மருத்துவக் கட்டுரை குடல் வால் அழற்சி

This entry is part 6 of 20 in the series 21 ஜூலை 2013

 

                                                     டாக்டர் ஜி.ஜான்சன்

அப்பென்டிக்ஸ் ( appendix ) என்பது குடல் வால் அல்லது குடல் முளை என்று அழைக்கப்படுகிறது.

இது நம் அனைவருக்கும் உள்ள உறுப்பு . இது ஒரு பென்சில் அளவுக்குக் கனமாகவும் 50.8 முதல் 152.4 மில்லிமீட்டர் வரை நீளமுடையதாகவும் இருக்கும்.

இது சில காரணங்களால் வீக்கமுற்று வலி எடுப்பதை அப்பென்டிசைட்டீஸ் ( appendicitis ) என்று கூறுகிறோம்.இதை தமிழில் குடல் வால் அழற்சி எனலாம்.

அவசர அறுவை சிகிச்சையில் இதுவே முதலிடம் வகிக்கிறது.

10 முதல் 30 வயதுடையோரிடையே இது அதிகம் தோன்றலாம்.

எல்லாருக்கும் குடல் வால் உள்ளபோது ஏன் ஒரு சிலருக்கு இந்த வலி வந்து அறுவை சிகிச்சை மூலம் இது அப்புறப்படுத்தப்படுகிறது என்று பலர் கேட்பதை அறிவோம்.

குடலில் உள்ள கிருமிகள் குடல் வாலின் சுவற்றின் வழியாக உள்ளே புகுந்து தொற்று உண்டுபண்ணி அழற்சியை ஏற்படுத்தலாம்.குடலில் லிம்ப் வீக்கம் , மலம், பைலேரியா புழுக்கள் போன்றவற்றால் அடைப்பை உண்டுபண்ணலாம்.குடல் வாலில் அடைப்பு உண்டாகி விட்டால் உடன் கிருமித் தோற்று ஏற்பட்டு வீக்கம் அல்லது அழற்சி உண்டாகிறது.

அனால் அதைவிட Hygiene hypothesis என்ற சுகாதார கருதுகோள் என்ற கருத்தும் மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது.

இதில் குடல் வால் தசைகளில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு படுவதால் கிருமிகளின் தோற்று சுலபமாகிறது என்று கருதப்படுகிறது. ஆரோக்கியமான வாழ்கை முறை காரணமாக இந்த கிருமி எதிர்ப்பு சக்தி குறைந்து போனது என்பதே உண்மை.

குடல் வால் அழற்சியின் அறிகுறிகள் ( symptoms )

* அழற்சி ஏற்பட்டதும் வயிற்றின் நடுப்பகுதி வலிக்கத் தொடங்கி அழற்சி வயிற்று உறுப்பு உறையிலும் ( peritoneum ) பரவியபின் அடி வயிற்றின் வலது பக்கம் தொடர்ந்து அதிகமாக வலிக்கும்.

* பசியின்மை

* வாந்தி

* மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு

பரிசோதனையின்போது உள்ள அறிகுறிகள் ( signs )

* காய்ச்சல் – 37.5 -38.5 சென்ட்டிகிரெட்

* வேகமான இதயத் துடிப்பு ( tachycardia )

* உலர்ந்த நாக்கு ( furred toungue )

* வெளிறிய தோல் ( flushed skin )

* ஆழமில்லா சுவாசம் ( shallow breathing )

* வலது பக்க அடி வயிற்றுப் பகுதியை அழுத்தினால் வலி ( tenderness right iliac fossa )

* அழுத்திய கையை விலக்கினாலும் வலி ( rebound tenderness )

* வயிற்றுப் பகுதி கடினமாக இருத்தல் ( guarding )

மேற்கூறியுள்ள அறிகுறிகள் இருந்தால்தான் அது குடல் வால் அழற்சி என்று கூற முடியாதபடி அவை இல்லாமல்கூட அது ஏற்பட்டிருக்கலாம்.இதனால் இதுதான் என்று நிச்சயிக்க முடியாத குழப்பம் அவ்வப்போது நிலவலாம்.

அவை வருமாறு:

* குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கும் வாந்தியும் உள்ளபோது அது குடல் வால் அழற்சியாகவும் இருக்கலாம்.

* லேசான காய்ச்சல் உள்ள சிறுவன் அவனுக்கு பிடித்த உணவை உண்ணாமல் இருப்பது.

* அதிர்ச்சியும் குழப்பமும் உள்ள ஒரு முதியவர்

இதுபோன்ற சூழல்களில் மருத்துவர் பரிசோதனைக்குப்பின் உடன் முடிவு செய்யும் நிலைக்குள்ளாவார் . இதுபோன்று முடிவு செய்வதில் தாமதம் கூடாது.

இரத்தப் பரிசொதனையில் வெள்ளை இரத்த செல்கள் ( white blood corpusles ) 10,000 க்கு மேல் உயர்ந்து காணப்படும்.

சில வேளைகளில் ஸ்கேன் பரிசோதனையும் உதவும்.

பரிசோதனைகள் காரணமாக சிகிச்சைக்கான நேரத்தை தாமதிக்கக் கூடாது.இது அவசர சிகிச்சை தேவையான பிரச்னையாகும்.குடல் வால் அழற்சி அல்லது இல்லை என்று கூறுவதில் 50 சதவிகிதம் தப்பாகவும் இருக்கலாம். ஆனால் அறுவை சிகிச்சை செய்து கொள்வதில் தவறு இல்லை .

வேறு சில அடிவயிற்றுப் பிரச்னைகளும் குடல் வால் அழற்சி [போலவே வலிக்கலாம்.

அவை வருமாறு:

* பெண்கள் : புறநிலைக் கருவுறல் ( ectopic pregnancy )

* பித்தப்பை அழற்சி ( cholecystitis )

* கருக்குழாய் அழற்சி ( salpingitis

* சிறுநீர்ப்பை அழற்சி ( cystitis )

* குடல் அழற்சி ( diverticulitis )

இது போன்ற பிரச்னையால் வயிறு வலிக்கிறதா என்பதை மருத்துவர் மனதில் கொண்டுதான் பரிசோதிப்பார

குடல் வால் சிகிச்சைக்கான சிகிச்சை

கால தாமதம் செய்யாமல் உடனடியாக அறுவை சிகிச்சை ( appendicectomy ) மூலமாக அழற்சியுற்ற குடல் வாலை அகற்றிவிட வேண்டும்.

1735 ஆம் வருடம் இதுபோன்ற அறுவை சிகிச்சை முதன் முதலாக கிளாடியஸ் ஐமாண்ட் ( Claudius Aymond ) என்ற பிரஞ்சு மருத்துவரால் லண்டனில் செய்யப்பட்டது.ஹேன்வில் அண்டர்சென் ( Hanvil Andersen ) எனும் சிறுவன் ஊசியை விழுங்கி விட்டான். அது அவனுடைய குடல் வாலைத் துளைத்து விட்டது. அவனுக்கு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டு காப்பாற்றப்பட்டான்.

தற்போது லேப்பரோஸ்கோப் கருவி மூலமாக வெகு சுலபமாக அறுவை சிகிச்சை ( Laparoscopic surgery ) செய்யப்படுகிறது. இதில் குறைந்த வலி, குறைந்த நாள் மருத்துவமனையில் தங்குவது, குறைவான பின்விளைவு ( புண்ணில் கிருமி தோற்று ) விரைவில் நடப்பது, விரைவில் வேலைக்குத் திரும்புவது, சிறிய தழும்பு போன்ற நன்மைகள் உள்ளன. இன்று இது சாதாரண அறுவை சிகிச்சைமுறையாகிவிட்டது.

வலது பக்க வயிற்று வலி உண்டானால் அது ஒரு வேளை குடல் வால் அழற்சியாக இருக்குமா என்ற விழிப்புணர்வு இருப்பது நல்லது.

( முடிந்தது )

Series Navigationவேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -11 மூன்று அங்க நாடகம்நீங்காத நினைவுகள் – 11
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *