காசேதான் கடவுளடா

This entry is part 10 of 24 in the series 24 நவம்பர் 2013
                            

பல வருடங்களுக்கு முன்பு நான் ஹவாய்யி ( Hawaii ) என்ற ஒரு அருமையான ஆங்கில நாவல் படித்தேன். பெஸிஃபிக் மகா சமுத்திரத்தில் உள்ள அந்த பீஜித் தீவுகளில் ( Fiji Islands )ஆங்கிலேயர்கள் காடுகளை அழித்து கரும்புத் தோட்டங்கள் நிறுவிய காலனித்துவ காலத்தின் பின்னணியில் அது எழுதப்பட்டிருந்தது. அப்போது அந்தத் தோட்டங்களில் வேலை செய்ய தென் சீனாவிலிருந்து சீனர்கள் கொண்டுவரப்பட்டனர்

அந்த சீனர்களைப் பற்றி எழுதியுள்ள நாவல் ஆசிரியர், அவர்களிடம் ஊறிப்போன மூன்று குணாதிசயங்களைக் குறிப்பிடுகிறார்.

வெளிநாடு செல்லும் சீனர்கள் தங்களின் தாய்நாட்டில் மனைவி மக்கள் இருந்தாலும், சென்ற ஊர்களிலும் வேறு பெண்ணை மணந்துகொள்வார்கள். ஆனால் அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளுக்கும் முதல் மனைவியே தாயாக மதிக்கப்படுவாள். அவர்கள் குடியேறும் பகுதிகளில் நிச்சயமாக ஒரு சிறிய ” சிவப்பு விளக்கு ” பகுதி வைத்துக்கொள்வார்கள். ஏதாவது ஒரு வகையில் காசு வைத்து சூதாடுவார்கள்.

சீனர்களுக்கு இயற்கையிலேயே வியாபார நுணுக்கம் உள்ளது. மலாயா சிங்கபூரில் குடியேறிய சீனர்களும் வியாபாரத்தில் சிறந்து விளங்கி பொருளாதார ரீதியில் முன்னணியில் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் நகர்ப் புறங்களில்தான் வசிப்பார்கள். அப்படி இரப்பர் அல்லது செம்பனைத் தோட்டத்தில் ஒரு சீனன் வசித்தால் நிச்சயம் அவன் அங்கு மளிகைக் கடை வைத்திருப்பான். அங்குள்ள தமிழர்களுக்கு விலை மலிவான ” சம்சு ” எனும் எரி சாராயத்தை கடனுக்கு விற்று ,கணக்கு வைத்துக்கொண்டு மாத இறுதியில் சம்பளத்தில் முழுதாக வாங்கிக்கொள்வான்.

எப்படியாவது ஏதாவது வியாபாரம் செய்து குறுக்கு வழியிலாவது இலாபம் அடைய நினப்பது சீன சமூகத்தில் பரவலாக காணப்படுகிறது.

இதை நான் அனுபவப்பூர்வமாகக் கண்டு வியந்துள்ளேன். இங்கு மூன்று இடங்கள் பற்றி விவரித்துள்ளேன்.

நான் முன்பு பணிபுரிந்த ஒரு கிளினிக் அருகில் ஓர் இளம் சீனத் தம்பதியர் பூஜை சாமான்கள் கடை வைத்திருந்தனர். நான் அவ்வப்போது அங்கு சென்று பார்ப்பேன். அதில் புத்தர், சீன தேவதைகள், நீண்ட தாடியுடைய வயதான சீன சாமிகளின் பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும்.

கட்டுக்கட்டாக சீன நாட்டு பணம் அச்சடிக்கப்பட்ட வண்ணவண்ணத் தாள்கள் வைக்கப்பட்டிருக்கும். காகிதத்தில் செய்த வீடுகள், கார்கள், கப்பல்கள், விமானங்கள் விற்பனைக்கு கிடைக்கும். சீனர்கள் இறந்துவிட்டால், இவற்றை அவர்களின் சவ ஊர்வலத்தின்போது அவர்களின் சவப்பெட்டிகளின் அருகே வைத்து வழிபட்டால் அவர்கள் மறு உலகம் செல்லும்போது இவற்றை உடன் எடுத்துச் செல்வதாக நம்புகின்றனர்.

அதோடு ஆளுயர ராட்சத ஊதுபத்திகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும். பூஜைக்கான பூக்களும் பழங்களும்கூட அங்கு கிடைக்கும்.

நான் பார்த்தவரையில் எப்போதாவதுதான் குறிப்பிட்ட சில நாட்களில் சீனர்கள் அந்த கடைக்கு சில பொருட்களை வாங்க வருவர். ( தினமும் சீனர்கள் இறப்பது இல்லை ). பெரும்பாலும் அந்தக் கடை வெறிச்சோடிதான் காணப்படும். நான்கூட ஏன் இப்படி வியாபாரம் இல்லாமல் ஒரு கடையை திறந்து வைத்து கணவன் மனைவி அங்கு உள்ளனரே என்று எண்ணியதுண்டு. அவர்கள் அது பற்றி கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அதே வேளையில் வேறொன்றையும் நான் அங்கு கவனிக்கத் தவறவில்லை.

புதன் கிழமைகளிலும், சனி ஞாயிறுகளிலும் அந்த கடைக்கு தமிழர்கள் வருவதும் போவதுமாக இருப்பார்கள். சீன சாமிக் கடையில் தமிழர்கள் என்ன வாங்குகிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை.

உங்களுக்கும் புரியாவிட்டால் பரவாயில்லி. கதை முடிவில் புரிந்துவிடும்.

இப்போது வேறொரு இடத்துக்குச் செல்வோம் வாருங்கள். இது ஒரு சீனர் உணவகம். ஆனால் இங்கு சமைப்பது , பறிமாறுவது எல்லாமே இந்தோனேஷியர்கள். இங்கு சீனர்கள் விரும்பி உண்ணும் பன்றிக்கறி கிடையாது. சீனத் தேநீரும் ( Chinese Tea ) இங்கு கிடைக்காது. இங்கு சீனர்கள் வருவதில்லை. முழுக்க முழுக்க இந்தோனேஷியர்கள்தான் அமர்ந்திருப்பர். சில தமிழர்களையும் காணலாம். இங்கும் புதன்கிழமையும், சனி ஞாயிறுகளிலும் கூட்டம் அலைமோதும்.

கல்லாப்பெட்டியில் ஓர் இளம் சீன மாது எந்நேரமும் கை பேசியில் ஏதோ செய்துகொண்டிருப்பாள். அவளுடைய பதின்ம வயதுடைய மகன்கூட அவளைப்போலவே கை பேசியில் ஏதோ செய்துகொண்டிருப்பான். பணம் செலுத்த வருபவர்களும் அங்கு வேறு ஏதோ செய்துகொண்டிருப்பார்கள். அவர்கள் அங்கு அவளிடமும் அவளுடைய மகனிடமும் அப்படி என்ன செய்கிறார்கள் என்பது உங்களுக்கு புரியவில்லைதானே? அதை கதை முடிவில் தெரிந்து கொள்வீர்கள்.

வாருங்கள் கடை வீதிக்குச் செல்வோம்,. அங்கு ” செவென் இலவன் ” ( Seven Eleven ) வெளியில் சீன இளைஞன் ஒருவன் குறுந்தட்டுகள் விற்பனை செய்கிறான். மேசை மீது அவற்றைப் பரப்பி வைத்திருப்பான். பையில் நிறைய நீலப் படங்களும் ( Blue Films ) வைத்திருப்பான். அவனும் எப்போதும் கை பேசியில் எப்போதும் ஏதோ செய்துகொண்டிருப்பான்.

அவனிடம் வரும் சிலர் ஏதோ பேசிவிட்டு தங்களுடைய கை பேசியைப் பார்த்தவண்ணம் திரும்புகின்றனர். அதுவும் என்னவென்பது புரியவில்லைதானே? பரவாயில்லை. இதோ விரைவில் தெரிந்துவிடும்.

இப்போது இந்த மூன்று வெவ்வேறு மாறுபட்ட இடங்களில் இந்த சீனர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்ப்போம். சந்தேகத்துக்கு இடமின்றி இவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள். நேரத்தை வீணாக்கிக்கொண்டு இருப்பவர்கள் சீனர்கள் அல்ல. சரி. எப்படி இப்படி உட்கார்ந்த இடத்தில் இருந்துகொண்டு இவர்கள் பணம் சம்பாதிக்கின்றனர்?

இந்தக் கதையை தொடங்கியபோது சீனர்களுக்கு உள்ள மூன்று வித குணநலன்கள் பற்றி கூறினேன் அல்லவா? அவற்றில் ஒன்றுதான் இது. ஆம்! சூதாட்டம்! எப்படி?

மலேசியாவில் 4 நம்பர் ( 4 Digit ) சூதாட்டம் சட்டப்பூர்வமாக உள்ளது. ஒரு வெள்ளிக்கு எடுத்தால் முதல் பரிசாக 3,500 வெள்ளிகள் வரை பரிசு கிடைக்கும். இதில் ஜாக்பாட் அடித்தால் பல இலட்சங்கள் கிடைக்கும். ஒவ்வொரு புதன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் குலுக்கல் நடக்கும். மாலை ஆறு மணிக்கு வாங்கினால் இரவு ஏழு மணிக்கு முடிவு தெரிந்துவிடும். இதை மேக்னம், டோட்டோ, கூடா என்று மூன்று பெரிய ஸ்தாபனங்கள் நடத்துகின்றன. இதனால் அரசுக்கு மில்லியன் கணக்கில் வரிப்பணம் கிட்டுகிறது.

ஆனால் இஸ்லாமியரான மலாய்க்காரர்களும், இந்தோனேஷியர்களும் இதை வாங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.

சில சட்டவிரோத சீன நிறுவனங்கள் தலைமறைவில் இருந்துகொண்டு இதே சூதாட்டத்தை அவர்களும் நடத்தி பெரும் பணம் ஈட்டுகின்றனர். இவர்கள் அரசுக்கு வரி கட்டாமலேயே நிகர இலாபம் சம்பாதிக்கின்றனர்.

அந்த மூன்று இடத்தில் நாம் கண்ட சீனர்கள் இவர்களின் ஏஜண்டுகள்.

வருமானம் இல்லாத பூஜை சாமான்கள் வைத்திருந்த சீனன் முட்டாள் இல்லை. அவன் சட்டவிரோதமாக நம்பர் விற்று பணம் ஈட்டுகிறான். அங்கு தமிழர்கள் போவதும் அதனால்தான்.

சீன உணவகம் நிறைய இந்தோனேஷியர்கள் இருந்தது இதனால்தான். அந்த சீன மாதிடம் அவர்கள் நம்பர் வாங்கி சூதாடுகின்றனர். உணவகம் என்ற பேரில் சீனன் சட்டவிரோத சூதாட்டம் நடத்தி வருகிறான்.

இரவில் நீல குறுந்தட்டுகள் விற்பனையாகும் என்பது உண்மையெனினும், நம்பர் விற்பதுதான் லாபகரமானது.

இந்த மூன்று சட்ட விரோத சூதாட்டத்திலும் கை பேசித்தான் பயன்படுத்தப்படுகின்றன. நாம் கேட்கும் நம்பரை அவன் உடன் குறுஞ்செய்தியாக நமக்கு அனுப்புகிறான். பரிசு கிடைத்தால் அதைக் காட்டினால் போதும். பணம் கிடைத்துவிடும்!

காலையில் கடை திறக்கும் சீனர்கள் கைகளில் ஊது பத்திகளை தலைக்குமேல் பிடித்துக்கொண்டு , கண்களை மூடியவாறு வானைப் பார்த்து கும்பிடுகிறார்கள். அன்றைய வியாபாரம் நன்றாக நடந்து நிறைய பணம் கிடைக்க வேண்டிக்கொள்கின்றனர்.

காசேதான் கடவுளடா என்ப்து சீனர்களைப் பொருத்தவரை நூற்றுக்கு நூறு உண்மையே!

Series Navigationடௌரி தராத கௌரி கல்யாணம்….! -26துளைகளிடப்பட்ட இதயங்களோடு தேர்தலை நோக்கிப் பயணிக்கும் வடக்கு
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

7 Comments

 1. Avatar
  ஜெயஸ்ரீ ஷங்கர் says:

  அன்பின் டாக்டர்.ஜி.ஜான்சன் அவர்களுக்கு,

  கதை முடிவில் தெரிந்து கொள்வீர்கள் என்று கூடவே அழைத்துச் சென்று….!

  காசே தான் கடவுளடா…அது சீனருக்கு மட்டும் தெரிஞ்சுதுடா..!

  என்று சீனர்களின் குணநலன்கள் கதையை..?!

  அழகாகக் கதை போல பல விஷயங்களைச்
  எழுதும் உங்களுக்கு நன்றி. இல்லாவிட்டால்…என் போன்றவர்களுக்கு
  இதெல்லாம் பற்றி அறிய வாய்ப்பே இல்லையே.

  மிக்க நன்றி.

  அன்புடன்,

  ஜெயஸ்ரீ ஷங்கர்

 2. Avatar
  subrabharathimanian says:

  நானும் மலேசியா சீன சாவுக்கடை ஒன்றைப் பார்த்தேன். இப்போதுதான் புரிந்தது.

  சுப்ரபாரதிமணியன்

 3. Avatar
  Dr.G.Johnson says:

  அன்புள்ள ஜெயஸ்ரீ ஷங்கர் , ” காசேதான் கடவுளடா – அது சீனருக்கு மட்டும் தெரிஞ்சுதடா ” என்று கதையை இரசித்துப் பாராட்டியுள்ளது கண்டு மகிழ்ந்தேன். நன்றி. மீண்டும் சந்திப்போம் இன்னொரு இடத்தில் அடுத்த வாரம்….அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

 4. Avatar
  ஷாலி says:

  சீனர்கள் எங்கு சென்றாலும் எந்த இழவு கடை வைத்தாலும் காசு சம்பாரிப்பதில் கெட்டிக்காரர்கள்.எதையாவது செய்து உழைத்து பிழைப்பதில் உறுதியுடன் உள்ளனர்.ஆகவேதான்.இன்று உலகம் முழுவதும் சீனப் பொருள்கள் சந்தையை நிறைத்துள்ளன.
  நம்ம தமிழர்கள்(என்னையும் சேர்த்து) எங்கு சென்றாலும் (மலேசியா,சிங்கப்பூர்,இலங்கை,பர்மா) கூலிக்கு கடுமையாக உழைப்பார்கள்.ஆனால் உழைத்த பணத்தைக் கொண்டு சிறுக கட்டி பெருக வாழத் தெரியாதவர்கள். அதை சூதாட்ட விடுதிகள்,பரிசு சீட்டு போன்ற குறுக்கு வழியில் கொட்டி கோடீஸ்வரனாக மாற ஆசைப்படுபவர்கள்.இறுதியில் எல்லாம் இழந்து கோமணத்தோடு அகதியாக வருவார்கள்.

  —————————————————–
  குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா
  இது கொள்ளை அடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா
  தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
  இதயம் திருந்த மருந்து சொல்லடா
  இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா
  வாழ்வில் எந்த நேரமும் சண்டை ஓயாதா முரட்டு உலகமடா
  தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
  இதயம் திருந்த மருந்து சொல்லடா
  குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா
  இது கொள்ளை அடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா
  தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
  இதயம் திருந்த மருந்து சொல்லடா
  ——————————————

 5. Avatar
  paandiyan says:

  //அதை சூதாட்ட விடுதிகள்,பரிசு சீட்டு போன்ற குறுக்கு வழியில் கொட்டி கோடீஸ்வரனாக மாற ஆசைப்படுபவர்கள்.இறுதியில் எல்லாம் இழந்து கோமணத்தோடு அகதியாக வருவார்கள்.//

  இந்த கட்டுரைய தவராக புரிந்து கொண்டு, தன் மனம் போன போக்கில் எழுதி கொண்டு இருக்கின்றார் இந்த ஷாலி. கடையை நடத்துவது, அதில் நம் ஊரு டாஸ்மாக் கடை போல க்யூ வில் நிற்பது எல்லாம் அவர்கள்தான். இதை நானே ஒர ஒரு தடவை விளையாடியவன் என்ற முறையில், அங்கு பெரும்பாலான தமிழர்களை நான் பார்ததது இல்லை. ஒன்று இரண்டு
  பேர்கள் இருப்பார்கள் . எதயைம் ஆராய்ந்து எழுதுங்கள்

 6. Avatar
  பவள சங்கரி says:

  அன்பின் திரு.மரு.ஜான்சன்,

  மிகச்சுவையாக கோர்வையாக எழுதப்பட்ட படைப்பு. இரசித்துப் படித்தேன். நன்றி.

  அன்புடன்
  பவள சங்கரி

 7. Avatar
  தி.தா.நாராயணன் says:

  டாக்டர்! தங்கள் எழுத்தை தொடர்ந்து வாசித்து வருகிறேன்.சுவாரஸ்யமாக சொல்லுகிறீர்கள்.வாராந்திர இலக்கிய இதழ்களில் கடைசி பக்கத்தை நீங்கள் ஆக்கிரமிக்கலாம் என்று சொல்லும்படி இருக்கிறது தங்களின் அனுபவ பகிர்வு அருமை…அருமை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *