விளையாட்டு வாத்தியார் -2

author
0 minutes, 0 seconds Read
This entry is part 19 of 33 in the series 19 மே 2013

தாரமங்கலம் வளவன்

எப்படியாவது இந்த கபடி விளையாட்டு வீரர்களை செல்வத்துடன் மோத வைத்து, செல்வத்தை அடக்க வேண்டும் என்று நினைத்த பக்கிரி, வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்தான்.

கிராமத்து மக்களோடு ஒன்றாக தரையில் உட்கார்ந்து கொண்டிருந்த பக்கிரி, செல்வதை சீண்டி விட வேண்டும் விட வேண்டும் என்ற எண்ணத்துடன் தரையிலிருந்து ஒரு சிறு கல்லை எடுத்து செல்வத்தின் மேல் எறிந்தான்.

உடனே “ யாருடா அது… கல் எடுத்து அடிச்சது..” என்று செல்வம் ஒவ்வொருவராக பிடித்து உலுக்கி கேட்க ஆரம்பித்தான்.

அது குமாரின் கவனத்தை கவர்ந்தது.

“ என்ன கலாட்டா செய்யற.. போய் உட்காரு…” என்று விளையாட்டு வாத்தியார் குமாரிடம் மீண்டும் வந்து சொல்ல, செல்வம் தன் உண்மையான குணத்தை காண்பித்து, ஆக்ரோஷத்துடன் குமாரை பிடித்து தள்ளிவிட, அதைப் பார்த்து வெளியூர் கபடி விளையாட்டு வீரர்கள் எல்லாம் ஓடி வந்து செல்வத்தை பிடித்து தள்ளிவிட்டார்கள். இதைப் பார்த்து உள்ளூர் விளையாட்டு வீரர்களும் சேர்ந்து கொள்ள, பக்கிரி எதிர்பார்த்த சண்டை ஆரம்பித்தது.

செல்வம் என்னதான் பலசாலி என்றாலும், இருபத்தி நாலு கபடி விளையாட்டு வீரர்களுக்கு முன்னால், அவனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

நிறைய அடிவாங்கிய பிறகு, செல்வம் அடங்கிப்போனான். கிராமத்து மக்களோடு ஒன்றாய் போய் உட்கார்ந்து கொண்டான்.

பக்கிரி மட்டும் அல்ல, மொத்த கிராமத்து மக்களும் இதைப் பார்த்து சந்தோசப்பட்டார்கள்.

கபடி விளையாட்டு ஆரம்பித்தது.

விளையாட்டு முடியும் தருவாயில், உட்கார்ந்து கொண்டிருந்தவர்கள் ஒருவருக்கொருவர் ஒரு விஷயத்தை பேசிக்கொண்டனர்.

அது என்னவென்றால் செல்வம் அடித்து போட்ட கோலப்பன் செத்து விட்டான் என்பது தான்.

இதைக் கேட்டபோது பக்கிரிக்கு மனம் பாரமாய் இருந்தது. தான் காலையில் கோலப்பனை காப்பாற்ற நினைத்துக் கதறியது ஞாபகம் வந்தது.

விளையாட்டு வாத்தியார் குமார் செல்வத்தை தட்டிக் கேட்டது மனதில் தோன்ற, இந்த விஷயத்தை உடனே போய் விளையாட்டு வாத்தியார் குமாரிடம் சொன்னான்.

அவர் ஆச்சர்யப்பட்டு, “ இந்த ஊர்ல கேக்கறதுக்கு ஆளில்லையா… இப்படி ஒரு ரௌடியா… நான் போலீசில அவனை பிடிச்சுக் கொடுக்கப் போறேன்…” என்றார்.

கபடி விளையாட்டு முடிந்து இரவு வந்தது. எல்லோரும் போய் விட்டார்கள் செல்வம் உட்பட.

கபடி விளையாட்டு வீரர்கள், குமார் மற்றும் பக்கிரி உட்கார்ந்து யோசனை செய்தார்கள். வெளியூர் வீரர்கள் டவுனுக்கு போய் போலீசை கூட்டி வருவது என்று முடிவு ஆனது.

விடியும் தருவாயில் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கூட்டி வந்த போலீசுடன் செல்வத்தின் வீடு வளைத்துக்கொள்ளப்பட்டது.

வேறு வழி இல்லாமல் போலீசுக்கு பணிந்து, விளையாட்டு வாத்தியார் குமாரை கருவிக்கொண்டே போலீஸ் ஜீப்பில் ஏறினான் செல்வம்.

செல்வத்தைப் விளையாட்டு வாத்தியார் குமார்தான் பிடித்துக் கொடுத்தார் என்று ஊர் மக்கள் பேசிக்கொண்டார்கள். செல்வம் போலீசிடம் இருந்து தப்பி வந்து குமாரை பழிவாங்குவான் என்றும் அவர்கள் பேசிக்கொள்ள, பக்கிரிக்கு திக் என்று ஆகிவிட்டது.

ஜீப் போன பிறகு தான் அழுது கொண்டு நின்று கொண்டிருந்த வள்ளியை கவனித்தார் குமார். உடன் நின்று கொண்டிருந்த பக்கிரி,

“ சார்.. இந்த பொண்ணு பேரு வள்ளி.. செல்வத்தோட தங்கச்சி.. வேற யாரும் கெடையாது அவளுக்கு… இனிமே இந்த பொண்ணு தனியா அந்த வீட்டில இருக்கபோறா.. இந்த பொண்ணு ரொம்ப வெகுளி சார்.. அவளுக்கு நாம தான் ஏதாவது பாதுகாப்பு பண்ணனும்..”.” என்றான்.

அதை ஆமோதித்த குமார், “ ஆமா.. அவளோட நெலமைக்கு நாம தான் காரணம்.. நாம தான் ஏதாவது செய்யணும் ..” என்று சொல்லிவிட்டு கிளம்ப, பக்கிரிக்கு வள்ளியின் எதிர்காலம் பற்றிய பயம் வந்தது.

அதே சமயத்தில், செல்வத்தால் விளையாட்டு வாத்தியாரின் உயிருக்கு ஏதாவது ஆபத்து வந்தால், அதற்கும் தாம் காரணமாகி விடுவோமே என்ற குற்ற உணர்வும் பக்கரிக்கு வந்துவிட்டது.

பக்கிரிக்கு இப்படி இரண்டு பேருக்கும் தான் தீங்கு செய்து விட்டதாகத் தோன்றியது. இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும், ஒரே தீர்வு, செல்வத்தின் தங்கை வள்ளியை குமாருக்கு கல்யாணம் செய்து கொடுப்பது தான் என்று முடிவு செய்து கொண்டான் பக்கிரி. குமார், செல்வத்தின் தங்கையை கல்யாணம் செய்துகொண்டால், தங்கைக் கணவனை செல்வம் ஒன்றும் செய்ய மாட்டான் என்று அவன் மனம் கணக்கு போட்டது..

யோசித்த பக்கிரி, குமாரின் வீட்டிற்கு போய் தயங்கி தயங்கி சொன்னான்.

“ வள்ளியை நீங்க கல்யாணம் பண்ணிக்கிங்க சார்….”

குமார் பக்கிரி சொன்னதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தார். அடுத்த நாள் குமார், பக்கிரியிடம், “ செல்வத்தை நான் போலீசில பிடிச்சு கொடுத்தனால, வள்ளிக்கான பொறுப்பு என்னுது ஆயிடுது.. நீ சொன்னபடி நானே வள்ளியை கல்யாணம் பண்ணிக்கிறேன்.. உடனே கல்யாணம் பண்ணிக்கனும்னா, ரிஜிஸ்டர் கல்யாணம் தான் டவுனுக்கு போய் பண்ணனும். அதுக்கு ரெண்டு சாட்சி வேணும்… வள்ளி சார்பில ஒருத்தரும், என் சார்பில ஒருத்தரும்…” என்று சொன்னார்.

பக்கிரியின் சந்தோசத்திற்கு அளவே இல்லை. “ வள்ளி சார்பில நா வந்து கையெழுத்து போடறேன் சார்..” பக்கிரி சொல்ல,

“ அப்ப என்னோட சார்பில ஒருத்தர் தேவைப்படும்… டவுன்ல எனக்கு ஒரு பிரண்டு இருக்கான்.. அவனை வரச்சொல்றேன்.. வெள்ளிக் கிழமை கல்யாணம் வைச்சுக்கலாம்..” என்று குமார் சொல்ல,

“ கல்யாணத்துக்கு நான் ஏற்பாடு பண்ணறேன் சார்.. மொதல்ல வள்ளியை உங்க வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்திடணும்… வள்ளி தனியா இருக்கிறது சரியில்ல.. நான் போய் வள்ளிக்கிட்ட சொல்லி சம்மதிக்க வைச்சு கூட்டிக்கிட்டு வர்ரேன்..” பக்கிரி சொல்லிவிட்டு வள்ளியைப் பார்க்க போனான்.

வள்ளி வாத்தியார் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

ஜெயிலில் இருக்கும் செல்வத்திற்கு குமாரைக்குப் பற்றிய சிந்தனையை விட வள்ளியைப் பற்றிய சிந்தனைதான் அதிகமாய் இருந்தது. இப்படி வள்ளி ஒன்றும் தெரியாமல், வெகுளித்தனமாய் வளர்ந்து விட்டதைப் பற்றி கவலைப்பட்டான்.

தான் ஜெயிலுக்கு வந்துவிட்டதை விட, தான் ஜெயிலுக்கு வந்துவிட்டதற்குப் பிறகு வெகுளி வள்ளிக்கு என்ன ஆகும் என்பதும், தான் நிறைய எதிரிகளை சம்பாதித்துக் கொண்டு விட்டதால், தன் எதிரிகள் தன் தங்கையை எதாவது செய்து விடுவார்களோ என்ற கவலையும் செல்வத்தை பற்றிக் கொண்டது.

இந்த பயம் வந்தவுடன், எப்படியாவது வள்ளிக்காக தப்பித்து வர வேண்டும் என்று செல்வம் மனதில் நினைத்துக் கொண்டான்.

இந்த நிலையில், வள்ளிக்கும், வாத்தியாருக்கும் தொடர்பு என்றும், வள்ளியை வாத்தியார் வைத்துக்கொண்டிருக்கிறார் என்றும் ஒரு செய்தி சப்-ஜெயிலில் இருக்கும் செல்வத்திற்கு போக, கோபத்தின் உச்சிக்கு போன செல்வம், எப்படியாவது ஜெயிலில் இருந்து உடனே தப்பிக்க வேண்டும் என்று முடிவு செய்தான்.

கிராமத்தில், வள்ளியும், பக்கிரியும், போலீசும் இருட்டுவதற்காக காத்துக்கொண்டிருந்தார்கள்.

வள்ளி எதிர்பார்த்தது போல, செல்வம் கிராமத்துக்கு வந்து, வள்ளி தன் வீட்டில் இல்லாததும், குமார் வீட்டில் இருப்பதும் தெரிய வர, கோபத்தின் உச்சிக்கு வந்து, குமார் வீட்டிற்கு வந்தான். அங்கு வள்ளி இருப்பதைப் பார்த்து,

“ எங்கடி அந்த வாத்தியாரு..அவனைக் கொல்லாமல் வுட மாட்டேன்..” என்றான் செல்வம்.

அதற்கு, வள்ளி,

“ உன்ன காலையில டவுன்ல பார்த்தேன்… நீ வருவேன்னு தெரியும்..” என்றாள் பதட்டத்தை அடக்கிக் கொண்டு,

“ பாத்தியா.. எப்படி…” என்றான் செல்வம்.

வள்ளி, “ வாத்தியாரு என்னை காலையில டவுன் ரிஜிஸ்டர் ஆபீசில வைச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.. பாரு தாலி… நீ போலீசுக்கிட்ட இருந்து தப்பிச்சு ஓடும் போது, நானும் பக்கிரியும் ரிஜிஸ்டர் ஆபீசில இருந்து பார்த்தோம்..” என்றாள் வள்ளி.

அவன் நம்ப மறுத்தான்.

அப்போது அங்கு வந்து சேர்ந்த பக்கிரி, தானும் கூட இருந்துதான் கல்யாணம் செய்து வைத்ததாகவும், ரிஜிஸ்டர் கல்யாணத்தில் யாரும் ஏமாற்ற முடியாது என்பதையும் பக்கிரி கூற, செல்வம் நம்புவது போல் தோன்றியது. செல்வம் உட்கார்ந்து யோசித்தான்.

பிறகு, “ சரி நா நம்பறேன்.. போலீஸ் என்னை தேடி வரும்.. அதனால, நா போய் வள்ளிக்காக சேத்து வைச்ச நகைகளை கொண்டாந்து கொடுத்தடறேன். இந்த அண்ணனோட சீதனமா.” என்றான்.

ஓடிபோய் தன் வீட்டு பரணிலிருந்து வள்ளிக்காக சேர்த்து வைத்திருந்த நகைகளை எடுத்து வந்து கொடுத்தான் வள்ளியிடம்.

அதற்குள், குமார் வந்து விட, நகைகளை வாங்கிக் கொள்ளவா என்று வள்ளி தன் கணவனிடம் அனுமதி கேட்க, அதற்கு “ அந்த பாவப்பட்ட நகைங்க நமக்கு வேண்டாம்..” என்று சொன்னார் குமார்.

அதற்கு செல்வம், “ இது எங்க குடும்பத்து நகை…. தப்பா நா எதுவும் சம்பாத்திக்கல, வாங்கிங்க மாப்பிள்ளை..” என்று செல்வம் கெஞ்ச, குமார் ஒரேயடியாய் மறுத்து விட்டார்.

“ போலீசுக்கிட்ட இருந்து தப்பிச்சது பெரிய குற்றம்… உடனடியா சரண் அடைஞ்சுடுங்க… போலீசுக்கிட்ட இருந்து தப்பிச்சது, தண்டனையை அதிகப் படுத்தும்” என்று குமார் கூற, அப்போது வீட்டிற்குள் நுழையும் போலீஸ்காரர்கள் செல்வத்தைப் பிடித்து கொண்டார்கள்.

வாங்கிக் கொள்ள மறுத்து விட்ட நகைகளுடன், செல்வம் குமாரின் வீட்டை விட்டு போலீசுடன் வெளியே வந்தான்.

செல்வத்தை தொடர்ந்து பக்கிரி நடந்தான் தன் ஊனமான காலுடன்.

செல்வம் நடக்கும் போது எதிரே இறந்த போன கோலப்பனின் மனைவி குப்பம்மா தன் குழந்தையோடு வருவதைப் பார்த்தான்.

செல்வத்தைப் பார்த்து தன்னையும் கொன்று விடுவானோ என்று அவள் பயந்து ஒதுங்க, செல்வம்,

“ இங்க வா… இதை வாங்கிக்க…” என்று அந்த நகைகளை அவளிடம் கொடுக்க, பயத்தினால் அவள் வாங்கிக் கொண்டாள்.

போலீசுடன் நடக்க ஆரம்பித்த செல்வம், போலீசைப் பார்த்து,

“ என் தங்கச்சி வீட்டுக்கார் சொன்னபடி, போலீசுக்கிட்ட இருந்து தப்பிச்சதுக்கு, தண்டனை அதிகமாகுமா சார்..” என்று கேட்க, அதற்கு அந்த போலீஸ்காரர்கள் யாரும் பதில் சொல்லவில்லை.

கொஞ்ச நேரம் கழித்து செல்வம்,

“ தூக்கு தண்டனை கெடைச்சா, நா எங்க கிராமத்துக்கு திரும்பவும் வரவே முடியாது.. அதனால, இப்பவே எங்க கிராமத்தை கடைசியாக ஒரு தடவ ஆசை தீர பாத்துக்கிறேன்..”

என்றான்.

பிறகு, போலீஸ்காரர்களுடன் டவுன் போலீஸ் ஸ்டேசனை நோக்கி செல்வம் வேகமாக நடக்க ஆரம்பித்தான். பக்கிரியால் தொடர்ந்து நடக்க முடியாமல் போகவே, நின்று கொண்டு, செல்வம் போவதைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

———————————————————————————————————————-

Series Navigationகுருக்ஷேத்திரக் குடும்பங்கள் 10தேவலரி பூவாச காலம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *