ஜாக்கி சான் – 20. ஹாங்காங்கில் மறுபடியும் வாய்ப்பு

This entry is part 29 of 32 in the series 15 டிசம்பர் 2013

20. ஹாங்காங்கில் மறுபடியும் வாய்ப்பு

Jackie-Chan-jackie-chan-5468506-553-800வில்லி சான் என்பவர். அவர் அனுப்பிய தந்தி சானுக்கு ஒரு புதிய வாழ்க்கைக்கு திறவுகோலாக அமைந்தது.

அவர் காதே நிறுவனத்தின் உதவி மேலாளராக இருந்தார்.

காதேயின் பழைய ஸ்டூடியோவை கோல்டன் ஹார்வெண்ட் வாங்கியிருந்ததால், இரு நிறுவனத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது.

அதனால் வில்லி கோல்டன் ஹார்வெண்ட் படப்பிடிப்புகள் நடக்கும் போது அங்கே வருகை தந்த நடப்பனவற்றை பார்த்துக் கொண்டு இருப்பார். அவர் விநியோகத்திற்கான படங்களைத் தெரிவு செய்பவர் என்பதால், படம் எப்படி எடுக்கப் படுகிறது என்பதைக் காண வருவார்.

அப்போது சானுக்கு அவரைத் தெரியாது. ஸ்டண்ட் கலைஞனாக இருந்த போது அவரிடம் பேசியதில்லை. வில்லி சான் அப்போது மதிப்பும் மரியாதையும் மிக்க மனிதர். அவர் லவ் இஸ் எ போர் லெட்டர் வேர்ட் (லவ் என்பது நான்கு எழுத்து வார்த்தை) என்ற படத்தைத் தயாரித்தவர். பெரிய நட்சத்திரங்களுடன் இருப்பவர்.

முதன்முறை வில்லியை ஒரு திரைப்பட நட்சத்திரத்தின் திருமண விழாவின் போது சந்திக்க நேர்ந்தது. தைவானிலிருந்து வந்து ஹாங்காங் திரையுலகில் நட்சத்திரமாக மாறிய சார்லி சின், நடிகை விங் வாங் பாஸ் என்பவரை மணந்த போது, ரசிகர்களின் தொல்லைகளைக் குறைக்க பல ஸ்டண்ட் கலைஞர்களை பாதுகாவலர்களாக நியமித்திருந்தனர். அப்போது சானும் அவர்களில் ஒருவனாக இருந்து, முடிந்த அளவிற்கு உதவி செய்தான். அப்போது தான் சானின் திருப்திகரமான வேலையைப் பாராட்டி, அவனுக்குத் தன்னுடைய முகவரி அட்டையைக் கொடுத்திருந்தார். அன்று சான் பின் நாளில் தன்னுடைய உதவியைக் கோருவான் என்று அவர் நினைத்திருக்க மாட்டார்.

பிற்காலத்தில் அதே சார்லி சின், தன்னுடன், சானும் அவரது சகோதர நண்பர்கள் சாமோ, பியாவ் அனைவரும் நடித்த போது, சான் தன்னுடைய திருமண விழாவின் போது கூட்டத்தைக் கட்டுப்படுத்த இருந்தான் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று சான் நினைவு கூர்வார்.

ஆஸ்திரேலியாவில் இருந்த போது, தான் ஹாங்காங்கை விட்டுச் சென்றதைத் தெரிவிக்க, சான் சில மனிதர்களுக்குக் கடிதம் எழுதினான். அதில் வில்லி சானும் ஒருவர். அவர் கடிதத்தைப் படிப்பார் என்பது சந்தேகமே. இருந்தாலும், முகவரி இருந்ததால் எழுதினான்.

அதில் ஆச்சர்யம் என்னவென்றால், வெகு நாட்களுக்குப் பின்னர், இதைப் பற்றி சானும், வில்லியும் பேசிக் கொள்ளும் போது, அந்தக் கடிதத்தைத் தன் மேசையிலிருந்து எடுத்துக் காட்டி, பல வருடங்களாக அதைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன் என்று சொன்னாதாக சான் மனதைத் தொட்ட நிகழ்வாக, மகிழ்ச்சியுடன் நினைவு கூர்வார்.

முதன் முதலில் சான், புரூஸ் லீயுடன் ஸ்டண்ட் செய்த போது வில்லி அவனைக் கவனித்திருந்தார். பிறகு சார்லி சின்னின் திருமணத்தின் போது அவனை கவனித்திருந்தார். கடிதம் வந்த போது அவனை மனதில் வைத்திருந்தார்.

இதையெல்லாம் சில சமயம் சானை தான் தொடர்பு கொண்டதற்கான காரணங்களாக வில்லி கூறுவார். எதுவாக இருந்த போதும், அவரது அழைப்பு சான் காய்கறி நறுக்குவதிலும், செங்கல் அடுக்குவதிலிருந்தும் தப்புவதற்கு உதவியது.

வில்லி அப்போது காதே நிறுவன வேலையை விட்டு விட்டு, பணக்கார இயக்குநர் லோ வெய் எடுக்கும் புதிய படத்திற்கு மேலாளராக வேலை செய்து கொண்டிருந்தார்.

பிக் பாஸ், பிஸ்ட் ஆப் புயூரிக்குப் பின் லோ வெய் பல படங்களை எடுத்தார். ஆனால் புரூஸ் லீயின் திடீர் மரணம், வர்மக் கலை திரைத் தொழிலைப் பெரிதும் பாதித்தது. இருந்தாலும் அவருக்கு இருந்த அதிக செல்வாக்கின் காரணமாக, அவரால் திரைத் துறையில் தொடர்ந்து சொந்தமாகத் தொழில் செய்ய முடிந்தது என்று தான் சொல்ல வேண்டும். அதிக லாபம் இல்லாத போதும், படங்கள் வெளியிடப்பட்டன.

படுத்து விட்டிருந்த திரையுலகை, உறக்கத்திலிருந்து தட்டி எழுப்பவும், மாற்றத்தைக் கொண்டு வரவும் லோ முடிவு செய்தார். அதற்கான முதல் படியாக, பிஸ்ட் ஆப் புயூரியை மறுபடியும் எடுப்பது என்று எண்ணி, அதற்கான முயற்சிகளை செய்ய ஆரம்பித்தார். புரூஸ் லீக்கு இணையான ஆள் கிடைக்காது போனாலும், அவரைப் போல சண்டையிடும் திறம் படைத்த சாதாரண ஆள் கிடைத்தாலும் போதும் என்று கூறி, ஆளைத் தேட ஆணையிட்டார். கிடைப்பவனை நட்சத்திரமாக ஆக்கி விடலாம் என்று நம்பினார்.

இந்த லோ வெயின் முடிவு தான் சானுக்கு தந்தி ரூபத்தில் வந்தது. கஷ்டப்பட்டு வேர்க்க விறுவிறுக்க நாள் முழுவதும் உழைத்து விட்டு வீடு திரும்பிய போது, அவனது மெத்தையின் மேல் அந்தத் தந்தி இருந்தது. அது காலையில் வந்தது என்று தாயின் குறிப்புடன் இருந்தது. ஆவலுடன் அதை எடுத்துப் படித்தான் சான். வில்லி சான் அவனுக்கு வேலை தருவதாகச் சொல்லி தந்தி அனுப்பியிருந்தார். அது வோ வெய் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து வந்திருந்தது.

சானுக்கு ஆச்சரியமாக இருந்தது. வில்லி தன்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்? சான் பல முறை பல விசயங்களை எண்ணிப் பார்த்தான். பலவாறு யோசித்தும் ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும், வில்லி தரும் வேலை, தான் தற்போது செய்யும் வேலையை விடவும் நன்றாகவே இருக்கும் என்ற முடிவுக்கு வந்து, கிளம்பும் முன்னர், அவரிடம் பேசிப் பார்த்து விடலாம் என்று தீர்மானித்தான்.

தொலைபேசியில் தொடர்பு கொண்டான். தான் என்ன பேச வேண்டும் என்று ஒத்திகை பார்த்துக் கொண்ட பின் எண்களைச் சுழற்றினான். எட்டு ஒன்பது முறை முயன்ற பின் தான் தொலைபேசி எடுக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் பேசுவதை ஒத்திகைப் பார்த்துக் கொண்டான்.

“ஹலோ..” எதிர் முனையிலிருந்து கேட்டது.

“ஹலோ.. நான் ஜாக்கி சான்.. வில்லி இருக்காரா?”

எதிர்புறம் அமைதியானது.

பிறகு, “நான் வில்லி.. நீங்கள் யார்?”

வில்லிக்கு தன் பெயர் ஜாக்கியானது தெரியாது என்பது அப்போது தான் நினைவுக்கு வந்தது. உடனே, “நான் சான் கொங் சாங், யூன் லோ..” என்றான்.

“ஓ..”

“நீங்கள் ஒரு தந்தி அனுப்பியிருந்தீங்க..”

“ஆமாம்.. படத்தில் நடிக்க உனக்கு சம்மதமா?” என்று கேட்டார் வில்லி.

“நான் ஓய்வில் இருக்கிறேன். என்ன படம் அது?”

“நீ இன்னும் வாலிபன் தானே.. எதற்காக அதற்குள் ஓய்வு? படம் புதிய பிஸ்ட் ஆப் புயூரி. லோ வெய் இயக்குகிறார்..” என்றார் தொடர்ச்சியாக.

புதிய பிஸ்ட் ஆப் புயூரி. புரூஸ் லீயின் நிழலாக, அவரது படத்தைப் போல எடுக்கப்படும் மற்றொரு படம். நல்ல சந்தர்பம் தான். ஆர்வத்தை மறைக்க முயன்றான்.

“நல்லது. நிறைய வேலையில்லாத ஸ்டண்ட் கலைஞர்கள் ஹாங்காங்கிலேயே இருக்கும் போது, அதற்காக கடல் லடந்து என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் என்ன.. என்னிடத்தில என்ன எதிர்பார்க்கிறீங்க..” என்று அடுக்கிக் கொண்டே போனான்.

“உண்மையாக நாங்கள் முக்கிய பாத்திரத்திற்கான ஆளைத் தேடுகிறோம்..”

முக்கிய பாத்திரம். புரூஸ் லீயின் இடத்திற்கு தானா என்று எண்ணினான்.

ஆவலை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “அப்படியா..” என்று மட்டும் கேட்டு வைத்தான்.

“உன்னால் செய்ய முடியுமா?”

“முடியுமே.. சம்பளம் சரியா கொடுத்தா..”

“அது கொஞ்சம் பிரச்சினை தான். உனக்கு மாதத்திற்கு மூவாயிரம் வெள்ளி மட்டுமே தர முடியும்..:

“என்ன? மூவாயிரம் வெள்ளியா?”

கஷ்டமான, தான் செய்திராத வேலைக்கு ஆயிரம் வெள்ளியைப் பெறுவது பெரிதா.. மூவாயிரம் வெள்ளி பெரியதா என்று கணக்கிடக் கூடத் தெரியவில்லை சானுக்கு.

பதில் வராதது கண்ட வில்லி, சான் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறானோ என்று எண்ணி, “அது அதிகமில்லை என்று தெரியும். இது தான் எங்கள் முதல் முயற்சி. அத்துடன் யாருக்கும் அறிமுகமில்லாத முகத்தைத் தேர்ந்தெடுத்து ரிஸ்க் எடுக்கிறோமில்லையா?” என்றார் வில்லி.

இதைக் கேட்டு, வாய்ப்பு நழுவி விடுமோ என்று பயந்து, இருந்தாலும் ஆர்வத்தை வெளிக் காட்டிக் கொள்ளாமல், “நான் செய்யலாம் என்று நினைக்கிறேன்” என்றான் முடிவாக.

“அப்படின்னா சரி.. உடனே ஹாங்காங் வந்துடு.. இன்னும் இரண்டு வாரத்துல படப்பிடிப்பு..” என்று கூறினார்.

“ஊம்..”

“ஆமாம்.. புரியுதா..”

போகலாம் தான். விமானச் சீட்டு வாங்க வேண்டுமே. அதற்கான பணம். பெற்றோரிடம் கேட்பது இனியும் உசிதமில்லை. வில்லியிடமே கேட்டு விடுவது நல்லது என்று நினைத்தான்.

உடனே, “விமானச் சீட்டுக்கு பணம் அனுப்ப முடியுமா?” என்று கேட்டான்.

“அது வேண்டுதானால் செய்யலாம். விமானச் சீட்டை அனுப்பி வைக்கிறேன். ஜாக்கி சீக்கிரமா பாக்கலாம்..”

தொலைபேசி வைக்கப்பட்டது.

மறுபடியும் தெரிந்த வேலையைச் செய்ய வாய்ப்பு. ஆனால் குறைந்த சம்பளத்தில்.
மூவாயிரம் வெள்ளி ஒரு மாதத்திற்குப் போதுமா என்று கூடத் தெரியாது. இதுவும் தா தீ.. சின்ன புலி போன்று ஆகிவிடுமோ?

தோல்வி ஏற்பட்டால் திரும்பவும் காய்கறி வெட்டி வாழ்க்கையைக் கழிக்க வேண்டி வருமா?

ஆனால் எப்போதும் நல்லதே நடக்கும் என்ற மனப்பான்மை சானிடம் இருந்தது. பணக்கஷ்டம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம். அது வரை இந்த விடுதி வேலையிலிருந்து தப்பித்து விடலாமே?

கடைசி நாளாக விடுதி வேலைக்குச் சென்று, முதலாளியிடம் இனி இந்த வெட்டி வேலையைச் செய்ய தான் வர மாட்டேன் என்று சொல்லி வரச் சென்றான்.

—-

Series Navigationமருமகளின் மர்மம் – 7பாம்பா? பழுதா?
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *