பெருமாள் முருகன் கவிதைகள் நீர் மிதக்கும் கண்கள் – தொகுப்பை முன் வைத்து…

This entry is part 2 of 29 in the series 5 ஜனவரி 2014

சிறுகதை, நாவல் வடிவங்களைக் கையாளும் பெருமாள் முருகன் (1966) தந்துள்ள மூன்றாவது கவிதைத் தொகுப்புதான் ‘நீர் மிதக்கும் கண்கள்’.  இதில் 52 கவிதைகள் உள்ளன.  இவற்றுள் சில காலச்சுவடு, தீராநதி, கவிதாசரண், குதிரைவீரன் பயணம், உயிர்மை, உலகத்தமிழ் . காம் ஆகிய இதழ்களில் பிரசுரமானவைஃ

வாழ்க்கை அனுபவங்கள் மொழியில் கிடந்து ஊறிக் கவிகைளாய் வெளிவந்துள்ளன.  வுpத்தியாசமான கருப்பொருட்கள் பாடு பொருளாகியுள்ளன.  புதிய சிந்தனை, கோட்பாட்டுத்தாக்கம் எனக் கவிதைப் பரப்பு விரிகிறது.

‘அப்பாவின் வேலி’ வித்தியாசமானது ; பாசயிழைகள் நெய்த கவிதை.

அதிகாலை வேளைகளிலும்
அந்திமாலைப் பொழுதுகளிலும்
வெகுநேரம் வேலியைச் சரிசெய்து கொண்டிருப்பார்
முட்களின் நுனிகள் சிறிதும் மழுங்கிவிடக் கூடாது என்ற வரிகளில் ஒரு விவசாயி அர்ப்பணிப்போடு செயல்படுதல் தெரிகிறது.  இதுவே மகனுக்குத் தான் முன் மாதிரியாக இருக்க வேண்டும் என்கிற நல்லியல்பாகவும் அமைந்துள்ளது.

வேலியின் அவசியம்
வேலியின் பாதுகாப்பு
வேலியின் பராமரிப்பு
என்பன பற்றியே எப்போதும் என்றும் பேசுவார்
பேசும் போதெல்லாம்.
ஓரக்கண்ணால் என்னைப் பார்த்துக் கொள்வார்
என்பதில் கடைசிவரி பாசவலைக்குள் மகனை ஆளும் பாங்கைச் சொல்கிறது.

வெளியேறிப் போகும் போது
குறிப்பிட்ட தொலைவில்
கூடவே அதுவும் வந்துகொண்டிருக்கும்
என் தந்தையின் வேலி
இங்கு அசாதாரண ஈடுபாடு தெரிகிறது.  கண்ணாகப் பாதுகாத்து வந்த வேலியில் ஓட்டைகள் உருவாகிக் கொண்டிருக்கிறது.  மகன் மீது சந்தேகப்படுகிறார் தந்தை: பேசுவதை நிறுத்தியும் விட்டார்.  நான் அறிந்த யாரும் கையாளாத கருப்பொருள் கொண்ட இக்கவிதையே இத்தொகுப்பின் ஆகச்சிறந்தது என நினைக்கிறேன்.

‘நிஜம்’ என்ற கவிதை காதலைப் பேசுகிறது.  அதுவும் அழகாகவும் ஆத்மார்த்மாகவும் …

மலையுச்சியின் பரிசுத்தம் நிரம்பிய
எனது செயல்களைக் காட்சிக்கு வைத்திருந்தேன்
என்பது அழகான வெளிப்பாடு.  ‘நிஜம்’ என்ற சொல் இக்கவிதையில் மீண்டும் மீண்டும் வருவது மனக் கதவைத் திறந்து காட்டும் நல்முயற்சியாக உள்ளது.

நிஜமாக நான் சிரி;த்தேன்
உன் கண்ணீர் நிஜமாகச் சுட்டது
சொற்கள் நிர்வாணமாய்ப் பிறந்தன
என்ற வரிகள் மனம் பூரித்த நல்லனுபவத்தைப் பதிவு செய்கின்றன.  ஆனால் கவிதை சோகத்தில் முடிகிறது.

அப்போது நீ
உனது காதலைத்
துளித்துளியாய்
உருவி எடுத்துக்கொண்டிருந்தாய்
நிஜமாகவே நானறியாமல்

‘வேம்பின் பாடல்’ புனைவுக் கவிதை.  கவிதை சொல்லி யார் என்ற கேள்வி எழுகிறது.  ஒரு பறவையின் கூற்றாக இருக்கலாம் என்பதற்குச் சில வரிகள். ஆதாரம்

ஊச்சாணிக் கொம்பில் சிறு கூடு கட்டி
பாதுகாப்பாய் உறங்குகிறேன்
——————————————–
பழப்பருவங்களில் வயிறு முட்டத்தின்று பித்தேறி அலைகிறேன்.

ஆனால் ‘உனக்குள் வேம் பொன்று முளைவிட்டு வளர்ந்திருக்கிறது’ என்னும் போது பறவையின் கூற்று என்பது பொருத்தமாக இல்லை.  முரண் சற்றே குழப்புகிறது. மெல்ல மெல்ல வளரும் கட்டமைப்பு அழகாக இருக்கிறது.  ஆழ்ந்த சிந்தனைகள் காணப்படுகின்றன.

எனக்குக் கோடைகாலமே இல்லை
அடர் நிழல் தரும் குளிர்ச்சி எப்போதும்
கசப்புகளை உறிஞ்சி உள் திணித்துமப்
பசுமையாய் வெளிப்படுத்துகிறேன்.

என்கையில் மரம் தன்கூற்றாகப் பேசுவது போல் உள்ளது.

தாத்தாவின் மரணத்தை வித்தியாசமாக சொல்லும் கவிதை.  ‘நான்’

புறக்கணிப்பும் தனிமையும் தான்
முதுமைக்கு வழங்கப்படும் மரியாதை எனில்
அவரும் கௌரவிக்கப்பட்டார்.
என்ற வரிகள் மனத்தைப் பிசைகின்றன.  ‘கௌரவிக்கப்பட்டார்’ என்ற சொல்லும் மாற்றுப்பொருள் வேதனைத் தருகிறது.

அம்முகத்தை அடிக்கடி பார்த்த நினைவு
அடையாளம் தான் தெரியவில்லை
எரியும் தீயில் தெளிவாகத் தெரிந்தது அந்த முகம்
எவருடையது என்று
என்று முடியும் வரிகளோடு கவிதைத் தலைப்பைப் பொருத்திப் பார்த்தால் தாத்தாவைப் பற்றிய பழைய நினைவுகளின் பதிவு எனப் புரியும்.  இக்கவிதை எளிமையும் நேரடித்தன்மையும் கொண்டது.  தொடுப்பு இயல்பாக அமைந்துள்ளது.

‘சிரு~;டி” பள்ளிச்சிறுவனின் மன இயல்புகளைக் காட்டும் கவிதை.  பள்ளிக்கூடம் போக மனமில்லாத இளம் பிள்ளைப் பருவம்.  அதன் மனப்பாங்கே வினோதமானது.

நடக்கும் தூரத்திலுள்ள
பள்ளி ஒன்றில் சேர்த்துவிட்டேன்
செல்ல அரைநாளும்
திரும்ப அரைநாளும் எடுத்துக் கொண்டேன்
‘மயானத்தில் நிற்கும் மரம்’ குறியீட்டுக் கவிதை.  மயானக் கூலித் தொழிலாளி இதன் கருப்பொருள். அவருடைய மனநிலை, மனிதர்கள் மீதான விமர்சனமாக முன் வைக்கப்படுகிறது.

சிலரை அரவணைப்பேன்
சிலர் வருகையில்
கண் மூடித் தூங்கிப்போவேன்
சிலர் வருகையிலோ
முகம் திருப்பிக் கொள்வேன்

மயானத்திற்கு அவருடைய பாட்டி, தந்தை, மைத்துனன், தமையன் வரும்போது அத்தொழிலாளியின் மனம் பதைபதைக்கிறது.

உன் தமையனைக் கொணர்ந்தபோது காற்றுக்காலம்
கிளைகளால் அறைந்து கொண்டு தவித்துக் கொண்டிருந்தேன்.

என்ற வரிகளில் படியம் குறியீட்டியல் பாங்;குடன் அமைந்துள்ளது.

இப்போது
நீர் மறைந்து நலம் பிளக்கும் கருங்கோடை
நீ வந்திருக்கிறாய்.
என் வேர்கள் அதிர்கின்றன.

‘நீ’ என்ற சொல் தொழிலாளியின் துணைவியைக் குறிக்கிறது எனலாம்.  இதுவும’ ஒரு நல்ல கவிதை.  இக்கவிதையைப் படித்த போது ஜெயகாந்தன் எழுதிய ‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி’ சிறுகதை நினைவில் வந்து போனது.

புத்தகத்தின் தலைப்புக் கவிதை ‘நீர் மிதக்கும் கண்கள்’. ஒரு மெல்லிய காதல் கவிதை.  நேரடியாக இதயத்தில் புகுந்து மகிழ்ச்சி தரக் கூடியதாக இருக்கிறது.

நீ விட்டுச் சென்ற மௌனம்
வாய் திறந்து புலம்பிற்று
என்ற படிமம் தைக்கிறது.

சிதறிய ஆடைகள் போல்
நீ விட்டுச் சென்ற கனவுகள்
எங்கும் இறைந்து கிடக்கின்றன.
என்ற வரிகளில் கலை நேர்த்தி வாசகன் மனத்தில் இலக்கியக் கோலம் போடுகிறது.  நேசித்தவன் பிரிகிறான்.

இப்போது விட்டுச் சென்றிருக்கிறாய்
நீர் மிதக்கும் கண்களை
எனக் கவிதை முடிகிறது.

எந்தக் கருப்பொருளையும் கவிதை வடிவத்தில் அழகாக நடத்திச் செல்கிறார் பெருமாள் முருகன்.  இத்தொகுப்பில் இன்னும் பல கவிதைகளைப் பற்றியும் பேசலாம்.  மொத்தத்தில் வாசிப்பு அனுபவம் மகிழ்ச்சியாக இருக்கிறது.

 

Series Navigationஅதிர வைக்கும் காணொளிவிறலி விடு தூது நூல்கள் புலப்படுத்தும் உண்மைகள்ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-16 சஞ்சயன் தூதுஅகரம் கலை- இலக்கிய- ஊடக நிலையம் நடத்தும் பாடலாசிரியருக்கான பயிற்சிப் பட்டறை கொழும்பில்.அருளிச் செயல்களில் மாயமானும் பறவையரசனும்ஜாக்கி சான் 23. படங்களுக்கு மேல் படங்கள்ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் -1மிகைக்கேடயச் சுரப்பி நோய் -Hyperthyroidismவால்ட் விட்மன் வசனக் கவிதை – 56 ஆதாமின் பிள்ளைகள் – 3முன்னுரையாக சில வார்த்தைகள் மறுபடியும்அதிகாரத்தின் துர்வாசனை.திண்ணையின் எழுத்துருக்கள்வசுந்தரா..திண்ணையின் இலக்கியத் தடம் -16பரிதி மண்டலத்தின் அண்டக்கோள் நகர்ச்சி விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர்இவரைப் பார்த்தா இரக்கப்பட்டேன்?ஒன்றுகூடல்புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 40தாகூரின் கீதப் பாமாலை – 96 யாசகப் பிச்சை .. !கேட்ட மற்ற கேள்விகள்
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *