புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 11

This entry is part 13 of 23 in the series 16 ஜூன் 2013

( முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை)

மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், தமிழாய்வுத்துறை,

மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

11. சிந்த​னையால் உலக மக்க​ளை எழுச்சி​கொள்ளச் ​செய்த ஏ​ழை

“என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

என்று மடியும் எங்கள் அடி​மையின் ​மோகம்”

அட​டே என்னங்க பாட்​டெல்லாம் பிரமாதமா இருக்கு. ​ரொம்​ரொம்ப மகிழ்ச்சியா இருக்கீங்க ​போலருக்கு. என்ன ஏதாவது சிறப்புச் ​செய்தி இருக்கா? இல்​லையா? அப்பறம்….ஓ…ஓ…ஓ….யாருன்னு கண்டுபிடிச்சிட்டீங்களா? இலக்கிய ​மே​தை ரூ​ஸோவா..பரவாயில்​லை​யே…ஒங்களுக்கு எனது இதயம் நி​றைந்த பாராட்டுக்கள். சுதந்திரம்னு ​பேச்​சை எடுத்தவுட​னே​யே நம் உள்ளத்துக்குள்ள எத்த​னை ​பெரிய மகிழ்ச்சி ஆற்றுப் பிரவாகமாக ​பொங்கி ஓடுது….இப்ப​வே இப்படின்னா..அந்தக் காலத்துல எப்படி இருந்திருக்கும்னு ​நெனச்சுப் பாருங்க..

இ​தேமாதிரிதான் ‘சுதந்திரம்’ ‘சமத்துவம்’, ‘சகோதரத்துவம்’ என்ற தாரக மந்திரங்களை ஒரு எழுத்தாளன் தன் படைப்புகளின் வழியாக உலக மக்களுக்கு விட்டுச்சென்றார். இந்தச் சிந்தனை மக்களை எழுச்சி கொள்ளச் செய்ததுடன், ஒரு புரட்சிக்கும் வித்திட்டது. அதுதான் பிரெஞ்சுப் புரட்சி!

அவர் வாழும்போது வறுமையோடு போராடினார்; இருந்தாலும் தன்​னோட எழுத்துக்களால வாழ்நாளின் இறுதிக் காலத்தில் ஓரளவு பேசப்பட்டார்; அவர் மறைந்த போது சராசரி மனிதனாகக் கருதப்பட்டு, சாதாரண இடுகாட்டில் புதைக்கப்பட்டார்.

சிலர் இருக்கும்​போது ​​பெரும்புகழ் ​பெறுவாங்க. சிலர் இறக்கும்​போது ​பெரும்புகழ் ​பெறுவாங்க. சிலர் இறந்து பல ஆண்டுகள் கழிந்த பின்னர்தான் புகழ​டைவாங்க..அதுல ரூ​ஸோ இறுதியா உள்ளவரு. அவர் மறைந்து பதினாறு ஆண்டுகள் ​சென்ற பின்னர்தான் அவருக்கு ஒரு புதிய அங்கீகாரம் கிடைத்தது. புதைக்கப்பட்ட அவரது சடலம் தோண்டி எடுக்கப்பட்டு, மீண்டும் அலங்கரிக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான மக்கள் அணிவகுக்க, பிரபுக்களை மட்டுமே புதைக்கப்படும் மயானத்தில் அவர் சடலம் புதைக்கப்பட்டது. உலக எழுத்தாளர்களில் இவருக்கு மட்டுமே இந்தச் சிறப்புக் கிடைத்தது. ​வேறு யாருக்கு​மே இச்சிறப்புக் கி​டைக்கவில்​லை.

சுவிட்சர்லாந்தில் உள்ள ஜினிவா நகரில் ஐசக் ரூஸோவிற்கும், சூசான் பெர்னாட் என்ற தாய்க்கும் மகனாக 1712-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரூ​ஸோபிறந்தார். ரூஸோவின் முழுப்பெயர் ‘ஜூன் ஜாக்ஸ் ரூஸோ’ என்பதாகும்.

தா​யை இழத்தல்

ரூ​ஸோவின் துன்பம் அவர் பிறந்ததிலிருந்து ​தொடங்கிவிட்டது. உலகி​லே​யே உன்னதமான உறவான தா​யை ரூஸோ பிறந்த சில மணி நேரத்தி​லேய பறி​கொடுத்தார். தாயை இழந்த ரூஸோ, தந்தையின் கண்காணிப்பில் வளர்ந்தார். ​தாயின் வாயிலாகக் கிட்டுகின்ற உன்னதமான அன்​பை ரூ​ஸோ இழந்தார். இது ​கொடு​மையிலும் கொடு​மை. இத​னை என்ன​வென்று ​சொல்வது. ஆனால் ரூ​ஸோவின் தந்​தையார் தன் மக​னைக் கண்ணுக்குள் ​வைத்துக் காப்பாற்றினார். வறு​மையிலும் தன்மக​னை அறிவுள்ளவனாக ஆக்குவதற்கு உரிய அ​னைத்​தையும் ​செய்தார்.

ரூஸோவின் அறிவுப் பசிக்குத் தந்தை வேண்டிய உதவிகளைச் செய்தார். அவர் கடிகாரம் பழுது பார்க்கும் ஒரு தொழிலாளியாக இருந்தும் மகனின் வளர்ச்சிக்காக மிகவும் உழைத்தார். வறு​மை​யைப்பற்றி சிறிதும் நி​னையாது தனது மகனின் வளர்ச்சியில் கவனம் ​செலுத்தினார்.
தந்​தை நாட்​டைவிட்டு ஓடுதல்

இந்நி​லையில் இங்கிலாந்து படைத்தளபதி ஒருவருக்கும், ரூஸோவின் தந்தைக்கும் சிறுதகராறு ஏற்பட்டது. அதனால் தான் சிறை செல்ல வேண்டியதிருக்கும் என்பதை அறிந்த ரூஸோவின் தந்தை நாட்டை விட்டு ஓடினார். தந்​தை​யை அ​டைக்கலமாகக் ​கொண்டு வாழ்ந்த ரூ​ஸோவிற்குக் ​கொடு​மையும் வறு​மையும் தளபதியின் உருவத்தில் வந்ததுதான் விதியின் ​கொடு​மை என்பது.
தாய் மரணம்.. தந்தையும் நாட்டை விட்டு ஓடுதல்….இவற்​றை​யெல்லாம் ​பொறுத்துக் ​கொண்டு வாழ்ந்தார் ரூ​ஸோ. அவருக்கு இருந்த ஒ​ரே து​ணை அவரது சிற்றன்​னை​யே ஆவார். இறுதியில் சிற்றன்னையின் உதவியால் ரூஸோ வளர்ந்தார். வீட்டிலிருந்தபடியே ஓவியம் வரைவதற்கும், கணிதத்தில் தேர்ச்சி பெறுவதற்கும் சிற்றன்னை ரூ​ஸோவிற்கு உதவி செய்தாள்.

படிப்பும் பணியும்

லாம் பெர்சியா என்ற பாதிரியார் ரூஸோவின் அறிவு வளர்ச்சிக்குப் பெரிதும் உதவினார். அதிலும் குறிப்பாக ரூ​ஸோவின் லத்தீன் அறிவு வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டுக் கற்றுக் ​கொடுத்தார். லத்தீன் மொழி இதிகாசங்கள், உலக இலக்கியம், வரலாற்றுச் செய்திகள், கதைகள், காவியங்கள், கிரேக்க – ரோமானிய வீரர்களின் வீரச் செயல்கள் ஆகியவற்றை எல்லாம் ரூஸோ கற்றுத் தேர பாதிரியார் பெர்சியா வழிகாட்டினார். ரூ​ஸோவின் படிப்பின் தாகம் கூடிக்​கொண்​டே ​போனது. கு​றையவில்​லை.

இருப்பினும் அவ​ரை வறு​மை பிடர்பிடித்து உந்த தனது பதினான்காம் வயதில் ரூஸோ, மாஸாரன் என்ற வழக்குரைஞரிடம் உதவியாளராகச் சேர்ந்தார். நீதிமன்றத் தீர்ப்புகளை நகல் எடுப்பது ரூஸோவின் பணி. ஆனால் மாஸாரானின் அடிமைப் போக்கும், ரூஸோவை நடத்தும் விதமும் ரூ​ஸோவிற்குப் பிடிக்கவில்லை. அதனால் அந்த வேலையைத் தூக்கி எறிந்துவிட்டு ரூஸோ வெளியேறினார். சுயசிந்த​னை​யோடு வேண்டும் என்ற ரூஸோவை, வறுமை மீண்டும் ஒரு வேலையைத் தேட வைத்தது.

டூகோமான் என்ற சிற்பியிடம் ரூஸோ வேலைக்குச் சேர்ந்தார். இங்கும் ரூஸோவை மனிதனாக நடத்த டூகோமான் விரும்பவில்லை. அடிமையைப் போன்று, இட்ட பணியைச் செய்யச் சொல்வதும், அதில் ஏதாவதொரு தவறு நடந்தால் ரூ​ஸோ​வைக் காட்டுமிராண்டித்தனமாகத் தண்டிப்பதார் சிற்பி. இந்த வேலையிலும் ரூஸோவுக்கு வெறுப்பே ஏற்பட்டது. ரூ​ஸோவிற்குத் தன்மானம் இடங்​கொடுக்கவில்​லை. ‘ஒருவனைச் சார்ந்து வாழ்வதை விடச் சாவதே மேல்’ என்ற கொள்கை கொண்ட ரூஸோ, இந்த வேலையில் இருந்தும் வெளியேறினார்.

வறு​மையின் ​கொடூரம்

மீண்டும் ரூஸோவை யாரும் வர​வேற்காத நி​லையில் வறுமை மட்டுமே அவ​ரை வரவேற்றது…. அனாதையாக அலைந்தார்… அடுத்த வேளைச் சோற்றுக்கு வழியின்றி பசியுடன் வீதியிலேயே கிடந்தார்… அப்போது பான்தெவா என்ற பாதிரியார் ரூஸோவிற்கு அடைக்கலம் கொடுத்தார். அந்தப் பாதிரியாரின் அன்பில் தன் மன​தைப் பறி​கொடுத்த ரூ​ஸோ ரோமன் கத்தோலிக்க மதத்தில் சேர்ந்தார். மதம் மாறிய பின்பும் ரூஸோவின் வாழ்க்கையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.!

ரூஸோவின் நிலைமையை அறிந்த மேடம் பேசில் என்ற் பணக்காரப் பெண்மணி, அவருக்கு வேலை கொடுத்தார். மேடம் பேசிலின் கணவன் வெளிநாடு சென்றிருந்ததால் குமாஸ்தா ஒருவனின் பாதுகாப்பில் அவள் இருந்தாள். ரூஸோவின் செயல்கள் பேசிலை அவர்மீது பரிவு காட்டச் செய்தது.

மேடம் பேசிலின் கணவன் வந்ததும், அவரிடம் ரூஸோவிற்கும் மேடம் பேசிலுக்கும் தகாத தொடர்பு இருப்பதாகக் அங்கு ​வே​லைபார்த்த குமாஸ்தா கதை கட்டினான். அதை மெய்யென நம்பிய மேடம் பேசிலின் கணவன், ரூஸோவை வேலையில் இருந்து நீங்கினான்… விதியா​ரை விட்டு ​வைத்தது. மீண்டும் ரூஸோவை வறுமை சொந்தம் கொண்டாடியது.

புத்தகத்தின் ​தோழன் புது​மை விரும்பி

ரூ​ஸோவிற்கு வறு​மை துயர் ​கொடுத்த​போதும் அவர் புத்தகங்கள் படிப்ப​தை நிறுத்தவில்​லை. அவர் எப்போதும் ஏதாவது ஒரு நூலை படித்துக் கொண்டிருந்தார். அது​வே அவருடைய பணியாயிற்று. சாலை, சோலை, கடற்கரை, நூலகம், பேருந்து நிலையம், கழிப்பறை போன்ற இடங்களிலெல்லாம் ரூஸோ ஏதாவது ஒரு புத்தகத்துடனேயே இருந்தார். அவர் மனிதர்களோடு பேசியதைவிட புத்தகங்களோடு பேசியதுதான் அதிகம்.

புதுமையா​னவைகளைப் படிக்க வேண்டும்; புதுமைகளைப் படைக்க வேண்டும்; புதியவைகளைச் சிந்திக்க வேண்டும்; புதிய புதிய செய்திகளை மக்களுக்குச் சொல்ல வேண்டும். அவற்றுக்கெல்லாம் நூல்களே ஆசான் என்ப​தை ரூ​ஸோ நன்கு உணர்ந்திருந்தார். புத்தகத்திலிருந்து கற்றுக்கொண்டு, நாம் மக்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்ப​தே ரூஸோவின் சிந்தனையை ஆக்ரமித்திருந்தன. அதனால்தான் எப்போதும் புத்தகமும் கையுமாக ரூஸோ அலைந்தார்.

ஒருமுறை ரூஸோ ஒரு புத்தகத்தை ஒரு புத்தகக் கடையில் பார்த்துவிட்டார். அந்த நூலை வாங்க வேண்டும்; வாங்கிப் படிக்க வேண்டும்; அதிலுள்ள செய்திகளை மனதில் பதிந்து கொள்ள வேண்டும். அது பிற்காலத்தில் தமக்குக் கை கொடுக்கும் என்று ரூஸோ எண்ணினார். ஆனால் பணம்….பணத்திற்கு எங்கு ​போவார்?

அவரால் புத்தகம் குறித்த தகவல்க​ளை எல்லாம் எண்ணிப் பார்க்கத்தான் முடிந்தது. வாங்குவதற்குக் கையில் பணமில்லை. யோசித்தார். சிறிது நேரத்தில் ரூஸோ விரும்பிய புத்தகம் அவர் கையில்! இந்த அதிசயம் எப்படி நடந்தது? தனது உடைகளை விற்று, அதன் மூலம் கி​டைத்த பணத்​தைக் ​​கொண்டு தாம் விரும்பிய புத்தகத்தை ரூஸோ வாங்கிவிட்டார். ரூ​ஸோவிற்கு இனி இரண்டு நாட்களுக்கு சாப்பாடு தேவையில்லாதிருந்தது.

சாப்பாட்டிற்கு ரூஸோ கையில் காசில்லை என்றாலும், இரவு பகலாக அந்த நூலை படிப்பதிலேயே ரூஸோவின் கவனம் சென்றது. அவருக்கு சாப்பாட்டைப் பற்றிய சிந்தனை வரவில்லை. வறுமை ரூஸோவை வாட்டியது. என்னதான் படிப்பின் மீது ஆர்வம் இருந்தாலும் உணவின்றி எத்தனை நாட்களுக்கு பட்டினி கிடப்பது? அதனால் நாட்டை விட்டு வெளியேறினார். இத்தாலி நாட்டிற்குச் சென்றால் தமது வாழ்க்கையில் ஒரு மாற்றம் வரும் எண்ணத்தோடு இத்தாலி சென்றார். இங்கும் அவரை வறுமை துரத்தி வந்து வாட்டியது.

பாதிரியாரின் உதவி

இந்த நி​லையில் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த டிபான்ட் லென் என்ற பாதிரியாரை ரூஸோ சந்தித்தார். ரூஸோ புராடெஸ்டன்ட் பிரிவைச் சேர்ந்தவர். ரூஸோவின் அறிவாற்றலையும், திறமையையும் கண்ட பாதிரியார், மதப் பிரிவுகளைக் கடந்து ரூஸோவை நேசிக்கத் தொடங்கினார். இந்தப்பாதிரியாரின் தொடர்பு ரூஸோவுக்கு நம்பிக்கை கொடுத்தது. பாதிரியார் ரூஸோவை லாரன்ஸ் என்ற பணக்காரப் பெண்ணுக்கு அறிமுகப்படுத்தினார்.

லாரன்ஸ், ரூஸோவின் திறமையையும், பல துறையில் அவருக்கிருந்த ஆர்வத்தையும் கண்டு வியந்தார். ரூஸோ கல்வி கற்க வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் லாரன்ஸே ஏற்றாள். ரூஸோவின் ஆற்றலுக்கும், எதிர்கால வெற்றிகளுக்கும் சிறந்த இடம் பாரீஸ்தான் என்று லாரன்ஸ் முடிவு செய்து, ரூஸோவை அங்கு அனுப்பி வைத்தாள்.

ரூஸோவின் பிற்கால வெற்றிகளுக்கெல்லாம், இந்த லாரன்ஸ்தான் அடித்தளமிட்டாள். இவள்மட்டும் ரூஸோவிற்கு கைகொடுக்கவில்லை என்றால், இன்னும் சில ஆண்டுகாலம் ரூஸோ வறுமையோடு போராட வேண்டியது ஏற்பட்டிருக்கும். ஒரு கதவு மூடப்பட்டாலும் சிறு சாளரத்​தையாவது இ​றைவன் திறந்து ​வைத்துவிடுகின்றான் என்பது எவ்வளவு சரியானது. இது ரூ​ஸோவின் வாழ்வில் முற்றிலும் உண்​மையாக அ​மைந்திருந்தது ​நோக்கத்தக்கது.

திருமண வாழ்க்​கை

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னரும் ஒரு பெண் இருக்கிறாள் என்பது ரூஸோவின் வாழ்க்கையிலும் உண்மையானது. 1743-ஆம் ஆண்டில் திரேஸா என்ற பெண்ணை ரூஸோ மணந்தார். ரூ​ஸோ மூன்று குழந்தைகளுக்குத் தந்தையானார். ஆனாலும் வறுமை ரூஸோவின் குடும்பத்தை வதைத்தது. அதனால் தமது மூன்று குழந்தைகளையும் ரூஸோ அநாதை விடுதியில் சேர்த்தார். ​பெற்ற குழந்​தைக​ளைப் பராமரிக்க முடியாத தந்​தை​யே தனது குழந்​தைக​ளை அநா​தை விடுதியில் ​சேர்ப்பது என்பது ​எவ்வளவு ​கொடு​மையான சூழல். ரூ​ஸோவின் மனது துடித்தது. ஆனால் அவ​ரை வறு​மை துரத்தியடித்தது. முடிவில் வறு​மை ​வென்றதால் அவர் தனது குழந்​தைக​ளை அநா​தை விடுதியில் ​சேர்த்தார்.

இ​சைக்கழகத்தின் பாராட்டும் பரிசும்

இசையில் இசையில் புதிய புதிய பரிணாமங்களை ரூஸோ ஆராய்ந்தார். இவருடைய ஆராய்ச்சிக்குப் பாரீஸ் இசைக் கழகம் சான்றிதழ் கொடுத்துப் பாராட்டியது. முதன் முதலாக ரூஸோ பராட்டப்ப பெற்றது இங்குதான். கலை, இலக்கியம், தத்துவம் ஆகிய மூன்றிலும் மேதையாகத் திகழ்ந்த பாதிரியார் டிடேரோவின் தொடர்பு ரூஸோவிற்குக் கிடைத்தது. இந்தத் தொடர்பு ரூஸோவிற்கு பல சாதனைகள் படைக்கக் காரணமாயின.

கலைகளும் விஞ்ஞானமும் வளர்ந்ததால் ஒழுக்கம் வளர்ந்துள்ளதா? அல்லது தாழ்ந்துள்ளதா? என்பது பற்றி ஒரு கட்டுரை எழுதும்படி ஜோன் கலைக்கழகம் ஒரு பத்திரிக்கையில் விளம்பரம் செய்திருந்தது. இதைக் கண்ட ரூஸோ இந்தக் கட்டுரையை எழுதி அனுப்ப வேண்டுமென்று முடிவு செய்தார். அதற்காக இரவு பகலாக இசை நூல்களைப் பயின்று ஆய்வுகளில் ஈடுபட்டார். இதுபற்றிய தமது கருத்துக்களை பாதிரியார் டிடேரோவிடம் விவாதித்தார்.

கட்டுரை கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டது. ரூஸோவின் கட்டுரைக்கு கலைக்கழகத்தின் பரிசு கிடைத்தது. இந்த வெற்றி ரூஸோவின் வளர்ச்சிக்கு வழி காட்டின. ரூஸோவின் புகழ் மெல்ல பரவத் தொடங்கியது. 1756-ஆம் ஆண்டில் ‘மனிதர்களிடையே ஏற்ற தாழ்வு ஏற்பட அடிப்படக்காரணம் என்ன? இயற்கை நியதி அதனை ஒப்புக் கொள்கிறதா?’ என்ற தலைப்பில் ரூஸோ எழுதிய கட்டுரைக்கு கலைக்கழகத்தின் சான்றிதழும் பாராட்டும் கிடைத்தது.

தொடர்ந்து இசை நாடகம் ஒன்றை எழுதி, ரூஸோ அரங்கேற்றினார். இந்த நாடகத்திற்கு பிரெஞ்சு அரசின் சேமநிதியும், கவுரவப் பட்டும் கிடைத்தது. இது பற்றி பொறாமையாளர்கள் பல்வேறு கருத்துக்களைக் கூறியதால், பரிசையும் பாராட்டையும் ரூஸோ பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

1760-ஆம் ஆண்டில் வெளிவந்த ரூஸோவின் ‘ஜூலி’ என்ற நூல் பாரீசு மக்களிடத்தில் மிகப்பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. 1762-ஆம் ஆண்டில் ‘எமலி’ என்ற தலைப்பில் வெளிவந்த ரூஸோவின் நூல் புகழின் உச்சிக்கு அவரைக் கொண்டு சென்றது. ரூஸோவின் வெற்றிகளை ஜீரணிக்க இயலாதவர்கள் ‘எமலி’ சமயக் கொள்கைக்கு எதிரானது என்ற பிரச்சாரத்தைக் கிளப்பினர். பாரீஸ் நீதிமன்றத்திலேயே ரூஸோவின் ‘எமலி’ என்ற நூல் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.

பாரீ​ஸைவிட்டு ​வெளி​யேறலும் ம​றைவும்

பிரெஞ்சு பாராளுமன்றம் ‘எமலி’ நூலைத் தடை செய்தது. அதன் ஆசிரியர் ரூஸோவைக் கைது செய்து சிறையில் அடைக்கும்படி ஆணை இட்டது. இரவோடு இரவாக ரூஸோ பாரீஸ் நகரை விட்டு வெளியேறினார்.

இலக்கியத்தில் தமக்கு ஏற்பட்ட ஈடுபாட்டையும் , அதற்காகத் தாம் எடுத்துக்கொண்டு முயற்சிகளையும், தமது இலக்கியத்தை ஏற்றுக்கொள்ள இயலாதவர்களால், தமக்கு ஏற்பட்ட இன்னல்களையும், எதிர்கால மக்களும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், எதிர்கால எழுத்தாளர்கள் தமக்கு ஏற்படுகின்ற இன்னல்களையெல்லாம் எப்படிச் சந்திக்க வேண்டும் என்பதற்காகவும் ரூஸோ ‘மகாக் கடிதங்கள்’ என்ற தலைப்பில் 1764-ஆம் ஆண்டில் ஒருநூலை வெளியிட்டார்.

‘உரையாடல்கள்’, ‘சிந்தனைகள்’, ‘சமுதாய ஒப்பந்தம்’ என்ற தலைப்பில் ரூஸோ எழுதிய நூல்கள், தொடர்ந்து வெளிவந்து மக்களிடத்தில் மகத்தான வரவேற்பைப் பெற்றன. அதே வேளையில் இந்த நூல்கள் ஆளுவோரின் எதிர்ப்பையும் ரூஸோவிற்குத் தேடித் தந்தன. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளை, தமது படைப்புகளின் வழியாக முழங்கினார்.

இவரது இந்த முழக்கம் பி​ரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்டது. இறுதிவ​ரை ரூ​ஸோ தனது ​கொள்​கை​யை விட்டுக் ​கொடுக்கவில்​லை. ​தொடர்ந்து மக்களிடம் தன் எழுத்துவழி​யே பரப்பிய வண்ண​மே இருந்தார். இத்த​கைய சிந்த​னையாளராகவும் ​மே​தையாகவும் திகழ்ந்த ரூ​ஸோ 1778-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இரண்டாம் நாள் மறைந்தார்.

உலகத்​தைத் தன்சிந்த​னையால் விழித்​தெழச் ​செய்த அறிவுச்சூரியன் ம​றைந்தது. ஆனால் அவர் ஏற்றி ​வைத்த சுதந்திரம், சமத்துவம், ச​கோதரத்துவம் ஆகிய​வை இன்றும் மக்களின் மனதில் நின்று ஒளிர்ந்து ​கொண்​டே இருகின்றன. ரூ​ஸோ​வை வறு​மை தின்றது; ஆனால் அவரது அறி​வையும், சிந்த​னை​யையும், எண்ணங்க​ளையும் எதுவும் ​செய்ய முடியவில்​லை.

உயிருடன் இருக்கும்​போது ரூ​ஸோ​வை சி​றையிட்ட சமுதாயம், அவர் இறந்தபின்னர் அவருக்குச் சிறப்புச் ​செய்தது. அவ​ரைப் புகழ்ந்து ​கொண்டாடியது. இதுதான் விந்​தையிலும் விந்​தையாகும். இதுதான் உலகத்தின் இயற்​கை. என்னங்க மனசு ​ரொம்ப கஷ்டமாக இருக்கா? இதுதான் உலக நியதி. இ​தை​யெல்லாம் நாம நன்கு சரியா புரிஞ்சுக்கணும். ரூ​ஸோவின் வரலாறு, வறு​மை நி​லைக்குப் பயந்து விடா​தே! திற​மை இருக்கு மறந்து விடா​தே” அப்படிங்குற பட்டுக்​கோட்​டையாரின் பாடல்வரிக​ளை நி​னைவுபடுத்துற மாதிரி இருக்குதுல்ல.

வறு​மை​யை ​நெனச்சு மூ​லையில நடுங்கிப் ​போயி ஒக்காந்துடாதீங்க. வறு​மை​யைத் தூக்கி ​வெளிய எறிங்க. முயற்சி பண்ணுங்க. அப்பறம் என்ன வாழ்க்​கை வசந்தமாயிடும். இது உண்​மைங்க. சரி…சரி…இதுக்​கே இப்படின்னா…மத்ததுக்​கெல்லாம் எப்படி? இவங்களவிட ஒருத்தவங்க ​ரொம்பத் துன்பப்பட்டாங்க..தாயின் வயிற்றிலிருக்கும்​போ​தே தந்​தை இறந்து ​போனார். பிறந்தவுடன் தாயார் ​கைவிட்டார்…ஒன்றும் புரியாத வயது…என்ன ​செய்ய முடியும்…அந்தக் குழந்​தை​யைப் பாட்டிதான் வளர்த்தாங்க..தன் ​பேரனாவது நல்லா படிச்சுப் ​பெரிய ஆளா வரணும்னு அந்த வயதான காலத்துலயும் விரும்புனாங்க… வளர்ந்தான்….ஆனா வறு​மை …ஆடு ​மேய்த்து தனது வறு​மை​யை விரட்டப்பார்த்தான்……அவனால முடிஞ்சுச்சா?…அவன் ​பெரிய ஆளா வந்தானா….பாட்டி​யோட கனவு நி​றை​வேறுச்சா… என்ன…​தெரிஞ்சுக்க ஆவலா இருக்கா…? அடுத்தவாரம் வ​ரைக்கும் ​பொறுத்திருங்க………(​தொடரும்…12)

Series Navigationஅந்தியிருள் மயக்கம் – கீதாஞ்சலி பிரியதர்சினியின் ‘நிலைக் கண்ணாடி நிமிடங்கள்‘ கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா உரைதாகூரின் கீதப் பாமாலை – 69 பிரிவில் புரியும் ஐக்கியம் .. !
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *