-கலைச்செல்வி
அன்று நிலா மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அது எப்போதாவது தான் மகிழ்ச்சியாக இருக்கும். காலையிலிருந்தே அதற்கான ரகசியங்கள் பொத்தி வைக்கப்பட்டிருந்தன. நிலா வந்ததும் வராததுமாக அந்த ரகசியங்கள் சொல்லப்பட நிலா சட்டென பிரகாசமாக மாறி விட்டது. மாமா வாங்கி வந்திருந்த வளையல், தோடுகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு கிணற்றடியில் இருந்த துவைக்கும் கல்லில் பரப்பி வைத்திருந்தாள் கல்யாணி. அவள் அணிந்;திருந்த முழுப்பாவாடையும், அதற்கு பொருந்தமில்லாத இறக்கம் இல்லாத சட்டையையும் மீறி அவள் முகம் பிரகாசமாக இருந்தது. கலைந்திருந்த தலை முடியை சீப்பினால் அப்படியே ஒரு இழு இழுத்து சிறிய ஹேர்பின் குத்தி தலையை ஒழுங்குப்படுத்தியிருந்தாள். அது கலைந்திருந்த நிலையை விட இன்னும் சரியில்லாததாக இருந்தது. அதை பற்றிய உணர்வேதும் அவளுக்கு இருக்கவில்லை. மனம் ஏதோ ஒரு பரவச நிலையிலேயே இருந்தது. துவைக்கும் கல்லில் பரப்பி வைத்திருந்த வளையல்களை எடுத்து கையில் அணிந்துக் கொண்டு கைகளை அங்குமிங்கும் திருப்பி அழகுப் பார்த்தாள். காதுகளில் தோடுகள் போடும் பாவனையிலும் கைகள் ஈடுப்பட்டிருந்தன.
“ஏஎஎ… கல்யாணி.. கிணத்தடியில என்னாடீ செய்ற… பாப்பாவுக்கு சோறு ஊட்டு வா…” சித்தியின் குரல் அவளை உணர்வு நிலைக்கு கொண்டு வந்தது. அவசர அவசரமாக கை வளையல்களை அவிழ்த்து பிளாஸ்டிக் உறையினுள் திணித்தாள். அவசரத்தில் கீழே விழுந்திருந்த தோட்டினை கவனிக்கவில்லை.
“இரு… வந்துடறேன்…” மேலே அண்ணாந்து குரல் கொடுத்தவாறு உள்ளே சென்றாள். “நான் தனியாளா கெடந்து தடுமாறிக்கிட்டு நிக்குறேன்;.. கெணத்தடியில என்னாடீ செய்ற..? என் தலையெழுத்து.. இதுங்களுக்கு மூணு வேளையும் வக்கணையாக சமைச்சு கொட்ட வேண்டியிருக்கு..”
பதில் பேசாது நின்றவளின் கைகளில் சோற்றுக்கிண்ணத்தைக் கொடுத்தாள். “போ.. தண்டமா நிக்காம போய் பாப்பாவுக்கு சோறு ஊட்டு..” சித்தி கையில் திணித்த கிண்ணத்தில் பால் சோறு இருந்தது. அம்மா கூட அவளுக்கு இதுமாதிரி பால்சோறு போட்டு கிணற்றடியில் ஊட்டி விடுவாள். அப்போது கல்யாணி துவைக்கும் கல்லுக்கும், கிணற்றுத்திட்டுக்குமாக ஓடிக் கொண்டேயிருப்பாள். இவள் சோறு சாப்பிட்ட பின் கிணற்றிலிருந்து நீர் இறைத்து வாயை துடைத்து விடுவாள். பொதுவாக சாப்பிட்ட பின் வேறொரு கவுன் தான் அணியும்படியாக இருக்கும். மேலும் கீழுமாக சிந்தும் சாதத்தை துடைக்க துடைக்க உடை ஈரமாகி விடுகிறது.
பாப்பா ஓடி வந்து கல்யாணியின் காலை கட்டிக் கொண்டது. கல்யாணி பாப்பாவை ஆசையாக தூக்கினாள். முழுநீளத்தில் கட்டியிந்த பாவாடை தடுக்கியது. “பாவடைய தூக்கி இடுப்புல சொருவுடீ.. ஊர்ல ஒலகத்துல இல்லாத பாவடைய கட்டியிருக்க…”
கையில் சோற்றுக்கிண்ணமும், இடுப்பில் ஒரு வயது குழந்தையுமாக கிணற்றடிக்கு மீண்டும் வந்த அவளை பார்த்து நிலா பதறியது. ‘நீயே கொழந்த.. இன்னொரு கொழந்தைய தூக்கிட்டு வந்தியாக்கும்…” சோற்றுக்கிண்ணத்துடன் வந்தவளின் காலில் ஏதோ சுரீரென தைத்தது. சோற்றுக்கிண்ணம் நழுவி விழுந்தது. ஆ.. என்று அலறியவள் கையிலிருந்த பாப்பாவை கீழே இறக்கி விட்டு விட்டு நொண்டியடித்தவாறு குனிந்துப் பார்த்தாள். தோட்டின் பின்பகுதி காலில் நன்கு குத்தியிருந்தது. குத்திய இடத்தில் சன்னமாக இரத்தத்திட்டு. நான்கு வயதில் அம்மாவுடன் வெளியே போகும் சறுக்கி விழுந்ததில் முட்டியில் சிராய்ப்புடன் இரத்தம் வந்தது. அம்மா துடித்துப் போய் கல்யாணியை தூக்கிக் கொண்டாள். இப்போது பாப்பா பயந்து அழுதது. கல்யாணி ஒரு காலை தூக்கியப்படி சென்று பாப்பாவை தூக்கிக் கொண்டாள்.
குழந்தை அழுத சத்தம் கேட்டு சித்தி கொல்லைப்புறத்திற்கு வந்தாள். “ஏன்டீ.. ஒரு வாயி சோறு ஒழுங்கா ஊட்ட வக்கு இருக்காடீ ஒனக்கு..” னங்கென்று தலையில் இறங்கியது குட்டு இப்போது கல்யாணிக்கு தலையும் வலித்தது.
கல்யாணிக்கு நிலாவை ஒன்பது வருடமாக தெரியும். அம்மா உயிரோடு இருக்கும் வரை இங்கு தான் கல்யாணிக்கு ஒரு வாய், நிலாவுக்கு ஒரு வாயாக சோறூட்டுவாள் குளிப்பாட்டுவாள். இரவு நேரங்களில் முக்காலியில் அமர வைத்து கதைகள் சொல்லுவாள். நிலா மரங்களில் ஒளிந்து ஒளிந்து போகும். இவள் கண்டுபிடிக்கிறாளா என்று பார்க்கும். கல்யாணி ஒடி ஓடி தேடும் போது சட்டென்று வெளியே வந்து அவளை பரவசப்படுத்தும். கைக்கொட்டி சிரிக்கும் மகளை அப்படியே வாரி அணைத்துக் கொள்ளவாள். இப்படிதான் அவளுக்கு நிலா அறிமுகமானது. ஒரு நாள் வாயில் சோற்றோடு, மேலே பார்த்தவாறே ஓடிவந்தவள், கிணற்றுமுட்டில் இடித்துக்கொண்டாள். அம்மா பதறி போய் தூக்கிக் கொண்டாள். கிணற்றுமுட்டில் இடித்துக் கொள்ளும் போது மறைந்து விட்ட நிலா, இவளை அம்மா தூக்கி கொண்டதும் வெளியே வந்து இவளைப்பார்த்து சிரித்தது.
நல்ல வேளை சித்தி வேலை வாங்கினாலும் அந்தி சாய்ந்த நேரங்களில் இங்கு வர அனுமதிக்கிறாள். குழந்தைக்கும் சாப்பாடு ஊட்டி விடச் சொல்கிறாள்.
“இங்க பாருடா… நிலாவுக்குள்ள அம்மாச்சி விதவிதமாக பலகாரம் சுட்டு அடுக்கி வச்சுருக்காங்க.. அதையல்லாம் மாமா நாளைக்கு கொண்டு வருவாங்க..” தங்கைக்கு காட்டியவாறே சோறுட்டினாள். குழந்தையும் மேலே பார்த்து சிரித்தது. நேற்று மாமா வருவதாக ஃபோன் செய்ததிலிருந்தே கல்யாணிக்கு உற்சாகம் தொற்றிக் கொண்டது. நிலா இவளை பார்க்க வந்தவுடனேயே விஷயத்தை சொல்லி விட்டாள். தங்கைக்கு சோறூட்டும் போது நிலாவில் கேசவன் மாமாவை கூடக் காட்டினாள்.
அடுத்த நாள் பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும்போது கேசவன் மாமா சேரில் உட்கார்ந்திருந்தார். அவள் நிலாவில் பார்த்த அதே கலரில் மாமா பேண்ட், சட்டை போட்டிருந்தார். ஓடி வந்து கல்யாணியை தூக்கி வைத்துக் கொண்டார்;. கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டார். கல்யாணி கன்னத்தை துடைத்துக் கொண்டாள.; அம்மாவும் இப்படிதான். மாறி மாறி முத்தமிடும் போது கன்னத்தில் எச்சில் படிந்திருக்கும் இவள் துடைத்துக் கொள்வாள். எச்சிலை துடைத்து எவ்வளவு நாளாகி விட்டது என நினைத்துக் கொண்டாள். இப்படி தூக்கி கொள்வது கூட அவளுக்கு இப்போது வெட்கமாக இருந்தது. அப்பாவுக்கு வேலை அதிகமாக இருந்ததால் அவரும் தூக்கிக் கொள்வதில்லை.
தட்டு நிறைய தீனி எடுத்து வந்தாள் சித்தி. வேறு யார் வந்திருக்கிறார்கள்..? அட எனக்கு தான் கொடுக்குறாங்க… ஆர்வமாக சாப்பிட்டாள். “தெனமும் நீ வா மாமா… அப்ப தான் தெனமும் தீனி கிடைக்கும்…” மாமாவின் பார்வை ஒரு கணம் சித்தியை பார்த்து விட்டு தாழ்ந்தது. அதற்குள் மடியிலிருந்த கல்யாணி இறங்கி ஓடி விட்டிருந்தாள்;.
கேசவனுக்கு வேலை கிடைத்திருக்கிறதாம். “மாமா எப்பக்கா வருவாரு..?” பேசிக்கொண்டிருந்தவன் கண்களாலேயே கல்யாணியை துழாவினான். கை கழுவும் சாக்கில் கிணற்றடிக்கு வந்தான். கல்யாணி துவைத்துக் கொண்டிருந்தாள். “ஏன் பாப்பா நீ தொவைக்கிற…? சித்தி தோய்க்காதா…?” என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில். “அதுவா.. என்னோட யூனிஃபார்மு. இப்ப தோச்சு போட்டா தானே நாளைக்கு ஸ்கூலுக்கு போட்டுட்டு போக முடியும்..” “அதான் பாப்பா.. நீ ஏன் தோய்க்கிற..? நீ சின்ன பாப்பா தானே.. சித்தி தோச்சு போடாதா உன் யூனிபார்ம..?” “அத கேக்குறியா.. சித்திக்கு குட்டிப்பாப்பாவை பார்க்கவே நேரமில்லை… அதுனால நான் போட்டுக்குற துணியை என்னையே துவைச்சுக்க சொன்னாங்க…”
மாமா கல்யாணியை தூக்கி மடியில் வைத்துக் கொண்டேயிருந்தார். அவர் கண் கலங்கி இருந்தது. உள்ளே சித்தி சமையல் செய்து கொண்டிருந்தாள். அப்பப்போ கல்யாணி சமையல் உள்ளுக்கு ஓடி போய் எதாவது செய்து விட்டு செய்து விட்டு ஓடி வந்தாள். திரும்பி வந்து மாமாவிடம் உட்காரும் போது குட்டிப்பாப்பா பழக்க தோஷத்தில் அவளது மடியில் ஏறிக் கொள்கிறது. பாப்பாவை அணைத்துக் கொஞ்சினாள் கல்யாணி. இருவரையும் மடியில் தூக்கி வைத்துக் கொண்டார் மாமா.
உள்ளேயிருந்து எட்டிப் பார்த்த சித்தி ‘ஏய்.. மாமாவுக்கு கால் வலிக்கும்.. ரெண்டு பேரும் கீழ இறங்குங்க…” என்றவாறு தன் மகளை தூக்கிக் கொள்ள, மாமாவின் மடியிலிருந்து இறங்க எத்தனித்த கல்யாணியை மாமாவின் கைகள் அழுத்தம் கொடுத்து இறுக்கிக் கொண்டது. மாமாவை திரும்பி பார்த்தாள். “ஏன் மாமா ஒன் கண்ணெல்லாம் செவந்து கெடக்கு..?”
“நீ எங்களோட வந்துடுறீயா பாப்பா…? அம்மாச்சியும்;, தாத்தாவும் ரொம்ப நிம்மதியா இருப்பாங்க…”
“அங்க நிலா இருக்குமா மாமா…?”
“எந்த நிலாடா..?”
“அய்யய்ய… உங்க ஊர்ல நிலாவே கெடையாதா…? அதான் உனக்கு நிலாவ தெரியல…” என்றவள் “அப்ப நா வர்ல.. போ மாமா…” என்றவாறு இறங்கி ஓடினாள்.
“தம்பி.. சாப்பிட வாங்கோ…” என்று அழைத்த அக்கா கணவரின் மனைவியை பார்த்தான். கையை கழுவிக் கொண்டு மனையில் அமர்ந்தான்.
“அக்கா… நான் அடுத்த வாரம் மெட்ராஸ{ல வேலயில ஜாயின் பண்ணலாம்னு இருக்கேன்.. வயசான காலத்துல அம்மா, அப்பாவை தனியா வுட்டுட்டு போறது எனக்கு உறுத்தலாயிருக்கு. கல்யாணி அவங்களோட இருந்தா கொஞ்சம் ஆறுதலா இருக்கணும்னு தோணுது.. வேணும்னா பாப்பாவ அங்க இருக்கிற ஸ்கூல்ல சேத்துடலாம்.. நீங்க என்னக்கா சொல்றீங்க…?
சித்தி ஒண்ணும் கெட்டவளில்லை. ஆறேழு பெண் பிள்ளைகளுக்கிடையே பிறந்தவள். வறுமையால் இரண்டாம்தாரமாக வாக்கப்படும்போதே, ‘மாப்ளைக்கு அஞ்சு வயசுல ஒரு பொட்டப்புள்ள இருக்கு… அனுசரிச்சு போ…’ என்று அம்மாவால் சொல்லிக் கொடுத்து அனுப்பப்பட்டவள் தான். கல்யாணியை நன்றாக தான் பார்த்துக் கொண்டாள், தனக்கென ஒரு குழந்தை பிறக்கும் வரை. அன்றிலிருந்து நிலாவுக்கு பிரியமாகி போனாள் கல்யாணி.
“உங்க மாமாகிட்டே பேசுவோம்…” என்றவள், கேசவன் உள்ளங்கையில் திணித்த ரூபாய் நோட்டுகளை கவனமாக வாங்கி சமையலறையின் ஏதோ ஒரு டப்பாவில் மறைத்து வைத்தாள். இப்போது அவள் சிரிப்பு கொஞ்சம் செயற்கையானதாக தெரிந்தது.
அப்பா வந்து விட்டார். கிளம்பும் முன் மாமா இருவரிடமும் ஆசிர்வாதம் கூட வாங்கிக் கொண்டார். மாமா கிளம்பியவுடன் கிணற்றடிக்கு ஓடி வந்தாள் கல்யாணி. அப்போது தான் நிலா அவளது வளையல்களை பார்த்து மகிழ்ச்சிக் கொண்டதும். ஆனால் எப்போதும் நிலா இப்படி இருப்பதில்லை. ஒருமுறை திருவிழாவில் அப்பா வாங்கி தந்த ஊதலை நிலாவிடம் காட்டுவதற்காக எடுத்து வந்திருந்தாள். பின்னாலேயே சித்தி வந்தாள் “ஊதலை காணாம்னு தேடிக்கிட்டிருந்தேன்.. இங்க வச்சிட்டு ஊதுறியாக்கும்…? வா.. வந்து பாப்பாகிட்ட கொடு…” அண்ணாந்து பார்த்தவாறே சித்தியை பின் தொடர்ந்தாள். உடனே நிலா பாதியாகி விட்டது. அங்கிருந்த புங்கமரத்திலிருந்து ஒரு இலை அவள் காலுக்கருகே உதிர, வேகமாக அதை எடுத்தாள். ‘அய்.. இதை வச்சு பீப்பீ செஞ்சுக்குவேனே..’ மேகக்கூட்டத்திலிருந்து வெளிப்பட்ட நிலா இவளை பார்த்து சிரித்தது. “தாங்ஸ் நிலா..” என்றவாறு உள்ளே ஓடினாள்.
“கல்யாணி… வீட்டுப்பாடமெல்லாம் முடிச்சிட்டியாம்மா…?” அப்பா இன்று என்னவோ சீக்கிரம் வந்திருந்தார். அவளை மடியில் ஏற்றிக் கொண்டார்.
“இல்லப்பா… பாப்பாவுக்கு சோறுட்டிட்டு தான் செய்யணும்…” அதிர்ச்சியாக சித்தியை நிமிர்;ந்து பார்த்தார்.
“இல்லைங்க.. இன்னிக்கு பாப்பா சாப்புட ரொம்ப அடம் புடிச்சா… அதான் இவளை விளையாட்டு காட்டச் சொன்னேன்…”
“ஆமாம்பா.. எப்பவுமே நான் தானே ஊட்டுவேன்.. அதான் சித்திக்கிட்ட சாப்பிட மாட்டேங்கிறா…” தங்கைக்கு தாயாய் மாறிய மகளை பார்த்தார் அப்பா.
அன்று கூட அப்படிதான். கிணற்றடியில் உட்கார்ந்து பாத்திரம் துலக்கிக் கொண்டிருந்தாள் கல்யாணி. அவளுக்கு இந்த வேலை பிடித்தமாகதான் இருந்தது. “இன்னிக்கு எங்க சயின்ஸ் டீச்சர் என்னை அடிச்சுட்டாங்க… ஏன் தெரியுமா…? நேத்து நான் வீட்டுப்பாடமே செஞ்சுட்டு போகலை தானே.. அதான்… ஏன் செய்யலேன்னு நீ கேக்க மாட்டீயா…? நேத்து சித்தி வீட்ட பூட்டிட்டு, என்னை பக்கத்து வீட்ல விட்டுட்டு வெளியில போயிட்டாங்க.. நான் சயின்ஸ் நோட்டை எடுக்க மறந்துட்டு பக்கத்து வீட்டுக்கு போயிட்டேன்.. எல்லாரும் கடையிலேயே சாப்டுட்டு லேட்டா தான் வந்தாங்க.. எனக்கு ரொம்ப பசிச்சுச்சு.. அப்டியே தூங்கிட்டேன்;;;.. அதுனால வீட்டுப்பாடம் செய்யலை.. இப்பவும் எனக்கு பசிக்குது… ஒனக்கு பசிக்குல… நீ பசிச்சா என்னா சாப்புடுவ…?”
பக்கத்திலிருந்த மரத்திலிருந்து காம்;பு விடுப்பட்ட கொய்யாபழம் ஒன்று அவள் காலடியில் விழுந்தது. “அய்ய். கொய்யாப்பழம்… தேங்க்ஸ் நிலா…” என்றவாறு பழத்தை கடித்தாள். அன்றைக்கும் சீக்கிரமே வீடு திரும்பி விட்ட அப்பா பின்னால் நின்றிருந்ததை அவள் கவனிக்கவில்லை. “என்னம்மா.. தனியாவே பேசிக்கிட்டிருக்க..? நேத்து ராத்திரி நீ சாப்பிடலையாடா…? சித்திக்கிட்ட கேட்டதுக்கு சாப்பாடு கொடுத்துட்டு தான் வந்தேன்னு சொன்னாளே…?” முகம் அதிகபட்ச கவலைக் காட்டியது.
“சித்தி அப்படிதாம்பா மறந்துடும்.. நேத்து கூட மாமா குடுத்த பணத்தை நான் தான் எடுத்து எங்கயோ வச்சிருக்கேன்னு என்னை அடிச்சுப்புடுச்சு… அப்றம் அலமாரியில தான் இருந்துச்சு..”
“மாமா குடுத்த பணமா…? எப்ப கொடுத்தாங்க…? ஏன் கொடுத்தாங்க…?”
“இதெல்லாம் எனக்கு தெரியாது… என்னை வுடுப்பா. வெளக்கி போட்ட பாத்திரமெல்லாம் காஞ்சு போயிடும்.. அப்றம் சித்தி திட்டும்…” மேகத்துக்குள் மறைந்த நிலா அன்று ஏனோ வெளியே வரவில்லை. சித்தி தான் கோபமாக வந்தாள். “ஏன்டீ.. உங்கப்பா வந்ததும் வத்தி வச்சுட்டியா..? ஏதோ தாயில்லாத புள்ளைன்னு பாவம் பார்த்தோம்னா இந்த அளவுக்கு கொழுப்பு வச்சு போச்சா உனக்கு…” சத்தம் வராது அடித்தொண்டையில் கத்திய சித்தியை பயத்துடன் பார்த்தாள். இன்று ஏனோ அப்பாவின் அருகில் படுத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது அவளுக்கு.
“அப்பா.. நான் இன்னிக்கு உன் பக்கத்துல படுத்துக்குட்டுமா…?
“ஓ.. தாராளமா படுத்துக்கோடா…” அப்பா சித்தியை நேராக பார்ப்பதை தவிர்;த்தார். நடுநிசியில் அவளுக்கு வந்த கனவில் அப்பாவிடம் கேட்டாள் ‘அப்பா.. வத்தி வைக்கறதுன்னா என்னாப்பா…?’ உறக்கத்திலேயே அப்பாவை தேடினாள். அப்பா இருந்த இடம் காலியாக இருந்தது. கண் விழித்துப் பார்த்தாள். அப்பா சித்தியின் அருகில் படுத்திருந்தது தெரிந்தது. தலையணையை இறுகப் பிடித்தப்படி தூங்கி போனாள்.
சித்தி அவளிடம் பேசவில்லை. நிலாவும் சிறு கீற்று போல் தான் இருந்தது. அழுகையாக வந்தது அவளுக்கு. அடுத்தநாள் இரவு கிணற்றடிக்கு வந்தாள். நிலா வரவேயில்லை. அப்பா தான் வந்தார். ‘அமாவாசை ராத்திரி.. கிணத்தடிக்கு லைட்ட போட்டுக்கிட்டு வந்தா என்னா…? என்றவாறு லைட் சுவிட்சை தட்டினார்.
பள்ளியிலிருந்து வீடு திரும்பிய போது அவள் துணிகள் துவைத்து கொடியில் உலர்த்தப்பட்டிருந்தது தெரிந்தது. சித்தி ஒரு தட்டில் தீனியை வைத்து நீட்டினாள். ஸ்கூல் விட்டு வந்ததும் ராதீ, ரேவதி வீட்ல எல்லாம் அவங்கம்மா தெனமும் இப்;டி தான் குடுப்பாங்களாம்… யாரோ வந்துருக்காங்க.. யாரா இருக்கும்..? உள்கூடத்தில் எட்டிப் பார்த்தாள். “அய்.. தாத்தா…” ஓடிவந்து படுத்திருந்தவரின் வயிற்றில் உட்கார்ந்தாள். பின்னாலேயே அம்மாச்சியின் குரல் கேட்டது. “பள்ளிக்கூடத்திலேர்ந்து வந்துட்டியா பாப்பா…?” என்றவாறு கைகளை துடைத்தப்படியே அம்மாச்சி அவளை தூக்கி அணைத்துக் கொண்டாள்.
“அந்த ராட்சஸி உன்னை அடிப்பாளாடீ…?”
“எந்த ராட்சஸி பாட்டீ…? நான் வேலை செய்யலேன்னா சித்தி தான் அடிக்கும்… ராட்சஸியெல்லாம் அடிக்காது…” கல்யாணி சிரித்தாள்.
“ஏன்டீ.. புள்ள மனசுல நஞ்சை வெதைக்கிற…?” தாத்தா அதட்டினார்.
“நான் ஒண்ணும் இல்லாதததை சொல்லலை.. பேசாம இவளை கூட்டிக்கிட்டு போயிடலாம்… கேசவனும் அதைதான் சொல்றான்…”
“மாப்ளை அதுக்கு ஒத்துக்கணுமில்ல…?
“மாப்ளையாம் மாப்ளை.. என் பொண்ணு தான் அவன் கூட வாழறாளாக்கும்…?”
“நீ நொடிக்காதே.. பட்டுன்னு அறுந்து போற உறவில்ல இந்த அப்பன்-மக உறவு.. நான் மாப்ளைக்கிட்ட பக்குவமா பேசறேன்.. நீ எதாவது பேசி காரியத்தை கெடுத்துடாதே…”
அப்பா வந்ததும் விவாதிக்கப்பட்டது. “இன்னும் பதினைஞ்சு நாள்ல முழுப்பரிட்சை முடிஞ்சிடும்… நீங்க கல்யாணியை அங்கே கொண்டுபோய் சேர்த்துக்கோங்க…” அப்பா அனுமதித்து விட்டார்.
“இவளை பிரிஞ்சு எப்படி இருக்க போறேன்னு தெரியல… குட்டிப்பாப்பாவுக்கு அக்கான்னா உயிர்… நீங்களே முடிவெடுத்த பிற்பாடு நான் சொல்ல என்ன இருக்கு…?” சித்தியின் கண்கள் அவள் பேச்சுக்கு ஒத்துழைக்கவில்லை.
அன்று இரவு முழுவதும் அப்பா, கல்யாணியின் அருகிலேயே படுத்திருந்தார்.
“ஊர்ல போயி அடம் பண்ணாம இருக்கணும்.. நல்லா படிக்கணும்.. அப்பா அடிக்கடி வந்து உன்னை பார்த்துக்குவேன்.. நீ சமர்த்தா இருந்துக்கோ…”
“தாத்தா வீட்ல நிலா இருக்குமாப்பா…?”
“நிலான்னா யார்டா..? உன் ஃபிரெண்டா…?”
“இல்ல… அம்மா…”
கிணற்;றடி முற்றத்து நிலவொளியில் கல்யாணி ஆழ்ந்து உறங்கி கொண்டிருப்பது தெரிந்தது.
டழூழூழூ
- படைப்பு
- மொழியின் அளவுகோல்
- தனலெட்சுமி பாஸ்கரன் கவிதைகள் – ஒரு பார்வை.
- புகழ் பெற்ற ஏழைகள் – 12
- கல்யாணியும் நிலாவும்
- மருத்துவக் கட்டுரை மதுவும் கணைய அழற்சியும்
- போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 25
- நம்பிக்கை
- தாகூரின் கீதப் பாமாலை – 70 பிரிவுக்கு முன் செய்த முடிவுகள் .. !
- என்னைப் பற்றிய பாடல் – 23
- காரைக்குடி கம்பன் கழகம்
- மனதாலும் வாழலாம்
- கற்றுக்குட்டிக் கவிதைகள்
- லிங்கூ-வில் இயங்கும் காலமும் வெளியும் – கவிஞர் என்.லிங்குசாமி கவிதைகளை முன்வைத்து
- மாலு : சுப்ரபாரதிமணியனின் நாவல் – சமகால வாழ்வே சமகால இலக்கியம்
- ப.மதியழகன் கவிதைகள்
- பேராசிரியர் அர. வெங்கடாசலம் – திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் -ஓர் உளவியல் பார்வை – வள்ளுவ ஆன்மீகம்
- கவிதைகள்
- பிரபஞ்சத்தின் மகத்தான அணுவியல் மர்மங்கள் : மூலக்கூறில் அணுக்களின் நர்த்தனம் .. !
- வேர் மறந்த தளிர்கள் – 8,9,10
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 15
- உள்ளே ஒரு வெள்ளம்.
- ஆகஸ்ட்-15 நூலுக்கு மெய்யப்பன் அறக்கட்டளை விருது
- டௌரி தராத கௌரி கல்யாணம்…! – 8
- “செங்கடல்”
- இரயில் நின்ற இடம்
- என்ன ஆச்சு சுவாதிக்கு?
- நான் ஒரு பொதுமகன். And Im not a terrorist
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -7