மோட்டூர்க்காரி!

This entry is part 1 of 24 in the series 9 ஜூன் 2013

முன் குறிப்பு: கீழ்கண்ட இந்த கதை முற்றிலும் என் கற்பனையே. எந்த குறிப்பிட்ட நபரையும் கருத்தில் கொண்டு எழுதவில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

மெல்ல மொட்டவிழும் மலர்களின் இனிமையான மணம். மென்மையாக பூபாளம் இசைக்கும் காதல் பறவைகளின் கீதம். மணி 5.15. அலார பென்குயினின் தலையில் செல்லமாகத் தட்டிவிட்டு, எழுந்திருக்கலாமா என்று யோசிக்கும்போதே வேண்டாம் என்று சொல்ல நொண்டிச் சாக்கைத் தேடுகிறது மனம். இன்று ஒரு நாள் போகாமல் விட்டால்தான் என்ன ஆகிவிடப் போகிறது? சரியான காரணமில்லாமல் ஒரு நாள் சோம்பலில் விட்டால்கூட உடம்பு அந்த சுகத்தைப் பழகிவிடுமோ..? இளங்காலைப் பொழுதின் ரம்மியமான சூழலில் சுகமான உலாவைக்காட்டிலுமா இந்தத் தூக்கம் பெரிதாகிவிடும். அன்பு கணவர் அருகண்மையில், ஆனந்தமான நித்திரையில் ஆழ்ந்திருக்கிறார். இரவு வெகுநேரம் , ஒரு சிறிய பந்திற்காக, 22 வல்லுநர்கள் ஆடி, ஓடி விளையாடும் அரிய காட்சியைக் காண தன் நித்திரையைக்கூடத் தியாகம் செய்த உத்தமர். சூதாட்டக் குழுவினரால் ஏற்கனவே யார் யார் எவ்வளவு ரன் அடிக்க வேண்டும், எப்போது அவுட் ஆக வேண்டும் என்று திட்டமிட்டு களமிறக்கியிருக்கும் ஆட்டக்காரர்களின் ஆட்டத்தைக்கூட போலியாக இரசித்து, கைதட்டி ஆரவாரம் செய்துகொண்டு உட்கார்ந்திருக்கும் மிகப்பெரிய மனசுக்காரர். இப்பொழுதுதான், சாக்லேட் உண்ணும் மழலையைப் போல புன்னகை தவழும் இதழ்களுடன், [ ஏதாவது கனவு கண்டு கொண்டிருப்பாரோ?] உறங்கிக் கொண்டிருக்கிறார். இவரை எழுப்பி வேலைக்காகாது என்று பூனையைப்போல மெதுவாக ஓசையின்றி வெளியே சென்று, அடுத்த அறை ஓய்வறையில் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு தயாராகிவிட்டேன். அடுத்த 45 நிமிட, வழமையான மூன்று கிலோமீட்டர் நடைப்பயணம்.

ஐந்து வயது குழந்தை உலகின் அத்தனை நாட்டுக் கொடிகளின் விவரங்களையும் கேட்டவுடன் சற்றும் யோசிக்காமல் டக்கென்று சொல்லுகிறது. ஒரு குழந்தை திருக்குறளில் எந்தக் குறளின் முதல் வார்த்தையைச் சொன்னாலும் அந்த முழுக் குறளுடன், அதிகாரம் மற்றும் எத்தனாவது குறள் என்ற விவரம் வரை பட்டென்று போட்டு உடைக்கிறது.. இப்படி பல குழந்தைகள் தங்கள் திறமைகளை காட்டிக் கொண்டிருந்தன ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில். நேற்று பார்த்த அந்த நிகழ்ச்சி இன்னும் கண்ணிற்குள். மனம் ஆச்சரியமாக இது எப்படி சாத்தியம் என்று யோசிக்கிறது. தோழி ஒருத்தி பேசிக்கொண்டிருக்கும்போது இதெல்லாம் முற்பிறவியின் தொடர்பு என்று கூறியது நினைவிற்கு வந்தது. எந்த ஆதாரமும் இல்லாத இந்த செய்தியை நம்ப முடியவில்லை. அவளும் எங்கெங்கோ நடந்த சம்பவங்களை கோடிட்டு காட்டிக் கொண்டிருந்தாள். இருந்தாலும் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் அறிவியல் ஆதாரங்களுக்கும் மீறி சில குழந்தைகள், ஞானப்பால் குடித்து திருவாய் மலர்ந்தருளிய பால்மனம் மாறா பாலகன் திருஞானசம்பந்தர் முதல் மூன்று வயதில் எண்ணற்கரிய சாதனைகள் செய்து காட்டும் இன்றைய குழந்தைகள் வரை அனைத்தையும் பார்க்கும்போது இது எங்கனம் சாத்தியம் என்று ஆச்சரியம் ஏற்பட்டாலும் அதன் பின்புலத்தில் ஏதோ ஒரு சக்தி இருப்பதை மட்டும் ஒப்புக்கொள்ளத்தானே வேண்டியிருக்கிறது. எண்ண ஓட்டங்கள் எங்கெங்கோ பயணிக்க ஆரம்பித்த வேளையில் , “ஏம்ப்பா.. இப்புடி சொன்னா கேக்கமாத்தீன்னு அதம் (அடம்) புடிக்கறே.. எங்கூரு மோட்டூருக்கு போலாம் வாப்பா.. ஏன் தெனம்.. தெனம் இப்புடி கஸ்டப்படறே..” மழலைக் குரலில் குழந்தை சத்தமாகச் சொல்வது காதில்விழ நிகழ்காலத்திற்கு வந்தேன். தனித்தனி மாளிகைகள் அழகாக கட்டப்பட்டு போர்டிகோ, தோட்டம் என சகல வசதிகளுடன் இருக்கிற வீடுகள் நிறைந்த குடியிருப்பு அது. அன்றாடம் இதைத்தாண்டித்தான் என்னுடைய வழக்கமான சோலையாய்க் குளிர்ந்திருக்கும் மைதானத்திற்குச் செல்ல முடியும். இந்த அழகிய மாட மாளிகைகளின் இடையில் இதற்கு சம்பந்தமே இல்லாமல் மிக சாதாரணமான, ஒரு சிறிய சமயலறை, சற்றே பெரிய பட்டாசாலை, அதையொட்டி ஒரு சின்ன தாழ்வாரம் என்று வரிசையாக மூன்று வீடுகள். கழிப்பறைகள் பொதுவானது. ஒரு வீட்டில் உரிமையாளர் குடியிருந்துகொண்டு மற்ற இரண்டையும் வாடகைக்கு விட்டிருக்கிறார். மாளிகைவாசிகள் இதை அப்புறப்படுத்த எத்தனையோ முயன்றும் அந்த வீட்டுக்காரர் மசியவில்லை. தன் தகப்பன் சம்பாதித்த சொத்து என்பதால் அதைவிட்டுத் தர மனம் இல்லையாம். எத்தனையோ சிரமங்களுக்கிடையே, அன்றாட கூலி வேலை செய்து கொண்டும் சொத்தை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். இவர் வீட்டிலிருந்துதான் இப்படி ஒரு குரல். அந்தக் குழந்தை பேசுவதைக் கேட்டு சிரித்துக் கொண்டிருந்த தந்தை , “போச்சுடா ஆரம்பிச்சுட்டியா தாயீ.. அடுத்தது எம் புருசன், மாமியார்னு ஆரம்பிச்சிடுவியே.. சந்திரா இங்க வாடி, இந்த மோட்டூர்க்காரியப் பாரு இன்னிக்கி காத்தாலயே ஆரம்பிச்சிப்போடிச்சி. கூட்டிட்டுப் போய் சமாதானப்படுத்து” அடுத்து நடப்பதை தெரிந்து கொள்வதற்குள் அந்த இடத்தைக் கடந்துவிட்டாலும், மனம் என்னமோ அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தது. அவ்வளவு சின்ன குழந்தை கணவன், மாமியார் என்று பேச என்ன தேவை இருக்கும், அது எப்படி சாத்தியம் என்று வீடு திரும்பும் வரை அதே நினைவுதான். பின்பு அன்றாட கடமைகளை நிறைவேற்றுவதில் இந்த விசயம் அமிழ்ந்துவிட்டது.

அடுத்த இரண்டு நாட்கள் அந்த இடத்தைக் கடக்கும் போதெல்லாம் அந்தக் குழந்தையை கண்கள் தேடியது. அந்த வீடு பூட்டியே இருந்ததால் அந்த விசயம் மறக்க ஆரம்பித்தது. மூன்றாவது நாள் காலை அதே வீட்டில் அந்தக் குழந்தையின் அழுகை சத்தம். எதற்கோ அடம் பிடித்து அழுது கொண்டிருந்தது. தாய் சமாதானம் செய்து கொண்டிருந்தாள். “விடிய, விடிய தூங்காமக்கூட இப்புடி அழுது ஆர்ப்பாட்டம் பண்றியே, உனக்கு நியாயமா இருக்கா கண்ணு இது” என்று என்னமோ சொல்லியும் அந்தக் குழந்தை அழுகையை நிறுத்திய பாடில்லை. என் கால்கள் தானாக ஒரு நிமிடம் தயங்கி நிற்க, உடன் வந்து கொண்டிருந்த என்னவரோ, புருவத்தை உயர்த்தி என்ன என்பது போல பார்த்தார். ஒன்றுமில்லை என தலையை ஆட்டியபடி நடையை எட்டிப்போட்டேன். இது போன்ற விசயங்களில் சற்றே ஆர்வமுடையவர் என்பதால், கடந்த சில நாட்களாக இவர் வராதபோது நடந்ததைக் கூறினேன். ஆர்வம் பொங்கக் கேட்டவர் ஒரு புன்சிரிப்புடன் விட்டுவிட்டார்.

அடுத்த நாள் அந்த இடத்தை நெருங்கும்போதே என்னைவிட ஆர்வமாக அவர் பார்க்க ஆரம்பித்துவிட்டார். அந்தக் குழந்தை எதையோச் சொல்லி அனத்திக் கொண்டிருந்தது. அப்பாவும், அம்மாவும் பக்கத்தில் உட்கார்ந்து எதையோ புலம்பிக் கொண்டிருந்தனர். உள்ளேயிருந்ததால் எதுவும் சரியாகக் கேட்கவில்லை. பேசாமல் அந்த இடத்தை விட்டுச் சென்று வாக்கிங் முடிந்து திரும்பும் போது வழக்கமாகச் செல்லும் அடுத்தத் தெருவை விடுத்து வந்த வழியே செல்லலாமே என்ற என் யோசனைக்குத் தடையேதும் சொல்லாமல் என்னவரும் வந்தார். அந்த வீட்டின் அருகில் வந்ததும், குழந்தையின் அழுகை சற்று ஓய்ந்திருந்தது. அப்பா வெளியில் உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த என்னவர், ‘அட நம்ம மேஸ்திரியா.. இதுதான் உங்க வீடா. இத்தனை நாள் இந்தப்பக்கம் போறேன், இது தெரியலியே. நல்லாயிருக்கியாப்பா’ என்று நலம் விசாரித்தார். நான் அவர் முகத்தைப் பார்க்க, அவரும் ‘இவருதாம்மா, நம்ம கடையைக் கட்டிய மேஸ்திரி’ என்றார். அதற்குள் குழந்தை மீண்டும் அழ ஆரம்பிக்க, ‘அண்ணே ஒரு நிமிசம் அண்ணே.. குழந்தை அழுவுறா’. என் பார்வையைப் புரிந்து கொண்ட என்னவரும் குழந்தையை அப்படியே தட்டிக்கொடுத்து தூங்க வைக்கும்போது.. அவர், ‘மேஸ்திரி அது வந்து…. ’என்று ஆரம்பிக்கும்போதே, அவர் ஆள்காட்டி விரலை வாயின்மீது வைத்து சத்தம் போட வேண்டாம் என்று சாடை செய்தார். குழந்தையை படுக்க வைத்துவிட்டு சத்தமில்லாமல் வெளியே வந்து ‘சொல்லுங்க சார்..’ என்றார்.

‘அது ஒன்னுமில்லப்பா.. குழந்தைக்கு என்ன பிரச்சனை. ஏன் தினமும் அழுதுட்டே இருக்கா. ஏதோ மோட்டூர்னு வேற அடிக்கடி காதுல விழுதே.. தப்பா நினைக்காதப்பா.. இவ உன் குழந்தைதானே..?’ என்றார்.

“என்ன சார், இப்படி கேட்டுட்டீங்க. எங்க குழந்தையேதான் சார். ஆசுபத்திரியில மாறக்கூட சான்ஸ் இல்ல.. ஏன்னா, சந்திராவுக்கு வீட்டிலதான் பிரசவம் ஆச்சு. அவ அம்மா வீட்டில பக்கத்துல குடியிருக்கிற நர்சம்மாதான் பிரசவம் பாத்துச்சு. நானும் அங்கதான் இருந்தேன். கோமதின்னு எங்க அம்மா பேரைத்தான் வச்சிருக்கேன். ஆனா இப்ப கொஞ்ச நாளா கோமதி பேச ஆரம்பிச்ச உடனே, என்னென்னமோ சம்பந்தமில்லாமல் பேசறாள். எங்க ஊரு மோட்டூரு, அங்க எங்களுக்கு பெரிய தோட்டம், பங்களா, கார், எல்லாம் இருக்கு, என்னை ஏன் இந்த சின்ன ஊட்டுல கொண்டாந்து வச்சிருக்கீங்க, என் புருசனையும், புள்ளையையும் பார்க்கணும்னு அழுது அடம் புடிக்கிறா. ஆரம்பத்துல குழந்தை ஏதோ உளறுதுன்னு நினைச்சு விட்டுட்டேன். போகப் போக இப்போல்லாம் ரொம்ப அடம் பிடிச்சி, சரியா சாப்பிடாம அழுதுகிட்டிருக்கறதுனால காயச்சல் வந்துடுது. அடிக்கடி உடம்பு நலங்கிப் போகுது. நேத்துகூட ஆஸ்பத்திரிக்குப் போய் ஊசி போட்டுக்கிட்டு வந்தோம். எதையோ பாத்து பயந்து கிடக்குதோன்னு தர்காவுல பாடமும் போட்டாந்தேன். இதோ பாருங்க நேத்து ராவெல்லாம் கண்ணே மூடல.. என்ன பன்றதுன்னே தெரியல.. மோட்டூர்ல, பரமசிவம் ஐயா ஊடுன்னா தெரியாதவங்களே இல்லேன்னு சொல்லுது. பெரிய பண்ணையார் ஊடு போல சொல்லுது. ஒரு நாளைக்கு 50 பேரு சாப்பிடுவாங்களாம். எங்களோட கொஞ்சமும் ஒட்டாம, எங்க ஊட்டையே கேவலமா பாக்குது. என்னத்தச் சொல்றது போங்க சார்” என்று சலித்துக் கொண்டவரிடம், என்ன பதில் சொல்வது என்று புரியாமல் மௌனமாக வந்து சேர்ந்தோம் இருவரும்.

வீட்டிற்கு வந்தும் அதே நினைவே என்னைச் சுற்றிக் கொண்டிருந்தது. வால்மீகி ராமாயணத்தில் ஸ்ரீராமர் மற்றும் சீதாப்பிராட்டியின் முற்பிறப்பின் ரகசியங்கள் பற்றி உத்தர காண்டத்தில் வருவதாக என் பாட்டி சொன்னது சட்டென்று நினைவிற்கு வந்தது. பிருகு முனிவர், விஷ்ணு பகவானை பூமியில் மானிடனாக அவதரிக்க வேண்டும் என்று சாபமிட்டாராம். அதனாலேயே அவர் ஸ்ரீராமனாக அவதரித்து, அற்புதங்கள் பல புரிந்து வாழ்ந்தாராம். இதே போல ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் என அனைவரின் முற்பிறவி பற்றிய சுவையான சம்பவங்களும் கேட்டிருந்த நினைவும் வந்தது. நம் இந்துமத தர்மப்படி, மனிதப் பிறவியில் ஒருவர் ஆற்றும் நல்வினை, தீவினைக்கேற்ப அடுத்த பிறவி அமைகிறது என்பதே. முக்தி அடையும் தத்துவமும் இதன் அடிப்படையிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. வெளிநாட்டு அறிஞர்களான, எமர்ஸன், ஷெல்லி, மாஜினி, தோரோ, ஹென்றி ஃபோர்டு பிளேட்டோ, பித்த கோரஸ், லியனார்டோ டா வின்ஸி, பெஞ்சமின் ஃப்ராங்க்ளின், , சி.ஜே.ஜங், போன்றவர்களும் இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கையான மறுபிறப்பில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். அன்னி பெஸண்ட் அம்மையாரின் ‘ரீ இன்கார்னேஷன்’ என்ற புத்தகமும் இது பற்றிய தீவிர ஆய்வுகளுடனான தத்துவார்த்த விளக்கம் அளிப்பதுதான். சமீபத்தில் வர்ஜீனீயா பல்கலைகழகத்தின், ஐயான் ஸ்டீவன்சன் மற்றும் எட்கர் கேஸ் போன்ற விஞ்ஞானிகளின் ஆய்வும் இதனை உறுதிபடுத்துகிறது என்ற தகவல்களையும் இணையத்தின் மூலம் சேகரித்து வைத்துக்கொண்டு யோசித்துக் கொண்டிருந்ததில் பொழுது போனதே தெரியவில்லை. பரபரவென மதிய சமையலுக்குத் தயார் செய்து கொண்டிருந்தபோதுதான், அழைப்பு மணி அடித்தது. இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று கதவைத் திறந்த போது, கோவையிலிருந்து என் ஒன்றுவிட்ட சகோதரர் வந்திருந்தார்.

மதிய சாப்பாடு முடிந்து பேசிக்கொண்டிருக்கும்போது, மோட்டூர் பக்கம் ஒரு பெரிய தோட்டம் விலைக்கு வந்திருப்பதாகவும், அதை வாங்கி அங்கே பண்ணை வீடு கட்டி தன்னுடைய ஓய்வு காலத்தைக் கழிப்பதற்கான ஏற்பாட்டை செய்யப் போவதாகச் சொன்னார். அதோடு அந்த இடத்தைப் பார்த்து முடிவு செய்வதற்கு என் கணவரையும் உடன் அழைத்துச் செல்வதற்காக வந்திருந்தார். மோட்டூர் என்ற பெயரைக் கேட்டவுடனே, நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அர்த்தத்துடன் பார்த்துக்கொண்டோம். எங்கே என் கணவர் ஏதாவது மறுப்பு சொல்லிவிடப் போகிறாரோ என்று அவசரமாக, நானே ‘ஆகா தாராளமாகப் போகலாமே, நானும் வருகிறேன் அண்ணா’ என்று கூறிவிட்டேன். எப்படியாவது மோட்டூர் சென்று அந்தக் குழந்தை கோமதி சொன்னது அனைத்தும் உண்மையா என்று பார்த்து வர வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த எனக்கு இவ்வளவு சீக்கிரம் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. அடுத்து அவர் சொன்ன குறிப்பிட்ட அந்த நாளுக்கு இன்னும் 5 நாட்கள் இருக்கிறதே என்று மலைப்பாக இருந்தது. வாக்கிங் போகும் போதெல்லாம் இன்னும் அந்தக் குழந்தையின் புலம்பல் அவ்வப்போது கேட்கத்தான் செய்கிறது.

மோட்டூர் செல்லும் நேரம் நெருங்க, நெருங்க அப்படி ஒரு ஆர்வம், படபடப்பு. உண்மையாலுமே அப்படி ஒரு குடும்பம் அங்கு இருக்குமோ. குழந்தை கோமதி சொன்னதுபோல பரமசிவம் என்ற ஒரு நிலக்கிழார் இருப்பாரோ.. தேடிப்போவது நகைச்சுவைக்குரிய விசயமாகத் தெரிகிறதோ.. ஒரு குழந்தையின் பேச்சை நம்பிக்கொண்டு இப்படி தேடி வந்திருப்பது சரியோ என்ற குழப்பமும் காரணம். என் அம்மா அடிக்கடி என் மகளைப் பார்த்து, போன ஜென்மத்தில் இவ பெரிய சமஸ்தானத்தின் வாரிசாக இருந்திருப்பாள். பாரு அவ, நடை உடை பாவனையெல்லாம் எப்படி இருக்குன்னு. என்று சொல்வதுகூட நினைவிற்கு வந்தது. வழியில் காரில் செல்லும்போது மெல்ல நான் உடன்வரும் காரணத்தைச் சொன்னபோது ஆச்சரியப்பட்ட என் சகோதரர் உடனே இந்த விசயத்தில் எங்களைவிட அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்துவிட்டார்.

மோட்டூர், திருப்பத்தூர் வட்டம், பசுமையான வயல்வெளிகள் நிறைந்த பூமி. கள்ளங்கபடமற்ற வெள்ளந்தியான மனிதர்கள் வாழும் பூமி என்பதால் இயற்கை அன்னை மனம் மகிழ்ந்து செல்வச் செழிப்புடன் வைத்திருக்கிறாளோ என்று எண்ணத் தோன்றும் அளவிற்கு ஒரு காலத்தில் அத்துனை பசுமையாக இருந்த கிராமம். ஜமீன் எல்லாம் மறைந்து போனாலும் பண்ணையார்களாக இன்னும் அதே கௌரவத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பங்களும் இருக்கின்றன. ஊரின் எல்லையைத் தாண்டியவுடனே அங்கு ஏதோ திருவிழா நடப்பது போன்று இருந்தது. ஆங்காங்கே தண்ணீர் பந்தலும், குழந்தைகளுக்கு பால் வழங்குதலும், அன்னதானமும் நடந்து கொண்டிருந்தது. என்னவாக இருக்கும் என்று யோசிக்கும்போதே, “அன்னை சரஸ்வதி அம்மையாரின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம்” என்று பெரிய பதாகைகள் அலங்காரமாக நின்றிருந்தன. அதில் இருந்த பெண்மணி லட்சுமி கடாட்சமாக அன்னையே உருவாக அமர்ந்திருந்தார். கையெடுத்து கும்பிட வைக்கும் தோற்றம். செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பது போல இந்த அம்மாவின் நினைவு நாளில் கூட இத்தனை தான தர்மங்கள் செய்கிறார்களே, இந்த அம்மா உயிருடன் இருந்த போது எத்தனைப் பேருக்கு எவ்வளவு படியளந்திருக்குமோ என்று வாயார சொல்லிக் கொண்டே வந்தேன். யாரிடமாவது பரமசிவம் என்பவரின் வீடு எங்கிருக்கிறது என்று கேட்டுப் பார்க்கலாமா என்று தோன்றியது. தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் மொட்டையாக இப்படி போய் கேட்டால் சிரிப்பார்கள் என்றார் என்னவர்.

ஆனால் நடந்தது வேறு. நான் காரை விட்டு இறங்கி சுற்றுமுற்றும் பார்த்து யாரிடம் கேட்கலாம் என்று யோசிக்கும் போதே, ஒரு பெரியவர் அருகில் வந்து ‘என்னம்மா யாரைப் பார்க்கணும்’ என்று கேட்டார். நானும் சற்று யோசனையுடனே, ‘வந்து.. பரமசிவம்.. ம்ம்.. பரமசிவம் ஐயா வீட்டிற்குப் போகணும்’ என்றேன். உடனே அவர்,

‘ஓ, பரமசிவம் ஐயா வீடுதானுங்களே, அதோ அந்த முக்கு திரும்பினா, பிரம்மாண்டமா நிக்குதே, அந்த பங்களாதாங்க. இதோ இந்த தண்ணீர்ப் பந்தல்ல எல்லோருக்கும் வேட்டி, சேலை கொடுத்துக்கிட்டு இருக்காரே அவர்தான் ஐயாவோட சீமந்தப் புத்திரன். தங்கமான புள்ளை. அம்மா இறந்த நாளை நினைப்பு வச்சு, இந்த அஞ்சு வருசமா எழை பாழைங்களுக்கு அத்தனை உதவி செய்யுற மகராசன்’ என்று வாழ்த்தியபடி அந்தப்பக்கம் கைகாட்டினார்.

அங்கு, 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன், அன்பே உருவாக, தன் தாயைப் போலவே முக அமைப்புடன், வெள்ளை வேட்டியும், சட்டையும் அணிந்து சிரித்த முகத்துடன் வரிசையில் நிற்பவர்களுக்கு வேட்டி, சேலை வழங்கிக் கொண்டிருந்தான். மெல்ல அவனை நெருங்கி, எல்லாவற்றையும் கொடுத்து முடிக்கும்வரை காத்திருந்து, அருகில் சென்று, ‘தம்பி, என்ன விசேசம்’ என்று ஒன்றும் தெரியாதது போல கேட்டோம். அவனும், ஐந்து வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்ட தன் தாயின் நினைவு நாளில் தன்னால் ஆன நற்காரியங்களை செய்து கொண்டிருப்பதாகக் கூறினான். அதற்கு மேல் என்ன பேசுவது என்று புரியாமல் சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு ஒன்றுமே பேசாமல் வந்து காரில் ஏறிக்கொண்டேன். என் சகோதரனும், கணவரும், இத்துனை ஆவலாக விசாரிக்க வந்துவிட்டு இப்படி எதுவுமே பேசாமல் திரும்பி வந்ததை ஆச்சரியமாகப் பார்த்து, ‘ஏன் ஒன்றுமே பேசாமல் வந்துவிட்டாய்?’ என்று கேட்டனர். என்ன சொல்ல முடியும், எப்படி சொல்ல முடியும். உன் தாய் நான்கு வயது குழந்தையாக ஒரு கட்டிடத் தொழிலாளி வீட்டில் வந்து பிறந்திருக்கிறாள் என்றா சொல்ல முடியும்? சொன்னால் ஒரு வேளை அந்த இளைஞனோ அல்லது அவனுடைய அப்பாவோ அந்தக் குழந்தையின் பேச்சைக் கேட்ட பின்பு நம்பினாலும் நம்பலாம். ஆனால் அதனால் என்ன பயன். இயற்கையை மீறி எந்த ஒரு காரியத்தையும் தன்னிச்சையாகச் செய்யும்போது அது பலவிதமான குழப்பத்தில்தானே வந்து முடியும். அப்படி அந்த விசயம் தெரிய வேண்டும் என்று விதித்திருந்தால் அது தானாக ஒரு நாள் வெளிவரும். அதுவரை நாமே தேவையில்லாமல் ஒரு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாமே என்று சொன்னபோது அதுதான் சரியான முடிவு என்பதை அண்ணனும், கணவரும் ஏற்றுக் கொண்டதால் போன காரியத்தை முடித்துவிட்டு வீடு வந்து சேரும் வரை எல்லோரும் மௌனமாக மனதிற்குள் ஏதேதோ சிந்தனையுடனே வந்து சேர்ந்தோம்.

அடுத்த நாள் வாக்கிங் போகும்போது அந்தக் குழந்தையைப் பார்த்து பேச வேண்டும் என்று உள்ளம் துடித்தது. ஆனால் தொடர்ந்த கன மழையால் 4 நாட்களாக வாக்கிங் செல்ல முடியவில்லை அடுத்தொரு நாளில் போய் பார்க்கலாம் என்று ஆவலாக போன சமயம் அந்த வீடு பூட்டியிருந்தது. அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாதலால் விசாரிக்க முடியவில்லை. அதற்கு அடுத்த நாள் போனபோது பக்கத்து வீட்டில் இருந்த ஒரு பெண்ணிடம் மேஸ்திரி பற்றி விசாரித்தோம், அவர்கள் காண்ட்ரேக்டில் வடநாட்டு வேலைக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டதாகக் கூறினாள் அந்தப் பெண்.

ஏனோ மனதிற்கு அந்த பதில் நிம்மதியாக இருந்தது. எங்கே அந்தக் குழந்தையின் அழுகையைப் பார்த்து பரிதாபப்பட்டு எதையாவது உளறி விடுவோமோ என்ற அச்சத்தில் இருந்த எனக்கு இதுதான் தெய்வ சங்கல்பம் என்று புரிந்தது. ஆனால் ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிந்தது. அத்துனைப் பெரிய பரோபகாரியான பெண் இந்த ஏழை கூலித் தொழிலாளி வீட்டில் வந்து பிறந்ததற்கு ஏதோ உறுதியான காரணம் இருக்கும். என்றாவது ஒரு நாள் அது வெடித்து வெளியே வரும். உலகமே நிமிர்ந்து பார்க்கும் வகையில் அந்தப் பெண் ஏதோ சாதனை செய்யப் போகிறாள். ஆயிற்று இது நடந்து பத்து ஆண்டுகள். இன்னும் பசுமையான நினைவுகளுடன் மோட்டூர்க்காரி என்று செல்லமாக அழைக்கப்பட்ட அந்தப் பெண் கோமதி பற்றிய செய்தி வரும் என்று வானொலி, தொலைக்காட்சி என பார்க்கும் பொழுதெல்லாம் உள்மனம் எதிர்பார்த்து காத்திருக்கிறது. என்றாவது அது நிகழும்போது கட்டாயம் உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்!

Series Navigation“இவரைத் தெரிந்து கொள்ளுங்கள்” – திரு கர்ணன்
author

பவள சங்கரி

Similar Posts

Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    மோட்டூர்க்காரி ஒரு வித்தியாசமான , நம்பவும் முடியாதக் கதை. பவள சங்கரி கதையின் முன்னுரையில் கூறியுள்ளதுபோல் இது முழுக்க முழுக்க கற்பனை என்றால் பரவாயில்லை. அதே வேளையில் இதுபோல் உண்மையில் எங்காவது நடந்துள்ளது என்று சொன்னால் அது ஆராயப்பட வேண்டிய செய்தியாகும்.

    முன்ஜென்மம், பின்ஜென்மம் பற்றி நான் உண்மையிலேயே நம்புவதில்லை என்றாலும் சில கதைகள் எழுத இவற்றைப் பயன் படுத்தியுள்ளேன்.அப்போது இவை பற்றி நானும் நிறைய ஆராய்ந்துள்ளேன். அப்போது உலகின் பல பாகங்களில் இதுபோன்று முற்பிறவி பற்றி ஒருசிலர் சரியாகச் சொல்லியுள்ளது பற்றி படித்து வியந்துள்ளேன். அவர்களில் அதிகமானோர் இந்தியாவில்தான் இருந்தனர்.

    எது எப்படியோ. ஒரு உண்மை சம்பவம்போன்றே மிகுந்த விறுவிறுப்புடன் கதை செல்கிறது. இந்த பெண் பற்றிய செய்தி வருமா என்று நானும் உங்களுடன் ஆவலுடன் காத்துள்ளேன் …வாழ்த்துகள் …அன்புடன் டாக்டர் ஜி.ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *