மருத்துவக் கட்டுரை மன உளைச்சல்

This entry is part 2 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

 

                                டாக்டர் ஜி . ஜான்சன்

 

மன உளைச்சல் உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் உண்டாகலாம்.

           முன்பு இது வெளியிலிருந்து உண்டாவதாக கருதப்பட்டது. ஆனால் இப்போது மன உளைச்சல் நம் உடலிலும் மனத்திலும் உண்டாவது என்பது நிச்சயமாகியுள்ளது

நமது உடலில் இயற்கையாகவே இரண்டு விதமான தற்காப்பு தன்மைகள் உள்ளன. இவை எதிர்த்து சண்டை போடு அல்லது தப்பி ஓடு ( fight or flee ) என்பவை. இதை எல்லா சூழலிலும் நாம் பயன்படுத்துகிறோம் .

உதாரணமாக ஒருவன் கத்தியைக் காட்டி நம்மை தாக்க வந்தால் நாம் எதிர்த்து சண்டை போடலாம் அல்லது தப்பி ஓடலாம். இந்த இரண்டு விதமான செயல்களையும் செய்வது அட்ரினலின் ( Adrenaline ) நார்அட்ரினலின் ( Noradrenaline ) எனும் ஹார்மோன்கள்

            நாம் சண்டை போடும்போது நெஞ்சு படபடப்பு, வேகமான சுவாசம், முகம் ஆவேசத்தில் சிவப்பது ,கைகால்கள் முறுக்கேறுவது போன்ற மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.

அப்போது வயிறு , குடல் , இதர உறுப்புகளில் இரத்த ஓட்டம் குறைந்து அதிக இரத்தம் கை கால்களுக்கு கொண்டு செல்லப்படும். இதனால் கை கால்கள் அடிக்கவும் அல்லது ஓடவும் இது பயன்படும்.

இத்தகைய முன் எச்சரிக்கை மாற்றங்களை உண்டு பண்ணுவது இந்த ஹார்மோன்கள்.

இதே வகையில்தான் மன உளைச்சலின்போது நமது உடல் செயல் படுகிறது. இவை ஹார்மோன்களின் செயல்பாடு .

மன உளைச்சல் காரணமாக உண்டாகும் உடலிலும் உள்ளத்திலும் உண்டாகும் மாற்றங்கள் 4 வகையானவைகள்.

* மனம் சார்ந்தவை – பரபரப்பு , கவலை , சோர்வு , கோபம் , எரிச்சல் , ஏமாற்றம் , ஆர்வமின்மை ,வெறுப்பு

* நடத்தை சார்ந்தவை – தவறுகள் செய்வது , விபத்துகள் , உண்பது தூங்குவதில் பிரச்னை , புகைத்தல் , போதை மருந்துகள் பயன்படுத்தல் , மதுவுக்கு அடிமையாதல் , சமுதாயத்திலிருந்து ஒதுங்கி வாழ்தல் அல்லது ஆவேசமாக குழப்பங்கள் உண்டு பண்ணுதல்.

* எண்ணம் சார்ந்தவை – கவனக் குறைவு , ஞாபக மறதி , ஒரு முடிவுக்கு வர முடியாத நிலை , பிரச்னையை எதிர்கொள்ள முடியாத நிலை , தவறை சுட்டிக் கட்டினால் அது பற்றி அக்கறை கொள்ளாதது

* உடல் சார்ந்தவை – அதிக வியர்த்தல் , தலை சுற்றுதல் , குமட்டல் , மூச்சு வாங்குதல் , உடல் வலி , அடிக்கடி நோய்த் தொற்று , ஆஸ்த்மா , தோல் பிரச்னைகள் , இருதய பிரச்னை.

இத்தகைய மன உளைச்சல் அறிகுறிகளுக்கு நிவாரணமாக சூழ்நிலைக்கேட்ப செயல்படும் நிலை ( Adaptation ) தற்காப்பு முறையில் உருவாகிறது.

வெளி உலகிலிருந்து எதிர்படும் உளைச்சலை நம்மால் மாற்ற இயலாது. ஆனால் அதை எதிர்கொள்ளும் வ்கையில் நம்மை நாமே மாற்றிக் கொள்ளலாம். இந்த நிலையில் வெளியிலிருந்து வரும் உளைச்சல் நமக்கு ஆபத்து தராது என்ற எண்ணம் உண்டாகி அதை எளிதில் எதிர்கொள்ளலாம் எனும் நிலைக்குள்ளாகலாம்.

ஒரு உதாரணம்: வேலை முடிந்து வீடு செல்லும் போது வாகன நெரிசலில் ஒரு மணி நேரம் தாமதமானால் நமக்கு மன உளைச்சல் உண்டாகிறது என்று வைத்துக் கொள்வோம். இது தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந்து சிறிது தாமதமாக நெரிசல் குறைந்தபின் புறப்படுவது .

இதுவே சூழ்நிலைக்கேட்ப செயல் படும் நிலை ( ADAPTATION ) என்பது .

           மன உளைச்சலை எதிர்கொள்வது முழுக்க முழுக்க நம்மிடமே உள்ளது. வெளியிலிருந்து உண்டாகும் பிரச்னைகளை சுமுகமாக எதிர்கொண்டு அவற்றை மாற்ற முடியாத பட்சத்த்தில் நம்மை நாமே மாற்றிக்கொண்டால் நாம் அதை எதிர் கொண்டு வெற்றி பெறுகிறோம். இதற்கு சுய கட்டுப்பாடு , ஒழுக்கம் நேரத்தை பயனுள்ள வகையில் செலவழித்தல் தோல்வி எண்ணங்களை விடுதல் , தன்னம்பிக்கை போன்ற ஆரோக்கியமான செயல்பாடுகள் மூலம் பயன் பெறலாம்..
            உங்கள் வேலை இடத்தில் என்ன பிரச்னை என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் உங்களை தயார் செய்து கொள்ளலாம்.உயர் அதிகாரிகளிடம் அது பற்றி பேசி தீர்வு காணலாம்.          வீட்டிலும் என்ன பிரச்னை என்பதையும் ஆராய்ந்து அதற்கு தீர்வு காண முயற்சி செய்யலாம். இவ்வாறு மன உளைச்சலை நீங்கள் சுய முயற்சியால் எதிர்கொண்டு அதிலிருந்து விடுதலை பெறலாம். 

( முடிந்தது )

Series Navigationடௌரி தராத கௌரி கல்யாணம் ……16நேர்முகத் தேர்வு
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Comments

  1. Avatar
    பவள சங்கரி says:

    அன்பின் மரு.ஜான்சன் அவர்களுக்கு,

    மன உளைச்சல் என்பது மனிதனாகப் பிறந்த எவரும் தப்பிக்க முடியாத ஒரு நிலை. இதை நோய் என்றுகூட சொல்ல முடியவில்லை. அன்றாடம் தேவையற்ற சின்னச் சின்ன விசயங்களுக்கெல்லாம்கூட இந்த மன உளைச்சல் வந்து நம் மற்ற பணிகளைப் பாதிக்கிறது. இதற்கான தீர்வு நம் கையில்தான் இருக்கிறது என்பது புரிந்தாலும், சில நேரங்களில் தவிர்க்க முடியாமல்தான் போகிறது. ஆனாலும் இது போன்ற கட்டுரைகள் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்துவதால் அந்த நேரத்திலாவது தெளிவு ஏற்படுகிறது. பகிர்விற்கு நன்றி.

    அன்புடன்
    பவள சங்கரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *