சக்திஜோதி கவிதைகள்! ‘கடலோடு இசைத்தல்’ தொகுப்பை முன் வைத்து…

This entry is part 24 of 30 in the series 18 ஆகஸ்ட் 2013


ஸ்ரீரங்கம் சௌரிராஜன்.

சக்திஜோதி கவிதைகளில் காதல், காமம், பெண்ணியம் மற்றும் தத்துவம் பேசப்படுகின்றன. இக்கவிதைகள் உயிர் எழுத்து, காலச்சுவடு, புதிய பார்வை, அவள் விகடன், சிக்கிமுக்கி.காம் எனப் பலவற்றில் வெளியாகியுள்ளன. மொழியைச் சாதாரணமாகவும், தனித்தன்மையுடனும் கையாளுகிறார். ஆங்காங்கே புதிய சிந்தனைகளும் காணப்படுகின்றன.

‘தேவ வார்த்தைகள்’ என்ற கவிதையில் நளினமும், எளிமையும் உயிர்ப்புடன் நல்லியல்புகளாகக் காணப்படுகின்றன. அவைதாம் தலைப்பாகியுள்ளன.

பகலின் வெளிச்சத்தை

மழைத் துளிகளை

பூவின் வாசத்தை

உயிரின் காமத்தைக் கடத்தும்

இந்தக் காற்று

சில நேரங்களில

தானே வார்த்தையாயும் ஆகிவிடுவதுண்டு.

 

காற்று, வார்த்தையாவது மிகவும் நுட்பமான சுயதரிசனம். இதுவே கவித்துவம் பெறுகிறது. இக்கவிதை உணர்த்தும் தேவ வார்த்தைகள் ஐ டழஎந லழர என்றிருக்கலாம் என்பது என் யூகம்! இத்தொகுப்பின் சிறந்த கவிதைகளுள் இதுவும் ஒன்று.

‘பிடித்ததும் பிடிக்காததும்’ – வெளித் தோற்றம் கவிதை போல் தெரிந்தாலும் உரைநடையாகத்தான் இருக்கிறது.

 

நான் பிறந்தது கூட

பிடிக்கவில்லை சிலருக்கு

என் தாயோ பாலூட்டினாள்

செல்லமேயெனக் கொஞ்சினாள்.

 

‘இல்லாமல் போதல்’ பாலியல் கவிதை!

மருதாணியின் ஆரஞ்சு வர்ண விரல்களோடு

அவனுள் கிளைவிடுகிறாள்.

 

என நன்றாகத் தொடங்குகிறது கவிதை. ‘கிளை விடுகிறாள்’ என்பது நல்ல சொல்லாட்சி.

 

ஆம்பலின் சுகந்தம் கொண்ட இதழ்களால்

ஆவனை உயிர்ப்பிக்கிறாள்

 

முத்தமிடுவதை வித்தியாசமாகச் சொல்கிறார்.

 

‘கிளி புராணம்’ என்ற கவிதை பெண்ணியம் பேசுகிறது.

 

வீட்டின்அறைகளில்

சமையல் அறையில்

பூஜையறையில்

குளியலறையில்

வாழ்நாளைக் கடத்திவிடும்

கிளி

 

என்ற வரிகள் பெண்ணை வீட்டிற்குள்ளிருந்த வெளியே அழைக்கின்றன.

 

பேருந்துகளில் கூண்டோடு பயணிக்கும்

பல கிளிகள்

தம் பயணத்தை அறியாதவை

 

என்பதில் ‘கிளி’ குறியீடாக அமைய, சுதந்திரமின்மை உணர்த்தப்படுகிறது.

‘நிலவென்று சொல்லாதே’ என்ற தலைப்பில் ஒரு கவிதை. புதிய சிந்தனையாக இருக்கிறது. ‘இரவில் ஒளிர்ந்து கொண்டிருப்பது எப்படி நானாக முடியும்?’ என்கிறார்.

 

என்றென்றும்

பெண் நிலவாயிருக்க விரும்பவே மாட்டாள்

அவள்

சூரியன்களைப் பிரசவிப்பவள்

என்பதில் பெண் சுயம் பேசுதல் பதிவாகியுள்ளது.

 

நான்

எனது சொற்களால் ஆனவள்

எனது விரல்களிலிருந்து கசிவது

என் இரத்தம்

அது

என் முதுகுத் தண்டில் உற்பத்தியாகி

உலகெங்கும் பரவுகிறது

 

என்பது படைப்பாளியின் நிலைப்பாட்டை உணர்த்துகிறது. முதுகுத் தண்டில் உற்பத்தியாகவில்லை: மூளையில்தான் உற்பத்தியாகிறது என மறுக்கப் பார்த்தேன். முதுகுத் தண்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பதால் ‘நான் துவண்டு விடவில்லை: நிமிர்ந்துதான் நிற்கிறேன்’ என்ற சிறப்புப் பொருள் கிடைக்கிறது.

 

நிலவு

அது ஒரு போலி

மாதர்

கண்களைக் கட்டும்

ஒளித் தீற்று

 

என்கிறார். சக்திஜோதிக்கு ஒரு வேண்டுகோள். நிலாச் சோறு உண்ணுதல் என்பதை நினைத்துப் பாருங்கள். அது மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கத்தானே செய்கிறது.

‘பெண்மை பற்றிச் சில கவிதைகள்’ 144 வரிகள் கொண்ட நீள் கவிதையாகும்! இது பெண்ணின் பருவங்கள் பற்றி வித்தியாசமாகப் பேசுகிறது. ஊதா, நீலம், பச்சை, வயலட், மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய நிறங்கள் பெண்ணின் பருவங்களோடு தொடர்பு படுத்தப்படுகின்றன.

 

அவளது தொடுதலில்

பறவையென உருமாறிப் பறக்கப் போகிறது

மேலும் சில உயிர்கள்

என்பது அழகான படிமம். தாய்மை வித்தியாசமாய்ப் பேசப்படுகிறது.

 

வயலட் நிறச் சொற்களை

வயலட் நிற முத்தங்களை

வயலட் நிற அன்பைக் காண்கிறான்

என்ற வரிகளுக்கு எப்படிப் பொருள் கொள்வது எனத் தெரியவில்லை, கனவுத் தன்மை அறிவுப் பாதையைப் புறக்கணிக்கும் இயல்பு கொண்டது.

‘தனிமையின் வெளி’ என்றொரு கவிதை!

 

ப்ரியங்களுக்கு

இணையான வார்த்தைகள் எதுவும்

இல்லையென மொழி உணர்த்துகிறது.

என்ற வரிகள் மனிதநேயத்தில் தோய்ந்து கிடக்கின்றன.

 

நூலகத்தின் அமைதியென

மௌனம்

இடைவெளிகளில் நிரம்பி வழிகிறது.

எல்லாவற்றையும் அகற்றியபடி

 

எனக் கவிதை முடிகிறது. இக்கவிதையில் சொற்கள் ஒருவித மாயத் தன்மையுடன் அமைந்துள்ளன. வாசகன் மனத்தில் உட்காராமல் நழுவுகின்றன. மீண்டும் படித்தால் புதுமை கொண்டு மிளிர்கின்றன.

 

மழையைப் பாடாத கவிஞரா? ‘மழைப் பொழுது’ என்ற கவிதையில், மகனோடு மழையில் நனைந்த, குதித்து மகிழ்ந்த அனுபவம் பேசப்படுகிறது. இன்னும் மொழிவளத்தைக் காட்டியிருக்கலாம். ‘தனிமையின் ஆசை’ என்ற சிறு கவிதையில் சொற்கள் மந்திர கதியில் அமைந்து படித்து ரசிக்க மகிழ்ச்சியளிக்கின்றன. ‘வானத்திலிருந்து உதிரும் நட்சத்திரங்கள்’ என்ற கவிதையில் பதின் பருவப் பெண்ணின் காதலைப் பேசுவதுபோல் அமைந்துள்ளது.

 

வானத்திலிருந்து

உதிர்ந்து கொண்டேயிருந்தாய்

நட்சத்திரங்களென

 

என்று கவிதை தொடங்குகிறது. எதிர்காலக் கணவன் பற்றிய, சரியாக உருக்கொள்ள முடியாத கூறுகள் குறியீடாக ‘நட்சத்திரங்கள்’ என சுட்டப்படுகிறது எனலாம். நாஞ்சில் நாடன் குறிப்பிட்டது போல ‘நெஞ்சோடு கிளத்தல்’ என்ற வகையில் காணப்படும் கவிதைகளுள் இதுவும் ஒன்று.

புத்தகத்தின் தலைப்புக் கவிதை ‘கடலோடு இசைதல்’ கடலையும் நிலத்தையும் தொடர்படுத்துச் சில கேள்விகள் கேட்கப்படுகின்றன.

 

நிலத்தின் கடல்

கடலிலும்

கடலின் நிலம்

நிலத்திலும் கிடக்கிறது

என்பதை மாற்றிச் சொல்லி பார்த்தால் என்ன? நிறைவாக, இத் தொகுப்பில் பல நல்ல கவிதைகள் உள்ளன. வாசகர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.

 

 

Series Navigationவிரதமிருப்பவளின் கணவன் ; தூங்காத இரவுகள்அசடு
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *