வம்பை விலைக்கு வாங்கும் வனிதையர்

This entry is part 30 of 31 in the series 20 அக்டோபர் 2013

 

பெண்கள் கண்ணியமான முறையில் உடை உடுக்க வேண்டும் எனும் அண்மைக்காலக் கூக்குரலைப் பெண்ணுரிமைவாதிகள் பெண்களின் உரிமைகளுக்கு எதிரான தலையீடு என்பதாய்ப் பதில் கூக்குரல் எழுப்பி வருகிறார்கள். உடுக்கும் உடையும், பாணியும் அவரவர் தனிப்பட்ட உரிமைதான். ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி.  ஆனால், இங்கு மட்டுமல்லாது வேறு சில நாடுகளிலும் பெண்கள் அணியும் உடைகள் பற்றி மட்டுமே கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன.  இதனை ஓரவஞ்சனை என்று பெண்ணுரிமையாளர்கள் கருதுகிறார்கள். ஆனால், அதற்கான காரணங்களைப் ஒருதலைப்பட்சமற்று ஆராய்ந்தால், பெண்கள் இந்தக் கட்டுப்பாட்டை எதிர்க்க மாட்டார்கள்.

 

இயல்பில் ஆண் முரட்டுத் தசைவலிமையில் பெண்ணைக் காட்டிலும் உயர்ந்தவனாகவும், மனவலிமையில் பெண்ணைக் காட்டிலும் தாழ்ந்தவனாகவும் படைக்கப்பட்டிருக்கிறான். பெண்ணின் உடல் சார்ந்த வலுவின்மையை ஆண் தனக்குச் சாதகப் படுத்திக் கொண்டு பெண்களை வெற்றி கொள்ளுவதைப் பெண் எவ்வாறு நியாயமென்று ஒப்புக்கொள்ள மாட்டாளோ, அவ்வாறே மனம் சார்ந்த தனது வலுவின்மையைப் பெண் சீண்டுவது கூடாது என்று நினைக்கவும், அதனைப் பெண்ணுரிமை என்று ஒப்புக்கொள்ளாதிருப்பதற்கும் ஆணுக்கு உரிமை உண்டு. ஒருவர் எடுத்துக்கொள்ளும் உரிமை பிறருக்கும்-  ஏன்? தனக்கேயும் கூடத்தான் –  எப்போது தீமை செய்கிறதோ அப்போது அதைக் கைவிடவேண்டிய பொறுப்பும் அறிவும் ஒருவர்க்கு இருக்கவேண்டும். அண்மைக்காலமாய்ப் பெண்களில் சிலர்  –  நல்ல வேளை! சிலர்தான்!  –   அருவருக்கத்தக்க முறையில் வெளிப்பாடாய் உடுக்கத் தலைப்பட்டுள்ளார்கள். இவர்களில் சிலர் அணியும் பனியன்களிலும், டி-ஷர்ட்டுகளிலும் உள்ள வாசகங்களை இங்கே எடுத்து எழுதி, இந்தக் கண்ணியமான நாளிதழின் பக்கத்தை மாசுபடுத்த விரும்பவில்லை.  வம்புக்கு இழுக்கும் இந்த வாசகங்களைப் படிக்கும் ஆண் அருவருப்பான முறையில் எதிரொலிக்கவே செய்வான்.  அவனது படைப்பு அப்படி! குச்சிக்குச் சேலை கட்டிவைத்தாலும் அதைப் பார்த்ததும் எச்சில் ஊறும் வாய் அவனுடையது. ‘அவன் என்னை இடிக்காமல் விலகிப் போகட்டுமே? அவன் இடிப்பான் அல்லது அசிங்கமாய் ஏதேனும் விமர்சிப்பான் என்பதற்காக நான் என் உடையணியும் உரிமையை விட்டுக்கொடுக்க வேண்டுமா என்ன?’ எனும் பெண்ணின் பதில் கேள்வியில் அசட்டுத்தனமமே ததும்புகிறது. ஆண்களில் பெரும்பாலோரை இந்த விஷயத்தில் திருத்த முடியாது. மகா பாரத நாளிலிருந்து தொடரும் கதை இது. பெண்களுக்கு வெட்க உணர்வுகள் போதிக்கப்பட்டு வந்துள்ளது அவர்களது நன்மையை உத்தேசித்தே என்பதைப் பெண் புரிந்துகொள்ள வேண்டும்.

1968 இல் இருந்து பெண்ணுரிமை சார்ந்த கதை-கட்டுரைகளை எழுதிவரும் என் மீது யாரும் பத்தாம் பசலி என்று முத்திரை குத்த முடியாது. பழையன என்பதற்காக எல்லாக் கட்டுப்பாடுகளையும் துறப்பதோ, அல்லது புதியவை என்பதற்காக அனைத்துச் சுதந்திரங்களையும் ‘பெண் விடுதலை’ என்பதன் பெயரால் ஏற்பதோ புத்திசாலித்தனம் ஆகாது. பெண்கள் தமது கண்ணியம், பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நடு நின்று சிந்தித்துப் பழையன, புதியன ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட ஓர் அறிவார்ந்த நிலையை எடுக்க வேண்டும். கொள்ள வேண்டியவற்றைக் கொள்ளவும் தள்ள வேண்டியவற்றைத் தள்ளவும் அவள் அறியவில்லையெனில் அவள் அறிவுகெட்டவள் என்றல்லோ ஆகும்? பெண்ணை போகப்பொருளாய்க் கருதி ஊடகங்கள் வணிகம் செய்வதாய்க் குறை கூறிக் கண்டித்துவரும் பெண்ணியவாதிகள் தெருவில் சுற்றித் திரியும் ஆபாசக் களஞ்சியங்களை ஏன் கண்டிப்பதில்லை? மாறாக, எதையும், எப்படியும் உடுப்பது பெண்ணின் உரிமை என்றல்லவோ வக்காலத்து வாங்குகிறார்கள்? எனினும், பணி சார்ந்த வசதியான உடைகளைத் தான் பெண் அணிய வேண்டும் என்பதற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது.. எந்தப் பணியிலும் பெண் அமர்த்தப்படும் இந்நாளில் அவள் சேலைதான் கட்ட வேண்டும் என்பது சரியன்று. சேலை வசதிக்குறைவானது. விரைந்து நடக்கவும், பேருந்து பிடிக்கவும், பல்வேறு ஆபத்துகள் இன்று பெண்களைத் துரத்தும் நிலையில் சட்டென்று ஓடவும் கால்சராய் / ஜீன்ஸ்தான் ஏற்றது. சேலை காலை வாரிவிட்டுவிடும்.  எனவே என்னை “மடிசார் மாமி” என்றும் தப்புக்கணக்குப் போடவேண்டாம். நாம் சொல்ல வருவதெல்லாம் இதுதான் – அணியும் உடை எதுவாக இருந்தாலும் அதைக் கண்ணியமான முறையில் பெண்கள் அணிய வேண்டும்.  பதினெட்டு முழப் புடைவையையும் கண்ணியக் குறைவான முறையில் உடுக்கலாம். .

 

கொஞ்ச நாள்களுக்கு முன்னால்; பெண்களுக்கான ஓர் ஆங்கில இதழில் அதன் ஆசிரியை, பெண்களின் எறிபந்து / கூடைப்பந்து விளையாட்டுகளுக்கு ஆண்களின் கூட்டம் அலைமோதுவதையும், பெண்கள் விளையாடுகையில் ஆபாசமான விமரிசனத்துடன் அவர்கள் ஊளை இடுவதையும் பற்றி அங்கலாய்த்துக் கட்டுரை எழுதியிருந்தார். உறுப்புகள் வெளித்தெரியும் வண்ணம் உடையணிந்து குதித்தால் இயல்பில் மோசமான மனநிலையுள்ள அவர்கள் அப்படித்தான் எதிரொலிப்பார்கள். அப்படி எதிரொலித்த ஆண்களை “மலம் தின்னும் பன்றிகள்” என்று அந்த ஆசிரியர் விமர்சித்திருந்தார். ‘அவர்கள் பன்றிகள் என்பது தெரிகிறதல்லவா? அப்படி இருக்கும்போது, ஏன் வெளிப்பாடான உடை அணிந்து ஆண்களைப் பன்றிகளாக்கும் “மலம்” ஆகப் பெண்கள் மாற வேண்டும்’ என்று நான் எழுதிய பதில் கடிதத்தை அவர்கள் வெளியிடவில்லை என்பது வேறு விஷயம்!

அண்மையில் பெண்ணிய இதழ் ஒன்றில் ஒரு கட்டுரை வந்திருந்தது. அதில் பெண்களின் உடைக்கட்டுப்பாடு பெண்களின் மீதான தாக்குதல் என்று சொல்லப்பட்டிருந்தது. அதே கட்டுரையின் ஓரிடத்தில், ‘உழைக்கும் வர்க்கப் பெண்கள் தங்கள் உடைகளைக் கால்கள் தெரிய, தூக்கிச் செருகிக்கொண்டால்தான் வேலை செய்ய முடியும். நம் நாட்டில் வயலில் உழைக்கும் பெண்களும், கட்டட வேலை செய்யும் பெண்களும் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. இந்தப் பெண்கள்தான் பாலியல் கொடுமைகளுக்கு அதிகமாக ஆளாகிறார்கள்’ என்றும் சொல்லப்பட்டிருந்தது. கண்கூடான நிலை என்பது இதுதான். இது ஆண்களின் பொதுவான, மாறாத மனப்பான்மையையே காட்டுகிறது.

பொதுவாகப் பெண்ணுரிமை என்பதைத் தவறாய்ப் புரிந்துகொண்டுள்ளவர்களின் கருத்து என்னவெனில், ‘பெண் எப்படி வெளிப்பாடாக உடுத்துக்கொண்டாலும், ஆண் அதனால் பாதிப்பு அடையக் கூடாது. அவன் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்’ என்பதேயாகும். பல ஆண்கள் பெரிதும் முயன்று அப்படித்தான் கண்ணியம் காக்கிறார்கள். ஆனால், வேறு பலரால் தங்கள் இயல்பை வெல்ல முடிவதில்லை. ஏனெனில் அவர்கள் படைக்கப்பட்ட விதம் அப்படி! அவர்கள் திருந்த வேண்டும் என்றும், ஆபாசமாக உடுக்கும் பெண்களை விமர்சிக்கவோ ( pass comments) அவர்களைச் சீண்டவோ கூடாது என்றும் கூறுவது ‘நாய் தன் வாலை நிமிர்த்திக் கொள்ள வேண்டும்’ என்று சொல்லுவதற்கு ஒப்பானதே.

 

ஆபாசப் படங்களால் அனைத்துப் பக்கங்களையும் நிரப்பிப் பெண்சீண்டலை ஆண்களிடம் தூண்டிவிட்டுவிட்டு, பெண்சீண்டலால் உயிர் நீக்க நேர்ந்த சரிகா ஷா பற்றி மாய்ந்து மாய்ந்து கட்டுரை எழுதும் ஏடுகளும், ஆபாச ஆட்டங்கள் நிறைந்த திரைப்படங்கள் / தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இவற்றின் தயாரிப்பாளர்களும், திரைப்பட விமரிசனங்களில் கூடக் கண்ணியம் காக்கத் தவறும் ஆபாச விமரிசகர்களும், நகைச்சுவையின் பெயரால் ஆபாசமாகப் பதிலளிக்கும் கேள்வி-பதில் ஆசிரியர்களும் நாளுக்கு நாள் மலிந்துகொண்டு வரும் இந்நாளில் பெற்றோர்க்கும், கல்விக்கூட ஆசிரியர்களுக்கும் உள்ள பொறுப்பு மகத்தானது. அவர்கள் பொறுப்புணர்ந்து செயல்பட்டால் ஓரளவுக்கு நன்மை ஏற்படும்.

 

நன்றி – தினமணி – 2008

 

Series Navigationடௌரி தராத கௌரி கல்யாணம் – 23பார்வையற்றோர் நலப் பணி நினவு கூர்தல்
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

19 Comments

 1. Avatar
  தேமொழி says:

  இந்தக் கட்டுரை சொல்லத் தவறிய உண்மைகள்:

  1. நன்கு ஆடை உடுத்தி வலம் வரும் பெண்களும் பலாத்காரம் செய்யப்படுவதன் காரணம் என்ன என்பதை

  2. ஆண் பெண்ணைவிட மன உறுதியற்றவன் என்பதற்கு அறிவியல் ஆதாரம்

  3. தலைமைப் பொறுப்பு வகிப்பதில் பெண்களுக்கு மனஉறுதி வேண்டும் என்று அவர்கள் தவிர்க்கப் படும் பொழுதும், துக்கத்தை அழாமல் தாங்கிக் கொள்ளும் மனஉறுதி படைத்தவர்கள் என்று ஆண்களைக் குறிப்பிடும் பொழுதும் கூறப்படும் மனஉறுதி மற்றும் மனக்கட்டுப்பாடு ஆகியவை பெண்களைக் காணும்பொழுது உள்ள மனக்கட்டுப்பாடும் வேறு வேறா என்பதையும் விளக்கவில்லை. தேவைகேற்றவாறு மனஉறுதி சுயநல நோக்கில் ஏன் மாறுபட்டு விளக்கப்படுகிறது?

  4.கூலி வேலை செய்பவர்கள் பலாத்காரத்திற்கு ஆளாவதற்கு அவர்கள் வரிந்து கட்டி உடல்தெரிய வேலை செய்வது காரணமல்ல. அவர்களது, ஏழ்மையும், இயலாமையும், அறியாமையும் காரணம். ஏழ்மை அவர்களை பாதுகாப்பற்ற நிலையில் வைக்கிறது. அவர்களுக்கு உதவ யாரும் வரப்போவதில்லை என்பது ஆண்களுக்கு துணிச்சலைக் கொடுக்கிறது.

 2. Avatar
  IIM Ganapathi Raman says:

  பெண்ணியம் இருக்கிறது; ஆணியம் இல்லை. பெண்களைப்பற்றி இக்கட்டுரை உண்டு. ஆண்களைப்பற்றி இப்படிப்பட்ட கட்டுரைகள் வந்தால் அது ஆணியமாக எடுத்துக்கொள்ளப்படா. பொதுவாக எடுத்துக்கொள்ளப்படும். இந்த தடையை பெண்கள் எப்போது கடக்கப்போகிறார்கள்?

  இற்றை நாளில் பெண்ணியம் அவர் இவர் என்றில்லாமல் பெண்களில் எல்லோராலும் பேசப்படுகிறது. பெண்ணியம் பேசும் பெண் தன்னை அப்பெண்ணியத்தின் பிரதிநிதியாகக் கற்பனை பண்ணிக்கொள்கிறார். தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரனென்பதைப்போல. அவரின் கருத்து இன்னொரு பெண்ணால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நேற்றைய நீனா நானா தொலைக்காட்சி நிகழ்ச்சி பெண்ணியவாதிகள் என்ற பக்கத்திலே இருந்தவர்களிடம் கூட ஒரு மொதத கருத்தில்லை. குட்டு ரேவதி சொன்னார்: கணவனைக் காதலித்தல் பெண்ணடிமைத்தனம். இன்னொரு பெண்ணியவாதி ஓவியா நாங்கள் அப்படி நினைக்கவில்லை என்றார்.

  இப்போது இக்கட்டுரைக்கே வருவோம். ஜீன்ஸ் டாப்ஸ் போட்டு விஹாரமாக தன் முன்னெழுச்சியைக்காட்டி (எழுத்தாளர் சொல்வதைப்போல சஜஸ்டிவ் ஆங்கில ஸ்லோகன்களை டாப்ஸில் காட்டிச்செல்லும் பெண்கள் அப்படிச்செல்வது அவர்கள் உரிமை என்று பெண்ணியவாதிகளில் எத்தனை பேர் சொன்னார்கள்? ‘ஒரு சிலர்’ இல்லையா? அப்படியென்றால், இன்னும் ஒரு சிலர் சரியன்று என்பார்கள்.

  எனவே ஒட்டுமொத்தமாக பெண்ணியத்தையும் பெண்ணியவாதிக்ளையும் கட்டித்தூக்கியெறிய முடியாது. பெண்ணியம் என்பது சரியாகப்புரிந்து கொள்ளப்படவில்லை.

  பெண்ணியம் ஆபாசத்தை ஆதரிக்கவில்லை. அதே வேளையில் ஆபாசம் எது என்ற டெஃபினிஷனை ஆண்களிடம் கொடுக்கும்போது அது ஆணாதிக்கமாகிறது. அதாவது அவனவன் ஒரேயடியாக பெண்ணைக்கட்டிபோட வருகிறான்.

  நமக்கு நாமே என்பதுதான் பெண்ணியத்தின் ஆதாரம். ஒருபோதும் இதை மறவாதீர்!

  பிக்கினியில் பீச்சில் நடந்து செல்லும் பெண்ணை வெள்ளைக்காரன் கிண்டலடிப்பதில்லை. வெறித்துப் பார்ப்பதில்லை. பாலியல் பலாத்காரம் செய்வதில்லை.

  இப்போது புரியும் எங்கே தவறென்று.

 3. Avatar
  Dr.G.Johnson says:

  இது ஓர் அருமையான கட்டுரை. இது பற்றி ஆண் பெண் இருபாலரும் கருத்து கூறுவது பயன்மிக்கது. நான்கூட பல வேளைகளில் இது பற்றி எண்ணியதுண்டு.

  இப்போதெலாம் ஆண்கள்தான் உடலை முழுவதுமாக மூடிக்கொள்ளும் வகையில் உடை உடுத்துகின்றனர்.

  முழுக்கைச் சட்டை, முழுக்கால் சிலுவார், காலுக்கு காலுரை ( stockings ) காலை மூடும் காலனி போன்றவை அணிவதோடு, ஒருசிலர் தலைக்குத் தொப்பி, கறுப்புக் கண்ணாடியும்கூட பயன்

  படுத்துவதுண்டு.

  ஆனால் பெண்கள் தங்களின் உடலழகை எவ்வளவு வெளியில் காட்ட முடியுமோ அதற்கேற்ப ஆடையைக் குறைத்துக் கொள்ளும் வகையில் உடுத்தி வருகின்றனர். பாதி மார்பு, முழு முதுகு, தொப்புள் , அடிவயிறு, தொடைகள் தெரியும் அளவுக்கு அழகைக் காட்டுகின்றனர்.

  வயதுக்கு வந்த பெண்கள் தாவணி போடும் காலம் அந்தக் காலம் ஆகிவிட்டது… டாக்டர் ஜி. ஜான்சன்.

  1. Avatar
   IIM Ganapathi Raman says:

   தாவணிக்கனவுகள் போலும் !

   உண்மைதான் தாவணியைவிட செக்ஸியான உடையை நான் கண்டதில்லை.

 4. Avatar
  suvanappiriyan says:

  அருமையான கட்டுரை!

  பெண் விடுதலை என்பது உடை குறைப்பு என்ற தவறான புரிதலால்தான் பல குழப்பங்கள் வருகின்றது. ஆபாச உடைகளை தவிர்த்து கல்வி வேலை வாய்ப்புகளில் பெண்களின் உடல் அமைப்புக்கு ஏற்ற வேலைகளை தேடிக் கொண்டால் அதுதான் பெண்மைக்கு அழகு! சமூகமும் சீர் பெறும்.

 5. Avatar
  IIM Ganapathi Raman says:

  // இது பற்றி ஆண் பெண் இருபாலரும் கருத்து கூறுவது பயன்மிக்கது.// – மருத்துவர் ஜாண்சன்.

  ஆண நுழைவது நான் சரியன்று என்று எழுதியிருக்கிறேன்.

  பெண்ணடிமைத்தனம் பலபல வழிகளில் சமூஹம் புகுத்தி அதைப்பெண்களே இன்டர்னலைஸ் பண்ணும்படி வைத்துவிட்டது. அவ்வழிகளைக் கேள்வி கேட்டு அதைக்களையுங்கள் என்பதும் பெண்ணியமாகும்.

  சரி, இவ்வழிகளைக் கண்டுபிடித்து பெண்ணை இன்டர்னலைஸ் (internalise) பண்ணவைத்தது ஆண்.

  மதம் – எல்லா மதங்களுமே ஆணின் உருவாக்கமே – ஐயமே வேண்டாம். அட கடவுள்கள் கூட ஆண்தான்.

  நம் சமூஹம் மேற்சொன்ன வழிகளை மதவழியாக்வே நுழைத்தது. ஏனெனில் தொடக்க்ம் முதல் மதமே சமூக வாழ்முறையையும் தனிநபர் வாழ்முறையையும் சொல்லியது; இன்றும் அப்படித்தான். கட்டாயப்படுத்தியது. அல்லது அச்சுறுத்தலை மறைமுகமாகவும் நேர்முகமாகவும் செய்தது.

  ஆக, பெண் எப்படி வாழ வேண்டும் என்பதை ஆணே திர்மானித்தான். அதில் தனக்கு என்ன வசதியோ அதைச்செய்து கொண்டான். நாங்களும் பெண்ணுக்கு சுதந்திரம் கொடுத்தோம் என்பது ஒரு பேட்ரனசிங் ஜஸ்டிஃபிகேசன்.

  இங்கே உடை. அதைக்கண்டிப்பாக ஆண் சொல்லக்கூடாது. ஆபாசம் எது என்பதை ஆண் சொல்லக்கூடாது. எனவே மருத்துவர் உள்ளே ஆணைக்கொண்டு வருவதை – சூழ்ச்சி என கருதப்படுகிறது. Man enters stealthily saying he comes to help. Bewared of him. He overwhelms and imposes his codes to enslave w/o yourself being aware of it.

  மதவாதியான சுவனப்பிரியன் இப்போது நுழைந்துவிட்டார். இனியென்ன ஆசாராம்பாபு, ராம்தேவ்தான், சங்கராச்சாரியார், காரிட்னல்களும் பிஷப்புக்களும் வரவேண்டியதுதான் பாக்கி.

  ஜீன்ஸும் டாப்ஸும் ஏன் வெள்ளைக்காரனை பாலியல் பலாத்காரத்துக்குத் தூண்டவில்லை என்ற கேள்விக்குப் பதில் நம் கண்ணை நாமே குததிக்கொள்ளும்.

  ‘ஆண் எல்லோரும் காம இச்சையுடன் அலைகிறார்கள்; பெண் எனவே அவனைத்தூண்டாவகையில் ஆடை அணிய கூடாது என ஜோதிர்லதா கிரிஜா சொல்வதும்’ பெண்ணடிமைத்தனத்தை வலுப்படுத்தும் ஒரு வழிகளில் ஒன்றுதான். எப்படி என்று விளக்கினால் மடல் நீண்டுவிடும்.

 6. Avatar
  suvanappiriyan says:

  //உண்மைதான் தாவணியைவிட செக்ஸியான உடையை நான் கண்டதில்லை.//

  பெண்கள் போடும் சட்டைக்கு கீழ் தொப்புள் தெரிவது போல் ஒரு இடைவெளி எதற்கு? அந்த இடைவெளியியை மூடி விட்டால் அதுதான் இஸ்லாம் சொல்லும் புர்கா. ஆனால் இஸ்லாம் சொல்வதாலேயே கண்ணை மூடிக் கொண்டு எதிர்க்காமல் பெண்களுக்கு அதில் உள்ள நன்மைகளை ஆராய்ந்து ஆபாச உடைகளை தவர்க்க வேண்டும்.

  1. Avatar
   IIM Ganapathi Raman says:

   அந்தக்காலத்தில் கல்லூரிப்பெண்களெல்லாம் தாவணியில்தான் வருவார்கள்: கலர் கலரான தாவணிகள்.

   மருத்துவக்கல்லூரியில் எட்டிப்பார்த்தது கிடையாது. எங்கள் வீட்டு வழியாக காலையிலும் மாலையிலும் கல்லூரிக்குச் செல்லும் வயசுப்பெண்களைப் பார்த்தததுண்டு என்றால் பொய்.பார்ப்பது வழக்கம் என்றால் உண்மை..

   ஆனால் இன்று தாவணி உடுத்தினால், பட்டிக்காட்டுப்பெண் என்பார்கள். கிராமத்துப்பெண்கள் கூட அவ்வுடையைக்கண்டு பயப்படுகிறார்கள்.

   Beauty lies in the eyes of the beholder என்பான் வெள்ளைக்காரன். எவ்வுடையையும் அழகுணர்ச்சி பெருக வைக்கும் வண்ணமும் அணிய முடியும். தொப்புள் தெரிய தாவணியுடன் ஒரு பெண் வந்தாலும் . அவளை முழுமையாகப்பார்க்கும்போது அழகுணர்ச்சி கிடைக்கும் அவள் சரியாக உடுத்தியிருந்தால். ஆள் பாதி ஆடை பாதி என்பதன் பொருள் இருக்கும் குறையை நிவிர்த்தி பண்ணி பெண்ணையோ ஆணையோ அழகுடன் காட்ட ஆடை உதவும் என்பது.

   ஆடை அணிவது மானத்தை மறைக்க மட்டுமன்று. அழகுணர்ச்சிக்காகவும்தான். இல்லாவிட்டால் ஏன் செலக்சன். சும்மா எதையாவது சுற்றிக்கொள்ளலாமே? தீபாவளிக்கு ஒரு புடவையை 3 மணினேரமாராய்ந்து எடுத்து விட்டுக்கு வந்தும் திருப்தியில்லையே சார் !

   இசுலாம் அழகுணர்ச்சி என்பதை முழுவதுமாக இங்கே மறுத்து ஒரு பெண் தன் உடலை முழுவதும் மறைக்கவேண்டுமென்கிறது.

 7. Avatar
  ஷாலி says:

   //ஜீன்ஸும் டாப்ஸும் ஏன் வெள்ளைக்காரனை பாலியல் பலாத்காரத்துக்குத் தூண்டவில்லை என்ற கேள்விக்குப் பதில் நம் கண்ணை நாமே குததிக்கொள்ளும்.//
  திரு.IIM கணபதி ராமன் அவர்களின் கேள்வி நியாயமானதுதான்.பாலியல் பலாத்காரத்திற்கு தூண்டாத காரணம்,அங்கு பொதுவாக பெற்றோர் பார்த்து மணமுடித்து வைக்கும் நம்மூர் வழக்கம் அங்கு இல்லை.வார இறுதியில் (Week End) ஆணும் பெண்ணும் பாய் பிரண்டு கேர்ள் பிரண்டு கூட டேட்டிங் போய் விடுவார்கள்.இந்த வாரம் ஒருத்தி அடுத்த வாரம் வேறொருவன் இப்படி மனதிற்கு செட் ஆகும்வரை பாலியல் உறவு மடை மாற்றப்படும்.தன் மகளுக்கு ஒரு பாய் பிரண்டும் டேட்டிங் போக கிடைக்கவில்லையென்றால் அந்தத்தாய் மிகவும் கவலைப்படுவாள்.பாய் பிரண்டு கிடைத்து விட்டால் மகளிடம் கர்ப்பத்தடை மாத்திரையை கையேடு கொடுத்து வழி அனுப்புவாள்.இது வெள்ளைக்காரன் கலாச்சாரம்.ஆக அங்கு பாலுறவு பாப்கார்ன் சாப்பிடுவதுபோல் சாதாரணமானது.பலாத்காரம் அவசியம் இல்லை.வன்முறை இன்றி அஹிம்ஷையிலேயே அனைத்தும் கிடைக்கும்.ஆடை காரணமாக பாலுறவு தூண்டுதல் அங்கு அரிது. நம்ம நிலவரம் வேறமாதிரி,இதுக்கு வெளிநாடு போகத்தேவையில்லை.பாரதி பாடிய சேர நாட்டிளம் பெண்கள் முண்டு கட்டி நடப்பதைக்கண்டால் பாண்டி பயல்களுக்கு ஜொள் ஜெல்லாக ஒழுகும்.அங்குள்ள ஆண்கள் கண்களுக்கு முண்டு முண்டா தட்டாது. முண்டு நம் பயலுகளை முட்ட வரும்.ஆக மொத்தம் நம்மை வெள்ளை கலாச்சாரத்திற்கு தள்ள எல்லா வேலைகளும் நல்ல முறையில் நடந்து கொண்டுதான் வருகிறது.வாலைண்டைன் வந்து விட்டது,பாய் பிரண்டு வந்து விட்டது.இனி டேட்டிங் மட்டும் தான் பாக்கி,கூடிய விரைவில் வந்து விடும்.பிறகென்ன IIM ன் தாவணி கனவுகள் தானாக கலைந்துவிடும்.

 8. Avatar
  பொன்.முத்துக்குமார் says:

  // கொஞ்ச நாள்களுக்கு முன்னால்; பெண்களுக்கான ஓர் ஆங்கில இதழில் அதன் ஆசிரியை, பெண்களின் எறிபந்து / கூடைப்பந்து விளையாட்டுகளுக்கு ஆண்களின் கூட்டம் அலைமோதுவதையும், பெண்கள் விளையாடுகையில் ஆபாசமான விமரிசனத்துடன் அவர்கள் ஊளை இடுவதையும் பற்றி அங்கலாய்த்துக் கட்டுரை எழுதியிருந்தார். உறுப்புகள் வெளித்தெரியும் வண்ணம் உடையணிந்து குதித்தால் இயல்பில் மோசமான மனநிலையுள்ள அவர்கள் அப்படித்தான் எதிரொலிப்பார்கள். அப்படி எதிரொலித்த ஆண்களை “மலம் தின்னும் பன்றிகள்” என்று அந்த ஆசிரியர் விமர்சித்திருந்தார். ‘அவர்கள் பன்றிகள் என்பது தெரிகிறதல்லவா? அப்படி இருக்கும்போது, ஏன் வெளிப்பாடான உடை அணிந்து ஆண்களைப் பன்றிகளாக்கும் “மலம்” ஆகப் பெண்கள் மாற வேண்டும்’ என்று நான் எழுதிய பதில் கடிதத்தை அவர்கள் வெளியிடவில்லை என்பது வேறு விஷயம்! //

  இது அபத்தமான வாதம். ஒவ்வொரு விளையாட்டிலும் வசதி கருதி குறிப்பிட்ட உடைதான் உடுக்கவேண்டும் – dress code – என்ற கட்டுப்பாடு உண்டு. கூடைப்பந்து விளையாடும்போது சற்று லூசான பனியன் போன்ற மேலாடையும் தொளதொளப்பான கால்சராயுமே சரியான தேர்வு. கைப்பந்து விளையாட்டுக்கும் அவ்வாறே. அவ்வாறில்லாமல் அங்கே போய் பேண்ட்-ம் முழுக்கை சட்டையும் அணிந்து விளையாட முடியாது.

  விளையாட்டில் கூட அங்கங்களை வர்ணித்து ஊளையிடும் வக்கிரம் மிகுந்த கயவர்களை தண்டிப்பதே முறை. ‘அவர்கள் இயல்பிலேயே மோசமான மனநிலை உள்ளவர்கள்’ என்று அதற்கு பணிந்து போவது பிழை.

 9. Avatar
  இராமசாமி says:

  பொன். முத்துக்குமார், உங்கள் வாதத்திலும், ஒரு பாதியே சரி என்பேன். அதே கடற்கரை கைப்பந்து விளையாட்டில், பெண்களை விட ஆண்கள் நீளமாக உடை அணிந்து நன்றாகவே விளையாடுகிறார்களே?

  வெள்ளையர் அடிக்கடி சூரியக்குளியல் செய்யாவிடில் சரும வியாதிகள் வரும். அந்த அத்தியாவசியத்தேவை, உடை குறைப்பை அனைவர் மனதிலும் ஏற்றுக்கொள்ள செய்துவிட்டது. இது தட்ப வெப்பம் சார்ந்த கலாசாரம். நம் தென்னாட்டு ஆண்களும் கொளுத்தும் வெயிலில் குளிர் தேச உடை அணிவது கேள்விக்குறியதே.
  நாமும் குளிர்பதன அறையிலேயே வாழ்ந்தோமானால், நமக்கும் சூரியக்குளியல் தேவை. கூடிய விரைவில் அதுவும் நடக்கலாம்.

  மேலும், அழகுணர்ச்சி என்று வரும்போது, பல வெள்ளையர் பெண்களுக்கு அவரது கால் அழகு மீது கர்வம் அதிகம். அதுவும் நல்ல உயரமாக இருப்பவர்க்கு அது அதிகம். வெள்ளையரும், (சீனரும் கூட) அதை போட்டி போட்டு வெளிக்காண்பிப்பர்.
  ஆனால், இந்தியருக்கு குறிப்பாக தென் இந்தியர்களுக்கு அவ்வகை உடை அழகை குறைத்தே காட்டும் என்பது எனது கருத்து. மேலும் பல வெள்ளையர்க்கு உடல்வாகு ஆண்களை போல் இருக்கும். அவர்கள் சில ஆண்களை போல் (குறைவாக) உடை அணிந்தால், அவ்வளவு வித்தியாசமாக தெரியாது (நமது பி.டி. உஷா போல). ஆனால் நம்மவர் பலர் மற்ற நாட்டுப்பெண்களை அப்படியே காப்பி அடிப்பது எந்த அளவிற்க்கு சரி?

  கருப்பின ஆண்களை காப்பி அடித்து, நமது ஆண்களும் இது எங்கள் உரிமை என்று, உள்ளாடை தெரிய கால்சட்டை போட்டுக்கொண்டால் நன்றாகவா இருக்கும்?

 10. Avatar
  suvanappiriyan says:

  //மதவாதியான சுவனப்பிரியன் இப்போது நுழைந்துவிட்டார். இனியென்ன ஆசாராம்பாபு, ராம்தேவ்தான், சங்கராச்சாரியார், காரிட்னல்களும் பிஷப்புக்களும் வரவேண்டியதுதான் பாக்கி.//

  எனக்கும் ஆசாராம் பாபுக்கும் சங்கராச்சாரியாருக்கும் மதத்தை கடைபிடிக்கும் விஷயத்தில் பெருத்த வேறுபாடு உண்டு. ஆசாராம் பாபுவும் சங்கராச்சாரியாரியாரும் மதத்தை பயன் படுத்தி அதன் மூலம் தங்களது காம வெறியை தீர்த்துக் கொண்டவர்கள்.

  ஆனால் நானோ இஸ்லாத்தை முடிந்த வரை பரிபூரணமாக பின்பற்றி எனது மனைவிக்கும் எனது குழந்தைகளுக்கும் எனது பெற்றோருக்கும் எனது நாட்டுக்கும் என்னை படைத்த இறைவனுக்கும் உண்மையாளனாக இருந்து வருகிறேன். எனவே இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  1. Avatar
   paandiyan says:

   “மதவாதியான சுவனப்பிரியன்” என்று சொன்னது உங்களுக்கு கோவம் வரவில்லை ஆனால் சம்பந்தம் இல்லாத விஷம் தோய்ந்த கருத்தை எழுத முடிகின்றது?

 11. Avatar
  Dr.G.Johnson says:

  திரு. பொன். முத்துக்குமார் கூறுவது சரிதான். அவர் ஒன்றைக் கூற மறந்துவிட்டார். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கடற்கரை வாலிபால் ( Beach Vollyball ) என்ற போட்டியில் பெண்கள் நீச்சல் உடையில்தான் ( bikini ) விளையாடவேண்டும் என்பது உடை விதியாகும் ( Dress Code ) ஆகும். அதைப் பார்க்க ஆண்கள் கூட்டம் அலைமோதும்….டாக்டர் ஜி. ஜான்சன்.

 12. Avatar
  suvanappiriyan says:

  35 வயதான குல்சும் அப்துல்லா அமெரிக்க குடியுரிமை பெற்ற பாகிஸ்தானிய பெண். கம்யூட்டர் என்ஜினியரிங்கில் பிஎச்டி பண்ணியுள்ளார். சர்வதேச பளு தூக்கும் போட்டியில் பெண்கள் இவ்வாறுதான் அரை குறை ஆடை அணிய வேண்டும் என்ற நியதி உள்ளது. ஆனால் இவர் மேலதிகாரிகளோடு வாதிட்டு ‘இஸ்லாமிய உடை, பளு தூக்கும் என்னைப் போன்ற பெண்களுக்கு எந்த சிரமத்தையும் கொடுப்பதில்லை. நான் இஸ்லாமிய உடைகளோடு மட்டுமே போட்டிகளில் கலந்து கொள்வேன்’ என்று கூறி முடிவில் வெற்றியும் பெற்றுள்ளார். அதிகாரிகள் தற்போது போட்டியின் விதி முறைகளை திருத்தி இஸ்லாமிய உடை அணிந்தும் பளு தூக்கும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என்று மாற்றியுள்ளனர்.

  தற்போது இந்த உடையில் இந்த பெண்ணை நாம் பார்க்கும் போது நம்மையறியாமல் மரியாதை வருகிறது. போராடினால் எந்த மாற்றத்தையும் கொண்டு வரலாம் என்பதற்கு இந்த பெண் முன்னுதாரணமாக உள்ளார். வாழ்த்துக்கள் சகோதரி…

  இதே போல் ஈரானிய பெண்கள் முழு ஆடையோடு விளையாட வந்ததற்காக ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து வெளியேற்றப்பட்டது நமக்கு நினைவிருக்கலாம். இனி வரும் காலத்தில் இதை முன்னுதாரணமாகக் கொண்டு அனைத்து போட்டிகளிலும் பெண்கள் தங்கள் உடலை மறைத்து கலந்து கொள்ள அனுமதியளிக்கப்பட வேண்டும். இதை ஆரம்பித்து வைத்த அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டிக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.

 13. Avatar
  Ramki says:

  சரி காந்திஜி விடுதலைக்கான அளவுகோலில் ஏன் நால்லிரவில் நகையணிந்து செல்லும் பெண்ணின் விடுதலையை கூறியுள்ளார்? ஆண்களை விடுத்து பெண்களை மட்டும் அடக்க நினைப்பது அபத்தம்

 14. Avatar
  இராமசாமி says:

  கடற்கரை வாலிபால் ( Beach Vollyball ) என்ற போட்டியில் பெண்கள் நீச்சல் உடையில்தான் ( bikini ) விளையாடவேண்டும் என்ற உடை விதி சில வருடங்களுக்கு முன்பே மாற்றப்பட்டுவிட்டது. இப்பொழுது சற்று உடலை மறைக்கும்படியான உடை அணியலாம். 2012 லண்டன் ஒலிம்பிக்ஸில் மற்றும் பல முந்தய போட்டிகளில் இந்திய மற்றும் வெளிநாட்டு வீராங்கனைகள் அவர்களுக்கு ஏற்ற உடையில் விளையாடினார்கள்.

 15. Avatar
  IIM Ganapathi Raman says:

  தில்லியில் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலைநடந்து நாடெங்கும் கண்டனக்குரல்கள் வந்து கொண்டிருந்த போது, சீலா தீக்ஷித் போன்ற்வர்கள் தில்லி ஆண்கள் கொடூர மனங்களை இயலபாகக்கொண்டிருக்கிறார்கள் என்றார். அதைப்பல பெண்களும் ஆதரித்தார்கள். அஜய் குமார் ஐ பி எஸ் தில்லி மாநகர் காவல் தலைமையதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். அவர்” வடகிழக்கு மாநிலங்களில் பாலியல் பலாத்காரம் பெண்ணை அவமதித்தல் என்பதெல்லாம் கிடையா ” என்றார். தில்லி போலீசு அதிகாரிகள் புதுச்சேரி மற்று வடகிழக்கு மாநிலங்கள் சில்வற்றில் வேலை பார்த்தாகவேண்டும். கம்பன்ட் கார்டர்.

  ஏன் வடகிழக்கில் இல்லை? அங்கே ஏன் பெண்கள் ஆங்கிலேயரையைப்போல உடையணிகிறார்கள்? அவையேன் அவர்கள் ஆண்களை பாலியல் பலாத்காரத்துக்குத் தள்ளவில்லை?

  காரணம் அங்கு மதம சார்ந்த கட்டுப்பாடுகள் கிடையா. கிருத்துவம் அவர்கள் மதமாக இருப்பினும் அதை அவர்கள் மதமாக மட்டுமே எடுத்துக்கொண்டு கலாச்சாரத்தை அவர்கள் ட்ரைபல் வாழ்க்கையில் அமைத்துக்கொள்கிறார்கள்.

  ஆணும் பெண்ணும் இலகுவாக சுதந்திரமாக சேர்ந்தே பழகுவர் சிறிபிராயத்திலிருந்தே. ஒருவரையொருவர் சமமாகத்தான் பாவிக்கிறார்கள். அவர்கள் கலாசாரம் ட்ரைபல் கலாச்சாரம். அதில் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் கற்பனையான உருவாக்கப்பட்ட இடைவெளி சமூகத்திலும் குடுமப த்திலும் இல்லை.

  இதுவே காரணம். கலாச்சாரம் என்ற பெயரில் ஆணையும் பெண்ணையும் சிறுபிராயத்திலேயிருந்தே தனித்தனியாகப் பிரித்து ஒருவரை ஒருவர் வெறுக்கும் வண்ணம் அல்லது புரியாவண்ணம் வளர்க்கின்றபடியாலே இருபாலருக்குமிடையே அடைக்கமுடியா இடைவெளி இறுதிவரை தொடர்கிறது. ஆண் பெண்ணை மதிக்கத்தெரியா மனிதனாகவும் பெண் ஆணை வெறுக்கும் மனுஷியாகவும் உருவாக்குகிறது. இது வரட்சணைக்கொடுமைகளாகவும், குடுமப வன்முறைகளாகவும் பெண்ணுக்கு அவள் விரும்பிய ஆடையை உடுக்கக்கூட உரிமையில்லாதவளாகவும் ஆக்கிவிடுகிறது.

  மதங்களும் மதவழி உருவாகிய கலாச்சாரங்களுமே குற்றவாளிகள்.
  தடபவெட்ப நிலை ஓரளவுக்குத்தான்.

 16. Avatar
  IIM Ganapathi Raman says:

  ஒரு சராசரி ஆண், ஒரு சராசரி பெண்ணைவிட தான் எல்லாவகையிலும் உயர்ந்தவனென்றும், அவல் தன்னை மீறக்கூடாதென்பது தட்ப வெப்ப நிலைகளால் வருவன இல்லை. கலாச்சாரம் விதைத்த நச்சுவிதைகள் மரங்களாக வளர்ந்தவையே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *