புகழ் ​பெற்ற ஏ​ழைகள் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

This entry is part 30 of 40 in the series 26 மே 2013

புகழ் ​பெற்ற ஏ​ழைகள்

( முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) 

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

8.சமுதாயத்திற்கு வழிகாட்டிய ஏ​ழை……

200px-Moovalur_ramamirthamஎன்னங்க….​யோசிச்சிகிட்​டே இருக்கிறீங்க…அவங்க இந்த சமுதாயத்​தை​யே இப்படித்தான் ​யோசிக்க வச்சாங்க…அவங்க அப்படி ​யோசிக்க வச்சதா​லேதான் சமுதாயத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுச்சு…அதனால நல்லா ​யோசிக்கிறதுல தப்​பே இல்ல…ஆனா இப்படி ​யோசிச்சிக்கிட்​டே இருந்தா எப்பத்தான் கண்டுபிடிப்பீங்க…மூ​ளையப் ​போட்டுக் கசக்காதீங்க..நா​னே ​சொல்லிட​றேன்..அவங்கதாங்க மூவாலூர் இராமாமிர்தம் அம்​மையார்…என்னங்க இவங்களத்தான் ​நெனச்சீங்களா?..நீங்க ​சொல்ல ​நெனச்சீங்களா..அதுக்கு முன்னா​லே நா​னே ​சொல்லிட்​டேனா? சரி…சரி..பராவாயில்ல..யாரு ​சொன்னா என்ன..அவங்க ஏ​ழையா இருந்தாலும் வீரமா வாழ்ந்தாங்க…அவங்க மாதிரி ஒரு வீரமான ​பெண்மணி​யைப் பார்க்க முடியாது…ஆமாங்க…

வாழ்நாள் முழுதும் ​பொதுநலத் ​தொண்டிற்காக​வே வாழ்ந்தவங்க இவங்க..பல்​வேறு நி​லைகளில் அயராது சமுதாயப் பணி​யாற்றிய இவங்க தஞ்சாவூர் மாவட்டத்தில் கீரனூர் அருகில் உள்ள பாலூரில் 1883-ஆம் ஆண்டு இ​சை​வேளாளர் குடும்பத்தில பிறந்தாங்க. இவரது தந்​தையார் கிருஷ்ணசாமி தாயார் சின்னம்மாள் ஆவர். இராமாமிர்தம் அம்​மையார் வளர்ந்த ஊர்தான் மூவலூர். இந்தப் ​ஊர்ப் பெய​ர் அவரு​டைய ​பெயரு​க்கு முன்னால ​நெ​லைச்சு நின்னிடுச்சு.

கிருஷ்ணசாமியின் குடும்பம் பர​வைநாச்சியார் குடும்பம் என்று அ​ழைக்கப்பட்டது, இவருடன் இருண்டு மூத்த ச​கோதரிகளும் ஒரு தம்பியும் பிறந்தனர். இவரு​டைய ச​கோதரிகள் சாயா​தேவி, சின்னப்பாப்பு இருவருக்கும் குழந்​தைகள் இல்​லை. அதனால இவர்கள் இருவரும் தங்களின் குலவடிக்கப்படி ​தேவதாசிகளாக்கப்பட்டவங்க. இவர்கள் தங்கள் ச​கோதரரிடம் அவரது குழந்​தை​யைத் தத்துக் ​கொடுத்துவிடுமாறு ​கேட்டனர். அந்தக் காலத்தில் ஆண்களின் வாரிசுக​ளை ​தேவதாசியாக்கக் குலதர்மம் இடங்​கொடுக்காததால கிருஷ்ணசாமியின் மக​ளைத் தத்து எடுத்துத் ​தேவதாசியாக்க எண்ணினர். ஆனால் கிருஷ்ணசாமி இத​னை எதிர்த்தார். இதனால் அவர் குடும்பத்திலிருந்து ​வெளி​யேற்றப்பட்டார்.

கிருஷ்ணசாமி ​வெளி​யேற்றப்பட்டதால் ஏழ்​மையில் வாடினார்.பி​ழைக்க வழியில்லாததால் மூவலூரில் உள்ள தனது மாமியாரின் வீட்டில் குடும்பத்துடன் கிருஷ்ணசாமி தங்கி இருந்தார். மாமியாரின் குடும்பமும் வறு​மையில் உழன்றது. கிருஷ்ணசாமி ​கொஞ்ச காலம் ​பொறுத்துப் பார்த்தார். இனி​மே தன்னால தாக்குப் பிடிக்க முடியாதுங்கற ​நெ​லை​மை வந்த​போது குடும்பத்​தை விட்டுவிட்டு கிருஷ்ணசாமி ஊ​ரைவிட்​டே ஓடிப்​போயிட்டார்.

நிர்க்கதியாகிவிட்ட சின்னம்மாள் வறு​மையில் உழன்றார். சின்னம்மாளால் குழந்​தை​யை ​வைத்துக் ​கொண்டு சமாளிக்க முடி​யவில்​லை. அந்த நி​லையில் அவரது கணவர் கிருஷ்ணசாமியிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் தான் ​சென்​​னையில் ஒரு வீட்டில் சம்பளம் ஏதுமின்றி சாப்பாட்டிற்காக ​வே​லை ​செய்வதாகவும் கடிதம் எழுதி இருந்தார். அத​னைக் கண்ட சின்னம்மாள் தன்னால் குழந்​தை​யை ​வைத்துக் ​கொண்டு வறு​மையுடன் ​போராட முடியவில்​லை தாமும் ​சென்​னை வந்துவிடுவதாகக் கணவருக்குக் கடிதம் எழுதினார். ​தனது குழந்​தையாவது வளமாக வாழட்டு​மே என்று எண்ணிக் குழந்​தை​யை மூவலூரில் தாசிகுலத்​தைச் ​சேர்ந்த ​ஆச்சிக்கண்ணு என்ற பெண்ணிடம் பத்து ரூபாய்க்கும் ஒரு ப​​ழைய           ​சே​லைக்கும் விற்றுவிட்டு தனது கணவன் இருந்த ​சென்​னை​யை ​நோக்கிச் ​சென்றார். அப்​போது இராமாமிர்தம் அம்​மையாருக்கு ஐந்து வயதுதான். அறியாப் பருவம்; குழந்​தை என்ன நடக்கின்றது என்று கூடத் ​தெரியாது மலங்க மலங்க விழித்தது. வறு​மை அங்கு ​கை​கொட்டிச் சிரித்தது.

​சென்​னையில் கணவருடன் வறு​மையில் வாழ்க்​கை நடத்திய சின்னம்மாள், தனது குழந்​தை​யை விற்றுவிட்டதாகக் கணவரிடம் கூறவில்​லை. வறு​மையிலிருந்து சற்று மீண்டாலும் சமுதாயத்தில் தன்​னை இழிவாகக் ​கேலி ​செய்வார்க​ளே என்று கருதிப் பயந்து ​கொண்டு தனது மக​ளைப் பார்க்க அவர் முயற்சி ​செய்யவில்​லை. என்​னே! காலத்தின் ​கொடு​மை. வறு​மை அ​னைத்​தையும் பிரித்துப் ​போட்டுவிடும் என்பதற்கு இந்நிகழ்​வே சான்றாக அ​மைந்துள்ளது. ​

இராமாமிர்தம் அம்​மையா​ரை வி​லைக்கு வாங்கிய ஆச்சிக் கண்ணு என்ற தாசிப் ​பெண் அவருக்கு ஆடல், பாடல், தமிழ், ​தெலுங்கு, வட​மொழி ஆகியவற்​றைக் கற்றுக் ​கொடுத்தார். இவற்றில் இராமாமிர்தம் அம்​மையார் மூழ்கியதால் தனது தாய் தந்​தையரின் குறித்த நி​​னை​வுகள் அடி​யோடு மறந்து ​போய்விட்டது.  பின்னர் அம்​மைாயாருக்குப் ​பெண்க​ளைத் தாசித் ​தொழிலில் ஈடுபடுத்துவதற்கான முதல் சடங்காகிய தாண்​டியம் பிடித்தல் என்ற சடங்கு முழு​மையாக நி​றை​வேற்றப்பட்டது. தாண்டியம் என்றால் என்ன என்று புரியாத வயதில் இராமாமிர்தம் அம்​மையாருக்குக் காலில் சலங்​கை கட்டப்​பெற்றது.

இராமாமிர்தம் அம்​மையாருக்கு அவரது 17-ஆவது வயதில் ​கோயிலில் ​பொட்டுக்கட்ட ​வேண்டும் என்று முயற்சி ​செய்யப்பட்டது. ஆனால் இவர் ஆண் வாரிசு வயிற்றுப் ​பெண் என்பதால் ​கோயிலில் ​பொட்டுக் கட்ட அனுமதிக்கக் கூடாது என்று பஞ்சாயத்தார் கூறிவிட்டதால் அதிலிருந்து தப்பித்தார். எனினும் அவ​ரை 65 வயது​டைய ​செல்வந்தருக்கு மணமுடித்துக் ​கொடுக்க அவரது வளர்ப்புத்தாய் முடிவு ​செய்தார். இராமாமிர்தம் அம்​மையார் இத்திருமணத்​தை ​வெறுத்தார்.

தனக்கு இ​சையாசிரியராக இருந்த சுயம்புப் பிள்​ளை​யைத் திருமணம் ​செய்து ​கொள்ள முடிவு ​செய்து தனது விருப்பத்​தை அவரிடம் ​தெரிவித்தார். அத​னை ஏற்றுக் ​கொண்ட சுயம்புப் பிள்​ளை​யும் இராமாமிர்தம் அம்​மையாரும் வழுவூர் ​கோயிலில் ​நெய்விளக்கு ஏற்றி இருவரும் ஒருவ​ரை ஒருவர் பிரிவதில்​லை என்று சத்தியம் ​செய்து விளக்​கை அ​ணைத்து உறுதி எடுத்துக் ​கொண்டனர். இவ்வாறு இவர்களது திருமணம் எளி​மைாயாக நடந்தது.

இத்திருமணத்​தை யாரும் விரும்பவில்​லை. இத்திருமண​மே பின்னர் ந​டை​​பெற்ற சுயமரியா​தைத் திருமணங்களுக்​கெல்லாம் முன்​னோடியாக அ​மைந்தது. இராமாமிர்தம் அம்​மையார் இத்திருமணத்​தின் வாயிலாகப் புரட்சிப் ​பெண்ணாக உயர்ந்தார். இவரது திருமணத்​தை எதிர்த்தவர்கள் இவர் மீது ​பெண்​ணைக் ​கொ​லை ​செய்ததாகக் ​கொ​லைக்குற்றம் சுமத்தி ​பொய்வழக்குப் ​போட்டனர். இராமாமிர்தம் அம்​மையா​ரையும் அவரது கணவ​ரையும் நிம்மதியாக வாழவிடவில்​லை.

இராமாமிர்தம் அம்​மையார் இத​னை அறிவாற்றலுடன் எதிர்​கொண்டார்.  ​கொ​லை ​செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட ​பெண்​​ணைத் ​தேடிக் கண்டுபிடித்து நீதி மன்றத்தில் ​கொண்டு வந்து நிறுத்தி, தன்மீது ​பொய்வழக்குப் ​போட்டவர்கள் மீ​தே வழக்குத் ​தொடர்ந்து ​வெற்றி ​பெற்றார். இது இராமாமிர்தம் அம்​மையாரின் மிகப் ​பெரிய சாத​னையாகும்.

இதற்கி​டையில் இவரது வளர்ப்புத் தாயாகிய ஆச்சிக் கண்ணு இராமாமிர்தம் அம்​மையாருக்குத் தனது ​சொத்துக்க​ளை எழுதி ​வைத்துவிட்டு, காலரா ​நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தார். இதனால் ​பொருளாதார நி​லையில் இராமாமிர்தம் அம்​மையார் ஓரளவு உயர்ந்தார். வறு​மையில் தம்​மைக் ​கைவிட்ட ​பெற்​றோ​ரை அ​ழைத்து வந்து தம்முடன் தங்க ​வைத்துக் ​கொண்டார். என்னங்க ஆச்சரியமாக இருக்கா? இதுதாங்க காலச்சூழல்ங்கறது. தங்களால் ​கைவிடப்பட்டு விற்கப்பட்ட மகளா​லே​யே அ​டைக்கலம் ​கொடுக்கப்பட்டு அவரது ஆதரவி​லே​யே வாழ்க்​கை​யை நடத்துவது என்பது காலத்தின் விசித்திரம் தா​னே!

இராமாமிர்தம் அம்​மையாரின் கரு​ணை உள்ளத்​தையும்,

 

“இன்னா ​செய்தாருக்கும் இனிய​வே ​செய்யாக்கால்

என்ன பயத்த​தோ சால்பு”

 

என்ற திருக்குறளுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த​தையும் இச்​செயல் எடுத்துக்காட்டுவதாக அ​மைந்தது.

காங்கிரஸ்ஈடுபாடு

மூவலூர் அம்மையார் காங்கிரஸ் இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொள்ள ஒரு முக்கியக் காரணம் இருந்தது. தேவதாசி முறை எதிர்ப்புக்கு சில காங்கிரஸ் தலைவர்கள் மத்தியிலும் ஆதரவு இருந்ததுதான் அக்காரணமாகும். காந்தியடிகள் பாரிஸால் என்ற நகரில்சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அந்நகரில் தேவதாசிகள் முறை இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அத்துடன் நில்லாமல் தேவதாசிப் பெண்கள் சிலரை நேரில் சந்தித்து, அவர்கள் வாழ்ந்த இழிவு வாழ்க்கை பற்றியும் அறிந்தார். இப்பெண்களை வாழ்க்கையில்‘வழுக்கி வீழ்ந்த பெண்கள்’ என்றே காந்தி அழைத்தார். தேவதாசி முறை இந்தியாவில் எங்கு நீடித்தாலும் அதை அடியோடு ஒழிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பிரச்சாரம் செய்யும்படி காங்கிரஸ் தலைவர்களுக்கு காந்தி அழைப்பு விடுத்தார். இதனால் இப்பிரச்சனைநாடு முழுவதும் வெளிச்சத்துக்கு வந்தது.

தமது இலட்சியத்துக்கு ஆதரவு திரட்ட மூவலூர் அம்மையார் காங்கிரஸ் பேரியக்கத்துடன் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டார், குறிப்பாக, தேவதாசி முறையை ஒழிக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவரது தீவிரத்தை அறிந்து, காந்தியடிகள்மூவலூர் அம்மையாருக்குப் பாராட்டுக் கடிதம் ஒன்றும் எழுதியுள்ளார்.

அந்தக் காலத்தில் பெண்கள் இதுபோன்ற சமூக மறுமலர்ச்சிப் பிரச்சாரத்தில் நேரடியாக ஈடுபடுவது மிகவும் அபூர்வமாகும். அதுவும் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்ணே தமது சமூகத்தின் இழிநிலையை எதிர்த்துப் போராட முன்வந்தது காந்தியை மிகவும்கவர்ந்தது எனலாம். இது குறித்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு மூவலூர் அம்மையாருக்கு தி.மு.க. சார்பில் விருது வழங்கி அண்ணாதுரை பேசும்போது, இதன் முக்கியத்துவத்தை வியந்து பாராட்டினார். ‘காலஞ்சென்றுவிட்ட காந்தியார், தென்னாட்டில் இன்றைக்கு 35ஆண்டுகளுக்கு முன்பு சமூகப்பணிக்காகப் பெண்களைத் தேடி அலைந்தபோது, மூதாட்டியார்தான் அவர் கண்களுக்குப்பட்டார்’ என்று அறிஞர் குறிப்பிட்டுள்ளார். பொட்டுக் கட்டும் வழக்கத்திற்கு எதிராகத் தமிழகம் முழுவதும் பணியாற்றிய தால்தான் மூவலூராரின் குரல்ஆயிரம் மைல்களைக் கடந்தும் ஒலித்துள்ளது.

மூவலூர் அம்மையாரின் அரசியல் பணிகள் அன்றைய காங்கிரஸ் தலைவர் திரு.வி.க. அவர்க​ளை வெகுவாகக் கவர்ந்தது. 1925-ஆம் ஆண்டில் மயிலாடு துறையில் இசைவேளாளர்கள் சங்க மாநாட்டினை மூவலூரார் ஏற்பாடு செய்த போது திரு.வி.க. அதில் கலந்துகொண்டார். இந்த மாநாடு குறித்தும், மூவலூர் அம்மையார் குறித்தும் தமது ‘வாழ்க்கைக் குறிப்புகள்’ நூலில் திரு.வி.க. அவர்கள் விரிவாக எழுதியுள்ளார்.

காந்தியடிகள் முன்மொழிந்த ஒத்துழையாமை இயக்கத்தின் முக்கியப் போர்வாள் – கதர் ஆடை அணிதலாகும். வெள்ளையரின் கொள்ளை வெறிக்குக் கதராடை மூலம் அணை போடப்பட்டது. சமூகச் சீர்திருத்த – மறுமலர்ச்சிக் கருத்துகளில் மட்டுமல்லாது, கதராடைஇயக்கத்திலும் காந்தி – பெரியார் வழியை மூவலூர் அம்மையார் தீவிரமாகப் பின்பற்றினார். கதராடையைச் சுமந்து சென்று தெருத்தெருவாக விற்றார். ஊர் ஊராகக் கதர்ப்பொதியைச் சுமந்து சென்றார். அவரும் கதராடைதான் அணிந்தார்.  மதி மயக்கத்திலிருந்து விடுபட்டதேவதாசிப் பெண்களையும் கதர் உடுத்தச் செய்தார். தேவதாசி சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் பலரும் கதர்நூல் நூற்றனர்.

காங்கிரஸ் பேரியக்கம் என்பது – பணவசதி படைத்த மிகச் சிலரும், பராரி ஏழைகள் பெரும்பாலாரும் என்ற விசித்திர வடிவத்தைக் கொண்டிருந்தது. எனவே, காங்கிரஸ் கொள்கையை நேசிப்பவர்கள் குடிசையில் வாழ வேண்டும் என்று காந்தி அழைப்பு விடுத்தார்.அப்போது காங்கிரஸ் பெரும் புள்ளிகளில் எத்தனை பேர் குடிசைக்கு மாறினார்கள் என்று தெரியாது. ஆனால், மூவலூர் அம்மையார் ஒரு ஓட்டு வீட்டில்தான் இருந்தார். காந்தியின் அழைப்பு வெளியான வுடன், உடனடியாக அருகிலேயே ஒரு ஓலைக் குடிசையைப் போட்டுக்கொண்டு அதில் தங்க ஆரம்பித்தார்.

புதிய ஓலைக்குடிசையின் வாசலில் ஒரு அறிவிப்புப் பலகையையும் எழுதித் தொங்க விட்டார். அதில், ‘கதர் கட்டாதவர்கள் உள்ளே நுழையக்கூடாது’ என்று எழுதப்பட்டிருந்தது. இந்த சமயத்தில் அவர் வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்த கதராடைகள் ஏராளமாகக்களவு போய்விட்டன. இது தொடர்பாக விசாரணை நடத்த குத்தாலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அம்மையாரின் வீட்டுக்கு வந்தார். வாசலில் தொங்க விடப்பட்டிருந்த அறிவிப்புப் பலகையைப் பார்த்து மலைத்து நின்றுவிட்டார். அவர் கதர் அணியாததால் தயங்கிநின்று, பின்னர் பின்வாசல் வழியாக வீட்டினுள் சென்றார்.

கொடியையே புடவையாக உடுத்திக் கொள்ளுதல்

காகிநாடாவில் காங்கிரஸ் அகில இந்திய மாநாடு நடைபெற்றது. அதில் கொடி பிடித்துச் செல்லக்கூடாது என்று வெள்ளையர்கள் திடீர் உத்தரவு பிறப்பித்தனர். ‘கொடி பிடித்தால்தானே தடை செய்வாய்; நான் கொடியையே புடவையாக உடுத்திக் கொள்கிறேன் பார்’என்பது போல் கொடிகளை இணைத்துப் புடவையாக அணிந்து கொண்டு நடமாடும் கொடியாக ஊர்வலத்தில் வந்தபோது, அம்மையாரை எதுவும் செய்ய முடியாமல் வெள்ளை அரசு திகைத்து நின்றது.

மற்றொரு முறை காங்கிரஸ் மேடையில் பேசக்கூடாது என்று வாய்ப்பூட்டுச் சட்டம் போடப்பட்டது. அப்போதும், அம்மையார் தன் பாணியில் மேடையில் ஒரு கரும்பலகையை வைத்து, அதில் தான் பேச வேண்டியவை களை எழுதிக் காட்டியே பிரச்சாரம் செய்துபோலீசாருக்குத் தலைவலியை உண்டாக்கியுள்ளார்.

தலைவர்களின் பேச்சுகளைக் கேட்டும், அவர்களது எழுத்துகளைப் படித்தும் விடுதலை இயக்கத்துக்கும், மறுமலர்ச்சி இயக்கத்துக்கும் வந்தவர்கள் அதிகம். ஆனால், ஒரு சிலர் மட்டுமே தங்கள் வாழ்க்கையை ஆராய்ந்து, சமூகம், தமது வாழ்க்கை இவற்றுக்கு மாற்றுக்காணும் முயற்சியில் இயக்கத்துக்குள் வந்தவர்கள். அவ்வாறு புதிய சமுதாயத்தை உருவாக்கும் கனவுடன் வந்தவர் மூவலூர் அம்மையார். இதனால் அவரது போராட்டங்கள் சமரசம் அற்றதாகவும், எளிதில் தைக்கும் கூர்மையுடனும், பாசாங்கு இன்றியும் இருந்தன.பெண்கள் தாசிகளாகவும், வேசிகளாகவும் இருக்கும் இந்தச் சமுதாயத்தில் சீர்திருத்தமும், மறுமலர்ச்சியும் ஏற்பட வேண்டும் என்ற சமுதாயச் சீர்திருத்த எண்ணத்தில் அரசியலுக்கு வந்தவர். அந்த அரசியல் இயக்கத்தைத் தமது சமுக இலட்சியத்துக்குப் பயன்படுத்துவதில்சிறிதும் சமரசம் காணவில்லை.

காங்கிரஸில் இருந்து வெளியேறல்

தமிழ்நாட்டில் காங்கிரஸ் இயக்கத்தின் முக்கிய காலகட்டமான 1920-களில், மூவலூர் அம்மையார் ஓரளவுக்கு முதல் கட்டத் தலைவராக இருந்துள்ளார். தீண்டாமை, தேவதாசி முறை, பால்ய விவாகம், விதவா விவாக மறுப்பு போன்ற சமூக இழிவுகளை எதிர்ப்பதில்காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் மிதவாதப் போக்கையே கடைப்பிடித்தனர். ஆனால், மூவலூரார் இந்தச் சமூக இழிவுகளுக்கு இந்துமத மூட நம்பிக்கைகளே காரணம் என்று கண்டுகொண்டார். இதனால், இந்தச் சமூக இழிவுகள் மறைய வேண்டுமானால் இந்துமத சனாதனம்வேரோடு பிடுங்கப்பட வேண்டும் என்று தீவிரப் பிரச்சாரம் செய்தார்.

காங்கிரஸில் ஆதிக்கம் செலுத்திய பிராமணிய சனாதன சக்திகளை எதிர்த்துப் போராட முடியாது என்ற நிலை 1925-ஆம் ஆண்டில் நடைபெற்ற காஞ்சிபுரம் மாநாட்டில் உருவானது. இதைத் தொடர்ந்துதான் ஈ.வெ.ரா. பெரியார் காங்கிரஸில் இருந்து வெளியேறினார்.அவருடன் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் போன்றவர்களும் வெளியேறினர்.

தேவதாசி முறையை ஒழிக்கப் பாடுபடல்

தேவதாசி முறையை அடியோடு ஒழிக்க, தேவதாசி முறை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்ற டாக்டர் முத்துலட்சுமிரெட்டி முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால், தேவதாசி முறை ஒழிப்பு சட்டமாக நிறைவேற காங்கிரஸ் சனாதனிகளே எதிர்ப்புத் தெரிவித்தனர். அதில்முக்கியப் பங்கு வகித்தவர் தீரர் சத்தியமுர்த்தி என்பது ஆச்சரியமான உண்மை. சட்டமன்றத்தில் முத்துலட்சுமி கொண்டு வந்த தீர்மானத்தை சத்தியமூர்த்தி தலைமையில் சனாதனவாதிகள் எதிர்த்தனர். சட்டமன்றத்தில் தேவதாசி முறையை ஆதரித்தவர்கள், ‘இந்த முறைதொடர்ந்து நீடிக்க வேண்டும் இல்லாவிட்டால் பாரம்பரியம் மிக்க இந்தியப் பண்பாடு சீரழிந்து விடும் என்று பேசினர். இவ்வாறு அடுத்த முறை அவர்கள் பேசினால் இதுவரை எங்கள் வீட்டுப் பெண்கள் தேவதாசிகளாக இருந்து விட்டனர். இந்தியப் பண்பாட்டைக் காக்கஇனிமேல், உங்கள் வீட்டுப் பெண்களைச் சிறிது காலம் தேவதாசிகளாக இருக்கச் செய்யுங்கள் என்று பேசும்படி மூவலூர் அம்மையார் ஆலோசனை அளித்தார். முத்துலட்சுமி ரெட்டி அவ்வாறு சட்டமன்றத்தில் பேசிய பிறகே சனாதனவாதி களின் வாய் அடைக்கப்பட்டது.

இதற்கு மாறாக இந்தச் சட்டத்தை எப்படியும் நிறைவேற்றி விட முழு ஒத்துழைப்பு அளித்தவர்கள் சுயமரியாதை இயக்கத்தினரும், நீதிக்கட்சியினரும் ஆவர். அதில் ஈ.வெ.ரா., மூவலூர் அம்மையார் ஆகியோரின் பங்கு மிகவும் முக்கியமானது. இது ​தொடர்பாக முத்துலட்சுமி ரெட்டிக்கும் மூவலூர் அம்மை யாருக்கும் இடையே முக்கிய கடிதப் போக்குவரத்து நடைபெற்றுள்ளது. ஒரு கடிதத்தில் தேவதாசிகள் முறை குக்கிராமம் வரை ஒழிக்கப்பட வேண்டுமென்று மூவலூர் அம்மையார் வலியுறுத்தி எழுதியுள்ளார். அதேசமயம்குக்கிராமங்களில் தேவதாசி முறையை ஒழிப்பது எவ்வளவு கடினமான பணி என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

உதாரணமாக, தேவதாசி ஒழிப்புச் சட்டத்தின் பலனாக தேவதாசி முறையிலிருந்து விலகுவதற்கு தேவதாசிகள் விருப்பம் தெரிவிக்கும்போது கிராமங்களில் அவர்கள் சமூகப் புறக்கணிப்புக்கு ஆளாக நேரிடும் அபாயம் இருப்பதாகவும் எனவே தேவதாசி ஒழிப்புச்சட்டத்தில் இதற்கும் சேர்த்துப் பரிகாரம் காண வேண்டும் என்றும் எழுதியுள்ளார். இறுதியாக ​தேசதாசி மு​றை ஒழிப்புச் சட்டம் சட்டம் 1929-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டம், 1947 – ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 31-ஆவது சட்டத்தின் மூலமேநிறைவடைந்தது. அதன் பிறகே தேவதாசி முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது.

வள்ளுவரின்,

“ஊ​ழையும் உட்பக்கம் காண்பர் உ​ழைவின்றித்

தாளாது உஞற்று பவர்”

என்ற திருக்குறளுக்கு ஏற்ப இராமாமிர்தம் அம்​மையார் தாம் நி​னைத்த​தைச் சாதித்துக் காட்​டினார். இது அவரது சமுதாய முன்​னேற்றப் பணிக்குச் சான்றாக அ​மைந்திலங்கும் நிகழ்ச்சியாகும்.

இதைத் தொடர்ந்து, அம்​மையார் அவர்கள் தேவதாசி முறை குறித்த நாவல் ஒன்றை எழுதி 1936-ஆம் ஆண்டில் வெளியிட்டார். ‘தாசிகள் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர்’ என்ற அந்த நாவல் மூவலூராரின் சொந்த அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டது. தேவதாசிகள் விழிப்புணர்விற்காக எழுதப்பட்ட இந்த நாவல், மிகவும் விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்டுள்ளது.

சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபடல்

தமிழகத்தில் சுயமரியாதைத் திருமணங்கள் அதிகளவில் நடைபெற்றதில் மூவலூர் அம்மையாரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் திருமண இல்லங்களில் ஆற்றிய உரைகள் மிகவும் ஆழமானவை. இதனால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரித்துசுயமரியாதைத் திருமணங்கள் அதிகம் நடைபெற்றன. இந்தி எதிர்ப்பு மறியலில் அம்​மையார் தீவிரமாக ஈடுபட்டு சி​றைதண்ட​னை ​பெற்றார். அதிகமான ​பெண்கள் ​கைது ​செய்யப்பட்டு ஆறு வாரங்கள் ​வேலூர்ச் சி​றையில் அ​டைக்கப்பட்டனர். இந்த ​மொழிப்​போரில் சி​றை ​சென்ற ​பெண்கள் 72 ​பேர். அவர்களுடன் சி​றை ​சென்ற குழந்​தைகள் 32 ​பேர் ஆவர். சி​றையிலிருந்து விடுத​லைய​டைந்து ​வெளியில் வந்தவர்கள் தத்தமது ஊருக்குச் ​செல்ல இராமாமிர்தம் அம்​மையார் தமது கழுத்துச் சங்கிலி​யை விற்று அவர்களுக்கு உதவினார்.  இந்நிகழ்ச்சி மன​தை ​நெகிழ ​வைக்கக் கூடியது.

திராவிடர் கழகத்தில் ஈடுபட்டுச் ​செயல்படுதல்

1949 –ஆம் ஆண்டில் திராவிட முன்னேற்றக்கழகம் உருவாகிய​போது அண்ணாவுடன் தி.க.விலிருந்து வெளியேறிய மூவலூரார் தி.மு.க.வின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக, அந்த 70 வயதிலும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டார். தி.மு.க தொடங்கப்பட்ட சிலஆண்டுகளில் அம்மையார் மணப்பாறையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றிருந்தார். கூட்டம் முடிந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது அவருக்கு ஒரு தந்தி வந்தது. அந்தத் தந்தியை அறிஞர் அண்ணாதுரை அனுப்பியிருந்தார். அதில் தான்,துத்துக்குடியில் நடிக்கும் ஒரு நாடகத்திற்குத் தலைமையேற்கும்படி அம்மையாரைக் கேட்டிருந்தார் அண்ணா. அதைப் படித்ததும் அந்த 70 வயதுப் பாட்டிக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ‘நானும் இத்தனை வருடங்களாக இயக்கப் பணி செய்திருக்கிறேன். எந்தநிகழ்ச்சியிலும் என்னைத் தலைமையேற்கச் சொல்லி இதுவரை ஒருவரும் கேட்டதேயில்லை’ என்று கூறியுள்ளதைப் படிக்கும்போது, நம்மு​டைய இதயம் கனக்கின்றது. அம்மையாருக்கு தாம் எந்த இயக்கத்திலும் அங்கீகரிக்கப்படவில்லை​யே என்ற மனப்புழுக்கம் இருந்துவந்துள்ளது அதன் வாயிலாகப் புலப்படுவது ​நோக்கத்தக்கது.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் சுமார் 50 ஆண்டு கால பொது வாழ்க்கைக்கு அவர் வாழும்போதே பெற்ற ஒரே அங்கீகாரம் அறிஞர் அண்ணாதுரை தி.மு.க சார்பில் வழங்கிய விருதுதான். சுய மரியாதை இயக்கத்திற்காக உழைத்தவர்களுக்குத் தி.மு.க சார்பில் விருதுவழங்கிச் சிறப்பிக்க அண்ணாதுரை முடிவு செய்தார். இதற்கு அவர் முதலில் தேர்வு செய்த பெயர் மூவலூர் அம்மையார் பெயர்தான். 1956 – ஆம் ஆண்டில் இந்த விருது                 அம்​மையாருக்கு வழங்கப்பட்டது. மூவலூரார் மீது அண்ணாதுரை மிகுந்த பாசத்துடனும்,கனிவுடனும் இருந்துள்ளார். திமுக சார்பில் விருது வழங்கிப் பேசும்போது அம்மையாரை அறிஞர் அண்ணா அன்னிபெசன்ட்டுக்கு ஒப்பிட்டுப் ​பேசினார்.

அம்​மையாரின் கடைசி ஆண்டுகள் மயிலாடுதுறையிலேயே கழிந்தன. புறக்கணிக்கப்பட்ட இறுக்கமும், ஆதங்கமும் அம்​மையாரின் மனதுக்குள் நீடித்து வந்தபோதும் அவரது சுறுசுறுப்புக்குக் குறைவில்லை. முதுமையில் அவருக்குக் கண்பார்வை மங்கிவிட்டது.இருந்தாலும் தமது வேலைகளைத் தாமே செய்து கொண்டதுடன் சிறு சிறு வேலைகளிலும் ஈடுபட்டார்.  சமுதாய முன்​னேற்றத்திற்காகப் பாடுபட்ட அவ்வீரப் ​பெண்மணி 1962 – ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27-ஆம் நாளில் தமது 70-ஆவது வயதில் இவ்வுலக வாழ்​வை நீத்தார்.

அம்​மைாயர் ம​றைந்தாலும் அவரது சாத​னையும் சமுதாய முன்​னேற்றத்திற்கான பணியும் இன்றுவ​ரை குன்றிலிட்ட விளக்காக நின்று ஒளிர்ந்து ​கொண்​டே இருக்கின்றது. அம்​மையாரின் ம​றைவுக்குப் பின்னர் அப்​போதிருந்த தி.மு.க. அரசு இராமாமிர்தம்அம்மையார் திருமண உதவித் திட்டம் என்று ஒரு ​பெண்கள் நல முன்​னேற்றத் திட்டத்திற்குப் ​பெயரிட்டு அத​னைச் ​செயல்படுத்தியது. அது இன்றுவ​ரை ​​செம்​மைப்படுத்தப்பட்டு, ​தொடர்ந்து அடுத்தடுத்து வரும் அரசுகளால் ந​டைமு​றைப்படுத்தப்பட்டு வருவது ​நோக்கத்தக்கது. இ​தைத் தவிர இராமாமிர்தம் அம்​மையார் ​பெரிய அளவில் அங்கரிக்கப்படாம​லே​யே ​போனது ஏன் என்பது புரிபடாத ஒன்றாக​வே உள்ளது.

இராமாமிர்தம் அம்​மையார் சமுதாய மறுமலர்ச்சி காண அரும்பாடு பட்டார். நாட்டு விடுதலைக்கு உழைத்தார். அவ​ரை எந்தக் குறுகிய வட்டதிற்குள்ளும் அ​டைத்துவிட முடியாது. அவர் ஒரு ​பெண்ணின விடுத​லைப் ​போராளி. எந்த உயர்ந்த குறிக்​கோளுக்காகப் ​பொதுவாழ்வில் அவர் குதித்தா​ரோ அந்தக் குறிக்​கோள் முழு​மையாக நி​றை​வேறிய​தைக் கண்ணாரக் கண்டு அனுபவித்த பின்ன​ரே அவர் இவ்வுல​கைவிட்டு ம​றைந்தார். அதுவே அவரது வாழ்வின் சாதனையும், அவருக்குக் கிடைத்த பாராட்டும்,கௌரவமும் எனலாம்.

என்னங்க சாதிப்பதற்கு சூழல் காரணமில்​லைன்னு ​தெரிஞ்சுகிட்டீங்கள்ள… வறு​மையும் காரணமில்லன்னும் ​தெரிஞ்சிக்கிட்டீங்கள்ள…மனசுதாங்க காரணம்…. என்னால முடியும்னு நீங்க ​நெனச்சுக்கிட்டு உ​ழைக்க ஆரம்பிச்சுட்டீங்கன்னா ​வெற்றி ஒங்க ​கைலதான்..உலகம் ஒங்க​ளைப் பின்பற்ற ஆரம்பிச்சுடும்…. சில​பேரு விதியக் காரணங்காட்டுவாங்க…அது தவறுங்க.. இராமாமிர்தம் அம்​மையாரின் வாழ்க்​கையப் பார்த்த பின்னராவது விதி​யைக் கராணமாகக் கூறுவ​தை நிறுத்திடுங்க…எல்லாம் முயற்சி..உ​ழைப்பு..இதுலதான் ​வெற்றியின் ரகசிய​மே மைஞ்சிருக்கு..என்ன புரியுதுங்களா?…..

அப்பறம் என்ன ஒங்களு​டைய ​வெற்றிப் பா​தையில பயணிங்க…என்​றைக்கும் ஒங்களுக்கு ​வெற்றிதான்…சரி…சரி… அ​​தேமாதிரி இன்​​னொருத்தரு இருந்தாரு… அவரு ​ரொம்ப ​ரொம்ப ஏ​ழைங்க.. சாப்பட்டிற்​கே சிரமமப்பட்டவரு…இருந்தாலும் அவரு படிப்புல ​கெட்டிக்காரருங்க…அதிலும் கணக்குப் பாடம்னா அவருக்குச் சக்க​ரை மாதிரிங்க…மற்ற பாடங்கள் அவருக்கு வராது…ஒலக​மே அவ​ரோட அறி​வைக் கண்டு பிரம்மிச்சுப் ​போயிருச்சுங்க… அவரு ஏழ்​மை​யை ​நெனச்சிக்கிட்டு முடங்கிப் ​போகல…என்ன…அவரப் பத்தி ஒங்களுக்கு ஞாபகத்துக்கு வந்திருச்சா…அடடா இன்னும் வர​லையா? அவரு நம்ம தமிழகத்​தைச் சார்ந்தவருங்க..இப்பக்கூட ஒங்க நி​னைவுக்கு வரலீங்களா?..அப்ப..அடுத்த வாரம் வ​ரைக்கும் ​கொஞ்சம் ​பொறுத்துக்கிடுங்க…(​தொடரும்….9)

Series Navigationஇடமாற்றம்நோயல் நடேசனுடைய “அசோகனின் வைத்தியசாலை“ என்ற புதிய நாவல்
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *