குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 32 (இறுதிப்பகுதி)

This entry is part 20 of 31 in the series 20 அக்டோபர் 2013

grija (1)

ஜோதிர்லதா கிரிஜா

நாள்கள் நகர்ந்துகொண்டிருந்தன. தயாவும் சாந்தியும் சிந்தியாவின் உழைக்கும் மகளிர் விடுதியில் சேர்ந்து ஒரு மாதம் போல் ஆகிவிட்டது. தன் வீட்டாருடன் தங்குவதால் ரமணியால் தனக்குத் தொல்லை ஏற்படலாம் என்னும் அச்சத்தில் தயாவும் அவ்விடுதியில் இருக்க முடிவு செய்தாள். சங்கரனின் தங்கை பவானியின் திருமணமும் ஒரு வழியாக எல்லாருடைய உதவியுடனும் நடந்தேறியது.

ஒரு நாள் ரமா தற்செயலாகப் பேருந்து நிறுத்தத்தில் சங்கரனின் அப்பா தரணிபதியைப் பார்த்தாள். அங்கே வேறு யாரும் இல்லாத துணிச்சலில் அவரோடு சங்கரன் – தயா திருமணம் தொடர்பாகப் பேசிப் பார்க்க முடிவு செய்தாள்.
“மாமா! சவுக்கியமா? என்னை ஞாபகம் இருக்கா?”

“தெரியறது. நீ சங்கரோட ஆபீஸ்ல வேலை பாக்கற பொண்ணுதானே? “

“ஆமா, மாமா. உங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும்.”

“என்ன?” – கேள்வியைக் கேட்ட தினுசிலேயே அவர் பாதிக்கு மேல் ஊகித்துவிட்டது ரமாவுக்குப் புரிந்தது. இருந்தாலும், “எல்லாம் நம்ம சங்கர்-தயாவைப் பத்தித்தான். அவளோ இப்ப புருஷனோட கொடுமை தாங்காம திரும்பி வந்துட்டா. அவளுக்கும் சங்கருக்கும் கலியாணம் பண்ணி வெச்சேள்னா நல்லது,” என்றாள்.

“என்னது! என்ன சொன்னே? இன்னொரு தரம் சொல்லு! கலியாணமா? ஒருத்தனோட வாழ்ந்துட்டு வந்தவளுக்கும் அப்பழுக்கில்லாத எம்பிள்ளைக்குமா? சங்கரே உன்னோட சொந்த அண்ணாவா யிருந்தா இப்படி ஒரு எண்ணம் வருமா உனக்கு?”

‘சங்கர் மட்டும் எங்க அண்ணாவா யிருந்தா எங்கம்மாவோட வாதாடி கலியாணத்தை என்னிக்கோ நடத்தி வெச்சிருப்பேனாக்கும். தயா இப்படியெல்லாம் ஒரு ராட்சசன் கையில மாட்டிண்டு அவஸ்தைப் படும்படியே ஆயிருக்காது’ என்று சூடாகப் பதில் சொல்லத் துடித்த நாவைக் காரிய நோக்கம் கருதிக் கட்டுப்படுத்திக்கொண்ட ரமா, “நிச்சயமா வரும், மாமா. அதிலயும், தயா என்னோட சிநேகிதியா வேற இருக்கிறதால கண்டிப்பா அப்படி ஒரு எண்ணம் எனக்கு வரும். நான் பொய் பேசல்லே. இன்னொருத்தன் கூட வாழ்ந்துட்டு வந்தவளா யிருந்தா என்ன, மாமா? அவ விரும்பி ஏத்துண்ட வாழ்க்கை இல்லியே அது? திணிக்கப்பட்ட ஒண்ணுதானே? மனசாலயும் கெட்டுப் போயிருந்தா நீங்க சொல்றதை ஒத்துக்கலாம்,” என்றாள்.

“இத பாரும்மா! கற்பு உடம்பு சம்பந்தப்பட்டதா, இல்லே, மனசு சம்பந்தப் பட்டதான்னு உன்னோட பட்டிமன்ற வழக்காட நான் தயாராயில்லே. நினைக்கவே குமட்டிண்டு வருது. இந்தப் பேச்சை இத்தோட நிறுத்து. எம் பிள்ளை கிட்ட வேற இதைப பத்திப் பேசி அவன் மனசைக் கலைக்காதே. புரிஞ்சுதா?”

ரமா சிரித்தாள் : “உங்க பிள்ளை தானாவே சொன்ன யோசனைதான், மாமா, இது! சொல்றதுக்குத் தோதான நேரம் பாத்துட்டு இருக்காரு. அவ்வளவுதான்.. நான் முந்திண்டேன்.”

“நீ யாரும்மா, முந்திக்கிறதுக்கும் இன்னொண்ணுக்கும்? உன் ஜோலியைப் பாத்துண்டு போவியா! தவிர, அவனோட பார்க்ல உக்காந்து பேசினதுக்கே ஆள் வெச்சு அடிச்சுப்போட்ட அந்தக் கிராதகன் அவனோட பொண்டாட்டியை இவன் கலியாணமே பண்ணிண்டான்னா, சும்மா விடுவானா? கொலையே பண்ணிடுவான். அதனால நீ இந்தப் பேச்சை நிறுத்து.”

ரமா வாயை மூடிக்கொண்டாள்.

மறு நாள் சங்கரனைச் சநதித்த ரமா தனக்கும் அவன் அப்பா தரணிபதிக்குமிடையே நடந்த பேச்சைப் பற்றி அவனிடம் தெரிவித்தாள்.

“தெரிஞ்ச விஷயந்தானே?” என்ற சங்கரன் கசப்பாய்ச் சிரித்தான்.

“நீங்க இப்படியே விட்டுடக் கூடாது, சங்கர்! நீங்க சீக்கிரம் தயாவோட வாழத் தொடங்கணும். செல்லுமோ, செல்லாதோ, கல்யாணத்தை ஒரு கோவில்ல வெச்சுப் பண்ணிடலாம். சட்டச் சிக்கலையெல்லாம் அப்புறம் தீர்த்துக்கலாம். எதுக்குச் சொல்றேன்னா, தயா மனசிலே கொஞ்சம் அப்பப்ப குழப்பம் ஏற்பட்றது. தான் ஒரு எச்சில் பண்டம், உங்களுக்கு ஏத்தவ இல்லே, அப்படி இப்படின்னு வாய்க்கு வாய் புலம்பிக் கண் கலங்கறா. அவ அபிப்பிராயம் ஒரே யடியா எதிர்மறையா மார்றதுக்கு முந்தி நீங்க அவளோட வாழத் தொடங்கிடணும். “

“அந்த ராஸ்கல் – அதான் தயாவோட புருஷன் – அவன் என்ன மாதிரி யெல்லாம் தகராறு பண்ணுவானோ?”

“அப்படி ஏதானும் வந்தா அப்ப பாத்துக்கலாம், சங்கர். இப்படி திகைச்சுத் திகைச்சு உக்காந்துண்டிருந்தா ஒரு சின்னக் கல்லைக் கூட மனுஷாள¡ல நகர்த்த முடியாது.”

“சரி, ரமா..”

“எங்க வீட்டு மாடிப் போர்ஷன் காலியாகும் வர்ற மாசம். நான் சொல்லி வெச்சிருக்கேன். ரொம்பப் பழக்கம். அதனால முன்பணம் இல்லாம குடி வர்றதுக்கு அவா ஒத்துண்டிருக்கா. வர்ற மாசம் ஒண்ணாந்தேதி நீங்க ரெண்டு பேரும் அங்க குடி வறேள், தெரிஞ்சுதா?”

சங்கரன் மகிழ்ச்சியை மறைத்துக்கொள்ளாமல் உட்கார்ந்திருந்தான்.

“சில குடும்பங்கள்லே மூத்த மகனாப் பிறக்கிறதைப் போல தண்டனை வேற கிடையாது. எல்லாப் பொறுப்பையும் அவன் தலையிலெ சுமத்திட்டு எல்லாரும் நிம்மதியாக் காத்து வாங்குவா.. உங்க அம்மா அப்பாவோட நீங்க ரெண்டு பேரும் இருந்தா சந்தோஷமா யிருக்க முடியாது. அதனால, நீங்க வர்றதைப் பத்திப் பின்னால் முடிவு எடுக்கிறதா இருந்தாலும், நான் தயாவை அங்க குடி வெச்சுடப் போறேன்.”

“சரி. அப்படியே செய்யுங்க.”

“அப்ப நீங்க சரின்னுட்டீங்கனு நான் தயா கிட்ட சொல்லிடட்டுமா?”

“சொல்லிடுங்க.”

“அப்பால பின் வாங்க மாட்டீங்களே?”

“பின்னும் வாங்க மட்டேன், க்ளிப்பும் வாங்க மாட்டேன்.”
“இதுதான் நெசமான, பழைய சங்கர்! அம்மாடி! இந்தக் கடியைக் கேட்டு எத்தனை நாளாச்சு!”

“தயாவோட ஓரகத்தி அந்த மகளிர் விடுதியிலயே தங்குவாங்களா?”

“ஆமா. அந்த சிந்தியா மேடம் அவளுக்கு அந்த விடுதியிலேலேயே ஒரு சமையல் அறை உதவியாள் வேலைக்கு ஏற்பாடு பண்றேன்னு சொல்லிட்டாங்க. அதனால அவங்களாலயும் உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது. !”

“ரைட், ரமா!”
“நான் எப்பவுமே ‘ரைட்’ ரமாதான். ‘ராங்’ ரமாவே கிடையாது!” என்று சொல்லிவிட்டு ரமா மகிழ்ச்சியுடன் அகன்றாள். தன் உயிர்த் தோழியின் வாழ்க்கை இனி நிம்மதியாய்க் கழியும் என்னும் உற்சாகத்தில் கிளம்பிய அவள் அது ஒரு தெரு என்பது பற்றிய உணர்வு அற்றவளாய் ஒரு பைத்தியக்காரி மாதிரி தனக்குத்தானே சிரித்தபடி நடந்து போனாள் – எதிர்ப்பட்டவர்கள் தன்னை ஒரு மாதிரியாகப் பார்ப்பதையும் உணராதவளாய்த்தான்!

. . . .. .. . . ராதிகா சிந்தியாவை நேசிக்கத் தொடங்கி யிருந்தாள். அவளுடன் பழகப் பழக, அவள் ஓர் அப்பழுக்கற்ற மாணிக்கம் என்பதாய்ப் புரிந்துகொண்டாள். வாய்க்கு வந்தபடி யெல்லாம் அவளை மனத்துள் தான் ஒரு சமயம் திட்டியதை எண்ணி அவள் வருத்தமும் கழிவிரக்கமும் உற்றாள். அடிக்கடி சிந்தியாவின் வீட்டுக்குப் போய் அவளுடன் பல்வேறு விஷயங்கள் பற்றி அளவளாவுவதை அவள் இப்போதெல்லாம் ஒரு வழக்கமாகவே ஆக்கிக்கொண்டு விட்டாள்.

தனக்கும் சிந்தியாவுக்குமிடையே மலர்ந்துள்ள நட்பைப் பற்றி அறிய நேர்ந்தால், தீனதயாளனுக்கு எப்படி இருக்கும் என்பது பற்றி அடிக்கடி அவள் நினைத்துப் பார்ப்பதுண்டு. இருவருமே, சொல்லி வைத்துக்கொண்டது போல் தங்களது நட்பை அவரிடம் தெரிவிக்காமலே இருந்தனர்.

தனக்கு வேலை இருப்பதாகவும் எனவே அன்று மாலை அவர் வரவேண்டாமென்றும் சிந்தியா ஒரு நாள் அவருக்குத் தொலைபேசித் தகவல் சொன்ன போது, கடந்த சில நாள்களாகவே அவள் கொஞ்சம் வித்தியாசமாய் நடந்து வருவதாய் அவருக்குப் பட்டது. மேலும் தொடர்ச்சியாய்ச் சில ஞாயிறுகளில் அவள் தம்மைத் தவிர்க்கத் தொடங்கியுள்ளதற்கு என்ன காரணம் இருக்கக் கூடும் என்று அவர் யோசிக்கத் தொடங்கினார். அவருள் ஏதேதோ எண்ணங்கள் எழுந்தன. சிந்தியாவின் திடீர் மாற்றத்துக்கான காரணத்தைக் கண்டுபிடிக்காவிட்டால் தலை வெடிக்கும் போன்ற மன உளைச்சலுக்கு அவர் ஆட்பட்டார். ஏதோ நடந்துகொண்டிருக்கிறது என்பதில் மட்டும் அவருக்கு உறுதியான ஐயம் இருந்தது.

அவர் வரவேண்டாம் என்று அவள் கேட்டுக்கொண்ட ஒரு ஞாயிறன்று அவள் வீட்டுக்குப் போய் அவளைக் ‘கையும் களவுமாய்’ப் பிடிப்பதற்கு அவர் திட்டமிட்டார். தமது மாருதி காரில் போனால், அதை நிறுத்தும் போது அவள் கண்டுபிடித்து உஷாராகிவிடக் கூடும் என்பதால் அவர் பேருந்தில் போனார்.
… சிந்தியாவின் வீட்டை நெருங்கியதும், வாசல் கதவருகே நின்றார். ஏதோ பேச்சுக் குரல் கேட்டுக்கொண்டிருந்தது. அழைப்பு மணியை அழுத்தினார். சிந்தியா ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள். விழிகளை மலர்த்திப் புன்னகை செய்த பின், “ஒரே நிமிஷங்க! இதோ வந்துட்டேன்!” என்றாள். பின் உள்ளே சென்றாள்.

‘வழக்கம் போல் கதவை உடனே திறக்க வேண்டியதுதானே? ஏன் ஒரு நிமிஷம் என்று சொல்லிவிட்டு உள்ளே போகிறாள்? எதை அல்லது யாரை மறைப்பதற்காக?’

அவசர நடையில் உள்ளே விரைந்த சிந்தியா, “ராதிகா! அப்பா வந்திருக்காரு. என்ன செய்யலாம்? உன்னை இங்கே பாத்தாருன்னா, அவருக்கு ரொம்ப சங்கடமாயிறும். நீ பாத்ரூமுக்குள்ள போய் இருந்துக்க. நான் என்னத்தையாவது காரணமாச் சொல்லி ஒரு அஞ்சு பத்து நிமிஷத்துல அவரை அனுப்பிவெச்சுடறேன். நான் கதவைத் தட்டினதுக்கு அப்புறம் நீ வெளியே வரலாம்,” என்று கூற, ராதிகாவும் அவ்வாறே செய்தாள்.

‘கதவை உடனே திறக்காத்தற்கு என்ன காரணம் சொல்லுவது?’

அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது. கோதுமை மாவில் கொஞ்சம் எடுத்துத் தட்டு ஒன்றில் போட்டுவிட்டு, அதில் நீரூற்றிய பின், தன் கைகள் இரண்டையும் சப்பாத்திமாவு பிசைந்த பின் கைகழுவிக்கொண்ட நிலையில் வைத்துக்கொண்டாள். கைகளில் ஈர மாவு ஒட்டிக்கொண்டிருக்குமாறு பார்த்துக்கொண்டாள்.

பிறகு ஓடிப் போய்க் கதவைத் திறந்தாள்.

“கதவைத் திறக்க ஏன் இவ்வளவு நேரம்?”

“சப்பாத்திக்கு மாவு பிசைஞ்சுக்கிட்டிருந்தேன். கையெல்லாம் ஒரே மாவு. கதவுக்கெல்லாம் நேத்துத்தானே வார்னிஷ் போட்டிருக்கு? அதனால, மாவுக்கையோட தொடவேணாம்னு கையைக் கழுவிக்கிட்டு வரப் போனேன்.”

“ரெண்டு கையாலுமா சப்பாத்திக்கு மாவு பிசைஞ்சியாம்? இடது கை ஃப்ரீயாத்தானே இருந்திருக்கும்? அதால திறக்க வேண்டியதுதானே?”

சிந்தியா விழிகள் விரிய அவரை ஒரு பார்வை பார்த்தாள்: “ரெண்டு கையாலயும் ஓங்கி ஓங்கி அடிச்சு மாவைப் பிசைஞ்சாத்தான் சப்பாத்தி சாஃப்ட்டா இருக்கும். உங்களுக்கு சந்தேகம் இருந்தா உங்க மிசஸைக் கேளுங்க.”

அவள் முன்னால் நடக்க, அவர் பின்தொடர்ந்து சென்றார்: “ஏதோ பேச்சுக் கொரல் கேட்டிச்சே?’’

“டி.வி.தான் ஓடிக்கிட்டிருக்கு. தனக்குத் தானே பேசிக்கிற அளவுக்கு இன்னும் பயித்தியம் பிடிக்கல்லே எனக்கு.”

“எங்கேயோ வெளியே போகப்போறதாச் சொன்னே?”

“இதோ, பத்தே நிமிஷத்துல கெளம்பிடுவேன். மாவைப் பிசைஞ்சு வெச்சுட்டுக் கெளம்பினா அது வரைக்கும் அது ஊறிக்கிட்டு இருக்குமேன்னுதான் அந்த வேலையைப் பண்ணிக்கிட்டு இருந்தேன்.”

அவர் அவர்களது படுக்கையறைக்குள் நுழைய முற்பட, அவள் கைநீட்டித் தடுத்தாள். தன் மீது இல்லாத பொல்லாத சந்தேகமெல்லாம் படும் அவரை மேலும் சீண்டிப் பார்க்கும் எரிச்சலில் தான் அவரை அவள் தடுத்தாள்.

“ஏன் தடுக்கறே? உள்ள யாரு?”

“நீங்க இன்னைக்கு அந்தக் கட்டில்ல உக்கார வேணாமேன்னு நினைச்சேன்” என்று அவள் அவரைச் சீண்டினாள் – வேண்டுமென்றே.

“ஏன்? உன்னோட நடவடிக்கைகள் எல்லாம் வரவர ஒரு மாதிரியா இருக்கே? இப்பல்லாம் நம்ம ஞாயித்துக் கெழமைச் சந்திப்பை அவாய்ட் பண்றே.”

“அதான் மத்த நாள்கள்லே வர்றீங்கல்லே? அப்பால என்ன?” என்று அவள் கேட்டாலும், அவரது பார்வையின் பொருள் அவளது பொறுமையைத் துரத்திவிட்ட்து.

“நீங்க நினைக்கிறது சரிதான். எனக்குப் புதுசா ஒரு ஃப்ரண்ட்ஷிப் கிடைச்சிருக்கு. நான் சொல்லாம நீங்களாவே புரிஞ்சுக்குவீங்கன்னு பாத்தேன். இப்பல்லாம் ஞாயித்துக் கெழமைகளைப் பெரும்பாலும் நாங்க ரெண்டு பேரும் ஒண்ணாக் கழிக்கிறோம்….”

“என்னது!”

“ஆமா. எதுக்கும் பெட்ரூமுக்குள்ள போய் உங்க சந்தேகத்தைத் தீர்த்துக்குங்க மொதல்ல. அதுக்கு அப்பால மத்த இடங்களையும் பாக்கலாம். ஏன்னா, நான் பெட்ரூமுக்குள்ள தானே போக விடாம உங்களைத் தடுத்தேன்? வாங்க, வாங்க. வந்து பாருங்க.”

‘இப்படிச் சொன்னா நான் தேடாம போயிடுவேன்னு நினைக்கிறயா?’ என்று எண்ணிய தீனதயாளன், முதலில் படுக்கையறைக்குள் நுழைந்தார். பார்வையின் சுழற்சிக்கு எதுவும் தென்படவில்லை.

“நீங்க சோதிக்க வேண்டியது கட்டிலுக்கு அடியிலேங்க,” என்ற சிந்தியா அவ்வாறு செய்ய அவர் சற்றே தயங்கியது தெரிய, தானே அந்தப் பெரிய கட்டிலை இழுத்து அதன் அடியில் யாரும் இல்லை என்பதைக் காட்டினாள்.

“நாடகமா போட்றே? பின் வழியாப் போயிருக்க முடியாதோ?”

“இந்த வீட்டுக்குப் பின்புறத்துல கதவு கிடையாதுங்கிறது மறந்து போயிறுச்சா உங்களுக்கு? இன்னும் நீங்க பாக்க வேண்டியது கிச்சன், பரண், என்னோட ட்ரெஸ்ஸிங் ரூம், பாத்ரூம், டாய்லெட் இதெல்லாந்தான். வாங்க.”

“சிந்தியா! உன்னோட பேச்சு, நடவடிக்கை எல்லாமே ஒரு தினுசா யிருக்கு. ஏதோ தப்புப் பண்றே நீ. அதை நான் ஊகிச்சுட்டதை உன்னால் தாங்க முடியல்லே. அதை நான் கண்டுபிடிக்க முடியாதபடி சாமர்த்தியமா ஏதோ ஏற்பாடும் பண்ணிட்டே. யாராலும் நம்மைக் கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைக்கிற ஒரு குற்றவாளி பேசுற மாதிரி பேசுறே – நடந்துக்குறே”

சிந்தியாவுக்குள் எரிமலை வெடித்துக்கொண்டிருந்த்து.

“வாங்க பெட்ரூமை விட்டு. நானே காட்டுறேன் அந்த ஆளை!” என்ற பின் அவள் ராதிகா இருந்த குளியலறை நோக்கி நடந்தாள்.

தீனதயாளன் வெளியே வந்து அவளைப் பின் தொடர்ந்தார்.

சிந்தியா குளியலறைக் கதவைத் தட்டி, “நீ இப்ப வெளியே வரலாம்!” என்று குரல் கொடுத்தாள்.

கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்த ராதிகாவைப் பார்த்ததும் தீனதயாளன் அப்படியே நின்றுபோனார். மகளின் நெடிய பார்வையின் கூர்மையைக் கணப் பொழுத்துக்கு மேல் எதிர்கொள்ள முடியாமல் தம் விழிகளை அவர் தாழ்த்திக்கொண்டார். ஆனால், ராதிகா வைத்த விழியை நீக்காமல் அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். சிந்தியாவோ இருவரையும் மாற்றி மாற்றிப் பார்த்தவாறு இருந்தாள்.

தீனதயாளனுக்குத் தலை சுற்றுவது போல் இருந்தது. மிக இக்கட்டான அந்தத் தருணத்தில் தாம் என்ன பேசவேண்டும், செய்ய வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றி அவருக்கு எதுவுமே தோன்றவில்லை.

பேச வேண்டியவர் அவர்தான் என்பது போல் இரண்டு பெண்களும் மவுனம் காத்தார்கள்.

ஆனால், உதடுகளை அசைக்கவும் இயலாத நிலையில் இருந்த தீனதயாளன் தலையைக் குனிந்துகொண்டு நடந்தார். இரண்டு பெண்களும் அவரை எதுவும் கேட்கவும் இல்லை, அவர் போவதைத் தடுக்கவும் இல்லை.

அவர் போனதன் பிறகு, கதவைச் சாத்திக்கொண்டு உள்ளே வந்த சிந்தியா, “அவரு பேசினதெல்லாம் கேட்டிச்சா?” என்றாள்.

“நல்லாவே கேட்டிச்சு. அவர் வீட்டுக்குள்ள நுழைஞ்சதுமே நான் இருந்த பாத்ரூம் கதவை ரெண்டங்குலம் போலத் தொறந்து வச்சுக்கிட்டேன். அவர் பெட்ரூமை விட்டு நகரத் தொடங்கியதும்தான் கதவை மூடிக்கிட்டேன்.”

சிந்தியா நாற்காலி ஒன்றில் உட்கார்ந்துகொண்டு மவுனமாய் அழ முற்பட்டாள். ராதிகா அவளெதிரில் நின்று அவள் தோள்களை ஆதரவுடன் அழுத்தினாள்.
“கடைசியில என் மேல எவ்வளவு மோசமா சந்தேகப்பட்டுட்டாரு, பாத்தியா, ராதிகா?”

“விடுங்க. அவங்க லச்சணமே அதுதான் போல! நீங்க சட்டப்படியான மனைவியா யிருக்கையிலே எங்கம்மாவுக்குத் தாலி கட்டினாரு. அது தப்பு இல்லே! ஆனா உங்களுக்கு ஒரு ரெண்டாவது ஆள் இருந்தா, அது தப்பு! அப்படியே இருந்தாலும் கூட, உங்களைத் தட்டிக் கேக்குறதுக்கு அவருக்கு என்ன தகுதி இருக்கு? அழாதீங்க, சிந்தியா ஆண்ட்டி… நீங்க சொன்னது மாதிரி அவங்க இனமே அப்படித்தான்!”

கண்களைத் துடைத்துக்கொண்ட சிந்தியா, “அப்படியெல்லாம் கண்மூடித்தனமா ஆம்பளைங்க மேல வெறுப்பையும் அவநம்பிக்கையையும் வளத்துக்காதே, ராதிகா. எல்லாருமேவா அப்படி? நல்ல ஆம்பளைங்க எத்தினியோ பேரு இருக்காங்கம்மா!”

“போங்க, ஆண்ட்டி! எங்கப்பாவே இப்படின்னு தெரிஞ்சுட்ட பிற்பாடு, எனக்கு உலகமே வெறுத்துப் போயிடிச்சு.”

“இல்லேம்மா, ராதிகா. அப்படிப் பேசாதே. நம்ம ஹோம்ல கொஞ்ச நாளுக்கு முந்தி புதுசா ரெண்டு பொண்ணுங்க சேந்தாங்க. …” என்று தொடங்கிய சிந்தியா தயாவின் கதையை அவளுக்குக் கூறினாள். ஒருவனோடு வாழ்ந்த தயாவை, எச்சில் பழம் என்று பொதுவாக ஆண்கள் நினைப்பது போல் நினைத்து அருவருப்புக் கொண்டு நிராகரிக்காமல், காதலுக்காக மணம் புரிந்துகொண்ட சங்கரனைப் பற்றித் தெரிவித்தாள். ஆண்வெறுப்பு, பெண்வெறுப்பு இரண்டுமே தவறான எண்னணங்கள் என்று சிந்தியா அவளுக்கு எடுத்துச் சொன்னாள்.

“நாளைக்கு எவனையாச்சும் நீ கல்யாணம் கட்டினியானா, உன் அடி மனசில உறைஞ்சு போன இது மாதிரியான கணிப்பு உன் மன அமைதியைக் கெடுக்கும், ராதிகா. எப்படியும் உங்க அப்பா-அம்மா உன்னை இப்படியே விட்டு வெச்சிருப்பாங்கன்னு சொல்ல முடியாது. எப்படியாவது உன்னைக் கன்வின்ஸ் பண்ணிக் கல்யாணத்துக்கு ஒத்துக்க வெச்சுடுவாங்க ஒரு நாளு. அதுதான் நடக்கும். பெத்தவங்களை இந்த விஷயத்துல எதிர்த்துப் போராடி ஜெயிக்கிறவங்க ரெண்டொருத்தர் கூடத் தேற மாட்டாங்க, ராதிகா. … நானும் ஒரு நல்ல பையனை உனக்காகத் தேடிக் கண்டுபிடிப்பேன். அவனோட பழகிப் பாத்துட்டு நீ ஒரு முடிவுக்கு வரலாம். …”

ராதிகா பதிலேதும் சொல்லாமல் மவுனமாக அவள் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“ராதிகா! . . . ஒண்ணு சொல்லட்டுமா? உன்னோட இருக்கிறப்பல்லாம் என் மனசு பொங்குது. ரொம்ப சந்தோஷமா யிருக்கு. நீ எப்பவுமே … அதாவது உனக்குக் கல்யாணம் ஆகிற வரைக்கும் …. என்னோட இருந்துடக் கூடாதான்னு இருக்கு எனக்கு!..ஆழ்ந்து யோசிச்சா, அதுக்கு என்ன காரணம்கிறதும் புரியத்தான் செய்யுது….”

“என்ன காரணம், ஆண்ட்டி?”

“வேற என்ன? உங்கப்பா உங்கம்மாவைக் கல்யாணம் கட்டாம இருந்திருந்தா, நீ என்னோட வயித்துல பொறந்திருப்பேன்ற ஒரே காரணம்தான்!” என்று புன்னகை புரிந்த சிந்தியாவை நோக்கிப் பாய்ந்த ராதிகா அவள் கழுத்தைக் கட்டிக்கொண்டு கண் கலங்கினாள். அவளைத் தன் கைகாளல் சுற்றி இறுக்கிக்கொண்ட சிந்தியாவுக்கும் கண்ணீர் திமிறியது. அப்போது இருவர் கண்களிலும் கசிந்தது மகிழ்ச்சிக் கண்ணீராகத்தானே இருக்க முடியும்!

/ முடிந்தது /

 

 

Series Navigationதிண்ணையின் இலக்கியத் தடம் -5சீதாயணம் [3] (இரண்டாம் காட்சி)
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *