நீங்காத நினைவுகள் – 29

This entry is part 23 of 29 in the series 12 ஜனவரி 2014

      ராஜீவ் காந்தி இந்தியாவின் பிரதமராக இருந்த போது தில்லி நிர்வாகத் துறை (Delhi Administration) ஒரு போட்டியைப் பொதுமக்களுக்கும் கல்வியாளர்களுக்கும் ஆங்கில நாளிதழ்களில் அறிவித்திருந்தது. அது இந்திய விடுதலைப் போராட்டம் தொடர்புள்ள போட்டி ஆகும். 1857-ல் நிகழ்ந்த முதல் சிப்பாய்க் கலகத்தில் தொடங்கி இந்தியா விடுதலை அடைந்தது வரையிலான வரலாறாக அந்தப் படைப்பு இருத்தல் வேண்டும் என்பது முக்கியமான நிபந்தனை. பள்ளி இறுதி மாணவர்களுக்குப் பாடநூலாக வைக்கத்தக்க தகுதியிலும் நடையிலும் அது இருத்தல் வேண்டும் என்பதும் மற்றொரு நிபந்தனை. அதில் பங்கேற்க விரும்பிய நான் உடனே தில்லி நிர்வாகத்துறைத் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதினேன்.

’ஒரு பயனுள்ள போட்டியை அறிவித்திருக்கிறீர்கள். இக்காலத்து இளந்தலைமுறையினர்க்கு இந்தியா அந்நியர் ஆதிக்கத்திலிருந்து விடுதலை யடைந்தது என்கிற செய்தி தெரிந்திருக்கிறதே ஒழிய விடுதலைப் போராட்ட வரலாறு தெரியவில்லை. ஆனால் இந்த நூலை 1857 இன் சிப்பாய்க் கலகத்திலிருந்து தொடங்கச் சொல்லி யிருக்கிறீர்கள். இது சரியன்று என்பது என் தாழ்மையான கருத்து. தமிழ்நாட்டில் தான் முதல் சிப்பாய்க் கலகம் வேலூரில் 1806 இல் நடந்தது. அதற்கும் முன்னாலிருந்தே விடுதலைப் போர் ஆங்காங்கு நடந்துகொண்டுதான் இருந்தது. எனவே அந்நிய நாட்டார் நம் நாட்டில் காலடி வைத்த நாளிலிருந்து தொடங்கி, என்ன காரணங்களாலும், என்ன தவறுகளாலும், சூழ்நிலைகளாலும் நாம் இங்கிலாந்துக்கும் ஏனைய நாடுகளுக்கும் அடிமைப்பட்டோம் என்பதை நம் இளந் தலைமுறையினர்க்குக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.  அப்போதுதான் மீண்டும் அடிமைப் படும் தவற்றை அவர்கள் செய்யாதிருப்பார்கள்.  எனவே இந்தப் போட்டியை அந்நியர்களின் வருகையிலிருந்து தொடங்குமறு அறிவித்தலே நன்று.’

பதிவு அஞ்சலில் அனுபிய இதற்குப் பதினைந்து நாள்கள் வரை பதில் இல்லை. எனவே, ராஜீவ் காந்திக்கு இக்கடித நகலை அனுப்பி, எனது கோரிக்கையைத் தில்லி நிர்வாகத்தை ஏற்கச் செய்யத் தலையிடுமாறு வேண்டி மிகச் சிறிய கடிதமும் உடன் வைத்தேன். ஒரே வாரத்தில் அவரிடமிருந்து பதில் வந்துவிட்டது.

‘நீங்கள் நினைப்பது சரிதான். தில்லி நிர்வாகத்துக்கு அதை ஏற்குமாறு எழுதிவிட்டோம்,’ என்றது அக்கடிதம். அன்றே தில்லி நிர்வாகத்திலிருந்தும் என் யோசனையை ஏற்றதாய்க் கடிதம் வந்தது.

நான் அப்போட்டியில் கலந்து கொள்ளச் சில நூல்களை வாங்கிப் பயன்படுத்தி, நூலை எழுதிப் போட்டியிலும் கலந்துகொண்டேன்.  ஆனால் எனக்கு மூன்றாம் பரிசு கூடக் கிடைக்கவில்லை என்பது வேறு விஷயம்.  அதனால் என்ன! அதற்காக நான் வாங்கிய நூல்கள் சில ஆண்டுகள் கழித்துப் பொன்விழாக் கொண்டாடிய கல்கி வார இதழ் அறிவித்த வரலாற்றுப் புதினப் போட்டியில் கலந்து கொண்ட எனக்கு முதல் பரிசு கிடைக்க வகை செய்தன. நாம் அடையும் எந்த விஷயஞானமும் வீண்போகாமல், ஏதேனும் ஒரு காலகட்டத்தில் பயன்படும் என்பது அதிலிருந்து புரிந்தது. புத்தகங்கள் வாங்குவதில் செலவு செய்த பெருந்தொகை வீணானதே என்பதாய் அப்போது விளைந்திருந்த ஏமாற்ற்ம் இப்போது பறந்து போனது.

இதைப் பற்றிச் சொன்னதன் நோக்கம் இது மட்டுமன்று.  பொது மக்களில் எவளோ ஒருத்தி எழுதிய கடிதத்தை அசட்டை யின்றிப் படித்து அதற்குப் பதிலும் எழுத முற்பட்ட ராஜீவ் காந்தியின் பாங்கைப் பற்றிச் சொல்லவே இது பற்றி எழுதலாயிற்று. தலைமையில் உள்ளவர் பொறுப்புடன் இவ்வாறு நடக்கும் போது, அவரின் கீழ் பணி புரிகிறவர்களும் அதே பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டியதாகிறது.

இதே போல் இந்திரா காந்தி அம்மையாருக்கும் கடிதங்களுக்குப் பதில் எழுதும் பண்பு இருந்தது. (அப்போதைய) பம்பாயிலிருந்து ஃபில்ம் இண்டியா – FILM INDIA – என்றோர் ஆங்கில மாத இதழ் வந்துகொண்டிருந்தது. பின்னாளில் அது மதர் இண்டியா – MOTHER INDIA      –  என்று பெயர் மாற்றம் கொண்டது. அதன் ஆசிரியரான பாபுராவ் படேல் அவர்களின் கேள்வி-பதில் பகுதி அதில் சுவையான ஒன்று. அவர் ஒரு சமயம்  ‘பிரதமருக்குக் கடிதம்’ எனும் புதிய பகுதி ஒன்றைத் தொடங்கினார். இந்தியப் பிரதமரின் தவறுகளைச் சுட்டிக்காட்டியோ, அவருக்கு யோசனைகள் சொல்லியோ, அரசின் செயல்பாடுகள் மீது தங்களுக்குள்ள மனத்தாங்கலைத் தெரிவித்தோ பொதுமக்கள் கடிதம் எழுதலாம் என்று ஆசிரியர் அறிவித்திருந்தார். ஏற்கப்படும் கடிதங்கள் மதர் இண்டியாவில் வெளியாகும் என்றும் தெரிவித்திருந்தார்.  அதில் நானும் பங்கேற்றேன்.  அதில் இந்திய அரசின் மொழிக்கொள்கையைச் சாடி யிருந்தேன். இந்தி இந்தியாவின் பெரும்பான்மையினரின் மொழியன்று என்பதை ஆதாரபூர்வமான புள்ளி விவரங்களுடன் எடுத்துக் காட்டியிருந்தேன்.  28 விழுக்காட்டினரின் தாய்மொழியைப் பல்வேறு பிற மொழிகள் பேசும் மீதமுள்ள 62 விழுக்காட்டினர் மீது தேசியம் என்பதன் பெயரால் திணிப்பது நியாயமாகாது என்பதைச் சுட்டிக்காட்டி யிருந்ததோடு, என்றென்றும் ஆங்கிலமே இந்தியாவின் ஆட்சிமொழியாய்த் தொடர்வதே அனைத்து மக்களூக்கும் சமமான நியாயம் வழங்கும் ஓர் ஏற்பாடாக இருக்கும் என்பதையும் அதில் எடுத்துக் காட்டியிருந்தேன்.

1965 –இல் சென்னையில் நடந்த இந்திஎதிர்ப்புக் கலவரத்தின் போது அமெரிக்காவில் இருந்த இந்திரா காந்தி தமது பயணத்தை ரத்துச் செய்துவிட்டுச் சென்னைக்கு ஓடோடி வந்து கவலையுடன் மாணவர்களையும், சில பிரமுகர்களையும், அரசியல் தலைவர்களையும் சந்தித்துப் பேசி ஆறுதல் கூறியதையும் அதில் நினைவுபடுத்தி யிருந்தேன். இந்தி பேசாத மக்கள் மீது அம்மொழி திணிக்கப்பட மாட்டாது என்று அவர் அளித்த வாக்குறுதியையும் ஞாபகப்படுத்தினேன். இப்போது நாட்டில் பிரதமராக ஆனதும் ஆட்சி மொழி விஷயத்தில் மவுனமாக இருப்பது முறையா என்றும் கேட்டிருந்தேன்.

‘இந்திய மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாக இருப்பதுதான் நாட்டுக்குகுக் கவுரவமெனில், நீங்கள் உங்கள் மகன்களை அயல் நாட்டில் ஆங்கிலப் படிப்புப் படிக்க அனுப்பியுள்ளீர்களே, அது சரியா? உங்களுக்கு ஒரு நியாய்ம், நாட்டு மக்களுக்கு வேறு நியாயமா?’ என்பவை அக்கடிதத்தில் அடிக்கோடிடப்பெற்ற கேள்விகளாகும்.

மதர் இண்டியா ஆசிரியர் பாபுராவ் படேல் அக்கட்டுரையை ஏற்றதோடு அது எழுச்சியும் துணிச்சலும் (spirited and bold) மிக்கது என்று தமது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அக்கட்டுரை மதர் இண்டியாவில் வெளிவருவதற்கு முன்னால் அவர் திடீரென்று தேர்தலில் நின்று பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். ஆனால், அப்பதவியை ஏற்ற் மறுவாரம், அவர் ’உங்கள் ‘இந்திரா காந்திக்குக் கடிதம்’ எனும் கட்டுரையை மதர் இண்டியாவில் வெளியிட இயலவில்லை.  அதை இத்துடன் திருப்புகிறேன்’ எனும் குறிப்புடன் என் கட்டுரையைத் திருப்பி யனுப்பி யிருந்தார்! (இதை வைத்து, அவர் காங்கிரஸ் வேட்பாளராய்த்தான் போட்டியிட்டிருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.)

’இவ்வளவுதானா உங்கள் பத்திரிகை நேர்மை?’ என்று எண்ணியதில் சே என்று வந்தது.  ‘ஏற்கெனவே ஏற்றுக்கொண்ட கட்டுரையை இப்போது ஏன் திருப்பி யனுப்பியுள்ளீர்கள் என்பதைத் தெளிவாய்ப் புரிந்துகொள்ள முடிகிறது! அப்போது பத்திரிகை ஆசிரியராக மட்டுமே இருந்த நீங்கள் இப்போது எம்.பி. ஆகிவிட்டீர்கள். எனவே ஆட்சிமொழி விஷயத்தில் உங்களால் நேர்மையாக நடந்துகொள்ள முடியவில்லை. அரசியல்வாதிகளைச் சந்தர்ப்பவாதிகள் என்று சாடிக்கொண்டிருக்கும் நீங்களும் கடைசியில் ஒரு சந்தர்ப்பவாதிதான். என் துணிச்சலைப் பாரட்டிய உங்களால் துணிச்சலோடு என் கட்டுரையை வெளியிட முடியவில்லை’ என்று அவருக்குக் கடிதம் எழுதி என் எரிச்சலைத் தணித்துக் கொண்டேன்.  நான் நினைத்தபடியே அவரிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை. அதன் பின் அக் கடிதத்தை இந்திரா காந்தி அவர்களுக்கு நேரடியாகவே அனுப்பிவைத்தேன்.

என்ன ஆச்சரியம்! இரண்டே வாரங்களுக்குள் அவரிடமிருந்து பதில் வந்தது. அவர் அதில் கையெழுத்திடா விடினும், அதை அவர் படித்திருந்தது கடித வாசகத்திலிருந்து தெரிந்தது. இந்திரா காந்தியின் தனிச்செயலர் அக்கடிதத்தை எழுதியிருந்தார். ‘ஆட்சி மொழிபற்றிய உங்கள் எண்ணங்களைத் தம்மோடு பகிர்ந்து கொண்டமைக்குப் பிரதமர் நன்றி தெரிவிக்கச் சொல்லி என்னைப் பணித்துள்ளார்’ என்று அக்கடித வாசகம் அமைந்திருந்தது.

ராஜீவ் காந்தியின் கடிதத்தையும், இந்திரா காந்தியின் கடிதத்தையும் நினைவு கூர்ந்தமைக்குக் காரணம் பொதுமக்களிடமிருந்து வரும் தனிப்பட்ட கடிதங்களுக்குக் கூடப் பதில் எழுதுவது நேரு குடும்பத்தினரின் பண்பாக இருந்து வந்துள்ளதாய்த் தோன்றுவதைச் சொல்லத்தான்.  மிகப் பெரிய மனிதர்கள் மிகச் சாதாரணர்களையும் இவ்வாறு மதிக்கும் போது, சில சாதாரணர்கள் சிலரை மதிக்காமல் இருப்பது பற்றிய மனக்குமைச்சலைப் பகிர்ந்துகொள்ளவும்தான்.

(இந்திரா காந்தியையும் ராஜீவ் காந்தியையும் இவ்வாறு பாராட்டியதை வைத்து அக்குடும்பத்தின் அபிமானி என்பதாய்த் தப்புக் கணக்குப் போடவேண்டாம்.  வெள்ளையரின் ரௌலட் சட்டத்துக்கு இணையான  கொடுஞ்சட்டமும் ­ – அதாவது, காவல்துறையினர் யாரை வேண்டுமானாலும் கைது செய்து, விசாரணையின்றிச் சிறையில் வைக்கலாம், வக்கீல் வைத்து வாதாட அவர்களுக்கு உரிமை கிடையாது என்று அவர் இயற்றிய சட்டமும் –   இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பின் எண்ணிறந்த சீக்கியர்கள் காங்கிரஸாரால் கொல்லப்பட்ட போது, ‘ஒரு பெரிய  மரம் சாய்ந்து விழும்பொழுது, நிலம் அதிரவே செய்யும்’ என்ற ராஜீவ்காந்தியின் மெத்தனமான பதிலும் எவர்க்கும் உடன்பாடானவையாக இருக்க முடியா.)

இதே போல், அமரர் ம.பொ.சி(வஞான கிராமணி) அவர்களும் எனக்குக் கடிதம் என்று எழுதாவிடினும் தொலைபேசியில் பந்தா இல்லாமல் தாமாகவே பேசியுள்ளார். ‘விடுதலைப் போரில் தமிழகம்’ எனும் அவர் எழுதியுள்ள, இரண்டு பகுதிகள் கொண்ட, பெரிய நூலை வாங்கிவர அவருடைய தனிச் செயலரிடம் நான் ஓர் ஆளை அனுப்பிய போது, அங்கிருந்த ம.பொ.சி. அவர்கள் புத்தகங்களை வாங்க அனுப்பியது யார் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்ட பின் தாமாகவே என்னோடு தொலைபேசினார்.

தாம் இன்னார் என்பதை முதலில் தெரிவித்து, என் வணக்கத்தைச் செவிமடுத்த பின்னர், ‘இவ்வளவு விலை கொடுத்துப் புத்தகங்களை வாங்கும் நீங்கள் நாட்டுப்பற்று மிக்கவர் என்று தோன்றுகிறது. உங்களை நான் பாராட்டுகிறேன, அம்மா!’ என்றார்.

‘உங்களைப் போன்ற பெரிய தேசபக்தர்களோடு ஒப்பிட்டால், நானெல்லாம் ஒன்றுமே இல்லை, அய்யா!’ என்றேன்.

’அப்படி எல்லாம் சொல்லாதீர்கள்.  நீங்கள் அனுப்பிய ஆள்தான் நீங்கள் இன்னார் என்பதைச் சொன்னார்.  உங்கள் பெயரை அடிக்கடி பத்திரிகைகளில் பார்த்திருக்கிறேன்.  ஆனால் படிததது கிடையாது, அம்மா.  மன்னித்துக்கொள்ளுங்கள். நான் கதைகள் படிப்பதில்லை.’

‘அய்யோ! அப்படியெல்லாம் சொல்லாதீர்கள்.  கதைகள் படிப்பதைவிடவும் உங்கள் புத்தகங்களைப் படிப்பதுதான் சிறந்தது.   பயனுள்ளது.’

‘ஓ! அப்படியா!’ என்று சிரித்த பின் அவர் தொடர்பைத் துண்டித்தார்.

சாதாரணர்களுக்குக் கடிதம் எழுதவும் அவர்களுடன் பேசவும் செய்யும் பெரிய மனிதர்களைப் பற்றிச் சொல்லும் போது முந்தைய குடியரசுத் தலைவர் திரு அப்துல் கலாம் அவர்களைப் பற்றிச் சொலாதிருக்க முடியாது. போயட் (POET) எனும் ஆங்கில இதழில் தொடராக வெளிவந்த ஜீசஸ் க்ரைஸ்டின் கதை (The story of Jesus Christ) எனும் நெடிய மரபுக் கவிதையையும், அதன் பின் தொடராக வந்த Pearls from the Prophet எனும் நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள் அடங்கிய மரபுக் கவிதைகளையும் அவர் குடியரசுத் தலைவராக இருந்த போது பாராட்டி எனக்குக் கடிதம் எழுதினார்.  என்னால் நம்பவே முடியவில்லை. ஒரு நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்தும் துளியும் பந்தா இல்லாமல் ஒரு சாதாரணக் குடிமகளுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதிய அவரது பெருந்தன்மையை என்ன சொல்ல!

………

Series Navigationஜாக்கி சான் 24. தொடர் தோல்விகள்மலைகள் பதிப்பகம் வெளியிடும் இரண்டு புத்தகங்கள்
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

2 Comments

  1. Avatar
    புனைப்பெயரில் says:

    வரும் தனிப்பட்ட கடிதங்களுக்குக் கூடப் பதில் எழுதுவது நேரு குடும்பத்தினரின் பண்பாக –> இதில் குடும்ப கலாச்சாரம் எங்கிருந்து வந்தது…?

  2. Avatar
    Ramprasath says:

    அன்பின் புனைப்பெயரில்,

    இந்த ஆக்கத்திற்கு தொடர்பில்லாத இடுகை இது. ஆதலால் ஆக்கத்தின் ஆசிரியர் இதனை பொருட்படுத்த வேண்டாமெனக் கேட்டுக்கோள்கிறேன். தாங்கள் யாரென்று தெரியாததால் இந்த ஆக்கத்தை பயன்படுத்திக்கொள்ள நேர்ந்தது குறித்து வருந்துகிறேன்.

    உங்களுக்கு நினைவிருக்கலாம். 2012 ல் பொறுப்பு என்ற தலைப்பில் என் ஒரு சிறுகதை திண்ணையில் வெளியானது. அதற்கு நீங்கள் ஒரு இடுகை இட்டிருந்தீர்கள். ‘இக்கதையை முதலாகக் கொண்டு நீங்கள் தொடர்கதை எழுதலாம்’ என்று. தொடர்ந்து நான் எழுதி, அந்தக் கதை ஒரு நாவலாக உருவம் பெற்று ‘காவ்யா பதிப்பகம்’ வாயிலாக நாவல் தொகுதி புத்தகமாக வெளியாகியிருக்கிறது என்ற செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

    ‘ஒப்பனைகள் கலைவதற்கே’ என்ற தலைப்பிலான அந்த நாவல் புத்தகக்கண்காட்சியில் கிடைக்குமிடம்,

    காவ்யா பதிப்பகம் – ஸ்டால் 491 & 492
    டிஸ்கவரி புக் பேலஸ் – ஸ்டால் 334
    நியூ சென்ச்சுரி புக் ஹவுஸ் (ஸ்டால் எண் நினைவில் இல்லை)

    என் மின்னஞ்சலுக்கு ஒரு அஞ்சல் அனுப்ப இயலுமா? உங்களிடம் சில தகவல்களை பகிர விடும்புகிறேன்.
    எனது மின்னஞ்சல் ramprasath.ram@googlemail.com

    நட்புடன்,
    ராம்ப்ரசாத்
    http://ramprasathkavithaigal.blogspot.in/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *