மங்கோலியன் – I

This entry is part 7 of 30 in the series 11 ஆகஸ்ட் 2013

Genghis-Khan-WC-9308634-1-402

 

குறிப்பு :

 

மிகக் கொடுங்கோலர்களாக அறியப்படுகிற செங்கிஸ்கானும், மங்கோலியப்படைகளும் உலகில் மாபெரும் மாற்றங்கள் வரக் காரண கர்த்தாக்களாக இருந்திருக்கிறார்கள். மங்கோலியர்கள் உண்டாக்கிக் கொடுத்த சூழ் நிலைகளே ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கு பெரும் உந்துதலாக இருந்தது என்பதை பெரும்பாலோர் அறிந்திருப்பதில்லை. இது மங்கோலியர்களின் பல்வேறு ஆளுமைகளைக் குறித்து ஒரு சிறிய அறிமுகம் செய்யும் எண்ணத்துடன் எழுதப்பட்டது. கூடவே சில பல மங்கோலியர்கள் குறித்தான தகவல்களும்.

 

*

 

1930-ஆம் வருடம் ஸ்டாலினின் ரஷ்யப்படைகள் மங்கோலியாவைக் கைப்பற்றின.  தங்களை வெற்றி கொண்டு ஏறக்குறைய நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாக ரஷ்யர்களை அடக்கி ஆண்ட மங்கோலியர்களின் மீது ஆழ்ந்த கோபம் கொண்டிருந்த ஜோசப் ஸ்டாலின் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டர். ஏறக்குறைய முப்பதாயிரம் மங்கோலியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் மதம் மற்றும் கலாச்சாரத்தை அழித்தொழிக்கும் நோக்கத்துடன் ரஷ்யப் படைகள் பவுத்த விஹாரங்களை ஒன்றன் பின் ஒன்றாக உடைத்தும், தீ வைத்தும் அழித்தனர். பல புத்த பிக்குகள் கொலை செய்யப்பட்டு, பெண் பிக்குணிகள் பலர் கற்பழிக்கப்பட்டனர். புனித பவுத்தச் சின்னங்கள் பலவும் தகர்த்தெறியப்பட்டு, ஏறக்குறைய ஏழு நூற்றாண்டுகள் வரை காப்பாற்றி வைக்கப்பட்டிருந்த பல புத்தமத புனித நூல்களும், வரலாற்று ஆவணங்களும் கொளுத்தப்பட்டன.

 

இத்தனை களோபரங்களுக்கு மத்தியின் 1937-ஆம் வருடம், மத்திய மங்கோலியாவின் நிலா ஆற்றை ஒட்டியிருக்கும் ஷாங்கி மலைத்தொடர்களில் அமைந்ததொரு பவுத்த மடாலத்தில் லாமாக்களால் காப்பாற்றி வைக்கப்பட்டிருந்த மங்கோலிய பேரரசன் செங்கிஸ்கானின் ஆத்ம பதாகையை (Sulde – Banner) முகமறியா விசுவாசி ஒருவர் அங்கிருந்து ரகசியமாக, மங்கோலிய தலை நகரமான உலான்படாருக்கு (Ulaanbataar) எடுத்துச் சென்றார், ஆனால் அங்கிருந்து அது மீண்டும் காணாமல் போனதுடன் இன்றுவரை கண்டுபிடிக்கப் படாமல் இருக்கிறது.

 

இந்த பதாகை மங்கோலியர்களுக்கு மிக முக்கியமான ஒரு விஷயமாதலால் அது குறித்து இங்கு சிறிது பார்க்கலாம்.

 

பல நூற்றாண்டு காலம் உள் ஆசியாவில் அமைந்திருக்கும் மங்கோலிய ஸ்டெப்பிப் புல்வெளியில் ஆட்டு மந்தைகளை மேய்த்துக் கொண்டும், ஒருவருடன் ஒருவர் போரிட்டும் வாழ்ந்த பழங்குடி, நாடோடி இனத்தவரான மங்கோலியர்களின் முக முக்கியமான நம்பிக்கைகளில் ஒன்று இந்த ஆத்மபதாகை.

 

ஒவ்வொரு மங்கோலியப் படைவீரனுக்கும் அவனது ஆத்ம பதாகை மிக முக்கியமானது, தனக்குப் பிரியமான குதிரையின் பிடறி மயிறை கொத்தாக அறுத்துக் கட்டி, அதனை அவனது ஈட்டியின் கூர் முனைக்குக் கீழே கட்டித் தொங்க விடப்படும் அந்தப் பதாகைய அவனது அது முக்கியமான ஒன்றாகக் கருதுவான். எந்தவொரு மங்கோலியப் படைவீரனும் தனது கூடாரத்தை அமைக்கும் ஒவ்வொரு முறையும், அக்கூடாரத்திற்கு வெளியே அவனது ஆத்ம பதாகை தாங்கிய ஈட்டியை பெருமையோடு நிறுத்தி வைத்திருப்பான். அது அவனது அடையாளத்திற்கு மட்டுமன்றி, அவனுக்குப் பாதுகாவலாக இருக்கும் என்ற அசைக்க முடியாத பழங்குடி நம்பிக்கை அவனுடையது. அத்துடன் மங்கோலிய ஸ்டெப்பிப் புல்வெளியின் திறந்து கிடக்கும் நீல வானின் அடியில், காற்றில் பறக்கும் அந்தப் பதாகை மற்ற, சாதாரண மங்கோலியர்களால் பணிவுடன் வணங்கப்படும்.

 

மேலும், அப்பதாகை ஸ்டெப்பியின் காற்றில் அளைந்து, நீர், நிலம், காற்று, ஆகாயம் மற்றும் சூரியனின் வலிமை ஆகியவற்றை உள்ளிளிழுத்து, பின்னர் போர்புரிகையில் அச்சக்தியை அவனுக்குக் கடத்துவதுடன், நல்ல மேய்ச்சல் நிலங்களையும், அவனது எதிர்காலக் கனவுகளை நனவாக்கவும் ஆத்ம பதாகையே காரணமாக இருக்கும் என்பது நம்பிக்கை. அதனைத் தாங்கிச் செல்லும் போர்வீரன் இறந்த பிறகு, அவனுடைய ஆவி அந்தப் பதாகையில் சென்று காலம் காலமாக தங்கியிருக்கும் என்பதுடன், அவனது வருங்கால சந்ததினருக்கு ஒரு ஊக்கமளிக்கும் சக்தியாக இருக்கும் என்பதுவும் மிக, மிக முக்கியமான காரணம்.

 

மேற்படி காரணங்களில் மிக நம்பிக்கை கொண்டவனான செங்கிஸ்கானும் தன்னுடன் இரு பதாககைகளை வைத்திருந்தான். அவனுடைய வெள்ளைக் குதிரையின் பிடறி மயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட பதாகை சமாதான காலத்திலும், கறுப்புக் குதிரையிலிருந்து தயாரான பதாகையை போர்க்காலத்திலும் உபயோகித்துக் கொண்டிருந்தான் செங்கிஸ்கான். ஆனால் அவனுடைய வெள்ளைப் பதாகை செங்கிஸ்கான் மறைந்த சில காலத்திலேயே வரலாற்றிலிருந்தும் மறைந்துவிட்டது. ஆனால் கறுப்புப் பதாகை அவனது ஆத்மாவின் அடையாளமாக நீண்ட காலம் தப்பிப் பிழைத்திருந்தது.

 

பதினாறாம் நூற்றாண்டில், செங்கிஸ்கானின் வழித் தோன்றலாகிய, ஜானாபஜாரை (Zaanabazaar) சேர்ந்த புத்த பிக்கு ஒருவரால் ஒரு புதிய ஆலயம் கட்டுவிக்கப்பட்டு அதில் செங்கிஸ்கானின் ஆத்மபதாகை வைத்துக் காப்பாற்றப்பட்டு வந்தது. அத்தனை மங்கோலியர்களும் அந்த பதாகையை மிக மரியாதையுடனும், பணிவுடனும் வணங்கி வந்தனர். அதனைக் காண நூற்றுக் கணக்கான மைல்கள் புனிதப் பயணம் செய்து வருவதும் நடந்து வந்தது.

 

புயலிலும், பனி மழையிலும், படையெடுப்புகளையும், உள் நாட்டுக் கலவரங்களையும் பொருட்படுத்தாமல், திபெத்திய மஞ்சள் தொப்பிப் பிரிவைச் சேர்ந்த ஆயிரம் புத்த பிக்குகளால் செங்கிஸ்கானின் ஆத்மா அடங்கிய அப்பதாகை தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வந்தது. ஆனான் அவர்களால் ஸ்டாலினின் சர்வாதிகார, கம்யூனிசப் படைகளுக்கு முன்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அந்த பிக்குகள் கொல்லப்பட்டார்கள். செங்கிஸ்கானின் ஆத்மா அவனது ஸ்டெப்பிப் புல்வெளியை விட்டு, வரலாற்றை விட்டு நிரந்தரமாகவே மறைந்து போனது.

 

*

 

உலகம் அஞ்சிய செங்கிஸ்கான் அதிர்ஷ்டவசத்தாலோ அல்லது விதியினாலோ உருவாக்கப்பட்டவனல்ல. உண்மையில் செங்கிஸ்கான் தன்னை செங்கிஸ்கான உருவாக்கிக் கொண்டான் என்பதே வரலாறு கூறும் உண்மை. ஆரம்ப கால செங்கிஸ்கானிடம் தனக்கு ஒரு ஆத்ம பதாகையைத் தயாரிக்கும் அளவிற்குக் கூட அவனிடம் குதிரைகள் இருந்ததில்லை. சிறுவன் செங்கிஸ்கான் வன்முறை நிறைந்த தனது பழங்குடிகள் நடுவே வளர்ந்தவன். கொலையும், கொள்ளையும், ஆட்கடத்தலும், அடிமைப்படுத்துதலும் நிரம்பிய உலகமாக செங்கிஸ்கானின் இளமைப்பருவ உலகம் இருந்தது.

 

பழங்குடி சமுதாயத்தால் விலக்கம் செய்யப்பட்ட தந்தைக்குப் பிறந்த செங்கிஸ்கான் தனது பால்ய வயதில் சில் நூறு மங்கோலியர்களைத் தவிர வேறு யாரையும் கண்டு வளர்ந்திருக்கவியலாது. மேலும் முறையான கல்வியும் அவனுக்கு அளிக்கப்படவில்லை. இப்படிப்பட்ட சூழ் நிலையில் செங்கிஸ்கான் மனித வாழ்வின் குரூரங்களையும், பேராசைகளையும், கனவுகளையும் நேரடியாக கண்டு வளர்கிறான். அந்தச் சின்னஞ்சிறு வயதிலேயே அவனது ஒன்றுவிட்ட சகோதரன் ஒருவனைக் கொல்லும் நிலையும் அவனுக்கு ஏற்படுகிறது. அவனைக் கொல்கிறான். எதிரி பழங்குடிகளால் கவர்ந்து செல்லப்பட்டு அடிமைப்படுத்தப்படுகிறான். பின்னர் அங்கிருந்து தப்பிச் செல்கிறான்.

 

இவ்வாறான சூழ் நிலையில் வளர்ந்த செங்கிஸ்கானுக்கு பின்னாட்களில் தன்னை எதிர் நோக்கிய வெவ்வேறு ஆபத்துகளை எதிர்கொள்ளவும், அதனை முறியடிக்கவும் தேவையான மனவுறுதியையும், திறனையும் அளித்திருக்க வேண்டும். ஆனால், இளமையில் அச்சமும், தயக்கமும் உடையவனான செங்கிஸ்கான்,  நாய்களின் மீது அச்சமுடையவனாக, எளிதில் அழும் குணமுடையவனாக இருக்கையில், அவனுடைய இளைய சகோதரன் அவனையும் விட வலிமையானவனாகவும், வில் வித்தியயில் அசகாய சூரனாகவும் இருந்தான்.

 

பட்டினியிலும், அவமானத்திலும், அடிமை வாழ்க்கையிலும் அல்லல் பட்ட செங்கிஸ்கான் இளமையில் எடுத்த இரண்டு முடிவுகள் அவனுக்கு ஒரு திருப்புமுனையை அளித்தன எனலாம். அவனை விடவும் வயது கூடிய ஒருவனுடன் இணைபிரியா நட்பு பாராட்டுவதாக சபதம்பூண்டு, அந்த நண்பனின் வாயிலாக கற்ற, பெற்ற பாடங்கள் முக்கியமானவை. ஆனால் வயது வந்தபிறகு அதே நண்பன் செங்கிஸ்கானுக்கு பரம எதிரியாக மாறினான். இன்னொன்று, தனக்கு மிகவும் பிரித்த ஒரு பெண்ணை மணந்து அவளை எதிர்கால மங்கோலிய மன்னர்களின் அன்னையாக்கியது போன்றவை செங்கிஸ்கானின் வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்துகின்றன.

 

வருடங்கள் செல்லச் செல்ல, செங்கிஸ்கான் ஸ்டெப்பியிலுள்ள அவனது அத்தனை எதிரிகளையும் ஒருவர் பின் ஒருவராக தீர்த்துக் கட்டுகிறான். ஐம்பது வயது நிறைவதற்குள், காலங்காலமாக உலகின் பழங்குடி மக்களை துன்புறுத்திய, நாகிரிகம் பொருந்திய நாடுகளை நிர்மூலமாக்கி அவர்களிடையே அச்சத்தை தோற்றுவிக்கும் ஒருவனாக மாறுவது எவரும் எதிர்பாராத ஒன்று. சீனத்தின் மஞ்சளாற்றுப் பகுதியிலிருந்து மத்திய ஆசியாவின் அனைத்துப் பகுதிகளுடன், துருக்கி, பாரசீகம் மற்றும் ஆப்கானிஸ்தானின் மலைகளிலிருந்து சிந்து சமவெளியின் இண்டஸ் நதிவரை செங்கிஸ்கானின் கீழ் வந்தது.

 

மங்கோலியப்படை வெற்றிகளின் மேல் வெற்றிகள் குவித்து, நாடுகளுக்கிடையேயான போர் என்ற எல்லையைத் தாண்டி, கண்டங்களுக்கிடையேயான போராக மாறியது. மேலும் மங்கோலியப்படை தங்கள் நாட்டை விட்டு ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில், பல முனைகளில் போர் புரிந்து கொண்டிருந்தது. கனமான இரும்புக் கவசங்களை உடலெங்கும் தரித்துப் போர் புரிந்த ஐரோப்பிய பிரபுக்கள், செங்கிள்கானின் ஒழுங்கும், கட்டுப்பாடும் கொண்ட குதிரைப்படையணிகள் முன் சிதறியோடினர்.

 

புதிய போர்முறைத் தந்திரங்களுடன், ஒத்திசைந்து இயங்கும் குதிரைப் படையுடன் செங்கிஸ்கான் எதிரிகளின் பாதுகாப்பு அரண்களை உடைத்து, மிகுந்த வேகத்துடன் அவர்கள் அறியாமல் உட்புகுந்து தாக்கி நிர்மூலமாக்கும் தந்திரத்தை உலகம் அதுவரை கண்டதில்லை. செங்கிஸ் அவரது மக்களுக்கு புதிய போர்முறைகளைக் கற்றுத் தந்தது மட்டுமன்றி, அப்போர் நீண்டகாலம் நிகழ்ந்தால் அதனை எவ்வாறு தாக்குப் பிடித்து பின் போரிட்டு வெற்றி கொள்வது போன்றவற்றையும் கற்றுக் கொடுத்தான். அதுவே மங்கோலியர்கள் உலகின் பல பகுதிகளிலும் நீண்டகாலம் வெற்றியுடன் தாக்குப்பிடித்திருக்க ஒரு காரணியாயிற்று.

 

*

 

ரோமானியர்கள் இரு நூறு வருடங்களுக்கும் மேலாக போரிட்டுப் பெற்ற பகுதிகளை விடவும் அதிகமான பகுதிகளை வெறும் இருபத்தைந்து வருடங்களில் மங்கோலியர்கள் கைப்பற்றினர். செங்கிஸ்கானும், அவரது மகனும் பேரன்களும் 13-ஆம் நூற்றாண்டில் வென்ற நிலங்களின் அளவும், அவ்வாறு வென்றெடுத்த நாடுகளில் வசித்த மொத்த மக்கள்தொகை அளவும் வேறெந்த மனிதனாலும் உலக வரலாற்றில் அதுவரை எந்த மனிதனாலும் வெற்றி கொள்ளப்படவில்லை. மங்கோலியப் படைவீர்னின் குதிரைக் குளம்படிகள் பசிபிக் மஹா சமுத்திரத்திலிருந்து மத்தியதரைக் கடல்வரை இருக்கும் ஒவ்வொரு ஆற்றிலும், குளங்களிலும், ஏரிகளிலும் ஏறி இறங்கின.

 

மங்கோலிய அரசு அதன் உச்சத்தில் ஏறக்குறைய 11 மில்லியனிலிருந்து 12 மில்லியன் சதுர மைல்கள் கொண்ட தொடர்ச்சியான நிலப்பரப்பை தன்னகத்தே கொண்டிருந்தது. ஏறக்குறைய ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு இணையானதாகவும், வட அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ, மத்திய அமெரிக்கா மற்றுக் கரீபியன் தீவுகளை உள்ளடக்கிய மொத்த நிலப்பரப்பை விடவும் அதிகமான நிலப்பரப்பு உடையதாக இருந்தது ஒருங்கிணைந்த மங்கோலியப் பேரரசு.

 

குளிர் பிரதேசமாக சைபீரிய மலைத்தொடர்களிலிருந்து, கடும் வெப்பம் நிலவும் இந்தியச் சமவெளி வரையும், வியட்நாமிய அரிசி வயல்களிலிருந்து, ஹங்கேரியின் கோதுமை வயல்கள்வரையும், கொரியாவிலிருந்து பால்கன் வரையும் பரந்து விரிந்திருந்தது. இன்று உலகின் மிகப் பெரும்பான்மையான மக்கள் மங்கோலியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலேயே வசிக்கிறார்கள் என்பது மிகவும் ஆச்ச்சரியமான ஒரு விஷயம். இன்றைய நவீன உலக வரைபடத்தில் காணும் ஏறக்குறைய 30 நாடுகளும், அதில் வசிக்கும் 3 பில்லியன் மக்களும் மங்கோலியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களே.

 

செங்கிஸ்கான் உலகை வெல்லப் புறப்பட்டுச் சென்ற நேரத்தில் மொத்த மங்கோலிய மக்கள் தொகை வெறும் 1 மில்லியன் மட்டுமே. அதாவது இந்திய ரயில்வேயில் பணி புரியும் மொத்த தொழிலாளர்களை விடவும் குறைந்த அளவு மக்கள்தொகையே மங்கோலியாவில் இருந்தது. அந்த 1 மில்லியன் மக்கள் தொகையிலிருந்து செங்கிஸ்கான் தனக்கு வேண்டிய 1 இலட்சம் படைவீரர்களைத் தேர்ந்த்தெடுத்தான். மொத்த மங்கோலியப்ப்டையயும் ஒரு கிரிக்கெட் ஸ்டேடியத்தில் அடக்கிவிட முடியும்.

 

செங்கிஸ்கானின் குதிரைப்படை சென்ற வழியில் இருந்த நாடுகளின் எல்லைகள் திருத்தி அமைக்கப்பட்டன. அவனின் கட்டமைப்பு கற்களால் ஆகாமல் நாடுகளால் ஆனது. சிறு சிறு நாடுகளாக சிதறிக்கிடந்த நாடுகளை ஒன்றுபடுத்தி பெரிய நாடுகளாக மாற்றியமைத்த பெருமை செங்கிஸ்கானையே சாரும். கிழக்கு ஐரோப்பாவில் ஒரு டஜனுக்கும் மேலாக சிதறிக்கிடந்த ஸ்லாவாக் நாடுகளை ஒன்றிணைத்து மாபெரும் ரஷ்யாவாக உருவாக்கிய பெருமையும் செங்கிஸ்கானுடையதே.

 

கிழக்கு ஆசியவில் சாங்க் அரச பரம்பரையினரால் நிர்வாகிக்க இயலாமல் பலவீனமாகசி சிதறிக்கிடந்த பல பகுதிகளை தனது போர்த் தந்திரங்கள் மூலம் வென்றெடுத்து சீனா என்ற மாபெரும் நாட்டை உருவாக்கித் தந்தவர்கள் செங்கிஸ்கானும் அவனுக்குப் பின் வந்த அவனது வாரிசுகளும்தான். மஞ்சூரியாவின் தெற்கிலிருந்த ஜூர்சட்டையும், மேற்கே திபெத்தையும், கோபி பாலைவனத்தைத் தொட்டடுத்து இருந்த டாங்குட் ராஜ்ஜியத்தையும், கிழக்கு துர்க்கிஸ்தானிலிருந்த உய்குர் நிலங்களையும் இணைத்து உருவாக்கப்பட்டதே இன்றைய சீனம்.

 

எல்லைகளை விரிவுபடுத்திய மங்கோலியர்களினால் உருப்பெற்ற கொரிய, இந்திய நாடுகளின் எல்லைகள் (பிரிவினைகளுக்கு முந்தைய) இன்றுவரை மங்கோலியர்கள் வகுத்த அளவிலேயே இருப்பது இன்னுமொரு ஆச்சரியமே.

 

*

 

செங்கிஸ்கானின் பேரரசு உலக நாடுகளை இணைத்தது மட்டுமல்லாமல் பல்வேறு கலாச்சாரங்கள் ஒன்றிணையவும், அனைத்து நாடுகளுக்கும் ஏற்புடைய ஒரு புதிய பொது உலக சட்டத்தை இயற்றவும் வழிவகை செய்தது. செங்கிஸ்கான் பிறந்த 1162-ஆம் வருடம் பல சிறு தீவுகளாக சிதறிக்கிடந்த உலகம், தனக்கு அண்டையிலுள்ள நாட்டினைத் தவிர உலகின் பிற பகுதிகளில் இருந்த நாடுகளைக் குறித்தோ அல்லது அதன் கலாச்சார, மொழி, பழக்க வழக்கங்கள் குறித்தோ எந்தவிதமான அறிதலும் இல்லாமலிருந்தது.

 

சீனாவிலிருந்த எவரும் ஐரோப்பாவைக் கேள்விப்பட்டதில்லை; ஐரோப்பியர் எவரும் சீனம் குறித்து அறிந்திருக்கவில்லை. அன்றைய வரலாற்று ஆதாரங்களின்படி எவரும் மேற்கண்ட நாடுகளுக்கோ அல்லது அங்கிருந்து இங்கோ பயணம் எதுவும் மேற்கொள்பவர்களாக இல்லை. ஆனால் செங்கிஸ்கான மரணமடைந்த 1227-ஆம் வருடம் அவனது ஆட்சியின் கீழிருந்த ஒவ்வொரும் நாடும் பிற நாடுகளுக்கு தங்களின் பிரதிநிதிகளை அனுப்பி வைத்ததுடன், வியாபாரத் தொடர்பும் கொண்டவைகளாக மாறின.

 

நிர்வாகத்தில் புதிய மாற்றங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் மங்கோலியர்களே.

 

பிறப்பினால் தகுதியற்ற ஒருவன் உயர்பதவியை அடையும் பழைய முறையை மாற்றி, உழைப்பும், திறமையும், விசுவாசமும் உடயவர்களுக்கு உயர்பதவிகள் அளிக்கும் முறை மங்கோலியர்களால் அவர்கள் ஆக்கிரமித்த பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒன்றிர்க்கொன்று தொடர்பற்று, தொலைவில் இருந்த பட்டுச் சாலையின் (சில்க் ரோடு) வழியில் இருந்த நகரங்கள் இணைக்கப்பட்டு, அங்கு தங்கு தடையற்ற வணிகம் நிகழ வழி செய்யப்பட்டது. தங்கள் ஆட்சியின் கீழுள்ள மக்கள் அனைவருக்கும் வரிகள் குறைக்கப்பட்டு ஆசிரியர்கள், பூசாரிகள், மருத்துவர்கள் மற்றும் கல்விச் சாலைகளுக்கான வரிகள் அறவே அகற்றப்பட்டது. உலக நாடுகள் அனைத்திற்கும் பொதுவான அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு, நீல வானின் கீழுள்ள அத்தனை மக்களுக்கும் இது பொதுவானது என்று அறிவிக்கப்பட்டது.

 

ஆட்சியாளர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் எனும் அக்கால நடைமுறை நீக்கப்பட்டு, மக்களை ஆளுகிற அனைவரும் அச்சட்டங்களுக்கு உட்பட்டவர்கள் என செங்கிஸ்கானால் வலியுறுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. மதச் சுதந்திரம் அளிக்கப்பட்ட அதே நேரத்தில், குடிமக்கள் அனைவரும் மதத்திற்கு அப்பாற்பட்டு அரசிற்கு விசுவாசமானவர்களாக இருக்கச் செய்யப்பட்டார்கள். மக்களைத் துன்புறுத்தும் சட்டங்கள் நீக்கப்பட்டு, திருடர்களும், கொள்ளையர்களும், சமூக விரோதிகளும் மிகக் கடுமையான முறையில் ஒடுக்கப்பட்டனர். செங்கிஸ்கானே இது போன்ற கொள்ளையர்களை அடக்கு செயல்களை தனிப்பட்ட முறையில் பல முறை செய்ததாக அறியப்படுகிறது.

 

உலக வரலாற்றில் பிணைக் கைதிகளைப் பிடித்து வைக்க மறுத்த ஒரே பேரரசன் செங்கிஸ்கானாகத்தான் இருக்க வேண்டும். தன்னுடன் போர் புரியும் நாடுகளிலிருந்து வரும் பிரதிநிதிகளுக்கு பொதுச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கும் Diplomatic Immunity செங்கிஸ்கானாலேயே உலகிற்கு முதல் முதலாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

 

அடித்தளம் மிக உறுதியாக அமைக்கப்பட்ட நிலையில் செங்கிஸ்கானின் மங்கோலியப் பேரரசு அடுத்த 150 ஆண்டுகள் வரை தொடர்ந்து விரிவடைந்து கொண்டே சென்றது. அதனைத் தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில் சிதறிப்போனாலும் செங்கிஸ்கானின் வாரிசுகளே அந்த சிறிய, பெரிய நாடுகளையும் ஆண்டுவந்தார்கள்.

 

ரஷ்யா, துருக்கி, இந்தியா, சீனா மற்றும் பாரசீக நாடுகள் செங்கிஸ்கானின் வாரிசுகளால் தொடர்ந்து ஆளப்பட்டன. ஆண்ட ஒவ்வொருவரும் தங்களுக்கு வெவ்வவேறு விதமான பட்டங்களைச் சூட்டிக் கொண்டார்கள். கான், பேரரசர், ராஜா, ஷா, எமிர், தலாய் லாமா போன்ற பட்டங்களை உதாரணங்களாகச் சொல்லலாம். இந்த வாரிசுகளின் தலைமையில் மேலும் ஒரு நூற்றாண்டு வரை மங்கோலிய அரசாங்கங்கள் ஆளப்பட்டன.

 

அந்த வாரிசுகளின் ஒரு பிரிவினரான மொகலாயர்கள் இந்தியாவை 1857-ஆம் வருடம் வரை ஆண்டு வந்தார்கள். சிப்பாய்க் கலகத்திற்குப் பிறகு பிரிட்டிஷ்காரர்கள் கடைசி மொகலாய மன்னரான இரண்டாம் பகதூர் ஷாவை நாடுகடத்தியதுடன், அவரது மகன் மற்றும் பேரன்களின் தலைகளைத் துண்டித்து கொல்லும் வரை எனலாம். அத்துடன் செங்கிஸ்கானின் நேரடி வாரிசுகளின் ஆட்சி இந்தியாவில் முடிவடைந்தது.

 

உஸ்பெகிஸ்தானின் அமைந்த புகாராவின் எமிரான ஆலம்கான், சோவியத் படைகள் உஸ்பெகிஸ்தானைக் கைப்பற்றும் வரை ஆட்சி செய்து வந்தார். அவரே செங்கிஸ்கானின் நேரடி, கடைசி வாரிசு. அவருக்குப் பின் செங்கிஸ்கானின் வாரிசுகள் எவரும் எங்கும் ஆட்சி புரியவில்லை.

 

*

 

(பாகம் இரண்டில் தொடர்கிறது)

 

 

 

 

Series Navigationதமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருதையொட்டி ஏழு நாள் தொடர் திரையிடல்வால்ட் விட்மன் வசனக் கவிதை -36 என்னைப் பற்றிய பாடல் – 29 (Song of Myself) என் அடையாளச் சின்னங்கள் .. !
narendran

பி எஸ் நரேந்திரன்

Similar Posts

3 Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    மிகவும் அருமையான சரித்திரப் பதிவு இது. வாழ்த்துகள் திரு நரேந்திரன் அவர்களே…டாக்டர் ஜி.ஜான்சன்.

  2. Avatar
    arun says:

    Excellent narration, a learning experience of history for students like me. By the by, why our history teachers are not teaching us history in this manner?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *