மது அடிமைத்தனம்

This entry is part 22 of 29 in the series 3 நவம்பர் 2013

                                                   டாக்டர் ஜி. ஜான்சன்

          நம் சமூகத்தினரிடையே மதுவுக்கு அடிமையாவது மிகவும் சுலபமாகக் காணப்படுகின்றது.
          இதனால் பல குடும்பங்கள் பாழாகியவண்ணமுள்ளன.
          தற்போது இளம் வயதிலேயே குடிக்க பழகிக்கொண்டு எதிர்காலத்தையே வீணடிக்கும் பல இளைஞர்களும் பெருகி வருகின்றனர்.
          இவர்கள் குடி போதையில் தகாத செயல்களில் ஈடுபட்டு குற்றவாளிகளாகின்றனர். கொலை, தற்கொலை, விபத்து கொள்ளை, வன்முறை, கற்பழிப்பு போன்ற தகாத செயல்களின் பின்னால் குடி என்ற அரக்கன் உள்ளது குடி போதையில் தெரிவதில்லை.

           மதுவின் சரித்திரம் சரித்திர காலத்திற்க்கு முட்பட்டது எனலாம். இதை எப்படியோ எல்லா நாடுகளிலும் மனிதன் எப்படியோ கண்டுபிடித்து அருந்தி மகிழ்கிறான்.

இதை அளவோடு அருந்தினால் உடலுக்கு நல்லது என்றாலும், அளவுக்கு மீறினால் இது விஷத்தன்மை மிக்கது என்பது அநேகமாக அனைவருக்கும் தெரிந்த உண்மைதான்.

அமெரிக்காவில் மட்டும் வருடத்தில் 100,000 க்கு மேற்பட்டவர்கள் மதுவுக்கு அடிமையானதால் அகால மரணம் அடைகின்றனர். உலகின் இதர நாடுகளிலும் இந்த அளவில் இருந்தாலும் சரியான புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை.

மதுவின் விலை வருடா வருடம் உயர்ந்து வந்தாலும், குறைந்த விலையில் கள்ளச் சாராயம் கிடைப்பதால் ஏழைகளும் இதை வாங்கிப் பருகும் அவலம் உள்ளது. இவர்கள் வீட்டில் உள்ள பொருட்களை விற்றும்கூட மது வாங்கி பருகுவதுண்டு. அதோடு வீட்டில் மனைவியையும், பிள்ளைகளையும் கவனிக்காமல் அவர்களையும் துன்புறுத்துவதுண்டு .

சில நாடுகளில் மது தாரளாமாக கிடைக்கிறது. சில நாடுகளில் மது விலக்கு கட்டாயப் படுத்தப் பட்டுள்ளது.சில மதங்கள் குடிப்பது பாவம் என்று கூறி தடை விதிக்கின்றன. சில மதங்கள் இதை பெரிது படுத்துவதில்லை.

வள்ளுவர்கூட கள்ளுண்ணாமை எனும் அதிகாரத்தில் பத்து குறள்கள் எழுதியுள்ளார். அவற்றில் உடல் நலக் கேடு உண்டாக்கும் மது பற்றி இவ்வாறு அருமையாகக் கூறியுள்ளார்:

” கையறி யாமை யுடைத்தே பொருள் கொடுத்து

மெய்அறி யாமை கொளல் .”

மதுவை உட்கொண்ட உடனேயே லேசான மனநிலை மாற்றம் முதல், முற்றாக சுயக் கட்டுப்பாடு இல்லாத நிலைக்கு ஒருவர் உட்படலாம். பார்வை, பேச்சு, அங்க அசைவுகள் கூட மாறலாம்.

இதை தற்காலிக உடல் நச்சூட்டு ( temporary systemic poisoning ) எனலாம். இதையே போதை ( alcohol intoxiication or drunkennness ) என்கிறோம்.

தொடர்ந்து குடிக்கவில்லையெனில் ஒரு சில மணி நேரத்தில் இந்த தற்காலிக நிலை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும். ஒவ்வொரு முறையும் குடிக்கும் போது இதுபோன்ற தற்காலிக நிலை எழும்.

இரத்தத்தில் 0.08 சதவிகிதம் மது இருந்தால் அதை போதைக்கான குறியீடாக குற்றப் பிரிவினர் நிர்மாணிக்கின்றனர் இவர்கள் வாகனம் ஓட்டுவதும் சட்டப்படி குற்றமாகும்.

அளவுக்கு அதிகமான மது இரத்தத்தில் இருக்க நேர்ந்தால் மூளை பாதித்து நினைவு இழந்து உயிருக்கு ஆபத்தாகலாம்.

நீண்ட கால மது அடிமைத்தனம் ( Chronic Alcoholism ) தொடரக்கூடிய ஆபத்தான பின்விளைவுகளை உண்டாக்கவல்லது. இப்படிப் பட்டவர்களின் உடல் மதுவுக்குப் பழக்கப்பட்டு , அதிக மதுவை நாடும். அதோடு மதுவைச் சார்ந்த வாழ்க்கைக்குத் தள்ளப்படுவர்.

இவர்களால் மதுவை நிறுத்துவது சிரமம். இப்படி இவர்கள் அடிமையானது அடுத்தவருக்கு தெரியலாம் அல்லது தெரியாமல் கூட போகலாம். இவர்களில் ஒரு சிலர் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு பிரச்னைகளில் மாட்டிக்கொள்வதுண்டு. வேறு சிலரோ ஓரளவு குறைத்துக்கொண்டு சாதாரண நிலையில் உள்ளதுபோல் சமாளித்து விடுவதுண்டு. ஆனால் இந்த இரண்டு வகையினரும் மதுவுக்கு அடிமையானவரே .

மது அடிமைத்தனத்தின் அறிகுறிகள்

* தற்காலிக ஞாபக மறதி, திடீர் நினைவிழத்தல் ( Blackouts )

* குடும்பத்தினர் அல்லது நண்பர்களிடம் அடிக்கடி சண்டைச் சச்சரவு

* இளைப்பாற, உற்சாகமடைய, தூங்க, பிரச்னையை எதிர்நோக்க, இயல்பாக இருக்க மதுவை நாடுதல்.

* மதுவை நிறுத்தினால் தலைவலி, பரபரப்பு, பயம், தூக்கமின்மை, குமட்டல் போன்றவை உண்டாகுதல்.

* நடுங்கும் கைகள், தொடந்த வயிற்றுப் போக்கு, தனிமையில் குடிப்பது, காலையிலேயே குடிப்பது. இரகசியமாகக் குடிப்பது.

மது அடிமைத்தனத்தால் உண்டாகும் உடல் ரீதியான வியாதிகள்

* இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. சக்திக்கு எரிபொருள் சர்க்கரை. அளவுக்கு அதிகமான சர்க்கரை கெடுதி என்றாலும், குறைவான சர்க்கரையும் கெடுதியே.

* வயிற்றில் புண்ணை உண்டுபண்ணி அது புற்று நோயாகவும் மாறும் ஆபத்து உள்ளது.

* கணைய அழற்சியை உண்டுபண்ணி , கடுமையான வலியை உண்டுபண்ணுவதோடு புற்று நோயாகவும் மாறலாம்.

* உணவுக் குழாய், வயிறு, குடல் போன்றவற்றில் புற்று நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகமாகிறது.

* கல்லீரல் சுருங்கி கரணை நோய் ( Cirrhosis Liver ) உண்டாகி கல்லீரல் செயல் இழந்து உயிர் பிரியும். மதுவுக்கு அடிமையானவர்களில் ஐந்து பேர்களில் ஒருவர் இதனால் பாதிப்புக்கு உள்ளாகிறார்.

* சிறுநீரகம், மூளை, இருதயம், இரத்தக் குழாய்கள் போன்றவையும் பாதிப்புக்கு உள்ளாகி உயிருக்கு ஆபத்தை உண்டுபண்ணலாம்.

மது அடிமைத்தனத்துக்கு முக்கிய காரணங்கள்

மரபணு, மனோவீயல் , உடல், சுற்றுச் சூழல், சமுதாயம் ஆகியவை முக்கியப் பங்கு வகிப்பதாகக் கருதப் படுகின்றன. இவை ஆளுக்கு ஆள் மாறலாம். இவற்றில் மரபணுவின் பங்கு முக்கியமானது. பெற்றோர் ஒருவருக்கு மதுப் பழக்கம் இருந்தால் பிள்ளைக்கு நான்கு அல்லது ஐந்து தடவைகள் அதிகமாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் ஒரு சில பிள்ளைகள் வைராக்கியத்தின் மூலம் இதிலிருந்து தப்பும் வாய்ப்பும் உள்ளது.

           சிகிச்சை முறைகள்

மது அருந்துவதை நிறுத்துவதே நிரந்தரமான குறிக்கோள். ஆனால் மதுவுக்கு அடிமையானவர் திரும்பத் திரும்ப அதை நாடும் நிலை ஏற்படுவதால் இந்த குறிக்கோள் நிறைவேறுவதில் சிரமம் உள்ளது. அடிமையானவர்கள் எப்போதும் ஏதாவது சாக்குப்போக்குச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள் – மதுவுக்கு மீண்டும் திரும்ப. இதனால் சிகிச்சை முறைகள் வெற்றி காண்பதில் சிரமம் உள்ளது.

முன்பெல்லாம் மனதில் உறுதி இல்லாதவர்கள், குணத்தில் மாறுபட்டவர்கள் என்று இவர்கள் குற்றம் சாட்டப்பட்டனர். ஆனால் இப்போது இது யாரை வேண்டுமானாலும் தாக்கவல்ல ஒரு வியாதியாகக் கருதப்படுகிறது.

சமுதாயத்தின் ஊக்குவிப்பும், தன்முனைப்பும் மது அடிமைத்தனத்தில் உள்ளவர்கள் அதிலிருந்து வெளிவர பெரிதும் பயனளிக்கும் என்று கருதப் படுகிறது. இவர்களில் 50 சதவிகிதத்தினர் நிரந்தரமாகக் குணம்பெறும் வாய்ப்பு உள்ளது. ஆனால் சமுதாயத்தால் புறக்கணிக்கப் பட்டவர்கள், உடல் நலம் குன்றியவர்கள், தன்முனைப்பு இல்லாதவர்கள் திரும்பவும் மதுவுக்கு அடிமையாகும் வாய்ப்பு நிறையவே உள்ளது. நீண்ட நாட்கள் குடிக்காமல் இருப்பது, குறைவான அளவு குடிப்பது, ஆரோக்கியமான உடல் நலம், சமுதாய நிகழ்வுகளில் பங்கேற்பது போன்றவை வெற்றியின் அளவுகோல்கள்

பாதிப்புக்கு உள்ளானவர் முதலில் தனக்கு மதுப் பிரச்னை உள்ளது என்பதை அறிந்து அதை நிறுத்திவிட சம்மதிக்கவேண்டும். இதை குணப்படுத்தி மதுப் பழக்கத்திலிருந்து விடுபடலாம் என்று நம்ப வேண்டும்.

சிகிச்சையில் இரண்டு பிரிவுகள் உள்ளன:

* வெளியேறுவது அல்லது நச்சுத்தன்மையை உடைப்பது – Withdrawal or Detoxification.

வெளியேறினாலும் மீண்டும் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுவதால் குணம்பெறுதல் மிகவும் சிரமம்தான். தொடர்ந்து குடிக்காமல் இருப்பது பெரும் சவாலாகும். வெளியேறியதும் பரபரப்பு, தூக்கமின்மை போன்றவை உண்டாகும். நீண்ட நாட்கள் அடிமையானவருக்கு நடுக்கம், பயம், பரபரப்பு பிரமை, மருட்சி, மாயத் தோற்றம் ( Hallucinations of Delirium Tremens ) உண்டாகும்.இவற்றை விலக்கல் நோய்க் குறி ( Withdrawal Syndrome ) என்று அழைப்பதுண்டு. இதை முறையாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறாவிடில் 10 சதவிகிதத்தினர் இறக்க நேரலாம்.

இதற்கு சில மருந்துகள் உள்ளன.

* டைசல்பிராம் ( Disulfiram ) – இந்த மருந்து மதுவின் ஜீரணிப்பை தடுக்கிறது. இதனால் கொஞ்சம் மது அருந்தினாலும் குமட்டல், வாந்தி, குழப்பம் , மூச்சுத் திணறல் உண்டாகி மேலும் குடிப்பதை வெறுக்கச் செய்கிறது.

* நேல்ட்ரெக்சொன் ( Naltrexone ) – மதுவை நாடுவதைக் குறைக்கும் மருந்து இது.

* பென்ஸோடையஜெப்பீன்ஸ் ( Benzodiazepines ) – இவை பரபரப்பு, பயம், நடுக்கம், தூக்கமின்மை போன்றவற்றுக்குப் பயன்படும்.

* குணமாதல் – Recovery

முற்றிலும் குணமாக மீண்டும் மதுவுக்குத் திரும்பாமல் இருக்க வேண்டும். இதற்கு மருத்துவரின் கண்காணிப்பு, உறவினரின் ஒத்துழைப்பு, தன்முனைப்பு ஆகியவை இன்றியமையாதவை.

( முடிந்தது )

Series Navigationநினைவலைகள்சீதாயணம் [முழு நாடகம்] [5] படக்கதையுடன்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    paandiyan says:

    மதுவை வைத்து குஜராத்தை வம்பு இழுக்கலாம் என்று குறுக்கு புத்திக்கொண்டோர் – படிக்க, புத்தி தெளியவேண்டிய நேரம் இது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *