இருக்கிற விஷயத்தைத் தானே எழுதினேன். அதில் பொய் எதுவும் இல்லை என்று உங்களுக்கே தெரியும்.”

“உனக்கு என் வேதனை புரியாதும்மா. மகள்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய என் கஷ்டம் உனக்குப் புரிய வேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்துவிட்டாய். எந்த வரன் வந்தாலும் முதலில் மூத்த மகளைப் பற்றிய கேள்விதான் வருகிறது. இந்த ரகளை எல்லாம் அவர்களுக்குப் புரியாது. மூத்த மகள் திமிர் பிடித்து கணவனை விட்டுவிட்டு போய்விட்டாள் என்ற அபவாதம்தான் எஞ்சியிருக்கும்.”

பாவனா சிரித்தாள். “என் கல்யாணத்தைப் பண்ணிய அனுபவம் கொண்டாவது உங்க எண்ணங்களில் மாறுபாடு வந்திருக்க வேண்டும் அப்பா. தங்கைகளுக்கு கல்யாணம் முக்கியம் இல்லை. படிக்க வையுங்க. சொந்த காலில் நிற்பது போல் பொருளாதாரா சுதந்திரத்தை ஏற்படுத்துங்கள். கல்யாணம் பண்ணியாக வேண்டும் என்று எவனோ ஒருத்தனுக்கு கட்டி வைக்காமல் மனித நேயம் உள்ள ஆணுக்குத் தந்து மணம் முடியுங்கள்.”

“சொற்பொழுவு ஆற்றுவது சுலபம்தான். அது சரி, அரசியலில் சேரப் போகும் விஷயம் உண்மைதான் என்று சொல்லு.”

“ஏன்? மறுபடியும் பாஸ்கர் ராமமூர்த்தி வந்து மடியில் தலை வைத்து அழுதானா?”

“இவ்வளவு ஏளனமாய் பேசாதே. அவன் இன்னும் சட்ட ரீதியாய் உன் கணவன்தான். அரசியல் ஒரு சாக்கடை. பெண்பிள்ளைகளுக்குத் தகுந்த துறை இல்லை. அது ஒரு புதைமணல். என் உலக அனுபவத்தினால் சொல்கிறேன். ஆவேசப்படாமல் யோசித்துப் பார். உன்னைப் போன்ற அனுபவம் இல்லாதவர்கள் தேர்தலில் நின்று ஜெயிப்பது கனவிலும் நடக்காது.”

“உங்க அனுபவம் எப்படிப் பட்டது என்று இப்போ எனக்கு நன்றாகப் புரிந்துவிட்டது அப்பா. விஸ்வத்தின் மகள் கணவனை விட்டுவிட்டுப் போய்விட்டாள். அரசியலில் சேர்ந்து பெரிய இவள் போல் தேர்தலில் நின்றாள். ஆனால் டிபாசிட் கூட கிடைக்காமல் தோற்றுப் போய்விட்டாள், பாவம்! என்று நாலு பேர் நினைத்துக் கொள்வார்களே என்றுதானே இந்த வருத்தமெல்லாம்? நான் சொல்வதைக் கேட்டுக் கொள்ளுங்கள். அகம்பாவத்தோடு சொல்லவில்லை. தன்னம்பிக்கையோடு சொல்கிறேன். நான் தேர்தலில் வென்று தீருவேன். உங்கள் மகள் என்று இல்லாமல் என்னுடயை தந்தை என்று உங்களை சொல்லும்படியாய் செய்து காட்டுகிறேன். தன்னம்பிக்கையுடன் உழைத்தால் சாத்தியம் ஆகாதது எதுவும் இல்லை என்று என் அனுபவம் கற்றுக் கொடுத்திருக்கிறது. என்ன? கொஞ்சம் மனசாட்சியை வஞ்சிக்கும்படி நேரலாம். ஆனால் மனசாட்சியை முற்றிலுமாய்க் கொன்றுப் போட்டு விட்டு வாழ்ந்து வருகிற உங்களைவிட மேல்தானே?”

“உன்னை மாற்றுவதோ, என்னைப் புரிந்து கொள்ளும்படி செய்வதோ கடவுளால் கூட முடியாது” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான் விஸ்வம்.

(தொடரும்)

Series Navigationபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் 6.காந்தியடிகளுக்கு வழிகாட்டிய ஏ​ழை
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *