எஸ். சிவகுமார்
வாசற்கதவைப் படாலென்று சாத்திவிட்டு உள்ளே வேகமாக வந்து சோபாவில் தொப்பென்று விழுந்தாள் சுஜாதா. இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. ஆசுவாசப்படுத்திக் கொண்டு எழுந்து சென்று ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தாள். சற்றுமுன் தெருவில் கண்ட காட்சி நினைவில் நின்று உறுத்தியது. கோபம், எரிச்சல், அழுகை என பலப்பல உணர்வுகள் ஒருசேர அவளை அழுத்தின. நினைக்க நினைக்க அழுகை வந்தது.
இன்று அவளின் திருமண நாள். இருபது ஆண்டுகள் முடிந்தன. இன்று என்னென்ன செய்யவேண்டும் என்று நேற்றே அவளும், கணவன் வீரராகவனும் திட்டம் போட்டிருந்தார்கள்.
-
காலையில் ஆறு மணிக்கு வழக்கம்போல நடைப் பயிற்சி.
-
குளித்துவிட்டு ஏழரை மணிக்கு ஃபேர்லேண்ட்ஸ் முருகன் கோயிலில் அர்ச்சனை..
-
காலை சிற்றுண்டி சாரதி ஹோட்டலில்.
-
மதியம் சுஜாதா கைப்பக்குவத்தில் வீரராகவனுக்குப் பிடித்த சாப்பாடு.
-
மாலையில் ஏ.ஆர்.ஆர்.எஸ். திரையரங்கில் ‘தில்லுமுல்லு-2’ சினிமா.
-
இரவு திரும்பி வரும்போதே சரவணபவனில் டிபன்.
-
. . . . . . . . . . . . . .
கணவன் சொல்லச் சொல்ல பெரிய வெள்ளைக் காகிதத்தில் எழுதியவள், கடைசி வரியில் வெட்கப்பட்டுக்கொண்டே புள்ளிகள் மட்டும் வைத்தாள். ஒருமுறை படித்துப் பார்த்துவிட்டு ஏதோ நினைத்துக் கொண்டவள், தலைப்பாக ‘ஹாப்பி வெட்டிங் டே’ என்று ஆங்கிலத்தில் எழுதினாள். காலையில் எழுந்ததும் கண்ணில் படும்படியாகப் படுக்கையறைக் கதவின் உட்புறம் அந்தப் பட்டியலை ஒட்டினாள். பிறகு அடுத்த நாளின் கனவோடு இருவரும் உறங்கச் சென்றார்கள்.
பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்தவுடனேயே சுஜாதாவுக்குத் திருமணம் நிச்சயமாகி விட்டது. ஜூன் மாதம் கல்யாணம். கல்லூரியில் சேர்ந்து பட்டப்படிப்பு படிக்கவேண்டும் என்ற அவள் விருப்பம் கனவாகிப் போனது. அப்பாவின் சொல்லைத் தட்டமுடியாமல், மாப்பிள்ளையை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் சம்மதித்துவிட்டாள். திருமணத்தில் இரண்டு நாட்களும் அவள் கொஞ்சம்கூடச் சிரிக்காமல் உம்மென்றிருந்ததால், வீரராகவன் பலப்பல சந்தேகங்களும், கவலையும் கொண்டான்.
அவன் அப்பாவும், சுஜாதாவின் அப்பாவும் பால்ய நண்பர்கள். பலவருடங்கள் கழித்து மீண்டும் சந்தித்ததில், தங்கள் நட்பைப் புதுப்பித்துக் கொள்ளும் விதமாக, ஏழு வயது வித்தியாசத்தையும் பார்க்காமல் இவர்களின் திருமணத்தை நிச்சயித்தார்கள். ஒருவேளை பெற்றோரின் கட்டாயத்தினால், தன்னைப் பிடிக்காமலேயே திருமணத்துக்குச் சம்மதித்திருப்பாளோ? அல்லது வேறு யாரையாவது நேசித்திருப்பாளோ? என மருகினான்.
சுபாவத்தில் அவன் கலகலப்பான பேர்வழி. அவன் இருக்கும் இடத்தில் எப்போதும் சந்தோஷமும், கும்மாளமும் நிறைந்திருக்கும். அதனால் அவனுக்கு நண்பர்களும் அதிகம். யாரையும் எளிதில் ஈர்த்துவிடக் கூடிய வாய்மொழியும், உடல்மொழியும், வசீகரமும் அவனிடம் இருந்தன. அதனால் அவளுக்குத் தன்னைப் பிடிக்காமல் இருந்திட வாய்ப்பேதும் இருக்காது என்று தன்னைத்தானே சமானப்படுத்திக் கொண்டான். அவனுக்கு சுஜாதாவை மிகவும் பிடித்திருந்தது. அவள் வேறு யாரையாவது காதலித்திருந்தால் என்ன செய்வது என்று சற்று கலங்கினான். அன்றிரவே அதைப் பற்றிக் கேட்டுவிடவேண்டும் என்று காத்திருந்தான்.
காத்திருந்த அறைக்குள் நுழையும்போதும் சுஜாதா உம்மென்றுதான் இருந்தாள். எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்று யோசித்தான். சினிமா வசனம் போல ‘சுஜாதா, உனக்கு என்னைப் பிடித்திருக்கிறதா?’ என்று மெதுவாகக் கேட்டான். ‘ம்……’ என்று ஓரெழுத்தில் பதில் சொன்னவள், சிலநொடி இடைவெளிக்குப் பிறகு ‘என்னை?’ என்று கேட்டாள். அவள் முகம் வெட்கத்தில் கொஞ்சம் சிவந்ததைப் பார்த்ததும், காதல் விவகாரம் எதுவும் இருக்க வாய்ப்பில்லையென அவனுக்குத் தைரியம் வந்தது.
“எனக்கு அழகான பல பெண்களின் ஜாதகம் வந்தது. ஆனால் யாரையும் எனக்குப் பிடிக்கவில்லை; ஏன் தெரியுமா?” என்று அவளிடம் புதிர் போட்டான். அவள் முகம் பிரகாசமானது. “ஏன்?” என்று ஆர்வமாகக் கேட்டாள். “யார் பேரும் எனக்குப் பிடிக்கலை; பார்க்கறதுக்கு அப்பிடி ஒண்ணும் அழகா இல்லாட்டாலும், உன் பேரு எனக்கு ரொம்பப் பிடிச்சது – எனக்குப் பிடிச்ச ரைட்டர் பேரு! அதனாலதான் கல்யாணத்துக்கு ரைட்டுன்னுட்டேன்!” என்று கிண்டலடித்தான். பிரகாசமாயிருந்த அவள் முகம் இருண்டது. அழ ஆரம்பித்தாள்.
“அடக்கடவுளே! இதுக்கெல்லாம் அழுவாங்களா? இந்த அழற பிஸினஸ் எல்லாம் எனக்கு அறவே பிடிக்காது. யாராவது நம்மளைக் கிண்டல் செஞ்சா, அவங்களோட சேர்ந்து நாமும் சிரிச்சிடணும்; இல்லேன்னா, அவங்களத் திருப்பிக் கிண்டலடிச்சிடணும். இப்ப என்னோட சேர்ந்து சிரி பார்க்கலாம்” என்று அவள் முகத்தைத் தன்புறம் பலவந்தமாகத் திருப்பினான். அவள் வெடுக்கென்று முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். அழுகை போய் லேசான கோபம் அவள் முகத்தில் தெரிந்தது.
“சரி, எப்பிடித் திருப்பிக் கிண்டலடிக்கிறதுன்னு உனக்குச் சொல்லித் தரேன்” என்றவன், அவளுடைய புடவைத் தலைப்பை உருவித் துச்சாதனம் செய்துத் தன்மேல் சுற்றிக் கொண்டான். “என்னையும் பெண்பார்க்க எத்தனையோ பேர் ஹான்ட்சம்மா வந்தாங்க; ஆனா யார் பேரும் பிடிக்கல; பார்க்கறதுக்குப் பால்கோவா விக்கறவராட்டம் இருந்தாலும் உங்க பேர்ல வீரம் இருக்குதுன்னுதான் உங்களைக் கல்யாணம் செஞ்சுக்க சம்மதிச்சேன்” என்று பெண் குரலில் நாணிக் கோணிக் கொண்டு பேசினான். சிரித்துக்கொண்டே வேகமாக அவன்பக்கம் திரும்பியவள் கைகளை மடக்கிச் சரமாரியாக அவன் மார்பில் விளையாட்டாகக் குத்தினாள். நிலை தடுமாறிப் படுக்கையில் சாய்ந்தவன், அவளையும் தன்மேல் இழுத்துக் கொண்டான். வாழ்நாளில் இனி எதற்காகவும் அவள் அழக்கூடாது என உறுதிமொழி வாங்கிக் கொண்டான்.
கல்லூரிக்குச் செல்லமுடியாவிட்டாலும் பட்டபடிப்பு படிக்க மிகவும் ஆர்வமாக இருந்தாள் சுஜாதா. அதனால் அண்ணாமலை பல்கலைக் கழகத் தொலை தூரக் கல்வியில் சேர்ந்தாள். படிப்பு முடியும் வரை குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என முடிவு செய்தார்கள். ஆனால் இரண்டாண்டுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. குழந்தை இல்லை என்பது குறையாகத் தோன்றியது. அதன் பிறகு செய்த முயற்சிகள் எதுவும் நல்ல பலனைத் தரவில்லை. மூன்றாம் வருடப் படிப்பு முனகலாயிற்று. அவள் அழவில்லையே ஒழிய, சிரித்தமுகம் காணாமல் போயிற்று. தட்டுத் தடுமாறி மிகக்குறைந்த மதிப்பெண்களோடு பட்டப் படிப்பை முடித்தாள்.
அதன்பிறகோ அவள் மனநிலை இன்னும் மோசமாயிற்று. அவள் இற்றுப் போகலானாள். பல மருத்துவர்களைப் பார்த்தும் பயனேதும் இல்லை. வீரராகவனும் அவளைச் சிரிக்கவைக்க என்னென்னமோ முயல்வான். “நானொரு குழந்தை, நீயொரு குழந்தை; ஒருவர் மடியிலே ஒருவரடி” என்று பாட்டுப் பாடிச் சிரிக்கவைப்பான். சிரிப்பு கொஞ்ச நேரம்தான். வேறுபக்கம் திரும்பிக் கொள்வாள். அவள் முதுகில் சாய்ந்துகொண்டு, “ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே ஆடலாம்” என்று பாடுவான். வடக்கிலிருந்து தெற்குவரை எல்லாக் கோயில்களுக்கும் சென்று வழிபட்டார்கள். பலனேதுமில்லை. காலம் செல்லச் செல்ல ‘நமக்கு விதித்தது இவ்வளவுதான்’ என்று அவள் சமாதமானாள். இருபது வருடங்கள் ஓடிவிட்டன; திருமணமாகி முதல் நாள் கணவனுக்குக் கொடுத்த உறுதிமொழி இன்று உடைந்துபோனது !
திட்டமிட்டபடி இன்று காலை எழுந்து சிறிது நேரத்தில் நடைப்பயிற்சி சென்றார்கள். திரும்பும் வழியில் உழவர் சந்தை. மணி ஆறரை. “காய்கறிகள் வாங்கிவருகிறேன்; நீ வீட்டுக்குப் போய்க் குளித்துவிட்டுக் கோயிலுக்குப் போகத் தயாராகு” என்று சுஜாதாவை அனுப்பிவிட்டு சந்தைக்குப் போனான் வீரராகவன்.
அவர்களின் வீடு மூன்றாம் கிழக்குத் தெருவில் கடைசியில் இருந்தது. தெருவின் இருபுறமும் பத்துப் பத்து வீடுகள். சுஜாதா தெருவினுள் நுழையும்போது முதல் வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் நிகிதா. இந்த வீட்டுக்குக் குடிவந்து ஆறு மாதம்தான் ஆகிறது. பெரமனூரில் உள்ள ஒரு மருத்துவப் பரிசோதனை நிலையத்தில் வேலை பார்க்கிறாள். கணவன் மகேஷ்பாபு கல்லூரியில் விரிவுரையாளர்.
சுஜாதா இன்னும் இவளிடம் பழகவில்லை. அவளின் நாகரிக நடையுடை பாவனைகளும் பிடிக்கவில்லை. இவள் இந்தத் தெருவில்தான் இருக்கிறாள் என்பதே ஒருமுறை அந்தப் பரிசோதனை நிலையத்துக்குச் சென்றபோதுதான் தெரிந்தது. “சுஜா சிஸ்டர், குட் மார்னிங்! தனியா வரீங்களே, ஸார் எங்கே? வாக்கிங் வரலியா?” என்றாள். ‘இது என்ன தேவையில்லாத கேள்வி’ என்று மனதில் சலித்துக்கொண்டு வெளியே சிரித்தபடி, “குட்மார்னிங்! அவர் சந்தைக்குப் போயிருக்கார்; நான் முன்னாடி வந்திட்டேன், அவ்வளவுதான். நேரமாயிடிச்சு, குளிச்சிட்டு ரெண்டு பேரும் கோயிலுக்குப் போகணும்” என்று பதிலளித்துவிட்டு, மேலும் பேச விருப்பமின்றி வேகமாகத் தன் வீட்டுக்கு நடந்தாள்.
வீட்டுக்குள் நுழையும்போது மணி ஆறேமுக்கால். இன்னும் அரைமணியில் தயாராக வேண்டும். குளித்துமுடித்துக் கூடத்துக்கு வந்தாள். பூஜை அறைக்குச் சென்று விளக்கேற்றிச் சஹானா ராகத்தில் பாடித் துதித்தாள் :
பள்ளிகொண்ட கோலம் பாற்கடலிற் கண்டேன் – தூதாய்
சென்ற திருக்கோலம் பாரதத்திற் கண்டேன் – கல்லாய்
நின்ற திருக்கோலம் என்று நான் காண்பேன்? – தயவாய்
இன்றெனக் கருளுவாய் நீ.
காலையில் இருவரும் சேர்ந்துதான் காப்பி குடிப்பது வழக்கம். அதனால் காத்திருந்தாள். மணி ஏழேகால்; வீரராகவன் இன்னும் வரவில்லை. பொறுமையிழந்து வெளியே வந்து தெருமுனையைப் பார்த்தாள். கண்ட காட்சியினால் அதிர்ந்து போனாள். தலையைக் குனிந்து நிகிதாவின் கையைப் பிடித்துத் தன் உதட்டைப் பதித்துக் கொண்டிருந்தான் வீரராகவன். அந்தக் காட்சியைக் கண்டதும், நிற்க முடியாமல் சுஜாதாவின் கால்கள் நடுங்கின. வாசற்கதவைப் படாலென்று சாத்திவிட்டு உள்ளே வேகமாக வந்து சோபாவில் தொப்பென்று விழுந்தாள்; அழுதாள்.
பத்து நிமிடத்தில் உள்ளே நுழைந்தான் வீரராகவன். சுமந்துவந்த பையைச் சமையலறையில் ஓரமாக வைத்துவிட்டு, “ஸாரிம்மா, கொஞ்சம் லேட்டாயிருச்சு. காயெல்லாம் அப்புறம் எடுத்து வச்சுக்கலாம். காப்பி கலந்துவை. நான் ரெண்டு நிமிஷத்தில குளிச்சிட்டு வந்திடறேன்; கோயிலுக்குப் போகலாம்” என்று சொல்லி அவளின் பதிலுக்குக் காத்திராமல் குளிக்கச் சென்றான். அவளின் தடுமாறிய நிலையைக் கூடக் கவனிக்காமல் அவன் சென்றது, அவளை அலட்சியப்படுத்தியதைப் போல உணர்ந்தாள். ‘அழுது என்ன ஆகப்போகிறது? என்னைப் பிடிக்காமல் பிறன்மனை சேரும் இவருடன் இதற்கு மேலும் சேர்ந்து வாழ முடியுமா? இன்றே இதற்கு முடிவு செய்யவேண்டியதுதான்’ என்று கண்ணைத் துடைத்து அழுகையை நிறுத்தினாள். தீர்ப்பை வழங்குவதற்கு முன் தன்னிடம் என்ன குறை என்ற காரணத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்தாள்.
குளியலறையிலிருந்து வெளியே வந்தவனைப் பார்த்துச் சீறினாள்.
“இதெல்லாம் தேவையா? எனக்கு என்ன கொறைச்சல்?”
“பார்த்திட்டயா அதை? சீக்ரெட்டா வச்சிக்கணும்னு பார்த்தேனே!”
“சீக்ரெட்டாம் சீக்ரெட்டு! உங்களுக்கே வெட்கமாயில்லை?”
“இதெல்லாம் உனக்குப் பிடிக்காதுன்னுதான் சொன்னேன். ஆனா அந்த நிகிதா பொண்ணுதான் வற்புறுத்திக் குடுத்தா”
“ஓ! அவதான் முதல்ல குடுத்தாளா? கேவலமாயில்ல?”
‘இவள் என்ன இப்படிப் பேசுகிறாள்’ என்று வீரராகவனுக்கு எரிச்சல் வந்தது.
“என்ன சொல்லறே நீ? இதிலென்ன கேவவலம்? தெருவுக்குள்ள நுழையும்போது அவங்க வீட்டு வாசலில் நின்னுகிட்டிருந்தா. என்னைப் பார்த்ததும் சிரிச்சிகிட்டே, ‘குட்மார்னிங் ஸார்! ரெண்டு பேரும் கோவிலுக்குப் போறீங்களாமே, இன்னிக்கி என்ன விஷேசம்’னு கேட்டா. நமக்கு கல்யாண நாளுன்னு சொன்னேன். ‘கங்கிராஜுலேஷன்’னு சொல்லி ‘எனக்கு இன்னிக்கு பர்த் டே’ன்னு சொன்னாள். வாழ்த்துக்கள் சொன்னேன். திடீர்னு என்னமோ நெனைச்சிக்கிட்டுக் கை ரெண்டையும் என் முன்னால நீட்டி ‘இந்த வளையல் எப்பிடி இருக்கு, சொல்லுங்க’ன்னா. வாக்கிங்தானே போறோம்னு இந்த மூக்குக்கண்ணாடி சனியனைப் எடுத்துக்காமப் போயிட்டேன். ஒண்ணுமே தெரியல. ஒப்புக்கு நல்லாயிருக்குன்னு சொன்னேன். அவளுக்குத் தெரிஞ்சிபோச்சு. ‘நல்லா கண்ணை வச்சுப் பாருங்க’ன்னு என் கண்ணுகிட்ட வச்சுக் காமிச்சா. எனக்கு வெட்கமாப் போச்சு. பார்த்துட்டு ‘ரொம்ப நல்லாயிருக்கு; வைரமா?”ன்னு கேட்டேன். மறுபடி சிரிச்சிட்டு, ‘இமிடேஷன் அமெரிக்கன் டயமன்ட்; கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க’ன்னு உள்ளே ஓடிப்போய் சின்னப் பெட்டி ஒண்ணு எடுத்துவந்து என் கையில் குடுத்து, ‘பாபு என் பர்த்டேக்கு தெரியாம ரெண்டு செட் வாங்கிட்டு வந்திட்டாரு; இதை சிஸ்டருக்குக் குடுங்க’ன்னா. அதுல அதே மாதிரி நாலு வளையல் இருந்தது. வேண்டாம்னு சொல்ல மனசில்ல. ‘கையிலே அந்த அளவுக்குப் பணம் இல்ல; அதுவுமில்லாம அவளுக்கு இமிடேஷன் பிடிக்காது’ன்னு சொன்னேன். ‘பரவாயில்லே, உங்களுக்குப் பிடிச்சிருக்கில்லே? அவங்க கையிலே போட்டு நீங்க அழகு பாருங்க! பைசா அப்புறம் வாங்கிக்கிறேன்’னுட்டா. அதைக் காய்கறி வாங்கிவந்த பை மேலாக வச்சிருந்தேன். அதனாலதான் பையை அப்புறம் பார்த்துக்கலாம்னு சொன்னேன். உனக்கு அதுக்குள்ளே அவசரம்; எடுத்துப் பார்த்திட்டு இத்தனை கேள்வி கேக்குறே.”
நிறுத்தாமல் பேசியவன் மூச்சு வாங்க நிறுத்தினான். அவனைத் திரும்பிப் பார்க்காமல் சமையலறைக்குள் ஓடினாள் சுஜாதா. காப்பி எடுத்துவரத்தான் ஓடுகிறாள் என்று நினைத்தவன், “இன்னிக்கி மட்டுமாவது வளையலப் போட்டுக்க; பிடிக்கலைனா அப்புறம் வேற யாருக்காவது குடுத்திடலாம்” என்று குரல் கொடுத்தான். கோவிலுக்குச் செல்ல வேட்டியும் சட்டையும் அணிந்தான்..
சமையறைக்கு ஓடிப்போன சுஜாதா வளையல் பெட்டியை எடுத்துத் திறந்து பார்த்தாள். தேவையில்லாமல் சந்தேகப்பட்டு விட்டோமே என துக்கம் நெஞ்சை அடைத்தது. அழுகை வரும் போல இருந்தது. கூடத்துக்கு ஓடிப்போய், கோவிலுக்குக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்த கணவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டு எதற்கு அழுகிறோம் என்று தெரியாமலேயே அழுதாள். அவன் அதைத் தடுக்கவில்லை. அவளை இறுக்கினான்.
புள்ளிகள் வரிசை மாறிக் கோலங்களாயின.
- 7.9.2013 அன்று மாலை காரைக்குடி கம்பன் கலையரங்கில்
- சாகச நாயகன் 5. என்டர் தி டிராகன் அனுபவம்
- முக்கோணக் கிளிகள் [3]
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 25
- சுற்றுச்சூழல் அதிர்ச்சி – “ சாயத்திரை “ சுப்ரபாரதிமணியனின் நாவல்
- புகழ் பெற்ற ஏழைகள் – 22
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -39 என்னைப் பற்றிய பாடல் – 32 (Song of Myself) கடவுளின் கை வேலை .. !
- டௌரி தராத கௌரி கல்யாணம் ……17
- ஐம்பது வருட வளர்ச்சியும் மாற்றங்களும் – 1
- டாக்டர் ஐடா – தியாகம்
- நான் இசைக்கும் ஒற்றைப்பாடல்
- அண்டார்க்டிகா பனிக்கண்டம் சூடாவதற்குப் பூமியின் சுற்றுவீதிப் பிறழ்ச்சி ஒரு காரணம்
- கோலங்கள்
- போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 35
- தாகூரின் கீதப் பாமாலை – 80 பருவக் கால மழை .. !