இலக்கியத்தில் காலனித்துவம்: புதிய காலனித்துவத்தின் கொடூரம்

author
2
0 minutes, 9 seconds Read
This entry is part 15 of 29 in the series 12 ஜனவரி 2014

panjaangam-karutharanguக.பஞ்சாங்கம்
புதுச்சேரி-8

1947-க்கு முந்தைய காலனித்துவத்தின் ஆதிக்கம் என்பது அரசியல், பண்பாடு, கல்வி, பொருளாதாரம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் நீக்கமற நிறைந்திருந்தது வெளிப்படையாகத் தெரிந்தது. ஆனால் இன்றைய புதிய காலனித்துவச் சூழலில்  காலனித்துவ ஆதிக்கம் அதேபோல் ஒவ்வொரு துறையிலும் ஒரு சிறிதும் குறையாமல் மேலும் வலுவாகி இருக்கிறது என்றாலும் அன்றுபோல் இந்த ஆதிக்கம் வெளிப்படையாக பெருவாரி மக்களுக்கும் புலப்படும்படியாக இல்லை. இது மிகப்பெரிய சூழ்ச்சி வலையாகப் பின்னப்பட்டுள்ளது. தனது ஆதிக்க வலைக்குள் வெளியே எந்தவொரு நாடும், எந்தவொரு துறையிலும் தனித்து வளர்ந்துவிடக்கூடாது என்பதில் ஐரோப்பாவும், அமெரிக்காவும் மிகவும் கண்காணிப்போடு தனது செயல்பாடுகளை நிகழ்த்தி வருகின்றன. ஓரளவு மின்சார உற்பத்தியில் தன் போக்கில் செயல்பட்டு தன்னிறைவு கொண்டிருந்த இந்தியாவின் நிலையைப் பொறுக்கமாட்டாத அமெரிக்கா இன்று அணுஉலை ஒப்பந்தம் மூலம் தனது ஆதிக்கப் பிடிக்குள் இந்தியாவை கொண்டு வந்துள்ளது. இப்படி ஒவ்வொன்றிலும் வல்லரசு நாடுகளின் கொடூரமான சுயநல அணுகுமுறை மற்ற நாடுகளின் வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கின்றன.

இத்தகைய ஆதிக்க அணுகுமுறை வெளிப்படும் மிகப்பெரிய துறை கலை இலக்கியத் துறையாகும். இத்துறையில் அந்நிய ஆதிக்கங்களை அனுமதிப்பது என்பது ஒட்டுமொத்த சமுதாயத்தையே அடகுவைக்கிற ஆபத்தான ஒன்றாகும். ஏனென்றால் கலை இலக்கியங்கள்தான் அந்தந்த மண்ணுக்கு ஏற்ற வாழ்க்கை வடிவங்களை, கருத்துக்களை, மன உணர்வுகளை சமைத்துக் கொடுப்பவைகளாகும். அத்தகைய ஓர் இடத்தில் அந்நிய மண் சார்ந்த புற வடிவங்களை ஆதிக்கம் செலுத்த அனுமதிப்பது என்பது அந்தச் சமூகத்தின் ஆன்மாவையே அழித்தொழிப்பதாக முடியும். அதைத்தான் புதிய காலனித்துவம் இந்தியாவின் மேல் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. தங்களிடமுள்ள பொருளாதாரப் பலத்தாலும், தொழில்நுட்ப வளத்தாலும், ஊடக ஆதிக்கத்தாலும் மிக நேர்த்தியாக உயர்ந்த தரத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கும் ஹாலிவுட் படங்கள், குழந்தைகளுக்கான கார்டூன் படங்கள், குழந்தைகளுக்கான இசைப் பாடல்கள், பல்வேறு அறிவியல் பாடங்கள் முதலிய பலவும் தயாரிக்கப்பட்டு உலக முழுவதும் விற்கப்படுகின்றன. இன்றைய கணினியுகத்தில் மிக எளிதாக உலக முழுவதிலுமுள்ள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அவரவர் தாய் மொழிகளிலேயே இவைகளெல்லாம் வழங்கப்படுகின்றன. இத்துறைகள் சார்ந்த உள்நாட்டு நிறுவனங்கள் எதுவும் போட்டிப் போட முடியாத அளவிற்குப் பெரிய சந்தை கிடைப்பதால் மிகக் குறைந்த விலையிலேயே இவைகள் வழங்கப்படுகின்றன. தங்கள் தாய்மொழியிலேயே இந்த ஹாலிவுட் படங்களைத் தொடர்ந்து பார்க்கிற எந்த ஒரு சிறுவனும் சிறுமியும் உலகத்தில் முளைக்கும் தீய சக்திகளி;டமிருந்து உலகத்தைக் காப்பாற்ற அமெரிக்கா என்கிற ஒரு பொன் உலகம் இருக்கிறது என்கிற நம்பிக்கைக்கு மிக எளிதாக அடிமையாகிவிடும். புதிய காலனித்துவம் கட்டமைக்கிற புதிய புனைவுகள் இப்படி எத்தனை எத்தனையோ. நாடு என்றால் அமெரிக்காதான்; இலக்கியத்தில், அறிவியலில் பரிசு என்றால் நோபல் பரிசுதான்; திரைப்படத் துறையில் பரிசு என்றால் ஆஸ்கார் விருதுதான்; (அந்த அளவிற்குப் பரிசுத் தொகையை உயர்த்தி வைத்துக் கொண்டுள்ளனர்;; நோபல் பரிசுக்கு 10 லட்சத்து 40 ஆயிரம் டாலர்; புக்கர் பரிசுக்கு 50,000 பவுண்டு; புலிட்சர் பரிசுக்கு 10,000 டாலர்)  உலகப் புகழ்பெற எழுத வேண்டும் என்றால் ஆங்கிலத்தில் எழுதுவதுதான்; வாழ்தல் என்பது அமெரிக்கா, பிரிட்டனில் வாழ்வதுதான்; இப்படிப் ‘புதிய காலனித்துவம்’ பல்வேறு புனைவுகளை மற்ற நாட்டு மக்களின் மேல் திணித்து ஒட்டுமொத்தமாக அச்சமூகங்களின் ஆன்மாவையே இறுக்கிக் கொண்டிருக்கிறது. இது அறிவு உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கும் புத்தக உருவாக்கத்திலும் எப்படி வெளிப்படுகிறது என்பதை இனிக் காணலாம்.

உலக முழுவதும் உள்ள கலை இலக்கிய நிறுவனங்கள், முதல் உலக நாடுகளிலுள்ள நிறுவனங்களைச் சார்ந்தே இருக்கும்படியான நிலைமைதான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் தயாரித்து வெளியிடும் இதழ்கள், பத்திரிக்கைகள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சி, குழந்தைகளுக்கான கார்டூடன்கள் முதலியவற்றைத்தான் மற்ற உலக நாடுகள் முழுவதும் நுகர்ந்து தீர்க்கின்றன. சுருக்கமாகச் சொன்னால் “நீ எந்த உற்பத்தியிலும் ஈடுபட வேண்டாம். வெறும் நுகர்வோராக மட்டும் இருந்து அழிந்து போ” என்பதுதான் இப்புதிய காலனித்துவத்தின் அணுகுமுறையாக இருக்கிறது. இதன் விளைவாக உற்பத்தி என்பதும், அதை நுகர்வது என்பதும் சமத்துவமற்ற ஒரு முறையிலேயே இயங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் காலனித்துவம் என்கிற குறிப்பிட்ட நாடுகளின் அதிகார மேலாண்மை என்பது ஒரு சிறிதும் குறையாமல் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மூன்றாம் உலக நாடுகள், அடிப்படைத் தேவைகளுக்கே தள்ளாடிக் கொண்டிருக்கிற சூழலில் இத்தகைய ‘அறிவு உற்பத்தி’ சார்ந்த விஷயங்களில் பெரிதும் கவனம் செலுத்த முடியாத சூழலை, முதல் உலக நாடுகள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.

‘புத்தகம்’ அறிவு உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கிறது என்பதில் ஐயமில்லை. அந்த ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டால் கூட, மூன்றாம் உலக நாடுகள், முதல் உலக நாடுகள் போலப் புத்தகங்களைப் பொருந்தொகையில் தங்கள் நாட்டிற்குப் போதுமான அளவிற்கு உற்பத்தி செய்து கொள்ள முடியாத நிலையிலேயே இன்னும் இருக்கின்றன. தொகையால் மட்டுமல்ல தரத்திலும் கூட, முதல் உலக நாடுகளைச் சார்ந்தே இருக்க வேண்டிய பரிதாபகரமான நிலையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. உலக அளவில் புத்தக உற்பத்தியில் 70 விழுக்காடு பற்றாக்குறை இருப்பதாகக் கணிக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் மூன்றாம் உலக நாடுகளின் இந்தப் பரிதாபகரமான  நிலைதான். உலக மக்கள்தொகையில் 30 விழுக்காடு மட்டுமே உள்ள 34 தொழில்மயமான நாடுகள்தான், உலகம் முழுவதும் வெளிவரும் புத்தகங்களில் 81 விழுக்காடு புத்தகங்களை உற்பத்தி செய்து தள்ளுகின்றன. மேலும் மூன்றாம் உலக நாடுகள் புத்தக உற்பத்தியில் இவ்வாறு பின்தங்குவதற்கு ஒரு காரணமாக அந்தந்த நாட்டிற்கே உரிய எழுத்தாளர் பற்றாக்குறை என்றும் சொல்லப்படுகிறது. முதல் உலக நாட்டைச் சார்ந்த எழுத்தாளரின் எழுத்துக்கு உலகம் முழுவதுமான சந்தை திறந்து கிடக்கிறது. ஆனால் மூன்றாம் உலக நாட்டு எழுத்தாளர்கள் தங்கள் தாய்மொழியில் எழுதுகின்ற எழுத்துக்கான ‘சந்தை’ மிகவும் சிறியது. எனவே ‘எழுத்தாளர்’ உருவாவதும் நிலைபெறுவதும் அதற்குத்தகுந்தவாறுதான் அமையும்.

உலக மக்கள் தொகையில் 28 விழுக்காடு மக்கள் தொகையைக் கொண்டுள்ள 18 வளர்ந்து வரும் நாடுகள் உலகில் வெளியாகும் மொத்த புத்தகத் தலைப்புகளில் 7.3 விழுக்காட்டு புத்தகங்களைத்தான் வெளியிட்டுள்ளன. மொத்தம் வெளியான புத்தகப்படிகளில் 2.6 விழுக்காட்டுப் படிகளைத்தான் வெளியிட்டுள்ளன. அதுவும் இவற்றில் பாதிப்படிகள் பாடப் புத்தகங்களாகும்(யுனஸ்கோ- 67). சராசரியாக ஐரோப்பாவில் பத்து லட்சம் மக்களுக்கு 417 புத்தகத் தலைப்பு என்றால், மூன்றாம் உலக நாட்டு மக்களுக்கு 32 புத்தகங்கள்தான் கிடைக்கின்றன.

மூன்றாம் உலக நாடுகள் பலவும் சமீபகாலம்வரை ஐரோப்பாவின் காலனிய நாடுகளாக இருந்து வந்தன.(1930 வரை உலக நிலப்பரப்பில் 83.4 விழுக்காடு நிலம் ஐரோப்பிய காலனித்துவத்திற்கு உள்ளாகியிருந்தன) எனவே பல்வேறு இனம், மொழி, தேசியம் சார்ந்த அந்தந்த நாட்டு மக்களை ஒன்றிணைப்பதற்கும், மக்கள் தங்களுக்குள்  கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வதற்கும், இன்றும் ஐரோப்பிய மொழிகளில் ஒன்றைத்தான் பயன்படுத்திக் கொண்டு வருகின்றன. தங்களுடைய  உள்நாட்டு மொழிகள் எந்த ஒன்றின் மேலும், முழு மக்கள் தொகையும் நம்பிக்கை  வைத்து அதைப் பயன்படுத்துவதன் மூலம் காலனிய மொழியை அறவே வெளியேற்ற அவர்கள் இன்றுவரை தயாராக இல்லை. இதற்கு முக்கிய காரணம் ஆளுகின்ற மேட்டிமைக் குழுவினரும், பணக்காரரும், உயர்சாதியினரும் ஐரோப்பிய மொழி தொடர்ந்து இருந்து வந்தால்தான் தங்களுக்கு வாய்த்த வசதியான, உரிமையோடு கூடிய வாழ்வைச் சிறிதும் அசையாமல், அலுங்காமல் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற நிலைப்பாட்டில் செயல்படுவதுதான்.

காலனித்துவத்திற்கு உள்ளான நாடுகளில் இன்றும் அரசியல் மற்றும் பொருளாதார மொழியாக இருக்கக்கூடிய ஐரோப்பிய மொழிகளோடு தங்களைப் பரிச்சியமாக்கிக் கொள்கின்ற, மொத்த மக்கள் தொகையில் பத்து விழுக்காடு அல்லது அதிலும் குறைந்த விழுக்காட்டை உடைய மேட்டிமை மக்களின் கை ஓங்கியிருக்கும் சூழலில் இந்த நாடுகளில் ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழிதான் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான மூல ஊற்றாகச் செயல்பட்டு கொண்டிருக்கிறது. மேலும் புலமையைக் கைப்பற்றுவதற்கான ஊடகமாகவும் இந்த மொழிகள்தான் தொடர்கின்றன. மூன்றாம் உலக நாடுகள் அனைத்திலும் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் இந்த மொழிகள்தான் இன்றும் அறிவைப் பெறுவதற்கான ஆதார சக்தியாகத் தொடர்கின்றன. தகவல் தொழில்நுட்பம் ஆட்சி செலுத்தும் இன்றைய காலக்கட்டத்தில் இந்தியா போன்ற நாடுகளில் தொடக்கக் கல்வியிலேயே ஆங்கிலத்தின் ஆதிக்கம் பரவலாகித் தாய்மொழிக் கல்வி தவியாய்த் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மூன்றாம் உலக நாடுகளிலுள்ள கல்விசார் நிறுவனங்களும், நூலகங்களும் ஆங்கிலப் புத்தகங்களை வாங்கிக் குவிப்பதை ஒரு பழக்கமாகவே கொண்டுள்ளன. மேலும் அறிவின் உயர்ந்த தளத்தை அடைந்து பேரறிஞராக உலா வரவேண்டும் என்றால் ஐரோப்பிய மொழிகளில் எழுதுவதுதான் இன்றும் பெருமையாகக் கருதப்படுகிறது.

இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் இரண்டு விழுக்காட்டினர்தான் ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். ஆனால் இந்தியாவில் ஓராண்டில் வெளியாகிற மொத்த புத்தகத் தலைப்புகளில் பாதிப் புத்தகங்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு வெளிவருகின்றன.

இந்தக் காலனித்துவ மேலாண்மை இன்றும் தொடர்வதற்கு இந்தியப் புத்தக வெளியீட்டாளர்களும் ஒரு காரணம். புதிய காலனித்துவம் இன்னும் தன்னுடைய மேலாண்மையைக் காலனித்துவத்திற்கு உள்ளாகியிருந்த நாடுகளின் மேல் செலுத்துவதற்கான தந்திரங்களோடு இயங்கிக் கொண்டிருக்கிறது என்கிற விழிப்புணர்வோடு இந்தப் புத்தக வெளியீட்டாளர்கள் இயங்குவதில்லை. பொதுவாகவே இருப்புதான் பிரதானம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட மூன்றாம் உலக மக்கள் பலருக்கும் தேச நலத்தின்மேல் அக்கறையோடு வினைபுரியத் தோன்றுவதே இல்லை.

மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த அறிவாளிககுக்குள் புகுந்துவிட்ட ஐரோப்பாவையையும், அதன் மொழியையும் மேன்மையாகப் போற்றும் மனப்பான்மை இந்த இலக்கியக் காலனித்துவம் தொடர்வதற்கு மற்றொரு காரணமாகும். இந்த மனப்பான்மை காரணமாக இம்மூன்றாம் உலக அறிவாளிகள் மேலை நாட்டு வாசகர்களை முதன்மையாக முன்னிறுத்தித் தங்கள் எழுத்தை எழுதத் தொடங்குகின்றனர். இதனால் என்கவுண்டர் (நுnஉழரவெநச), லெஸ்டெம்ப்ஸ் மார்டன்ஸ் (டுநள வுநஅpள ஆழனநசளெ) போன்ற மேலை நாட்டு இதழ்களில் தங்கள் படைப்புகளை வெளியிடுவதில் பெருமையாகக் கருதுகின்றனர். இதேபோல் லண்டன், நிய+யார்க், அல்லது பாரீஸ் போன்ற ஐரோப்பியத் தலைநகரங்களில் தங்கள் புத்தகங்களை வெளியிட்டுப் பெருமை தேடுகின்றனர். இதுமட்டுமல்லாமல்  ‘பணமும்’ நிறைய சம்பாதிப்பதற்கான வாய்ப்பைப் பெறுகின்றனர். இத்தகைய முயற்சிகள் மூலம் மற்றொரு இன்றியமையாத விளைவும் ஏற்படுகிறது. அதாவது பிற மூன்றாம் உலக நாட்டு அறிவாளிகளோடு தொடர்பு கொள்வதற்கும், கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. ஆனால் இந்தத் தொடர்பை, முன்னேறிய முதல் உலக நாடுகளின் ஊடாகத்தான் கொள்ள முடியும் என்ற நிலை இருப்பது கவனிக்கத்தக்கது.

படித்தவர்களின் விகிதாச்சாரம், பொதுமக்களின் வாசிக்கும் பழக்கம், புத்தகங்கள் குறித்த அரசின் கொள்கை, புத்தக உரிமைகள் குறித்த சட்ட ஒழுங்குகள், நூலகங்களின் தன்மை, புத்தகங்களை வாங்கும் சக்தி முதலியன பலவும் மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதார ஏழ்மை காரணமாக முதல் உலக நாடுகளோடு ஒப்பிடும் போது மிகவும் பரிதாபகரமான, தாழ்ந்த நிலையில் இருப்பதுதான் பொதுவான தன்மையாக இருக்கிறது. இதோடு மூன்றாம் உலக நாடுகள் ஒவ்வொன்றும் பல்வேறு மொழி பேசும் மக்கள் கூட்டத்தினைக் கொண்டிருப்பதும் இந்நாடுகளில் புத்தகத்திற்கான சந்தை பெரிய அளவில் வளர்ச்சியடையாமல் போவதற்குக் காரணமாகின்றது. இதனாலேயே பல்வேறு வகைப்பட்ட புத்தகங்கள் வெளியிடுவதற்கான வாய்ப்பு இந்நாடுகளில்  குறைவாகவே அமைந்துள்ளன. இந்தியாவை எடுத்துக் கொண்டால் சில பாடப் புத்தகங்கள், சில வகைப்பட்ட  வெகுஜன நாவல்கள், மதம் சார்ந்த புத்தகங்கள் ஆகியவை மட்டும்தான் வெளியீட்டாளர்களுக்கு லாபம் தரக்கூடிய அளவில் விற்கின்றன.

புத்தகத் தயாரிப்பில் உழைப்பாளர்களுக்கான கூலி குறைவு. ஆனால் ஒட்டுமொத்த புத்தகத்தின் விலை மூன்றாம் உலக நாடுகளில் அதிகமாக இருக்கின்றது. அதற்கு இரண்டு காரணங்கள்,

1. அச்சடிக்கப்படும் புத்தகப் படிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. (பெரும்பாலும் ஆயிரம் படிகள்தான் அச்சடிக்கப்படுகின்றன)

2. அச்சடிக்கப்பட்ட புத்தகங்களை விநியோகிக்கும் முறைமை மிகவும் சிக்கலான ஒன்றாக இன்றும் தொடர்கிறது.

முதல் உலக நாடுகள் கடைப்பிடிக்கும் வெளிநாட்டு உதவித் திட்டங்கள் என்ற ஒன்று அந்நாடுகளை மூன்றாம் உலக நாடுகள் அறிவுத் தேட்டத்திற்குச் சார்ந்திருக்கும் நிலையை நீட்டிக்கவே பயன்படுகின்றன. இந்நிலையில் அறிவு பெறுதல் என்பது புதிய காலனித்துவ உறவின் ஒரு பகுதியாகவே தொடர்கிறது. இந்த உதவித்திட்டங்கள் மூலம் வெளிநாட்டு முதலீடுகள் மூன்றாம் உலக நாடுகளில் பெருகுகின்றன. கூடவே உலக முழுவதிலுமான விநியோக முறையை ஒரு வலைப்பின்னல் போல் அமைத்துக் கொள்ள முடிகிறது. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, சோவியத் ஆகிய நாடுகள் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளுடன் அறிவு உற்பத்திக்குத் துணைசெய்யும் உதவித் திட்டங்களை அமுல்படுத்திவருகின்றன. புத்தகங்களை வெளியிடுவதற்குக்கூட உதவிசெய்கின்றன. சான்றாக, பிரிட்டன் மட்டும் ‘ஆங்கில மொழி புத்தகத் திட்டம்’ என்கிற ஒரு உதவித் திட்டம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பத்து லட்சம் ஆங்கிலப் புத்தகப் படிகளை இந்தியாவில் விற்று வருகிறது. நூற்றுக்கணக்கான தலைப்புகளில் அமைந்துள்ள இந்தப் புத்தகங்கள் பெரும்பாலும் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பாடப் புத்தகங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

1950-க்கும் 64க்கும் இடைப்பட்ட காலத்தில் அமெரிக்காவின் செய்தி ஏஜென்சி மட்டும் 9000 தலைப்புகளில் எண்ணூறு லட்சம் படிகளை 51 மொழிகளில் அச்சடித்து உலக முழுவதும் விற்றுள்ளது. பெரும்பாலும் இந்தப் புத்தகங்கள் கம்ய+னிஸத்திற்கு எதிரான புத்தகங்களாகும். அமெரிக்கா தொடர்ந்து உலகில் தன்னை முதன்மைப்படுத்திக் கொள்ள இன்றும் இத்தகைய உத்திகளைக் கையாண்டுகொண்டுதான் வருகிறது. இந்தியப் பல்கலைக்கழகங்கள் தாங்கள் நடத்தும் ஆங்கிலப் பாடத்திட்டத்தில் இங்கிலாந்து இலக்கியத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைவிட அமெரிக்க இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

மேற்கண்ட உதவித் திட்டத்தில் மற்றொன்று, இந்தோ-அமெரிக்கப் பாடப் புத்தகத் திட்டம் என்பது அமெரிக்காவின் மிகப்பெரிய திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலம் வேறு வேறான ஆயிரம் தலைப்புகளாலான பாடப் புத்தகங்கள் ஆங்கிலத்தில் மறுபதிப்புச் செய்யப்பட்டு, இந்தியக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் விற்கப்படுகின்றன. நாற்பது லட்சம் படிகளுக்கு மேலான புத்தகங்கள் சலுகை விலையில் விநியோகிப்படுகின்றன. இந்த உதவித்திட்ட நிகழ்ச்சி மூலமாகப் பல்வேறு அமெரிக்கப் புத்தக வெளியீட்டாளர்கள் இந்தியப் புத்தக சந்தையில் தங்களை வலுவாக நிலைநிறுத்திக் கொண்டனர்.

இவ்வாறு கலை இலக்கியத் துறையில் நிலவுகின்ற காலனித்துவம் தொடர்ந்து நீடிப்பது என்பது இந்தியாவின் அடையாளத்தை அறவே துடைத்து எடுத்துவிடும் மிகக் கொடூரமான ஒரு நிலையை உருவாக்கிவிடும். இதை உணர்ந்து செயல்படாத அறிவுஜீவிகளும், எழுத்தாளர்களும், துணைவேந்தர்களும், எல்லாவற்றிற்கும் மேலாக அரசியல்வாதிகளும் இந்தக் கொடூரத்திற்குப் பொறுப்பேற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

பிலிப்ஜி. அல்ட்பாக் என்பாரின் ‘ ‘Literary Colonialism: Books in the third world’– என்ற கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ளன. இந்தக் கட்டுரை கீழ்க்கண்ட புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

Bill Ashcroft, Gareth Griffiths and Helen Tiffin (Eds), The Post-Colonial Studies Reader (1995), Routledge, 11, New Fetter Lane, London.

Series Navigationவளவ. துரையனின் “சின்னசாமியின்கதை”நாணயத்தின் மறுபக்கம்
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    Arun Narayanan says:

    An ice and informative article. But, why you have referred to a book written by authors belonging to colonial masters? Why you have to get these ideas by reading books written in English? this is a general contradicition in very many intellectuals in our country. They want to learn more and more by having enough command and access in English, but the rest of the population should live in Tamil and Tamil only. May be, paradoxes can be explained here.

  2. Avatar
    IIM Ganapathi Raman says:

    பேரனோயியா என்று இக்கட்டுரையை அழைக்கலாம். He attempts to draw a picture out of joints with ground realities !

    இலக்கியத்தில் காலனித்துவம் என்ற தலைப்பில் பள்ளிப்பாடப்புத்தகங்களையும் சேர்த்துவிடுகிறார். பிரிட்டன் ஆங்கிலமொழி வளர்ச்சித் திட்டத்தில் அச்சடித்து விநியோக்கும் நூலகளையும் ஆஸ்கார் அவார்டு, நோபல் பரிசு, இப்படி ஏராளமானவற்றை விரவி குழப்புகிறார்.

    இலக்கியத்தில் எங்கே காலனித்துவம் என்று புரியவில்லை. ஆங்கில நூல்களை ஆங்கிலம் தெரிந்தோர் படைப்பார்கள்; படிப்பார்கள். நான் ஒரு புக்கர் பரிசு நாவலைப்படித்தேன் என்றால், அதில் எங்கே காலனி ஆதிக்கம் இருக்கிறது? ஞானப்பீடஅவார்டு வாங்கிய சித்திரப்பாவையையும் சாஹித்ய அவார்டு வாங்கிய தமிழ் நூல்களையும்தான் படித்தேன்!

    தமிழ் மொழி வளரவில்லை; பெற்றொருக்கு ஆர்வமில்லையென்றால், வெள்ளைக்காரனைப்போய் ஏன் குறை சொல்கிறார்?

    பிரிட்டன் அச்சடிக்கும் ஆங்கிலமொழிப்பாடங்களின் தரமும் இந்தியர்கள் எழுதி பள்ளிகளில் வைக்கப்படும் ஆங்கில் நூல்களின் தரத்தையும் என்றாவது இவர்கள் ஆராய்ந்திருப்பார்களா? ஆங்கிலத்தில் பிழைபோட்டு எழுதி குழந்தைகளுக்கு வைக்கிறார்கள். எனவேதான் இன்றைய பதிப்பகத்தார் பிரிட்டிஸ்கவுன்சிலின் உதவியை நாடுகிறார்கள். ஆங்கில மொழி வளர்ச்சியை அதைத்தாய்மொழியாகக்கொண்டோன் கவனித்தால் என்ன தவறைக்காண்கிறார்?

    ஏன், தமிழன் என்ன செய்கிறான்? இவன் இவன் தாய்மொழியைக்கவனிக்க தரமான தமிழ்ப்பாடநூலகளைப் பள்ளிகளில் வைத்தானா? அரசியல்வாதிகளில் வாழ்க்கையும் ஜாதிததலைவர்களில் வாழ்க்கையையும் போட்டுததான் ஐந்தாம் கிளாஸ் தமிழ் நூலகள் பிள்ளைகளின் மேல் திணிக்கின்றன. இவர் செம்மொழிக்கவிதையை வைப்பாராம். அவர் எடுப்பாராம். என்ன சார் வேடிககையிது பிள்ளைகள் வாழ்க்கையோடு விளையாடுவது?

    வெள்ளைகாரன் என்ன சர்ச்சிலின் ரேசிச்த்தையா ஐந்தாம் கிளாஸ் பிள்ளைக்குச் சொல்லித்தருகிறான்? குழந்தைப்பாடல்கள் கூட தரமாக தமிழில் இல்லை. ஆங்கிலத்தில் உண்டு. கொஞ்சம் நியாயமாகப் பேசுங்க சார்!

    இலக்கியம் தமிழில் இருக்க, அதற்கும் வெள்ளைக்காரனுக்கும் என்ன சார் தொடர்பு? அவன் பெருந்தொகையைபபரிசாக வழங்குகிறான் என்றால் நமக்கு எதற்கு வயிற்றெரிச்சல்? அரசு இலவசங்களை அள்ளி வீசுகிறது. இலக்கியத்துக்கான பரிசை பத்தாயிரத்திலிருந்து பத்து இலட்சமாக்க முடியும் தாராளாமாக.

    உண்மைகளை எதிர்நோக்கப்பயந்து அதாவது தமமிடம் உள்ள குறைகளையெல்லாம் மறைத்துக்கொண்டு, தாம் தாழ்ந்ததற்கு வெள்ளைகாரந்தான் காரணம் என்று இன்றும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். புண் சீழாகி, சீழ் பெரும்நோயாகத்தான் போகிறது. அதற்கெல்லாம் காரணம் இப்படிப்பட்ட சிந்தனையே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *