சரித்திர நாவல் “போதி மரம்” இறுதி அத்தியாயம் – 36

This entry is part 20 of 22 in the series 15 செப்டம்பர் 2013

sathyanandanநிறைவாகச் சில – படைப்பாளியின் பக்கமிருந்து

முதலில் இந்த நாவலைத் தொடராக வெளியிட்ட திண்ணை இணையத்தாருக்கு மனப்பூர்வமான நன்றிகள். தொடர்ந்து என்னைத் தட்டிக் கொடுத்த சக எழுத்தாளர்களுக்கும்.

இது சரித்திர நாவல் என்று எப்படி என்னால் உரிமை கொண்டாடப் படுகிறது? புத்தரின் வரலாற்றைக் கதை வடிவமாகக் கொடுத்தால் புத்தரின் கதை என்று தானே சொல்ல வேண்டும்?

ஒரு சினிமாவுக்கும் ஒரு ஆவணப் படத்துக்கு என்ன வித்தியாசம்? அதுவே ஒரு சரித்திரக் கதைக்கும் ஒரு சரித்திர நாவலுக்குமான வித்தியாசம்.

சினிமாக்காரர்கள் ஒரு வரிக் கதை என்ன என்று துவங்குவார்கள். புத்தர் குடும்பத்தை நீங்கினார். போதிமரம் கீழே உட்கார்ந்தார். ஞானம் பெற்றார் என்றே நாம் புரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் அவர் அதற்கு முன்னரும் தம் ஞானத்தை உலகுக்கு உரியதாக்கும் காலத்திலும் எதிர் கொண்டவை எத்தனை எத்தனையோ.

புத்தரின் கதையை இந்த நாவல் ஆவணப் படுத்தவில்லை. புத்தரின் கதையை பின்னோக்கிச் சென்று அதாவது நம் முன் வைக்கப்படும் கடவுளின் அவதாரம் என்னும் சரித்திரத்தை ஒரு சாதாரண மனிதனின் கதையாக உள் நோக்கி அற்புதங்களை நீக்கி கதாபாத்திரங்களை ஒரு நாடக மேடையில் காண்பது போல் கற்பனையில் நிறுத்தி உருவானதே போதி மரம் என்னும் நாவல்.

ஜாதகக் கதைகள், ஆசார்ய புத சுதா இவை இரண்டுமே புத்தரின் வரலாறு பற்றிய மிகத் தொன்மை மிகுந்த பதிவுகள். ஆனால் இவை இரண்டுமே புத்தரின் வரலாற்றை நமக்கு முழுமையாகத் தரவில்லை. அஷ்வகோஷர் என்பவரின் படைப்பான புத்தசரிதா என்பதே முழுமையான முதல் வரலாற்று நூலாகக் கருதப் படுகிறது. இவை அனைத்திலுமே அவர் ஒரு சாதாரண மனிதர் என்பதான அடிப்படையில் பதிவுகள் இல்லை. அவர் அவதாரமாகவும் அவர் காலத்தில் பல அற்புதங்கள் நிகழ்ந்ததாகவுமே பதிவுகள் உள்ளன.

போதி மரம் நாவல் இந்த அற்புதங்களை முற்றிலுமாக நிராகரித்து விட்டது. பூர்வ ஜென்மத்தில் யசோதராவும் புத்தரும் தேவ லோகத்தில் இருந்ததாகத் தொடங்கி எத்தனையோ அற்புதங்கள் ஏற்புக்கு ஒவ்வாத விஷயங்கள் புராணங்களில் உள்ளன.

அதே சமயம் ஏறத்தாழ ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அவரின் வரலாறு குறித்த எந்த ஆவணப் படுத்துதலுமே நிறுவப் பட முடியாததே. அதுவே ஒரு புனை கதைக்கு வசதியான களமாக அமைந்தது. நிகழ்ச்சிகளின் கால வரிசையை நாவல் கற்பனையின் அடிப்படையில் கொண்டு செல்கிறது.

போதி மரம் நாவலில் வரும் யசோதராவின் பாத்திரம் அதிக பட்சமாக ஹிந்தியில் மைதிலி ஷரண் குப்த என்னும் கவிஞரின் காவியத்தில் தான் மையப் படுத்தப் பட்டது. போதி மரம் நாவலில் வரும் யசோதராவை அந்தக் காவியத்துடன் ஒப்பிடவே முடியாது. ராகுலனை வளர்ப்பதிலோ அல்லது புத்தரின் பரிணாமத்தை எதிர் கொள்வதிலோ யசோதரா போதி மரம் நாவலில் சித்தரிக்கப் பட்டது போல வேறு எந்தப் பதிவிலும் இதுவரை பாத்திரப் படைப்பு செய்யப் படவில்லை. சுத்தோதனரின் மரணத்தின் போது அவருக்கு தீட்சையும் முக்தியும் புத்தர் கொடுத்ததாகப் புராணம் கூறுகிறது. நாவலில் சுத்தோதனர் தாமே ஆத்ம பரிசோதனையில் பலவற்றை உணர்கிறார். தேவதத்தன் ஒரு யானையை புத்தரைக் கொல்ல என அனுப்பியதாகவும் அதை புத்தர் தம் பார்வையிலேயே அடக்கியதாகவும் புராணம் கூறும். அது நாவலில் எடுத்துக் கொள்ளப் படவே இல்லை. தேவத்தனும் அஜாத சத்துருவும் இணைந்து செயற்பட்டதாக வரலாற்றுக் குறிப்பு உண்டு. ஆனால் அந்த அளவு அவர்கள் இணைந்து செயற்படவில்லை. ஏனெனில் அஜாத சத்துருவிடம் மனமாற்றம் ஏற்படுகிறது. சுஜாதாவுக்குப் புராணங்கள் தந்த இடமும் நாவல் தந்துள்ள இடமும் வெவ்வேறானவை. புத்தரின் அடிப்படை நெறிகள் தவிர அவரது போதனைகள் எதுவுமே அவர் எடுத்தாண்ட கதைகள் யாவுமே நாவலின் சேர்க்கையே. புராணங்களில் இவை முற்றிலும் வேறுபடும். புத்தரின் குருமார்கள் ஒருவர் உதக ராம புட்டர். மற்றொருவர் அமர கலாம. அவர்களும் புத்தரும் என்ன அடிப்படையில் குரு சிஷ்ய உறவிலிருந்தார்கள் என்பதை நாவல் யதார்த்தமான கண்ணோட்டத்தில் முன் வைக்கிறது. புத்தரைக் கொல்ல தேவதத்தன் ஒரு மலையிலிருந்து கல்லை உருட்டி விட்ட போது புத்தருக்கு அடிபட்டதாகத் தான் வரலாறு. அந்தக் கல் ஆனந்தனைப் பதம் பார்க்காமல் புத்தர் காப்பாற்றினார் என்பது நாவலில் உள்ள கற்பனை. புத்தரின் மரணத்தில் கூட ஒரு இரும்புக் கொல்லர் கொடுத்த கெட்டுப் போன உணவே அவர் உயிரைக் குடித்தது என்று புராணங்கள் கூறும். இது அபத்தம் என்று நாவல் நிராகரித்து விட்டது. ஏனெனில் புத்தர் வணங்கப் பட்டார். அவருக்குத் தரும் பதார்த்தத்தைக் குறிப்பாக கீழான சாதி என்று கருதப் பட்ட ஒருவர் மிகவும் பய பக்தியுடன் கொடுத்திருக்கவே வாய்ப்புண்டு. புத்தர் தமது உடலை ஒரு குறிப்பிட்ட பிராமணர் சடங்குகள் செய்து நல்லடக்கம் செய்ய வேண்டும் என்பதற்காகவே உருவேலா கிராமத்துக்கு வந்தார் என்றும் சரித்திரக் குறிப்புகள் உள்ளன. இது அவர் தம் உயிரிலும் மேலாகக் கடைப்பிடித்த வருணாசிரம வைதீக நிராகரிப்புக்கு ஒவ்வாதது. எனவே அதுவும் நாவலில் நீக்கப் பட்டது.

எனவே கற்பனையில் நம் சித்தர்களில் ஒருவராக நம்மவராக புத்தரைக் காண முயன்றதால் இது சரித்திர நாவல் என்பது என் துணிபு. அதே சமயம் அவர் காலத்தில் எல்லா ஆதாரங்களிலும் ஏற்றுக் கொள்ளப் படும் எல்லா சரித்திர நிகழ்வுகளும் விடுபடாமல் நாவலில் சேர்க்கப் பட்டுள்ளன. அனந்த பிண்டிகா, கஸ்ஸாபா, ஜேதா எனப் பல சிறிய கதாபாத்திரங்களுக்கும் அவர்களுக்கு உரிய இடம் கொடுக்கப் பட்டுள்ளது.

எல்லா மதங்களுக்குமே அதன் மூலவர் மறைந்ததும் என்ன நேர்ந்ததோ அதுவே பௌத்தத்துக்கும் நிகழ்ந்தது. வைதீக மதத்துக்கு ஒரு சீர்திருத்த வடிவத்தை வைணவம் தர முயன்றது (தோற்றது). மாறாக புத்தரின் ஞானத்தின் நீட்சியாக ஜென் (Zen) என்னும் சிந்தனை முறை நம் முன் இன்றும் உள்ளது.

நம் தேசத்தின் ஆகச் சிறந்த மீட்பராக நாம் புத்தரைக் காண்கிறோம். அவர் ஏசுவின் காலத்துக்கு நான்காயிரம் வருடங்கள் முன்பே அன்பின் கருணையின் அருமையை நமக்கும் உலகத்துக்கும் அளித்தவர். நம் குறுகிய நோக்கினால் அவரது மார்க்கம் மற்ற நாடுகளில் வளர்ந்தது. அது என்ன குறுகிய நோக்கு என்று விவரமாக அறிய வேண்டுமானால் அக்டோபர் 2000 திண்ணை இதழில் வந்த பிரமிளின் கட்டுரையை வாசிக்கவும். ()

இளம் வயது முதலே என் மனதை ஆக்கிரமித்து வரும் அவரை இலக்கியமாக்க நான் செய்த முயற்சியின் தரமும் வெற்றியும் தங்கள் விமர்சனத்துக்கு உரியவை. ஆனால் அதில் நான் கொண்ட அர்ப்பணிப்பு அப்பழுக்கற்றது. நன்றிகள். வணக்கங்கள். சத்யானந்தன்.

Series Navigationஅப்பா என்கிற ஆம்பிளைவால்ட் விட்மன் வசனக் கவிதை -41 என்னைப் பற்றிய பாடல் – 34 (Song of Myself) கடந்த காலம், நிகழ் காலம்.. !
author

சத்யானந்தன்

Similar Posts

8 Comments

  1. Avatar
    paandiyan says:

    //எல்லா மதங்களுக்குமே அதன் மூலவர் மறைந்ததும் என்ன நேர்ந்ததோ அதுவே பௌத்தத்துக்கும் நிகழ்ந்தது. வைதீக மதத்துக்கு ஒரு சீர்திருத்த வடிவத்தை வைணவம் தர முயன்றது (தோற்றது).//
    could you give some more explanation on this?
    //2000 திண்ணை இதழில் வந்த பிரமிளின் கட்டுரையை வாசிக்கவும்.//

    i did search in old URL; http://www.thinnai.com/ — could not find any relevant article? where is this located? any keyword you can share?

  2. Avatar
    புனைப்பெயரில் says:

    நன்றி. மீண்டும் ஒரு நல் தொடர் தாருங்கள்

    1. Avatar
      sathyanandhan says:

      ஐயா, நன்றி. படைப்பாக இல்லாமல் வாசிப்பைப் பகிர்வதான ஒரு தொடரை திண்ணை இணையத்தார் பரிசீலனைக்கு அனுப்ப உள்ளேன். போதி மரம் நாவலை வாசித்து என்னை உற்சாகப் படுத்திய அனைவருக்கும் தங்களுக்கும் நன்றிகள்.

  3. Avatar
    G.Alagarsamy says:

    புத்தரை இன்னும் நெருக்கமாக உள்வயப்படுத்தும் ஆசிரியரின் குறிப்பிடத்தக்க முயற்சியும் படைப்பும் இது. தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. வருந்துகிறேன். வாழ்த்துக்கள்.

  4. Avatar
    N Sivakumar, New Delhi says:

    வணக்கம்! இது ஒரு மாபெரும் முயற்ச்சி, மாபெரும் படைப்பு, நான் சில பாகங்கள்தான் படித்து இருக்கிறேன். நீங்கள் முடித்து விட்டீர்கள் நான் ஆரம்பிக்கின்றேன், ஒரு ஆசிரியராக தாங்கள் கொடுத்த விளக்கம், மேற்கோள்கள், கையாண்ட விதம் அருமை!! புத்த பெருமானின் பேரருள் தங்களுக்கு கிடைக்கட்டும்!!!

  5. Avatar
    sathyanandhan says:

    மிக்க நன்றி சிவகுமார். இந்த நாவல் முழுவதும் படிக்கத் தொய்வோ அலுப்போ இல்லாத வடிவம் கொண்டது. அதே சமயம் புத்த பெருமானின் வாழ்வில் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் முக்கிய திருப்பங்கள் கால வரிசை தவறாமல் பதிவு செய்யப் பட்டுள்ளன. அவரின் தேடலும் மானுடம் மேல் அவர் கொண்ட பேரன்பும் நாம் பெற்ற பேறு. அன்பு சத்யானந்தன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *