தமனித் தடிப்பு – Atherosclerosis

This entry is part 29 of 29 in the series 1 டிசம்பர் 2013

balloon_angioMed

          . மாரடைப்புக்கு அடிப்படைக் காரணம் இருதய தசைக்கு போதுமான இரத்த ஓட்டம் இல்லாமல் தடை படுவது. இதை உண்டாக்குவது இரத்தக்குழாய்க்குள் கொழுப்பு படிவது. இப்படி தொடர்ந்து படிந்தால் அந்த இரத்தக்குழாய் தடித்துவிடும். இதை தமனித் தடிப்பு என்பர். ஆங்கிலத்தில் இதை Atherosclerosis என்று அழைக்கிறோம்.

தமனித் தடிப்பு என்பது தமனிகளின் ஊட்சுவர்கள் நீண்ட கால அழற்சியின் காரணமாக வழவழப்பை இழந்து சொரசொரப்பாகி வடிவிழந்து, தழும்பு உண்டாகி தடித்துப்போவதாகும். இத்தகைய அழற்சியை உண்டுபண்ணுவது கொழுப்பு படிதல்.

தமனி தடிப்புதான் இருதயத்தையும் உடலின் தமனிகளையும் அதிக அளவில் பாதிக்கும் முக்கிய நோயாகும். வளர்ந்துவரும் நாடுகளில் இது மிகவும் அதிகமாகக் காணப்படுகிறது. அமெரிக்காவில் இது வயது முதிர்வின் ஓர் அங்கமாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

உணவு பழக்கவழக்கமும், மாறிவரும் வாழ்க்கைச் சூழலுமே ( உடற்பயிற்சியின்மை ) தமனித் தடிப்புடன் நெருங்கிய தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. இதனால் இதைத் தடுப்பதும் குறைப்பதும் முயன்றால் முடியும்.

உடலின் எங்கு தமனித் தடிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைப் பொறுத்தே அதன் அறிகுறிகள் தோன்றும். எந்த அளவுக்கு பாதிப்பு உள்ளாகியுள்ளது என்பதும் முக்கியமானது.

தமனித் தடிப்பு காரணமாக உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்க வாதம், சிறுநீரக வியாதி போன்ற உயிருக்கு ஆபத்தான விளைவுகளை உண்டுபண்ணும்.

குறிப்பாக இருதயத்தின் இடது மேல் அறையில் இருந்து புறப்படும் பெரிய இரத்தக் குழாயான பெருந்தமனியில் ( Aorta ) தடிப்பு ஏற்பட்டால் மூளை. சிறுநீரகம், கால்களுக்கு செல்லும் இரத்தம் தடைபடும். இருதய தசைகளுக்கு இரத்தம் கொண்டு செல்லும் கோரோனரி தமனிகள் ( Coronary Arteries ) அடைபடுவதால்தான் இருதய நோயும் மாரடைப்பும் உண்டாகிறது.

 

தமனித் தடிப்புக்கான காரணங்கள்

இது முழுக்க முழுக்க தமனியின் ஊட்சுவர் தொடர்புடையது. ஆரோக்கியமான நிலையில் இது வழவழப்பாக இருக்கும். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக பல காலமாக கொழுப்பு மெல்லிய நாரிழையாக படிந்து காலப்போக்கில் அதன் தன்மையைக் கெடுத்து சொரசொரப்பையும் மேடு பள்ளத்தையும் உண்டுபண்ணுகிறது. இங்கு கால்சியம் படிந்து தழும்பை உண்டாக்கி தடிப்புத் தன்மையைத் தருகிறது. இதனால் கடினமுற்ற தமனி விரியும் தனமையையும் இழந்துபோகிறது.

உயர் இரத்த அழுத்தம், புகைத்தல், மன உளைச்சல் போன்றவை தமனியின் உட்சுவரை எளிதில் பாதிப்பவை. கொழுப்பு வகைகளில் LDL என்ற தீய வகையான கொழுப்புவகையே தமனி தடிப்புக்கு முக்கிய காரணமாகும்.

தமனித் தடிப்பு கொழுப்பு அதிகம் உள்ள எல்லாருக்கும் வருவதில்லை. அதுபோன்றே தமனித் தடிப்பு உள்ள அனைவருக்கும் கொழுப்பு அதிகம் இருப்பதில்லை. தமனித் தடிப்பு யாரை வேண்டுமானாலும் ஓரளவு பாதிக்கலாம் எனினும் கீழ்க்கண்டவை அதை நிர்ணயம் செய்வதில் பங்கு வகிக்கின்றன.

* வயது – பொதுவாக 35 வயதுக்கு மேல் பாதிப்பு உண்டாகலாம்.

* பால் – ஆண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

* பரம்பரை – இது பரம்பரை வழியாக வரலாம்.

* உடல் பருமன் – அதிக உடல் பருமன் முக்கிய பங்கு வகிக்கிறது.

* வாழ்க்கை முறை – உடற்பயிற்சியின்மை, புகைத்தல், உணவு வகை போன்றவை.

தமனித் தடிப்பின் அறிகுறிகள்

ஆரம்ப காலங்களில் எந்தவிதமான அறிகுறியும் இருக்காது.

இரத்தவோட்டம் குறைவு படுவதால் ஒருசில அறிகுறிகள் தோன்றும். அவை வருமாறு:

* தொடை , கால் பகுதியில் தசைப் பிடிப்புடன் வலி. நடந்தால் வலி கூடும்.

* திடீரென்று ஒரு கை அல்லது காலில் மதமதப்பு, கூசுதல், செயலிழத்தல்.

* திடீரென்று பார்வை குறைதல் அல்லது பேசமுடியாமல்போதல்.

* நெஞ்சில் இறுக்கம், வலி.

             பரிசோதனைகள்

உடலின் பல பகுதிகளில் இரத்தவோட்டக் குறைவினால் ஏற்படும் அறிகுறிகளை ஆராய மருத்துவர் பரிசோதனை செய்வார். ஆனால் அஞ்சியோகிராம் ( Angiogram ) செய்து பார்த்தால் அடைப்பின் அளவை துல்லியமாகத் தெரிந்துகொள்ளலாம்.

                    சிகிச்சை

தமனித் தடிப்பை குணமாக்கும் மருந்துகள் இல்லை. ஆனால் அதை உண்டுபண்ணும் காரணங்களைக் குறைக்க உதவ மருந்துகள் தரப்படும். இரத்த அழுத்தம் குறைக்கும் மருந்துகள், கொழுப்பு குறைக்கும் மருந்துகள். இரத்தக் கட்டிகள் உருவாகாமல் இருக்க தடுப்பு மருந்துகள் சில உதாரணங்கள்.

இருதய தசைகளுக்கு இரத்தமும் பிராணவாயுவும் கொண்டு செல்லும் கோரோனரி தமனியில் தடிப்பு உண்டாகி அடைப்பு ஏற்பட்டால் நெஞ்சு வலியும் மாரடைப்பும் உண்டாகிறது. இதை உடனடியாக சரி செய்யாவிடில் உயிருக்கு ஆபத்து உண்டாகும்.

1970 ஆம் ஆண்டில் பலூன் அன்ஜியோப்ளாஷ்டி ( Balloon Angioplasty ) என்ற சிகிச்சை முறை புரட்சியை உண்டுபண்ணியது. அறுவை சிகிச்சை இல்லாமல் எளிதில் செய்யும் இந்த முறைக்கு Percutaneous Transluminal Coronary Angioplasty ( PTCA ) பெயர். இதன் மூலமாக கோரோனரி தமனியில் உள்ள அடைப்பு சரி செய்யப்பட்டு இருதய தசைகளுக்கு போதுமான இரத்தமும் பிராணவாயுவும் கிட்டுகிறது.

தற்போது Percutaneous Coronary Intervention ( PCI ) என்ற முறையில் பலூன், ஸ்டென்ட் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.

கை அல்லது தொடையில் உள்ள பெரிய தமணியில் பலூன் கேத்தீட்டர் எனும் சிறு குழாய் செலுத்தி இருதயத்தில் அடைபட்டுள்ள கோரோனரி தமனிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு அந்த பலூன் பெரிதாக்கப்பட்டு சுருக்கமுற்றப் பகுதியை விரிவாக்குகிறது. இதன் மூலம் நெஞ்சு வலியும், மாரடைப்பும் தவிர்க்கப்படுகிறது. இதன் வழி இருதய பைப்பாஸ் அறுவை சிகிச்சையும் ( Open Heart Coronary Artery Bypass Graft ( CABG ) தவிர்க்கப்படுகிறது.

( முடிந்தது )

Series Navigationமருமகளின் மர்மம்-5
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *