காய்நெல் அறுத்த வெண்புலம் போல
நோன்ற கவின் நெகிழ்ப்ப நோக்கி
வீழும் வளையும் கழலும் புலம்ப
அளியேன் மன்ற காண்குவை தோழி.
கொழுமுனை தடா நிற்கும் நிலத்தின் கண்ணும்
ஆறு படரும் நீர்த்தட நாடன் சுரம் கடந்ததென்.
புல்லிய நெற்பூ கருக்கொண்ட ஞான்று
நிலமே நோக்கி நின்ற காலை
ஈர்ஞெண்டு வளைபடுத்தாங்கு
பருங்கண் உறுத்தி என்முகம் நோக்கும்.
அயிரைச்சிறு மீன் என்கால் வருடும்.
புன்சிறை வண்டினம் மூசும் இமிழ்க்கும்
நீர்முள்ளி பொறி இணர் தாது நிரக்கும்.
நடுங்கி வளைக்கும் நெடுநல் நாரை
வெண்மயிர்க் குடுமி முளிபட சிலிர்க்கும்.
குறைமதி நீழல் அடிநீர் ஒற்றி
கொம்பு பிறைய ஆர்த்த உருவில்
கயல் ஊர்ந்தன்ன காட்சி வெரூஉம்.
பெண்ணைக் கிழங்கின் வாய்பிளந்தன்ன
கூர் அலகு குத்தாங்கு குறிபிழைக்கும்.
வெள்ளென்று பரவை புலம்பு கலிசேர் பழனம்
தூஉய் நிற்கும் அவன்சுடு செஞ்சொல்.
நலங்கெடத்துணித்து பொருள்வயின் பிரிந்தான்
நல்லன் அன்று.நல்லன் அன்று.
நீர்சேர் நெடுவயல் என் கண்ணீர் உகுத்தது.
பொருளுக்குள் பொதி பொருள்
திண்மையறியா புல்லறிவாளன்
என்று கொல் தேரும் என்னெஞ்சு?
============================== =====================ருத்ரா
பொழிப்புரை
================
அறுவடையான வெறுமையான நிலம் போல்
என் மேனி எழில்நலம் வாடி
என் வளையல்களும் கால் அணிகளும்
கழன்று விழும் அளவுக்கு நலிந்துவிட்டேனே தோழி!
அதனை காண்பாய் நீ.
ஏர் கொண்டு உழாத போதும் ஆற்றுநீர் பாயும்
வளமான நாட்டில் வாழும் என் தலைவன்
பொருள் தேடப்போகிறேன் என்று கொடுவழி
ஏகியது ஏன் ? நான் அறியேன்.
சிறு நெற்பூ கருப்பிடித்த போது கனத்து
நிலம் நோக்கி வளைதல் போல்
கீழே பார்க்கிறேன்.கற்பனையில்
என் கால்கள் அந்த வயல் நீரில் அளைகின்றன.
அப்போது ஒரு நண்டு குழி பறித்து
அதன் பருங்கண்ணால் துருத்திப்பார்த்து
கேலியாக நகைத்தது.
சின்னச் சின்ன அயிரைமீன்கள்
என் காலடிகளை வருடும்.
மெல்லிய சிறகுடன்
வண்டுகள் மொய்த்து ஒலிக்கும்.
நீர்முள்ளிச்செடிகளின் மேல்
புள்ளிகள் படர்ந்தது போல் இருக்கும்
பூங்கொத்துகள் மகரந்தங்களை பரப்பும்.
நெடிய நல்ல நாரை நடு நடுங்கி செல்வது போல்
தன் வெள்ளையான குடுமிபோன்ற
மயிர்ப்பிசிறுகளை வரட்டுத்தனமாய் சிலிர்க்கும்.
ஊர்ந்து ஊர்ந்து மீன்கள் துள்ளும் காட்சிகள்
அந்தியில் தோன்றிய மூன்றாம் பிறை நிலவு
நீரின் அடி நிழலில் ஒரு கொம்பு போல்
அச்சுறுத்தும்.அதனால் பனங்கிழங்கை பிளந்தாற்போல்
உள்ள நாரையின் கூர் அலகு மீனைக்குத்தும்
குறியை தவறவிட்டுவிடும்.
வெட்டவெளியாய் பரந்துகிடந்து
மௌனம் அரற்றும் மெல்லொலிகளின்
வயற்காட்டில் எல்லாம்
“நான் போகிறேன்”
கூறிச்சென்ற சென்ற அவனது
சூடுமிக்க சொற்களே தூவிக்கிடக்கும்.
என் எழில் நலம் கெட என்னைக்கூறுபோட்டு
பொருள் தேட பிரிந்து சென்றவன்
நல்லவனே அல்ல.இந்த வய்லே என் கண்ணீர்க்கடல்.
பொருளுக்குள் மறைவாக இருக்கும்
மெய்ப்பொருளே இல்லத்திலிருக்கும் இன்பம் தானே.
இதன் திண்மையின் பேரறிவு தெரியாத
அந்த சிற்றறிவு படைத்தவன்
என் நெஞ்சம் புகுந்து என் நிலை உணர்வானோ?
அறியேன் யான்.
==============================
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் 54வது நினைவு நாள் நிகழ்
- எண்பதுகளில் தமிழ் இலக்கியம் (2)
- ஜாக்கி சான் – 10. சுட்டிப் பையன்
- தமிழ் விக்கியூடகங்களில் மாணவர்கள்
- தமிழ் விக்கியூடகங்கள்
- தமிழ் விக்கிப்பீடியாவுக்கு 10 வயது
- தமிழ் விக்கியூடகங்களில் பெண்களின் பங்களிப்பு
- நீங்காத நினைவுகள் – 18
- திண்ணையின் இலக்கியத் தடம் -3
- திருவரங்கக் கலம்பகத்தில் மறம்
- தாகூரின் கீதப் பாமாலை – 84 புயல் அடித்த இரவில் .. !
- புகழ் பெற்ற ஏழைகள் -27
- தண்ணீரின் தாகம் !
- ஊழல் ‘ஆட்டம்’- ஒரு பொருளாதாரக் கண்ணோட்டம்
- மணல்வெளி
- காய்நெல் அறுத்த வெண்புலம்
- பொய் சொல்லும் இதயம்
- மயிலிறகு…!
- இதயம் துடிக்கும்
- கவிதைகள்
- வானமே எல்லை: இந்தியாவின் முதல் பெண் விமானி சரளா தாக்ரல்
- டௌரி தராத கௌரி கல்யாணம் – 21
- நிறையற்ற ஒளித்திரள்களை [Photons] இணைத்து மூலக்கூறு விளைந்து முதன் முதல் புது நிலைப் பிண்டம் கண்டுபிடிப்பு
- கவிதைகள்
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – அத்தியாயம்-4 – ஸ்ரீ ராதை
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 30
- சீதாயணம் தொடர்ப் படக்கதை -1
- மரணவெளியில் உலாவரும் கதைகள்
- ~ சீதாயணம் ~ (முழு நாடகம்)
- இதய வலி
- இன்னுரை தடவினும் என்னுயிர் மாயும்.
- Grieving and Healing Through Theatre Canadian-Tamil artistes present 16th Festival of Theatre and Dance
- தமிழ் ஸ்டுடியோவின் இந்திய சினிமா நூற்றாண்டுக் கொண்டாட்டம் – 2