டௌரி தராத கௌரி கல்யாணம்..! – 10

This entry is part 11 of 25 in the series 7 ஜூலை 2013

 

 
 
 
வைத்த கண் வாங்காமல் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த சித்ராவிடம் “ஏன்மா….அப்படிப் பார்க்கறே?” அந்தப் பார்வையில் பல அர்த்தங்களை புரிந்து கொண்ட கௌரி நிதானமாகக் கேட்கிறாள்.
நீ ஏதோ சொல்ல வந்து வார்த்தையை முழுங்கின மாதிரி இருந்தது….அதான்.
அது….அது…அது வந்து, வேற ஒண்ணுமில்லை…இப்பத்தான் நேக்கு பொருளோட அருமையே புரிஞ்சுது. அப்பப்பா….முதல் தடவையா டெல்லில எல்லாத்தையும் தொலைச்சுட்டு நின்னதும்…நான் பட்ட பாடு…எப்படியாவது கிடைச்சுடாதான்னு தவிச்சுப் போயிட்டேன்மா. தேடி…தேடி..தேடி…தேடி…நான் தோத்தேன். கண்டிப்பா என் அஜாக்கிரதைக்கு கிடைச்ச அடியாக்கும் அது. இனிமேல் நான் ரொம்ப ஜாக்கிரதையா இருப்பேன். மனம் ஒன்று நினைத்து வாய் ஒன்றைப் பேசி சமாளித்தது.
எதையாவது தொலைச்சால் தான் அதோட அருமை புரியும். அதனால் தான் எதையுமே ஜாக்கிரதையா வெச்சுக்கணும்னு சொன்னேன். சரி நீ ஆபீஸ் கிளம்பு. முடிஞ்சா சாயந்தரம் சீக்கிரம் வந்துடு. இப்போ உனக்கு நாழியாறது நானும் என் வேலையைப் பார்க்கிறேன்….என்று அங்கிருந்து நகர்ந்தாள் சித்ரா.
ம்மா…..இன்னைக்கு கொஞ்சம் வெளி வேலை….வர கொஞ்சம் லேட் ஆகும். அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. இப்பவே சொல்லிட்டேன்…கௌரி தன் அறைக்குள் சென்று தாழிடும் சத்தம் கேட்டது சித்ராவுக்கு.
ம்கும்…..தெரியாதாக்கும்…..அந்த கார்த்தியைப் பார்க்க வேகித்துன்னு. நல்லவேளையா நான் சொல்ல வேண்டியதை முன்னாடியே உன்கிட்ட சொல்லியாச்சு.இனி மகளே உன் சமத்து, என்று அலுத்துக் கொண்டாள் .
திடீரென வந்த மின்சாரத்தில் அமைதியான வீடு மீண்டும் ஸ்ரீ நாராயணீயத்தைத் தொடர்ந்தது. சித்ராவின் மனசு பக்திக்குத் தாவியது.
டெல்லி ப்ராஜெக்ட் வெற்றிகரமாக கிடைத்ததையும் அதற்கான பொறுப்புகளையும் பற்றி சக டீம் லீடர்களிடம்  அன்றைய மீட்டிங்கில் சொல்லி விட்டு தனது மெயில் பாக்ஸைத் திறந்து பார்த்த கௌரிக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அவளை மூன்று மாதங்கள் லண்டன் பிராஞ்சுக்கு அனுப்புவதாகத் தெரியப்படுத்தி  வந்த மடல் அது.
வாவ்….கிரேட்….! என்று சந்தோஷத்தில் மனம் துள்ள , தன் சம்மதம் தெரிவித்து அதை ஏற்கும் விதமாக உடனே பதில் மடலும்  அனுப்பி வைத்தாள் ..கூடவே இதை கார்த்திக்கிடம் சொன்னால் என்ன சொல்வானோ? இங்க பக்கத்துல டெல்லிக்கு போனதுக்கே ஐயாவுக்குக் கோபம். தாங்கலை…பேச்சு மூச்சக் காணம் …! என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டாலும்..”எல்லாம் சாயந்தரம் நேரா பார்த்துப் பேசினால் சரியாயிடும்…..கூடவே அவனுக்கும் தரப்  போறேனே சர்ப்ரைஸ்….! இட்ஸ் எ கிரேட் கிஃப்ட்
ஃப்ரம் மை சைட்…! என்றும்  நினைத்துக் கொண்டாள் .
முதல் முதலாக கார்த்திக் அங்கு வந்து அவளது அறை வாசலில் நின்றது நினைவுக்கு வந்தது கௌரிக்கு. எப்படியாவது இன்னைக்கு கார்த்திக்கு போன் பண்ணி வரச்சொல்லி மீட் பண்ணியாகணும்.
இப்போல்லாம் நான் எப்பப்பாரு உன்னையே  ரொம்ப நினைச்சுண்டே இருக்கேன்…. உனக்குத் தெரியுமா?  அதான் டெல்லில போய் கூட உன்னை ரெகமண்ட் பண்ணி…இந்த கிஃப்ட் …இந்தா…. ஆர்டர் .அதனால தான் ரெண்டு நாள் எக்ஸ்ட்ராவா  தங்க வேண்டி வந்தது .ன்னு சொல்லி அவன் கையில் திணித்து அவனது ரியாக்ஷனைப் பார்க்கணும்..அப்பறம்…நான் லண்டன் போற சந்தோஷத்தைச் சொல்லணும் .
மாலையில் கார்த்தியைப் பார்த்ததும் பேச வேண்டியதை ஒவ்வொன்றாக மனசுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டாள் கௌரி. டேபிள் மீதிருந்த தனது டைரியில் மனதில் நினைத்ததை கிறுக்கினாள்.

என்று  நீ என்  இதயத்துள் நுழைந்தாய் ?

சரியாக நினைவில் இல்லை
ஏழு ஜென்மம் முன்பு
ஏற்கனவே இடம் பிடித்தாயோ?
எனக்கும் உனக்கும்
இடையே இருக்கும்
இடைவெளிதான்
நம் நெருக்கம்..!
என் கண்களில்
படாத உன் முகம்
கண்ணாடி பிம்பமாய்
என் இதயத்துள் எப்படி?
காலையில் நிமிர்ந்த சூரியன்
அலைந்து விட்டு கடலுக்குள்
கால் நனைக்கும்  வரையில்…..
உன் நினைவுகளோடு
என் வாழ்நாளில் ஒருநாள்
அந்தி சாய்ந்து சந்திரன் சிரிக்க
உன் கனவோடு
என் வாழ்நாளின் ஒரு இரவு…!
இதயம் நிறைந்து
வழியும் நினைவுகள்
யாவும் வீணாகாமல்
கவிதைப் பாத்திரத்தில்
பிடித்து வைக்கிறேன்….!
எழுதியதைப் படித்தபோது அது கவிதையானது….எப்டீடீ…கௌரி..? என்று தன்னையே கேட்டுக் கொண்டவள் ‘கிரேட்’ என்று சொல்லிக் கொண்டாள். நான் ரொம்ப மாறிட்டேன். எனக்குள் கவிதை கூடப் பூக்கிறதே.எனக்குள் என்னென்னவோ மாற்றங்கள். மனதுக்குள் பூரித்துப் போன கௌரி   இண்டர்காம் மணி அடித்து அழைத்தது. உணர்வுகளை ஓரமாக ஒதுக்கி விட்டு ரிசீவரை எடுத்து “கௌரி ஹியர் ” என்றாள்  மென்மையான குரலில்.கம்பீரமாக..வேலைகள் அவளை இழுத்தது. டிக் டிக் டிக் என நேரம் ஓடிக் கொண்டிருந்தது.

ஒரு வார லீவுக்குப் பின்பு  கார்த்திக் உள்ளே நுழையும் போதே அங்கிருந்த அவனது நண்பர்கள்…..”தொரகுனா இட்டுவன்டி..டும்…டும்…டும்..” என்று மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தார்கள்.,
என்னாச்சுடா மாப்பிள்ளை…….கல்யாணம் பாக்கப் போன இடத்தில் மாப்பிள்ளையாயிட்டியாமே …! கேள்விகள் ஒவ்வொரு டேபிளிலிருந்தும்  கணினியைத் தாண்டி விர் விர்ரென்று அவனைத் தாக்கியது.
ஆனாலும் அதிர்ஷ்டம் தாண்டா……! என்று சில குரல்கள் கார்த்திக்குக்கு ஆதரவு ஓட்டுப் போட்டது.
லேசாகப் புன்னகையை மட்டும் பதிலாகத் தந்து விட்டு கார்த்திக் அவனது இடத்தில் சென்று அமர்ந்தான்.மனசெல்லாம் முதலில் கௌரிக்கு எப்படியாவது விஷயத்தைச் சொல்லிவிடு…என்று ஆணையிட்டது.
இவன் நினைக்கவும் கைபேசி பாடியது.
எடுத்து…ஆவலுடன் .ஹலோ…!
ஹலோ…நான் தான் லாவண்யா….!
ம்ம்….சொல்லு..என்ன விஷயம்…?
நான் கார்த்தாலயே உன் கிட்ட கேட்டிருக்கணும்…மறந்துட்டேன்.
என்ன?
இன்னிக்கு என்னை பெசன்ட் நகர் பீச்சுக்கு கூட்டிட்டுப் போறியா? நான் ரெடியா இருக்கேன். எனக்கு பீச்சுன்னா கொள்ளை ஆசை.
இன்னிக்கு என்னால முடியாது. ஒரு வார வேலை அப்படியே பெண்டிங்க்ல இருக்கு…நான் ஆத்துக்கு வரதுக்கே நாழியாகும். இன்னைக்கு பீச் வேண்டாம்..சண்டே போலாம்…நீ வேணா அம்மாவோட எங்கேயாவது கோவிலுக்குப் போய்ட்டு வா..சொல்லிவிட்டு பதிலுக்குக் கூட காத்திராமல் இணைப்பைத் துண்டித்து விட்டு வேலையில் மும்முரமானான்.
மீண்டும் கைபேசி பாடி அழைத்தது.
எரிச்சலுடன்….ம்ம்ம்…..ஹலோ...என்று சுரத்தே இல்லாமல் இயந்தரத் தனமாக கேட்கவும்.
ஹலோ…நான் கௌரி….அதுக்குள்ள மறந்தே போயாச்சா? இல்லை கோவமா? என்று கிண் கிணு க்கவும்.
முகமெல்லாம் பிரகாசத்துடன்…..ஹேய்…..கௌரி…நீ… எப்போ வந்தே…என்னாச்சு?.உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு. குரலில் ஆனந்தம் தவழ்ந்தது. உண்மையான அன்பு கரை புரண்டு எழுந்தது. கண்களில் கண்ணீர் துளித்தது. உன்மேலக் கோபமா? எனக்கா? நோ வே….நீ தான் என் மேல் கொவிச்ச்க்கப் படாது…தென், உன்னோட இன்டர்நெட் டேட்டா கார்டு…டிக்கெட்ஸ் எல்லாம் என்கிட்டே மாட்டிண்டது…நீ எப்படி சமாளிச்சே…..ஃபோனில் கூட நீ கிடைக்கலை..
உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு.
அச்சச்சோ…உன்கிட்ட தான் இருந்ததா? அதெல்லாம் …முடிஞ்சுபோன எபிசோட் …நேர்ல சொல்றேன்….ஈவினிங் ஷார்ப்பா அஞ்சு மணிக்கு பெசன்ட் நகர் பீச்சுக்கு வந்துடு. உனக்கும்  நிறைய  சர்ப்ரைசஸ் …!  மறந்துடாதே…சொல்லிவிட்டு கைபேசியின் இணைப்பைத் துண்டித்தாள் கௌரி.
என்னவாயிருக்கும்….? என்று நினைத்துக் கொண்டே , நாலு மணிக்கே கிளம்பியாகணும். அஞ்சு மணிக்கு கரெட்டா பெசன்ட் நகர் பீச்சுல நிக்கணும்….நல்லவேளையா லாவண்யா கேட்டபோது வேலை இருக்குன்னு சொல்லிட்டேன்..என்று நிம்மதியானான்.
டிக் டிக் டிக் டிக் என்று நேரம்  மிகவும்  மெதுவாக நகர்வது போலிருந்தது கார்த்திக்குக்கு.
அத்தை….அத்தை…….இந்த கார்த்தியைப் பாருங்கோ…இன்னைக்கு பீச்சுக்கு அழைச்சுண்டு போ ன்னு சொன்னேன்….வேலை நிறைய இருக்கு..நீ அம்மாவோட எங்கேயாவது கொவிலுக்குப் போய்க்கோன்னு சொல்லிட்டார்..என்று எழுத்தம் திருத்தமாக அந்த ‘ர் ‘  ரை கொஞ்சம் அழுத்தியே சொன்னாள் லாவண்யா.
ம்ம்ம்….எல்லாம் கேக்கறது…..கேக்கறது……நோக்கென்ன இப்போ பீச்சுக்குப் போகணும் அவ்ளோ தானே? நானே அழைச்சுண்டு போறேன்…பெசன்ட் நகர் பீச்..அங்கேயே அஷ்டலக்ஷ்மி கோவிலும் இருக்கு…ரொம்ப நன்னாருக்கும். நானும் பார்த்து ரொம்ப நாளாச்சு. அவரும் ஊரில் இல்லை….இவனும் வர நாழியாகுமா? அப்போ நாம வரும்போது சரவணபவன் ல சாப்பிட்டுட்டு வந்துடலாம்….ராத்திரிக்கு ஒண்ணும் சமைக்க வேண்டாம். சரியா..
அத்தை….அவர்ட்ட சொல்லிடவா…நாம போறோம்னு…?
வேண்டாம்…வேண்டாம்…..சும்மா வேலைக்கு போற புருஷாள தொல்லைப் பண்ணக் கூடாது…அவனுக்குத் தான் நிறைய வேலை இருக்குன்னு சொல்லியிருக்கானோன்னோ ..நாம ஒரு நாலு மணிக்குக் கிளம்பினால் சரியாயிருக்கும்….போய்ட்டு  வந்துடலாம்.
அதுக்குள்ளே அவர் வந்துட்டா….
அதெல்லாம் வரமாட்டாண்டீ…அவன் சாதாரணமா சில சமயம் ஒன்பது மணி கூட ஆகும்..வேணும்னா அப்பறமா ஃபோன் பண்ணிக்கோ…..போகும்காலத்திக்கி.
அந்த மாம்பழ மஞ்சளில் பச்சை பார்டர் போட்ட பட்டுப் புடவை நோக்கு ரொம்ப நன்னாருக்கும்…அதைக் கட்டிக்கோ.
அத்தை…பீச்சுக்குப் போய் பட்டுப் புடவையா….? ஈரமாகாதா?
உன்னை யாரு தண்ணீல நிக்கச் சொன்னா…….நாம கோயிலுக்குப் போறோம்…அப்டியே சித்தநாழி பீச்சு கிட்ட உட்கார்ந்துட்டு வந்துடுவோமாக்கும். ராத்திரி வேளை கடல் காத்தெல்லாம் என் உடம்புக்கு ஆகாது. ஏதோ நான் நோக்கோசரம் வரேன். தெரிஞ்சுக்கோ.
சரி..சரி..கட்டிக்கிறேன். அரை மனதோடு சொன்ன லாவண்யா…எப்படியோ நான் ஆசைப் பட்ட படி இன்னைக்கு பீச்சுக்குப் போறேன் என்று மனசுக்குள் அமைதியானாள்.
பெசன்ட் நகர் பீச்…! மிகவும் அழகான கடற்கரை.  கரை ஓரத்தில் அழகான அஷ்டலக்ஷ்மி கோயில். மனதுக்கு ரம்மியத்தையும், பக்தியையும் ஒருசேர தரும் சமத்துவ இடம்.
வழக்கமாகவே . சோகங்களையும் சுகங்களையும் சுமந்து வந்த இதயங்கள் ரகசியமாக கடல் காற்றில் கரைத்து விட்டு லேசான மனசோடு திரும்பிச் செல்ல
ஏதுவாக சுமை தாங்கியாகக் காத்திருந்தது கடல்.
சூரியன் மெல்ல மெல்ல கடலுக்குள் முங்கிக் கொண்டிருக்க, கீழ்வானம் சிவந்து வானமும் கடலும் சிங்காரம் பண்ணிக் கொண்டிருந்தது.
நீல நிற ஜீன்சும் சந்தனக் கலரில் குர்தியும் அணிந்திருந்த கௌரி அடர்ந்த கூந்தலை அதற்கான ஸ்டைலில் அலங்கரித்திருந்த போதும் அது காற்றுக்கு அடங்காமல் தவழ்ந்து கொண்டிருந்தது. அங்கு முன்பே வந்து காத்திருந்த கார்த்திக்கை கண்டதும் மென்மையாகப் புன்னகைத்தவள் ரொம்ப நேரமாச்சா வந்து….காக்க வெச்சுட்டேனா ? வழில சிக்னல்ல மாட்டிண்டேன்…என்று தனது கூலிங் கிளாசை நெற்றிக்கு மேலே ஏற்றி நிறுத்தி வைத்தாள் . காதில் ஒற்றை வைரக்கல் பள பள வென்று மின்னியது. அவளிடமிருந்து பரவிய சென்டின் மணம் கார்த்திக்கை மனசுக்குள் எங்கேயோ கொண்டு நிறுத்தியது.
கௌரி…..நீ எவ்வளவு  அழகு தெரியுமா? என்று கேட்கிறான்.
எவ்வளவு…? அவளும் வெட்கத்தோடு கேட்கிறாள்.
இதோ… இந்தக் கடலளவு….அவன் கடலைப் பார்த்துத் திரும்பிக் கையை நீட்டிக் காட்டுகிறான்.
உனக்கு நல்ல மனசு….பரந்த மனசு  கார்த்தி….அதோ அந்த வானம் மாதிரி…என்று அவளும் பதிலுக்குச் சொல்கிறாள்.
இருவரும்..சிரித்தபடியே, மணலில் அமர்ந்து கொள்ள….பெரிய அலை ஒன்று எழுந்து அடங்கியது…நீர்த்துளிகள் இருவர் மீதும் சில்லென்று பட்டுத் தெறிக்க….
ஹா…ஹா……இந்தக் கடலுக்கு இணை வேற ஒண்ணுமே இல்லையில்லையா கார்த்தி….ஆமா…ஏதோ  சர்ப்ரைஸ் னு போனில் சொன்னியே….? என்னது என்று வில் போன்ற அவளது புருவங்களைத் தூக்கி அவனைப் பார்க்கிறாள் கௌரி.
லேடீஸ் ஃபர்ஸ்ட்….என்கிறான் கார்த்திக்.
சூரியனை இழந்த வானம்……கடலுக்குள் தஞ்சம் அடைந்த தருணம் ரம்மியமான மாலை நேரம்…மெல்லத் தவழும் பூங்காற்றோடு மனதுக்கு இதமாக இருந்தது.
தூரத்தில் இருந்த பஜ்ஜிக் கடையிலிருந்து சுடச் சுட பஜ்ஜி வாசனையோடு ” பூங்காற்றிலே…உன் சுவாசத்தைத் தனியாகத் தேடித் பார்த்தேன்…..”  என்ற பாடலும் இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது.
அதற்கும் பின்னே…..தூரத்தில் லாவண்யாவும், கல்யாணியும்…ஆட்டோவை விட்டு இறங்கியபடி…..முதல்ல கோவிலுக்கு போகணும்கிட்டியா …நானும் இங்க வந்து ரொம்ப நாளாச்சு…என்றாள் கல்யாணி.
முகத்தில் சலனமே இல்லாமல்…..சரி….என்கிறாள் லாவண்யா.
கடற்கரையில் புயலுக்கான அறிகுறி தெரிய ஆரம்பித்தது.
(தொடரும்)
Series Navigationபூமியைச் சுற்றி மூன்றாம் “வான் ஆலன்” கதிர்வீச்சு மின்துகள் வளையம் [Van Allen Radiation Belt] தோன்றி மறைந்ததுவிட்டல் ராவின் கூடார நாட்கள்
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *