1. பிரான்சில் என்ன நடக்கிறது
பிரெஞ்சு அரசாங்கத்திற்குக் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதார நெருக்கடி. வருவாயை அதிகரிக்கவும், வீண் செலவுகளைக் குறைக்கவும் கணக்கியல் துறையும், ஐரோப்பிய நிதி நிர்வாகத் துறையும், கண்டிப்பான சில வழிமுறைகளைப் பிரெஞ்சு அரசாங்கம் பின்பற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில் அரசாங்கமும் நிதி வருவாயைப் பெருக்கிக்கொள்ள சிக்கன நடவடிக்கைகள் மட்டுமே போதாதென்ற நிலையில் நாள்தோறும் புதிய புதிய வரிகளை விதித்துவருகிறார்கள். ஏற்கனவே அன்றாட உபயோகத்துகான மின் சக்தியும், எரிவாயுவும் கடுமையான உயர்வை சந்தித்து உள்ளன. காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை கடந்த சில வருடங்களைக் காட்டிலும் பன் மடங்கு அதிகரித்துள்ளன. தற்போதையை கருத்துகணிப்புகள் அதிபர் பிரான்சுவா ஒலாந்துக்கு எதிராக இருக்கின்றன. நாட்டில் அறுபது சதவீத்தினருக்குமேல் அதிபர் மீது அவநம்பிக்கை கொண்டிருக்கின்றனர். இனவாதக் கட்சி, நிலவும் அவநம்பிக்கையைக்கொண்டு தன்னை ஊட்டப்படுத்திக்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளது. இரண்டு இடைத்தேர்தலில் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் வென்றிருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஆப்ரிக்க நாடுகளில் பணயக் கைதிகளாக இருப்பவர்களில் நால்வரை இஸ்லாமிய தீவிரவாதிகளிடமிருந்து நைஜீரிய நாட்டின் தலையீட்டினால் மீட்டிருப்பினும் தீவிரவாதிகள் கேட்டப் பணயத் தொகையைக் கொடுத்தே மீட்டிருப்பதாக ஒரு குற்றசாட்டு. ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்க இயலாமல் பிரெஞ்சு அரசாங்கல் தவித்துக்கொண்டிருக்கிற நிலையில், தங்கள் கூட்டணி அரசாங்கத்தில் பங்கேற்று இருக்கிற பசுமைவாதிகளை சமாதானப்படுத்தவென சுற்றுப்புற சூழலை மேம்படுத்த அறிமுகமான வரிக்கு எதிராக கடும் எதிர்ப்புகிளம்ப, அதனையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டியதாயிற்று. இப்போது வேறொரு பூதம் கிளம்புஇருக்கிறது. இனி நட்சத்திர விளையாட்டுவீரர்கள் தங்கள் வருவாயில் 75 சதவீதத்தை வரியாகச் செலுத்தவேண்டும். நாட்டின் பெரும் நகரங்களில் உள்ள காற்பந்தாட்டக் குழுமங்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன. நட்சத்திர விளையாட்டுவீரர்கள் நாட்டைவிட்டு வெளியேறிவிடுவேன் என அச்சுறுத்துகிறார்கள்.
2. மொழிபெயர்ப்பு குறித்து:
அண்மையில் காலச்சுவடு பதிப்பகம் தனது முக நூலில் இப்படியொரு அறிவிப்பை செய்துள்ளது இந்திய மற்றும் உலகமொழிகளிலிருந்து தமிழ்ப்படுத்துவதற்கான மொழிபெயர்ப்பாளர்களைத் தேடும் முகமாக வந்துள்ள அறிவிப்பு அது.
« Kalachuvadu Publications wishes to establish contact with translators from Indian and world languages to Tamil. We are keen to translate literature directly from Marathi and Punjabi to Tamil. We are also looking to work with translators from world languages. Friends with command of foreign languages can either translate a work or be a ‘mentor’ i.e. oversea and edit a translated text. We are particularly looking for Tamils with a working knowledge of Korean, Swedish, German, Arabic, Spanish, Norwegian and Danish.”
தமிழ் நாட்டில் சில விதிமுறைகள் வைத்திருக்கிறார்கள்; எழுத்தில் ஏது சீனியர் ஜூனியர் என்பவர்கள் கூட என்னிடத்திலா இலக்கிய சர்ச்சை என்ற முகத்தோடு நம்மை எதிர்கொள்கிறார்கள். இவர்கள் அரசியல்வாதிகளுக்கு எவ்விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. எதைப்பற்றியும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கருத்துக்கள் வைக்கலாம், வெறும் கையை முழம்போடலாம், மணலை கயிறாகத்திரிக்கலாம். அவர்கள் கருத்துக்களை மேற்கோள்காட்டி சொல்பவர்கள் கூட ‘சொன்னவர் யாரோ எவரோ அல்ல’ தமிழில் பன்ன்னிரண்டு கதைகளை தழுவல் செய்தவர், பரமாரத்த குருவின் சீடர்களில் ஒருவர் அவரே சொல்லியிருக்கிறார் எனவே நாம் யோசிக்க வேண்டியிருக்கிறது எனக் கட்டுரை எழுதுவார். இந்த மனைநிலைதான் நம்மை பிள்ளையார் சதுர்த்தி, களிமண் பிள்ளையார்களை ஆயிரக்கணக்கில் நகலெடுத்து கடலிலும் கரைக்க முடியாமல், கரையொதுங்கினாலும் தப்பில்லையென்று பெருமூச்சு விடுகிறோம்.
மொழிபெயர்ப்புக்கு இதுதான் இலக்கணம் என சொல்ல ஒன்றுமில்லை. ஒரு வாசகனாக படைப்போ மொழிபெயர்ப்போ என்னை எப்படி உள்வாங்கிகொள்கிறதோ அதைப்பொறுத்தே உகந்ததா இல்லையா எனத் தீர்மானிக்கிறேன். எனக்கு உகந்ததாக இருப்பது உங்களுக்கும் ஏற்புடையதாக இருக்கவேண்டுமென்ற கட்டாயமில்லை, அதுபோலவேதான் இல்லாததுகுறித்து முரண்படவும் என்னைப்போலவே உங்களுக்கும் உரிமையுண்டு. மொழிபெயர்ப்பு படைப்பைப்போலவே அனுபவம் சார்ந்தது, எழுத எழுத மேம்படுவது. ஒருகட்டத்தில் ஓரளவு புரிந்துகொண்டு நல்லதொரு மொழிபெயர்ப்பை எந்த மொழிபெயர்ப்பாளனாலும் தர முடியும்.
காலச்சுவடு பதிப்பக அறிவிப்பினை வைத்து இங்கே சிலவற்றைப் பகிர்ந்துகொள்ள்வேண்டும். இதொரு நல்ல முயற்சி. நவீன இலக்கியங்களின் தீவிர வாசகன் என்ற அடிப்படையில் காலச்சுவடு இதழின் முயற்சி பெரிதும் வரவேற்க தக்கது. தமிழில் எத்தனை பதிப்பகங்கள் காப்புரிமை பெற்று பதிப்பிகின்றனவென்று தெரியாது. காலச்சுவடு அவ்விஷயத்தில் தெளிவாக இருக்கிறது. தற்போது மூல மொழியிலிருந்து தமிழுக்குக் கொண்டுவரவேண்டுமென்கிற இப்புதிய முயற்சியும் வரவேற்கதக்கது.
இந்த ஆண்டு ‘Livres Hebdo’ என்ற பிரெஞ்சு சஞ்சிகையின்படி 554 நாவல்கள் பிரெஞ்சில் வந்துள்ளன. அவ்வளவா என வியக்க வேண்டாம், பிரெஞ்சு பதிப்புலகம் இந்த எண்ணிக்கைக்கே மூக்கைச் சிந்திக்கொண்டிருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே படிப்படியாக எண்ணிக்கை குறைந்துவருகிறதாம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு (2007ல்) மொழிர்ப்புகளையும் சேர்த்து 727 படைப்புகள் வந்திருக்கின்றன, சென்றவருடம் 646. இவ்வருட 554படைப்புகளில் 356 நாவல்கள் நேரடியாக பிரெஞ்சில் எழுதப்பட்டவை, 198 மொழிபெயர்ப்புகள்.
முக்கிய பிரெஞ்சு பதிப்பகங்கள் அனைத்துமே இரண்டு விஷயங்களில் கறாராக இருக்கிறார்கள். ஒன்று பிறமொழிக்கு பிரெஞ்சு படைப்பை கொண்டு செல்வதென்றாலும், பிறமொழியிலிருந்து பிரெஞ்சுக்குக் கொண்டுவருவதென்றாலும்: 1. மூலத்திலிருந்து மொழிபெயர்க்கப்படவேண்டும், 2. கொண்டு செல்லப்படும் மொழியைத் தாய்மொழியாக மொழி பெயர்ப்பாளர் கொண்டிருக்கவேண்டும். பொதுவில் எந்த மொழிபெயர்ப்பும் முழுமையானதல்ல. மூலத்தை நூறு சதவீதம் மொழிபெயர்த்திருக்கிறேன் என்பதெல்லாம் ஓர் ஏமாற்று வேலை, மொழிபெயர்ப்பாளன் மூல ஆசிரியனல்ல, ஓர் உரை ஆசிரியன் அவ்வளவுதான், அவன் விளங்கிக்கொண்டதை அவனுடைய மொழியில் சொல்கிறான். பிரெஞ்சில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கிறபோதெல்லாம், ஒத்திட்டுப் பார்க்க நான் கையாளும் உபாயம், முழுவதுமாக பிரெஞ்சிலிருந்து தமிழுக்குக்கொண்டுவந்ததும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்போடு ஒத்திட்டு பார்ப்பது வழக்கம். ஒவ்வொரு முறையும் எங்கேனும் ஒன்றிரண்டு வார்த்தைகள் தவறுதலாக மொழி பெயர்க்கப்பட்டிருக்கும், வாக்கியங்கள் விடுபட்டிருக்கும். இந்தக்குறை நேரடியாக மொழிபெயர்க்கிற எனக்கும் நேர்கிறது. பிரெஞ்சு நண்பர்களுடன் விவாதித்தே முடிவுக்கு வருகிறேன். ஒரு உதாரணம் Le Procès verbal என்ற Le Clèzio எழுதிய நாவலை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன். அதில் ஓரிடத்தில் sous-verre என்றொரு சொல் வரும் அது வேறொன்றுமில்லை கண்ணாடி டம்ளரின் கீழ்வைக்கிற சிறு தட்டு அல்லது குறுவட்டு என்று கொள்ளலாம். மேற்குலகில் வீட்டிலும் சரி, உணவு விடுதிகளிலும் சரி, தண்ணீர், குளிர்பானங்கள், மது என எதைவழங்கினாலும் மேசையில் அந்தக் சிறுதட்டைவைத்து அதன்மீதே பானமுள்ள கண்ணாடிக்குவளையை வைப்பார்கள். இந்த sous-verre ஐ ஆங்கில மொழிபெயர்ப்பாளர் (அமெரிக்கர்) (cup and) Saucer என்று மொழிபெயர்த்திருக்கிறார். இந்த saucerக்கு பிரெஞ்சில் sous coupe என்று பெயர். இந்த ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து பிரெஞ்சு தெரியாத இந்திய நண்பர் மொழிபெயர்க்கிறார் எனில், (அமெரிக்கரெடுத்த நகலை xerox எடுப்பவர்) நிச்சயமாக கிளேஸியோ சொல்கிற சிறுதட்டு அல்லது குறுவட்டு அந்த ஆங்கில வழி தமிழ்படுத்தும் நண்பருக்கு கண்ணிற்படாமலேயே போகும் ஆபத்திருக்கிறது. தவிர இந்திய நண்பர் அந்த ‘Saucer’ ஐ ‘Soccer’ என்று பொருள்கொண்டு காற்பந்து என மொழிபெயர்க்க அதற்காகவே காத்திருக்கும் புண்ணியவான்கள் தீவிரமாக கட்டுரை ஒன்று எழுதி இலங்கைத் தோழர்கள் ‘உதைப்பந்து’ எனச்சொல்வதை’ எப்படிக் காற்பந்து என மொழி பெயர்க்கலாம் இதில் ஏதோ சதி இருக்கிறது, மேகத்திய நாடுகளுக்கு பங்கிருக்கிறது எனக் கட்டுரை எழுதும் ஆசாமிகளும் இருக்கிறார்கள். இதை உதாரணத்திற்குத்தான் சொன்னேன். மொழி பெயர்ப்பு என்பது இரு மொழிகளிலுள்ள ஆளுமை சார்ந்த தொழில் நுணுக்கமல்ல, கலாசாரம் பண்பாடு சம்பந்தப்பட்ட விஷயங்களெல்லாம் அதில் அடங்கிக்கிடக்கின்றன. இணைய தளங்களில் இன்று பல குழுமங்கள் இருக்கின்றன. மேற்கத்திய மொழி பெயர்ப்பாளர்களே பலரும் விவாதித்துப் பொருள்கொள்வதை இன்று பார்க்கிறோம், அப்படியான ஆரோக்கியமான சூழல் பிற இந்திய மொழிகளில் நிலவுகிறதா எனத் தெரியவில்லை, ஆனால் நமது தமிழில் இல்லை. தமிழில் ஆயிரத்தெட்டுவகை மொழியாடல்கள் இருக்கின்றன.முறையான அகராதிகள் இல்லை, அப்படியொரு மரம், ஒருவகைப் பிரபந்தம் எனச்சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் “கால்வினோ’ தப்பு “கல்வினோதான்” சரி என விவாதிப்பவர்கள், செஞ்சிக்குப்பக்கத்திலிருக்கிற தீவனூர் பள்ளி மாணவர்கள் செஞ்சியை Gingee எனப்படிக்கவேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். இப்போதெல்லாம் பிரெஞ்சு பெயர்களை மிகச்சரியாக எழுதவேண்டுமென கிரிவலம் வருகிறவர்களையெல்லாம் தமிழில் பார்க்கிறேன். ஆங்கிலத்தில் பீட்டர் என்ற பெயரைத்தான் பிரெஞ்சில் பியெர் என்கிறார்கள், ஸ்பானிஷ் மொழியில் ‘பெட்ரோ’ என்கிறார்கள். மொழிபெயர்ப்பாளன் அக்கறைகாட்ட வேண்டிய வெளிகள் வேறு. அம்பையின் சிறுகதைகளைப் பிரெஞ்சு பதிப்பகத்திற்காக பிரெஞ்சு பெண்மணி ஒருவருடன் மொழி பெயர்த்துகொண்டிருக்கிறேன். இந்தியாவிலிருந்து வந்தவன் என்றாலும் ‘Tiffin’ என்ற சொல் என்னைப்பாடாய் படுத்துகிறது. ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தவர் Tiffin என்ற சொல்லைப்போட்டு வெகு சுலபமாக இக்கட்டிலிருந்து தப்பித்திருக்கிறார் ( ஆனால் ஆங்கிலேயேரிடம் கொஞ்சம் விசாரித்துப்பாருங்கள் அப்படியொரு சொல் எங்களிடத்திலில்லையென்று சத்தியம் செய்வார்கள். ஆனால் இந்திய வழக்கில் காலையில் tiffin சாப்பிடுகிறோம், ஆபீஸ¤க்குப் போகிறபோது tiffin கட்டியாச்சா என்று கேட்கிறோம், மனைவியும் tiffin boxல் போட்டுத் தருகிறாள். மாலை ஆபிஸிலிருந்து வீட்டிற்கு வந்ததும் மீண்டும் இன்றைக்கு என்ன tiffin என்று கேள்வி. பிரெஞ்சில் அப்படி Tiffin என்ற ஒற்றை சொல்லை கூறித் தப்பிக்க எனக்கு விருப்பமில்லை. இப்படி நிறையச்சொல்லிக்கொண்டு போகலாம், வாசகனுக்கு வேண்டுமானால் ரொலான் பார்த் சொல்வதுபோல எழுதியவனை மறந்து வாசிப்பது உகந்தது, ஆனால் மொழிபெயர்ப்பாளன் மொழிபெயர்க்கிறபோது ஆசிரியனையும் வாசிக்க இருப்பவனையும் மனதில் நிறுத்தி மொழிபெயர்த்தாலே ஐம்பது சதவீதம் மொழிபெயர்ப்பு தேறிவிடும்.
- மொழிவது சுகம் நவம்பர் 1 2013 – பிரான்ஸ், மொழிபெயர்ப்பு
- நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி சனிக்கோளின் வட துருவ முழுவட்ட வடிவத்தை முதன்முறைப் படம் எடுத்தது.
- இளைஞன்
- அப்பா
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 47 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) ஆத்மாவின் களிப்பு .. !
- ஜே.பிரோஸ்கான் கவிதை இரண்டு
- நீங்காத நினைவுகள் – 21
- காரைக்குடி கம்பன் கழகத்தின் நவம்பர் மாதக்கூட்டம்
- வாழ்க்கைத்தரம்
- சொல்வனம் இணைய இதழின் 94வது இதழ்
- புகழ் பெற்ற ஏழைகள் 31.சர்வாதிகாரியாக மாறின ஏழை
- சங்க இலக்கியத்தில் பண்டமாற்று முறை
- பிறவிக் கடன்!
- கனவு
- ஜாக்கி சான் – 14. மாய லோகத்தின் அறிமுகம்
- சீன தமிழ் வானொலி பொன்விழா போட்டி அமெரிக்க வாழ் தமிழருக்கு 2 முதல் பரிசுகள்!
- Online tickets site will be closed Thursday (Nov 31st) Midnight for Sangam’s Thamilar Sangamam event
- வேட்டை
- அணுவிலே ஆற்றல் நூல் வெளியீடு – சி. ஜெயபாரதன்
- பெண்சிசு/கரு கொலைகள் அதிகம் நடந்தால் அதன் பெயர் நல்லாட்சியா
- நினைவலைகள்
- மது அடிமைத்தனம்
- சீதாயணம் [முழு நாடகம்] [5] படக்கதையுடன்
- ஆற்று நீரின் ருசி – “நண்டு புடிக்கப் போய்” – ராஜ்ஜாவின் சிறுகதைகள்
- கடைசிப் பக்கம்
- கனவு நனவென்று வாழ்பவன்
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – அத்தியாயம் 7 ஜராசந்தன்
- திண்ணையின் இலக்கியத் தடம் – 7 செப்டம்பர் அக்டோபர் 2000 இதழ்கள்
- தாகூரின் கீதப் பாமாலை – 87 புல்லாங்குழல் வாசிக்கும் .. !