ஒன்றுகூடல் ( தொடர்ச்சி )

This entry is part 19 of 29 in the series 12 ஜனவரி 2014
imagesCAZKPLQRCROP CIRCLE                              

முன்பெல்லாம் நாங்கள் ஒன்றுகூடியபோது ஒரு சிலர் மருத்துவ அனுபவங்களைப் பற்றி பேசுவதுண்டு. ஆனால் இந்த முறை மருத்துவம் அல்லாத வேறு வித்தியாசமான பொருள் பற்றி பேசவேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். மருத்துவத்திலேயே அனுதினமும் உழன்றுகொண்டிருக்கும் நாங்கள் இந்த மூன்று நாட்களும் அதிலிருந்து விலகி இருக்க எண்ணினோம்.

முதல் பேச்சாளர் ஏபெல் ஆறுமுகம். இவன் கோலாலம்பூரில் சுபாங் ஜெயா மருத்துவ மையத்தில் ( Subang Jaya Medical Centre ) இரு துறைகளில் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருகிறான். பொது அறுவை சிகிச்சை ( General Surgery ) பெண் பாலியல் மருத்துவம் ( Obstetrics and Gynaecology ) ஆகியவையே அந்த இரு துறைகள்.

அவன் எடுத்துக்கொண்ட பொருள் மிகவும் வினோதமானது. நாங்கள் அதுவரை கேள்விப்படாதது. எங்கள் அனைவரையும் வியக்க வைத்தது! அதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் நல்லது. அது வருமாறு.

அந்த புதுமையான செய்திக்கு பெயர் CROP CIRCLE என்பதாகும். இதை ” விளைச்சல் வட்டம் ” எனலாம்.

கோதுமை, வாற் கோதுமை, கம்பு, சோளம் ஆகிய விளை நிலங்களில் திடீரென விளைச்சலில் வட்ட வடிவமான அமைப்பு உண்டாவதை விளைச்சல் வட்டம் என்று கூறப்படுகிறது. இது வேறு வடிவங்களில்கூட அமையலாம்.

இது உண்டானால் விளைந்துள்ள கதிர்கள் ஒரே திசையில் மடிந்து விழுந்து அந்த வடிவத்தை உண்டுபண்ணும்.

1970லிருந்து இன்றுவரை உலகின் பல நாடுகளில் இதுபோன்ற விளைச்சல் வட்டங்கள் உருவாகியுள்ளன.

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் 26 நாடுகளில் மொத்தம் 10,000 விளைச்சல் வட்டங்கள் காணப்பட்டன.

இவற்றில் 90 சதவிகிதம் தென் இங்கிலாந்தில் தோன்றின. இவை பெரும்பாலும் சாலைகள் அருகிலும், குறைவான மக்கள் வாழும் பகுதிகளிலும். புராதன சின்னங்கள் இருக்கும் பகுதிகளிலும் காணப்பட்டன. Stonehenge அல்லது Avebury என்பவை சில முக்கிய புராதன சின்னங்கள்.

இவை ஒவ்வொரு வருடமும் ஒரே இடத்தில் தோன்றுபவவை. மனிதர்கள் எளிதில் செல்லக்கூடிய இடங்களில்தான் இவை இவ்வாறு தோன்றுகின்றன

.           இதுபோன்று விளைச்சல் நிலங்களில் அழகான வட்ட வடிவத்தில் ஒரு ஏக்கர் அளவில் கதிர்கள் ஒரு பக்கமாக சாய்ந்து கிடப்பதைக் கண்டு மக்கள் வியந்ததோடு அஞ்சவும் செய்தனர். இதை மனிதர்களால் செய்ய முடியுமா என்றும் எண்ணினர். அப்படியெனில் இதை எப்படி எதற்காக செய்தனர் என்பது குழப்பத்தையே உண்டுபண்ணியது.

1991 ஆம் வருடத்தில் இங்கிலாந்தில் இரு ஏமாற்று பேர்வழிகள் தாங்கள்தான் இவற்றை உண்டுபண்ணியதாக் கூறிக்கொண்டனர்.

அதன்பின் இது மனிதரால், வானிலையால் அல்லது வேறு இயற்கைக் காரணங்களால் ஏற்படுபவை என்று நம்பப்பட்டது.

1970 ஆம் வருடத்தில் ஆஸ்திரேலியாவில் ஒரு விவசாயி தன்னுடைய வயலில் பறக்கும் தட்டு நின்றதாகவும், அது பறந்து சென்றபின்பு அங்கு விளைச்சல் வட்டம் கண்டதாகவும் கூறினார். இது பெரும் பரபரப்பை உண்டுபாண்ணியது. அதன்பின் பலரும் இதை வெளி கோளங்களிலிருந்து வரும் பறக்கும் தட்டுகளால் ஏற்படுபவையோ என்ற குழப்பம் மேலோங்கியது. ஆனால் இதற்கு போதிய ஆதாரம் இல்லை.

விளைச்சல் வட்டத்தால் பயிர்கள் நாசமாயின என நிலத்தின் உரிமையாளர் புகார் செய்தாலும், அதைப் பார்க்க ஆர்வமடைந்தோர் பேருந்துகளிலும், ஹெலிகாப்டரிலும் வந்ததால் அது ஒரு சுற்றுலா மையமாகவும் மாறியது.

வானிலை அறிவியளாலர் விளைச்சல் வட்டம் சூறைப் புயலால் ( Tornado ) உண்டாகின்றன என்றனர். சிலர் அது பந்து மின்னலால் ( Ball Lightning ) ஏற்படுகின்றன என்றனர். வேறு சிலர் சாதாரண புயல்கூட இதை உண்டுபண்ணலாம் என்றனர். ஆனால் இவை எதற்கும் போதிய ஆதாரம் இல்லை.

உலகின் புகழ்மிக்க இயற்பியலார் ( Physicist ) ஸ்டீபென் ஹாவ்கிங் ( Stephen Hawking ) 1991 ஆம் வருடத்தில் விளைச்சல் வட்டம் பற்றி இவ்வாறு கூறியுள்ளார்.

விளைச்சல் வட்டங்கள் குறும்புத்தனமான ஏமாற்று வேலை அல்லது காற்று சூழல்வதால் ஏற்படுபவை. ” ( Corn circles are either hoaxes or formed by vortex movement of air. )

அறிவார்ந்த முறையில் விளக்க இயலாத ஒரு சக்தியால் ( Paranormal ) விளைச்சல் வட்டம் உருவாகிறது என்று வேறொரு சாரார் கருதினர். இவர்களில் பறக்கும் தட்டு மீது நம்பிக்கைக் கொண்டோர் ( Ufologist ), முரண்படு கருத்துடையோர் ( Anomalist ) போன்றோர் அடங்குவர்.

இவர்களில் சிலர் புவிக்கு அப்பாலுள்ள ( Extraterrestrial ) உயிரினங்கள் அனுப்பும் செய்தியே இந்த விளைச்சல் வட்டங்கள் என்றும் கூறினர்.

விளைச்சல் வட்டங்கள் சரித்திரத்திற்கு முற்பட்ட காலத்திய புதை குழிகளின்மேல் நிறுவபட்டுள்ள நினைவுச் சின்னங்களின் ( Prehistoric monuments ) அருகில் காணப்பட்டதால் அதற்கு வேறு சக்திகள் உள்ளதாகவும் கூறினர்.

இதுபோன்று விளைச்சல் வட்டங்கள் குறித்து இன்னும் ஒரு தீர்க்கமான முடிவு இல்லாமல் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.

விளக்கப் படங்களை திரையில் காட்டி அருமையான ஆங்கிலத்தில் தன்னுடைய சொற்பொழிவை முடித்துக்கொண்டான் ஏபெல். அதைத் தொடர்ந்து கேள்வி நேரத்தில் எங்களது சந்தேகங்களைத் தீர்த்தான்.

அதைத் தொடர்ந்து பிலிப் ஸ்டோக்கோ இந்தோனேசியா அச்சே மாநிலத்தில் அவன் தொடங்கிய சர்வதேச காப்புறுதி திட்டம் ( Universal Insurance Coverage ) பற்றி புள்ளி விவரங்களுடன் விளக்கினான்.

ரூப் கிஷன் இங்கிலாந்து நாட்டின் இரண்டாம் எலிசெபெத் மகாராணியின் பொன்விழாவில் கலந்துகொள்ள வந்த வெளிநாட்டு விருந்தினரை அழைத்துவர தான் BMW 2000 ஒட்டி தொண்டனாக பணிபுரிந்த சுவையான சம்பவத்தை படங்களுடன் விளக்கி பேசினான்.

சுரிந்தர் லெஸோதொ நாட்டிலிருந்து தென் ஆப்பிரிக்காவுக்கு சுரங்கம் வழியாக தண்ணீர் கொண்டுசெல்லும் உலகின் மிகப் பெரிய தண்ணீர் மாற்றும் திட்டம் ( world’s largest water transport project ) பற்றியும் அதில் தனது பங்கு குறித்தும் விளக்கப் படங்களுடன் பேசினான்.

ஊஸ்காரி மும்பையில் ஏய்ட்ஸ் நோயாளிகளுடன் தன்னுடைய 15 வருட அனுபவம் பற்றி பேசினான்.

அதன்பின் இரவு விருந்து நள்ளிரவையும் தாண்டியது!

இரண்டாம் நாள் காலையில் புகழ்பெற்ற சாளார் ஜுங் அருங்காட்சியகம்  ( Salar Jung Museum )சென்றோம். இது ஹைதராபாத்தில் உள்ளது. சரித்திரப் புகழ்வாய்ந்தது.உலகின் பல நாடுகளிலிருந்து அபூர்வமான பொருட்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. சாலார் ஜுங் குடும்பத்தினர் நிஜாமுக்கு பிரதமர்களாகப் பணிபுரிந்துவார்கள். இவர்களில் மூன்றாம் சாலார் ஜுங் நவாப் மீர் யூசூப் அலி கான் என்பவர்தான் உலகெங்கும் சென்று பொருட்களைத் தேடி சேகரித்துள்ளார். இங்கு மொத்தம் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒரு தனி நபரின் முயற்சியால் இது உருவாக்கப்பட்டது வியப்புக்குரியதே!

அன்று மதியம் கோல்கொண்டா கோட்டை எதிரிலுள்ள கால்ஃப் மைதான விடுதியில் விருந்து உண்டோம்.

இரவும் நள்ளிரவைத் தாண்டி கழித்து மகிழ்ந்தோம்.

மறுநாள் எங்கும் செல்லவில்லை. மாலையில் சிலர் திரும்பலாயினர்.

நாங்கள் இருவரும் அன்றைய இரவை சம்ருதியின் வீட்டில் கழித்து விட்டு காலையில் விமான்மூலம் மதுரை சென்றோம்.         டாக்டர் செல்லப்பா கார் அனுப்பியிருந்தார். அதில் காரைக்குடி சென்று அன்றைய இரவை அவருடன் கழித்துவிட்டு,காலையில் திருப்பத்தூர் வழியாக சிதம்பரம் சென்றோம். நான் பிறந்த கிராமமான தெம்மூரில் மூன்று நாட்கள் தங்கிவிட்டு சென்னையில் அண்ணன் மகள் சில்வியா வீட்டில் இரண்டு நாட்கள் கழித்தபின் ஜெட் விமானமூலம் சிங்கப்பூர் திரும்பினோம்.

( முடிந்தது )

 

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 97 உன் இன்னிசை எதிரொலி .. !மருமகளின் மர்மம் -11
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

12 Comments

  1. Avatar
    ஜெயஸ்ரீ ஷங்கர். says:

    அன்பின் டாக்டர் ஜி.ஜான்சன் அவர்களுக்கு,

    புல்லால் புள்ளி வைத்த கோலங்கள் கலை நயத்தோடு, ஈடுபாட்டோடு அமைந்த உழைப்பின் பலனைச் சொல்லாமல் சொல்கிறது. மருத்துவம் அல்லாத விஷயம் அதுவும் விளைச்சல் வட்டம் பற்றிய பல அறிய விஷயங்களைச் சொன்னதுடன்,
    தங்களது ‘ஒன்று கூடல்’ நினைவுகளின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி. ‘தெம்மூர்’ பற்றியும் இதற்கு முன்பு
    விவரித்து எழுதி இருந்தீர்கள். தெரிந்து கொள்ளப் பல விஷயங்கள் இருந்தன.
    நன்றி.
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

  2. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள ஜெயஸ்ரீ ஷங்கர் அவர்களுக்கு வணக்கம். விளைச்சல் வட்டம் படித்து பாராட்டு தெரிவித்தமைக்கு நன்றி. அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  3. Avatar
    புனைப்பெயரில் says:

    அருமை டாக்டர் திரு.ஜா அவர்களே.
    விளைச்சல் வட்டம் பற்றி சென்னை தமிழ் அமெரிக்கன் மனோஜ் நைட் சியாமளன் தனது SIGNS ஹாலிவுட் படத்தில் கதையாடியிருப்பார்.
    உங்களது இந்த தொடரில் அந்த பிரிட்டிஷ் ராணிகளின் விருந்தினருக்கு கார் ஓட்டிய அனுபவத்தை அதிகம் பகிர்ந்திருக்கலாம். எவ்வளவு உயர்வாய் போனாலும் ஏதோ ஒரு மூலையில் நம்முள் அந்த அடிமைத்தனம் இருக்கிறதா என்ற மன ஆய்வை உங்களை விட இன்னொருவரால் கேட்டு அலசியிருக்க முடியாது, அது தொடர்பாக மேலும் தகவல்கள் இருந்தால் பகிருங்களேன்.
    மேலும், ஒரு சிறு சந்தேகம், உங்கள் குழுமம பிரேயருடன் ஆரம்பித்தது என்றதும், அதிகமான கிறிஸ்துவ பெயர்கள் இருப்பது, சி எம் சி மதம் சார்ந்த சேர்ப்புகள் நடத்தியதா என்றும் எழுதலாமே… பாரபட்சமின்றி கேள்விகளை எதிர்கொண்டு எழுதுவதால் இதெல்லாம் கேட்கிறேந் விடைகளை தெரிந்து கொள்ளலாம் என்று.

  4. Avatar
    Dr.G.Johnson says:

    கருத்துக்கு நன்றி திரு சுப்ரபாரதிமணியன் அவ்ர்களே…அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  5. Avatar
    பவள சங்கரி says:

    அன்பின் திரு மரு. ஜான்சன் அவர்களுக்கு,

    //அறிவார்ந்த முறையில் விளக்க இயலாத ஒரு சக்தியால் ( Paranormal ) விளைச்சல் வட்டம் உருவாகிறது என்று வேறொரு சாரார் கருதினர். இவர்களில் பறக்கும் தட்டு மீது நம்பிக்கைக் கொண்டோர் ( Ufologist ), முரண்படு கருத்துடையோர் ( Anomalist ) போன்றோர் அடங்குவர்.//

    மிகச் சுவையான தகவல்கள் அடங்கிய வித்தியாசமான பதிவு. வாழ்த்துகள்.

    அன்புடன்
    பவள சங்கரி

  6. Avatar
    ஷாலி says:

    கடந்த 30 டிசம்பர் 2013 ல் கலிபோர்னியாவுக்கு அருகில் உள்ள கோதுமை வயலில் ஒரு விசித்திரமான பயிர் வட்டம்( Crop Circle ) 318 அடி பரப்பளவில் காணப்பட்டது. அதில் 192 என்ற சங்கேத எண் பிரெய்லி முறையில் அமைந்திருந்தது.ஏராளமான மக்கள் பார்த்தனர்.இது வேற்று கிரக ஏலியன்கள் வந்து இந்த விசித்திர பயிர் வட்டத்தை செதுக்கி இருப்பதாக நம்பினார்.பயிர் வட்ட ஆராய்ச்சியாளர்களும் இதில் உண்மை இருப்பதாக உறுதிப்படுத்தினர்.

    ஐந்து நாட்கள் சென்ற பிறகு பயிர் வட்டத்தை செதுக்கிய ஏலியன்? ஸ்மார்ட் செல்போனிற்க்கு பிராசசர் சிப் உற்பத்தி செய்யும் NVIDIA நிறுவனத்தினர்,தங்கள் புதிய பிராசசர் TEGRA 4 அறிமுகப் படுத்துவதற்காக அந்த பிராசசர் வடிவில் பயிர் வட்டத்தை இங்கிலாந்து நாட்டு Crop Circle Artist கள் உதவியுடன் செதுக்கியதாக அறிவித்தனர்.
    http://techcrunch.com/2014/01/05/nvidia-crop-circle/

    டாக்டர் ஸார்! உங்களின் ஒன்றுகூடலுக்கு நான் தான் முதல் கருத்தைச் சொல்லி ஒரு பாட்டையும் போட்டேன்.எனக்கும் ஒரு நன்றி சொல்லக்கூடாதா? பரவாயில்லை விடுங்க ஸார்,நமக்குள்ளே நன்றி தேவையில்லைதான்.

  7. Avatar
    Dr.G.Johnson says:

    மன்னிக்கணும் திரு ஷாலி அவர்களே. எப்படியோ அதுபற்றி கருத்துகூறி நன்றி சொல்ல தாமதமானது. ஆமாம் .எங்களுக்கு பேரப்பிள்ளைகள் இருந்தாலும், இன்றும் அன்று மாணவர்களாக இருந்த உணர்வே இன்றும் மேலோங்குகிறது. அதனால்தான் அந்த ” அவன் ” , ” அவள் “. அப்படிச் சொல்வதிலும் ஓர் இன்பம் உள்ளது. Crop Circle பற்றி latest தகவல் தந்துள்ளீர்கள். அதற்கும் நன்றி. இது நமக்கு புது செய்திதான். ஆனால் இதுபோன்ற விளைச்சல் அல்லது பயிர் வட்டம் இந்தியாவில் இதுவரை வந்ததாகத் தெரியவில்லை..அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  8. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள திரு புனைப்பெயரில் அவர்களே. விளைச்சல் வட்டம் பற்றிய தகவலுக்கு நன்றி. நீங்கள் சில ஐயங்கள் எழுப்பியுள்ளீர்கள். அவற்றுக்கான விடைகள்

    !. எலிசபெத் மகாராணியின் பொன்விழாவுக்கு இலவசமாக காரோட்டிகள் அழைக்கப்பட்டனர். அதில் யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம். ஆனால் அதற்கு மருத்துவ பரிசோதனை, நேர்முகத் தேர்வு, இரண்டு வார பயிற்சி தரப்படும். ஒரேயொரு சலுகை அவர்கள் விழா.நடைபெறும் அரங்கினுள் எப்போதும் சென்று வரலாம். என் நண்பன் ரூப் கிஷன் ஒரு அனுபவத்துக்காக அதில் சேர்ந்து கார் ஒட்டியுள்ளான். இது அடிமைத்தனம் இல்லை. இவன் காஷ்மீர் பிராமணன். சிறந்த தேச பக்தன். அவன் மீரா நரசிம்மன் என்பவளை திருமணம் செய்துள்ளான். இவள் டி.வி.ஏஸ். ஐயங்கார் குடும்ப பேத்தி. இவளும் என் வகுப்புதான். இவர்கள் இருவரும் இங்கிலாந்திலேயே குடியேறிவிட்டனர். அடுத்த கேள்விக்கு விடை தொடரும்….டாக்டர் ஜி. ஜான்சன்.

  9. Avatar
    Dr.G.Johnson says:

    திரு புனைப்பெயரில் அவர்களே, வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி கிறிஸ்துவ மருத்துவர்களை முதலில் பெண் மருத்துவர்களை உருவாக்க ஒரு அமெரிக்கப் பெண்ணால் உருவாக்கப்பட்டது. அதன் பின்புதான் ஆண்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்

    அப்போது . இந்தியாவின் பல மாநிலங்களில் மிஷன் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டன. அவற்றில் பணியாற்ற மருத்துவர்கள் தேவைப் பட்டனர்., எல்லா திருச்சபைகளும் ஒன்றுகூடி வேலூர் கல்லூரிக்கு வருடந்தோறும் நிதியுதவி செய்ய முன்வந்தன. அதன் அடிப்படையில் அந்தந்த சபை நடத்தும் மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர்களை வேலூரில் பயிற்சி தர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன் வழியாக வேலூர் இந்தியாவின் எல்லா மிஷன் மருத்துவமனைகளுக்கு மருத்துவர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டது. இன்றும் ஈடுபடுகிறது.

    ஒரு சபை ஒரு சிறந்த மாணவனை அல்லது மாணவியை பரிந்துரை மட்டுமே செய்யலாம். அவனோ அவளோ வேலூர் நடத்தும் நுழைவுத் தெருவில் வெற்றி பெற்றால்தான் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப் படுவார்.
    நுழைவுத் தேர்வு சென்னை, திருவனந்தபுரம், பம்பாய், டெல்லி, கல்கத்தா, சிங்கப்பூர் ஆகிய இடங்களில் நடைபெறும். அதில் தகுதியுடைய யார் வேண்டுமானாலும் எழுதலாம். சுமார் 5000 பேர்கள் இதில் பங்குபெறுவர். 500 கேள்விகள் கேட்கப்படும். அதில் தேர்ச்சி பெரும் அத்தனை பேர்களில் மிகவும் சிறந்தவர்கள் கண்டுகோள்ளப்பட்டு, அவர்களில் சபைகளால் பரிந்துரை செய்யப்பட்டவர்கள் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.

    ஒரு ஆண்டில் 60 பேர்கள்தான் தேர்வு செய்யப்படுவார்கள். 35ஆண்கள். 25 பெண்கள். நேர்முகத் தேர்வு 3 நாட்கள் நடைபெறும் தேர்வுக்கு 70 ஆண்களும் , 50 பெண்களும் அழைக்கப்படுவார்கள். இவர்களில் பாதி பேர்கள் மட்டும் தேர்வு பெறுவார்கள். பொதுவாக திறமைக்கு முதலிடம் தரப்படும். அந்த அடிப்படியில் என் வ்குப்பில் 4 பிராமண பையன்களும், 4 பிராமண பெண்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

    ஒன்றுகூடல் நிகழ்வின் வகுப்பு தலைவன், மாற்று சிறுநீரக நிபுணன் கணேஷ் கோபலகிருஷ்ணன் கூட பிராமணன்தான்.

    எல்லா நிகழ்வுகளையும் நாங்கள் அனைவரும் ஜெபத்தோடுதான் தொடங்குவோம். அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  10. Avatar
    புனைப்பெயரில் says:

    டாக்டர் திரு.ஜான்சன் பதில் அருமையான ஒரு வரலாற்றுப் பதிவு.

  11. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள பவள சங்கரி, விளைச்சல் வட்டம் இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. இதை சிலர் தாங்களே செய்ததாக சொல்லி, தங்களின் பெயர் பிரபலமாக வேண்டும் என்று முயல்கின்றனர். அவர்கள் சொல்வதிலும் ஆதாரம் இல்லை. இதன் உண்மையை எதிர்காலத்தில் நிச்சயம் அறிந்துகொள்ளலாம் என்றே நம்புகிறேன்.. இந்த புதுமையான பொருள் மீது தாங்கள் ஆர்வம் கொண்டு படித்து கருத்து கூறியதற்கு நன்றி….மீண்டும் சந்திப்போம் திண்ணையில்!….அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *