பணம் காட்டும் நிறம்

author
4
0 minutes, 0 seconds Read
This entry is part 23 of 32 in the series 15 டிசம்பர் 2013

விஜயலஷ்மி சுஷீல்குமார்

“உங்களுக்கு என்னங்க? ராணி மாதிரி உங்கள பாத்துக்கும் புருஷன்! ஏழு தலைமுறைக்கும் இருக்கற சொத்து..ம்ம்ம்..இதுக்கு மேல என்னங்க வேணும்?” என்று பெருமூச்சு விடும் சொந்தத்துக்கு தெரியுமா சுமித்திரையின் வேதனை?

“இங்க இவ்வளவு சொத்து இருந்து என்ன பிரயோஜனம்? திருமணமாகி பதின்நான்கு வருடங்கள் உருண்டோடியும் ஒரு குழந்தை அம்மா என்று அழைக்கும் பாக்கியம் இல்லாது போனது எந்த ஜென்மத்து பாவம்? அதுவும் மருத்துவரீதியாக தன்னால் குழந்தையை பெற முடியாது என்று மருத்துவர் கூறிய அன்று; அந்த நிமிடம் தான் உணர்ந்ததை எவ்வாறு சொல்வேன்! சொன்னால் தான் புரியுமா?” என்ற எண்ணத்தில் சுமித்ரா மனதிற்குள் குமைந்தாள்.

சமீபகாலமாக தோன்றும் ஒரு வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் எண்ணம் வலுப்பெற்றது. அதை செயலாக்கும் விதமாக கணவருடன் ஆலோசித்து உடனடியாக ஒரு வாடகைத் தாயை மருத்துவர் மூலம் ஏற்பாடு செய்ய கூறிய பின்னரே மனம் கொஞ்சம் ஆசுவாசமானது.

நான், கமலா. நான் தவமாய் தவமிருந்து முதல் பெண்ணிற்கு பிறகு பெற்றெடுத்த ஆண் வாரிசு, செல்வம். இவன் ஜனனமே என் புகுந்த வீட்டில் எனக்கு கிட்டும் ஏச்சுக்கள் குறைய காரணம். அதுவரை ஏதோ பெண் பிள்ளையை பெற்றதை குறையாக கூறும் வீட்டோடு இருக்கும் மாமியாரின் புலம்பல் நின்றது.

“எப்படியாவது என் புள்ளைய காப்பாத்துங்க.” என்ற என் கதறலை கண்டுக்கொள்ளாமல்

“அதுதான் சொல்லியாச்சே. நீங்க தேவையான பணம் தயார் பண்ணுங்க” என்று நர்ஸ் கூறி சென்றது என்னை எவ்விதத்திலும் சமாதானப்படுத்தவில்லை.

“அவ்வளவு பணம் இல்லைங்க. ஏற்கனவே ஊரசுத்தி கடன் வாங்கியாச்சு. வேற எந்த விதத்துலயும் பணம் புரட்ட முடியலங்க. இனி ஆண்டவனா ஒரு வழி காண்பிச்சாதான் உண்டு. புள்ள உசுர காப்பாத்தி தந்தாங்கன்னா கோடி புண்ணியமா போகும்.” என்று பக்கத்தில் இருந்தவரிடம் தான் என்னால் புலம்பமுடிந்தது

இதையெல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த வேறொரு நர்ஸ் “ஒரு வழி இருக்கு..ஆனா எல்லாம் சரியா வந்து நீயும் ஒத்துகிட்டா பணம் கிடைக்க வாய்ப்பு இருக்கு.” என்றார்.

நர்ஸ் சொன்னதைக்கேட்டதும் “கண்டிப்பாங்க இந்த உசுரையே தரேன். எனக்கு என் பையன் பொழைச்சா போதும்.” என்று கையெடுத்து கும்பிட்டேன்.

நாங்கள் கணவனும் மனைவியுமாக கூலி வேலை செய்தும் எப்போதும் வீட்டில் பற்றாக்குறைதான்! வீட்டில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கை மற்றும் கையில் சம்பளமாக கிடைக்கும் 300 ரூபாய் பணம் இரண்டிற்கும் மிகப்பெரிய இடைவெளி!; அதுவும் வேலை இருக்கும் தினம் மட்டும் கிடைக்கும்; எப்பாடு பட்டாலும் ஏணிவைத்தாலும் எட்டமுடியாத நிலை.

கையில் இருந்த கையிருப்பு குறைந்தது, கடன் சுமையும் ஏற்றிவிட்டது. இதுஒருபுறமிருக்க குழந்தை படும் நரக அவஸ்தையை காணமுடியவில்லை.

மறுநாள் அந்த நர்ஸ்ஸின் வரவிற்காக நானும் என் கணவரும் காத்திருந்தோம். தூரத்தில் அவர் வருவதை கண்டதும் மனம் படபடவென்று அடித்துக்கொண்டது. “வாம்மா அந்த பக்கம் போய் பேசலாம். இப்போவே சொல்லிட்டேன் முடியுமா, முடியாதா அப்படின்னு நீதான் முடிவு செய்யணும். என்னை குத்தம் சொல்ல கூடாது.” என்று பீடிகையோடுத் தொடங்கினார் நர்ஸ்.

“என் உசிரையே தர தயாரா இருக்கேன். எனக்கு என் மகன் பொழைக்கணும்.” என்றேன்.

“ம்ம்ம். நீ உன் உசிர ஒன்னும் தரவேண்டாம். ஒரு உசிரு உருவாக உன் கர்பப்பையை தந்தா போதும். அதுவும் வாடகையாதான்! உனக்கு ரெண்டு லக்ஷம் பணம் கைல தருவாங்க. அப்புறம் நீ கர்ப்பமா இருக்கும் காலம் மொத்தம் உன்னோட எல்லா செலவும் வாடகைக்கு எடுக்கறவங்க ஏத்துப்பாங்க.”

என்னால் யோசிக்க முடியவில்லை, புரியவும் இல்லை “என் மகனை காக்க பணம் வேண்டும், அது கிடைக்கும் …. ஆனாலும்…நான் கர்ப்பம்..”

“கர்ப்பம் …என் பொண்டாட்டி எப்படி வேறொருத்தர் குழந்தைய….” என்ற என் கணவரின் தடுமாற்றத்தை கண்டு

“அட. எந்தக் காலத்துல இருக்கீங்க..தப்பா எதுவும் இல்லை…மருத்துவ முறைல ஏற்கனவே உருவாகிய கருவை உங்க மனைவியின் கர்ப்பப்பையில் வைப்பாங்க. அதுவும் அவங்க ஆரோக்கியமா இருக்க அவங்களே சாப்பாடு, மருந்து எப்படி எல்லாத்தையும் பாத்துப்பாங்க. இப்போ ஒருத்தருக்கு தேவை இருக்கு. எனக்கு உங்க ஞாபகம்தான் வந்துச்சு, நீங்க இல்லைன்னா அவங்க வேற ஆளை பாத்துப்பாங்க.” என்றார் நர்ஸ்.

எங்கள் முகத்தில் தயக்கமும், ஆர்வமும், கவலையும் இப்படி பல வித உணர்ச்சிகளை பார்த்தார் போலும்!

“நீங்க ரெண்டுபேரும் யோசிச்சிட்டு உங்க முடிவை நாளைக்கு வந்து சொல்லுங்க. இப்போ டியூட்டி டாக்டர் வர நேரமாச்சு. நான் போறேன்.” என்று நர்ஸ் சென்ற பின்னரும் நாங்கள் வேரிட்ட மரம்போல் நின்றிருந்தோம்.

அன்று வீட்டிலும் இதே பேச்சாக இருந்தது. பணம்! பணம்!! பணம்!!! கண்டிப்பாக இதுபோல் பணத்தை வாழ்நாளில் பார்க்கவே முடியாது. அப்பணம் இருந்தால் இந்நிலையில் மகனுக்கு நல்ல சிகிச்சையும் பிள்ளைகளின் எதிர்காலமும் நன்கு அமையும். இது வறுமை மற்றும் ஏழ்மையில் இருந்து விடுதலையைப் பெற்றுத்தரும்.

“இன்னும் என்ன யோசனை? அதுதான் ஏற்கனவே உருவான கருவைதானே வெக்க போறாங்க. இப்போ இருக்கற நிலையில ஏதோ தெய்வமா பாத்து தந்த வழி” என்று என் மாமியாரும் அவரின் சம்மதத்தை தெரிவித்தார்.

“நம்பளா வெளிய சொன்னாதானே இந்த விஷயம் மத்தவங்களுக்கு தெரியபோவுது. இல்லைன்னா இப்போ மூணாவது தடவையா நீ மாசமா இருக்கறமாதிரி தானே நம்ம சுத்தி இருக்கறவங்க நினைச்சிப்பாங்க.” என்று என் மாமியார் கூறவும் என் மனதிற்குள் ஒரு நிம்மதி, இச்சமூகம் என் கற்பு மற்றும் கர்ப்பத்தை சந்தேகக்கண் கொண்டு பார்க்காது.

“ஆனாலும்கூட குழந்தை பிறந்ததும் அந்த குழந்தை எங்கே என்று கேக்கற நம்ப சொந்த பந்தங்களுக்கு என்ன சொல்ல?” என்று என் அடுத்த சந்தேகத்தை கேட்டேன்.

“க்கும்.. குழைந்த பொறக்கும் போதே பிரச்சன, அது ஆஸ்பத்திரில இருக்கு அப்படி இப்பிடின்னு சொல்லி சமாளிக்க நாங்க இருக்கோம். இப்போவே அதை பத்தி எதுக்கு நினைக்கற?” என்று என் மாமியார் என் வாயை அடித்துவிட்டார். எனக்கு தெரியும் அவர் வாய்ஜாலத்தில் எதிராளியை சமாளித்துவிடுவார்.

என் வீட்டினரின் துணையுடன், எதிர்காலம் சிறப்பாக இருக்க நான் செய்யப்போகும் காரியம் தவறே இல்லை என்ற எண்ணத்துடன் மறுநாள் விடிய காத்திருந்தேன்! எங்கள் வறுமையும் ஏழ்மையும் விடியும், இவ்விடியலுடன் என்ற நம்பிக்கையோடு!!

“வாங்க, டாக்டர் கிட்ட நீங்களே பேசிக்கோங்க.” என்று நர்ஸ் அழைத்துச்சென்றார்.

டாக்டர் பரிசோதித்து எல்லாம் விளக்கிய பின்னர், தம்பதிகளுடன் நேரடியாக பேசி எல்லாம் முடிவாகிவிட்டது.

“இந்த பிரசவம் முடியும் வரை நான் அவங்க கட்டுப்பாட்டுல அவங்க வீட்டோட இருக்கணுமே. இது சரிவருமா? நம்ப பசங்க …” என்ற என் தயக்கத்தை பார்த்து

“அட இது ஒரு விஷயமா? என்ன நம்ப வீட்டுல இருக்கறதுக்கு பதிலா நீ அங்க போய் இருக்கணும். இதுவும் நல்லதுதான். நீ கர்ப்பம் ஆனதே இங்க யாருக்கும் தெரியாது. அப்படி கேட்டாலும் ஒரு வருஷம் வெளிநாட்டுல வேலை அப்படின்னு சொல்லி சமாளிச்சிடலாம்.” என்ற என் மாமியார் கூறியது “சரிதான்” என்று என்னைச் சம்மதிக்க வைத்தது.

இதற்கிடையில் முன் பணமாக கிடைத்த பணத்தில் என் மகன் வைத்தியம் முடிந்து  நல்லபடியாக கிடைத்து வீட்டிற்கு திரும்பினான்.

“செல்வம், அம்மா ஊருக்குப்போய்ட்டு வரவரைக்கும் நீ சமத்தா இருக்கணும். அக்கா கூட சண்ட போடாம ஸ்கூல்லுக்கு போய்ட்டு வரணும்.” இன்னும் சொல்லிக்கொண்டே சென்ற என்னை நிறுத்தி உடனே  கிளம்ப வைத்தனர் என் வீட்டினர்.

மனம் கனமாக இருந்தது. “இதெல்லாம் நம்ப பசங்க நல்லா இருக்கனும்ன்னு தானே. நீ கவல படாம போயிட்டு வா. அதுதான் நான் அப்பப்போ டாக்டர பாத்து நீ எப்படி இருக்கன்னு கேட்டுக்கலாம்ன்னு சொல்லியிருக்காங்களே.” என்று என்னை தேற்றி மருத்துவமனைக்கு என் கணவர் அழைத்துவந்தார்.

அப்படியிப்படி மருத்துவ முறையில் வெற்றிகரமாக நான் கர்ப்பத்தை சுமந்தவுடன் அவர்களின் வீட்டிற்கே அழைத்துச் செல்லப்பட்டேன்.

கையில் ஜூஸ்சுடன் வந்த பணியாளை பார்த்ததும் தெரிந்தது, இப்பொழுது நேரம் காலை 11 மணி.

“வேற ஏதாவது வேணுமாம்மா”

“இப்போ இது போதும். வேற எதுவும் வேண்டாம்.” என்றேன். இங்கு வந்ததில் இருந்து ராஜ உபச்சாரம். நேரத்திற்கு சாப்பாடும் மற்ற விஷயங்களும்.

என்னதான் எல்லாம் நல்லபடியா நடந்தாலும்கூட மருத்துவ மனையில், “அட நீங்களும் என்னைப்போல தானா. நல்லா விசாரிச்சுட்டு தானே ஒத்துகிட்டீங்க. புரோக்கர் மூலமா? இல்லை வேற யாராவதா?” என்று கேட்டாள் வேறொரு வாடகைத்தாய்!

“தெரிஞ்ச நர்ஸம்மா சொல்லி வந்தேன். நல்லவங்களாத்தான் இருக்காங்க, முன் பணம் கூட குடுத்தாங்க. ஆமா புரோக்கர்ரா? இதுக்கு கூடவா?” என்று மலைத்தேன்.

“அட இது தெரியாதா. அத்த ஏன் கேக்கற? எனக்கு தெரிஞ்சி ஒரு புரோக்கர் மூலமா வந்த பொண்ணு சொன்னது; அவளுக்கு கடைசில சொன்ன பணம் முழுசும் தராம அந்த புரோக்கர் பாதிக்கு அமுக்கிட்டான்.” என்றதும் எனக்கு பகீர் என்றது.

“அட கடவுளே, இப்படியும் பண்ணுவாங்களா? அந்த பொண்ணு அந்த ஆள சும்மாவா விட்டுடுச்சு?”

“இதை எங்க போய் சொல்ல? சொன்னபடி பேசின பார்ட்டி ப்ரோகர்கிட்ட பணத்தை குடுத்துட்டாங்க. அதுக்கப்புறம் அவங்களுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைன்னு ஒதுங்கிட்டாங்க.”

“கமலா, அடுத்தது நீங்க வாங்க” என்று நர்ஸ் அழைத்ததும் நான் அவருடன் சென்றாலும் மனதில் கடைசியில் பணம் முழுவதும் கிடைக்குமா என்றே என் எண்ணம் சுற்றிக்கொண்டு இருந்தது.

அன்று முதல் இந்த எண்ணத்தை என்னால் தடுக்க முடியவில்லை. “கடவுளே. பேசின படி மீதி பணம் கைக்கு வரணுமே. வந்தா உன் சந்நிதிக்கு நடந்தே வந்து நேத்திகடன் செலுத்தறேன்.” என்ற வேண்டுதல் ஒரு பலம் தந்தது.

இந்த மாலைக்காற்று மனதிற்கு இதமாக இருந்தது. அப்பொழுது அருகில் வந்தமர்ந்த சுமித்ரா, இதுவரை இவரை எப்படி அழைப்பது என்று தெரியவில்லை. முதலாளியா? இல்லை .. அம்மா என்றா..யோசனையில் இருந்த என்னை அவரின் கேள்வி மீட்டது. ”என்ன கமலா, எப்படி இருக்க? எல்லாம் சௌகரியமா இருக்கா?”

“எல்லாம் நல்லா இருக்கும்மா.” என்று கூறிக்கொண்டே எழுந்த என்னை

“ஒக்காரு, ஒக்காரு! இப்படி சட்டு சட்டுன்னு எழுந்துக்காத. குழந்தைக்கு ஏதாவது ஆகிடுச்சுன்னா. டாக்டர் கிட்ட நாளைக்கு போகணுமே, ஸ்கேன் பண்ணும்போது இந்த வாட்டி நானும் வரேன். உள்ள குழந்தை எப்படி இருக்குன்னு பாக்கவாவது செய்யறேன்.” என்று குழந்தையை நினைத்து சொன்னபோது மனதிற்கு சங்கடமாக இருந்தது.

அப்படியே சிறிதுநேரம் பேசி சென்றபின்னரும் அன்று முழுவதும் மனம் ஒரு நிலையில் இல்லை.

என் பிள்ளைகளின் கர்ப்பகாலத்தில் குழந்தை மட்டுமல்லாது என் மேலும் கூடுதல் அக்கறை செலுத்த என் சொந்தபந்தங்கள் இருந்தது வேறு நினைவிற்கு வந்து மனதை வருத்தியது. சுமித்திரையின் மனதை புரிந்துக்கொள்ள முடிந்தாலும்கூட என் மனம் சங்கடமானது.

“இதுவும் என் குழந்தைதானே, நான் ஜாக்கிரதையாக இருக்க மாட்டேனா? ஓ, அப்படியில்லை. நான் இக்குழந்தைக்கு தாயில்லை, அப்பொழுது இக்குழந்தைக்கு நான் யார்?” கேள்வி எழுவதைத் தடுக்க முடியவில்லை

மறுநாள் ஸ்கேனில் இரட்டை குழந்தைகள், அதுவும் நல்ல வளர்ச்சியாக இருக்கிறது என்று அறிந்ததில் இருந்து சுமித்திரையின் குடும்பம் மகிழ்ச்சிக்கடலில் தத்தளித்தனர்.

“அட நல்லா சத்தா சாப்பிட வேண்டாமா? அப்போதானே ரெண்டு குழந்தைக்கும் போய் சேரும்.” என்று எனக்கு முன்னை காட்டிலும் கூடுதல் கவனம் கிடைத்தது.

கண்முன் இருக்கும் சுவையான, விதவிதமான பதார்த்தங்களை பார்க்கும்போது, “செல்வத்துக்கு இது பிடிக்கும். பிரியாக்கு இது பிடிக்கும்… பாவம் அவங்க அங்க என்ன சாப்பிடறாங்களோ? முன்பணம் தீர்ந்து போய் இருக்கும். பாவம், அவருக்கு மட்டும் கிடைக்கற கூலி எப்படி எல்லாத்துக்கும் பத்தும். ம்ம்ம்..” என்று பெருமூச்சு எழுந்தது.

“கமலா, எப்படி இருக்க? நல்லா ஆளே மாறிட்ட! நல்லா கவனிக்கறாங்கன்னு தெரியுது. அவங்க ரொம்ப நல்லவங்க. ஹான்.. போன வாரம் உன் வீட்டுக்காரர் வந்துட்டு போனார். நீ நல்லா இருக்கன்னு சொல்லி அனுப்பினேன். நீ வந்தா பேச சொல்லறேன்னு சொன்னேன். இரு” என்று கூறியபடி என் கணவருடன் பேச இணைப்பை கொடுத்தார் மருத்துவர்.

“புள்ள, எப்படி இருக்க?” என்ற கணவரின் குரலில் இருந்த பிரிவின் தவிப்பும், என் நலனில் அக்கறையும் எல்லாமாக சேர்த்த உணர்வின் நிலை என்னையும் தாக்கியதில் என்னால் பேசவேண்டும் என்று நினைத்த எல்லாவற்றையும் பேசமுடியாமல் தடுத்தது.

“ம்ம் நல்லா இருக்கேன். நல்லா பாத்துக்கறாங்க. நம்ப புள்ளைங்க எப்படி இருக்கு? அவங்கதான் கண்ணுலயே இருக்காங்க. எப்போ உங்கள எல்லாம் பாப்பேன்னு இருக்கு.” என்று நெகிழ்ந்து சிறிதுநேரம் பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே

“சரி சரி. அப்புறம் பேசலாம். உங்ககூட வந்தவங்க காத்துகிட்டு இருக்காங்க.” என்று மருத்துவர் என்னை அனுப்பி வைத்தார்.

என் மனம் கணவரின் குரலை கேட்டதில் இருந்து சந்தோஷமாக இருந்தது, அதே நேரம், வீட்டின் நிலையை அறிந்தது முதல் எப்பொழுது அவர்களை பார்ப்போம் என்று இருந்தது. என்ன தான் இங்கு எல்லா வசதிகளும் இருந்தாலும் என் மனுசங்க அப்படின்னு ஒருத்தர் கூட இல்லையே? பாவம் புள்ளைங்க ஏங்கி போயிருக்குமே? நான் அதுங்கள விட்டுட்டு இப்படி இருக்கறது சரிதானா? புள்ளைங்கள தவிக்க விட்டுட்டு நான் இங்க நல்லா இருக்கறது நியாயமா? இவ்வளவு கஷ்டமும் புள்ளைகளை நல்லா வளர்க்க தானே! ஆனா, கடைசில பேசின படி பணம் கிடைக்காம போச்சுன்னா…” என்ற எண்ணங்களால் மனதிற்கு உறுத்தலாகவே இருந்தது.

“அட கடவுளே, என்ன ஆச்சு? யாரு அங்க சீக்கிரம் டாக்டர கூப்பிடுங்க” என்று உத்தரவிட்ட சுமித்ரா மயங்கிய என்னை தாங்கிக்கொண்டு அருகில் இருந்த நாற்காலியில் இருத்தினார்.

“நேத்திக்கு கூட எல்லாம் நல்லா தானே இருந்தது. இப்போ பிபி கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு. இப்போ பயப்பட ஒண்ணுமில்லை. ஆனா ஜாக்கிரதையா இருக்கணும்.” என்று ஆசுவாசப்படுத்திய மருத்துவர்

“கமலா, மனச சந்தோஷமா வெச்சிக்கணும். வேண்டாதத நினைக்காத. சரியா?” என்று என்னை பார்த்த பார்வையில் என்ன இருந்தது என்று எனக்கு புரியவில்லை.

ஆனால் மருத்துவர் முன்தினம் நான் என் குடும்பத்தினருடன் பேசியதுதான் இக்குழப்பதிற்கு காரணம் என்று கூற நினைத்தது பின்னர் புரிந்தது, ஏனெனில் அதற்கு பிறகு வீட்டினருடன் பேச சரியாக சந்தர்ப்பம் அமையவில்லை, அமைந்தாலும் தனிமையில் பேச முடியவில்லை.

“நான் என் குடும்பத்தை பற்றி நினைப்பது வேண்டாத செயலா? ஒருவேளை நான் எடுத்த முடிவு தவறோ? இப்படி இருக்கும்ன்னு தெரியாம போச்சே” என்று என் மனம் சஞ்சலமானது.

இன்னும் சில வாரங்களே பிரசவிக்க இருந்த நிலையில் என்ன வென்று சொல்ல முடியாத நிலை. “வாடகைத்தாயாக இருந்தாலும் நானும் தாய் தானே! அதுவும் இரட்டைக் குழந்தைகள், அவை எப்படி இருக்கும்?” என்று ஒரு ஆவல்!

“கரு எப்படி உருவானால் என்ன? என் உயிரைக்கொடுத்து தானே வளர்த்தது, இதற்கு முன் எத்தனை பிரசவித்திருந்தால் என்ன? ஒவ்வொரு பிரசவமும் ஜனனம் தானே, எனக்கும் மறுபிறவிதானே.” என்ற என் வாதத்தை ஆதரிப்போர் எத்தனைப்பேர்?

அதுவும் எட்டாம் மாதம் முதல் என் கூடவே ஒரு நர்சை நியமித்து விட்டனர். ஆதலால் எப்போதும் கண்காணிப்பு இருந்தது.

“ஆ… அம்மா!” என்ற என் அலறல் வலியின் வெளிப்பாடு மட்டுமல்ல, என் சொந்தங்கள் என்னுடன் இல்லையே என்பதையும் சேர்த்தே வெளிப்படுத்துகிறேன் என்று யாருக்கும் புரியாது போனது வேதனையை கூட்டியது. அதுவும் “ஒருவேளை நான் இப்பிரசவத்தில் பிழைக்காட்டி…என் புள்ளைங்க, என் கணவர்..யாரையும் ஒருவாட்டிகூட பாக்க முடியலையே” என்று தவிதவிக்கும் என்னை ஏன் யாருக்கும் புரியல? அவங்களாவது ஒரு வாட்டி என்னைப்பத்தி நினைச்சி பாத்து இருந்தா புரிஞ்சி இருக்குமோ? இதை சொல்ல வந்த என்னை உள்ளிருந்த குழந்தையும் சொல்லவிடாமல் வெளிவர முயன்றதில் “அம்மா…” என்றே சொல்லமுடிந்தது.

குழந்தை பிறந்ததும் ஒருமுறைகூட எனக்கு காட்டவும் இல்லை, எந்த குழந்தை என்று சொல்லவும் இல்லை. “கடவுளே..முன்னமே அவங்க இதை சொன்னப்போ பெருசா தெரியல..ஆனா, இப்போ அந்த குழந்தைங்கள என் உசுரா தானே காத்தேன். ஒரு வாட்டியாவது காண்பிச்சிட்டு போய் இருக்கலாம், என்ன புள்ளங்கன்னு கூட தெரியாம போவதானா நான் இத்தன மாசமும் பொத்தி பொத்தி வளர்த்தேன்?” என்று வெளியில் சொல்லாமுடியாமல் மனதிற்குள்ளேயே குமைய மட்டுமே முடிந்தது.

அவர்கள் சொன்னபடி மீதி பணத்தையும் கொடுத்துவிட்டார்கள் என்ற அறிந்ததும், கொஞ்சம் நிம்மதியானது. ஆனாலும்கூட ஏதோ சொல்ல முடியாத துக்கம்! உடலாலும் மனதாலும் வேதனையே மிஞ்சியது!

வீட்டிற்கு வந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. மீண்டும் என் குடும்பத்துடன் இணைந்தது சந்தோஷம் என்றாலும்கூட, கண்ணுக்கு தெரியாமல் ஏதோ இடறியது.

“என்னங்க, நீங்களே சொல்லுங்க இது சரியான்னு? நானே நம்ப புள்ளைக நல்லா இருக்கணும்ன்னு தானே இவ்வளவும் செஞ்சது. நீங்க பரங்கி பத்தைய கீறி குடுத்த மாதிரி எழுபத்தையாயிரம் அப்படியே உங்க அக்காக்கு குடுத்துடீங்க.” என்று நான் என் கணவரிடம் கேட்டால் பதிலோ மாமியாரிடம் இருந்து வந்தது

“ம்கும்…குடுத்தா என்ன தப்பு? அவன் செய்யாம யாரு அவன் அக்காக்கு செய்வாங்க? ஏதோ நீ கஷ்டப்பட்டு சம்பாதிச்ச மாதிரியில்ல பேசுற? சும்மா வயித்த சாச்சிகிட்டு வக்கணையா தின்னுக்கிட்டு இருந்துட்டுத்தானே வந்த. சும்மா கேக்க வந்துட்டா…டேய்.. போடா. போய் உன் வேலைய பாரு. இதுக்கெல்லாம் தலைய சொரிஞ்சிட்டு நின்னுகிட்டு.” என்று அனுப்பிவிட்டார்.

“நான் அனுபவித்ததை சொன்னா இவங்களுக்கு புரியுமா?” என நான் நினைத்ததை என்னால் வெளியே சொல்லமுடியவில்லை.

நான் இப்பணத்தை பற்றி கேட்டதுமுதல் வீட்டில் இதை வைத்தே ஏதோவொரு ஏச்சும் பேச்சும் தொடர்வது தொடர்கதையானது.

“அம்மா, அம்மா, நீ என்ன வேலை செய்யற?” என்று செல்வம் கேட்டது எனக்கு அதிசயமாக இருந்தது, இதுவரை இல்லாமல் இப்போது…

“உனக்கு தெரியாதா? கிடைக்கற கூலி வேலை செய்யறேன்.”

“அப்போ இவ்வளவு நாளும் எங்க கூட இல்லாம எங்க போன?”

“வெளியூர்ல வேலை கிடைச்சி போனேன்.”

“ஓ. அம்மா, நான் எப்படி பொறந்தேன்?”

“அம்மா வயித்துல இருந்து”

“அப்போ ஏன் என்னை உங்க கூடவே இங்க வெச்சி வளர்க்கறீங்க?”

“பின்ன என்னோட புள்ள என் கூட இல்லாம, வேற எங்க போவும்?” என்று பதில் கூறினாலும் மனம் எதுவோ செய்தது.

“அப்போ இப்ப பொறந்த பாப்பாங்க எங்கம்மா?” என்று கேட்டதில் சுரீர் என்றது

“யாரு சொன்னாங்க?”

“பாட்டி தான் அந்த வீட்டு ஆயாகிட்ட சொல்லிக்கிட்டு இருந்தாங்க” என்ற என் மகனிடம் நான் என்ன பதில் சொல்வேன்?

ஆவலாக என் பதிலுக்காக காத்திருக்கும் மகனை அவன் நண்பர்கள் வந்து அழைத்தது கடவுளாக என்னை பதில் சொல்வதில் இருந்து காப்பாற்றியது போல் இருந்தது. இதுபோல் கடவுளால் எத்தனை முறை என்னைக் காப்பாற்றமுடியும்?

“கடவுளே…புள்ளைகளுக்கு வேண்டியது செய்ய தானே நான் இந்த முடிவெடுத்தேன். ஆனால் கிடைத்தது என்ன? கிடைத்த பணத்துல வாங்கிய கடனை அடைச்சி, மீதியை அப்படியே நாத்தனாருக்கு கொடுத்தாச்சு. இப்போ மறுபடியும் கிடைக்கும் கூலிக்கு மாரடிக்கணும். மீண்டும் புதிதாக கடன் வாங்கும் நிலை.”

“இப்போ அக்கம்பக்கத்தில் நடந்த விஷயம் பரவ தொடங்கிடுச்சு. ஆளுங்க பாக்கற பார்வையும் மாறிடுச்சே. அப்போ பணம் கிடைக்கும்ன்னு தெரியும்போது உறுத்தாம இருந்த உறவுகளுக்கு, இப்போ நான் செஞ்ச காரியம் உறுத்தலா போச்சு.”

“இப்போத்த என் நிலைமை தெளிஞ்ச குளத்துல கல்ல எறிஞ்ச மாதிரி ஆகிடுச்சு. நான் ஆறுதலுக்காக தலைசாய்க்க ஒரு தோள் இல்லாம போய்டுச்சு.”

“இத்தனையும் யாருக்காக, எதுக்காக செஞ்சேன்? அதோட பலன் என்ன?” என்ற கேள்விகளுக்கு பதிலை தேடி அலையும் நான் என்னுள்ளே ஒடுங்கிபோகத் தொடங்கினேன்.

மீண்டும் குடும்பத்தில் வேறொரு இக்கட்டான நிலை! இதை சமாளிக்க மீண்டும் சுலபமான வழியாக “வாடகைத்தாய்” என்ற எண்ணம் என் கணவன் உட்பட குடும்பத்தினரிடம் வேரிட்ட மரமாக நின்றிருப்பதை உணர்ந்து கொதித்து போனேன்.

“அட..இப்போ நாங்க என்ன சொல்லிட்டோம்? அதுதான் போன வாட்டி போன மாதிரி போனா என்ன ஆகிடும்? இப்போ இருக்கற பிரச்சனைய தீத்துடலாம். எப்படியும் உன்னோட செலவ அவங்க பாத்துடுவாங்க. அதுனால இப்போ இருக்கற நிலைமைல உன்னோட செலவும் இல்லைன்னு ஆகிட்டா நல்லது தானே.” என்ற என் மாமியாரின் வாதம் என்னை வதைத்தது.

“நீங்க என்ன என்னைய புள்ளைகள பெக்கற மெசின் மாதிரி பாக்குறீங்க? மொத தடவையே தெரியா தனமா ஒத்துகிட்டேன். அப்புறம் நான் அனுபவிச்ச கஷ்டம் உங்களுக்கு தெரியுமா? இல்ல சொன்னாதான் புரியுமா? அப்பா சாமி… ஒவ்வொரு நாளும் மனசு என்னமா அடிச்சிக்கும் தெரியுமா? கடைசில எங்க உங்க முகம் எல்லாம் பாக்காம செத்துடுவேனோ அப்படின்னு நான் தவிச்ச தவிப்பு யாருக்குமே தெரியலையே! குழந்தைய பெத்துத் தரப் போற எடத்துல சாப்பிட, மருந்து இப்படி எல்லா விஷயமும் பாத்து பாத்து பண்ணாலும் எல்லாம் அவங்க குழந்த நல்ல இருக்கணும்ன்னு தான்! அவங்கள சுத்தி அவங்க ஆளுங்க இருக்கும்போது நான் தனியா என்னோட மனுசன்னு யாரும் இல்லாம இருந்தேன் தெரியுமா? என்னைய பாத்துகிட்ட வேலைக்காரங்க நாளைக்கு அவங்க புள்ளங்க வளர்ந்து பெருசாகும்போது எவளோ பெத்தது தானேன்னு சொல்ல மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்? வேலைக்காரர்கள விடுங்க..என்னை மாதிரி இல்லாம வாடகைத்தாயோட கருவையே வெச்சி உண்டாகிய குழந்தைய அவங்களுக்கு பிடிக்காத விஷயம் ஏதாவது செஞ்சா மத்தவளோட புத்திய காட்டின மாதிரி அந்த குழந்தைய பேச மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்? மனுஷன் மனசு எப்போ எப்படி மாறும்ன்னு யாருக்கு தெரியும்? இப்போ உங்களுக்கே நான் பணம் காய்க்கற மரம் தானே? ஒரு நாளுல எத்தன வீட்டுல வேணும்னாலும் காலைல இருந்து ராத்திரி வரை வீட்டுவேலைய பாத்து சம்பாதிச்சி போடறேன்..ஆனா இன்னொரு வாட்டி வாடகைத்தாயா மட்டும் போகவே முடியாது.”

“என்ன நீ..சும்மா இப்படி பிலிம் காட்டிகிட்டு இருக்க? நீ என்னதான் மாங்கு மாங்குன்னு வேலை செஞ்சாலும் ஒரு வருஷத்துல இம்புட்டு பணம் பாக்க முடியுமா?” என்று கேட்கும் மாமியாரை தட்டிக்கேட்காமல் தனக்கும் அவ்வெண்ணம் இருப்பதை சொல்லாமல் சொல்லும் கணவனைப் பாத்து “நாதாரிப்பயலே கட்டின பொண்டாட்டிய பாத்துக்க முடியல… அதுவும் ஒரே வாட்டி உழைச்சாலும் பாக்க முடியாத பணம் பாத்ததும் நீயும் மாறிடுவன்னு நான் நினைக்கலய்யா…அப்போ இந்த பணத்துக்காக நான் அனுபவிச்ச கஷ்டத்தைச் சொல்லியும் கேக்காம இன்னிக்கி என்னை திரும்பவும் வாடகைத்தாயா போக சொல்லற நீங்க நாளைக்கு வயசுக்கு வந்த பெத்த பொண்ணையும் வாடகைத்தாயா அனுப்ப மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்?” என்ற என் ஆதங்கத்தையும் ஆற்றாமையையும் புரிந்துக்கொள்ளாமல் இருக்கும் அவர்களின் முகபாவம் என்னை எதற்கும் தயாராக இருக்க உறுதியாக்கியது

“நான் நீங்க சொன்னதுக்கு எல்லாம் ஒத்துக்க முடியாது.” என்று எதற்கும் துணிந்து நின்றேன், நான் அனுபவித்த அனுபவம் அப்படி!

“அப்போ நீ உங்க வீட்டுக்கே மூட்டைய கட்டு. அப்போதான் புத்தி வரும்” என்று என் மாமியாரும் வாய் விட

“நான் என் முடிவுல மாற மாட்டேன். அப்படி நீங்க சொன்னா படிதான் நான் நடக்கணும்ன்னு சொன்னா நீங்க என்ன என்னைய மூட்ட கட்டறது. நானே உங்களை உதறிட்டு போறேன். போகும்போது என் பசங்களையும் கூட்டிக்கிட்டுப் போய்டுவேன். என் புள்ளைகளை நான் கூலி வேலை செஞ்சி எப்படியாச்சும் படிக்க வெச்சி நல்லா வளர்க்க முடியும்ன்னு தைரியமும் தெம்பும் இருக்கு. என் முடிவை நான் சொல்லிட்டேன்..உங்க முடிவ நீங்க சொல்லுங்க” என்றுவிட்டு அவர்களின் பேய்யறந்த முகத்தைப்பார்த்து அங்கிருந்து நகர்ந்தேன்.

****************************************************************************

கமலா போல் தைரியமாக முடிவெடுப்பவர்கள் வெகு சிலரே! மேலும் இச்சூழலில் சிக்கி மூழ்குபவர்கள் ஏராளம்.

காரணம்:

குழந்தைக்காக ஏங்கும் தம்பதிக்கு குழந்தை செல்வமும், அதேநேரம் கஷ்டப்படும் குடும்பத்திற்கு பணத்தேவை இருப்பதும் இவ்விருவரையும் ஒரு ஒப்பந்தத்துடன் வெற்றிகரமாக இணைத்து, அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் தொழில்; அண்மைக்காலமாக நல்ல முன்னேற்றம் காணும் தொழிலாகவும்; இந்தியாவில் ஒரு வருடத்திற்கு பல கோடி ருபாய் புழங்கும் தொழிலாகவும் இருப்பது எது தெரியுமா? ..வாடகைத்தாய் தொழிலே! இந்திய மருத்துவம் இதை அனுமதித்தாலும் அதற்கான சட்டம் என்பது இன்னும் உருவாகவில்லை. அம்மா என்று அழைக்கும் தொப்புள்கொடி பந்தத்தை பணம் கொடுத்து வாங்கிவிடும் நிலை! கசப்பான உண்மையே!

இந்தியாவில் வாடகைத்தாய் தொழிலின் மையமாக குஜராத்தில் “ஆனந்த்” (சிறு நகரம்) திகழ்கிறது. “அகாங்ஷா” என்பது முதல் வாடகைத்தாய்க்கான மருத்துவமனையும் குஜராத்தில் தொடங்கப்பட்டது. இவையெல்லாம் இத்தொழில் சிறந்து விளங்க துணைபுரிகின்றன. பல ஏழைத் தாய்மார்கள் இதை வறுமையைப் போக்க வந்த சிறந்த வாய்ப்பு என்று கருதி கருவை சுமக்கின்றனர். இத்தொழில் என்றும் வளர்ச்சி நோக்கியே போய்க்கொண்டு இருக்க வாய்ப்பிருக்கிறது, ஏனெனில் இங்கிலாந்து, அமேரிக்கா போன்ற நாடுகளில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற ஆகும் செலவில் மூன்றில் ஒரே ஒரு பங்கு இந்தியாவில் செலவு செய்தால் போதும். இதன் காரணமாக பல வெளிநாட்டு தம்பதிகள் நம் இந்தியாவை நோக்கி படையெடுக்கும் நிலை! (நன்றி: விகடன்)

Series Navigationபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் – ​ 37.பாரதத்தாயின் தவப்புதல்வராகத் திகழ்ந்த ஏ​ழைசில்லி விண்ணோக்கி முதன்முறையாக இரட்டை ஏற்பாட்டு விண்மீனைச் சுற்றும் விந்தைக் கோள் ஒன்றைக் கண்டுபிடித்தது.
author

Similar Posts

4 Comments

 1. Avatar
  Sowmiya says:

  நம் நாட்டில் மக்களை குறிப்பாக பெண்களை எந்த அவல நிலையில் வைக்கின்றோம், எதை எல்லாம் வியாபாரம் ஆக்குகின்றோம் என்று அழகாக எழுதி உள்ளீர்கள்.

  இதில் ஏழை படிக்காத பெண்கள் தான் இது போன்றதொரு செயலில் மாட்டுகின்றனர். அதுவும் கமலா என்ற கதாபாத்திரத்தின் மூலம் வரும் “நீங்க நாளைக்கு வயசுக்கு வந்த பெத்த பொண்ணையும் வாடகைத்தாயா அனுப்ப மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்?” நிதர்சனத்தின் உச்சம். வியாபார நோக்கோடு இன்று இருக்கும் மருத்துவ தொழிலும் ஒரு பெண் கன்னியா அல்லது அவளது கற்பப்பை ஒரு உயிர் சுமக்க சரியாக உள்ளதா அவள் மனநிலை மற்றும் உடல் நிலை (ரத்த பரிசோதனை மூலம்) நன்ற உள்ளத என்று ஆராயும் நிலையில் இல்லை என்பது நன்றாக தெரிகிறது. அரசாங்கமும் இதற்கு சட்டமும் போடவில்லை என்றும் தெரிகிறது. மிகவும் வருத்தமே….

  குடும்ப கஷ்டத்திற்கு உழைத்து முன்னேற வேண்டும் என்பதை நாம் நம் இளைய சமுதாயத்தின் மனதில் பதிய வைக்க வேண்டும், அதே போல மருத்துவத்தின் விலையினை குறைக்க செய்ய வேண்டும், பணம் இல்லாத காரணத்தால் தானே இது அனைத்தும் நடக்கின்றது.

  நல்ல கருத்துள்ள கதைகளை எங்களுக்கு கொடுகின்றீர்கள். உமக்கு எங்களது நல்வாழ்த்துக்கள். மேலும் நல்ல கதைகள் கொடுக்குமாறு கேட்டுகொள்கிறேன்.

  சௌமியா

  1. Avatar
   விஜயலக்ஷ்மி சுஷில்குமார் says:

   நன்றி சௌமியா

   தேவைகளை பணமாக்கும் மனிதனின் எண்ணமே பின் வியாபாரமாகிறது. இக்கதையில் 2 குடும்பங்களின் தேவைகளை பூர்த்திசெய்யும் செயல் வியாபாரமாகிறது.

   நல்ல மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் உண்டு என்றாலும்கூட சுயநலமாக செயல்படும் மருத்துவர்களும் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

   வாடகைத்தாய் அனுபவிக்கும் மனம் மற்றும் உடல் சார்ந்த பிரச்சனைகளை பற்றி ஒரு கட்டுரை படிக்க நேர்ந்ததே இக்கதை எழுத காரணம்.

   அதுவும் இந்தியாவில் இது முன்னேற்றம் காணும் தொழிலாக இருக்கும் நிலையில் வறுமையில் வாடும் பல பெண்கள் இதற்கு இலக்காவது வருந்தத்தக்கது. அவர்களைப்பற்றி எவ்வளவு பேர் யோசிப்பார்கள்?

   இதுபோல் பிறக்கும் குழந்தையையும் பாதிக்காது என்பது என்பது என்ன நிச்சயம்?
   அதுவும் எதையும் வியாபாரமாக பார்க்கும் மனநிலையில் உள்ள தனி நபர் மற்றும் சமூகத்தில் பின்விளைவுகள் பற்றி யோசிப்பவர்கள் எத்தனை பேர்?

 2. Avatar
  rojaamagan says:

  ஹாய் விஜி சுஷில்குமார்

  நல்ல கருத்துள்ள கதை

  வாழ்த்துக்கள் தோழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *