நம்பிக்கை

This entry is part 8 of 29 in the series 23 ஜூன் 2013

                                                                                                                    டாக்டர்     ஜி.ஜான்சன்

 

நம்பிக்கை என்பது அவரவரைப் பொருத்தது. ஒருவரின் நம்பிக்கை அடுத்தவருக்கு அர்த்தமற்றதாகவும், மூடத்தனமாகவும் தெரியலாம்.சில வேளைகளில் இந்த மூடத்தனத்திலும் ஓர் உண்மை புதைந்திருப்பதையும் கண்டு வியந்துள்ளேன்.

இது நடந்து சில ஆண்டுகள் ஆனாலும் அவ்வப்போது நினைவில் வந்து போகும் பொது நான் சிரித்துக்கொள்வேன்.

என் பால்ய நண்பன் செல்வன். என்னைவிட இரண்டு வயது இளையவன். பட்டதாரி. நிறைய ஆங்கில நூல்களை படிப்பவன். ஆங்கில எழுத்தாளன். நல்ல சிந்தனையாளன். பிறப்பால் கத்தோலிக்க கிறிஸ்துவன்.திருமணம் ஆகாதவன்.கொஞ்சம் முன்கோபி

தத்துவ நூல்களையும், அனைத்து சமய நூல்களையும் படித்தபின், கடவுள் பற்றிய உண்மையை அறிந்துகொள்ள முழு நேரத்தையும் செலவிட்டான்.பல நாடுகளுக்கும் சென்று வந்தான். சொல்லாமல் கொள்ளாமல் திடீர் திடீரென்று காணாமல் போய்விடுவான்.

முதலில் சிவ பக்தனானான். சிவபெருமான் திருவண்ணாமலையில் தரிசனம் தந்ததாகக் கூறி சிவ வழிபாட்டில் தீவிரம் காட்டினான். சந்நியாசி கோலத்துடன் கைலாஸ் வரை சென்று வந்தான். எப்போதும் சிவன் பற்றியும் ஓம் பற்றியும் பேசுவான். எல்லா கடவுள்களுக்கும் முன்னோடி சிவன்தான் என்றும் வாதிடுவான்.

எனக்கு இதில் மாறுபட்ட கருத்து இருந்தாலும், அவனுடன் வீண் சண்டை வேண்டாம் என்று அதிகம் வாதிடுவதுல்லை. உண்மையில் எந்த கடவுள் உண்மையானக் கடவுள் என்பதை வாதிடுவதில் அர்த்தம் இல்லை. நாம் கடவுளை அறியோம். அவர் மகா சக்தி என்றுதான் அவரைப் பற்றி கேள்வி கேட்காமல் விசுவாசத்தின் அடிப்படையில் ஒவ்வொருவரும் அவரவர் கடவுளை வழி படுகிறோம்.

நான் சில வேளைகளில் கடவுளைப் பற்றி அவனுடன் பேசும்போது நம் மூதாதையர் பற்றி ஒரு கேள்வி எழுப்புவேன். உலகின் மதங்கள்  தோன்றி வழிபாட்டு முறைகள் வருவதற்கு முன்பே பல ஆயிரம் நூற்றாண்டுகளாக நம் முன்னோர்கள் வாழ்ந்துள்ளனர். அவர்களுக்கு எந்த மதமும் தெரியாது. மனித நாகரிகத்தால் தொன்றியவைதான் இன்றைய மதங்கள் என்பேன்.

அவர்களும் இயற்கையின் படைப்புகளான சூரியன், சந்திரன், விண்மீன்கள், இயற்கையின் சீற்றங்களான இடி, மின்னல், மழை, போன்றவற்றை வழி பட்டிருக்கலாம் என்று கூறி அவர்களும் எதோ ஒரு கடவுளை வழிபட்டிருப்பார்கள் என்று வாதிடுவான்.

இவ்வாறு கடவுள் பற்றிய எங்கள் வாதங்கள் முடிவின்றிதான் தொடர்ந்தது – இன்னும் தொடர்கின்றது!

திடீர் என்று அவன் பல மாதங்கள் காணவில்லை. தொடர்பும் ஏதுமில்லை.

           மீண்டும் சந்தித்தபோது தாய்லாந்து நாடு சென்று ஒரு புத்த விகாரத்தில் தங்கி புத்த சந்நியாசிகள் பற்றியும் புத்தர் போதனைகள் பற்றியும் தெரிந்து வந்துள்ளதாகக் கூறினான்.நான் அது கேட்டு வியந்து போனேன்.

புத்தரின் புனிதம் பற்றியும், அவரின் தியாகம் பற்றியும், போதனைகள் பற்றியும் பேசிக்கொண்டிருப்பான். புத்தரை நானும் விரும்புவேன். ஆதலால் சர்ச்சைகள் அதிகம் எழவில்லை. அரண்மனை வாசம் புரிந்த புத்தர், அனைத்து ராஜபோக சுகங்களையும் ஆடம்பரங்களையும் தியாகம் செய்துவிட்டு சாதாரண சந்நியாசியாக மாறி எளிமையையும் உண்மையையும் போதித்தவர் புத்தர் . அதனால் அவர் மீது எனக்கு எந்த சந்தேகமும் எழவில்லை. அவன் கூறிய அனைத்தையும் நான் ஏகமனதாக ஆமோதித்தேன்.எங்களுக்குள் சர்ச்சைகள் எழ வாய்ப்பில்லை.

வழக்கம்போல் ஒரு ஞாயிற்றுக்கிழமை என்னை சந்திக்க சிங்கப்பூரிலிருந்து வந்திருந்தான். காலை சிற்றுண்டிக்குப்பின், கோவிலுக்கு போகலாம் என்றான். நான் எந்த கோவில் என்று கேட்டேன். எந்த கோவிலானாலும் சரி என்றான்..

ஸ்ரீ முனீஸ்வரர் கோவில் பிளந்தோங்கில் உள்ளது. நான் அன்றாடம் அதைத் தாண்டி காரில் சென்றபோதிலும் ஒரு முறைகூட உள்ளே சென்று பார்த்ததில்லை. அவனுடன் அக் கோவிலைப் பார்க்கலாம் என்று அங்கு சென்றோம்.

கோவில் வளாகம் சிறியதுதான். நான் மேலோட்டமாக பார்த்து ஒரு சுற்று சுற்றி வந்தேன். அவனோ கோவில் சுற்றிலும் வெவ்வேறு இடங்களில் உள்ள சிலைகள் முன் பய பக்தியுடன் நின்று இரு கை கூப்பி வணங்கினான். பின்பு கோவிலினுள் நுழைத்து விட்டான். நான் உள்ளே போகாமல் அவனிடம் சொல்லிவிட்டு திரும்பினேன். அருகில் இருந்த தேநீர் கடையில் உட்கார்ந்திருந்தேன்.

சுமார் அரை மணி நேரம் கழித்து அவன் வந்தான். அவனின் கையில் ஒரு சாமி படம் இருந்தது. அது கண்ணாடி போடப்பட்டது.

” இது என்ன? அங்கே வாங்கினாயா ? ” என்று கேட்டேன்.

” இல்லை. அங்கே ஒரு மரத்தடியில் இருந்தது. ” அவன் அதை என்னிடம் தந்தான்.

நான் அதைப் பார்த்தேன். அது ஒரு பெண் கடவுளின் படம். நான்கு கரங்களுடன் ஆவேசமாக ஆடுவது போன்று தோன்றியது.

” இது யார் தெரியுமா ? ”  தேநீருக்குச் சொல்லிவிட்டு என்னிடம் கேட்டான்.

” தெரியலையே? ” நான் உண்மையைச் சொன்னேன்.

” இதுதான் காளி .”

” அப்படியா? ”

” என்ன அப்படி பார்க்கிறாய்? பார்க்க பயமாக உள்ளதா ? ” அவன் சொன்னது உண்மைதான். அதைப் பார்க்க அப்படித்தான் இருந்தது.

” இதை ஏன் எடுத்து வந்தாய்? இது யாருடையது.? அங்கே கேட்டு எடுத்து வந்தாயா ? ”

” யாரிடமும் கேட்க வேண்டியதில்லை. யார் வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம்.”

” கோவிலில் இப்படி இலவசமாக தருவார்களா ? ”

” இல்லை. யாரோ இதை வேண்டாம் என்று அந்த மரத்தடியில் வைத்துள்ளனர்.இதை யாரும் எடுக்கவில்லையென்றால் கோவில் நிர்வாகத்தினர் இதை ஆற்றில் வீசி விடுவார்கள்.”

” நீ சொல்வது எனக்குப் புரியவில்லை. புரியும்படியாத்தான் சொல்லேன்.” உண்மையில் இது பற்றி நான் இதற்குமுன் கேள்விப்பட்டதில்லை.

அவன் கூறிய விளக்கம் கேட்டு நான் அதிர்ந்து போனேன்!

ஒரு சிலர் அவர்கள் விரும்பும் சாமிப் படம் வாங்கிச் சென்று வீட்டில் மாட்டி பூஜை செய்வார்களாம். அவர்களுக்கு சில ,துன்பம், துயரம் நேர்ந்தால் அந்த சாமி படத்தால்தான் அப்படி நேர்கிறது என்று நம்பி அந்த படத்தை அகற்றி இப்படி கோவிலில் வைத்து விடுவார்களாம். அதை யார் வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாமாம்.

சாமிப் படத்துக்கு இப்படி செய்வது மரியாதை இல்லையே என்று நான் எண்ணியது உண்மை.

” சரி. இதை நீ என் எடுத்து வந்தாய்? ” புரியாமல்தான் அவனிடம் கேட்டேன்.

” எடுத்து வந்ததில் என்ன தப்பு? எனக்கு பிடித்தது எடுத்து வந்தேன். ” இவ்வாறு அவன் கொஞ்சம் கோபத்துடன் பதிலளித்தான்.

” இதை வீட்டில் வைத்ததால் துன்பம் உண்டானது என்று யாரோ அதைக் கொண்டு வந்து இங்கே வைத்துச் சென்றுள்ளனர். இதை நீ எடுத்து வந்தால் அந்த துன்பம் உனக்கு வராதா? ” நான் நியாயமான கேள்வியைத்தான் அவனிடம் கேட்டேன்.

” உனக்கு இப்போ பயமாக உள்ளதா ? காளி என்றால் யார் என்பது உனக்குத் தெரியுமா? ”

அவனின் கோபம் அதிகமானது.

” எனக்கு காளி பற்றி அதிகம் தெரியாது.ஆனால் என்னைப் பொறுத்தவரை இது வெறும் படம். ஒரு ஓவியனின் கற்பனையில் உருவான உருவமே. காளியை யார் நேரில் பார்த்தது? ஒரு ஓவியன் வரைந்த இதைப் பார்த்து நான் ஏன் பயப்பட வேண்டும்? “: என் நிலையை உறுதிப் படுத்தினேன்.

” இல்லை. நீ பொய் சொல்கிறாய். பகுத்தறிவாளன் என்று சொல்லிக்கொள்ளும் நீ இந்த படத்தைப் பார்த்து பயப்படுகிறாய். ” கொஞ்சம் கோபத்துடன் கூறினான்.

” என்னைப் பொறுத்தவரை இது .ஒரு ஓவியம்தான்! இதைக் கண்டு பயப்பட நான் என்ன சின்ன பிள்ளையா ? ” எனக்கும் கோபம் வந்தது.

” இதை உன் வீட்டுக்கு எடுத்து வந்தால் உனக்கு கெட்டது ஏதும் நடந்துவிடுமோ என நீ அஞ்சுகிறாய். அதுதான் உண்மை.” அவன் விடுவதாக இல்லை.

” நீ சொல்வதில் அர்த்தம் இல்லை. அது உன் கற்பனை…சரி சரி. வீடு செல்வோமா? ” இருக்கையை விட்டு எழுந்து காரை நோக்கி நடந்தேன்.

அவன் தயங்கியபடி நின்றான்.

” நான் உன் வீடு வரலை. என்னை பஸ் நிலையத்தில் இறக்கி விடு. நான் சிங்கப்பூர் திரும்புறேன்.” அவனின் கோபம் தீரவில்லை.

”  ஏன் இந்த திடீர் மாற்றம்? மாலை வரை இருக்கப் போவதாகத்தானே சொன்னாய் ”

” இல்லை . நான் உடன் திரும்புறேன். உன் காரில் இந்த படத்தை எடுத்து வரலாமா? ”

”  நான்தான் சொல்லிவிட்டேனே? இதை ஒரு படமாகதான் நான் பார்க்கிறேன்  என்று .இன்னும் நீ நம்பலையா? நம்பாவிட்டால் பரவாயில்லை.வா போகலாம். ” சமாதானம் கூறலானேன்.

காருக்குள் அவன் அமர்ந்துகொண்டான்.

அவனின் பிடிவாத குணம் நான் நன்கறிவேன். இதுபோன்று எங்களுக்குள் பல தடவைகள் சண்டையும் மன வருத்தமும் நிகழ்ந்துள்ளது.கொஞ்ச நாட்கள் தொடர்பு இல்லாமல் போய்விடும்.,பின்பு ஒரு நாள் ஒன்றுகூடுவோம்.

அதற்குமேல் அவன் பேசவில்லை. சிந்தனையில் ஆழ்ந்து போனான்.

பேருந்து நிலையம் வந்தது. காரை நிறுத்திவிட்டு சிங்கப்பூர் செல்லும் பேருந்து நிற்கும் இடம் சென்றோம்.

அவன் கைகுலுக்கி விடை பெற்றான்.

” இந்த படத்தை வைத்திருந்தவர் வீட்டில் துன்பம் உண்டானது.அதை நீ எடுத்து வந்ததால் நம்மிடயே சண்டை வந்துவிட்டது. கோபம் தீர்ந்தபின் சந்திப்போம் .” அவனுக்கு விடை தந்தேன்.

பேருந்து புறப்பட்டது. அவன் சென்றுவிட்டான்!

( முடிந்தது )

 

 

 

Series Navigationபோதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 25தாகூரின் கீதப் பாமாலை – 70 பிரிவுக்கு முன் செய்த முடிவுகள் .. !
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *