போதி மரம்
சத்யானந்தன்
பாகம் 2 – புத்தர்
அத்தியாயம் 33
ஹம்சிகா கண்ணீர் வடித்தபடி யசோதராவின் குடிலின் வாயிலில் அமர்ந்திருந்தாள். ஒரு முறை பிட்சுணிகள் பலரும் ஊருக்குள் வந்து பிட்சை எடுத்துத் திரும்பும் போது அவர்களைத் தொடர்ந்து ஹம்சிகா அவர்களது குடில்கள் வரை வந்தாள். அவள் வருகையைப் பொருட்படுத்தாமல் எல்லா பிட்சுணிகளும் தத்தம் குடிலுக்குள் சென்றனர். யசோதரா மட்டும் அவளருகே வந்து “சொல் மகளே உனக்கு யாரைப் பார்க்க வேண்டும்?” என்று வினவினார். ஹம்சிகா வெறும் ஆர்வத்தில் மட்டுமே அவர்களைப் பின் தொடர்ந்திருந்தாள். இப்போது இவர் கேட்பதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. “தங்களைக் காணத்தான் வந்தேன்”
“என்ன விஷயமாக?”
“ஹம்சிகாவுக்கு இந்த முறை பதில் சொல்லுவது கடினம் என்று பட்டது. உண்மையில் ஒரு காரணமும் இல்லை. இருந்தாலும் சட்டென்று “நீங்கள் நன்றாகப் பாடுவீர்கள் என்று கேள்விப் பட்டேன்” என்றாள்.
“வாயேன் பாடுவோம்” என்று யசோதரா அவளை மெதுவாக அணைத்தபடி அழைத்துச் சென்றார். “நீ உன் வயது சிறுமிகளுடன் விளையாடுவது கிடையாதா?” என்றார் யசோதரா புன்னகையுடன்.
“அவர்கள் எல்லோரும் நகைகள் திருமணம் குழந்தைகள் இவற்றைப் பற்றியே பேசுகிறார்கள்”
ஏன் அது இயல்பானதில்லையா?”
“அதைப் பற்றி மட்டுமே பேசுவது சற்று திகட்டலாகவும் தேவையற்றதாகவும் தோன்றுகிறது”
“யசோதரா குடிலின் மூங்கிற் கதவைத் திறந்து உள்ளே நுழைந்த போது துப்புரவாக சாணம் போட்டு மெழுகியிருந்த விதமும், அந்தக் குடிலின் ஒரு மூலையில் அழகாக எரிந்த அகலின் சுடரும் மிகவும் அமைதி தரும் காட்சிகளாயிருந்தன. ஒரு மட்பாண்டம், ஒரு லோட்டா, சில துணிகள் ஒரு பனை ஓலைத் தடுக்கின் மீதும், ஒரு போர்வையும் விரிப்பும் மற்றொரு தடுக்கின் மீதும் மடித்து வைக்கப் பட்டிருந்தன. குடிலில் வேறு எதுவுமே இல்லை.
‘உன் அம்மா பாடுவார்களா?”
“இல்லை”
“அக்கா?”
“எனக்கு அக்காவே இல்லை”
“பிறகு சங்கீதத்தில் எப்படி ஆர்வம்?”
“ஒரு முறை உங்கள் குடில்கள் அருகே நடந்து சென்று கொண்டிருந்தேன். நீங்களோ அல்லது வேறு யாரோ பாடிக் கொண்டிருந்தீர்கள். மனதைத் தொடும் விதமாக இருந்தது அதிலிருந்த பாவம்”
“இசை எல்லா செவிகளையும் தட்டுவதில்லை. உன் பெயரென்ன?”
“ஹம்சிகா”
“என் பெயர் யசோதரா. இசை எல்லா இதயங்களையும் அசைப்பதில்லை ஹம்சிகா. உன்னிடம் இசையின் அழகுடன் தன்னை இனம் காணும் கலையுணர்வு இருக்கிறது”
அனேகமாக இது தனக்குக் கிடைத்த முதல் பாராட்டு என்று தோன்றியது ஹம்சிகாவுக்கு. யசோதராவின் பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டாள். “மன்னிக்க வேண்டும். உங்களைப் பார்த்த உடனே பாதம் பணிந்திருக்க வேண்டும்”. யசோதரா பதிலேதும் சொல்லாமல் அவளை மெதுவாக அணைத்து உச்சி முகர்ந்து “உனக்கு எல்லா நலன்களும் கிடைக்கட்டும்” என்றார். “சிறிது நேரம் நான் தியானத்தில் இருப்பேன். சரி தானே” என்று சம்மணமிட்டு தியானத்தில் அமர்ந்தார். சாந்தமும், கருணையும், அன்பும், நிறைவும் மிகுந்த முகவடிவம்.
தியானம் கலைத்த உடன் ஹம்சிகா “அம்மா பாடுங்கள்” என்று வேண்டினாள்.
“தர்மத்தை யாரும் ரட்சிக்க வேண்டாம்
தர்மம் உன்னை ரட்சிக்கும்
மண்ணில், பெண்ணில், மகுடங்களில்
பெயரில் புகழில் பெருமைகளில்
எதிலும் இல்லாத சாந்தி தரும்
தர்மத்தை யாரும் ரட்சிக்க வேண்டாம்
தர்மம் உன்னை ரட்சிக்கும்”
யாரோ தனது தோளைத் தொட நிகழ் காலத்துக்குத் திரும்பினாள் ஹம்சிகா. “ஏன் அழுகிறாய் மகளே?” ஒரு பிட்சுணி வினவினார்.
“அம்மா யசோதராவுக்கு உடல் நலம் சாயில்லை என்று கேள்விப் பட்டேன். அவரைப் பார்க்க முடியாது என்றார்கள். திரும்பிப் போக மனமில்லை. நான் அவரைப் பார்க்க முடியாதா?” கண்களில் நீர் திரள வினவினாள் ஹம்சிகா.
“அப்படி இல்லை மகளே. அவருக்கு நினைவு திரும்பினாலும் சிறிது நேரத்திலேயே தப்பி விடுகிறது”
“நான் அவரைத் தொந்தரவு செய்ய மாட்டேன்”
“அதற்காகக் கூறவில்லை மகளே … அவர் நினைவு வரும் நேரம் உன்னிடம் பேசுவாரா என்று தெரியவில்லை என்பதற்காகவே கூறினேன்”
“பார்த்துவிட்டுப் போய் விடுகிறேன்”
“சரிவா…. ” என்று அந்த பிட்சுணி குடிலுக்குள் அழைத்துச் சென்றார்.
குடிலில் ஒரு பாயில் யசோதரா படுத்திருந்தார். கண்கள் மூடியிருந்தன. மிகவும் மெலிந்திருந்தார். அருகே மற்றொரு பிட்சுணி அமர்ந்திருந்தார். அவர் ஹம்சிகாவைப் பார்த்து உதட்டின் மீது விரலை வைத்து “பேசாதே” என்று சைகை செய்தார். ஹம்சிகா சற்றே தள்ளித் தரையில் அமர்ந்தாள். கண்களில் நீர் தாரை தாரையாக வழிந்தது.
ஹம்சிகாவை அழைத்து வந்த பிட்சுணி சென்று விட்டார். ஹம்சிகாவின் ஆவலைப் புரிந்து கொண்டோ என்னவோ சற்று நேரத்தில் யசோதராவுக்கு நினைவு திரும்பியது. கோரைப் புற்கள் மீது காவித்துணி சுற்றிய சிறிய தலையணையிலிருந்து யசோதராவின் தலையை பிட்சுணி தம் கரங்களால் தாங்கி, குடிக்க நீர் புகட்டினார். அவரிடம் யசோதரா மெல்லிய குரலில் ஏதோ தெரிவித்தார். பின் மறுபடி யசோதரா தலையை பிட்சுணி தலையணையின் மீது வைத்து விட்டு “உன்னைப் பாடச் சொல்கிறார் ” என்றார்.
ஐம்புலனே புதை குழிகளாகும்
நீ அடக்கியாள ஞானக் குதிரைகளாகும்
அன்னம் போலும் நீ ஞானத்தை
லௌகீகத்தில் இருந்து பிரித்தெடுத்தால்
தர்மத்தை யாரும் ரட்சிக்க வேண்டாம்
தர்மம் உன்னை ரட்சிக்கும்
இன்பம் என்றும் துன்பம் என்றும்
இறப்பு என்றும் பிறப்பு என்றும்
உறவு என்றும் அன்னியம் என்றும்
இருமை மறையத் தவமாய் இருந்தால்
தர்மத்தை யாரும் ரட்சிக்க வேண்டாம்
தர்மம் உன்னை ரட்சிக்கும்
மனிதர்கள் என்னும் இனத்தினிலும், மரத்தினிலும்
விலங்கினிலும், பறவையிலும் நதியிலும் மலையிலும்
பிரபஞ்சம் முழுதும் ஆன்மா ஒன்றாம் என அறிந்தால்
தர்மத்தை யாரும் ரட்சிக்க வேண்டாம்
தர்மம் உன்னை ரட்சிக்கும்
துன்பம் மூப்பு நோய் யாவும்
தொற்றும் உடலை மட்டும்
உள்ளே அன்பும் கருணையும் ஆசைகள்
அற்ற நன்னெறியும் அணையா ஒளி வீசும் போது
தர்மத்தை யாரும் ரட்சிக்க வேண்டாம்
தர்மம் உன்னை ரட்சிக்கும்
ஆசை மிகுந்திட அபகரிக்கத் தோன்றும்
அதிகாரம் தேட ஆயுதம் தோன்றும்
ஞானம் தேட விடுதலை தோன்றும்
விடுதலை மட்டுமே ஆனந்தம் என்றறிந்தால்
தர்மத்தை யாரும் ரட்சிக்க வேண்டாம்
தர்மம் உன்னை ரட்சிக்கும்”
பாடி முடித்த பின் உதடுகள் துடிக்க ஹம்சிகா கண்ணீர் சிந்தினாள். யசோதராவின் விழிகளில் நீர் கசிந்திருந்தது. சைகை செய்து ஹம்சிகாவை அருகில் அழைத்து அவளின் தலையை வருடிக் கொடுத்தார்.
குடில்களுக்கு இடைப்பட்ட மைதானத்தில் பிட்சுணிகள் அனைவரும் குழுமியிருந்தனர். அனைவரும் ஆனந்தனின் வருகைக்காகக் காத்திருந்தனர். நிறைய பேர் குழுமியிருந்தும் அங்கே நிசப்தமும் மௌனமுமே நிரவியிருந்தன. இலைகள் அசையும் ஒலி , பறவைகளில் சலசலப்புத் தவிர வேறு எந்த ஒலியும் இல்லை. மாலை ஒளி மங்கிக் கொண்டிருந்தது. சில பிட்சுணிகள் எழுந்து சென்று சில தீப்பந்தந்தங்களை எடுத்து வந்து அவற்றிற்கென நடப்பட்டிருந்த மூங்கிற் கம்பங்களின் மீது பிணைத்துக் கட்டினர்.
ஆனந்தனும் சில மூத்த பிட்சுக்களும் வந்ததும் எல்லா பிட்சுணிகளும் எழுந்து கை கூப்பி வணங்கினர்.
சில நொடிகள் மௌனம் காத்த பின் ஆனந்தன் பேசத் துவங்கினார் ” மாதா யசோதரா அவர்கள் பஞ்ச பூதங்களுடன் ஐக்கியமாகி இன்றுடன் ஒரு வாரம் நிறைந்து விட்டது. மாதா கோதமி அவர்கள் பூத உடலை நீத்த போது தாயார் யதோதராவே என்னிடம் இனி என்ன செய்யப் போகிறோம் என்று கேட்டார். இப்போது உங்களில் பலர் என்னிடம் அதே கேள்வியைக் கேட்கின்றனர். இந்த இடத்தில் ஒரு செய்தியை நான் கூற வேண்டும். தன்னை எதிர்ப்போர் யாரையும் அல்லது தனது வேட்டைக்கான இரையை வீழ்த்தும் முன் குறுக்கே வந்த யாரிடமும் அங்குலிமால் கருணை காட்டியதில்லை. அவர்களை உடனே கொன்று விடுவார். ஆனால் புத்த தேவரின் முன் அவர் தனது கொலை வெறியை விட்டு பௌத்ததின் மனித் நேய வழிக்கு வந்து விட்டார்.”
“இப்போது அங்குலிமால் எங்கே இருக்கிறார்?” என்று வினவினார் ஒரு பிட்சுணி.
“ராககஹத்தில். பிரசாந்தன் என்னும் பெயரிடப்பட்டு பிட்சைக்கும் வருகிறார்.”
“அவர் எப்போது பிட்சுவாக சபதமேற்பார்?”
“சாதாரண மனிதர்களுடன் அவர் வாழ்ந்து சமூகத்தின் குறை நிறைகளை உணர வேண்டும். பிறகு அவரது மனப்பக்குவத்தில் காலப் போக்கில் கண்டிப்பாக பிட்சுவாக ஆக இயலும்”
“அவரைப் பற்றி இன்று குறிப்பிடக் காரணம்?”
“பிரசாந்தன் புத்தரின் வாதத் திறமையால் மாறவில்லை. புத்தரிடம் பிரசாந்தன் தரிசித்தது அறம் சார்ந்த – யாருமே வெல்ல முடியாத துணிவை. கொடூரமான மனநிலையில் இருந்த ஒருவரே புத்தபெருமானின் அருளில் சன்மார்க்கத்து வந்து விட்ட போது நமக்கும் அவரே தான் மேலும் செல்ல வழி காட்டப் போகிறார்.”
- தாயின் அரவணைப்பு
- அம்ஷன் குமாரின் ‘ ஒருத்தி ‘
- புகழ் பெற்ற ஏழைகள் (முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை)
- 3. சின்ன டிராகன் புரூஸ் லீயுடன் சாகச நாயகன்
- நடுங்கும் என் கரங்கள்…
- உனக்காக ஒரு முறை
- இந்திரா
- உழவு
- ஆகஸ்ட் 15
- இராஜராஜன் கையெழுத்து.
- டௌரி தராத கௌரி கல்யாணம்…! – 15
- முக்கோணக் கிளிகள் ! [நெடுங்கதை] மீள் பதிப்பு
- சிவதாண்டவம்
- கொம்புத்தேன்
- வசை பாடல்
- மருத்துவக் கட்டுரை அதிகமான இரத்தப் போக்கு
- பாரம்பரிய இரகசியம்
- பூகோளத்தைச் சூடாக்கி வரும் சில அடிப்படை விதி முறை இயக்கப்பாடுகள் 1
- வேர் மறந்த தளிர்கள் – 29
- விடுதலை நாள் என்பது விடுமுறை நாள் !
- கருத்தரங்க அழைப்பு
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -37 என்னைப் பற்றிய பாடல் – 30
- விரதமிருப்பவளின் கணவன் ; தூங்காத இரவுகள்
- சக்திஜோதி கவிதைகள்! ‘கடலோடு இசைத்தல்’ தொகுப்பை முன் வைத்து…
- அசடு
- போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 33
- மங்கோலியன் – II
- பூரண சுதந்திரம் யாருக்கு ?
- தாகூரின் கீதப் பாமாலை – 78 அர்ப்பணம் செய் உன்னை .. !
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 23