விஜயலஷ்மி சுஷீல்குமார்
நெஞ்சம் படபடவென்று அடித்துக்கொண்டு, உடம்பில் ஒருவித நடுக்கம் வந்து, என்னால் வார்த்தைகளை வெளியிடமுடியாது தொண்டைக்குழியை அழுத்தியது.
மனமோ நேர்மாறாக “என்ன? ஏன்? எதற்கு? எப்படி? எப்போ? நிஜம்மாவா?” இப்படி எல்லாவிதமான கேள்விகளும்; அகராதியில் உள்ள அத்தனைக் கேள்விகளும் ஒன்றையொன்று பற்றிப் பிணைந்து, என்னைச் சூழ்ந்தது, ஆனால் விடைதான்… கிடைக்கவில்லை.
இன்று, இப்போது கோமதி இவ்வுலகில் இல்லை என்று கேட்டதில் இருந்து என் நிலையைச் சொல்லமுடியவில்லை.. இந்த மூன்று மாதமாக வேலை காரணமாக வெளியூருக்குச் சென்ற போது என்ன நடந்தது? அதற்கு முன்பு வரையில் ஏதும் வித்தியாசம் தோன்றியதில்லை.
எழுந்து ஜன்னலிடம் நின்றேன், இங்கு இங்கிருந்து தானே…என் கோமதி..என் மனம் இன்னும்கூட அவள் இல்லாததை ஏற்றுக்கொள்ளவில்லை.
என் கைகள், அந்தக் கம்பியில்லா ஜன்னலை நடுங்கும் விரல்களால் வருடியது. அன்றொரு நாள் கோமதி என்னிடம் கூறியது படமாக மனக்கண்ணில் விரிந்தது, “பாத்தியா சௌம்யா என் பொண்ணு கொடுத்தது” என்று கையில் ஒரு கீசெயின் மற்றும் ஒரு வாழ்த்து அட்டையைக் காண்பித்தாள்.
“அட கீசெயின் அழகா இருக்கே. ஒரு குழந்தை அம்மாவக் கட்டிப்பிடிச்சு முத்தம் தராமாதிரி. எவ்வளவு தத்ரூபமா இருக்கு.” என்று கூறிக்கொண்டே அன்னையர் தின வாழ்த்திற்கு கோமதியின் மகள் தன் கையால் உருவாக்கிய வாழ்த்து அட்டையைப் பார்த்துப் பிரமித்தேன். படமும் வரிகளும் மனதைத் தொட்டது.
“ரொம்ப நல்லா இருக்கு” என்று உணர்ந்து சொன்னேன்.
“ஆமாம். அவ சொல்லறா ‘எப்படி அம்மா நான் கேக்கும் முன்னையே எனக்கு வேண்டியதை நீங்க பண்ணிடறீங்க? உங்கள மாதிரி யாருக்குக் கிடைப்பாங்க பெஸ்ட் அம்மா? என்னோட பிரண்ட்ஸ் எல்லாம் பொறாமையாப் பாப்பாங்க தெரியுமா? அப்படின்னு” என்ற கோமதியின் குரலில் பெருமிதமும் நெகிழ்வும் நிறைந்து வழிந்தது.
“ஆமாம் உன் மக சொல்லறதும் சரிதான். அது எப்படித்தான் நீ லேட்டஸ்ட் பேஷன் ஆகட்டும், சமையல் ஆகட்டும் எல்லாமே ஜோரா செஞ்சி அசத்தற. இப்படி ஒண்ணொண்ணா பாத்துப் பாத்து செய்யற.. ஆனா என்னால எல்லாம் முடியாதுப்பா. வேலை முடிஞ்சி வீட்டுக்குப் போனா போதும்ன்னு தோணும். போனதும் ஏதோ அரக்கப்பரக்க செஞ்சிச் சாப்பிட்டுப் படுத்தாப் போதும்ன்னு தோணும். லீவ் நாளுல தான் பசங்களுக்குப் பிடிச்சதைச் செய்யமுடியுது.” என்றேன்.
“இல்ல சௌமி, என் பொண்ணு எப்பவும் ஏங்கிப் போய்டக்கூடாது. அவ யாருகிட்டயும் எதுக்கும் போய் நிக்கக்கூடாது. அவ எதிர்ப்பாக்காம இருக்கும்போது, அவ ஆசையை நிறைவேத்தினா, அவ முகத்துல தெரியும் சந்தோஷம், பிரமிப்பு இப்படி கலந்த உணர்வை பாக்கும்போதே என் மனசு நெறஞ்சிடும்.” என்று மெய்மறந்து சொன்னது அசரீரியாக இப்பொழுதும் என் காதில்….
அன்று முதல் அந்த சாவிக்கொத்து கோமதியிடம் எப்போதும் இருக்கும்.
“ஏன் கோமதி, ஒரு வாட்டியாவது நீ உன் முடிவை செயல்படுத்தும் முன் அந்த சாவிக்கொத்தை பார்த்திருக்கலாமே? அவ்வளவு உன் பொண்ணுக்காக பார்த்துப் பார்த்து செய்வியே! அவளுக்கு எதிர்பாராத ஆச்சர்யங்களைத் தந்தவ, இப்போ இதையும் அவ எதிர்ப்பார்க்காம செய்துட்டியா? அவ உணர்வுகள் இப்போ உனக்கு தெரியுதா? புரியுதா?” என்று என் வாய் முணுமுணுத்தது.
என்னிடம் கேள்விகள் மட்டுமே…என் கேள்விகளுக்குப் பதிலில்லை.
“வாங்க மேடம், அன்னிக்கி போகமுடியாதவங்க எல்லோரும் இப்போ அவங்க வீட்டுக்குப் போறாங்க.” என்று அழைத்த ஊழியருடன் நானும் சென்றேன்.
எல்லாம் முடிந்து ஒரு வாரம் ஆகப்போகிறது.
என்னால் உள்ளே செல்ல முடியவில்லை. “இங்க இங்கதான் ஒக்காந்துகிட்டு கதைக் கதையாப் பேசுவோம்.” அங்கு சென்று நான் அந்த நாற்காலிக்கு வலிக்குமோ என்று மெல்ல அதில் அமர்ந்தேன்.
“அடுத்த வாரம் எங்க வீட்டுல, ஊருக்குப் போயிட்டு வந்த கதையை பேச வரேன்னு சொன்னியே…வருவியா? உனக்கு பிடிச்சப் பொருள் ஒன்னு வாங்கிட்டு வந்திருக்கேன்… இப்போ அதை வாங்கிக்கத் திரும்ப வருவியா?” புலம்பித்தவித்த என் மனம் என் கட்டுப்பாட்டில் இல்லை.
என் உடன் வந்தவர் அழைத்ததும் உள்ளே சென்றேன். எனக்கே இப்படி இருக்கே அங்கே கோமதியின் கணவர் மற்றும் பெண்ணைப் பற்றி என்ன சொல்ல? உணர்வுகள் இல்லா ஜடமாய்; ஜீவன் உண்டோ?
ஒடுங்கி வெறித்த பார்வையில் என்ன தென்படுகிறது? அவளுடைய கணவர் ஏதோ பத்துப் பதினைந்து வயது மூப்புபோல் தோற்றத்துடன்!
“என்னடி உங்க வீட்டுக்காரர் ரொம்ப ரிசெர்வ்டா? நான் வந்தாலே ஏதோப் புலியப் பாத்தாமாதிரி வாங்கன்னு சொல்லிட்டு ஆளே காணாமப் போய்டறார்?” என்றபோது,
“ச்சே ச்சே, நீ மட்டுமில்லை சொந்தக்காரங்க வந்தாலும் அப்படிதான். ஆனா அவரு அடிக்கற லூட்டி இருக்கே..ஹப்பா. எங்கக் கிட்டதான். எங்க மாமியார்கூட, அட இவனுக்குச் சிரிச்சிப் பேசக் கூடத் தெரியுமா? அப்படின்னு சொல்லி அவரை வாருவாங்க. கேட்டா… எங்கக் கிட்ட ப்ரீயா இருக்கற மாதிரி மத்தவங்கக் கிட்ட இருக்கமுடியல அப்படின்னு சொல்லுவார்.ஆனா யாராவது வீட்டுக்கு வரப்போறாங்க அப்படின்னா தேவையானது எல்லாம் வாங்கிக்கிட்டு வந்துடுவாங்க. இது பண்ணு அது பண்ணுன்னு ஒரு வழிபண்ணிட்டு விருந்தாளி வந்தவுடன் அவங்க உள்ளே போயிடுவாங்க.” என்பாள்
“இனி உன் வீட்டுக்காரர் யாருக்கிட்ட மனசுவிட்டு பேசுவார்? அவர ஊமையாக்கிவிட்டுப் போக எப்படி மனசு வந்தது?” என் மனமோ இப்படி கேள்விக்கணைகளைத் தொடுத்தது. எதற்கேனும் பதில் சொல்ல வரமாட்டாளா?
அப்போது உள்ளே அவளின் தாயார் ஒரு மூலையில் சுருண்டிருப்பதைப் பார்த்து அவரிடம் சென்றேன். பெற்றப் பெண்ணைப் பறிகொடுத்தத் தாயை எப்படி சமாதானம் செய்ய முடியும். என் கை அவரை ஆறுதலாக வருடியது… அவர் என்னைக் கண் திறந்துப் பார்த்தார். அந்தப் பார்வையில் எத்தனை உணர்ச்சிப்போராட்டம்… புரிந்தது வார்த்தைகளுக்குத் துக்கத்தை வெளிப்படுத்தும் சத்தியில்லை. ஆம்.
“எப்படித்தான் மனசு வந்ததோ. ஒரு ராத்திரிக்கூட எங்க வீட்டுலத் தங்கமாட்டா. போம்மா நினைச்சப்போ வந்துட்டுப் போறேனே இன்னும் என்ன வேணும் உங்களுக்கு. இங்கத் தங்கினா சரியா வராது அவருக்கு; அவர விட்டுட்டு என்னால இங்க இருக்க முடியாது. அப்படின்னு சொல்லிட்டு ஓடி ஓடி இங்க வந்துடுவா. இப்போ எப்படி? அவளால அவ புருஷனையும் பொண்ணையும் தனியாத் தவிக்கவிட்டுப் போகமுடிஞ்சது?” என்று என்னைக் கேட்டபோது மனம் கனத்தது.
விடை தெரியா பல கேள்விகளுடன் இதுவும் இணைந்தது.
“அதிசயமா ஒரு பத்துநாளுக்கு முன்ன பொண்ணோட வந்து ஒரு நாள் தங்கினா. பிடிச்சதைச் சமைக்கச் சொல்லிக் கேட்டுக் கேட்டுச் சாப்பிட்டா. இனிக் கேட்டுச் சாப்பிட இருக்க மாட்டேன் அப்படின்னு சொல்லாம சொன்னது புரியாம போச்சே.. புரிஞ்சிருந்தா, அவளப் பிடிச்சி வெச்சிருக்க மாட்டேனா?” என்று அரற்றியத் தாயைக் கண்கொண்டுக் காண முடியவில்லை.
“அவப் போனதுக்கு காரணம் குடும்பப் பிரச்சினைதான்; இல்லை ஆபீஸ் பிரச்சனை தான் அப்படின்னு ஆளாளுக்குப் பட்டிமன்றம் நடத்தறாங்க. எங்களுக்கேத் தெரியாதப் புரியாதக் காரணங்கள் எப்படி மத்தவாளுக்கு புரியும்? தெரியும்?” என்ற தாயாரின் ஆதங்கத்தைப் புரிந்துக்கொள்ள முடிந்தது.
கோமதிக்கு இந்த எண்ணம் எப்போதிருந்து இருந்தது, அதை வெளிப்படுத்தும் விதமாக தாயாருடன் தங்கியது எனில் ஏன் வேறு வழியில் அவள் முடிவெடுக்க முயலவில்லை? ஒருவேளை முயன்றாளோ? என்ற என் எண்ண வலைகள் பின்னத்தொடங்கியது.
அதைக் கலைக்கும் விதமாக மீண்டும் அப்பெரியவர் சொன்னது என் கவனத்தை ஈர்த்தது, “ம்ம்ம்..மாடா உழைக்கணும்ன்னு தலையெழுத்தா? வீட்டுக்காரர்கூட போகட்டும் விடுன்னு சொல்லறார்…ஆனா விடமுடியலையேன்னு சொன்னா. ஏண்டிம்மா.. உங்க ஆபீஸ்ல என்ன தான் நடந்தது? நல்ல நாள்லயே மாப்பிள்ளை நாம்ப நூறு வார்த்தைப் பேசினா, எண்ணி நாலு வார்த்தைப் பேசுவார். இப்போ அந்த நாலு வார்த்தையும் இல்லாம ஆக்கிட்டாளே.” என்று என் முகத்தைப் பதிலுக்காகப் பார்த்தார்.
எனக்கே ஒன்றும் தெரியாத போது நான் என்ன சொல்ல? “எனக்கு தெரிஞ்சி ஒன்னும் இல்லை. இப்போதான் ஊருலே இருந்து வந்தேன். இனிதான் பாக்கணும். தெரிஞ்சா கண்டிப்பா சொல்லுறேன்.” என்று அப்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும் “மாடாய் உழைக்கணும்” என்ற சொல் மனதில் நெருஞ்சிமுள்ளாய் இடறியது.
நான் அலுவல் காரணமாக வெளியூர் சென்ற ரிப்போர்ட்டை மேலதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தால் கோமதியின் வீட்டில் இருந்து நேரே அலுவலகம் சென்றேன்.
ரிப்போர்ட் தயாரிக்கும்போது என் கண்ணில் பட்ட அலுவல் கடிதம் என்னை உலுக்கியது. “கோமதிக்கு வரவேண்டிய பதவி உயர்வு கோமதிக்கு அடுத்த நிலையில் இருக்கும் சேகருக்கு எப்படி வழங்கலாம்? கோமதியின் அயராத உழைப்பு ஏன் அங்கீகரிக்கப்படவில்லை?” என் மனம் ஆறவில்லை.
பதவி உயர்வுப் பற்றியப் பேச்சு அலுவலகத்தில் தொடங்கியதில் இருந்து கோமதி பதவி உயர்வு கிடைக்கும் என்று எத்தனை எதிர்ப்பார்ப்புடன் இருந்தாள்.
கோமதியும் “இந்த வேலை முடிக்கற வரைக்கும் குடும்பத்துக்குக் கூட நேரம் செலவு செய்ய முடியல. ஏதோ புரிஞ்சிக்கற வீட்டுகாரர் கிடைச்சது நான் செஞ்ச புண்ணியம். இந்த சேகருக்கு ரொம்ப கொழுப்பு ஜாஸ்தி ஆகிடுச்சு. இன்னிக்கி ஃபைல் எடுக்க வந்தவன், நான் என்னதான் மாடுமாதிரி உழைச்சாலும் ப்ரொமோஷன் எனக்குக் கிடைக்காதாம். அவனுக்குத் தான் கிடைக்கும்ன்னு நக்கல் பண்ணிட்டுப் போறான்.” என்றது நினைவிற்கு வந்தது.
அவள் மட்டுமல்ல, பெரும்பாலான ஊழியர்களுக்கும் கோமதிதான் ஆரம்பம்முதலே அயராது உழைத்த அந்த ப்ராஜெக்ட் மூலம் எத்தனை அதிக லாபம் கம்பெனிக்கு கிடைத்தது என்றும், ஆதலால் அவ்வருட செயல் திறனை மட்டுமல்லாது, இங்கு வேலைக்கு சேர்ந்தது முதல் அவளின் உழைப்பிற்கு தகுந்தப் பிரதியுபகாரமாக பதவிஉயர்வு வரும் என்று மகிழ்ந்தனர்.
என் ரிப்போர்ட் உடன் மேலதிகாரியைக் காணச்சென்ற நான் என் விஷயங்களை பற்றிப் பேசி முடித்து விட்டு, “என்ன சார், கோமதிக்கு வரவேண்டிய பதவி உயர்வை சேகருக்குத் தந்துட்டீங்க?”
சில நிமிடங்கள் மௌனமாக இருந்துவிட்டு, “உங்களுக்கேத் தெரியும் அந்த பொறுப்பு எவ்வளவு கடினம் அப்படின்னு?”
“ஏன் சார், கோமதிக்கிட்ட அதற்குத் தேவையான எல்லா தகுதியும் இருக்குன்னு உங்களுக்கேத் தெரியும். இப்போ நீங்க சொல்லறது சரியான காரணம் இல்லை. நீங்க உண்மையான காரணத்தைச் சொல்லுங்க.” என்றேன் என்னை கட்டுப்படுத்திக்கொண்டு.
“வெல்… ஒரு பெண்ணா அந்தப் பொறுப்பு சரிவராது. …” என்று ஏதேதோ சொல்லிக்கொண்டேச் சென்றது என் காதில் விழவில்லை.
“ம்ம்ம் ஒன்னு மட்டும் இப்போ தெளிவாப் புரிஞ்சிடுச்சு. என்ன தான் தொழில் அனுபவம், படிப்பு, அந்தஸ்து, கெளரவம் இப்படி எல்லாம் இருந்தாலும்கூட பெண்ணை இரண்டாம்தர பிரஜையாக பார்க்கும் மனோபாவம் மட்டும் உங்கள மாதிரி ஆண்களுக்கு மாறவே இல்லை; மாறவும் மாறாது. இந்த லக்ஷணத்துல ரோட்டரி சங்கம் அங்க இங்கன்னுப் போய் இளைய தலைமுறைக்கு வழிக்காட்டியா போறீங்க! ஆணும் பெண்ணும் சமம்!! பெண்ணடிமைய ஒழிப்போம் அப்படின்னு உலக பெண்கள் தினம் (மார்ச் 8) அன்னிக்கி போய் பேசறீங்க. ச்சே..கேவலம். இதுக்கு வெளிப்படையா பெண்கள் ரெண்டாம் பிரஜைதான்னு சொல்லறவங்களேப் பரவாயில்லை, அவங்க மாற வாய்ப்பிருக்கு. ஆனா நீங்க…?” என்று மனக்குமுறலை வெளியிட்டேன்.
“இப்போ நான் உங்ககிட்ட பேசினதுக்கு நீங்க என்னை வேலைய விட்டுத் தூக்கினாலும் பரவாயில்லை. நான் கவலைப் படமாட்டேன். ஆனா ஒண்ணு.. ஒரு உயிர் போக உங்க முடிவும் முக்கியமான காரணம்ன்னு தெரிஞ்சிக்கோங்க” என்று சூறாவளியாக வெளியேறினேன்.
அங்கிருந்து நேரே வீட்டுக்கு வந்ததும் அதுவரை அடக்கிவைத்திருந்த அழுத்தம் அழுகையாக வெடித்தும், அழுத்தமும் ஆதங்கமும் கூடியதேத் தவிர குறையவில்லை.
வீட்டிற்கு வந்தும் மனம் சமாதானம் ஆகவில்லை. ச்சே … அன்று அலுவலகத்தில் நடந்ததை என் கணவரிடம் பகிர்ந்தேன்…”ஒருவேளை என்னோட வேலை கூடப் போனாலும் போகும்.” என்றேன்.
“போனாப் போகட்டும் விடு. இது இல்லைனா வேற. எதுவா இருந்தாலும் நான் உன்கூட இருக்கேன். எல்லாமே சமாளிப்போம்.” என்ற பதில் ஆறுதலாக இருந்தது.
அப்போதுதான் நினைவு வந்தவராக, “நீ ஊருல இல்லாதப்போ உனக்கு ஒரு லெட்டர் வந்திருக்கு, இரு..கொண்டு வரேன்” என்று கூறிச்சென்றார்.
அக்கடிதம் கோமதியிடம் இருந்து என்று அறிந்ததும் கை பரபரப்புடன் செயல்பட்டது. அக்கடிதத்தில் சேகருக்கு பதவி உயர்வுத் தந்ததைப் பற்றி குறிப்பிட்டு வருந்தி எழுதியிருந்தாள். அப்படியென்றால், இதுதான் அவளது மன அழுத்தத்திற்கான காரணம்…ஐயோ.. இது நடந்த போது நானும் ஊரில் இல்லாதது துரதிஷ்டவசமாகிப்போனதே..நான் மட்டும் இருந்திருந்தால் என் கோமதி..
சற்றே மட்டுப்பட்ட என் அழுகை மீண்டும் மடை திறந்தது.
கடலளவு ஆசைகளும்; விண்ணளவுக் கனவுகளும் ஏன் சிதறி சின்னாபின்னமானது? ஆசைகள் அலையலையாய் எழுந்தாலும் ஆழ்கடலில் இருக்கும் பொக்கிஷங்கள் போல ஆழ்மனதில் பார்க்கத் தவறியதேனோ? மெய்படும் மெய்படாக் கனவுகளை பிரித்தறிய முடியாது போனதோ?
“எண்ணம் செயலாக்கத் தோன்றிய அந்த ஓரிரு நிமிடங்கள் அதை தள்ளிப்போட்டிருந்தால் மீண்டும் அதைச் செயலாக்க நினைத்திருக்க முடியாதே. ஏன் கோமதி உடனே செயலாக்க நினைச்ச? என்னதான் பிரச்சனை இருந்தாலும் இப்படியா செய்யணும்?” என்ற என் ஆதங்கத்தை என் கணவருடன் பகிர்ந்தேன்.
“யாருக்குதான் பிரச்சனையில்லை? பிரச்சனைங்கற கடல்ல மூழ்காம அதை சமாளிச்சி வெளிய வரத்தானே நமக்கு அறிவுங்கற கப்பல கடவுள் தந்திருக்கார்.” என் மனதில் இருப்பதை வாய்வார்த்தையில் என் கணவரிடம் நான் வெளியிட்டபோது அவரிடமும் பதிலில்லை.
“ஏங்க.. எல்லோரும் சினிமா தியேட்டர், ஹோட்டல், பேங்க், போல பலதோட டெலிபோன் நம்பரும் வெச்சிருக்காங்க, அப்படியே இல்லைனாலும் இன்டர்நெட்டில் தேடி எடுக்கறாங்க. ஆனா சிநேகா (Sneha: Helpline – 91 – 44 – 24640050; Email: help@snehaindia.org இதுபோல் பல மையங்கள் உள்ளன. ரகசியம் காக்கப்படும்) போன்ற எண்களைத் தெரிஞ்சிக்கறதில்லை?” என்ற என் இந்த ஒரு கேள்விக்கு பதிலாக என் கணவர்,
“ஆமாம், காலம் மாறும்போது நாமும் சிலதுல மாறணும். சினிமா, அரசியல் இப்படிப் பலது பத்தியும் மாஞ்சி மாஞ்சி தெரிஞ்சிக்கும் நாம்ப, இதுபோன்ற மிக மிக அத்தியாவசியமான எண்கள், மையங்கள் பத்தியும் கட்டாயம் தெரிஞ்சிக்கணும். கவுன்சிலிங் போறதுக்கோ, மனநல மருத்துவரப் போய்ப் பாத்தாப் பைத்தியம்ன்னு முத்திரைக் குத்திடுவாங்கனோ பயப்பட அவசியமில்லை. நமக்கு தெரியாதப்போ, நம்மை வழிநடத்த தெரிஞ்சவங்கக் கிட்ட வழி கேக்கறதுத் தப்பேயில்லை அப்படின்னு புரிஞ்சிக்கணும்.”
“ஆமாம், ஒரு உயிர் இயற்கையா பிரியும்போதே அக்குடும்பம் நிலையில்லாது தத்தளிக்கும்போது, தானே மாய்ச்சுக்கிட்டா அவங்களச் சார்ந்தவங்க கழுத்துல கல்லைக் கட்டிக் கடல்லத் தள்ளின மாதிரி.” என்ற என் கூற்றை ஆமோதித்தார் என் கணவர்.
என் மனம் “எதைக் கண்டும் கலங்காது, எதிர்காலத்தை எதிர்கொள்ள வேண்டிய அவசியத்தை என்னைச் சுற்றி உள்ள மனிதர்களிடம் விதைக்க வேண்டும்” என்று தீவிரமானது! அதையே ஜெபிக்கத் தொடங்கியது.
- டௌரி தராத கௌரி கல்யாணம் – 28
- நத்தை ஓட்டுத் தண்ணீர்
- ஊடகங்களின் கதாநாயகர்கள் – ABCD (American Born Confused Desi) (கேரளா, இயக்குநர்- மார்ட்டின் பிரக்காட்)
- நிஜம் நிழலான போது…
- ஈசாவின் விண்ணுளவி கோசி [GOCE] கண்டுபிடித்த பூகம்ப நில அதிர்ச்சிகள் உண்டாக்கிய புவியீர்ப்புத் தழும்புகள்
- ‘அயலகத் தமிழாசிரியர்’ பட்டயம் – Diploma in Diaspora Tamil Teacher எனும் ஓராண்டுப் பட்டயப் படிப்பினை SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயம் தொடங்கியுள்ளது.
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம் 12 ஜராசந்த வதம்
- இருண்ட இதயம்
- மருமகளின் மர்மம் – 6
- குழந்தைக்குப் பிடிக்கும் நட்சத்திரங்கள்
- பெண்களும் வர்க்கமும் – சங்க இலக்கியங்களை மையமாகக் கொண்ட ஆய்வு
- ஒரு ஆல விருஷம் பரப்பிய விழுதுகள்
- வெள்ளை யானை ( தலித் இலக்கியத்தில் மேலும் ஒரு தடம் ! )
- கொட்டுப் பூச்சிகளும் ஒட்டடைகளும்
- கவுட் Gout மூட்டு நோய்
- உனக்காக மலரும் தாமரை
- 4 கேங்ஸ்டர்ஸ்
- ஜாக்கி சான் 19. ஆஸ்திரேலிய வாழ்க்கை
- திண்ணையின் இலக்கியத்தடம் -12
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 52 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) சந்தையில் பெண் ஏலம் .. !
- தாகூரின் கீதப் பாமாலை – 92 என் கனவை நிறைவேற்று
- சோகச் சித்திரங்கள் [தில்லையாடி ராஜாவின் “என்வாழ்க்கை விற்பனைக்கல்ல…” எனும் நூலை முன்வைத்து]
- சீதாயணம் நாடகம் -10 படக்கதை -10
- பொத்துவில் அஸ்மின் எழுதிய ‘பாம்புகள் குளிக்கும் நதி’ கவிதை நூல் அறிமுக விழா சென்னையில்.
- புகழ் பெற்ற ஏழைகள் 36. பார்போற்றும் தத்துவமேதையாக விளங்கிய ஏழை……
- மனம் போனபடி .. மரம் போனபடி