அக்னிப்பிரவேசம்-38

This entry is part 18 of 23 in the series 16 ஜூன் 2013

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

yandamoori@hotmail.com

தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com

சாஹிதி எழுந்து டி.வி. யை அணைத்துவிட்டுக் கீழே வந்தாள். வீடு முழுவதும் ஆளரவமில்லாமல் இருந்தது. வெளியே மழை சொவேன்று பெய்து கொண்டிருந்த சத்தம் கேட்டது. அவள் படி இறங்கிக் கொண்டிருந்த போது அப்பொழுதுதான் உள்ளே நுழைந்து கொண்டிருந்தான்… மழைத் தாரைகள் உடம்பிலிருந்து சொட்டச் சொட்ட…

ராமநாதன்!

“என்னது? இந்த வேளையில் வந்திருக்கிறாய்? என்ன வேண்டும் உனக்கு?” பயத்தை அடக்கிக் கொண்டு கேட்டாள்.

”எங்க வீட்டிற்குப் போய் என் மனைவியிடம் ஏதேதோ உளறினாயாமே?” ஓரடி முன்னோக்கி வைத்தான்.

அவள் பார்வை கதவின் மேல் விழுந்தது. அவன் ஏற்கனவே அதைச் சாத்தியிருந்தான்.

விகாரமாய்ச் சிரித்துக் கொண்டே “நீ என் மனைவியிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டாற்போல் நானும் உன்னைப் பற்றி உலகத்துக்கு அத்தனையும் சொல்லிவிடலாம் என்று இருக்கிறேன். நீ எழுதிய லெட்டரை வெளிப்படுத்தப் போகிறேன்.”

சாஹிதி நடுங்கிவிட்டாள். காதல் என்று எண்ணிவிட்ட கவர்ச்சியில் என்றோ எழுதியக் கடிதம் அது.

“சொல்லு! நானும் உன்னைப் பற்றி அப்படிப் பண்ணினால் எப்படி இருக்கும்?” சிரித்தான்.

“அப்படி நான் பண்ணாமல் இருக்கணும் என்றால் இன்றிரவு என்னோடு கழிக்கணும். அல்லது புதிதாய் சொத்து வந்திருப்பதால் ஒரு லட்சம் என் கையில் கொடுத்துவிடு. ஜான்சி ராணி போல் தைரியமாய்ப் போய் என் மனைவியிடம் சொன்னதற்கு நான் உனக்குக் கொடுக்கும் தண்டனை இது.”

ஒரு காலத்தில் ‘என் வாழ்க்கையின் ஒளி நீதான்’ என்று சொன்னவன் இன்று எவ்வளவு குரூரமாய் தென்படுகிறான்.

அவளுக்குப் பயமாக இருக்கவில்லை. ஆனால் துக்கமாக இருந்தது. தன்னைப் பற்றியில்லை. மனிதர்களைப் பார்த்து. மனிதர்கள் வெளியில் ஒருமாதிரியாகவும், உள்ளுக்குள் இன்னொரு மாதிரியாகவும் இருப்பார்கள் என்று அவளுக்குத் தெரியாது. பரமஹம்சா ஒருத்தன்தான் அவ்வாறு இருப்பதாய் எண்ணியிருந்தாள். எல்லோருமே அப்படித்தானா?

அவனிடமிருந்து குப்பென்று நாற்றம் அடித்தது. குடித்துவிட்டு வந்திருப்பான் போலும். வேடன் கையில் அகப்படாமல் ஓடும மான்குட்டியைப் போல் அவள் அந்த அறையில் அங்கும் இங்கும் ஓடியதைப் பார்த்து அவன் உறுதி அதிகமாகிவிட்டது. வெளியே காற்றின் ஓசை அவள் கத்தலை விழுங்கி விட்டது. வெளியே மழை வலுத்தது. வானம் குமுறிக் கொண்டிருந்தது. பூமி வெடித்து விடும் போல் இடி இடித்துக் கொண்டிருந்தது. அவன் கைகளுக்கு இடையில் அவள் நைட்டீ சிக்கிக் கொண்டுவிட்டது. அதற்குள் அவள் கைக்கு மேஜைமீது வைத்திருந்த பூந்தொட்டி தட்டுப்பட்டது. அதை எடுத்து அவன் முகத்தில் பலமாக அடித்தாள். அவன் சட்டென்று ஓரடி பின் வாங்கினான். வரிசையாய் மூன்று முறை அவள் அதனால் அடித்ததுமே அவன் முகம் சப்பையாகி விட்டது. நேற்றியிலிருந்தும், மூக்கிலிருந்தும் கொட்டிய ரத்தத்தோடு பயங்கரமாக காட்சி அளித்தான்.

அவள் போனை நோக்கி வேகமாய் ஓடி மறு முனையிலிருந்து “பாவானா ஹியர்” என்று கேட்டதுமே ‘நான்தான் சாஹிதி” என்றாள் கலவரத்துடன். அந்த பதற்றத்தில் பின்னாலிருந்து அவன் எழுந்து வந்ததைக் கவனிக்கவில்லை. அவள் போனில் ஏதோ சொல்ல வரும் போது திடீரென்று முதுகில் எரிச்சல் ஏற்பட்டது. ராமநாதன் ஆத்திரத்துடன் அவள் முதுகில் கத்தியால் குத்தினான். அவள் வீலென்று அலறிக்கொண்டே திரும்பினாள். அவன் திரும்பவும் கத்தியை ஓங்கினான். ஐந்து நிமிடங்கள் கழித்து பாவனா பரபரப்புடன் அங்கே வந்து சேருவதற்குள் இருவரும் மூலைக்கு ஒருவராய் விழுந்துக் கிடந்தார்கள்.

சாஹிதியைச் சுற்றிலும் ரத்தம் குளம் கட்டி இருந்தது. அம்பு பட்ட பறவையைப் போல் இருந்தாள் அவள்.

“சாஹிதி… சா..ஹி …தி..” என்றாள் பாவனா அவளைக் கைகளில் ஏந்திக் கொண்டு. சாஹிதியின் கண்கள் அதற்குள் மூடிக் கொண்டிருந்தன.

“அவன்… அவன் செத்துவிட்டானா?” என்றாள் ஹீனஸ்வரத்தில். பாவனா திரும்பிப் பார்த்தாள். ராமநாதன் நினைவற்று விழுந்துக் கிடந்தான். மூச்சு மெல்ல வெளி வந்து கொண்டிருந்தது.

“என்ன? என்ன நடந்தது?” கேட்டாள் பாவனா, அவள் தலையைக் கைகளில் எடுத்துக் கொண்டாள்.

“பாவனா.. எனக்கு… எனக்கு ஒரு உதவி பன்னுவாயா?”

‘சொல்லு சாஹிதி. கண்டிப்பாய் செய்கிறேன்” என்றாள் பாவனா, அவளை அணைத்துப் பிடித்துக் கொண்டு. சாஹிதியின் உடம்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் உயிர் போய்க் கொண்டிருந்தது தெரிந்தது.

சாஹிதி சக்தியை வரவழைத்துக் கொண்டு சொன்னாள். “அம்மாவின் அஸ்தியை இன்னும் கங்கையில் கரைக்கவில்லை.”

அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரியாமல் பாவனா அவளைக் குழப்பத்துடன் பார்த்தாள். சாஹிதியின் குரல் பலவீனமாய் ஒலித்தது. “என்னோட மனிதர்கள் என்று எனக்கு யாருமே இல்லை. அம்மாவின் அஸ்தியை கங்கையில் கரைப்பதற்கு ஏற்பாடு பண்ணுகிறாயா?” தீனமாய் கேட்டாள்.

பாவனாவின் கண்களில் கண்ணீர் பொங்கி வந்தது. வாழ்க்கையில் எத்தனையோ வேதனைக் காட்சிகளைக் கண்டிருக்கும் பாவனா அவள் கோரிக்கையைக் கேட்டு மனம் கரைந்துவிட்டாள். வாழ்ந்து வந்த நாளெல்லாம் அந்தப் பெண் எவ்வளவு தனிமையை அனுபவித்து வந்திருக்கிறாள் என்றும் மனதளவில் எவ்வளவு தூரம் குன்றிப் போயிருக்கிறாள் என்று அந்த ஒரு கோரிக்கையின் மூலமே தெரிந்தது.

அவளை மேலும் இறுக்கமாய் அணைத்துக்கொண்டே “கண்டிப்பாக” என்றாள் கண்கள் பனிக்க.

சாஹிதி  பெரும் முயற்சி செய்து கைககளை தூக்கினாள். “அம்மாவின் அஸ்தியை கங்கையில் கரைப்பதற்கு முன்னால் அந்த அயோக்கியன் பரமஹம்சாவின் … அஸ்தியையையும் …. கங்கையில்… க…ரை..க்க …ணு ..ம். அவ்…வா….று… வாக்குத்….. த…ரு… வா…யா?”  புயலில் சிக்கிக் கொண்ட மலரைப் போல் பாவனாவின் இதயம் துடிதுடித்தது.

‘எவ்வளவு வேதனையை அனுபவித்து இருப்பாள் என் சிநேகிதி! உன் வருத்தத்தை எல்லாம் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இனிமையான கனவுகளுடன், நிம்மதியாய் கொசுவலைக்குள் உறங்கிக் கொண்டிருந்த சமயத்தில் தந்தையாய் உள்ளே நுழைந்தான். ஒவ்வொரு நாள் அதிகாலையிலும், உதய பாஸ்கரனின் கிரணங்கள் நிர்மலமாய் தட்டி எழுப்ப வேண்டிய வைகறைப் பொழுதில் புயலைத் தோற்றுவித்தான். தந்தை மகள் உறவை மறந்து காமத்தை நாடினான். தாயைக் கொன்றான். உயிரோடு இருந்த வரையிலும் துன்பத்தையே தந்தான். உன் பகையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. உன் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன்.”

பாவனா சாஹிதியின் கையில் தன் கையை வைத்தாள். சாஹிதியின் இதழ்களில் ஆனந்தத்தின் கடைசி முறுவல்… வானத்திலிருந்து உதிர்ந்த நட்சத்திரம் மேகங்களுக்கு இடையே மோதிக்கொண்டு, இடியின் தாக்கலுக்கு நலிந்து, மின்னலின் சூட்டில் வெந்து, எல்லையில்லாத சூனியத்தில் ஒன்றறக் கலந்துவிட்டது. எங்கேயோ பிறந்த ஒரு குழந்தை எங்கேயோ வளர்ந்து, இம்மனிதர்களுக்கு இடையே ஒன்ற முடியாமல் பரந்த சூனியத்தை நோக்கிப் போய் விட்டது.

வெளியில் மழை கொஞ்சம் விட்ட போதிலும் ஜன்னல் கண்ணாடியில் மழை நீர்த் திவலைகள் தெறித்து விழும் சத்தம் இன்னும் அப்படியே கேட்டுக் கொண்டிருந்தது.

ராமநாதன் மூர்ச்சைத் தெளிந்து லேசாய் அசைந்தான். பாவனா கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு அவன் பக்கம் பார்த்தாள்.

“என்னை ஆஸ்பத்திரிக்கு சீக்கிரமாய் அழைத்துக் கொண்டு போங்க. என் உயிர் போய்க் கொண்டே இருக்கு.”

பாவனா சாஹிதியின் உடலைத் தரையில் கிடத்தினாள். சாஹிதியைச் சுற்றிலும் ரத்தம் குளமாய் தேங்கி இருந்தது. பாவனா ராமநாதனிடம் வந்தாள்.

“ஆஸ்பத்திரி… ஆம்புலென்ஸ்… ஆம்புலென்ஸ்..’ முணுமுணுத்துக் கொண்டிருந்தான். அவள் அவனை இரு கைகளாலும் சிரமப்பட்டு தூக்கிக்கொண்டு வெளியே வந்தாள். பாரத்தை முழுவதும் அவள் மீதே போட்டான். மூக்கு உடைந்து, கண்களுக்குக் கீழே தோல் வழண்டு, தலையிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. இன்னும் ஐந்து நிமிடங்களில் ஆஸ்பத்திரியில் சேர்க்காமல் போனால் உயிர் பிழைப்பது கஷ்டம்.

அவள் அவனைக் காரில் படுக்க வைத்துவிட்டு ஸ்டீரிங் முன்னால் உட்கார்ந்து காரை ஸ்டார்ட் பண்ணினாள்.

மழையைக் கிழித்துக் கொண்டு கார் புறப்பட்டது. ‘தாங்க்ஸ்” என்று முணுமுணுத்தான். அதற்குள் டெலிரியம் ஸ்டேஜ் தொடங்கி விட்டிருந்தது. முன்னோக்கி துள்ளி விழுந்தான் அவன். அவள் பொருட்படுத்தவில்லை. “தாகம்.. தாகம்” என்றான்.

அவள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அவள் கவனம் எல்லாம் கார் ஓட்டுவதிலேயே நிலைத்திருந்தது.

பத்து நிமிடங்கள் ஆயிற்று. கார் ஒரு ஏரியின் பாலத்தின் மேல் வந்து சேர்ந்தது. கீழே நீரின் வேகம் உக்கிரமாய் இருந்தது.

அவள் காரை நிறுத்தினாள். அவள் முகத்தில் எந்த உணர்வுகளும் இருக்கவில்லை. வெளியில் மின்னிய போது ராமநாதன் மேலும் பயங்கரமாய், விகாரமாய் தென்பட்டான்.  மனதில் இருந்த விகாரத்துடன் ஒப்பிட்டால் அது ரொம்ப குறைவுதான். அவள் அவனைப் பார்த்தாள். பத்துபேருக்கு முன்னால் தன்னைக் குற்றவளியாக்கியது… கணவன் அடித்த போது யாருமே பார்க்காதவாறுரு கண்ணைச் சிமிட்டி வெற்றிப் பெருமிதத்துடன் சிரித்தது நினைவுக்கு வந்தது.

அவள் அப்படியே காத்திருந்தாள், அவன் நாடியைப் பரிசோதித்துக் கொண்டே….

அப்படியே பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருந்தாள்.

இரண்டு நிமிஷம் கழித்து உயிர் போய்விட்டது. அவள் காரிலிருந்து அவன் உடலை வெளியே இழுத்து பாலத்தின் விளிம்பு வரையிலும் கொண்டு வந்தாள்.

‘சாரி, ராமநாதன்! நீ எனக்குப் பண்ணிய துரோகத்திற்கு உன் பிணத்தை மீன்களுக்கு உணவாக போட்டாக வேண்டிய கட்டாயம்” என்று கீழே தள்ளிவிட்டாள்.

பிரவாகத்தில் அவன் உடல் அடித்துக் கொண்டு போயிற்று.

அவள் வேகமாய் சாஹிதியின் வீட்டிற்குத் த்ரயும்பி வந்தாள். சாஹிதி இன்னும் அப்படியே விழுந்து கிடந்தாள். அவள் கைக்குட்டையை சுற்றிக்கொண்டு போனை எடுத்து பரமஹம்சாவின் நம்பரை டயல் செய்தாள். மறுமுனையிலிருந்து அவன் குரல் ஹலோ என்று கேட்டதுமே “அங்கிள்! நான் தான் சாஹிதி. நீங்க அர்ஜென்டாய் இங்கே வர முடியுமா?” என்று அவன் பதிலுக்குக் காத்திருக்காமல் போனை வைத்துவிட்டாள். மழையின் சத்திதில் தன் குரலை அடையாளம் கண்டு கொள்வது கஷ்டம் என்று அவளுக்குத் தெரியும்.

அதற்குப் பிறகு அவள் ராமநாதனின் கையிலிருந்து விழுந்து கிடந்த கத்தியை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். வாசற்கதவின் கைப்பிடியோடு அதைக் கயிற்றால் கட்டினாள். இருட்டில் அது கண்ணுக்குத் தெரியவில்லை. கத்தியின் பிடியைக் கைக் குட்டையால் சுத்தமாகத் துடைத்தாள். கதவை வெறுமே சாத்திவிட்டு இருட்டில் நின்றாள். அவள் இந்தக் காரியத்தை எல்லாம் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் தேர்ச்சி பெற்ற நபர் போல் செய்தாள்.

அதற்குள் தொலைவில் கார் வரும் ஓசைக் கேட்டது.

பரமஹம்சா போட்டிகோவில் காரை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தான். கதவின் கைப் பிடியைக் கையால் பிடித்துத் தள்ளினான். கதவு திறந்து கொண்டது. அவனுக்குச் சந்தேகம் வரவில்லை.

விடிவிளக்கு வெளிச்சத்தில் சாஹிதி சோபாவின் மீது படுத்துக் கொண்டிருப்பது தென்பட்டது. “ஏன் இப்படி இருட்டில் படுத்துக்கொண்டு இருக்கிறாய்?” போய் பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டு கேட்டான்.

அதற்குள் வெளியே பாவனா கதவின் கைப்பிடியோடு கட்டியிருந்த கத்தியைப் பிரித்தாள். ஜன்னல்வழியே உள்ளே வீசியெறிந்தாள்.

“என்ன சத்தம்?” என்றான் பரமஹம்சா.

அவள் மெயின் கேட்டிற்கு வெளியே வந்தாள். வலது பக்கம் காம்பவுண்ட் சுவருக்குப் பக்கத்தில் அவள் கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தொலைவில் இரு போலீசார் ரோந்து வந்து கொண்டிருந்தார்கள்.

‘இதென்ன ஈரம்? அழுது கொண்டு இருக்கிறாயா? அசடே! உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா? தனியாய் இருந்ததால் பயமாக இருந்திருக்கும். இனிமேல் நான் உன்னோடு கூடவே இருக்கிறேன். என்னோடு கழிப்பதன் மூலம் இன்றிரவிலிருந்து உன் வாழ்க்கையே மாறிவிடப் போகிறது. கடவுளின் அம்சம் உன்னுள் நுழைந்து புனிதமானவளாக மாற்றிவிடப் போகிறது” என்று அவளைத் தடவினான். ஈரம தட்டுப்பட்டது.

“ஏன், அழுகிறாயா? என்றான். அப்பொழுதுதான் கேட்டது ஏதோ ஓலம் போன்ற சத்தம்.

காரில் உட்கார்ந்துகொண்டு வீலென்று அலறிய பாவனா, உடனே காரைக் கிளப்பி பங்களாவுக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தி உள்ளே நுழைந்தாள்.

காரிலிருந்து இறங்கி ஓட்டமாய் ஓடிப படிகளில் ஏறினாள். சைக்கிளில் வந்து கொண்டிருந்த கானிஸ்டேபிள்கள் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டார்கள்.

முதலில் ஒரு அலறல், பிறகு போலீஸ் விசில் சத்தம் கேட்டதுமே பரமஹம்சாவுக்குச் சந்தேகம் வந்து சட்டென்று எழுந்து ஸ்விட்சைப் போட்டான்.

திடீரென்று வெளிச்சம் வந்ததால் அந்த வெளிச்சத்திற்குக் கண்கள் கூசவே ஒரு வினாடி கண்களை அழுத்தமாக மூடித் திறந்தான். பக்கத்தில் சாஹிதியின் உடல், சுற்றிலும் ரத்தம், தொலைவில் கத்தி தென்படவே கலவரமடைந்து விட்டான். அவன் உடம்பிலும் ரத்தம் ஒட்டிக கொண்டிருந்தது.

அதற்குள் கதவிற்கு அருகில் பெரிதாய் “கொலை! ஐயோ, கொன்றுவிட்டான்” என்று கேட்கவே, நிமிர்ந்து பார்த்தான். வாசலுக்கு அருகில் சிம்மாசலம் கத்திக் கொண்டிருந்தான். அவனுக்குப் பின்னாடியே படியேறி வேகவேகமாய் வந்துக் கொண்டிருந்தாள் பாவனா. போலீஸ் விசில் சத்தம் மிக அண்மையில் கேட்டது.

பரமஹம்சா பயந்துவிட்டான். நடுநடுங்கியபடி “நான் இல்லை. நான் இந்தக் கொலையைச் செய்யவில்லை” என்று பெரிதாய்க் கத்தினான். போலீசார் பாவனாவைப் பார்த்ததும் சல்யூட் செய்தார்கள்.

‘ஒருத்தர் இங்கேயே இருந்து இன்னொருத்தர் இன்ஸ்பெக்டரை அழைத்துக் கொண்டு வாங்க. அந்தப் போனைத் தொட வேண்டாம். அதன்மேல் சாஹிதியின் விரல் அடையாளம் இருக்கும்” என்றாள் பாவனா நிதானமாய்.

*******

அதற்குப் பிறகு சம்பவங்கள் துரித கதியில் நடந்தேறின.

அன்றிரவு சாஹிதியிடமிருந்து கலவரத்தோடு வந்த தொலைபேசி அழைப்பை பாவனாவுக்கு கனெக்ஷன் கொடுத்ததாக பி.ஏ. சொன்னான். தான் போனபொழுது பரமஹம்சா சாஹிதியின் பக்கத்தில்ருந்து எழுந்து கொண்டிருந்தான் என்று சிம்மாசலம் சொனான். அந்த வீட்டிலிருந்து அலறல் கேட்டது என்றும், தாம் போனபொழுது சாஹிதி இறந்த நிலையில் விழுந்துக் கிடந்தாள் என்றும் கானிஸ்டேபிள்கள் சாட்சி சொன்னார்கள். கத்தியின் மீது பரமஹம்சாவின் விரல் ரேகைகள் கிடைத்தன.

குற்றவாளிக் கூண்டில் நின்று கொண்டிருந்த பரமஹம்சாவுக்கு கத்தியின் மீது தன் விரல்ரேகைகள் எப்படி வந்திருக்கும் என்றுதான் புரியவில்லை. தான் போனபொழுது இறந்துகிடந்த சாஹிதி எப்படி அலறி இருப்பாள்? அந்தக் குரல் சாஹியின் குரல் இல்லை என்று அவன் ஒருத்தனுக்குத்தான் தெரியும். ஆனால் அவன் வாதத்தை அவன் லாயர் கூட நம்பவில்லை. இறுதி சாட்சியம் பாவனாவுடையது. அவள் கூண்டில் ஏறி நின்றுகொண்டு சத்தியம் பண்ணிவிட்டுச சொல்லத் தொடங்கினாள்.

“எனக்கு அன்றிரவு சாஹிதியிடமிருந்து போன் வந்தது மிஸ்டர் ஜஸ்டிஸ்! பரமஹம்சா குடித்திருக்கிறான் என்றும், தனக்குப் பயமாக இருப்பதால் உடனே வரச் சொல்லியும் போன் பண்ணினாள். போன் கட் ஆகும் முன்  கதறல் கேட்டது. “அங்கிள்! உங்களுக்கு இது நியாயமில்லை. விடுங்கள்’ என்ற சாஹிதியின் வார்த்தைகள் ரிசீவரிலிருந்து கேட்டன. நான் உடனே புறப்பட்டேன்.”

“போய்!”  கத்தினான் பரமஹம்சா.

‘மிஸ்டர் பரமஹம்சா! நீங்க நடுவில் குறுக்கிட வேண்டாம்.” எச்சரித்தார் ஜட்ஜ். பாவனா தொடர்ந்தாள்.

“நான் போனபொழுது கடைசியாய் அலறல் சத்தம் கேட்டது. என்னோடு கூட சிம்மாச்சலமும் இருந்தான். அந்த நேரத்தில் தெருவில்  போய்க் கொண்டிருந்த இரண்டு கானிஸ்டேபிள்கள் உள்ளே வந்தார்கள். முதலில் நான் போனேன். பரமஹம்சா கத்தி வீசி எரிந்ததைப் பார்த்தேன். சாஹிதி எனக்குப் போன் பண்ணிய ரிசீவர் இன்னும் மேஜை விளிம்பில் தொங்கிக் கொண்டே காற்றில் ஆடிக் கொண்டிருந்தது. தனியாய் இருந்த சாஹிதியைக் கற்பழிக்க முயன்றதில்…”

“ஐ அப்ஜெச்ட் பர் இட்” என்றார் டிபென்ஸ் லாயர். ‘சாட்சி எதையெதையோ ஊகித்துக் கொண்டு பேசுகிறார்.”

“நான் ஊகித்துக் கொண்டு பேசவில்லை. பரமஹம்சா மூலமாய் தான் எவ்வளவு நரகவேதனையை அனுபவித்து வந்திருக்கிறாள் என்று சாஹிதி தன் டைரியில் எழுதியிருக்கிறாள். இதோ அந்த டைரி. மிஸ்டர் ஜஸ்டிஸ்! இவ்வ்வளவு துன்பம் பகைவர்களுக்குக் கூட வரவேண்டாம். தாயை மணந்துக் கொள்கிறேன் என்று ஏமாற்றி மோசம் செய்துவிட்டான். மகளை விரும்பினான். பணத்துக்காக துன்புறுத்தினான். ‘நீ எனக்குத் தந்தையைப் போன்றவன். என் பெற்ற தாய்க்குக் கணவன். நீ என் மீது ஆசை வைப்பது தவறு’ என்று அந்தச் சின்னப் பெண் கைக் கூப்பி வேண்டிக் கொண்டபோதும் கேட்காமல், கத்தியைக் கையில் எடுத்துக் கொண்டு துரத்தினான். மகளையே மானபங்கம் பண்ண முயன்ற இந்த பரமஹம்சாவை எந்த விதமாய் தண்டிக்கப் போகிறீர்கள்? கடவுள் அவதாரம் என்று விட்டு விடப் போகிறீர்களா? சாட்சாத் கடவுள் என்று தொழப் போகிறீர்களா?”

கேலரியில் இருந்த சிம்மாசலம் எழுந்து நின்று கால் செருப்பைக் கையில் எடுத்துக் கொண்டான். “இந்தத் திருட்டு ராஸ்கல் கடவுள் அவதாரமா? டேய் பாவி மகனே!” என்று செருப்பை வீசி எறிந்தான். ஜனங்கள் அதற்குள் பாவனாவின் வார்த்தைகளால் தூண்டப்பட்டு இருந்தார்கள். சிறிய சந்தர்ப்பம் கிடைத்ததும் அவர்களுடைய ஆவேசம் கட்டுக்குள் அடங்காமல் போய்விட்டது.  சாமியார் போல் நடமாடிக்கொண்டு மகளையே கற்பழிக்க முயன்றான் என்று தெரிந்ததுமே யார் சும்மா இருப்பார்கள்? செருப்புகள் வெள்ளமாய் வந்து மூழ்கடித்தன. நீதிமன்ற வரலாறிலேயே என்றுமே நடந்திராத இந்தச் செயலுக்கு ஜட்ஜ் திகைப்படைந்து போனாலும், உடனே தேறிக் கொண்டு ஜனங்களை எச்சரித்தார்.

இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு நிலைமை கட்டுக்குள் வந்தது.

தீர்ப்புப் படித்துக் காட்டப்பட்டது.

“பயந்த நிலையில் சாஹிதி செய்த போன் கால் பாதியிலேயே கட் ஆனது, பாவனா வந்த போது கேட்ட அலறல் சத்தம், கத்தியின் மீது விரல் ரேகைகள் பதிந்து இருப்பது.. எல்லாமாய் சேர்ந்து பரமஹம்சாவை குற்றவாளியாய் நிரூபிக்கின்றன. சாஹிதியின் டைரியில் எழுதியதைக் கொண்டு பரமஹம்சா எப்படிப்பட்டவன் என்று தெளிவாகப் புரிகிறது. இப்படிப்பட்ட கீழ்த்தரமான்வர்கள் இருப்பது சமுதாயத்திற்கு வெட்கக்கேடு.

கொலை குற்றத்திற்காவும், கற்பழிக்க முயன்றதற்காகவும் பரமஹம்சாவுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.”

கோர்ட் வராண்டாவில் அவனை அழைத்துச் சென்று கொண்டிருந்த போது பாவனா எதிர்பபட்டாள். அவன் நின்று சொன்னான். “ஜனங்கள் அன்று ஏசுவை புரிந்து கொள்ளவில்லை. இன்றைக்கு என்னையும் புரிந்து கொள்ளவில்லை. இந்த ஜனங்களுக்காக நான் இரக்கப்படுகிறேன். உயிரை தியாகம் செய்கிறேன்.”

“கண்டிப்பாக தியாகம் செய்யுங்கள் சுவாமி. உங்கள் மரணத்தை ஜனங்கள் கருணையோடு எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்” என்றாள் பாவனா அந்த சைக்கோபாத்திடம். “அது போகட்டும். நீங்கக் எனக்கு ஒரு உதவி பண்ணனும். மரணம் அடைந்த பிறகு உங்க உடல் எனக்கு வேண்டும்.”

“எதுக்கும்மா? என் உடலை பத்திரப்படுத்தி வைக்கும்படி அந்தக் கடவுள் உனக்கு உத்தரவு கொடுத்து இருக்கிறாரா?”

“இல்லை சுவாமி. உங்க அஸ்தியை கரைத்த பிறகுதான் என் தாயின் அஸ்தியைக் கரைப்பேன் என்று அவளுடைய மகளுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளேன். அதனால்தான்” என்று மெதுவாய் தன் உள்ளங்கையை விரித்தாள். அவள் உள்ளங்கை நடுவில் மச்சம்!

பரமஹம்சாவின் முகம் களை இழந்தது.

*******

இரவு பதினோரு மணி அடித்தது.

தெருவோரத்தில் யாரோ கையை உயர்த்தி லிப்ட் கேட்டதால் பாவனா கரை நிறுத்தினாள். அவனைப் பார்த்துவிட்டு “நீங்களா?” என்றாள். அவன் பரத்வாஜன்.

அவன் வந்து காரில் ஏறிக்கொண்டே “ரொம்ப நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறோம் இல்லையா. ஹோம் மினிஸ்டராய் இருந்துகொண்டு எஸ்கார்ட் இல்லாமல் இந்த வேளையில் கிளம்பி இருக்கிறாய்? அந்தக் காலத்து ராஜாக்களைப் போல் நாடு எப்படி இருக்கு என்று வேவு பார்ப்பதற்காகவா?” சிரித்துக் கொண்டே கேட்டான்.

அவள் சிரிக்கவில்லை. “காலையில் பரமஹம்சா தூக்கிலிடப் பட்டான்” என்றாள்.

“ஆமாம். பேப்பரில் படித்தேன்.”

“காலையிலிருந்து மனசே சரியாக இல்லை. சாதித்தது வெற்றிதான் என்றாலும் ஏனோ அத்ருப்தி. அதனால்தான் இப்படித் தனியாய் கிளம்பிவிட்டேன்.”

தொலைவிலிருந்து மைக்கில் “எந்தரோ மகானுபாவுலு“ என்று தியாகராஜ கீர்த்தனை ஒலித்துக் கொண்டிருந்தது.

“இந்தப் பக்கமாய் எங்கே கிளம்பினாய்?”

“ஒரு காலத்தில் இந்த சந்துக்குள்ளே குடியிருந்தோம்.”

அவன் பதில் சொல்லவில்லை. கோவிலில் இருந்து ஒலித்துக் கொண்டிருந்த பாட்டின் கிராமபோன் ரிக்கார்ட் பழுதடைந்து விட்டது போலும் “எந்தரோ… எந்தரோ…எந்தரோ..” என்று திரும்பத் திரும்ப பாடிக் கொண்டிருந்தது.

“சரியான இடத்தில்தான் நின்று விட்டது” என்றாள் பாவனா. “எத்தனையோ ஆண்கள் பெண்களை துன்புறுத்துவதற்காக, அவர்களை எப்படியெல்லாம் அடக்கிக் காலடியில் அடக்கி வைப்போம் என்று பார்த்துக் கொண்டே இருப்பார்கள். அன்று டி.வி. பேட்டியில் கூட இதையேதான் சொன்னேன். உங்களைப் போன்ற எழுத்தாளர்கள் சமூக விழிப்புணர்வோடு கதைகளை எழுத வேண்டும். அப்பொழுது தான் பெண்ணினத்திற்கு விமோசனம் கிடைக்கும். ஒவ்வொரு ஆணும் ஏமாற்று பேர்வழிதான் என்று எழுதுங்கள். என்னையே உதாரணமாய் எடுத்துக் கொள்ளுங்கள். என் வாழ்க்கையில் ஒருவன் கூட நல்லவன் தென்படவில்லை. இந்த உலகமே பொய்யும் பித்தலாட்டம் நிரம்பியது. ஏன் சிரிக்கிறீர்கள்?”

“ஒன்றும் இல்லை. கல்யாணம் ஆவதற்கு முன் நீ தமிழ் நாவல்களை நிறைய படிப்பாயோ?”

“இல்லை.”

“……….”

“நீங்க எதுக்கு சிரித்தீங்க? அதைச் சொல்லுங்கள் முதலில்.”

“அமைச்சர் ஆவதற்கு முன் நீயும் கதைகள் கட்டுரைகள் எழுதி இருக்கிறாய் இல்லையா. உன் கதையையே ஒரு நாவலாய் எழுதி, முடிவில் “அன்பார்ந்த வாசகர்களே, பரத்வாஜ் கடைசியில் ஏன் சிரித்தான்?’ என்று முடித்துவிடு. பழைய நாவலில் நகலாய் இருந்தாலும் நன்றாக இருக்கும்.

கிராமபோனைச் சரி செய்து விட்டார்கள் போலும். “அந்தரிகி வந்தனமுலு” என்று பாட்டு திரும்பவும் தொடங்கியது.”

நிறைவடைந்தது

 

Series Navigationவால்ட் விட்மன் வசனக் கவிதை -28 என்னைப் பற்றிய பாடல் – 22 (Song of Myself) இருப்ப தெல்லாம் ஈவதற்கே .. !வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -6
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Comments

  1. Avatar
    தேமொழி says:

    அழகாக மொழிபெயர்க்கப்பட்ட ஒரு கதை இந்த அக்கினிப்பிரவேசம்; தொடர்ந்து படித்து வந்தேன்.
    மொழி பெயர்ப்பு என்றே தெரியாதவாறு அருமையாகத் தமிழில் எழுதி இருக்கிறார் கௌரி கிருபானந்தன். நன்றி. பாராட்டுக்கள் .

    அன்புடன்
    ….. தேமொழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *