இன்ப அதிர்ச்சி

This entry is part 9 of 27 in the series 4 ஆகஸ்ட் 2013

டாக்டர் ஜி.ஜான்சன்

இரவு பத்து மணி .தொலைப்பேசி ஒலித்தது.

” டாக்டர்! நான் அமுதா பேசுகிறேன்.”

” சொல் அமுதா.”

‘ ” டாக்டர் , ஒரு எமெர்ஜென்சி .உடன் கேசுவல்ட்டி வாருங்கள். ” குரலில் பதட்டம் தொனித்தது .

முன்பே தயார் நிலையில் இருந்த நான் மருத்துவமனை நோக்கி விரைந்தேன்.

அது சிவகங்கை மாவட்ட திருப்பத்தூர் ஸ்வீடிஷ் மிஷன் மருத்துவமனை.அங்கு அனைத்து ஊழியர்களின் இல்லங்களும் வளாகத்தினுள்ளேயே இருந்தன.

பங்களா வீடுகளில் டாக்டர்கள் வசித்தனர். நடந்து செல்லும் தொலைவில்தான் நான் குடியிருந்த பங்களா இருந்தது.

கையில் டார்ச் லைட்டுடன் விரைவாக நடந்தேன்.இரவில் பாம்பு தொல்லைகள் அதிகம்.அடிக்கடி பாம்பு பிடிபவர்கள் வளாகத்துக்கு வந்து நல்ல பாம்புகள் , சாரைப் பாம்புகள், கட்டு விரியன்கள் என பிடித்துக்கொண்டு பணம் வாங்கிச் செல்வர்.

இரவு நேரங்களில் அவசர நோயாளிகள் வருவர்.தூங்கி எழுந்த நிலையில் கவனமாகச் செல்ல வேண்டும் .

நோயாளி முதிர் வயதுடைய தாய். நல்ல நிறம். திடகாத்திரமான உடலமைப்பு. அன்பு நிறைந்த பார்வையுடைய அழகான முகம். அப்போது அது வலியால் சோர்ந்திருந்தது.

அவர் வலியால் துடித்தார்.சிரமப்பட்டு மூச்சு விட்டார்.படுப்பதும் எழுவதுமாக இருந்தார். நெற்றியைத் தொட்டுப் பார்த்தேன். சில்லிட்டிருந்தது. குளிர்ந்த வியர்வை வழிந்தது.இது நிச்சயமாக மாரடைப்பு. மிகவும் ஆபத்தான நிலை. உடனடியாக முதலுதவி சிகிச்சை செய்தாக வேண்டும். இல்லையேல் இவரைக் காப்பாற்ற இயலாது.

உடன் 1.5 லிட்டர் பிராணவாயு தரப்பட்டது.

நாக்கு அடியில் ஒரு ஜி டி என் மாத்திரை வைத்தேன்.ஒரு ஆஸ்பிரின் மாத்திரை 300 மில்லிகிராம் தந்து விழுங்கச் சொன்னேன். உடன் ஒரு ட்ரிப் ( drip ) பொருத்தினேன். அதன் வழியாக மார்பின் ஊசி ( Injection Morphine ) போடுமுன் சில கேள்விகளைக் கேட்டேன்.

” அம்மா. எப்போதிருந்து நெஞ்சு வலி ? எந்தப் பகுதியில் வலிக்குது? ” அவரின் கையைப் பிடித்து நாடித் துடிப்பை எண்ணியவாறு கேட்டேன். நாடி 110 என வேகமாகத் துடித்தது.

” திடீர் என்று வலிக்குது டாக்டர்.” நெஞ்சின் இடது பக்கத்தைக் காட்டினார்.

” மூச்சு விட சிரமம் உள்ளதா அம்மா? ” இரத்த அழுத்தம் பார்த்தவாறே கேட்டேன்.

” ஆமாம் “. தலையை அசைத்தார்.

இரத்த அழுத்தம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

” உங்களுக்கு இரத்தக் கொதிப்பு உள்ளதா? ” வினவினேன்.

” ஆமாம் .மருந்து சாபிடுறேன். ” அவருக்கு மூச்சு இறைத்து.

” இனிப்பு வியாதி? ”

” இல்லை “.

” அமுதா. உடன் ஈ.சி ஜி எடுதாகாக வேண்டும். ” அவரின் இருதயத்தையும், நுரையீரலையும் பரிசோதனை செய்துவிட்டுக் கூறினேன்.

” எஸ் டாக்டர்., ” அவள் ஓயர்களைப் பொருத்தினாள் .

அமுதா ஈ சி ஜி எடுத்து முடித்தாள் .அதை என்னிடம் தந்தாள்.

ச்செஸ்ட் லீட்களில் ( Chest Leads ) எஸ்.டி எலிவேஷன் ( ST Elevation ) இருந்தது. டீ வேவ் இன்வேர்ஷன் ( T wave inversion )இருந்தது.இது மாசிவ் ஹார்ட் அட்டாக்.( massive heart attack )அதாவது பெரிய அளவிலான மாரடைப்பு!

அவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என்று உடன் வந்திருந்த ஒருசில உறவினர்களிடம் கூறிவிட்டேன்.இதுபோன்ற சூழலில் உண்மை நிலவரத்தை உறவினரிடம் கூறி அவர்களை தயார் நிலையில் வைத்திருப்பது நல்லது.இல்லையேல் ஏன் முன்பே சொல்லவில்லை என்ற பிரச்னை உண்டாகும்.

” இது மிகவும் ஆபத்தான கட்டம். வேண்டுமானால் மதுரைக்குக் கொண்டு செல்கிறீர்களா? அங்கு இருதய நோய் நிபுணர்களைப் பார்க்கலாமே? ” அவர்களிடம் முன்னெச்செரிக்கையாகக் கேட்டேன்.

அவர்கள் யோசித்தனர்.

” இல்லை டாக்டர். நீங்கள் கைராசிக்காரர் என்று கேள்விப்பட்டுள்ளோம். நீங்களே பாருங்கள். ” அவர்கள் அனுமதி தந்தனர்.

அவர்கள் சொன்னதும் உண்மைதான். பல மாரடைப்பு நோயாளிகள் இங்கு வந்து குணமாகி திரும்பியுள்ளனர். இருப்பினும் நான் இருதய நோய் நிபுணர் அல்ல!

அப்போது மருத்துவப் பிரிவில் நான் மட்டுமே இருந்தேன்.எனக்கு உதவி புரிய வேறு யாரும் இல்லை.

நானேதான் மருத்துவ நூல்களின் உதவியோடு பலவிதமான சிகிச்சை முறைகளை செய்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கும் இந்த அன்பான தாயை எப்படியாவது காப்பாற்றியே ஆகவேண்டும்.அவர் ஆபத்து நிலையிலிருந்து மீளும் வரை வார்டிலேயே இரவைக் கழிக்க முடிவு செய்தேன்.

மருத்துவ வார்டில் சிஸ்டர் பாலின் இருந்தார்கள். இவர் நடுத்தர வயதுடையவர். நல்ல அனுபவசாலி.என்னுடைய சிகிச்சை முறைகளை நன்கு அறிந்தவர்.

” சிஸ்டர். பத்து அம்பியூல் ( ampoules ) பெட்னிசால் ( Betnesol ) ஊசி தயார் செய்யுங்கள்.” அவரிடம் கூறினேன்.

பெட்னிசால் என்பது ஸ்டீராய்ட் ( Steroid ) மருந்து. இது உயிர் காக்கும் தன்மையுடையது. இதுபோன்ற ஆபத்தான கட்டத்தில் இதில் பத்து ஊசிகள் கொண்டதை உடன் இரத்தக்குழாய் மூலம் செலுத்தினால் அது பெரிதும் உதவும் என்று நான் மருத்துவ சஞ்சிகையில் படித்துள்ளேன். இதை பல நோயாளிகளிடம் பரிசோதித்துப் பார்த்துளேன்.அது உண்மை என்று கண்டுகொண்டேன்.

பெட்னிசால் ஊசி ஏற்றப்பட்டது.

மார்பின் தரப்பட்டதால் அவர் வலி மறந்து உறக்கத்தில் இருந்தார்.இருதயத் துடிப்பும் சுவாசமும் சீரானது.

இனி விடியும் வரை ஏதும் பிரச்னை இருக்காது.

அரை மணி நேரத்துக்கு ஒரு முறை நாடித் துடிப்பு, சுவாசத்தின் அளவு, இரத்த அழுத்தம் ஆகியவற்றை அளந்து பதிவு செய்யுமாறு சிஸ்டர் பாலினிடம் கூறிவிட்டு வீடு திரும்பினேன். அவற்றில் ஏதும் தாறுமாறு தெரிந்தால் உடன் அழைக்குமாறும் கூறினேன்.நான் காலையில் எட்டு மணிக்கு வேலைக்கு வரவேண்டும்

. அதன் பின்பு வேறு அவசர நோயாளிகள் இல்லை.

விடிந்ததும் முதல் வேலையாக சிஸ்டர் பாலினுக்கு போன் செய்தேன்.அவர் பற்றி கேட்டேன்.நாடித் துடிப்பு , சுவாசம், இரத்த அழுத்தம் அனைத்தும் சீராக இருப்பதாகக் கூறினார்.அவர் லேசாக விழித்திருப்பதாகவும் கூறினார்.நிம்மதியுற்ற நிலையில் வேலைக்குச் செல்ல தயாரானேன்.

அன்று காலை முதல் நோயாளியாக அவரைப் பார்த்தேன்.தூக்கம் முழுதுமாகக் கலையவில்லை.

‘ இன்னும் வலி உள்ளதா அம்மா? ” அவரைப் பார்த்து கேட்டேன்.

” குறைந்துள்ளது டாக்டர் .” என்றார்.

பரிசோதனை செய்துவிட்டு ஒரு ஈ சி ஜி எடுத்து பார்த்தேன்.அதிக மாற்றம் இல்லை. இன்னும் தீவிர சிகிச்சையில் இருந்தாக வேண்டும்..

பகல் நர்ஸ் மெர்சியுடன் மற்ற நோயாளிகளைப் பார்த்துவிட்டு ஆண்கள் வார்டுக்குச் சென்றேன்.

அதன் பின்பின் வெளிநோயாளிப் பிரிவில் அமர்ந்து சுமார் முப்பது பேர்களைப் பார்த்து முடிக்க மதியம் ஆகிவிட்டது.

மலை ஐந்து மணிக்கு ஒரு தரம் வார்டுக்குச் சென்று அந்த அம்மாவைப் பார்த்தேன்.

அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்

வழக்கம்போல் டென்னிஸ் கோர்ட் சென்று ஒரு மணி நேரம் விளையாடினேன்.

மாலை ஆறு முப்பது போல் வராந்தாவில் அமர்ந்து தேநீர் அருந்தி கொண்டிருந்தேன். ஒருவர் என்னை நோக்கி வந்தார். அவர் நடுத்தர வயதுடையவர். நல்ல உயரம். கொஞ்சம் கருத்த நிறம்.லேசான பின் தலை வழுக்கை.

” டாக்டர் ஜான்சன் நீங்கள்தானே? வணக்கம் ” என்றார்.

நான் எழுந்து நின்று , ” வணக்கம் வாருங்கள். அமருங்கள் ” எதிரே இருந்த இருக்கையைக் காட்டினேன்.

” டாக்டர். நான் டைரக்டர் எஸ்.பி. முத்துராமன். ” என்று அவர் சொல்லக் கேட்டு அவரின் கைகளைப் பிடித்து குலுக்கினேன்.

எனக்கு ஒரே ஆச்சரியம்! என்னால் நம்ப முடியவில்லை! இவ்வளாவு புகழ் பெற்றவர் இப்படி சாதரணமாக, எளிமையாக வந்துள்ளாரே! இவர் என்னைத் தேடி ஏன் வந்துள்ளார்?

மனைவியை அழைத்து அவரை அறிமுகம் செய்துவிட்டு தேநீர் கொண்டு வரச் சொன்னேன்.

அப்போது அவரின் புகழ் உச்சத்தில் இருந்தது. சகல கலா வல்லவனும் பாயும் புலியும் அப்போதுதான் ரிலீஸ் ஆகியிருந்தது.

என்ன விஷயமாக வந்துள்ளீர்கள் என்று கேட்கவே அவர் வாய்ப்பு தரவில்லை.

” டாக்டர் . என் அம்மாவை நீங்கள்தான் ட்ரீட் செய்கிறீர்கள். அவருக்கு மாரடைப்பு என்று செய்தி வந்தது. சென்னையிலிருந்து புறப்பட்டு வந்துள்ளேன்.இப்போது அவரின் நிலைமை எப்படி உள்ளது ? ” நிதானமாகப் பேசினார். அதில் படபடப்போ பதற்றமோ இல்லை.

நான் பெயரைக் கேட்டு தெரிந்து கொண்டேன். அதே தாய்தான்!

” அவர் உங்கள் தாயாரா? உடன் வந்தவர்கள் யாரும் சொல்லலையே? நான்கூட மதுரை கொண்டு போகிறீர்களா என்றுகூட கேட்டேன். வேண்டாம் என்றனர்.நேற்று இரவு வந்தபோது மிகவும் ஆபத்தான நிலையில்தான் இருந்தார்.இன்று பரவாயில்லை. ஆனால் தீவிர கண்காணிப்பில்தான் இன்னும் இருக்க வேண்டும்.”

” ரொம்ப நன்றி டாக்டர். எத்தனை நாள் வேண்டுமானாலும் இருக்கட்டும் டாக்டர். பூரண குணம் பெற்று வீடு திரும்பினால் போதும் .சொந்த ஊர் காரைக்குடிதான் டாக்டர். நான் மட்டும் சென்னையில் உள்ளேன்.இந்த மருத்துவமனைதான் எங்களுக்கு ராசி .அதனால்தான் மதுரைக்கு அவர்கள் செல்ல விரும்பவில்லை. ‘ தேநீர் அருந்தியவாறே சகஜமாகப் பேசினார்.

” எப்படியும் ஒரு வாரமாவது இருக்க நேரிடும். நீங்களும் உடன் இருப்பது நல்லது. உங்களைப் [போன்ற பிரபலமானவரை இப்படி நேரில் பார்ப்பது மகிழ்ச்சியாகவும் வியப்பாகவும் உள்ளது.இதை நான் கொஞ்சமும் எதிர்ப் பார்க்கவில்லை. .”

” அப்படியெல்லாம் ஒன்றுமில்லை டாக்டர்.நான் ஒரு சாதாரண டைரக்டர்தான் .அம்மாவின் உடல்நிலை கட்டாயம் தேறியாக வேண்டும். நான் என் மகளின் திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்து வருகிறேன்.அதனால் அம்மாவின் உடல் நிலை குறித்து கவலையாக உள்ளது.” தனது இக்கட்டான நிலையைக் கூறினார்.

” கவலை வேண்டாம். தீவிர சிகிச்சையில் நிச்சயம் பலன் கிட்டும். பொறுத்திருந்து பார்ப்போம்.” ஆறுதல் கூறினேன்.

” அம்மாதான் எனக்கு முக்கியம்.அதனால்தான் எனது இரண்டு பெரிய படங்கள் ரிலீஸ் ஆகும் போது கூட யாரிடமும் சொல்லாமல் இங்கு வந்துவிட்டேன்.எல்லாரும் என்னை அங்கே தேடிக் கொண்டிருக்கிறார்கள் .” என்றும் கூறினார்.

” உங்கள் நிலைமை எனக்குப் புரிகிறது. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னைப் பார்க்கலாம். ” என்றேன்.

” ரொம்ப நன்றி டாக்டர். நான் வார்டில் இருக்கிறேன் ” அவர் விடை பெற்றார்.

அவரின் எளிமையும் நல்ல பண்பும் என்னை வெகுவாகக் கவர்ந்தது!

அன்று இரவு மீண்டும் பார்த்தபோது வலி லேசாக இருந்தது. ஈ சி ஜி யில் மாற்றம் இல்லை. பெட்னிசால் ஊசி ஐந்து அம்பியூல் ட்ரிப் வழியாக ஏற்றினேன். மீண்டும் மார்பின் தந்து தூங்க வைத்தேன்.

வெளியில் காத்திருந்த இயக்குநரிடம் நிலைமையைக் கூறிவிட்டு மற்ற வார்டுகளுக்குச் சென்றேன்.

சிகிச்சை தொடர்ந்தது.

ஐந்து நாட்களுக்குப்பின் அவரின் நிலைமை சீரானது ஆபத்துக் கட்டத்தைத் தாண்டி விட்டார். உட்கார்ந்து பேச ஆரம்பித்துவிட்டார்.

அதுவரை பதற்றத்தில் இருந்த இயக்குநரின் முகத்தில் நம்பிக்கையும் மகிழ்ச்சியையும் கண்டேன்.

இதற்கிடையில் நாங்கள் அடிக்கடி சந்தித்துப பேசி நெருக்கமானோம். சென்னை வந்தால் கட்டாயம் அவரை அழைக்கச் சொன்னார். ஸ்டூடியோ கொண்டு செல்வதாகவும் கூறினார். எல்லாவற்றுக்கும் மேலாக மகளின் திருமணத்திற்கு கட்டாயம் வரவேண்டும் என்றார். நான் சரி என்றேன்.

ஒரு வாரத்தில் எவ்வித குறையும் இன்றி அவர்கள் வீடு திரும்பினர்.

போகும்போது என் கைகளைப் பிடித்துக் கொண்டு திரும்ப திரும்ப நன்றி கூறினார் இயககுநர் எஸ்.பி .முத்துராமன்! அவருக்கு அவ்வளவு பூரிப்பு!

ஒரு மாதம் உருண்டோடியது.

ஒரு நாள் மாலையில் வீட்டின் எதிரே ஒரு கார் வந்து நின்றது. யார் என்று பார்த்தேன்.

அவரேதான்!

கைக்குலுக்கி வீட்டினுள் அழைத்துச் சென்றேன்.நலம் விசாரித்துக் கொண்டோம்.தேநீர் பருகியபின் என் கையில் திருமண அழைப்பிதழைத் தந்தார்.

” டாக்டர். கட்டாயம் இருவரும் வந்து விடுங்கள். கரைக்குடியில்தான் திருமணம்.உங்களுக்கு கார் அனுப்புகிறேன். ” அவரின் அன்பு கண்டு அசந்து போனேன்!

“: நன்றிங்க டைரக்டர். கட்டாயம் வருவோம் .” உறுதி கூறினேன்.

திருமண நாள்.

சரியான நேரத்தில் அவர் அனுப்பிய கார் வந்தது.

திருமண வீடு தடபுடலாக இருந்தது. காரைக்குடியின் முக்கிய பிரமுகர்கள், திரைப்பட முக்கிய புள்ளிகள், உறவினர்கள், நண்பர்கள் என பலர் வந்திருந்தனர்.

விமரிசையாக தாலி கட்டி முடிந்தது.

விருந்து உபசரிப்புக்கு முன் அவர் நேராக என்னிடம் வந்தார்.

என் கையைப் பிடித்துக் கொண்டு மைக் முன் சென்றார்.

” நண்பர்களே ! உறவினர்களே! இவரை இந்த நேரத்தில் நான் உங்களுக்கு அறிமுகம் செய்தாக வேண்டும். இவர் டாக்டர் ஜான்சன். ஸ்வீடிஷ் மிஷன் மருத்துவமனை டாக்டர். இவர்தான் என் அம்மாவைக் காப்பாற்றியவர்! இவரால்தான் இன்று இந்த திருமணம் இவ்வளவு சிறப்பாக நடைபெறுகிறது! ” இவ்வாறு என்னை அறிமுகம் செய்து வைத்தார்!

அந்த இன்ப அதிர்ச்சியிலிருந்து விடுபட எனக்கு சில நேரமானது!

( முடிந்தது )

Series Navigationமருத்துவக் கட்டுரை கல்லீரல் புற்றுநோய்நீங்காத நினைவுகள் 13
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

7 Comments

 1. Avatar
  ஷாலி says:

  டாக்டர்.ஜி.ஜான்சன் அவர்களின் அனுபவங்கள் உண்மையில் “நீங்காத நினைவுகள்” தான். மருத்துவ தொழில் புனிதமானது.ஏனெனில் உயிர் காக்கும் கரங்களுக்கு அவர்கள் சொந்தக்காரர்கள்.அதுவும்,ஏழை,பணக்காரன்,சாதி,மதம் உயர்தவன்,தாழ்ந்தவன் என்ற எந்த பாகுபாடுமின்றி மனிதனின் நோயை மட்டும் பார்த்து நீக்கும் இறைத் தொண்டு.ஆகவேதான் கர்த்தர் கூறுகிறார்,”ஏழைக்கு எதைச் செய்தீரோ அதை எனக்கே செய்தீர்!”ஆனால் இன்றைய நிலைமை கொஞ்சம் மாறிவுள்ளதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
  தனியார் மருத்துவ கல்லூரிகளில் ஒரு சீட்டிற்கு 70 லட்சம், முதுகலை படிப்பதற்கு ஒன்றரை கோடிக்கு விற்கப்படுகிறது.இப்படி போட்ட பணத்தை இவர்கள் எப்படி எடுப்பார்கள்? டாக்டர்.ஜி.ஜான்சன் ஸார், நீங்கள்தான் பதில் சொல்லவேண்டும்.

 2. Avatar
  சி. ஜெயபாரதன் says:

  டாக்டர் ஜி. ஜான்சன் உங்கள் வாழ்க்கையில் பல உயிர்களைக் காப்பாற்றும் சவாலான அரிய பெரிய வாய்ப்புகளைக் கடவுள் உங்களுக்குத் தந்திருக்கிறார்.

  பாராட்டுகிறேன் டாக்டர்.

  சி. ஜெயபாரதன்

 3. Avatar
  subrabharathimanian says:

  உங்களின் மருத்துவ உலக அனுபவங்களை சுவாரஸ்யமாகத் தந்து வருகிறீர்கள். ந்ல்லது. வாழ்த்துக்கள்
  சுப்ரபாரதிமணியன்

 4. Avatar
  தி.தா.நாராயணன் says:

  இன்ப அதிர்ச்சி-சிறப்பு.அர்ப்பணிப்புகளோடு செய்யும் காரியத்திற்கான மரியாதை கிடைக்காமல் போகாது.தொடர்ந்து உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள் என்று கோரிக்கை வைக்கிறேன் டாக்டர்.

 5. Avatar
  பவள சங்கரி says:

  அன்பின் மரு. திரு ஜான்சன்,

  நல்லதொரு பகிர்விற்கு நன்றி. எவ்வளவு பிரபலமானவர் என்றாலும் தாய் என்று வரும்போது, ஒரு குழந்தையாகத்தானே மாறிப்போய்விடத் தோன்றும். அதற்கு திரு எஸ்.பி.முத்துராமன் மட்டும் விதிவிலக்கா என்ன.. நல்ல மனிதாபிமானமும், நன்றியுணர்ச்சியும் மிக்க மனிதர்.

  அன்புடன்
  பவள சங்கரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *