ஒரு விஞ்ஞான இஸ்லாமியர், மூன்று மெஞ்ஞான இந்துக்கள், ஒரு மெஞ்ஞான் கிறிஸ்துவர் & மேற்கு தொடர்ச்சி மலை.

author
9
0 minutes, 40 seconds Read
This entry is part 1 of 29 in the series 1 டிசம்பர் 2013

புனைப்பெயரில்

மேற்குத் தொடர்ச்சி மலை…. தென் இந்தியாவின் நீர் ஆதாரத்தின் உயிர் நாடி.

சதுரகிரியாகட்டும், வெள்ளியங்கிரியாகட்டும் லட்சபோ லட்சம் இந்துக்கள் கூடுவார்கள் – அங்கு சித்தர்கள் இருக்கிறார்கள், சிவன் இருக்கிறார் என்று.

பாதயாத்திரை, நடை யாத்திரை, கட்டுச்சோறு, நெய் விளக்கு, உச்சி மலை தீபம் , ஆராத்தி என இந்து மகா ஜனங்கள் மலையை ஆராதித்துக் கொண்டு.

சதுரகிரி, அனுமன் தூக்கிய சஞ்சீவ மலையிலிருந்து விழுந்த விதைகளால் அதிசிய மருத்துவ சித்த மூலிகளைகள் நிறைந்தது என்றும், அங்கு 2000+ ஆண்டுகள் வாழும் சித்தர்கள் பூமி என்றும் சொல்வார்கள். உணமை என்றே ஏற்றுக் கொள்வோம் , ஆனால் அந்த மலையின் கதி….?

பிளாஸ்டிக் கழிவும், நேர்த்தி கடன் குப்பையுமாக…

குற்றாலம்..?

வானரங்கள் கனி கொடுத்து மந்தியோடு கொஞ்சும் , என்பது போயி, ஒரே சிப்ஸ் பாக்கெட்டும், மசாஸ் & எண்ணெய் குளியலுமாய்…

போதாதற்கும் எக்கோ டூரிஸம் என்று, நிலங்களை கூறு போட்டு…. காட்டேஜுகள்…

சரியய்யா இவர்கள் வேண்டுமானால் சாமான்ய சைத்தான்கள்..

இந்த மகா யோகிகளாக தங்களை இறை அவதாரமாகச் சொல்லிக் கொள்ளும், அமிர்தாயினி அம்மா செய்யும் விஷயம்…?

மலையோர நிலங்கள் எல்லாம் ஹக்கா Hill Area Conservation Authority க்கு கீழ்வருகிறது. அப்படிப்பட்ட இடங்களில் ஒன்று கோவை – பாலக்காடு சாலையின் மேற்கு பகுதியில் இருக்கும் எட்டிமடை முதல் கே.ஜி.சாவடி தாண்டி கேரளா வரை மலையோரம் இருக்கும் அத்துனை பகுதிகளும். இதில் கோலோச்சுவது அமிர்ந்தா டிரஸ்ட் தான். கிட்டத்தட்ட இருபதாயிரம் ஏக்கர்கள் பல்வேறு டிரஸ்டுகளின் பேரில் பதிவு செய்துள்ளார்கள்.

அதிலும், எட்டிமடையில் இருக்கும் 25 லட்சம் சதுர அடி கட்டிடத்தில் அமைந்துள்ள அவர்களது கல்லூரி வளாகம் இயற்கையின் மீதான தீவிரவாதம் தானன்றி வேறேதும் இல்லை.

அதிலும் , எட்டிமடை பகுதியில் நீர் பிரச்சனை என்பதால், வாளையாறு நீர்வரத்து ஓடை பகுதிகளில் ராட்சச கிணறுகள் மூலம் தொடர்ந்து லாரிகளில் தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது.

தன்னை சாமியாரினி என்றும் அவர்தம் அவதாரம் என்றும் கொண்டாடப்படும் இவருக்கு இயற்கை மேல் ஏன் அப்படி பட்ட அழிப்பு வெறி..? நிலங்களின் மேல் அப்படியென்ன வரவு தொடர்பான ஆசை..?

அந்த கல்லூரி பள்ளி நிலையங்கள் ஒன்று அனாதைகளுக்கோ ஏழைகளுக்கோ நடக்கும் தொண்டு பள்ளிகளல்ல…அப்படியே இருப்பினும் ஊருக்குள்ளோ இல்லை வறண்ட காட்டிலோ கட்டலாமே..? ஏன் புட்டபூர்த்தி என்னும் வறண்ட பகுதியில் ஒருவர் இந்த மாதிரி கட்டவில்லையா…?

இயற்கையின் மடியில், அதன் குழந்தைகளான யானை, பன்றி, மான், பறவைகள் இவற்றை அழித்து அப்படியென்ன இவருக்கு மண் மீது ஆசை…

போய் பாருங்கள்… வயிறு எரியும்… நூற்றுக்கணக்கான நிலங்கள் வாங்கப்படும் அவை மின்சார வேலியால் பாதுகாப்பு வளையம் அடிக்க்கப்படும். உள்ளான ஏரி, குளங்கள், வாய்க்கால்கள், வாய்க்கால் புறம்போக்கு ஆகியன ஆக்கிரமிக்கப்படும்.

இதில், கலெக்டர், அவர் தம் அலுவலர்கள் முதல் கிராம நிர்வாகி வரை கையூட்டு வாங்கிக் கொண்டு, அமிர்தா டிரஸ்டிற்கு அத்துனை சலுகைகளும்…

கீழேயுள்ளது 24ம் தேதி தி சண்டே எக்ஸ்பிரஸின் இரண்டாம் பக்கத்தில் வந்த செய்தி…

 

http://epaper.newindianexpress.com/189226/The-New-Indian-Express-Coimbatore/24112013#page/2/2

( மேலே செய்தியில் சொல்லப்படுவது அமிர்தா டிரஸ்ட் கட்டிடங்களும், ஈஷா யோக மையமும் பெயர் சொல்லாமல்… )

உலமெல்லாம் அமிர்தா அம்மா வருகிறார்கள். ஏன் அவரிடம் இதை ஒருவராவது கேட்கலாமே…?

அப்படி அவர் சேவை செய்ய வேண்டியது எனில் இந்த மாதிரி நிலங்களை வாங்கி, வனவிலங்கு சார்பு பயிர்களை விளைய வைத்து அவற்றை காக்கலாமே…

அது சேவை தானே… சொத்து பெருக்கும் கல்லூரிகளும் கட்டிடங்களும் கட்ட வன நிலங்கள் தானா கிடைத்தது…

இதில் வேடிக்கை, மலைகள் தான் சம நில நிலங்களின் நீர் ஆதாரம் என்பது தெரியாத மரமண்டைகளா நாம்…?

சரி, அப்படியே கொஞ்சம் தாண்டி வந்தால், வெள்ளியங்கிர் மலைப் பகுதியில் ஈஷா யோக மையம்.

இது அமிர்ந்தாவிற்கு சவால் விடும் அராஜக மையம்.

ஜத்குரு ஜக்கியின் ஆட்டத்தில் சும்மா காடே அதிருதில்ல…

அந்த மலையின் ஒரு பகுதி சிவனின் முடி போன்ற நிலையென்று அங்கும் ஹக்கா நிலங்கள் வாங்கித் தள்ளப்பட்டுள்ளன.

பெரிய பெரிய மரங்கள் அழிக்கப்பட்டு பிரம்மாண்டமான தூண்களும், ஸ்படிக லிங்கமும், நாகம் சுற்றிய பிரம்மாண்ட லிங்கமுமாய்.

அந்த நாக்லிங்கத்திற்கு பவர் ஏற்றுகிறேன் என்று ஈஷா சாமி செய்த செயல் கேட்டுப் பாருங்கள். அதை நான் போட்டால், மஞ்சள் பத்திர்க்கையின் பக்கம் மாதிரி தான் இருக்கும்.

அந்த ஆளின் குணத்தையோ அல்லது அவரிடம் தம் வீட்டும் பெண்டீரை பக்த கோடிகளாக அனுப்புபவரோ எப்படியும் போகட்டும்… ஆனால், நம் கவலை அந்த ஹக்கா நிலங்கள் பற்றியதே… அதை மீட்டெடுக்க வேண்டும். அவை வன விலங்குகளுக்குண்டானவை. அதுவும் அந்த வெள்ளியங்கிரி கிராமத்தை இரண்டு கோஷ்டியாக்கி அவர் போடும் ஆட்டம்……

இந்து சாமிகள் மட்டுமல்ல…

அலேலுயா பாடும் பால் தினகரன்…? அவர்தம் கல்லூரி அமைந்துள்ள இடம்…? கருணையே இல்லாமல் காட்டை கற்பழிக்கும் இடத்திற்கு காருண்யா நகர் என்று பெயர். அங்கும் நிலங்களின் ஆக்கிரமிப்பு அராஜகம்.

இவர்கள் துணையாக பல என் ஆர் ஐக்கள் அந்தப் பகுதியில், ஹேய் ஐ ஆம் இண்ட்ரஸ்டட் இன் அக்ரி என்று நிலங்களை முறையற்ற வகையில் வாங்கியிருக்கிறார்கள்….

சரி பக்கதிலிருக்கும் தடாகம் ரோட்டில் போய் மலையேரினால் அங்கும் ஒரு இந்து சாமி, சுவாமி தயானந்தா ஆசிரம் போய் பாருங்கள்… திருப்பித் திருப்பி அதே கதைதான் , காடு ஆக்கிரமிப்பு….. அழிச்சாட்டியம்…

கேட்டால், ஏகாந்த நிலையில் இறைவனை தரிசிக்கிறார்களாம்…

இவர்களில் பலருக்கும் சிவன் அதுவும் சிவலிங்க தரிசன வடிவம் தான் தலையாயது…. புரியாதவர்கள் கூகுளிடுங்கள்…

ஆனால், இவர்களில் இருந்து மாறு பட்டு ஒரே ஒருவர் இந்த மேற்குத் தொடர்ச்சி மலையில்….

ஒரு முஸ்லீம்….

முஸ்லீமா… அப்ப வெடி குண்டு போட்டு காட்டையே அழிச்சிரிபாரோ என்பவர்களும்,

முஸ்லீம் என்றாலே தீவிரவாதி என்ற ஞாபகம் வருகிறது என்பவர்கள், இவர் என்ன செய்கிறார் என்று பாருங்கள்…

http://www.sacon.in/

http://en.wikipedia.org/wiki/S%C3%A1lim_Ali_Centre_for_Ornithology_and_Natural_History

மேற்குத் தொடர்ச்சி மலை மீதான, கடவுளின் பெயரால் இந்து சாமியார்களும், கிறிஸ்துவ போதகர்களும் செய்யும் இயற்கை மீதான தீவிரவாத தாக்குதலுக்கு பிரதி உபகாரமாக இந்த முஸ்லீம் செய்வது,

The core objectives of SACON, to which all work of the organisation are directed, are:

    • Design and conduct research in ornithology covering all aspects of biodiversity and natural History,
    • Develop and conduct regular courses in ornithology and natural history for MSc, MPhil and PhD candidates and short-term orientation courses in the above subjects,
    • Create a data bank on Indian ornithology and natural history,
    • Disseminate knowledge relating to ornithology and natural history for the benefit of the community.
  • To confer honorary awards and other distinctions to persons who have rendered outstanding services in the fields of ornithology and natural history

சலீம் அலிக்கு நன்றி… வந்தனம் அய்யா…

 

 

இங்கு இந்து, கிறிஸ்துவ மத சம்பந்தமாக வரிந்து கட்டுபவர்களுக்கு ஒரே ஒரு விண்ணப்பம்,

மேலுள்ளதற்கு என்ன தீர்வு என்று சொல்லுங்கள்…

இயற்கை இறைவன் என்றால், அதை ஏன் நாசம் செய்கிறீர்கள் – கடவுளின் பெயரால்…?

இந்துக்கள், மோடியிடமும்

கிறிஸ்துவர்கள் சோனியாவிடம் கேட்டால் கூட தேவலை…

தேசம் அயலார்களால் நாசமாகிறது எனும் ஜெயமோகனும், எஸ் ராமகிருஷ்ணனும் பதில் சொல்லுங்களேன்….

அரசியல்வாதிகளை விட ஆபத்தானவர்கள் இந்த ஆன்மீகவாதிகள்.

ஜெ நினைத்தால் இதை சரி செய்யலாம்…. அவரால் மட்டுமே இந்த அராஜகத்தை அழிக்க முடியும்…

அம்மா, செய்வீர்களா…..

 

Series Navigation‘ என் மோனாலிசா….’கவிஞர் வ. ஈசுவரமூர்த்தியின் கவிதையில் மறுமலர்ச்சி சிந்தனைகள்
author

Similar Posts

9 Comments

  1. Avatar
    ஷாலி says:

    மக்கள் அன்று இயற்கையையே இறைவனாக ஆராதித்தனர் இன்று இறைவன் பேரை சொல்லியே, இயற்கையை மொட்டை அடிக்க ஒரு கூட்டம் கார்பரேட் குழுமமாக வளர்ந்து விட்டார்கள்.
    மேற்கு தொடர்ச்சி மலையில் ஏராளமான தெய்வத்திருக்கோயில்கள் இருக்கின்றன.மலையில் கோவிலை அமைத்து மக்களை அங்கு அழைப்பதன் நோக்கமே பக்தி மட்டும் அல்ல.மலை வலம் வரும்போது தூய மூலிகை காற்றை சுவாசிக்கலாம்.மலை ஏறி இறங்குவதால் உடல் ஆரோக்கியம் பெரும். ஆனால்
    இன்றைய மக்களின் இறைவழிபாடு இயற்கைக்கு இடையூறான நடைபாடாக மாறி விட்டது.
    கட்டுரையாசிரியர் திரு.புனல் பெயரில் சொல்வதுபோல் மலைமேல் கோவில் கொண்ட சதுரகிரி சுந்தர மகாலிங்கப் பெருமானைத் தரிசிக்க மக்களின் மலையேற்றம், ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசையை முன்னிட்டு நடைபெறுகிறது. முதல்நாள் மாலையில் தொடங்கி இரவெல்லாம் அடர்ந்த வனத்தில் நடந்து, அதிகாலையில் சதுரகிரி கோயிலில் போய் சேரும், இந்த நீண்ட பயணத்தில் ஆண்களும் பெண்களுமாய் ஏறக்குறைய மூன்று லட்சம் மக்கள் பயணம் செய்கிறார்கள். நம்முடைய இறைவழிபாடுகளும் இன்பச்சுற்றுலாக்களும் புவி வனப்பின் மீதுள்ள ஆயிரமாயிரம் இயற்கை உயிரிங்களுக்கு துன்பம் தந்து கொண்டிருக்கின்றன. தென் மேற்குப் பருவக்காற்று தொடங்கும் காலமான ஆடி மாதத்தில் மரங்களும் செடிகளும் கொடிகளும் மழையை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் போது லட்சக்கணக்கான மக்கள் மலையேறுகிறார்கள்.

    தங்களின் மனச்சுமையையும், துன்பங்களையும் கடவுளிடம் கொட்டுவதற்காக மலையேறும் மக்கள், துன்பங்களோடு தாங்கள் கொண்டு வரும் துயரக் குப்பைகளையும் மலைகளிலேயே விட்டுவிட்டுச் செல்கிறார்கள். மக்களின் மனச்சுமை நீங்கியதோ இல்லையோ மலைகளின் அவலச்சுமை மட்டும் நீங்கவேயில்லை. திருவிழா முடிந்த பிறகு மலையில் ஏறிப்பார்த்தால் எங்கெங்கு காணினும் எல்லா இடங்களிலும் நீக்கமற பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டிக்கிடக்கின்றன. சலசலக்கும் நீரோடைகளையெல்லாம் சரசரக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் மூடிக்கொண்டதால் நீரூற்றுகள் அடைபட்டுப் போய்விடுகின்றன. இது சதுரகிரிக்கு மட்டுமல்ல….. சபரிமலைக்கும் பொருந்தும். குமுளியில் தொடங்கி பம்பைநதி வரையில் திருவிழாக்காலங்களில் கொட்டப்படும் குப்பைகள் கணக்கில் அடங்காதவை.லட்சக்கணக்கான பக்தர்களால் பம்பை நதியும் மாசடைந்து விட்டது.
    அமெரிக்கா ஆதிக்கவாதிகளின் எடுபுடி ஏவல் அரசான டில்லிவாதிகள்,தற்போது வளமிக்க கம்பம் பள்ளத்தாக்கில் கண் பதித்து விட்டார்கள்.தேனி மலைபகுதியில் சுரங்கம் தோண்டி நியூட்டிரினோ ஆய்வு மையம் அமைக்கப்போகிறார்கள்.நேரு சொன்ன நவீன ஆலயத்தில் இதையும் சேர்த்து கும்பிடவேண்டியதுதான்.ஏமாந்தவன் தமிழன் என்று எல்லோருக்குமே தெரிந்து விட்டது.

    ஊட்டி, ஏற்காடு, கொடைக்காணல், வால்பாறை, மூணாறு, தேவிகுளம், பீர்மேடு, சபரிமலை சதுரகிரி, ஹைவேவிஸ் என நீண்டு செல்லும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கட்டப்படும் ஆயிரக்கணக்கான கட்டிடங்களின் உரிமையாவுமே நம்மை ஆண்ட…. ஆண்டுகொண்டிருக்கும்…. ஆளப்போவதாக கனவு கண்டு கொண்டிருக்கும் ஆதிக்க சக்திகளின் வருமானத்திற்கும் அதிகமான சொத்துகளின் பதுக்கலே. ஊழல்வாதிகள் தங்களது அதிகார காலத்தில் திருடிச் சேர்த்த பணத்தையெல்லாம் உயர்ந்த மலைகளின் உச்சியில் உயர்தரத் தங்கும் விடுதிகளாகவும், கோடை வாழிடங்களாகவும் நிறமாற்றம் செய்துள்ளார்கள். இதனால் இயற்கையின் இயல்பே உருமாற்றமாகிக் கொண்டிருக்கிறது. இந்தக் கூட்டத்தோடு கூட்டமாய் கோவிந்தா போடும் அமிர்த,தினகர,ஜக்கி கூட்டங்கள் ஆன்மீக டாலரை மலை அடிவாரங்களில் அறுவடை செய்கிறார்கள். கல்வி,பக்தி, சுற்றுலா, பொருளாதாரப் பெருக்கம் போன்ற போலி முகங்களின் தயவில் மலைவளங்கள் அழிக்கப்படுகின்றன….. திருடப்படுகின்றன.
    —————————————————–
    “கொல்லிமலை எனக்கிளைய செல்லிமலை அம்மே….
    கொழுநனுக்கு காணிமலை பழனிமலை அம்மே….
    எள்ளுலவும் விந்தைமலை எந்தைமலை அம்மே
    இமயமலை என்னுடைய தமையன்மலை அம்மே….“
    ————————————————
    தமிழ்க்கடவுள் முருகனுக்கு குறமகள் வள்ளியை மணமுடித்துக் கொடுத்தபோது ஆதினத்து மலைகளையெல்லாம் முருகனுக்கு சீதனமாய்க் கொடுத்ததாக குறவஞ்சி செய்தி சொல்கிறது.
    இப்படி மலைகளைபெற்ற முருகனே ஞானப் பழத்திற்க்காக மொட்டை அடித்து ஆண்டிக்கோலத்தில் நின்றது, பழனி மலையில் மட்டுமே. ஆனால் நம் ஆன்மீகமட ஆனந்தமயி ஈஷா ஆஷடபூதிகள் பாழும் பணத்திற்காக எல்லா மலைகளையும் மொட்டையடிக்க முழு மூச்சாய் திரிகிறார்கள்.
    பரமண்டலத்தில் இருக்கும் எங்கள் பரம பிதாவே! இவர்கள் செய்யும் பிழைகளை தெரிந்தே செய்கிறார்கள்.இவர்களுக்கு காரூண்யம் காட்டாமல் தக்க தண்டனையை இவ்வுலகிலும் கொடு!,மறு உலகிலும் கொடு!
    ———————————-
    இயற்கை என்னும் இளையகன்னி
    ஏங்குகிறாள் துணையை எண்ணி

    பொன்னிறத்து மெல்லிடையில்
    பொட்டுவைத்த வண்ண முகம் நீராட
    தாமரையாள் ஏன் சிரித்தாள்
    தலைவனுக்கோ தூது விட்டாள்

    தலையை விரித்து தென்னை போராடுதோ
    எதனை நினைத்து இளநீராடுதோ
    கன்னி உன்னை கண்டதாலோ
    தன்னை எண்ணிக் கொண்டதாலோ

    இலைகள் மரத்திற்க்கென்ன மேலாடையோ
    இடையை மடித்துக்கட்டும் நூலாடையோ
    கட்டிக்கொண்ட கள்வன யாரோ
    கள்வனுக்கும் என்ன பேரோ

    மலையை தழுவிக்கொள்ளும் நீரோட்டமே
    கலைகள் பழகச் சொல்லும் தேரோட்டமே
    மஞ்சள் வெயில் நேரம்தானே
    மஞ்சம் ஒன்று போடலாமே

    தலையை தடவிச் செல்லும் காற்றோட்டமே
    காலை மறைத்துச் செல்லும் ஆற்றோட்டமே
    இன்னுன் கொஞ்சம் நேரம் தானே
    அந்தி மட்டும் பேசலாமே!

    1. Avatar
      புனைப்பெயரில் says:

      அம்மா நினைப்பது இருக்கட்டும், நீங்க அரசியல் தலைவர் தானே, அதுவும் கோவை மண்டலம் … கலெக்டர், வன அலுவலர் , என்று மனு கொடுக்கலாம். தொண்டர்களுடன் போய் அமிர்தா, ஜக்கி, பால் தினகர், என்று போய் எதிர்ப்பை பதிவு செய்யலாமே… நாங்க சாமான்யர்… நீங்க தலைவர்… முதல்வரிடம் போய் மனு கொடுக்கலாம்… சட்ட ரீதியாக வழக்கு போடலாமே…

  2. Avatar
    suvanappiriyan says:

    “ஒரு முஸ்லிம் ஒரு மரத்தை நட்டு அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து அதிலிருந்து ஒரு பறவையோ அல்லது ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்” என்று இறைவனின் தூதர் நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்.

    அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

    நூல்: புகாரி 2320

    ஒரு ஆன்மீகவாதி கண்டிப்பாக இயற்கையை அழித்து அதில் தனது வளத்தை பெருக்க முயற்சிக்க மாட்டார். அரசு தக்க நடவடிக்கை எடுத்து அழியும் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்.

  3. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள புனைப் பயெரில் அவர்களே, இயற்கையின் எழிலான மேற்குத் தொடர்ச்சி மலையில் நடக்கும் அட்டூழியங்களைப் படித்து பலவாறு சிந்தித்தேன்.

    மனிதர்கள் புக முடியாத இதுபோன்ற மலைப் பகுதிகளைக் கண்டுபிடித்து அங்கெல்லாம் சொகுசு வாழ்க்கைக்கு நகரங்களை உருவாக்கி வழிகாட்டினர் ஆங்கிலேயர்கள். காஷ்மீர் வரை கொடைக்கானல் ஊட்டி வரை இப்படிதான் உருவாகியுள்ளன என்றே கருதுகிறேன். இவற்றால் இன்று சுற்றுலாத்துறை வளர்ந்து பெரும் பொருள் ஈட்டுவது நாம் அறிந்த ஒன்றாகும். இது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும்.

    ஆனால் கடவுளின் பெயரைச் சொல்லிக்கொண்டு இயற்கையுடன் கடவுளை மலை உச்சியில் தரிசிப்பதாகச் சொல்வது எவ்வளவுதூரம் பைத்தியக்காரத்தனம் என்பதை பகுத்தறிந்தால் புரியும். ” தூணிலும் உள்ளார் துரும்பிலும் உள்ளார் ” கடவுள் என்று சொல்லும் நாம் ஏன் மாலையில்தான் உள்ளார் என்று சொல்லிக்கொண்டு இப்படி மலைகள் மீது படையெடுத்து அங்குள்ள ஜீவராசிகளை விரட்டி அடிப்பதோடு அங்குள்ள மரம் , செடி, கொடிகளை அழித்து சிமெண்டினாலும், இரும்பாலும் கட்டிடங்கள் கட்டி உண்டியல், காணிக்கை , நன்கொடை என்று சொல்லிக்கொண்டு மக்களை மொட்டையடித்து முட்டாள்களாக்கவேண்டும்? ( மலைகளை மொட்டையாக்கியபின் )

    அமிர்தா டிரஸ்ட் 20,௦௦௦ ஏக்கர் நிலத்தை தனக்கு சொந்தமாக்கிக்கொண்டது வியப்பையூட்டுகிறது. எட்டிமடையில் 25 லட்சம் சதுர அடி கல்லூரி வளாகக் கட்டிடம் மற்றொரு ஆச்சரியமாகும்.

    இதுபோன்றுதான் ஈஷா யோக மையம்., காருன்யா நகர் , சுவாமி தயானந்தா ஆசிரமம் போன்றவை. இதுபோன்று இதுவரை 32 பகுதிகளில் எழும் கட்டிட வேலைகளில் இதுவரை 56 இறந்துள்ளதும், அதற்கு அரசாங்கம் 60.25 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளதும் அதிர்ச்சியூட்டும் செய்தியாகும்.

    அதே வேலையில் இந்தியாவின் பறவைமனிதரான திரு சாலிம் அலி, Ornithology எனும் பறவைகளைப் பற்றிய அறிவியலையும் ஆராய்ச்சியையும் செய்ய SACON நிறுவனம் அமைத்து செயல்படுவது, கடவுள் பெயரைச் சொல்லி ஏமாற்றுவதைவிட எவ்வளவோ மேலானது! அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  4. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    பக்ஷபாதமில்லாமல் ஒரு வ்யாசத்தை சமர்ப்பித்த ஸ்ரீமான் புனைப்பெயரில் அவர்களுக்கு வந்தனங்கள்.

    முதற்கண் ஸ்ரீ சலீம் அலி அவர்களுடைய பணி உயர்வான பணி. அவர் பணி சிறக்க எமது வாழ்த்துக்கள்.

    முஸல்மாணிய சஹோதரர்கள் அத்துணை பேரையும் தீவ்ரவாதிகள் என சித்தரிக்க முனைபவர் அறவே சமநிலையற்றவர்கள்.

    ஒரு சலீம் அலி என்ன தமிழ் ஹிந்து தளத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எனது வ்யாசத்தின் நாயகரான ஸ்ரீமான் அயாஸ் ரஸூல் நஸ்கி சாஹேப் மற்றும் அவரது தகப்பனாரான ஸ்ரீமான் மீர் குலாம் ரஸூல் நஸ்கி சாஹேப் மற்றும் எனக்கு ஹிந்துஸ்தானி உபசாஸ்த்ரீய சங்கீதம் உபயுக்தமாகக் கற்றுக்கொடுத்த பல மதிப்பிற்குறிய இஸ்லாமிய சஹோதரர்கள் இவர்களை நான் மிகப்பெருமையுடன் நினைவு கூர்கிறேன். வங்க கவியான ஸ்ரீ காஜி நஸ்ரூல் இஸ்லாம் என்ற பெருந்தகையையும் நான் இங்கு சமர்ப்பித்த எனது வ்யாசத்தில் விதந்தோதியதும் நினைவுக்கு வருகிறது. ஸ்ரீமான் அயாஸ் சாஹேப் அவர்களைப் பற்றி வ்யாசம் படைத்த பின்பு எனது சங்கீத குருநாதர்களின் ஆசான் களாக விளங்கிய முஸல்மானிய சான்றோர்களைப் பற்றியும் வ்யாசம் எழுத இந்த வ்யாசத்தை வாசித்த பின் ப்ரேரணை எழுகிறது.

    புட்டபர்த்தி சாயிபாபா அவர்கள் ராயலசீமா பகுதியில் குடிதண்ணீருக்காகவும் கல்விக்காகவும் சமூஹத்தின் அனைத்து மக்களும் (ஜாதி மத வித்யாசமின்றி) வேதம் கற்க ஏற்படுத்தி இன்று தொடரும் நற்பணிகள் உயர்வானவையே. இயற்கைக்கு தீங்கு செய்யாது எடுக்கப்பட்ட நற்பணிகள் எனத் தாங்கள் இவற்றை முழுதாகப் பெயர் சொல்லாது அடையாளம் காட்டியுள்ளீர்கள்.

    அம்ருதா ட்ரஸ்ட், ஜக்கி வாசுதேவ் மற்றும் தயானந்த ஆச்ரமத்தினரால் இயற்கைக்கு நிகழும் இடர்கள் தவிர்க்கப்படவேண்டியவையே என்பதில் வேறு அபிப்ராயம் இருக்க முடியாது. ஆனால் இந்த ஒரு நிகழ்வை மட்டும் வைத்து இந்த நிறுவனங்களின் பணிகளை (மற்றும் தாங்கள் தெரிவித்த சில ஆக்ஷேபங்கள்) முற்று முழுதுமாக நிராகரிப்பதும் சமநிலையின் பாற்பட்டு இருக்க முடியாது. களைகள் களையப்பட வேண்டியதே. களைகள் களையும் போக்கில் பயிரைக் களைவதை அனுமதிக்கலாகாது.

    நான் மேற்சொன்ன ஒரு சில குறிப்புகள் இருப்பினும் பெருமளவில் பக்ஷபாதமில்லாது கருத்துக்களை பகிரும் படிக்கான இந்த வ்யாசத்துக்காக ஸ்ரீமான் புனைப்பெயரில் (புனல் பெயரில் அல்ல) அவர்களுக்கு சபாஷ்.

  5. Avatar
    டி.ராஜேந்திரன் says:

    //அம்மா நினைத்தால் இதற்கு முடிவுகட்ட முடியும்//

    ஆனால், அய்யா தனது ஆட்சி வந்தவுடன் அதை நீர்க்கச் செய்து, அதிலும் காசு பார்த்துவிடுவாரே!

  6. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ மனிதர்கள் புக முடியாத இதுபோன்ற மலைப் பகுதிகளைக் கண்டுபிடித்து அங்கெல்லாம் சொகுசு வாழ்க்கைக்கு நகரங்களை உருவாக்கி வழிகாட்டினர் ஆங்கிலேயர்கள். காஷ்மீர் வரை கொடைக்கானல் ஊட்டி வரை இப்படிதான் உருவாகியுள்ளன என்றே கருதுகிறேன். இவற்றால் இன்று சுற்றுலாத்துறை வளர்ந்து பெரும் பொருள் ஈட்டுவது நாம் அறிந்த ஒன்றாகும். இது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும்.

    ஆனால் கடவுளின் பெயரைச் சொல்லிக்கொண்டு இயற்கையுடன் கடவுளை மலை உச்சியில் தரிசிப்பதாகச் சொல்வது எவ்வளவுதூரம் பைத்தியக்காரத்தனம் என்பதை பகுத்தறிந்தால் புரியும். ” தூணிலும் உள்ளார் துரும்பிலும் உள்ளார் ” கடவுள் என்று சொல்லும் நாம் ஏன் மாலையில்தான் உள்ளார் என்று சொல்லிக்கொண்டு இப்படி மலைகள் மீது படையெடுத்து அங்குள்ள ஜீவராசிகளை விரட்டி அடிப்பதோடு அங்குள்ள மரம் , செடி, கொடிகளை அழித்து சிமெண்டினாலும், இரும்பாலும் கட்டிடங்கள் கட்டி உண்டியல், காணிக்கை , நன்கொடை என்று சொல்லிக்கொண்டு மக்களை மொட்டையடித்து முட்டாள்களாக்கவேண்டும்? ( மலைகளை மொட்டையாக்கியபின் ) \

    இந்த தளத்தில் நான் வாசித்த உத்தரங்களில் மிகவும் அப்பட்டமான மத த்வேஷம் மிகுந்த உத்தரம் இது. மதிப்பிற்குறிய வைத்யர் ஜான்சன் அவர்களிடமிருந்து.

    மத வேறுபாடு காணாது பகுத்தறிவு பற்றிப்பேசினால் மட்டுமே அது பகுத்தறிவு.

    ஹிந்துக்களின் வழிபாட்டு முறையில் பகுத்தறிவு பற்றிப் பேச விழையுமுன் புனித ரெவரெண்டு தெரசாளின் பதக்கம் புற்று நோயை குணப்படுத்தும் என்று இந்த இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் முரசறிந்த வாடிகன் கிரிஜா க்ருஹத்தின் செயல்பாட்டைவைத்யர் அவர்கள் இடித்துரைப்பாரா? அதற்கப்புறம் ஹிந்துக்களுக்கு பகுத்தறிவு உபதேசம் நடக்கட்டும்.

    சொகுசு வாழ்க்கைக்காக மலை வாசஸ்தலங்களை அழித்தவர்கள் பரங்கியர்கள். இவர்கள் மலை வாசஸ்தல நகரங்களை உருவாக்கவில்லை. இயற்கையை அழிப்பதற்கு வழிவகுத்து ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகளுக்கு வழிகாட்டியாகினார்கள் அவ்வளவே.

    பரங்கியர் இயற்கையை அழித்து நகரங்கள் என்ற பெயரில்,

    “””” ஜீவராசிகளை விரட்டி அடிப்பதோடு அங்குள்ள மரம் , செடி, கொடிகளை அழித்து சிமெண்டினாலும், இரும்பாலும் கட்டிடங்கள் கட்டி “” நரகங்கள் ஆக்குவது சரி. அதே ஹிந்துக்கள் தங்கள் தேவதைகளை மலைகளின் மீது சென்று வழிபடுவது பகுத்தறிவாகாது.

    ஹிந்துஸ்தானத்தை அடிமை செய்த பரங்கியரின் பால் அடிமைத்தனமும் சொந்த சஹோதரர்களான ஹிந்துக்கள் மீதுள்ள வெறுப்பும் மட்டிலும் இந்த உத்தரத்தில் காணக்கிட்டுகிறது.

    அம்ருதா ட்ரஸ்ட், ஜக்கிவாசுதேவ் பற்றி மட்டிலும் குறிப்பாகக் குற்றம் காணும் வைத்யர் அவர்கள் கருணையில்லாது நிலத்தை வளைத்துப்போடும் பால் தினகரனின் காருண்யா ட்ரஸ்ட் பற்றி மௌனம் சாதிப்பது ஏன். அவர்கள் இயற்கையை அழிப்பது கன்னிமரிசேயனுக்கு அடுக்கும் என்பதினாலா?

    \ உண்டியல், காணிக்கை , நன்கொடை என்று சொல்லிக்கொண்டு மக்களை மொட்டையடித்து முட்டாள்களாக்கவேண்டும்? \

    மனதில் கைவைத்து சொல்லுங்கள் இந்த சமாசாரமெல்லாம் வேளாங்கன்னி முதலான க்றைஸ்தவ தேவாலயங்களில் இல்லை. சுவிசேஷ கூட்டங்கள் என்ற பெயரில் பரிசுத்த ஆவையை இறக்கி குருடரை பார்க்கவைக்கிறோம் முடவரை நடக்க வைக்கிறோம் என்றெல்லாம் கூச்சலிடும் கும்பல்களில் இல்லை?

    ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு என வேண்டாம் என மதிப்பிற்குறிய வைத்யர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

    ஸ்ரீமான் புனைப்பெயரில் அவர்களுக்கும்

    ஹிந்துக்கள் மலை மீது சென்று வழிபடுவதால் மலைகள் அழிவதில்லை. மலைகள் அழிவது வழிபடுவோரின் சொகுசு சார்ந்த செயல்களினால்.

    ஹேம்குண்ட் சாஹேப் என்ற பத்ரிநாத்தை ஒட்டிய சீக்கியர்களின் குருத்வாராவில் சுற்றுப்புறத்தை அங்கு வரும் சேவார்த்திகள் (ஹிந்து, முஸல்மான் சஹோதரர்கள்) தாங்களே முனைந்து சுத்தம் செய்கிறார்கள்.

    குற்றம் காணப்பட வேண்டியது ஹிந்துக்கள் மலை மீது சென்று வழிபட விழையும் போது சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ப்ரக்ஞை இல்லாது செயல் படும் விதத்தை. மலை மீது சென்று வழிபடுவதே குற்றம் என்பது அறிவு பூர்வமான வாதம் ஆகாது.

    ஸ்ரீமான் அயாஸ்ரஸுல் நஸ்கி முதல் ஹிந்துஸ்தானி சாஸ்த்ரீய சங்கீதத்தில் நிபுணர்களான பல முஸல்மாணிய உஸ்தாதுகளைப் போற்றும் ஜேசுதாஸ் போன்ற க்றைஸ்தவ சங்கீத நிபுணர்களை மதம் சாராது போற்றும் என்னை – நடராஜர் வ்யாசத்தினை பகிர்ந்த வைத்யர் அவர்களை போற்றிய என்னை — மேற்கண்ட உத்தரத்திற்காக மதசார்புடையவன் என்று அடையாளம் யாரேனும் காட்ட விழையுமுன் வைத்யர் அவர்களின் மேற்கண்ட உத்தரத்தில் உள்ள அக்ரமமான அன்யாயத்தை விசாரம் செய்யவும்.

  7. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    வைத்யர் அவர்கள் காருண்யா ட்ரஸ்ட் பற்றியும் சொல்லியிருக்கிறார்கள். நான் கவனிக்கத் தவறி விட்டேன். இதற்கு வைத்யர் ஐயா அவர்களுக்கு எமது க்ஷமா யாசனங்கள். பின்னிட்டும் எனது உத்தரத்தின் மற்றைய பகுதிகள் சரியே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *