பிரயாணம்

This entry is part 12 of 31 in the series 20 அக்டோபர் 2013

பாவண்ணன்

 

பெஞ்சமின் முசே முனகும் சத்தம் கேட்டது.  ஆனால் கண்களைத் திறக்கவில்லை.  கிடத்தப்பட்ட சிலைபோல படுத்திருந்தார்.  வைத்தியர் வந்து மருந்து கொடுத்துவிட்டுச் சென்று மூன்றுமணி நேரத்துக்கும் மேல் கடந்துவிட்டது.  விரைவாகவே எழுந்துவிடுவார் என்றும் பசிக்கு ஏதாவது கேட்டால் சூடான கஞ்சித் தண்ணீர் மட்டும் தந்தால் போதும் என்றும் வைத்தியர் சொல்லியிருந்தார். சில கணங்களுக்குப் பிறகு “வீர்ப்பா வீர்ப்பா” என அவருடைய குரல் மட்டும் எழுந்தது. தரையில் உட்கார்ந்து அவருடைய பாதங்களைத் தேய்த்து சூடு உண்டாக்கியபடி இருந்த வீரப்பன் சட்டென்று துள்ளியெழுந்து முசேயின் முகத்தைப் பார்த்தான்.  அக்கணமே அவர் அசைவற்ற ஆழத்துக்குப் போய்விட்டார். காதில் விழுந்த அவருடைய குரல் கனவா அல்லது நனவா என்று தடுமாறியது அவன் மனம்.  மெதுவாக “முசே முசே” என்று இரண்டு மூன்று முறை அழைத்தான்.  அவர் படுத்திருந்த கோலத்தில் துளிகூட மாற்றமில்லை.

பாலேடு நிறத்தைக் கொண்ட அவர் உடல் நலிவின் காரணமாக மேலும் வெளுத்துப் போயிருந்தது.  மூன்று நாட்களாக மழிக்கப்படாத முடி கன்னமெங்கும் படர்ந்திருந்தது. அடிப்பகுதி பருத்து செதுக்கப்பட்டதுபோல காணப்பட்ட முசேயின் மூக்கையே வெகுநேரம் பார்த்துக்கொண்டு நின்றான் வீரப்பன்.. மூச்சு சீரான அளவில் தன்னிச்சையாக உட்செல்வதும் வெளியேறுவதுமாக இருந்தது.  அறையின் திரைச்சீலையைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தபடி மதாம் மரியா “கண் தெறந்தாரா வீர்ப்பா?” என்று கேட்டாள். “இல்ல மதாம்” என்றபடி முசேயின் காலடியில் உட்கார்ந்து பாதத்தை அழுத்தித் தேய்க்கத் தொடங்கினான்.

மதாம் நிற்கவே சிரமப்பட்டதுபோல ஒரு நாற்காலியை இழுத்து முசேயின் கட்டிலருகில் போட்டு உட்கார்ந்தாள் களைப்பாலும் துக்கத்தாலும் அவள் முகத்தில் சோர்வு அடர்ந்திருந்தது. ஜென்னியும் எலிசாவும் அடுத்தடுத்து அறைக்குள் வந்து அவளருகே நின்றார்கள். திட்டமிட்டபடியே காரியங்கள் நடந்திருந்தால் கடந்த மாதத்திலேயே பிரான்ஸ்க்குக் கிளம்பிய கப்பலில் அவர்களுடைய பிரயாணம் தொடங்கியிருக்கும். பிரான்ஸ்க்குப் போனபிறகுதான் பெண்களுக்குத் திருமண ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார் முசே. ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த மண்ணைப் பார்க்கச் செல்லும் ஆசையில் அவர் மனம் தத்தளித்தபடி இருந்தது.

வேலை பார்த்தது போதும் என்று எழுதிக் கொடுத்துவிட்டு முசே பிரான்ஸ்க்குக் கிளம்புகிறார் என்ற தகவல் பரவியதும் தினமும் ஊர்க்காரர்கள் அவரைப் பார்க்க வந்தபடி இருந்தார்கள். எல்லாரோடும் முசே நேரத்தைச் செலவழிக்கவேண்டியிருந்தது. அவர்களுடைய வற்புறுத்தலுக்குக் கட்டுப்பட்டு  விருந்துகளுக்குச் செல்வதையும் தவிர்க்க இயலவில்லை. செல்வந்தர்கள், உயர் அதிகாரிகள், அலுவலக ஊழியர்கள், நண்பர்கள், வியாபாரிகள் என எல்லாருக்கும் நேரமும் காலமும் ஒதுக்கித் தரவேண்டியிருந்தது.  மூன்று முறைகள் கப்பலுக்கு பயணச்சீட்டுகளைப் பதிவு செய்துவிட்டு இறுதி நேரத்தில் ரத்து செய்யும்படி நேர்ந்தது. இந்த முறை உறுதி என்ற எண்ணத்தில் பொருள்களையெல்லாம் மூட்டையாகக் கட்டி வைக்கத் தொடங்கிய நேரத்தில் தேவாலயப் பாதிரியார் தனிப்பட்ட வகையில் அவருக்கு ஒரு விருந்தளிக்க விரும்புவதாகச் சொன்னார். முசேயால் அந்தக் கோரிக்கையைத் தட்டவே முடியவில்லை.  அந்தத் தேவாலயத்தின் முகப்பில் தொங்கும் மிகப்பெரிய கடிகாரம், இரண்டு ஆள் உயரத்துக்கும் கூடுதலான மரக்கதவுகள், அழகான வேலைப்பாடுகள் மிக்க கண்ணாடிக் கதவுகள் எல்லாமே முசேயின் ஏற்பாட்டால் வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்டவை.  முசே தேவாலயத்துக்குச் சென்றிருந்த நேரத்தில் அவருக்காகச் சிறப்பு வழிபாடு நடந்தது.  மண்டியிட்டு பிரார்த்தனை செய்த பலருடைய கண்களில் நீர்வழிந்தது. விம்மும் குரலில் அவர்கள் முசேயை நெருங்கி கைகூப்பி வணங்கி விடை கொடுத்தார்கள். பாதிரியார் அனைவரையும் அமைதிப்படுத்தி அனுப்பிவிட்டு விருந்தறைக்கு முசேயையும் முசேயின் குடும்பத்தாரையும் அழைத்துச் சென்றார்.

விருந்து முடிந்த மூன்றாவது நாள் புறப்படுகிற கப்பலில் கிளம்பிவிடுவதுதான் முசேயின் திட்டம். அவசியமான ஒருசில பொருட்களையும் இந்த ஊரின் நினைவுகளுக்கு அடையாளமாக சில பொருட்களையும் தவிர எதையும் எடுக்கவேண்டாம் என்று முசே மதாமிடம் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். அவற்றைமட்டும் மதாம் பார்த்துப்பார்த்து எடுத்துக்கொடுத்தாள். வீரப்பனும் குதிரைவண்டிக்காரன் பன்னீரும் பெட்டிக்குள் வைத்து அடுக்ககினார்கள்.  சாயங்காலம் வீட்டுக்குத் திரும்பும் முசே அந்தக் குவியலிலிருந்து பெரும்பாலானவற்றை விலக்கிவைத்தார். இப்படியே ஒவ்வொரு நாளும் தொடர்ந்தது

எல்லப்பிள்ளைச்சாவடி, வில்லியனூர், மூலக்குளம் பகுதிகளிலிருந்து ஒவ்வொரு நாளும் மக்கள் கூட்டம்கூட்டமாக வந்தார்கள். பலரும் கோவணமும் அரைவேட்டியும் மட்டுமே அணிந்தவர்கள்.  விவசாயிகள். கூலிக்காரர்கள். ஏழைகள். அதிகாலையிலேயே வந்து முசேயைச் சந்திப்பதற்காக வந்து வீட்டின் எதிரில் காத்திருந்தார்கள். தோள்களிலும் இடுப்பிலும் கூடைகூடையாக மாம்பழங்கள், பலாப்பழங்கள், வாழைத்தார்கள் என சுமந்து வந்திர்ருந்தார்கள். முசே வெளியே வந்து எல்லாருக்கும் நன்றி சொன்னார். வீணாக்காமல் எல்லாவற்றையும் திருப்பி எடுத்துச் செல்லும்படி எல்லாரிடமும் மன்றாடிக் கேட்டுக்கொண்டார். அவர்களில் பலரும் சட்டென்று அவருடைய காலில் விழுந்து வணங்கினார்கள்.  ”ஐயா, எங்க சாமி, ஒங்களமாதிரி யாரு இருப்பா இனிமே எங்களுக்கு?” என சொல்லும்போதே அவர்கள் கண்களில் கண்ணீர் தேங்கியது. பலரும் குவித்த கைகளை எடுக்கவே இல்லை.  நிலங்களெல்லாம் மழை பொய்த்துப்போய் தரிசாகக்  கிடந்த இரண்டாண்டுகளும் ஓயாத மழையால் வெள்ளத்தில் விளைநிலங்கள் மூழ்கிக்கிடந்த இரண்டு ஆண்டுகளும் வரிவிலக்கு அளிக்கவேண்டும் என பிரான்ஸ்க்கு எழுதி அனுமதி பெற்றுத் தந்த முசேயை யாராலும் மறக்கமுடியாது.  வறட்சிக் காலத்தில் வேலை வாய்ப்பாக ஊருக்கொரு குளமோ, கிணறோ, ஏரியோ வெட்டுவதற்கான உத்தரவையும் நிதி ஆதாரத்தையும் வாங்கித் தந்தவர் முசே.

முசே அவர்களை நெருங்கி தோளைத் தொட்டு, ”புதுசா  வந்திருப்பவரும் உங்கள நல்லபடியா பாத்துக்குவாங்க….. கவலப்படாதிங்க” என்று சொன்னார். தொட்டுப் பேசாமலும் சிரிக்காமலும் முசே ஒருநாளும் பேச்சைத் தொடங்குவதே இல்லை. புதுச்சேரிக்கு வந்த அதிகாரிகளில் யாரும் அப்படி இதற்கு முன்பு இருந்ததில்லை.  அவர்கள் பார்வையில் படாதபடிதான் எச்சரிக்கையாக நடக்கவேண்டும்.  தப்பித்தவறி பட்டுவிட்டால் இழுத்துவந்து அடிப்பார்கள். இவ்வளவுதான் வரி என்ற கணக்கெல்லாம் இல்லை. ஏட்டில் எழுதுவது ஒன்று. வாங்கி வண்டியில் ஏற்றுவது ஒன்று. ஏற்றிச் சென்று சந்தையில் கொடுத்து பணமாக்கி அதிகாரியின் வீட்டில் சேர்த்துவிடுவார் தலையாரி.  கணக்குப்பிள்ளை, தலையாரி, அதிகாரி மூன்று பேர்களும் சேர்ந்து ஊர்மக்களை ஆடுமாடுகள்போல நடத்தினார்கள். தினமும் சாயங்காலம் ஏதாவது ஒரு மரத்தடிப் பஞ்சாயத்தில் யாராவது நாலு பேருக்கு சாட்டையடி விழும். யாராவது இரண்டு பேர்களுக்கு சாணிப்பால் கொடுக்கப்படும். இன்னும் இரண்டு பேரை ஊர்நடுவில் செக்கு இழுக்கவைப்பார்கள். வெளிக்காட்ட முடியாத கோபத்தை இரவு நேரத்தில் கள்ளுக் குடித்துவிட்டு வந்து பெண்களிடமும் குழந்தைகளிடமும் காட்டுவார்கள் ஆண்கள்.  போதை வெறியில் நிதானமில்லாமல் தன் குடிசைக்குத் தானே நெருப்பு வைத்து அழித்த ஆட்களும் இருந்தார்கள். முசேயின் வருகைக்குப் பிறகுதான் எல்லாமே மாறியது.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தேவாலயத்துக்கு வந்திருந்த குதிரைவண்டி நகரத்துக்குத் திரும்பிச் செல்லாமல் மூலக்குளத்தின் பக்கமாகத் திரும்பி வருவதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தான் வீரப்பன்.  அப்போது வயதில் அவன் சிறுவன். குதிரையின் கழுத்துமணியும் வண்டிச் சக்கரங்களில் கட்டப்பட்டிருந்த மணிகளும் சேர்ந்து எழுப்பிய ஓசை நெருங்கநெருங்க அவன் உடலில் ரத்த ஓட்டத்தின் வேகம் பெருகியது. ஓட்டமாக ஓடி வயல்வெளிகளிலும் தோட்டத்திலும் வேலை செய்துகொண்டிருந்தவர்களுக்குத் தகவல் கொடுத்தான். பெரியவர்களும் பெண்களும் குழந்தைகளும் அச்சம் படிந்த முகத்தோடு தென்னந்தோப்பின் வாசலில் கும்பலாய்ச் சேர்ந்து தரையில் மண்டியிட்டார்கள். என்ன நடக்குமோ என்று அவர்கள் உள்ளம் நடுங்கியது. விதியை எண்ணி அவர்கள் கண்களில் தானாக கண்ணீர் வழிந்தது.  கால் உடைந்து மண்டியிட முடியாத ஒருவன் தரையில் உட்கார்ந்து ஓவென்று அழுதான். காணிக்கையைக் கொடுப்பதற்கு இளநீர்க்குலையோடு வீரப்பன் கண்பார்வை இல்லாத தன் தந்தைக்கு அருகில் மண்டியிட்டிருந்தான்.  கும்பலுக்கு அருகில் வந்து நின்ற வண்டியிலிருந்து இறங்கிய முசே எல்லாரையும் பார்த்து “ என்ன, எல்லாரும் ப்ரேயர் பண்றிங்களா?” என்று பிரெஞ்சு மொழியில் திருப்பித்திருப்பிக் கேட்டார். யாரும் பதில் சொல்லாமல் பீதியில் விழித்தபடி முசேயை வைத்த கண் வாங்காமல் பார்த்தார்கள். ஏதோ விபரீதம் என்று மட்டும் முசேக்குப் புரிந்தது. என்ன என்பதுமட்டும் தெரியவில்லை. மண்டியிட்டிருந்த பார்வையில்லாதவர் அருகில் சென்று அவரைத் தொட்டுத்தூக்கி நிற்கவைத்து “உங்கள் பெயர் என்ன? யாருக்காக இங்கே காத்திருக்கிறீங்க?” என்று மீண்டும் பிரெஞ்சில் கேட்டார். உதடுகளுக்கிடையே நாக்கை மடித்து காற்றை வீசியதுபோல வழவழவென வந்து விழுந்த பிரெஞ்சு வார்த்தைகள் எதுவுமே அவர்களுக்குப் புரியவில்லை. கேட்ட கேள்வியையே மீண்டும் கேட்டார் முசே. திடீரென அச்சம் கவிந்தவராக ஓவென்று கதறியபடி முசேயின் காலைத் தொட்டு வணங்கினார். விஷயம் புரியாமலேயே வீரப்பனும் தன் அப்பாவோடு சேர்ந்து விழுந்தான்.  முசே அவசரமாக அவர்களைத் தூக்கி நிறுத்தி கண்களைத் துடைத்தார்.  அந்தத் தொடுகையால் உறைந்துபோய் நின்றான் வீரப்பன். முசே உடனே சைகை மொழியால் கேள்விகள் கேட்கத் தொடங்கினார்.  அது நல்ல பலனை அளித்தது. மக்கள் கண்ஜாடையாலும் சைகைகளாலும் விவரங்களைச் சொல்லத் தொடங்கினார்கள். தோள்பட்டைக் காயங்களையும் முதுகில் விழுந்திருக்கும் சாட்டையடித் தழும்புகளையும் திருப்பி நின்று காட்டினார்கள். முசே திகைத்து நின்றார். அவர் கண்கள் கலங்கின.  சைகையாலேயே மாறிமாறி இருவரும் பேசிக் கொண்டார்கள். முசே வீரப்பன் தலையை செல்லமாக ஒரு அமுக்கு அமுக்கித் தட்டினார். அவன் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கருப்புக் கயிற்றையும் தாயத்தையும் தொட்டு “என்ன இது?” என்று கேட்டுவிட்டு அவன் கன்னத்தைத் தட்டினார். யாருக்குமே முசேயின் செய்கை நம்பிக்கை  அளிப்பதாக இல்லை. ஏதோ ஆபத்து ஒளிந்திருப்பதாக நினைத்தார்கள்.  முசே  அமைதியாகத் திரும்பி வண்டியை நோக்கி நடந்தார். கூடியிருந்த அனைவரும் கொண்டு வந்த பொருட்களை வண்டியில் ஏற்றுவதற்காக நெருங்கினார்கள். வேகமாகத் திரும்பிப் பார்த்த முசே அவர்களை அவசரமாகத் தடுத்து நிறுத்தி அனுப்பிவைத்தார்.  அவர் வண்டி திரும்பிச் செல்வதை நம்ப முடியாமல் பார்த்தபடி நின்றிருந்த மக்கள் நிதானமாக மூச்சு வாங்கி ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டார்கள். “நல்லவரு இல்ல?” என்றான் ஒருவன்.

”எந்தப் புத்துல எந்தப் பாம்பு இருக்குமோ, யாருக்குத் தெரியும்?”

”இன்னிக்கு இரை எடுக்காம போயிட்டுச்சிங்கறதுக்காக பாம்ப எடுத்து மடியில வச்சி கொஞ்ச முடியுமா? பேசாம போங்கப்பா”

”கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளுக்குதான்னு சொல்றமாதிரி இவரு வேஷம் எத்தன நாளுக்கோ யாருக்குத் தெரியும்?”

ஆளாளுக்கு மாற்றி மாற்றிப் பேசிக்கொண்டார்கள்.  வண்டியின் மணியோசை மறைந்த பிறகுகூட அது வெகுநேரம் நீடித்திருந்தது.  அன்றைக்கோ அலல்து மறுநாளோ தலையாரியோ அல்லது கணக்குப்பிள்ளையோ வந்து வட்டியும் முதலுமாகப் பிடுங்கிச் செல்லக்கூடும் என்று அச்சத்தோடு எதிர்பார்த்திருந்தார்கள்.  அவர்கள் அந்தப்பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை.  அவர்களையெல்லாம் கச்சேரியில் வைத்து முசே கேள்விமேல் கேள்வி கேட்டுத் திணறவைத்தார் என்றும் பதிவேடுகளைப் புரட்டிப்புரட்டி அவர் கேட்ட கேள்விக்கு விடைசொல்ல முடியாமல் காலில் விழுந்து கதறி அழுது கையெடுத்துக் கும்பிட்டார்கள் என்றும் கச்சேரியின் பின்பக்கத்திலிருந்து மலக்கூடை சுமந்து திரும்பும் சிவப்பி வந்து எல்லாரிடமும் குசுகுசுவென்று செய்தி பரப்பினாள்.

அடுத்த நாள் காலையில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தேவாலயத்தின் வாசலில் குதிரைவண்டியின் வருகைக்காகக் காத்திருந்தான் வீரப்பன்.  பகல்வேளை வரைக்கும் கால்கடுக்க மதிலோரம் இருந்த பூவரச மர நிழலில் நின்றிருந்தான். வரவில்லை.  அவர் வரக்கூடும் என்று அவனுடைய ஆழ்மனம் நம்பியது. அது பொய்த்துவிடக்கூடாது என்று அவன் நினைத்தான்.  ஆனால் அந்த வண்டி வரவில்லை.  மறுநாள், மறுநாள் என ஐந்தாறு நாள்கள் தொடர்ந்து வந்து பூவரச மர நிழலில் காத்திருந்து ஏமாந்து திரும்பினான்.  எட்டாவது நாள் கூட அவன் அங்கே சென்றது சிறிது அவநம்பிக்கையோடுதான்.  அதனாலேயே வழக்கத்தைவிட தாமதமாகச் சென்றான்.  வழியில் தென்னந்தோப்பின் மறுபக்கம் கீதாரிகள் புதுசாக கிடை போட்டிருந்தார்கள். அங்கே வேடிக்கை பார்த்ததில் பொழுதுபோய்விட்டது.  தேவாலயத்தை நெருங்கியபோதுதான்  வாசலில் அவன் இத்தனை நாளும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த குதிரை வண்டி நின்றிருப்பதைப் பார்த்தான்.  அவன் தெய்வத்தையே பார்த்துவிட்டதுபோல அந்த வண்டியையே மரத்தடியிலிருந்து கும்பிட்டான்.  அவன் நெஞ்சம் காரணமில்லாமல் தளும்பியது.  ஒருமணி நேரத்துக்குப் பிறகு ஆலயத்திலிருந்து வெளிப்பட்டார் முசே.  அவருடைய செம்பழுப்பு முடி காற்றில் அலைபாய்ந்தது.  தட்டையான முகம்.  கோட் சூட் போட்டிருந்தார்.  கூர்மையான மூக்கு விசித்திரமாக இருந்தது.  அவர் வண்டியை நோக்கி வரவர தனக்குள் ஒரு வேகம் பொங்கியெழுவதை உணர்ந்தான் வீரப்பன்.  சட்டென ஓடி அவர் பார்வையில் படும்படி நின்று கைகுவித்தான். தன்னிச்சையாக அவன் உடல் நடுங்கியது.  இடுப்புத்துண்டு அவிழ்ந்து காற்றில் பறந்து அசிங்கமாகிவிடுமோ என்று பதறினான். முசே அவனைப் பார்த்துப் புன்னகை புரிந்தார்.  மெதுவாக உதட்டைப் பிரித்து ”போனவாரம் தென்னந்தோப்புல பாத்த பையந்தான நீ?” என்று கேட்டார். பிரெஞ்சு தெரியாமல் திருதிருவென்று விழித்தான் வீரப்பன்.  பேச்சு வரவில்லை.  வாயை யாரோ அடைத்துவிட்டதுபோல இருந்தது.  முசே அவனை நெருங்கி ”உன் பெயர் என்ன?” என்று கேட்டார். பதில்சொல்லத் தெரியாமல் தலையைத் தொங்கப் போட்டு தலையைமட்டும் வேகவேகமாக ஆட்டினான் அவன். முசே அவனைப் பார்த்து “என்னோடு வரியா?” என்று சைகையாலேயே கேட்டார்.  அது அவனுக்குப் புரிந்தது. அடுத்த கணமே ஓடிப் போய் வண்டியோட்டிக்கு அருகில் உட்கார்ந்துகொண்டான். முசே அவன் முதுகில் செல்லமாகத் தட்டினார். அன்று மாலை அவன் அணிந்துகொள்ள நல்ல துணிமணிக்கு ஏற்பாடுகள் செய்தார் முசே.

முப்பது ஆண்டுகளில் முசேயைவிட்டு அவன் நீங்கியதே இல்லை. தொடக்கத்தில் முசே குடியிருந்த இடமே வேறு.  உண்மையில் அது ஒரு பெரிய கூடம் மட்டுமே. அவ்வளவுதான்.  அதையே தடுப்புத் துணிகளால் மறைத்துமறைத்து குளிக்கவும் உணவு உண்ணவும் உறங்கவுமான இடங்கள் உருவாக்கப் பட்டிருந்தன.  முசே அதற்குப் பிறகு மூன்று முறை குடியிருப்பை மாற்றிவிட்டார். மதாம் மேரியைத் திருமணம் செய்துகொண்டபோது ஒருமுறை. முதல் பெண் ஜென்னி பிறந்தபோது இன்னொருமுறை. இரண்டாவதாக  எலிசா பிறந்தபிறகு மற்றொருமுறை. அவர்களோடு பேசிப்பேசி அவன் நாக்கிலும் பிரெஞ்சுச் சொற்கள் புரளத்தொடங்கின.

பார்த்துப்பார்த்து வாங்கியவற்றையெல்லாம் முசே ஒவ்வொன்றாக தனக்கு நெருக்கமானவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கத் தொடங்கினார்.  சிலருக்குப் பாத்திரங்கள். சிலருக்கு அணிகலன்கள். பிறகு ஆடைகள். மரச்சாமன்கள்.  சமையல் பாத்திரங்கள். மேசை. நாற்காலிகள்.  பால் தேவைக்காக தோட்டத்தில் இரண்டு பசுக்கள் இருந்தன. பிரான்ஸ்க்குப் புறப்பட்டுச் சென்றபிறகு அவற்றை ஓட்டிக்கொண்டு போகும்படி வீரப்பனிடம் சொல்லிவைத்திருந்தார்.  கறிக்காக வளர்க்கப்பட்ட முயல்களையும் வான்கோழிகளையும் பிரியப்படுகிறவர்களுக்குக் கொடுத்துவிடும்படி சொல்லிவைத்திருந்தார்.

”பன்னீர், உனக்கு என்ன வேணும் கேள்? சட்டை துணி தரட்டுமா?” வாசலில் வண்டியைக் கழுவிக்கொண்டிருந்த பன்னீரிடம் முசே கேட்டார்.

”ஒங்க அன்பே போதும் முசே, வேற ஒன்னும் வேணாம்” திரும்பி கும்பிட்டான் பன்னீர்.

”அது எப்படி பன்னீர்? ஒனக்கும் ஏதாவது தரணும் நான். சொல்லு, என்ன வேணும்?” குதிரைக்காக கொண்டுவரப்பட்டிருந்த புல்லுக்கட்டிலிருந்து ஒரு பச்சைப்புல்லை உருவி விளையாட்டாகச் சுழற்றினார் முசே. சில கணங்கள் அமைதியாகக் கழிந்தன. சட்டென பன்னீரின் பக்கம் திரும்பிய முசே ”பன்னீர், எனக்காக ஒரு புல் மெத்தப்படுக்கை தயார் செஞ்சி கொடுத்தாயே, நினைவிருக்குதா?” என்று கேட்டுவிட்டு அவன் தோளைத் தொட்டு தன்னை நோக்கித் திருப்பினார்.  இருவருடைய கண்களும் சில கணங்கள் நேருக்கு நேர் பார்த்துக்கொண்டன. “அதெல்லாம் முசேக்கு இன்னனமும் ஞாபகமிருக்குதா?” என்று ஆச்சரியத்தோடு கேட்டான் அவன்.

“எப்படி மறக்க முடியும் பன்னீர்?  நான் அன்னிக்கு காலையிலதான் எறங்கினேன். எனக்கு ஒரே ஒரு அறைதான் அப்ப ஒதுக்கியிருந்தாங்க. வெறும் அறை. வேற எதுவுமே இல்ல. இந்த இடத்துல எப்படி தூங்கறதுன்னு திகச்சி நின்னுட்டேன். ஒருமணி நேரத்துல அங்க ஓடி இங்க ஓடி பலகை , அது இதுன்னு ஒன்னுமேல ஒன்னு போட்டு புல் பரப்பி போர்வையப் பரப்பி ஒரு மெத்தயயே  நீ உண்டாக்கித் தந்ததயெல்லாம் எப்படி மறக்க முடியும்? எல்லாமே நேத்துதான் நடந்தமாதிரி இருக்குது. முப்பது வருஷம் ஓடிப் போச்சில்ல?”

வண்டியைக் கழுவிய தண்ணீரை ஓரமாக செடிகளுக்காக உருவாக்கப்பட்ட வாய்க்காலில் ஊற்றிவிட்டுத் திரும்பினான் பன்னீர்.

”பன்னீர்,  இந்த வண்டி, இந்தக் குதிரை ரெண்டயும் எடுத்துக்கோ. நீ வேற எந்த வேலயயும் செய்யவேணாம். வண்டியோட்டி பொழச்சிக்கலாம்”  நம்ப முடியாமல் சந்தோஷத்தில் திகைத்து நின்றவன் தோளைத் தட்டி முசே புன்னகைத்தார்.

அசைவில்லாமல் படுத்திருக்கும் முசேயைப் பார்க்கப்பார்க்க அவரைப்பற்றிய நினைவுகள் பொங்கி வருவதை வீரப்பனால் தடுக்கவே முடியவில்லை. ”வீர்ப்பா” என்று பெயரில் அழுத்தம் கொடுத்து அழைக்கும் அந்தக் குரல் நெஞ்சில் ஒலித்தபடி இருந்தது. அந்த அழுத்தத்தில் அவருடைய பிரியத்தை உணர்ந்தான் அவன். தொடக்கத்தில் ஒரு சொல்கூட தமிழ் தெரியாமல் பிரெஞ்சுமட்டும் பேசிய முசே கால ஓட்டத்தில் தமிழை ஆசையோடு கற்றுக்கொண்டு பேச ஆரம்பித்ததெல்லாம் அதிசயமான கதை.

இடைவிடாமல் இயேசுவின் பெயரை முணுமுணுத்தபடி முசேயின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த மதாமைப் பார்க்கும்போது பாவமாக இருந்தது. ”வாங்க மம்மா” என்றபடி துவண்டுபோயிருந்த மதாமின் தோளைத் தொட்டு எழுப்பினார்கள் பெண்கள். “மம்மா ஏன் குழந்தயைப் போல மாறிட்டிங்க? தைரியமா இருக்கணும்” என்றபடி அவள் தலையைக் கோதிவிட்டாள் ஜென்னி. அவள் தலையைத் தன் தோளோடு சாய்த்துக் கொன்டாள். வீரப்பன் எழுந்து நின்று அவர்களுக்கு வழிவிட்டான். “நீங்க போஙக மதாம். ஐயா கண் முழிச்சதுமே உங்கள கூப்பிடறேன்” என்று சொன்னான்.  மரியா முசேயின் கட்டிலை நெருங்கி நெற்றியில் தொட்டுப் பார்த்துவிட்டுச் சென்றாள். மறுகணமே முசேயின் அறையில் அமைதி சூழ்ந்தது. திகிலும் பரபரப்புமாக அவன் மனம் தவியாய்த்தவித்தது.

பாதிரியாரின் விருந்துக்குச் சென்று திரும்பிய மறுநாள் முசே வில்லியனூர் தேவாலயத்துக்கும் அல்லிக்குளத்துக்கும் சென்றுவர ஆசைப்பட்டார். காலை உணவுக்குப் பிறகு வீரப்பனை அழைத்து ”வண்டி தயாரா?” என்று கேட்டார். வீரப்பன் தோட்டத்தை ஒட்டி சவண்டல் மரங்களும் பூவரசமரங்களும் நின்றிருக்கும் தொழுவத்தைக் கடந்துபோய் குதிரை லாயத்துக்கு அருகே பன்னீரைத் தேடினான். காணவில்லை. சாணக்குவியலை அப்புறப்படுத்திவிட்டு பெருக்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் விசாரித்தான். காலையிலிருந்தே அவனைப் பார்க்கவில்லை என்று சொன்னாள் அவள். பன்னீரின் குடிசைப் பகுதியிலிருந்து வேலைக்கு வருகிறவர்களைத் தேடிப் போய் விசாரித்தான். ஒருவன் அவனுக்குக் காய்ச்சல் என்றான். “நேத்து ராத்திரி அவன் பக்கத்து ஊட்டுல ரெண்டு மூணு சாவாய்டிச்சி. காலரா வந்து பத்து நாளா மனுசங்கள பாடா படுத்துது. பொட்டுபொட்டுன்னு போயிட்டே இருக்காங்க. இவந்தான் கூடமாட சுடுகாட்டுல ஒத்தாசயா இருந்தான். காலயில பாத்தா வாசல்ல ஒக்காந்து வாந்தி எடுத்துகினிருந்தான். அவனயும் காயலா புடிச்சிகிச்சி” என்றான் இன்னொருவன். ”அது என்ன காயலாவோ தெரியல. வெஷ ஊசி போட்டமாதிரி ஒரே நாள்ல ஆள கீழ தள்ளிடுது” என்று சொல்லிவிட்டு நடுங்கினாள் ஒருத்தி.

முசே அதற்குள் வெளியே வந்துவிட்டார். ”அவன் இன்னுமும் வரலை முசே. காயலான்னு சொல்றாங்க. காலராவாம். ஒன்னும் புரியலை” என்றான் வீர்ப்பன்.

”நேத்து நல்லாதான இருந்தான்” குழப்பத்தோடு அவனைப் பார்த்தார் முசே.

”அந்தப் பக்கமெல்லாம் காலராவா இருக்குது முசே. தெனமும் நெறயா பேரு செத்துகினே இருக்காங்களாம்”

”அவன பாக்கணுமே. ஊருக்கு கெளம்பற நேரத்துல் ஏன் இப்பிடி ஆவுது? ஒன்னு செய்யலாமா? வில்லியனூரு தேவாலயத்துக்கு போயிட்டு அப்படியே அவனயும் பார்த்துட்டு வரலாமா?”

“சரி முசே, நான் வண்டிய எடுத்துகினு வரேன் “ வீரப்பன் குதிரையை அவிழ்க்கச் சென்றான்.

முசே வேகமாக நடந்து வாசலுக்குச் சென்றார். குதிரையை வண்டியில் பூட்டும்போது வீரப்பனை நெருங்கி வந்த வேலைக்காரர்கள் காதோடு அடங்கிய குரலில் எதையோ சொன்னார்கள். வீரப்பன்  சரிசரி என்று தலையாட்டினான். வண்டிக்குள் விரிப்பை  உதறிப் போட்டு மூலைகளை அழகாக மடித்துவிட்டான்.

வண்டியோடு வாசலுக்கு அருகே வந்தபோது முசே “என்ன விஷயம்?” என்று கேட்டார். வீரப்பன் மெதுவாக “என்ன முசே?” என்று திருப்பிக் கேட்டான். “அவுங்கள்ளாம் என்னமோ கிசுகிசுன்னு சொல்றாங்களே, அதான்” என்றார் முசே. வீரப்பன் அவர் கண்களை நேருக்கு நேர் பார்த்தான். பிறகு மெதுவாக “ காலராவா இருக்கற இடம். போவ வேணாங்கிறாங்க முசே” என்றான். முசே ஒன்றும் பேசாமல் அவனையே ஒரு கணம் பார்த்தார்.

”அப்பறமா அவனப் போயி பாத்துக்கலாம்ன்னு சொல்றாங்க”

”எப்போது?

”நிலமை சரியானதுக்கப்பறமா?

“அது எப்படி முடியும் வீரப்பா? இன்னும் ரெண்டு நாள்ல கப்பல் ஏறணுமே. புதுச்சேரிக்கு இனிமே நான் வரக்கூடிய வாய்ப்பே இல்லயே. பன்னீரப் பாக்காம போனா என் மனசாட்சி என்ன குத்தி எடுத்துடும்”

“சூழ்நிலை சரியில்லாம இருக்கறதாலதான்….””

“எதுவா இருந்தா என்ன வீர்ப்பா? நம்ம பன்னீர நாம பாக்காம வேற யாரு போயி பாப்பாங்க? இந்த வேலைக்கு வந்த முதல் நாள்லேருந்து அவன் எனக்கு பழக்கம். ஒங்கிட்ட சொல்லியிருக்கேன் இல்ல. துறைமுகத்துல நான் எறங்கினப்ப என்னுடைய பெட்டிய அவந்தான் எடுத்து வந்தான். இந்த மண்ணுல நான் பாத்து பேசன முதல் ஆள். அவன் எனக்கு ரொம்ப முக்கியம். என்ன ஆனாலும் சரி வீர்ப்பா. அவன நாம பாத்துட்டு வந்துரலாம்?”

வண்டிக்குள் முசே ஏறி உட்கார்ந்தார்.  வில்லியனூர்ச் சாலையில் வண்டி பறந்தது. வழிநெடுக பூவரச மரங்களும் புளியமரங்களும் இருபுறங்களிலும் அடர்ந்திருந்தன. பச்சைப்பசேலென வெற்றிலைக்கொடிகள் படர்ந்த தோட்டம். சங்கராபரணி ஆற்றிலிருந்து திருப்பிவிடப்பட்ட தண்ணீர் நிரம்பி ஓடும் கால்வாய் ஊர்முழுக்க கிளைகளாகப் பிரிந்து ஓடின.  காற்று குளுகுளுவென வீசியது. அவை அனைத்தும் தன் முயற்சியால் விளைந்தவை என்று நினைத்தபோது முசேயின் மனம் மகிழ்ச்சியில் விம்மியது.

தேவாலயத்துக்கு வந்து சேர்ந்ததே தெரியவில்லை.  பாலகனான ஏசுவை அணைத்த அன்னை மேரியன்னையின் தோற்றம் நெஞ்சை நெகிழவைத்தது.  குழந்தையை அணைக்கும் அன்னையைப்போல இந்த உலகை அணைத்துக்கொள்ளும் உத்வேகத்தை நெஞ்சில் பொங்கவைக்கும் அத்தோற்றத்தால் மனம் விம்முவதை உணர்ந்தார் முசே. அவர் கண்கள் தளும்பின. பிரார்த்தனையில் அரைமணி நேரம் கழிந்ததே தெரியவில்லை. வெளியே வந்து தனக்குப் பிடித்தமான அல்லிக்குளத்தருகே அரைமணி நேரம் வேடிக்கை பார்த்தபடி உலவினார்.

பன்னீரின் வீடு இருக்கும் திசையில் வண்டி திரும்பியது.  வெற்றிலைத் தோட்டத்தின் மூலையில் திரும்பும்போது ஒரு சவ ஊர்வலம் சென்றது.  நடுத்தெருவில் மார்பில் அறைந்தபடி சத்தமாக பெண்கள் அழுதார்கள்.  வண்டி அவர்களைக் கடந்து சென்று பன்னீரின் வீட்டின்முன் நின்றது. வீரப்பன் முதலில் இறங்கி அவன் குடிசைக்குள் ஓடினான்.  பன்னீரின் தாய் மட்டும் அங்கே இருந்தாள். தரையில் விரிக்கப்பட்டிருந்த சாக்கின்மீது பன்னீர் அசைவில்லாமல் படுத்திருந்தான். ”முசே வந்திருக்காரு, முசே வந்திருக்காரு” என்றான் வீரப்பன். அவன் சொல்வதை உள்வாங்கிக்கொள்ள இயலாமல் குழப்பத்தில் அவள் தடுமாறிய கணத்தில் முசே குனிந்து குடிசைக்குள் நுழைந்துவிட்டார்.  வெளிச்சத்திலிருந்து உள்ளே வந்ததும் சில கணங்கள் இருள் தடுமாறவைத்தது.  சிறிது நேரத்துக்குப் பிறகுதான் அச்சூழலுக்குக் கண்கள்  பழகின.  வெட்டுப்பட்டு விழுந்த ஒரு கிளைபோல அசைவில்லாமல் படுத்திருக்கும் பன்னீரைப் பார்த்து ”பன்னீர், பன்னீர்” என்று அழைத்தார்.  பிறகு தோளைத் தொட்டு அசைத்தார். குனிந்து மண்டியிட்டு அவனருகே பிரார்த்தனையில் மூழ்கினார் முசே. அவர் இதயத்தில் அருள் சுரந்த அன்னையின் முகம் ஒளிர்ந்தது. அன்னையே, உன் அருள் இந்த ஏழைக்கும் கிடைக்கட்டும் என்று மனமுருக இறைஞ்சினார். பிறகு பன்னீரின் நெற்றியில் விரலால் தொட்டுச் சிலுவையிட்டு எழுந்தார். பன்னீரின் தாயார் மூலையில் ஒடுங்கி தேம்பிதேம்பி அழுதபடி நின்றிருந்தார். குழப்பத்தோடு வெளியே வந்த முசே, எதுவும் பேசாமல் வண்டிக்குள் ஏறி உட்கார்ந்தார். வீடு வந்து சேரும்வரைக்கும் எதுவும் பேசவில்லை.

வீட்டையடைந்ததும் வண்டியை நிழல்பக்கமாக ஒதுக்கி நிறுத்த வீரப்பன் முனைந்தபோது “வேணாம் வீரப்பா, வண்டிய பன்னீரு வீட்டுல குடுத்துட்டு வந்துரு. இனிமே அது அங்கயே இருக்கட்டும்” என்றார் முசே. திகைப்பில் பேச்சே வராமல் அவர் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான் வீரப்பன்.

”நான் அவனுக்கு வாக்கு குடுத்திருக்கேன் வீர்ப்பா. போய் குடுத்துட்டு வா”

”நீங்கள் கப்பல் ஏறனதுக்கு பிறகு குடுக்கலாமே முசே. அதுவரைக்கும் இங்கயும் நெறய வேலைங்க இருக்குதே” பணிவுடன் முசேயைப் பார்த்துச் சொன்னான்.

“இப்பவே குடுத்டதுரலாம் வீரப்பா. ஒரு பொருள தரணும்ன்னு மனசுக்கு தோணும்போதே குடுத்துரணும். காலம் கடத்தக்கூடாது” அவன் தோளைத் தட்டிவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டார் முசே.

மதிய உணவுக்குப் பிறகு சிறிது நேரம் தூங்கினார் முசே. பொழுது சாயும் வேளையில் எதிர்பாராத விதமாக இரண்டுமுறை வாந்தியெடுத்தார். சோர்வில் அவர் உடல் நடுங்கியது. இரவுக்கு உணவே வேண்டாம் என்று மறுத்தார்.  மதாம் வற்புறுத்தி ஒரு பழத்தைமட்டும் உரித்துத் தந்தார். எப்போதும் இல்லாத வழக்கமாக அன்று இரவு தன் அப்பாவைப் பற்றி வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார்.   அப்பா வேலை பார்த்த துறைமுகம். தன் வீட்டுக்குப் பின்னால் இருந்த பைன் மரக்காடு. முதன்முதலாகச் செய்த படகுப்பயணம், தன் பள்ளித்தோழர்கள் என எல்லாவற்றையும் ஆவலாகப் பகிர்ந்துகொண்டார். “எல்லாரயும் இப்ப பார்க்கப் போறேன்னு நெனைக்கும்போது பறப்பதுபோல இருக்குது.  அப்படியே பறந்துபோய் இந்த நிமிஷமே அங்கே போய் விழுந்துவிட மாட்டோமான்னு தோணுது” என்றார். அதற்கப்புறம் முசே பேசவில்லை. இரவில் காய்ச்சலின் வேகம் திடீரென அதிகரித்தது. வைத்தியர் வந்து நாடி பிடித்துப் பார்த்துவிட்டு மருந்தைக் கொடுத்தார். உடல்சூடு தணியாமல் பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்.

அடுத்த நாள் காலையில்தான் முசே கண்திறந்தார். அவரால் புரண்டுகூட படுக்கமுடியவில்லை. வலியில் முனகினார்.  அவருக்கு அருகே உட்கார்ந்து விரல்களை ஒவ்வொன்றாக அழுத்திப் பிடித்தார் மதாம். களைப்பின் காரணமாக அவரால் பேசமுடியவில்லை. தொண்டை உலர்ந்தது. தண்ணீர் வாங்கிக் குடித்தார். மறுபடியும் விழிமூடி உறக்கத்தில் ஆழ்ந்தார்.  பயணச்சீட்டுகளை ரத்து செய்துவிட்டு குடும்பமே அவர் முன்னால் உட்கார்ந்திருந்தது.

மூன்று நாட்களாக முசேயின் உடல்நிலையில் எவ்விதமான முன்னேற்றமும் இல்லை. ஒரு கட்டை போல அசைவில்லாமல் இருக்கும் அவரைப் பார்க்கப் பார்க்க வீரப்பனின் மனபாரம் அதிகமானது. பொழுது சாயும் நேரத்தில் பாதிரியார் வந்தார்.  மதாமும் பிள்ளைகளும் அவர் முன் மண்டியிட்டு அழுதார்கள். “முசேக்காக தேவனிடம் பிரார்த்தனை செய்தேன்” என்றார். எல்லாரிடமும் வெகுநேரம் ஆதரவாகப் பேசிக் கொண்டிருந்தார்.

“கலவரப்படவேண்டாம் மதாம். தேவன் தன் பிரியத்துக்குரிய பிள்ளைகளை ஒருபோதும் கைவிட மாட்டான்” என்றபடி பெருமூச்சோடு எழுந்தார் பாதிரியார். அவரோடு சேர்ந்து மதாமும் வெளியேறினார்.

வேலைக்காரப் பெண்ணொருத்தி குடம் நிறைய ஆமணக்கு எண்ணெயை எடுத்து வீட்டில் எல்லா விளக்குகளுக்கும் ஊற்றிவிட்டுச் சென்றாள். இன்னொருத்தி வந்து திரியைத் தூண்டி ஏற்றினாள். சுடர் பிடிக்காமல் திரி புகைந்தபடியே இருந்தது. எண்ணெயைப் பிழிந்துவிட்டு திரியைச் சரியாகச் சுருட்டி கூர்மையாக்கி மீண்டும் ஏற்றினாள். சுடர் பற்றுவதுபோல ஒரு கணம் நுனி சிவந்து உடனே அணைந்தது.  அமைதி குலைந்தவளாக அவள் தன் மடியிலிருந்து புதிய திரியை எடுத்து எண்ணெயில் நனைத்து அந்த விளக்குக்குள் போட்டாள். சுடரவைக்க அவள் முயன்றபோது மீண்டும் நுனிமட்டும் சில கணங்கள் சிவந்திருந்துவிட்டு அணைந்தது. அவள் கூச்சத்தாலும் குற்ற உணர்ச்சியாலும் மன வேதனையோடு அக்கம்பக்கம் அவசரமாகப் பார்த்துவிட்டு வேகமாக இன்னொருமுறை முயற்சி செய்து பார்த்தாள். துரதிருஷ்டவசமாக அது இந்த முறையும் பற்றவில்லை. அவளையே பார்த்துக்கொண்டிருந்த வீரப்பன் மனத்திலிருந்த ஏதோ ஒன்று சரிந்து குலைந்ததுபோல இருந்தது. தன் முயற்சியைக் கைவிடாதவளாக அவள் மீண்டும் திரியை உருட்டத் தொடங்கினாள். வீரப்பன் அவளை சட்டென நிறுத்தி போய்விடுமாறு சொன்னான். அவள் அவசரமாக அவனைப் பார்த்தபடியே வெளியேறினாள்.

பாதத்தைத் தேய்ப்பதை நிறுத்திவிட்டு ஒருகணம் முசேயைப் பார்த்தான். சின்ன வயதில் “உன் பெயர் என்ன?” என்று தன்னைக் கேட்ட அவருடைய முகம் நினைவுக்கு வந்தது. அந்த முகம் ஒரு சுடர்போல அவன் நெஞ்சில் ஒளிர்ந்தது.  பிறகு அந்த ஒளி பரவி எண்ணங்களையும் இதயத்தையும் நிறைத்தது. அப்புறம் படுத்துக் கிடக்கும் முசேயின் முகத்துடன் அது இணைந்தது. ”முசே…” அவனை மீறி அவன் உதடுகள் ஒலியெழுப்பின. அங்கே நிற்க இயலாதவனாக வெளியே வந்து இருட்டில் நின்றபடி காற்றிலசையும் தென்னைமரங்களைப் பார்த்தான்.  தயிரின் நிறத்திலமைந்த  மேகங்கள் திட்டுத்திட்டாக  வானெங்கும் உறைந்து கிடந்தன. தேய்ந்துபோன நிலவின் ஒரு துண்டு ஒரு மேகத்தின் ஓரம் ஒடுங்கியிருந்தது. குளிர்ந்த காற்றிலும் தன் கழுத்தடியே வியர்வை படிவதை உணர்ந்தான்.  காற்றின் வேகத்தில் பழுத்த ஓலையொன்று  மரத்திலிருந்து விடுபட்டு ஓசையுடன் விழுந்தது.  காரணமில்லாமல் அது ஒரு நடுக்கத்தை அவன் உடலில் பரப்பியது. அப்போது அறையிலிருந்து தன் பெயரை சொல்லியழைக்கும்  தெளிவான குரலைக் கேட்டான் அவன்.  முசேயின் குரல். சட்டென்று அவன் வேகம் கொண்டு திரும்பி தூண்களிலும் சுவர்களிலும் கதவுகளிலும் மோதிக்கொண்டு அறைக்குள் பாய்ந்தான். ”முசே…” என்றபடி கட்டிலில் பார்த்தான். முசே அப்படியே அசைவில்லாமல் கிடந்தார். ஒரு மாற்றமும் இல்லை. குரலைக் கேட்டது உண்மைதானா அல்லது பிரமையா என்று குழப்பமாக இருந்தது.  அச்சத்தோடு “முசே” என்று அழைத்தபடி கட்டிலை நெருங்கினான். அதே நேரத்தில் மதாமும் பிள்ளைகளும் “முசே குரல் கேட்டதே, எழுந்துட்டாரா வீர்ப்பா?” என்று கேட்டபடி அறைக்குள் வந்தார்கள்.  வீரப்பன் பேசாமல் உறைந்து நின்றான். அவனைக் கடந்து கட்டிலை நெருங்கிய மதாம் அவர் கன்னத்தையும் கையையும் இதயத்தையும் தொட்டுப் பார்த்துவிட்டு கீழே சரிந்தாள்.

 

( 2011 )

Series Navigationகண்ணீர் அஞ்சலிகளின் கதைலீலாதிலகத்தில் வேற்றுமைக் கோட்பாடுகள்
author

பாவண்ணன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    முசேயின் அன்பு நெஞ்சை நெகிழ வைக்கிறது. வீரப்பன்,பன்னீர் பாத்திரங்கள் இயல்பானவை. கதைப்பின்னல் அருமை. சம்பவங்கள் அனைத்துமே உண்மை போல் அமைந்துள்ளன. மொத்தத்தில் கதை அற்புதம்! பாராட்டுகள் பாவண்ணன் அவர்களே! …டாக்டர் ஜி. ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *