எஸ். சிவகுமார்.
ராமகிருஷ்ணன் :
எதையும் திட்டமிட்டுச் செய்வதில் ஒரு சுகம், சௌகரியம் இருக்கிறது. திட்டமிட்ட வேலையைச் செய்யும்போது பதற்றம் இருக்காது. ரத்தக்கொதிப்பு அதிகரிக்காது. நான் எந்த வேலையும் இதுவரை திட்டமிடாமல் செய்தது கிடையாது. பள்ளிப்படிப்பு முடிந்ததுமே நன்றாக யோசனை செய்து, மேல்படிப்பு எனக்குச் சரிப்பட்டு வராது என்று முடிவு செய்து, யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஓடிப்போய் ராணுவத்தில் சேர்ந்ததிலிருந்து நினைத்துப் பார்த்தால், அதன் பின்னர் ஒவ்வொரு செயலுமே அவசரப்படாமல் யோசனை செய்துத் திட்டமிட்டே செய்திருக்கிறேன். இவளை, அதாவது என் மனைவி ராஜேஸ்வரியை, காதலித்தது, கல்யாணம் செய்துகொண்டது, புவனா என்கிற அழகான மகளைப் பெற்றுக் கொண்டது, அதன்பின் பிள்ளை பெற்றுக்கொள்ளாமல் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டது என்று எல்லாம் நான் திட்டமிட்டுச் செய்தவையே.
என் மனைவியைக் கொலை செய்வது என்று போன மாதமே முடிவு செய்துவிட்டேன். ஆனால் எப்படி, எப்போது என்று யோசித்து யோசித்து நேற்று இரவுதான் ஒரு சரியான திட்டம் தோன்றியது. கொலை செய்துவிட்டு மாட்டிக்கொள்ளும் உத்தேசம் இல்லை. ஏனென்றால் இன்னொரு கொலையும் செய்யவேண்டியிருக்கிறது. அது யாரை என்று அப்புறம் சொல்கிறேன்; இப்போதைக்கு ராஜேஸ்வரி. செய்யவேண்டிய வேலைகளை 1, 2, 3 என்றுப் பட்டியலிட்டு ஒவ்வொன்றும் எந்த நேரத்தில் செய்யவேண்டும் என்றும் எழுதிக் கொண்டேன்.
ராணுவத்தில் இருக்கும்போது ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒத்திகை பார்ப்போம்; ஆய்வு நடத்துவோம்; பயிற்சி செய்வோம்; சிறு குழுக்களாகப் பிரிந்து ‘மாக் ட்ரில்’ செய்வோம். ஆனால் இந்தக் கொலைத் திட்டத்தில் எல்லாம் சரியாக இருக்குமா, பிரச்னை ஏதுமின்றி நடக்குமா என்று ஒத்திகை பார்க்க முடியாது.
முதல் வேலை காலை பத்து மணிக்கு புவனாவுக்கு செய்தி அனுப்பவேண்டும். இதோ, மணி பத்து; ராஜேஸ்வரியின் கைப்பேசியை எடுத்து அதிலிருந்து புவனாவுக்குக் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டேன்.
புவனா
இருக்கையில் அமர்ந்து கணினியை அமர்த்திவிட்டுத் தலைநிமிர்வதற்குள் முதல் வாடிக்கையாளர் அவசரப்பட்டார். காலை மணி சரியாகப் பத்து. இன்று சனிக்கிழமை வங்கி அரை நாள்தான் வேலை. ஒரு முழுநாள் வேலையையும் இந்த அரைநாளில் நெருக்கிவிடுவார்கள். என்ன வேண்டும் என்று அவரைக் கேட்பதற்குள் கைப்பேசி கிணுகிணுத்தது. முன்னால் காத்திருப்பவரைக் கவனித்து அனுப்பிவிட்டுப் பார்த்துக் கொள்ளலாம் என்று வேலையைக் கவனித்தேன். அடுத்தடுத்து வந்த இருவரையும் அனுப்பிய பிறகு சிறிய இடைவெளி கிடைக்க, கைப்பேசியை எடுத்துப் பார்த்ததில் அம்மாவிடமிருந்து குறுஞ்செய்தி.
“உடல்நிலை கவலைக்கிடம்; புறப்பட்டு நாளைக்கு வரவும்”
மேற்பார்வையாளரிடம் அனுமதி கேட்டுப் பின்புறம் சென்று மறுபடி செய்தியைப் படித்தேன். இதை அம்மா அனுப்பவில்லை; அப்பாதான் அனுப்பியிருக்கிறார். அப்பா செய்யும் எந்தவொரு வேலையும் வெகு நேர்த்தியாகவும், சீராகவும் இருக்கும். குறுஞ்செய்தியில்கூட வார்த்தைகள் குறுங்காமல், இலக்கணம் மாறாமல் இருக்கும். ஆனால் இந்தச் செய்தி கொஞ்சம் புரியாதமாதிரி இருக்கிறது. நாளைக்குள் வரச்சொல்கிறாரா அல்லது நாளைக்கு வரச்சொல்கிறாரா என்று குழப்புகிறது. இன்றைக்கே போவதுதான் நல்லது. மதியம் மூன்று மணிக்கு ஒரு ரயில் இருக்கிறது. எப்படியும் இரவு எட்டு மணிக்குள் போய்விடலாம். எதற்கும் அப்பாவிடம் பேசிவிடுவது நல்லது என்று அப்பாவைக் கைப்பேசியில் அழைத்தேன். எடுத்ததுமே ‘என்ன?’ என்றார் கடுப்பாக. அப்பா எப்போது நன்றாகப் பேசுவார், எப்போது கடுகடுப்பார் என்றுத் தீர்மானிக்கவே முடியாது. பயந்தபடியே ‘அம்மாவுக்கு எப்படி இருக்கு? உடனே வரட்டுமா?’ என்றுக் கேட்டு முடிப்பதற்குள், ‘அம்மா எங்கயும் போயிடமாட்டா; நாளைக்கு வா, போதும்’ என்றுத் தொடர்பைத் துண்டித்துவிட்டார்.
இரண்டு வருடமாகவே அம்மாவின் உடல்நிலை சரியில்லை. மூட்டுவலி என்று ஆரம்பித்த பிரச்சனை, கொஞ்சம் கொஞ்சமாகப் பரவிக் கால்வலி, இடுப்புவலி, முதுகுவலி, கைவலி என்று உடல் முழுதும் வலி. என்ன வலி இருந்தாலும் நடமாடிக்கொண்டு இருந்தவள், போன வருடம், முதுகெலும்பில் ஒரு எலும்பு நழுவிக்கொள்ள, படுத்த படுக்கையாகிவிட்டாள்.
என் கணவர் ‘விப்ரோ’வில் வேலை பார்க்கிறார். இன்று அவருக்கு விடுமுறை. நான் வேலைக்குப் புறப்படும்வரை தூங்கிக் கொண்டிருந்தார். அவரைக் கைப்பேசியில் அழைத்து விஷயத்தைச் சொல்லி, நாளைக் காலை ஆறுமணி ரயிலுக்குப் பயணச்சீட்டு வாங்கச் சொன்னேன். இருக்கைக்குத் திரும்பியபோது ஆறு பேர் காத்திருந்தார்கள். வேலையைக் கவனிக்க ஆரம்பித்தேன்.
ராமகிருஷ்ணன் :
இந்தப் புவனா என்னை அழைத்துப் பேசுவாள் என்று கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. அவள் இன்றே வந்துவிட்டால் என் திட்டமெல்லாம் பாழ். என் வார்த்தையை மீறி அவள் எதுவும் செய்யமாட்டாள் என்றாலும், அவள் எப்போது வருகிறாள் என்று தெரிந்தபின்தான் அடுத்தக் கட்ட நடவடிக்கை. இப்போது அவசரப்படக் கூடாது. மதியம் வங்கி நேரம் முடியும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம். எதுவும் செய்தி வரவில்லை என்றால், அவளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
வழக்கமாக பதினோரு மணிக்கு என் வீட்டுக்கு மருத்துவர் வந்துவிடுவார். அவர் வந்து ராஜேஸ்வரியைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டுப் போகட்டும். அப்புறம்தான் எல்லாம். மருத்தவரின் வருகைக்காகக் காத்திருக்கிறேன்.
ராஜேஸ்வரி :
நான் உயிரோடிருக்கவே எனக்குப் பிடிக்கவில்லை. எந்த வேலையும் தானே செய்யமுடியாமல் இன்னொருவர் உதவியை எதிர்பார்த்தே இருக்கவேண்டிய இந்த வாழ்க்கை, பெரும்பாரமாகத் தெரிகிறது. இவரைக் காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டேன். எவ்வளவு சந்தோஷமாக இருந்தோம். ஆனால் ஒரு மாதமாகவே இவர் போக்கு என்னவென்றே புரியவில்லை.
காலையில் ஆசையுடன் பேசிக்கொண்டிருப்பவர், மாலையில் என்னை சட்டை செய்யாமல் பேசாமல் ஏதாவது புத்தகம் படித்துக்கொண்டு இருப்பார். இரவில் ஏதேனும் பேச வந்தால் எரிந்து எரிந்து விழுவார். புவனாவும் எப்போதுதான் வருகிறாள். வந்தாலும் நான்கு நாட்களுக்குமேல் இருப்பதில்லை. நான் ஏதாவது வருத்தமாகச் சொன்னால் ‘நீங்கள் ரெண்டு பேரும் சென்னைக்கே வந்து எங்களோடு இருங்கள்’ என்கிறாள். இவர் இந்த வீட்டையும், ஊரையும் விட்டு நகர்வது என்பது நடக்காத காரியம் என்று எல்லோருக்கும் தெரியும்.
ஒருவாரமாக உடம்பு சற்று அதிகம் படுத்துகிறது. காலையில் டாக்டர் வந்துவிட்டுப் போய்விட்டார். வழக்கமான மருந்துகள். வழக்கமான கட்டளைகள். நேற்று ராத்திரி ‘புவனாவைப் பார்க்கணும் போல இருக்கு’ என்று இவரிடம் சொன்னேன். ‘சரி, சரி தூங்கு’ என்று சொல்லிவிட்டுப் படுக்கப் போய்விட்டார். காலையிலிருந்து இன்னும் எதுவும் பேசவில்லை. ஏதாவது கேட்கலாம் என்றால்கூட தயக்கமாக இருக்கிறது.
ஒரு மணிக்கு எனக்குச் சாப்பாடு கொடுத்துவிட்டுத் தானும் சாப்பிட்டுவிட்டுத் தன் அறைக்குப் போய்விட்டார். படித்து, தூங்கி எழுந்து இனி அஞ்சு மணிக்குதான் வெளியே வருவார். இப்போது மணி ரெண்டு. எனக்குத் தூக்கம் வர கொஞ்ச நேரமாகும். திரும்பிப் படுத்துக்கொண்டு இந்த மாத மங்கையர் மலரைப் படிக்க ஆரம்பித்தேன்.
பத்து நிமிஷம் கூட ஆகவில்லை. புவனாவிடமிருந்து அழைப்பு வந்தது. கைப்பேசியை எடுத்துப் பேசினேன். ‘உனக்கு உடம்பு மோசமாக இருக்கு, நாளைக்கு வான்னு அப்பா எஸ்.எம்.எஸ். அனுப்பியிருந்தார். என்ன ஆச்சு உனக்கு?’ன்னு கேட்டா. ‘அப்பிடியேதான் இருக்கு. உன்னைப் பார்க்கணும் போல இருக்குன்னு நேத்தி ராத்திரி அப்பாகிட்ட சொன்னேன். அதனால அப்பிடி அனுப்பியிருப்பார். நீ எப்ப வரே?’ன்னு கேட்டேன். நாளைக்கு ஆறு மணி ரயில்லே அவளும், மாப்பிள்ளையும் வரதா சொன்னா. ‘அப்பாகிட்டயும் சொல்லிடு’ன்னு சொன்னா. கொஞ்ச நேரம் பேசினா. எனக்குத் தூக்கம் வரமாதிரி இருந்தது. அதனாலே மிச்ச விஷயங்களை நாளைக்குப் பேசிக்கலாம் என்று சொல்லிவிட்டுத் தூங்கப் போனேன்.
ராமகிருஷ்ணன் :
புத்தகம் படித்துக் கொண்டிருந்தவன் அப்படியே தூங்கிப் போனேன். எத்தனை நேரம் தூங்கினேன் என்றே தெரியவில்லை. எழுந்திருக்கும்போது மணி ஐந்து ஆகிவிட்டது. ராஜேஸ்வரி இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாள். முகம் கழுவி விட்டுச் சமயலறைக்குச் சென்றுக் காப்பிக் கலந்து வந்து அவளை எழுப்பிக் கொடுத்துவிட்டு, நானும் பக்கத்தில் அமர்ந்துக் குடித்தேன்.
நான் கேட்காமலேயே ‘புவனா பேசினாள், நாளைக்குக் காலை ரயிலில் புறப்பட்டு அவளும், மாப்பிள்ளையும் வராங்க’ என்றுத் தகவல் சொன்னாள். மனம் நிம்மதியானது. சந்தோஷத்தில் ராஜேஸ்வரியுடன் சிரித்துப் பேசினேன். புவனா வருவதை நினைத்து நான் சந்தோஷப்படுவதாக அவள் நினைத்துக் கொண்டாள்.
இனி இரண்டாவது கட்ட நடவடிக்கையைச் செயல்படுத்தவேண்டிய நேரம். இறந்தவர்களை வைப்பதற்கான குளிர்ப்பெட்டிச்சேவை தரும் கடையைக் கைப்பேசியில் அழைத்தேன். ‘ஐஸ்பெட்டி’ வேண்டும் என்றேன். யார் இறந்தார், எப்போது இறந்தார் என்று தேவையில்லாத கேள்வியெல்லாம் கேட்டான்.
‘என் மனைவி இறக்கும் நிலையில் இருக்கிறாள்; எப்போதுவேண்டுமானாலும் உயிர் பிரியலாம் என்று டாக்டர் சொல்லிவிட்டார். அதனால் இரவு ஒன்பது மணிக்குக் கொண்டு வந்து வைத்துவிட்டால், உயிர் பிரிந்தது என்று டாக்டர் வந்து முடிவு சொல்லிவிட்டால், அப்படியே பெட்டியில் வைத்துவிட சௌகரியமாக இருக்கும். நான் மிகவும் வயதானவன். இரவு நேரத்தில் உங்களை அழைத்துச் சொல்லி தாமதமாக்க நான் விரும்பவில்லை. வேண்டுமானால் இரண்டு நாளைக்குரிய கட்டணம் கொடுத்துவிடுகிறேன்’ என்று சமாளித்தேன்.
புத்தி பேதலித்தவன், அரைக்கிறுக்கன் என்று என்னை முடிவு செய்திருப்பான். பெயர், முகவரி, கைப்பேசி எண் எல்லாம் குறித்துக் கொண்டான். ‘இரவு ஒன்பது மணி’ என்று மறுபடி நினைவு படுத்தினேன். எல்லாம் திட்டப்படி சரியாகப் போய்க் கொண்டிருக்கிறது. இனி எட்டு மணிக்குதான் அடுத்த கட்டம். பேசிமுடித்து மறுபடி ராஜேஸ்வரியின் அறைக்குச் சென்று அவள் அலமாரியில் துணிகளுக்கு அடியில் ஒளித்து வைத்திருந்தக் கடிதங்களை மறுமுறை படிக்க ஆரம்பித்தேன். ரத்தத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சூடு பரவ ஆரம்பித்தது.
ராஜேஸ்வரி
என்னுடைய அலமாரியில் இத்தனை நேரம் என்ன செய்கிறார் இவர்? எனக்கு மாற்றுத்துணி இனி நாளைக் காலையில்தான் வேண்டும். போன மாதம்தான் எல்லாத் துணிகளையும் அடுக்கி வைத்தார். இப்போது என்ன மறுபடியும் செய்கிறார்? எல்லாம் கலைந்துவிட்டதா? அல்லது தேவையில்லாமல் மறுபடி அடுக்கி வைக்கிறாரா?
‘என் அலமாரியில என்ன குடையிறீங்க?’ன்னு சத்தமா கேட்டேன். அவ்வளவுதான்; ஓடிவந்து, கையில் வைத்திருந்த காகிதத்தை எல்லாம் என்மேலே தூக்கி எறிந்தார். ‘லவ் லெட்டரா எழுதறே, லவ் லெட்டர்? தேவிடியா மவளே, இத்தன வருஷம் ஏமாத்திட்டியேடி என்னை ! எவனையோ லவ் பண்ணிட்டு என்னையும் லவ் பண்ற மாதிரி நடிச்சுக் கல்யாணம் செஞ்சுகிட்டே, இல்லை? உங்க ரெண்டு பேரையும் கொல்லாம விடமாட்டேன்!’ என்று கோபமாகக் கத்தினார்.
இந்தக் கடிதங்களை எல்லாம் லக்ஷ்மிக்குக் கல்யாணம் ஆனதுமே தூக்கிப் போட்டிருக்க வேண்டும். தேவையில்லாமல் வைத்திருந்துவிட்டு, உண்மை என்ன என்று இப்போது இவருக்கு எப்படிப் புரியவைப்பது? சொன்னால் நம்புவாரா? சொல்லித்தான் ஆகவேண்டும்; நம்புவதும், நம்பாததும் அவர் இஷ்டம். ‘எனக்கு வந்த லெட்டர் இல்லீங்க இதெல்லாம்’ என்று ஆரம்பித்ததுமே மறுபடி கத்த ஆரம்பித்தார்.
‘டியர் ராஜின்னு இருக்கு; இதெல்லாம் உனக்கு வந்ததில்லையா? உன் கள்ளக் காதலன உன் கஸின் லக்ஷ்மிக்குக் கல்யாணம் வேற செஞ்சி வச்சிருக்க. சரியான எமகாதகிடி நீ! அவனோட நீ ஜாலியாப் பேசிக்கிட்டு இருந்ததுக்கெல்லாம் இப்போதான் அர்த்தம் புரியுது’ என்று பொருமினார்.
‘இந்த லெட்டர் எல்லாம் லக்ஷ்மிக்கு வந்ததுதாங்க; அவளோட முழுப்பேரு ராஜலக்ஷ்மி; நாங்க லக்ஷ்மின்னு கூப்பிடுவோம். வெளியில எல்லாரும் ராஜின்னுதான் கூப்பிடுவாங்க. அவங்க வீட்டில சந்தேகப்படுவாங்கன்னு அவ லவ்வர் எழுதின லெட்டர் எல்லாம் எங்கிட்ட குடுத்து வச்சிருந்தா. நான்தான் ரெண்டு பக்கமும் பேசி அவங்க கல்யாணத்தை நடத்தி வச்சேன். அது முடிஞ்சதுமே எல்லாத்தையும் அவகிட்ட குடுத்திருக்கணும். மறந்துபோனது இப்போ இப்படிப் பிரச்சினை ஆகும்னு நான் நினைக்கவே இல்லே’ன்னு அழுதேன்.
கத்தறதைச் சட்டுன்னு நிறுத்தி, ‘அப்பிடியா?’ன்னு நக்கலாக் கேட்டிட்டு ஒவ்வொரு கடிதமாப் பொறுக்கி அடுக்கித் திரும்ப அலமாரியிலே வைத்துவிட்டு, ‘நீ ரெஸ்ட் எடு’ன்னு சொல்லிட்டுத் திரும்பிப் பார்க்காமல் போயிட்டார்.
நான் சொன்னதை இவர் நம்பினாரா இல்லையான்னு தெரியலை. நிஜமாகவே என்னைக் கொன்று விடுவாரா? அப்படியே கொன்றாலும் பரவாயில்லை. ஆனால் நான் குற்றமற்றவள் என்று எப்படி நிரூபிப்பது? எப்படி அவர் தெரிந்து கொள்வார்? இத்தனை வருடம் அன்புடன் வாழ்ந்ததற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடாதா? நாளைக்கு லக்ஷ்மியையும் அவள் கணவனையும் வரச்சொல்லி, இவரிடம் பேசச் சொல்ல வேண்டும். நான் எந்தத் தவறும் செய்யாதவள், இவரை மட்டுமே நேசித்தவள், நேசிப்பவள் என்பதை உறுதி செய்யவேண்டும்.
கைப்பேசியை எடுத்து லக்ஷ்மியை அழைத்தேன். ‘அக்கா, அவசரமா நானும் இவரும் வெளியில போய்க்கிட்டிருக்கோம். சீக்கரம் என்ன விஷயம்னு சொல்லு’ என்றாள். ‘உன்னைப் பாக்கணும் போல இருக்கு; நாளைக்கு ரெண்டு பேரும் வந்திட்டுப் போங்க’ன்னு சுருக்கமாச் சொல்லிட்டுக் கண்ணை மூடிப் படுத்தேன்.
ராமகிருஷ்ணன் :
என்ன அருமையாகப் பொய் சொல்கிறாள் இந்தக் கிராதகி? நாளைக்கு இவளின் இறுதிச் சடங்குக்கு லக்ஷ்மியும், அவள் கணவனும் வருவார்கள். அவன் குலுங்கிக் குலுங்கி அழுவதைப் பார்த்து நான் சந்தோஷப்பட வேண்டும். அவனை எப்படிக் கொல்வது என்று பத்து நாள் பொறுத்து யோசிக்கவேண்டும். அப்போதுதான் யாருக்கும் சந்தேகம் வராது. இப்போது செய்ய வேண்டியதெல்லாம் ராஜேஸ்வரியிடம் நல்லபடியாகப் பேசுவதுதான். அவள் சொன்னதை நம்புவதாகச் சொல்லி கத்தியதற்கு மன்னிப்புக் கேட்கவேண்டும். யாரிடமாவது அவள் இதைப் பற்றிப் பேசிவிட்டால் என் திட்டமெல்லாம் பாழாய்ப் போகும். மறுபடி ராஜேஸ்வரி அறைக்குப் போனேன். கண்ணை மூடிப் படுத்திருந்தவளை ‘ராஜி’ன்னு மெதுவாகக் கூப்பிட்டேன். கண்ணைத் திறந்து என்னைப் பார்த்தாள். அதில் ஒரு மிரட்சி தெரிந்தது.
‘தெரியாம உன்மேல சந்தேகப்பட்டுட்டேன். படுத்த படுக்கையா இருக்கிற உன்கிட்டப் போய் இவ்வளவு மோசமா நடந்துகிட்டேன். என்னை மன்னிச்சிடு’ன்னு கண்ணில் பொய்யாகக் கண்ணீர் வரவழைத்துக் கொண்டுச் சொன்னேன். என்னோட நடிப்பு எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அவள் எதுவும் பதில் சொல்லவில்லை. மறுபடி அழுதாள். அவள் அருகே அமர்ந்து அவள் கண்ணீரைத் துடைத்தேன். நெற்றியில் முத்தமிட்டேன். அவள் நிதானமாக மூச்சு விடுவது தெரிந்தது. பயம் நீங்கி நிதானமாகிவிட்டாள். நன்றாக மூச்சு விடட்டும். இன்னும் மூன்று மணி நேரம்தானே என்று சந்தோஷப்பட்டுக் கொண்டேன். பழைய கதையெல்லாம் பேசினோம். இரவு எட்டு மணி. இருவரும் சாப்பிட்டோம். அவளுக்குப் பாலும், அதில் வழக்கமாகச் சாப்பிடும் தூக்க மாத்திரையும் போட்டுக் கொடுத்துவிட்டு அறைக்கதவைச் சாத்திவிட்டு வெளிவாசலுக்கு வந்தேன்.
குளிர்ப்பெட்டி வரும்வரையில் இங்கேயே இருப்பது நல்லது என்று நாற்காலி போட்டு அமர்ந்துப் புத்தகம் படிக்கலானேன். ஒன்பது மணிக்குக் குளிர்ப்பெட்டியைக் கொண்டுவந்து இறக்கினார்கள். அதில் ஒருவன் ‘போய்ட்டாங்களா?’ என்று கேட்டதற்கு இன்னும் இல்லை என்று சுருக்கமாகப் பதில் சொன்னேன். ‘போய்ட்டங்கன்னா எந்நேரமா இருந்தாலும் கூப்பிடுங்க சார், வரோம்; அரை அவரு கூல் செஞ்சிட்டு அப்புறம்தான் பாடியை உள்ளே வைக்கணும்’ என்றான். ‘தேவையிருக்காது; டாக்டர் கூட ஆளுங்க வருவாங்க; அவங்கள உட்டே எடுத்து வச்சிருவம். இந்தாங்க ரெண்டு நாள் வாடகை; நாளைக்கு பில்லு கொண்டுவந்து குடுத்துட்டுப் பெட்டிய எடுத்திட்டுப் போங்க’ என்று அவர்களை உடனடியாக அனுப்பிக் கதவைச் சாத்திவிட்டு உள்ளே வந்தேன்.
ராஜேஸ்வரியின் அறைக்கதவைத் திறந்து உள்ளே தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்தேன். சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். இன்னும் கொஞ்ச நேரத்தில் அடுத்த வேலையை ஆரம்பிக்கவேண்டும். அவள் அறைக்கு வெளியிலே தெற்கு வடக்காகப் பெட்டியை வைத்திருந்தார்கள். அதன் ப்ளக்கை எடுத்து சுவரிலிருந்த மின்சார ஸாக்கெட்டில் செருகி ஸ்விட்சைப் போட்டேன்.
இன்னும் கொஞ்ச நேரத்தில் அவளை எழுப்பிக் கைத்தாங்கலாக நடத்திப் பெட்டியில் படுக்கவைத்து மூடிவிட வேண்டியதுதான். மூச்சுத் திணறி தூக்கத்திலேயே அவள் சொர்க்கலோகம், இல்லையில்லை, நரகலோகம் சென்றுவிடுவாள். நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை. டாக்டர் வரமாட்டார். காலையில் நர்ஸ் மட்டும்தான் வருவாள். அவளிடம், ‘அதிகாலையில் இறந்துவிட்டாள்; உங்களைத் தொந்திரவு செய்யவேண்டாம் என்று உடனே கூப்பிடவில்லை. ஐஸ் பெட்டியை வரச்சொல்லி அதில் வைத்துவிட்டேன்’ என்று சொல்லிவிடவேண்டியதுதான். அந்தப் பெண்ணுக்குச் சந்தேகம் வராமல் இதைச் சொல்லிவிட்டால், அவளே டாக்டரிடம் சொல்லி உறுதிப்படுத்தி விடுவாள். இறப்புச் சான்றிதழும் வாங்கி விடலாம். அதற்குப் பிறகுக் கவலையில்லை.
திடீரென்று ஒரு சந்தேகம் வந்தது. இவள் மூச்சுத் திணறி உயிர் பிரிய எத்தனை நேரமாகும்? அதுவரை நான் விழித்திருக்க வேண்டியது அவசியம். நம்மால் எத்தனை நேரம் தம் கட்டமுடியும் என்று பார்த்து விடலாமா? நீச்சலடிக்கும் போது மூச்சையடக்கித் தண்ணீருக்குள் நிறைய நேரம் இருந்திருக்கிறேன். ஆனால் இது எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.
இதுவரை என்னுடைய எந்தத் திட்டமும் திசைமாறிப் போனதில்லை; எந்த ஓட்டையும் இருந்ததில்லை. இந்தத் திட்டத்திலும் எந்த ஓட்டையும் இருக்கக் கூடாது. அதனால் இதையும் பரிட்சித்துப் பார்த்துவிடுவதே நல்லது என்று தோன்றியது. மணி ஒன்பதரைதான் ஆகிறது. பத்து மணிக்குள் வேலையை முடித்தால் போதும்; இவள் இறந்ததை உறுதிப் படுத்திக் கொண்டு பிறகுதான் தூங்கப் போகவேண்டும்.
பெட்டியின் மூடியைப் பாதி திறந்துப் பெட்டியுள் படுத்தேன். மூடியை இழுத்து மூடினேன். சில்லென்று இருந்தது. கைக்கடிகாரத்தில் மணி பார்த்துக்கொண்டே இருந்தேன்.
21.31, 21.32, 21.33, 21.34, 21.35, 21.36, 21.37……….
சுரீரென்று நெஞ்சில் ஒரு வலி. சரி, எழுந்துவிடலாம் என்று நினைக்கும்போதே அதிக வலி. கண்ணை இருட்டுகிறது. கையை அசைக்க முடியவில்லை. ஹெல்ல்ல்ல்ப்..
ஹெல்ல்ல்ல்ப்..
ஹெல்ல்ல்ல்ப்…
ஹெல்ல்ல்ல்ப்…
ஹெல்ல்ல்ல்……..
ப்ப்ப் ஃ
- டௌரி தராத கௌரி கல்யாணம் ……16
- மருத்துவக் கட்டுரை மன உளைச்சல்
- நேர்முகத் தேர்வு
- நீங்காத நினைவுகள் 15
- பிரேதத்தை அலங்கரிப்பவள்
- ஜீவி கவிதைகள்
- சரித்திர நாவல் போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 34
- புகழ் பெற்ற ஏழைகள் 21
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -38 என்னைப் பற்றிய பாடல் – 31 (Song of Myself)
- அயோத்தியின் பெருமை
- தாகூரின் கீதப் பாமாலை – 79 கவித்துவ உள்ளெழுச்சி .. !
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 24
- தோரணங்கள் ஆடிக்கொண்டிருக்கட்டும்.
- பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் பெயரில் வந்த கௌரவம்: பலரோடு எனக்கும் ஒன்று
- கூடு
- பாலைவனத் தொழிலாளியின் பா(ட்)டு!
- தொல்காப்பியம், ஆந்திர சப்த சிந்தாமணியில் – வினையடிகள்
- தூங்காத கண்ணொன்று……
- சாகச நாயகன் – 4. ஷீ தாவ் – ஸ்டண்ட் ஒருங்கிணைப்பாளராக
- முக்கோணக் கிளிகள் [2]
- நாவற் பழம்
- திட்டமிட்டு ஒரு கொலை
- பிரபஞ்சத்தை உருவாக்கும் பிண்டம், கரும் பிண்டம், எதிர்ப் பிண்டம் [Matter, Dark Matter, Anti-Matter]
- காவ்யா வெளியிட்டு விழா – திலகபாமா கவிதைகள் வெளியீட்டு விழா
- எங்கள் தோட்டக்காடு