ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – அத்தியாயம்-4 – ஸ்ரீ ராதை

This entry is part 25 of 33 in the series 6 அக்டோபர் 2013

வங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜி

மொழியாக்கம்-சத்தியப்பிரியன்

ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி குறிப்பிடும் தொல் நூல்களில் இரண்டில் மட்டுமே ராதையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஒன்று பிரம்ம வைவாத்ர புராணம்.மற்றொன்று ஜெயதேவரின் பாடல் தொகுப்பு.பாகவத உபன்யாசம் நடத்தும் பாகவதோத்தமர்கள் மீண்டும் மீண்டும் தங்கள் உபன்யாசத்தில் ராதையைக் குறிப்பிடுகின்றனர். இதில் வியப்பு என்னவென்றால் ஸ்ரீமத் பாகவதத்தில் ஒரு இடத்தில் கூட ராதையைப் பற்றிய குறிப்பு இல்லை.

பாகவதத்தில் கூறப்பட்டுள்ளபடி ஸ்ரீ கிருஷ்ணரை தொடர்ந்து சென்ற கோபிகை ஒருத்தியின் பாதத்தடங்கள் அடர்ந்த புதர் அருகே நின்று விடுகிறது.பொறாமையில் விம்மும் மற்ற  கோபிகைகள் ஸ்ரீ கிருஷ்ணர் பிரிய கோபிகையுடன் சல்லாபம் புரிய புதர் மறைவுக்குப் போயிருக்க வேண்டும் என மனம் புழுங்குகின்றனர். இது கோபிகைகளின் நினைப்பு மட்டுமே. இதன் மூலம் ஸ்ரீமத் பாகவதத்தில் நூலாசிரியர் ஸ்ரீ கிருஷ்ணர் மீது கோபிகைகள் கொண்டுள்ள அளவற்ற காதலை வெளிப்படுத்துகிறார். ஸ்ரீ கிருஷ்ணர் அழைத்துச் சென்ற கோபிகையைப் பற்றி பாகவதத்தில் குறிப்பு எதுவும் இல்லை. அவள் பெயர் பற்றிய தகவல் கூட இல்லை.எனவே அவள்தான் ராதை என்பதற்கு தகுந்த ஆதாரம் எதுவும் இல்லை.

ஸ்ரீமத் பாகவதம்,விஷ்ணு புராணம்,ஹரிவம்சம் மற்றும் மகாபாரதம் நூல்களில் இராதை என்ற பெயரே இல்லை. எனினும் இன்று கிருஷ்ணா ப்ரேமை என்று சொன்னால் முதலில் நினைவுக்கு வருவது ராதையின் பெயராகும். இப்பொழுது ஸ்ரீ கிருஷ்ணர் பெயருடன் ராதையின் பெயர் சர்வ சாதாரணமாக இனைந்து விட்டது. தற்கால கிருஷ்ணர் கோவில்களில் ராதையின் சிலை இல்லாமல் ஸ்ரீ கிருஷ்ணர் சிலையை தனியாக பார்க்க முடியாது. வைணவ இலக்கியங்களில் சிற்சில இடங்களில் ஸ்ரீ கிருஷ்ணரின் முக்கியத்துவம் பின்னுக்கு தள்ளப் பட்டு இராதைக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது.

பண்டைய நூல்களான மகாபாரதம் விஷ்ணு புராணம் ஹரிவம்சம் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் போன்ற நூல்களில் குறிப்பிடப் பாடாத இராதை எவ்வாறு தோன்றினாள் ? சற்று பார்ப்போம்.

ராதையின் பெயர் முதன் முதலில் குறிப்பிடப் படும் நூல் பிரம்ம வைவத்ர புராணமாகும். ஆங்கில அறிஞர் வில்சன் என்பவரின் கூற்றுப்படி புராணங்களில் காலத்தால் மிக அருகாமையில் உள்ள நூல் பிரம்ம வைவத்ர புராணமாகும் . விஷயத்தை மேலும் சிக்கலாக்க பிரம்ம வைவத்ர புராணத்தின் ஏடுகள் எதுவும் நம் வசம் இல்லை. இப்பொழுது நமக்கு கிடைக்கும் பதிவுகளின்படி ஒரு வினோதமான கடவுள் வரிசையே பிரம்ம வைவத்ர புராணம் மூலம் நமக்கு கிடைக்கிறது. அந்த வரிசை இப்பொழுது உள்ள கடவுள் வரிசைக்கு சற்றும் பொருத்தம் இல்லாதது.

ஸ்ரீ கிருஷ்ணர் நாராயணின் அவதாரம் என்பது அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயம். ஆனால் பிரம்ம வைவத்ர புரானத்தில் இது முற்றிலும் வேறாக கூறப் படுகின்றது. ஸ்ரீ  கிருஷ்ணரே விஷ்ணுவையும் , ஏனைய கடவுள்களையும் மற்ற ஜீவராசிகளைப் படைப்பதாக கூறுகிறது. கோலோகதமம் என்ற இடம் ஸ்ரீ கிருஷ்ணரின் உறைவிடமாகக் குறிப்பிடப் படுகின்றது. இந்த கோலோகதமம் விஷ்ணுவின் வைகுண்டத்தை விட மேலானதாக வர்ணிக்கப் படுகின்றது இந்த கோலோகதமத்தில்தான் இராதை ஒரு முக்கிய பெண் கடவுளாக சித்தரிக்கப் படுகின்றாள். கோலோகதமத்தை பற்றிய வர்ணனைகள் அப்படியே இதற்கு முன்னால் சித்தரிக்கப் பட்ட பிருந்தாவன வர்ணனைகளின் அப்பட்டமான நகலாகும்.

பிரம்ம வைவத்ர புராணத்தில் விராஜை என்ற மற்றொரு முக்கிய பாத்திரத்தைப் பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது.இந்த விராஜை ஸ்ரீ கிருஷ்ணரின் காதலியான இராதையின் பரம வைரி. இந்தக் கதையில் விராஜையின் வீட்டிற்கு செல்லும் ஸ்ரீ கிருஷ்ணர் மீது ராதை பொறாமை கொள்கிறாள். ஊடல் கோபமாகி இராதை கண்ணனைத் தேடிக் கொண்டு விராஜையின் வீட்டிற்கு தேரெடுத்து செல்கிறாள். வீட்டினில் விராஜை இல்லை என்று வாயிற்காப்போன் அனுமதி மறுக்கிறான். இருப்பினும் இராதை வந்து விட்டாள் என்ற சேதியை கேள்விபட்டதும் விராஜை பயத்தில் நடுங்கி உருகி ஒரு நதியாக ஓடத் தொடங்குகிறாள்.

ஸ்ரீ கிருஷ்ணர் உடனே அவளை உரு மாற்றி பழைய வடிவத்தைக் கொடுக்கிறார்..அளவுக்கு அதிகமான காதல் காரணமாக இருவருக்கும் ஏழு குழந்தைகள் பிறந்து,பின்னர் அவை தாயாரின் சாபத்திற்கு ஆளாகி ஏழு கடல்களாக மாறுகின்றன.. தாயே புதல்வர்களை சபிக்கக் காரணம்  கண்ணனுடன் விராஜை காதல் கொண்டிருந்த பொழுது  அந்த ஏழு குழந்தைகளும் அவர்களது காதல் வாழ்விற்கு இடையுறாக குறுக்கிட்டதால்தான். கண்ணனின் இந்தக் காதலை கேள்வியுற்ற இராதை அவனை ஒரு மானிடனாகப் பிறக்குமாறு சபிக்கிறாள். ஸ்ரீமான் என்கிற வாயில் காப்போன் அவளது இந்த சாபத்திற்காக அவளைக் கடிந்து கொள்கிறான். அவன் மேல் கோபமடைந்த இராதை அவனை பூவுலகில் ஒரு அசுரனாகப் பிறக்க சாபமிடுகிறாள். இதனால் ஆத்திரமடைந்த வாயில் காப்போன் இராதையை  பூமியில் ஒரு பெண்ணாக பிறந்து குணங்கள் அழிந்து கொடுமைக்கு ஆளாகுமாறு சாபமிடுகிறான். இருவரும் தங்கள் மேல் வந்த சாபம் இழிவுருவதற்கு கண்ணனிடம் உபாயம் கேட்கின்றனர். ஸ்ரீமானை கிருஷ்ணர் அசுரர் தலைவனாகப் பிறக்க பணிக்கிறார். இராதை  பூலோகத்தில் பிறந்து வரும் வேளையில் தான் அவளுக்கு துணையாக பின் தொடர்ந்து வருவதாக கூறுகிறார்.

இந்தக் கதைகள் சிறிது காலங்களுக்கு முன்புதான் புனையப் பட்டிருக்க வேண்டும்.. எப்படியானாலும் இந்த கதைகள் வங்காள தேசத்தினரை பெரிதும் கவர்ந்து விட்டன என்றுதான் சொல்ல வேண்டும். இந்தக் கதைகள் வங்காள தேச கவிகளான ஜெயதேவர் போன்றவர்களுக்கு ஒரு பெரிய கற்பனைப் பெட்டகமாகும். இதை அடிப்படையாகக் கொண்டுதான் காதல் ததும்பும் பாடல்களையும், யாத்ரா நாடகங்களையும் ஜெயதேவர் இயற்றினார்.

பிரம்ம வைவத்ர  புராணத்தில் குறிப்பிடப் பட்டுள்ள ஒரு விஷயத்தை வங்காள தேச மக்கள் ஏனோ காற்றில் பறக்க விட்டு விட்டனர். இந்த புராணம் கிருஷ்ணர் இராதை இருவரும் திருமணமான தம்பதிகள் என்றே குறிப்பிடுகின்றது. ஆனால் வங்காளக் கவிகள் அவர்கள் இருவரையும் இளம் காதலர்களாகவே இன்று வரை சித்தரித்து வருகின்றனர்.

பிரம்ம வைவத்ர புராணத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் இராதையின் திருமணம் எவ்வாறு நடந்ததென்று பார்ப்போம். இந்த நேரத்தில் பிரம்ம வைவத்ர புராணம்கூறும் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேம்ண்டும்.அதாவது இராதை கண்ணனை விட வயதில் பெரியவள். ஸ்ரீ கிருஷ்ணர் மண்ணுலகில் அவதரிக்கும் முன்னரே இராதை மானுடப் பிறவி எடுக்க சபிக்கப் படுகிறாள். எனவே ஸ்ரீ கிருஷ்ணர் பாலகனாக இருக்கும்பொழுது இராதை இளங்கன்னியாக இருக்கிறாள்.

ஒரு முறை நந்தகோபர் பிருந்தாவனத்தில் மாடுகளை மேத்துக் கொண்டிருக்கிறார். பெற்றம் மேய்க்கும் குலம் என்பதால் ஸ்ரீ கிருஷ்ணர் சிறு குழந்தையாக உடன் இருக்கிறார். மாடுகளுக்கு குளத்தில் உள்ள தண்ணீர் காட்டி விட்டு தானும் அந்த நீரைப் பருகிறான். கிருஷ்ணரை மார்புடன் அணைத்த படி நந்தகோபர் ஒரு ஆலமரத்தின்  அடியில் அமர்கிறார். சின்னஞ்சிறு பிள்ளையாக இருந்தாலும்  தன மாயையினால் ஸ்ரீ கிருஷ்ணர் ஆகாயம் முழுவதையும் கரு மேகங்களால் மறைக்கிறார். பூமி எங்கும் கருமை கவிகிறது.. பெருமழை பெய்யத் தொடங்குகிறது. மரங்கள் வேருடன் சாய்கின்றன.

நந்தகோபர் பயப்படுகிறார். ” ஐயோ இந்த மழையில் நான் எவ்வாறு வீட்டிற்கு போவேன்? வீடு திரும்ப முடியாதபடி இப்படி மழை பெய்தால் இந்த சினஞ்சிறு குழந்தைக்கு என்ன நேருமோ?” நந்தர் புலம்புவதைப் பார்த்து ஸ்ரீ கிருஷ்ணர் தன்னை சுற்றி பெய்யும் மழைக்கு பயந்தவர் போல அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டு “ ஓ “ என்று அழுகிறார். அந்த கணம் ராதை அங்கே தோன்றுகிறாள். அவளது ஒயிலும் எழிலும் நந்தகோபரை வியப்புற வைக்கிறது. அவர் இராதையை வரவேற்று “ கார்கனிடமிருந்து நான் தெரிந்து கொண்டேன் நீ கிருஷ்ணனை ப்ரேமிக்கிறாய் என்று. இவன் கண்ணன் அல்லன். மகா விஷ்ணு. நான் இவனுடைய இந்த அழகிய மாயையில் கட்டுண்டு கிடக்கிறேன். பெருமாட்டியே! உன் காதலனை பெற்றுக் கொள். எங்கு சென்றால் நீ மகிழ்வாயோ அங்கு இவனையும் கூட்டி செல். வேண்டுமளவு இவனுடன் சுற்றி திரிந்து விட்டு உன் ஆசைகள் நிறைவேறிய பின்பு இவனை எனக்கு திருப்பிக் கொடு” என்கிறார்.

நந்தர் இவ்வாறு கூறிவிட்டு இராதையிடம் கிருஷ்ணனை தூக்கிக் கொடுக்கிறார். தன் விருபத்திற்கு ஏற்ற இடமாக ஒரு மைதானத்தை இராதை மனதில் நினைக்கிறாள்.உடனே அழகிய பூந்தோட்டம் தோன்றுகிறது.கையில் ஏந்திய ஸ்ரீ கிருஷ்ணரை தரையில் தவழ விட்டதும் என்ன ஆச்சாரியம்! ஸ்ரீ கிருஷணர் அழகிய வாலிபனாக உருவெடுக்கிறார்.

இந்த சமயம் பிரம்மா அங்கு தோன்றுகிறார்.உரிய மதிப்பை இராதைக்கு வழங்கி விட்டு அவளை ஸ்ரீ கிருஷ்ணருக்கு கன்னிகாதானம் செய்து கொடுக்கிறார். கல்யாண சடங்குகள் முடிந்ததும் பிரம்மா கிளம்பி செல்கிறார்.

இந்த கிருஷ்ணராதை திருமண வைபவம் பிரம்ம வைவத்ர புராணத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த புனைவின் மூலம் ஸ்ரீ வைஷ்ணவத்தின் அடிப்படை தத்துவம் திரித்துக் கூறப் பட்டுள்ளதை ஆழ்ந்து படிப்பவர்கள் நன்கு அறிவார்கள்.ஸ்ரீ விஷ்ணுவே ஆதி மூலம் என்றில்லாமல் ஸ்ரீ இராதையை முழுமுதல் கடவுள் என்று இந்த புராணம் குறிப்பிடுகின்றது.  இது ஸ்ரீ கிருஷ்ண சித்திரத்திற்கு ஒரு புதிய வடிவினைக் கொடுக்கின்றது.இந்த வியாக்கியானத்தை மையமாகக் கொண்டே ஜெயதேவர் தனது ஸ்ரீ கோவிந்தத்தை இயற்றினார்.

வங்கத்தில் வாழ்ந்த பிற கவிகளான வித்யாபதி,சாந்திதாஸ் போன்றவர்கள் ஜெயதேவரை முன் உதாரணமாகக் கொண்டே தங்களுடைய ஸ்ரீ கிருஷ்ண கானங்களை இயற்றினார்கள் .ஸ்ரீ சைதன்ய பிரபுவும் தனது மிக அருமையான பக்திவாதம் என்கிற சித்தாந்தத்தை இந்த புதிய பரிமாணமமான வைஷ்ணவ தர்மத்தை அடிப்படையாகக் கொண்டே பேசுகிறார். எனவே பிரம்ம வைவத்ர புராணம் வந்காலர்களின் சிந்தனை வாதத்தை ஊடுருவியது என்றால் அது மிகையாகாது.மற்ற ரிஷிகள்,சாஸ்திரங்கள், புராணங்கள் செய்ய முடியாததை இந்த புராணம் செய்து வங்காளிகளின் வாழ்க்கைப் போக்கை மாற்றியது என்றால் மிகை ஆகாது.

இந்த புது வைஷ்ணவ சம்ப்ரதாயம் என்ன என்றும் அது எவ்வாறு நிறுவப்பட்டது என்றும் பார்ப்போம்.

பல்வேறு தத்துவங்களும் ஞான மார்க்கங்களும் நமது பாரத தேசத்தில் இருப்பினும் ஆறு தத்துவங்களே சிறந்து விளங்குகின்றன. அவற்றில் வேதாந்த தத்துவமும் சாங்கிய தத்துவமும் மேலும் சிறந்தது எனக் கருதப் படுகிறது. வேதாந்த மார்க்கம் உபநிஷ்ந்தங்களில் கிடைக்கிறது. இது அத்வைதத்தால் கட்டப்பட்டுள்ளது. இதில் கடவுள் எங்கும் நிறைந்தவர். அவரே சகல ஜீவராசிகளுக்குள்ளும் நிறைந்து காணப்படுகிறார். கடவுள் பெரியவர். மற்ற னைத்தும் கடவுளின் தோற்றங்களே. மனிதன் கடவுளிடமிருந்து வேறுபட்டு காண்பதற்கு மாயைதான் காரணம் அந்த மாயை விலகும்பொழுது மட்டுமே பரகதி கிடைக்கிறது.

வேதத்தின் மூலம் அறியப்பட்ட இந்த உண்மையே முந்தைய ஸ்ரீ வைஷ்ணவத்தின் அடித்தளமாக விளங்கியது. விஷ்ணுவும் அவரது அவதாரமான ஸ்ரீ கிருஷ்ணரும் வேதகால கடவுள்களாகவே அறியப் பட்டனர். மகாபாரத நூலில் சாந்தி பர்வத்தில் பீஷ்மர் பகவான் மீது பாடும் துதியில் இந்த ஏக கடவுள் தத்துவத்தை கூறுகிறார்.

ஏகக் கடவுள் சித்தாந்தத்தை வேறு பல வழிகளில் விளக்கலாம். பின் வந்த காலங்களில் ஆதி சங்கரர், இராமானுஜர், மாத்வாச்சாரியார் மற்றும் வல்லபாச்சாரியார் முதலிய நால்வரும் முறையே அத்வைதம் , விசிஷ்டாத்வைதம், த்வைதவைதத்வம், மற்றும் விஷ்ணுதத்வைதம் என்ற சித்தாந்தங்களை உருவாகினார்கள்.ஆரம்ப காலங்களில் வேதாந்தம் புதியதாய் தோன்றிய சமயம் ஏக கடவுள் சித்தாந்தத்திற்கு  பலவித மார்கங்கள் அறியப் பட்டிருக்க வில்லை.அந்த காலத்தில் பிரபஞ்சத்திற்கும் கடவுளுக்கும் உள்ள தொடர்பே இவ்வாறு விளக்கப் பட்டது.

1) கடவுள் எங்கும் இருப்பவர்.

2) கடவுள் பிரபஞ்சமில்லை. பிரபஞ்சம் கடவுளில்லை. ஆனால் பிரபஞ்சம் என்பது கடவுளுக்குள் அடங்கும். கடவுள் முடிவற்றவர். பிரபஞ்சங்களுக்கு அப்பாற்பட்டவர்.

மேலே கூறப் பட்டுள்ள இரண்டாவது விளக்கத்தின் படி விஷ்ணு புராணம் ஏகக் கடவுள் தத்துவக் கோட்பாட்டினை அமைத்திருந்தது. அதன் பின்னர் புனர்ஜன்மம் அடைந்த ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயமானது – பிரம்ம வைவத்ர புராணத்தில் கூறப் பட்டுள்ளது போல- வேதாந்த தத்துவப்படி ஏகக் கடவுள் கொள்கையை பின் பற்றவே இல்லை. சாங்கிய சித்தாந்த்ததின்படி அது புதிதாக நிர்மாணிக்கப் பட்டது.

சாங்கிய தத்துவத்தின்படி இயற்கையும் பிரம்மமும் இரண்டு வெவேறு கூறுகள். அவற்றை சாங்கியம் பிரகிருதி என்றும் புருஷம் என்றும் குறிப்பிடுகின்றது.

பிரகிருதி புருஷ சித்தார்த்தமே தாந்த்ரீக மார்கத்தின் அடிப்படையானது. இந்த இரண்டு கூறுகளும் நெருங்கி வருவதையே தாந்த்ரீக மார்க்கம் விரும்புகிறது. பிரகிருதி எனப்படும் ஜீவனுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப் பட்டு பெண் என உருவகப் படுத்தப் படுகிறது. புருஷம் என்பது ஆண்தன்மை கொண்டதாக சொல்லப் படுகிறது. ஆண் பெண் சேர்க்கைக்கு இது எளிதில் இடம் கொடுப்பதால் தாந்த்ரீக மார்க்கம் மக்களிடம் வேகமாக பரவத் தொடங்கியது.

அத்வைதத்தின் மேல் கட்டமைக்கப் பட்ட முந்தைய வைஷ்ணவ மார்கத்தை விரும்பாத வைஷ்ணவர்கள் தாந்த்ரீக மார்கத்திற்கு எளிதில் நகரத் தொடங்கினர். ஏன் எனில் இங்கு ஆணும் பெண்ணும் இணைவதற்கான சாத்தியங்கள் ஏராளம். ஆனால் முற்றிலும் தாந்த்ரீக மார்க்கம் பிரபலம் அடைவதை வைஷ்ணவர்கள் விரும்பவில்லை. புத்திசாலித் தனமான காரியம் ஒன்றை செய்தனர். தாந்த்ரீகத்திலிருந்து மூலக்கூற்றை எடுத்துக் கொண்டனர். பிரம்ம வைவத்ர புராணத்தின் ஆசிரியர் பிரகிருதி என்ற வஸ்துவிற்கு இராதை என்ற வடிவத்தைக் கொடுத்து ஸ்ரீ வைஷ்ணவத்திற்கு புனர் ஜன்மம் செய்து வைத்தார்.

Series Navigationகவிதைகள்குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 30
author

சத்தியப்பிரியன்

Similar Posts

2 Comments

 1. Avatar
  ஷாலி says:

  ராதையிடம் கிருஷ்ணனை தூக்கிக் கொடுக்கிறார். தன் விருபத்திற்கு ஏற்ற இடமாக ஒரு மைதானத்தை இராதை மனதில் நினைக்கிறாள்.உடனே அழகிய பூந்தோட்டம் தோன்றுகிறது.கையில் ஏந்திய ஸ்ரீ கிருஷ்ணரை தரையில் தவழ விட்டதும் என்ன ஆச்சாரியம்! ஸ்ரீ கிருஷணர் அழகிய வாலிபனாக உருவெடுக்கிறார் //

  நம்ம சினிமா பாட்டின் அர்த்தமே இப்பத்தான் புரியுது.
  அர்த்தம் புரிந்து பாடும்போது ஆனந்தமே!
  வாங்க பாடுவோம்!

  கண்ணன்ஒரு கைக்குழந்தை
  கண்கள்சொல்லும் பூங்கவிதை
  கன்னம்சிந்தும் தேனமுதை
  கொண்டுசெல்லும் என்மனதை

  கையிரண்டில் நானெடுத்துப்
  பாடுகின்றேன் ஆராரோ
  மைவிழியே தாலேலோ
  மாதவனே தாலேலோ

  உன்மடியில் நானுறங்க
  கண்ணிமைகள் தான்மயங்க
  என்னதவம் செய்தேனோ
  என்னவென்று சொல்வேனோ

 2. Avatar
  ஆர்.சத்யபாமா says:

  ஹரிவம்ஸம் தமிழ்ப்புத்தகம் எங்கு கிடைக்கும் என்று தயவு செய்து தெரிவிக்கவும்.என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
  சத்யபாமா ராஜகோபாலன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *