சோகச் சித்திரங்கள் [தில்லையாடி ராஜாவின் “என்வாழ்க்கை விற்பனைக்கல்ல…” எனும் நூலை முன்வைத்து]

This entry is part 21 of 26 in the series 8 டிசம்பர் 2013

’தில்லையாடி ராஜா’ எனும் புனைபெயரில் எழுதும் இரா. இராஜேந்திரன் தற்போது கடலூரில் வசித்து வருகிறார். அவர் எழுதி உள்ள இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு ’என் வாழ்க்கை விற்பனைக்கல்ல’ எனும் பெயரில் வெளியாகி உள்ளது.

இத்தொகுப்பில் உள்ள பத்துச் சிறுகதைகளும் படிக்கும்போது இவை ஏதோ ஒரு வகையில் நம்மோடு சம்பந்தப்பட்டவையாக இருக்கின்றனவே என்று எண்ணத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு கதைகளின் பாத்திரங்கள் நாம் நாள்தோறும் பார்ப்பவர்களாகவே இருக்கிறார்கள். கதைகளில் வரும்          உரையாடல்கள் மிகவும் இயல்பாய் இருக்கின்றன. கதைகளின் தள   வருணனைகள் யதார்த்தமாக அளவோடு இருக்கின்றன.

”பெற்றோர்கள் ஏற்காத காதலுக்காக ஊரை விட்டுப் போகும் பெண், தனது சம்பளக் காசை, அப்பா வாங்கிப்போய்க் குடிப்பதால் நொறுங்கிப் போகும் பையன், கணவனின் இம்சை தாங்காமல் பிரிந்துபோகும் மனைவி,

பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள், நடிகையானாலும்           ஆணாதிக்கத்தால் துன்புறும் நடிகை, தன் விருப்பத்திற்கு மாறாக வறுமையால் ’டேடிங்’ போகும் இளம்பெண், டாஸ்மாக்கில் குடித்தே சீரழியும் கணவனுக்கு வாக்கப்பட்ட மனைவி, தான் கெட்டுப் போனதால் தன் மகளையும் கேட்கும் வாடிக்கைக் காரனுக்குப் பதில் சொல்லும் பெண், காதலனால் கரு உண்டாகி அதைக் கலைக்க அவன் வருவான் என நம்பி ஏமாறும் பெண், கட்சிக் காரர்களால் தாக்கப்பட்டு நியாயம் கிடைக்காத கடைக்காரன்” என்று சிறுகதைகளில் எல்லாம் சோகத்தை மனத்தில் ஏந்திக் கொண்ட மாந்தர்களாகவே பார்க்க முடிகிறது.

சில கதைகள் மனத்தை மிகவும் பாதிக்கத்தான் செய்கின்றன. ’முதலாளி இன்று சம்பளம் போடுவார்; தன் தம்பி, தங்கைகளுக்கு துணி வாங்கிக் கொடுக்க வேண்டும்’ என்று நினைக்கிறான் தனபால். முதலாளி சம்பளமும் போடுகிறார். ஆனால் இவன் முறை வரும்போது,

,”ஒங்கொப்பன் இந்த மாசத்திலே ரெண்டு தடவை ஒன் சம்பளக் காசை வாங்கிட்டுப் போய்ட்டாண்டா; டாஸ்மாக் கடையிலே கொடுத்திட்டானா? உங்கம்மாகிட்ட கேளுடா….ஆமா….அவனுக்கு ஒரு கீப் வேற இருக்கில்ல…”

என்று முதலாளி கூறும்போது தனபாலுடன் சேர்ந்து நாமும் நொறுங்கிப் போகிறோம். இன்றைக்குப் பல குடும்பங்களில் நடக்கும் நிகழ்ச்சியை கதையாக்கி இருக்கிறார் ராஜா.

இதே டாஸ்மாக்கின் பாதிப்பை ’சின்னத்திரை இலவசம்’ வேறொரு விதமாகக் கூறுகிறது. டாஸ்மாக்கில் வரும் லாபத்தில்தான் பொதுமக்களுக்கு இலவசப் பொருள்கள் வழங்கப் படுகின்றன எனும் கருத்து பரவலாகக் கூறப்பட்டு வருகிறது. அப்படி அந்த லாபத்தில் வழங்கப்படும் இலவச டி.வி பெட்டியே எனக்கு வேண்டாம் என்று மறுக்கும் லெட்சுமியை அக்கதையில் பார்க்கிறோம். எம்.எல்.ஏ பேசும்போது

’இலவச டி.வி வழங்க எவ்வளவு பணம் செலவாகிறது?’ என்பதையெல்லாம் புள்ளி விவரங்களுடன் விரிவாகப் பேசுகிரார். அப்போது சாதாரணமான கிராமத்துப் பெண் லெட்சுமி பேசுகிறாள்

’ஏங்க்கா! இவர் எப்பக்கா முடிப்பாரு? ஏதோ இவர் பாக்கெட்லேருந்துதான் எல்லாப் பணத்தையும் குடுக்கிற மாதிரி அளந்து விடறாரே! அரசாங்கப் பணம்தானே?

கதாசிரியரின் எதிர்பார்ப்பு இக்கதையில் வெளியாகி இருக்கிறது. என்றாவது ஒருநாள் இது பூரணமாகும் என்று நம்பலாம். காவல் நிலையங்களில் வழக்கமாக நடக்கும் ஒரு நிகழ்ச்சியை ‘இந்தியன் என்று சொல்லடா’ சிறுகதை காட்டுகிறது. அரசியல்வாதிகள் நினைத்தால் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்ற நம் நாட்டின் நிலையை இக்கதை நன்கு பிரதிபலிக்கிறது. அரசியல் கட்சி ரசிகர் மன்றம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு மனைவி நகைகளை அடகு வைத்து சுயமாக ஒரு பெட்டிக் கடை தொடங்குகிறான் வாசு.

ஆனால் ஒரு போஸ்டர் விவகாரத்தில் அநியாயமாக அவனை கட்சிக் காரர்கள் அடித்துப் போட அவன் காவல் நிலையம் போகிறான்.

”நாம ஏழைகளுக்குப் பாதுகாப்பு குடுக்கத்தானே இருக்கோம்” என்று தொடக்கத்தில் கூறும் இன்ஸ்பெக்டர், ஓர் அரசியல்வாதி வந்து பேசி இன்ஸ்பெக்டரின் சொந்த ஊர் மாறுதலுக்கு சிபாரிசு செய்வதாகக் கூற வாசு கொடுத்த கம்ப்ளைண்டையே அவர் கிழித்துப் போடுகிறார்.

”இன்ஸ்பெக்டர் சொன்ன வார்த்தைகள் அனாதையாக வலம் வந்து கொண்டிருந்தது” என்று இந்தக்கதை முடியும்போது இந்த இந்தியத் திருநாட்டில் கணக்கற்ற அனாதைகள் உலவுவது நம் கண்முன் தெரிகிறது.

பொதுவாகவே தொகுப்பின் எல்லாக் கதைகளும் சமுதாயத்தைப் பாதித்துள்ள ஏதொ ஒரு முடிச்சை மையமாக வைத்தே பின்னப்பட்டுள்ளன

”விஷப்பூச்சி கடிச்சிருச்சி” ஒரு முக்கியமான கதை. வறுமையில் வாடும் காஞ்சனாவை அவள் தோழி வசந்தா ஒரு செயலில் ஈடுபத்துகிறாள். அதுதான் மேல்நாட்டுக் கலாசாரத்தின் விளவாய் பரவியிருக்கும் ‘டேடிங்”.

”மூணு நாலு ஆபீசர்ஸ் வருவாங்க, எல்லாரும் பாண்டிச்சேரி கவர்ன்மெண்ட் செக்ரட்டரீஸ்தான், ரொம்ப டீஸண்டான பேர்வழிங்க, இரண்டு மணிநேரம் ‘ஸ்பெண்ட்’ பன்ணுவாங்க, லேசாதொடுவாங்க ஜாலியாப் பேசுவங்க. மற்றபடி நம்மளை வேற தொந்தரவு எதுவும் பண்ண மாட்டாங்க, வரும்போது நாலாயிரம் ஐயாயிரம்னு பணம் குடுப்பாங்க”

என்று வசந்தா கூறியபோது முதலில் மறுத்த காஞ்சனா குடும்பச் சூழ்நிலையால் ஒப்புக் கொள்கிறாள். காரில் செல்லும்போது காரின் அசைவைப்  பயன்படுத்தி ஒருவர் அவளின் தோளில் சாயவும், ஒருவர் தொடைமேல் கை வைத்து அழுத்தவும் காஞ்சனா புழுப்போல் துடிக்கிறாள். ஏன்வந்தோம் என்று நினைக்கிறாள். அப்போது காஞ்சனாவின் தம்பி பதற்றத்துடன் மொபைலில் பேசுகிறான்.

“அக்கா, அம்மாவை ஏதோ விஷப்பூச்சி கடிச்சிருச்சி, வாயிலே நுரை தள்ளிருச்சி, உன்னை ஒடனே வரச் சொல்லி போன் பண்ணச் சொல்லிச்சிக்கா”

காஞ்சனா வசந்தாவிடம் செய்தியைச் சொல்ல கார் உடனே நிறுத்தப் படுகிறது. காரில் இருந்தவர்கள் கத்தையாக ஐநூறு ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து இருவரையும் அனுப்பிவைக்கிறார்கள்.

”இனிமேல் இதுபோன்ற ஈனமான காரியங்களில் ஈடுபடக் கூடாது. உழைத்து வரும் கவுரமான வருவாயிலேயே பிழைக்க வேண்டும்” என்று காஞ்சனா உறுதி எடுத்துக் கொள்கிறாள். கதை முடிகிறது.

இக்கதையில் காஞ்சனா காக்கும் பண்பாட்டை மனத்தில் வைத்துக் கதாசிரியர் எழுதி இருந்தாலும் ‘டேடிங்’ கிற்காக அழைத்துக் கொண்டு போகும்  பெண்களின் இக்கட்டான சூழலை அறிந்து அவர்களைப் பணம் கொடுத்து அனுப்பி வைக்கும் அந்த மனிதர்களே மனத்தில் நிலைக்கிறார்கள்.

பல கதைகளில் தள வருணனைகள், கதை நடக்கும் சூழலை அப்ப்படியே கண்முன்னே கொண்டு வருகின்றன. வசந்தா போகும் போது ’ஈழத் தமிழர்களைக்க் காப்போம்’ என்ற போஸ்டரைப் பார்க்கிறாள்.

“இவர்கள் எல்லாம் வாயை மூடிக் கிட்டு சும்மா இருந்தாலே ஈழத் தமிழர்கள் அவர்கள் பாட்டைப் பார்த்துக் கொள்வார்கள்”

என்று வசந்தா எண்ணுவதாகத் தன் கருத்தை ராஜா பதிவு செய்வது அவரின் சாமர்த்தியத்தைக் காட்டுகிறது. இங்கே இருக்கும் சில வாய்ச் சொல் வீர்ர்களாலும், பதவி ஆசைக்காரர்களாலும் ஈழத் தமிழர் அடைந்த வேதனைகள் நினைவுக்கு வருகின்றன.

’பாதாள சாக்கடைக்குத் தோண்டிய குழிகள் சரியாக மூடப் படாத்தால் மேடு பள்ளங்களில் டெம்போஆடி ஆடிப் போனது’ என்று எழுதும் ராஜா,

கடலூரின் ரயில்வே கேட் மூடப் பட்டதால் பொதுமக்கள் படும் வேதனைகளையும் பதிவு செய்துள்ளார்.

கதாசிரியரின் எழுத்துகளில் ஆங்காங்கே இலக்கணப் பிழைகள் தெரிவதைத் தவிர்த்திருக்கலாம்.

’வாழ்க்கை’ என்பது ஒருமை. எனவே நூலின் தலைப்பு “என் வாழ்க்கை விற்பனைக்கன்று” என்றே இருக்க வேண்டும்.  பக்கம் -154-இல்

’வார்த்தைகள்’ என்பது பன்மை. எனவே ‘வார்த்தைகள் மட்டும் அனாதைகளாய் வலம் வந்து கொண்டிருந்தன’ என்று இருக்க வேண்டும்.

‘சுக ராகம் சோகம்தானே’ என்றெழுதினார் வைரமுத்து. வாழ்வின் அடித்தள மக்களின் சோகங்களைப் படம் பிடித்துக் காட்டும் தில்லையாடி ராஜாவின் சிறுகதைகள் நவீன தமிழ்ச் சிறுகதை உலகிற்கு ஒரு முக்கியமான வரவு என்றுஇதான் சொல்ல வேண்டும்.

[ என் வாழ்க்கை விற்பனைக்கல்ல—சிறுகதைகள்—தில்லையாடி ராஜா—மணிமேகலை பிரசுரம்—பக்-172—விலை: ரூ.70]

.

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 92 என் கனவை நிறைவேற்றுசீதாயணம் நாடகம் -10 படக்கதை -10
author

வளவ.துரையன்

Similar Posts

Comments

  1. Avatar
    தி.தா.நாராயணன் says:

    `என் வாழ்க்கை விற்பனைக்கல்ல’நூலைப் பற்றிய வளவ.துரையன் அவர்களின் மதிப்புரை நன்றாக இருக்கிறது.நூலின் அத்தனை கதைகளும் சமூக பிரச்சினையை மட்டுமே மையமாகக் கொண்டிருக்கின்றன என்பதால் படிக்க தூண்டுகிறது.
    செய்யாறு தி.தா.நாராயணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *