La Vie en Rose (பிரான்ஸ், இயக்குநர் – ஒலிவியர் டஹன்)

author
0 minutes, 3 seconds Read
This entry is part 1 of 29 in the series 1 டிசம்பர் 2013

ஷைன்சன்

இத்திரைப்படம் பிரஞ்சுப் பாடகியான இடித் பியாஃபின் வாழ்க்கையைச் சித்தரிக்கிறது.

இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற ஒரே பிரஞ்சுத் திரைப்படம் இது. (சிறந்த

நடிகைக்கான ஆஸ்கர் விருது மற்றும் ஒப்பனைக்கான விருது).

(இத்திரைப்படத்தைப் பற்றிப் பேசும்போது தமிழில் வெளிவந்த, வெளிவராத வாழ்க்கை

வரலாற்றுப் படங்களைப் பற்றியும் பேச வேண்டியிருக்கிறது. உண்மையைச் சொல்லப்

போனால் தமிழில் இதுவரையில் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் என்று

சொல்லக்கூடிய முழுமையான திரைப்படம் வந்ததில்லை. பெரியார், காமராஜ் என்று

திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும், அவர்களின் வாழ்க்கையில் ஒரு சதவீதத்தையேனும்

அத்திரைப்படங்கள் உணர்ச்சியோடு வெளிக்காட்டவில்லை. சுவாரஸ்யமற்ற

நூலைப்படிக்கும் அனுபவத்தையே அத்திரைப்படங்கள் கொடுத்தன. இவை இப்படியென்றால்

வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் முதலிய திரைப்படங்கள் தேசபக்தி, வீரம்

முதலியவற்றைப் பரப்ப வேண்டிய கட்டாயத்தில் சிக்கி நாடகங்களாய் மாறிப்போயிருந்தன.

வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிப்பதில் ஓரளவு வெற்றி பெற்ற திரைப்படம் என்றால்

மணிரத்னத்தின் ‘இருவர்’ திரைப்படத்தைச் சொல்லலாம். ஆனால் மாற்றப்பட்ட பெயர்களும்,

சில நிகழ்வுகளுமாக ‘இருவர்’ ஒரு அரசியல் திரைப்படமாக மாறிப் போனது.

வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுப்பதற்குத் தயாரிப்பாளர்கள்

அஞ்சுகிறார்கள் என்றே நினைக்கிறேன். நிகழ்காலத் தமிழ் திரையுலகம் இதுவரையிலும்

தேவையான பொருட்செலவோடு பரீட்சித்துப் பாராத ஒரு களமாகவே அது திகழ்கிறது.

ஆனால் மேற்கத்திய நாடுகள் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுப்பதற்கோ,

அவற்றில் புனைவுகளைப் புகுத்தவோ அஞ்சுவதில்லை. இதுவரையிலும் நான் பார்த்த

வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்களிலேயே சிறந்த திரைப்படமான அமெடியுஸ்

செக்கோஸ்லோவகிய இயக்குநரான மிலோஸ் ஃபோர்மனின் ஆங்கிலப் படைப்பாகும்.

சுவையான புளைவுகளைக் கலந்து மொசார்ட்டின் வாழ்க்கையைச் சித்தரிக்கும்

இத்திரைப்படம், திரைக்கலையின் சிறந்த வெளிப்பாடுகளில் ஒன்றாகும்).

வெவ்வேறு காலகட்டங்களைச் சார்ந்து நிற்கும் இரண்டு கதைப்போக்குகளுடன் நாம்

பயணிக்கிறோம். இடித் பியாஃபின் இளம்பருவத்திலிருந்து ஒரு கதைப்போக்கு செல்கிறது.

இறுதிக்கட்டத்திலிருந்து மற்றொரு கதைப்போக்கு செல்கிறது. தெருப்பாடகியாய்

வாழ்க்கையை நடத்தும் இடித்தின் தாய் அவளை ஏறத்தாழ அநாதையாக்கிவிட்டு அரங்கப்

பாடகியாக வாய்ப்பு தேடி நகரங்களுக்குச் செல்கிறார். அவளைக் கண்டுபிடிக்கும்

தந்தையோ தனது தாயிடம் அவளை ஒப்படைத்து விட்டுச் செல்கிறாள். விபச்சார விடுதி

நடத்தும் அவள் இடித்தை வளர்க்கிறாள். அவ்விடுதியில் தொழில் நடத்தும் ஒரு பெண்

இடித்தைக் கவனித்துக் கொள்கிறாள்.

ஆனால் விரைவில் அவள் தந்தை வந்து இடித்தை அழைத்துப் போகிறார்.

சர்க்கஸ்காரரான அவர் வித்தை காட்டும் போது இடித் பாட வேண்டிய கட்டாயம்

ஏற்படுகிறது. அங்கிருந்து தெருப்பாடகியாக பரிணமிக்கிறாள். தொடர்ந்து லூயி என்பவரின்

உதவியால் காபரே பாடகியாக, பியாஃபாக (சின்ன சிட்டுக்குருவி) அவள் மாறுகிறாள்.

பாடலாசிரியரும், இசையமைப்பாளருமான ரேமண்ட் அவளை அரங்க மேடையேற்றுகிறார்.

பிரான்ஸ் முழுக்க அவள் புகழ் பரவுகிறது.

குத்துச்சண்டை வீரனான மார்செலைக் காதலிக்கிறாள் இடித். அவள் மீதான

காதலுடன் பாரிஸுக்கு வரும் மார்செலின் விமானம் விபத்துக்குள்ளாகிறது. மார்செலின்

இழப்பால் உடைந்து போகிறாள் இடித். போதை மருந்து உட்கொள்ளத் தொடங்குகிறாள்.

அவள் உடல்நிலை மோசமாகத் துவங்குகிறது.

இறுதிக்காட்சியில் ஒருபுறம் இடித் இறந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். ஆனால்

இயக்குநர் அங்கே நிறுத்தவில்லை. இடித் தனது புகழ்பெற்ற பாடலான Non je ne regrette rien

(எனக்கு கடந்து போனவைகளைப் பற்றிக் கவலையில்லை) பாடுவதோடு திரைப்படம்

நிறைவடைகிறது.

இத்திரைப்படத்தின் முக்கிய அம்சம் மரியான் கோட்டீயாரின் (Marion Cotillard-ஐ

பிரஞ்சுக்காரர்கள் இப்படித்தான் உச்சரிப்பார்களாம். அவர்களது உச்சரிப்பு உண்மையிலேயே

அலாதியானது) நடிப்பாகும். இடித்தாகவே படம் முழுக்க வாழ்ந்திருக்கிறார் அவர்.

இத்திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் உட்பட ஏழு சிறந்த நடிகை

விருதுகளை அவர் பெற்றுள்ளார். நாம் நடிகைகளின் சதையை விற்பதில் காட்டும்

கவனத்தை அவர்களை நடிக்க வைப்பதில் காட்டினால் நமக்கும் சிறந்த நடிகைகள்

கிடைக்கலாம். தமிழ் சினிமாவின் புதிய அலை, இப்போது பல நடிகைகளை நடிக்க வைக்கத்

தொடங்கியுள்ளமை அந்தக் காலகட்டம் வெகு தொலைவில் இல்லை என்று நமக்கு

நம்பிக்கையூட்டுகிறது.

Series Navigation‘ என் மோனாலிசா….’கவிஞர் வ. ஈசுவரமூர்த்தியின் கவிதையில் மறுமலர்ச்சி சிந்தனைகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *