சீதாயணம் நாடகம் -9 படக்கதை -9

This entry is part 3 of 29 in the series 1 டிசம்பர் 2013

 

[சென்ற வாரத் தொடர்ச்சி]

 

சீதாயணம் படக்கதை

நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா

வடிவமைப்பு :  வையவன்

ஓவியம் :  ஓவித்தமிழ்

 

படம் : 16 & படம் : 17 [இணைக்கப் பட்டுள்ளன]

++++++++++++++++++

படம் : 1

Inline image 1

காட்சி ஐந்து

லவா, குசா, இராமன் முதல் சந்திப்பு

இடம்: காட்டுப் போர்க்களம்.

நேரம்: மாலை.

பங்குகொள்வோர்: இலட்சுமணன், பரதன், சத்துருகனன், அனுமன், அங்கதன், சுக்ரீவன், லவா, குசா, இராமன், சீதா. ஆசிரம மருத்துவர், சீடர்கள்.

அரங்க  அமைப்பு:  பரதன் ஏவிய ஓரம்பில் லவாவின் கரம் காயமானது! [வில்லைக் கீழே போட்டுவிட்டுக் குசா லவா கையிக்குக் கட்டுப் போடுகிறான்] அடுத்துப் போரில் குசா பரதைனைக் காயப்படுத்தி முடமாக்கினான். கலங்கமற்ற சிறுவரைக் கண்டு பராக்கிரமமுள்ள அனுமான் படையினர் போரிடத் தயங்கி நின்றனர். அனுமான் ஏதோ சந்தேகப்பட்டுத் தன் ஒற்றன் ஒருவனை அனுப்பி ஆசிரமத்தில் சீதா இருப்பதை அறிந்து கொண்டான். அனுமான் சிறுவர்களின் கண்கள் இராமப் பிரபுவின் கண்களை ஒத்திருப்பதையும், முகச்சாயல் சீதாவின் முகத்தைப் போல் இருப்பதையும் கண்டு பேரதிர்ச்சி அடைந்தான்! அனுமானின் உடம்பு நடுங்க ஆரம்பித்துக் கைகள் தளர்ந்து விட்டன! இராமப் பிரபுவின் சின்னஞ் சிறு கண்மணிகளுடன் எப்படிப் போரிட்டு நான் சிறைப் படுத்துவேன் என்று மனமொடிந்தான் அனுமான்! அனுமான் படையினர் போரிடாமல் சும்மா நிற்பதைக் கண்டு, பரதன் பெருங் கோபம் அடைந்தான்! பரதன் சினத்தைக் கண்டு அனுமான் தயங்கிப் போரிட வந்தபோது லவா, குவா இருவரும் நடுங்கிக் கொண்டிருக்கும் அனுமானை எளிதாகப் பிடித்து ஒரு மரத்தில் கட்டிப் போட்டனர். அப்போது இராமன் தேரில் வந்திறங்கிக் கோபத்துடன் நேராக இரட்டையர்களை நோக்கி நடந்தான்.

[சென்ற வாரத் தொடர்ச்சி]


அனுமான்: [கண்ணீர் பொங்கி சீதாவின் காலில் விழுந்து வணங்கி] மகாராணி! இந்த காட்டிலா, இந்தக் கோலத்திலா, இந்த நிலையிலா உங்களை நான் காண வேண்டும் ? உங்களைக் காட்டிலே காணும் துர்பாக்கியம்தான் அடியேனுக்கு எழுதப்பட்டுள்ள விதியா ?  அன்று இலங்காபுரி அசோக வனத்தில் உங்களை முதலில் கண்டு பிடித்தபோது எத்தகைய ஆனந்தம் அடைந்தேன் !   இன்று உங்களைக் கண்டபின் எதிர்மறையாக என் நெஞ்சம் பற்றி எரிகின்றது மகாராணி! சீரும் செல்வத்திலும் வளர்ந்த மிதிலாபுரி மன்னரின் செல்வி மாளிகையில் வாழாது, இந்த வனாந்திரக் காட்டில் சிறுவர்களுடன் எப்படி காலந் தள்ளுகிறீர்கள் ?

சீதா: [கண்ணீருடன்] எழுந்திரு ! மாளிகையை விட மகரிஷி ஆசிரமத்தில் நான் மகிழ்ச்சியாக வாழ்கிறேன். யாரென்று உன்னைத் தெரியாமல் கட்டிப் போட்டு விட்டார்களே எம காதகர்கள்! … கண்மணிகளே! அனுமான்தான் அசோக வனத்தில் சிறைப்பட்ட என்னை முதலில் கண்டுபிடித்து மீட்பதற்கு உதவி புரிந்தவர். அவரிடம் மன்னிப்புக் கேளுங்கள்! … அயோத்திய புரியில் அசுவமேத யாகம் புரிவதைப் பற்றி மகரிஷி எனக்குச் சொன்னார்! ஆனால் அந்தக் குதிரையைக் கட்டிப் போட்டவர் என் கண்மணிகள் என்பது இன்றுதான் எனக்குத் தெரிந்தது.

லவா, குசா: [அனுமானின் காலில் விழுந்து வணங்கி] நாங்கள் தவறு செய்து விட்டோம். எங்கள் அறியாமைக்கு மன்னிக்க வேண்டும் ஐயனே!

படம் :2

Inline image 4

அனுமான்: [எழுந்திருங்கள்] ஒன்றும் அறியாத பாலர் நீங்கள்! … தாயே ! உங்கள் வீர புத்திரர்களை நான் அடையாளம் கண்டு கொண்டேன். கண்களைப் பார்த்தால் இராமப் பிரபுவின் கண்கள்! முகத்தைப் பார்த்தால் அன்னையின் முகம்! சிறுவர்கள் யாரென்று தெரிந்தபின் என் கைகள் வலுவற்றுப் போயின! போரிட முடியாமல் தயங்கினேன், பின்வாங்கினேன்! எளிதாக இருவரும் என்னைப் பற்றி மரத்தில் கட்டிப் போடுவதை நான் வேடிக்கை பார்த்தேன்! … இளவரசர் பரதனுக்கு என்மேல் மிகவும் கோபம்! .. யாரென்று தெரியாமல் சிறுவர்கள் பரதன், இலட்சுமணன், சத்துருகனன் மூவரையும் கூடக் காயப்படுத்தி விட்டார்கள்!  இத்தகைய வில்லம்பு வித்தகர் இராமப் பிரபுவின் புதல்வராக இருக்க வேண்டுமே தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது என்று என் மனதில் அழுத்தமானது.

சீதா: அட பாவமே! அவர்கள் எங்கே காயப்பட்டுக் கிடக்கிறார்கள் ?

அனுமான்: அது நேற்றைய நிகழ்ச்சி! கோசலப் படையினர் அவர்களைத் தூக்கி வந்தபின் அரண்மனை மருத்துவர் காயத்துக்குக் கட்டுப் போட்டார்கள். …. அதோ அவர்களும் உங்களைக் காண இங்கு வந்து கொண்டிருக்கிறார்கள். பரதனுக்கு ஆசிரம மருத்துவர் கட்டுப் போடுகிறார். [கைக்கட்டுடன் இலட்சுமணன், சத்துருகனன் சீதாவின் முன்வந்து வணங்கிக் கண்ணீர் வடிக்கிறார்கள்.]

சீதா: [பொங்கி வரும் கண்ணீருடன்] என் கண்மணிகள் உங்களை யாரென்று தெரியாமல், காயப்படுத்தி விட்டார்களே! ஒரு தவறு நடந்த பின், அடுத்தடுத்துப் பல தவறுகள் நிகழ்ந்து விட்டன!  லவா, குசா இவருக்கும் உங்கள் பெயரைச் சொல்லிக் கொடுத்தேனே தவிர, உங்கள் முகத்தைக் காட்ட முடியாமல் போனதே என்று மனம் நோகிறது! (லவா, குசாவைப் பார்த்து) இவர்கள் உனது தந்தையின் தம்பிமார்கள், இலட்சுமணன், சத்துருகனன். அதோ! அங்கே கட்டு போடப்படுபவரும் ஒரு தம்பியே. அவர் பெயர் பரதன். அவர்கள் யாவரும் உன் சித்தப்பபன்மார்.  அவரிடமும் மன்னிப்புக் கேளுங்கள்.

லவா, குசா: [இருவரும் அவர்கள் காலில் விழுந்து] ஐயன்மீர்!  எங்களை மன்னிக்க வேண்டும். நாங்கள் தெரியாமல் உங்ளைக் காயப்படுத்தி விட்டோம். [லவா, குசா இருவரும் தாயை விட்டு, குதிரை கட்டப்பட்டிருக்கும் மரத்தடிக்குச் செல்கிறார்கள்]

இலட்சுமணன்: [கண்ணீரைத் துடைத்துக் கொண்டு] இருவரும் வில்லாதி வீரர்கள்! சூராதி சூரர்கள்! பெரியவராகிய நாங்கள் சிறுவர் என்று அஞ்சிச் சற்று தயக்கமுடன்தான் போரிட்டோம்! ஆனால் சிறுவர்களுக்கு அப்படி ஓர் அச்சமில்லை! …. அதோ அண்ணா வந்திருக்கார்! …. உங்களிடம் அண்ணா பேசினாரா ? நீங்கள் அவரிடம் பேசினீர்களா ? … லவா, குசா உங்களையும், அயோத்தியபுரிக்கு அழைத்துச் செல்ல அண்ணாவிடம் கேட்கப் போகிறேன்.

சீதா: [முகத்தை திருப்பிக் கொண்டு] வேண்டாம் இலட்சுமணா. உங்கள் அண்ணா என்னைப் பார்க்கவா இங்கு வந்திருக்கார் ? குதிரையைப் பிடித்துப் போக வந்திருக்கார்! அயோத்திய புரிக்கு குதிரையை அழைத்துப் போவார்! என்னை மீண்டும் அழைத்துப் போவார் என்று எனக்கு நம்பிக்கை யில்லை! நீயும் அதை எதிர்பார்க்காதே! அவருடைய முதல் வேலை, அடைபட்டுள்ள குதிரைக்கு விடுதலை! அபலை சீதாவுக்கு விடுதலை என்று நினைக்காதே! வேண்டாம் இலட்சுமணா! அவரைக் கேட்காதே! என்னைக் கூட்டிச் செல்ல அவருக்கல்லவா தெரிய வேண்டும் ? நீ கேட்டு அவர் என்னை அழைத்துச் செல்வதா ? முதலில் நீ கேட்பதே எனக்கு அவமானம்! நான் எப்போதே தேவையற்ற வளாகி வெளியே தள்ளப் பட்டவள். இப்போது எப்படி ஒரு தேவையை நீ உண்டாக்கப் போகிறாய் ? பாலை வனமான என் வாழ்க்கை இனி சோலை மயமாக மீளாது. அது எனக்குத் தெரியும். அவர் வந்து அழைத்துச் செல்வார் என்று அன்று நீதான் சொன்னாய். இதுவரை இங்கு வராதவர், இன்று ஏன் வந்தார் என்பது எனக்கும் தெரியும். உனக்கும் தெரியும். பத்துப் பனிரெண்டு வருடமாக அவர் என்னைக் காண இங்கு வந்தது கிடையாது!  இருக்காளா அல்லது இறந்து விட்டாளா என்று கேட்டது கூடக் கிடையாது! என்னை மறந்து போனவருக்கு நீ மீண்டும் நினைவூட்ட வேண்டுமா ? வேடிக்கையாய் இருக்கிறது! இப்போதும் என்னைத் தேடியோ, என்னுடன் பேசவோ, என்னுடன் உறவு கொண்டாவோ உன் அண்ணா வரவில்லை! என்னைக் காண வந்திருந்தால், என்னோடு கனிவாகப் பேசினால், நான் அவரை மதிப்பேன்! உபசரித்து ஆசிரமத்து வரும்படி அவரை அழைப்பேன்!

சத்துருகனன்: அப்படிச் சொல்லாதீர்கள் அண்ணி. அண்ணாவின் உள்ளக் கோயிலில் உங்களைத் தவிர வேறு யாருமில்லை. அண்ணாவின் மனது தங்க மனது! அசுவமேத யாகத்திடலுக்கு முன்னால் யாவரும் காணும்படி உங்கள் முழுவடிவத் தங்கச் சிலையை வார்த்து, தன்னருகில் அமர வைத்துத் தினமும் தரிசித்து வருகிறார்!

சீதா: உன் அண்ணாவுக்கு என்மேல் இத்தனை பாசமா ? எனக்கு இது தெரியாதே! அவரது உள்ளக் கோயிலில் எனக்கு இன்னும் இடமுள்ளதா ? ஆச்சரியமாக இருக்கிறது! உயிர்ச் சிலையை அகற்றிவிட்டுத் தங்கச் சிலைக்கு சிம்மாசனம் தருகிறார். ஊர்க் கண்களுக்குத் தங்கச் சிலையாய் நானிருப்பது, என் நெஞ்சில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுகிறது. உயிருள்ள மனைவி காட்டில் தவிக்கும் போது, உயிரற்ற தங்கச்சிலை சுகவாசியாக மாளிகையில் இருப்பது நியாயமா ? இலட்சுமணா! அந்த உயிரற்ற சிலை, உயிர்ச்சிலை போல் உடனே அகற்றப் படவேண்டும். நான் சொன்னதாக உன் அண்ணாவிடம் சொல். என் உருவம், ஓவியம் எதுவும் அரண்மனையில் இருக்கக் கூடாது! நான் ஒன்றும் உயிரற்ற சிலையோ, வண்ண ஓவியமோ அல்லது போட்டிப் பரிசோ இல்லை! செத்தவருக்குதான் சிலை வைப்பார்கள்! உன் அண்ணாவின் ஏட்டில் உண்மையாக, நான் செத்துவிட்டவள்தான்! ஒரு பந்தயப் போட்டி வீரர் உன் அண்ணா!. பந்தயத்தில் வென்ற பரிசைக் காட்சி மாளிகையில் வைப்பவர். அன்று கானகத்தில் நான் கடத்தப் பட்டதும் அவர் தனியாகவே வாழ்ந்தார்! இன்றும் நானில்லாமல் அவர் தனியாக வாழ்கிறார். மனைவி என்னும் ஒரு பெண்பிறவி அவருக்குத் தேவை யில்லை! அவருக்கு வேண்டியது குடிமக்கள் பாராட்டு! குடிமக்களைத் தலைமேல் வைத்துக் கொண்டதற்கு நான் பலியானேன்! தன் பராக்கிரமத்தை நிலைநாட்ட, அவர் அசுவமேத யாகம் செய்தார்! அறியாத என் புதல்வர் குதிரையைக் கட்டிப் போட்டு அசுவமேத யாகப்போரில் அவரது தம்பிமார், காயம் அடைந்தார்கள். எல்லாத் துயருக்கும் அவரே காரண கர்த்தா!

சத்துருக்கனன்: அண்ணி! அண்ணா அசுவமேத யாகம் செய்ததால்தானே லவா, குசாவை அண்ணாவும், நாங்களும் கண்டு கொள்ள முடிந்தது!

சீதா: இல்லையப்பா! என்னைப் பிரித்த உங்கள் அண்ணா அசுவமேத யாகம் செய்து, என் கண்மணிகளைப் பிரிக்கப் போகிறார்! என் புதல்வரைக் கண்ட உன் அண்ணாவின் கண்கள் என்னை ஏன் காணவில்லை ? குதிரையைக் காண வந்தவ என்னருமைப் பதி, ‘நீ எப்படி இருக்கிறாய் ‘ என்று என்னிடம் ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை ? தீண்டப் படாத அபலை மனைவியை ஒருமுறைக் கனிவுடன் கூட ஏன் பார்க்கவில்லை ?

இலட்சுமணன்: அண்ணி! அப்படிச் சொல்லாதீர்கள். இம்முறை நாங்கள் அண்ணாவை மீறி, உங்களை அரண்மனைக்கு அழைத்துச் செல்லப் போகிறோம்.

சீதா: நான் விரும்பி வந்தால்தானே! நான் என்ன குதிரையா இழுத்துக் கொண்டு போக ? உன் அண்ணா அழைத்தாலும், நான் வர மறுப்பேன்! அப்படி அவர் அழைத்தாலும், முதல் தடவையாக அவரை எதிர்க்கப் போகிறேன்! நான் என்ன அரண்மனை அந்தப்புர அடிமையா ? வா வென்றால் வணங்கி வருவதும், போ வென்றால் பணிந்து போவதும் மிதிலை நாட்டு இளவரசியிடம் இனி நடக்காது. முன்னாளில் சீதா அடியாளாக பதியின் பாத மலர்களைக் கழுவிக் கொண்டிருந்தாள். சீதாவின் அடிமைக் காண்டம் என்றோ முடிந்து விட்டது, இலட்சுமணா!

+++++++++++++++

Scene -16Scene -17

 

Series Navigation‘ என் மோனாலிசா….’கவிஞர் வ. ஈசுவரமூர்த்தியின் கவிதையில் மறுமலர்ச்சி சிந்தனைகள்வால்ட் விட்மன் வசனக் கவிதை – 51 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) அடிமைச் சந்தைகள்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *