11.
பைக்கிலிருந்து இறங்கியதும் சோமசேகரனும் நிர்மலாவும் அந்தப் பெரிய ஓட்டலுக்குள் நுழைந்தார்கள்.
“அதோ, அந்த மூலை டேபிளுக்குப் போய்டலாம்மா! ரெண்டே பேருக்கானது. வாம்மா,” என்ற சோமசேகரன் சொல்ல, “சரி, மாமா,” என்றவாறு நிர்மலா அவரைப் பின்தொடர்ந்தாள்.
இருவரும் உட்கார்ந்ததும் வந்த பணியாளிடம், முதலில் இரண்டு குலாப் ஜாமுன், பின்னர் இரண்டு மசால் தோசை என்று, அவளது சம்மதம் கேட்டுப் பணித்தபின், சோமசேகரன் தொண்டையைக் கனைத்துக்கொண்டார்.
“முதல்ல, நான் என்னோட கதையைச் சொல்லிடறேம்மா. . . கற்பூரம் வாங்கப் போன உன்னைத் தேடிக்கிட்டுக் கோவில்லேருந்து வெளியே வந்தேனா? வந்ததுமே, நீ என் பார்வையில பட்டுட்டே. அந்த ரிக்ஷா ஸ்டாண்ட்ல நின்னுட்டிருந்த உன்னையும் உனக்கு எதிர்த்தாப்ல ரொம்ப உயரமா ஒரு ஆளு நின்னு உன்னோட பேசிட்டிருந்ததையும் பாத்தேன். அவன் ஏதோ மிரட்டுற மாதிரியும், நீ பயப்பட்ற மாதிரியும் தெரிஞ்சிச்சு. . . உன்னோட கழுத்திலேர்ந்து நெக்லேசைக் கழட்டி நீ அவன் கிட்ட குடுத்ததும் தெரிஞ்சுது. எனக்கு ஒரே ஆச்சரிய மாயிடிச்சு. அந்த அளவுக்கு நீ ஏதோ ஒரு சிக்கல்லே மாட்டிக்கிட்டு இருக்கணும்னு புரிஞ்சிச்சு. அதனால நான் அங்கெ இருந்த பெரிய மரத்துக்குப் பின்னால ஒளிஞ்சுக்கிட்டேன். நீ திரும்பிக் கோவில் பக்கமா நடந்தே. அந்த ஆளு சுத்து முத்தும் பாத்துக்கிட்டே நெக்லேசைப் பான்ட் பாக்கெட்ல போட்டுக்கிட்டு ரோடைக் கிராஸ் பண்ணி எதிர்ல இருந்த ஓட்டலுக்குள்ள நுழைஞ்சான். அங்கே பக்கத்துலேயேதானே போலீஸ் ஸ்டேஷன்? ஆட்டோ பிடிச்சு அங்கே போனேன். நல்ல வேளையா இன்ஸ்பெக்டர் இருந்தாரு. எனக்குத் தெரிஞ்சவரு. நெக்லேஸ் கதையை அவரு கிட்ட சொன்னேன். அடுத்த நிமிஷமே அவரு என்னோட கிளம்பி அந்த ஓட்டலுக்கு வந்தாரு. அந்தாளு தனியா உக்காந்து சாப்பிட்டுக்கிட்டிருந்தான். ரெண்டு பேரும் அவன் எதிர்லயே உக்காந்தோம். இன்ஸ்பெக்டரைப் பார்த்ததும் மிரண்டுட்டான்.
‘நவனீதகிருஷ்ணன்! அந்த நெக்லேசை எடுத்துக் குடுத்துடு!’ அப்படின்னு அவர் சொன்னதும் அவன் பாதி செத்துட்டான்.
‘அதாம்ப்பா! எதிர் ப்ளாட்•பாரத்துலே ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி எம் மருமக கிட்டேருந்து வாங்கினியே, அந்த நெக்லேஸ்! உன் பான்ட் பாக்கெட்ல பாரு’ அப்படின்னேனா? உடனே எடுத்துக் குடுத்துட்டான். ‘ப்ளூ •பில்ம், அது இதுன்னுதான் மாட்டிப்பே. இப்ப சங்கிலி பறிக்கிற வேலையிலேயும் இறங்கிட்டியா?’ அப்படின்னரு இன்ஸ்பெக்டர். அப்புறம், ‘இவன் ஒரு பழைய கேடிதான், சார். எங்க லிஸ்ட்ல இருக்கிறவன். பெஸ்ட் ஓட்டல்னு ஒரு ஓட்டல் இருக்கு சிந்தாதிரிப் பேட்டையிலே. அங்கே இவனை மாதிரி இன்னும் சில மோசமான ஆளுங்க இருக்காங்க. அங்கேதான் இவன் வேலையா யிருக்கான். எந்திரிப்பா. ஆட்டோவிலேயே போயிடலாம்,’ னாரு இன்ஸ்பெக்டர். அதே அட்டோவில போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்க் கம்ப்ளெய்ண்ட் எழுதிக் குடுத்தேன். ரெண்டே நிமிஷம் அவன் கூடத் தனியா இருந்த தோதான நேரத்துலே, ‘இத பருப்பா. என் மருமகளை ப்ளாக்மெய்ல் பண்ற வேலை யெல்லாம் வெச்சுக்காதே. நயா பைசா கூடப் பெயராது. அந்தப் பொண்ணு உள்ளது உள்ளபடி எல்லாத்தையும் எங்க கிட்ட சொல்லியாச்சு. தெரிஞ்சுதா?’ அப்படின்னு ஒரு போடு போட்டேன், பாரு, அவன் அப்படியே திகைச்சுப் போயிட்டான்.”
“மாமா! தேங்க்ஸ், மாமா. ஆனா, எப்படி, மாமா, நீங்க அது ப்ளாக்மெயில்னு கண்டு பிடிச்சீங்க?”
“இதுக்குப் பெரிய புத்திசாலித்தனம் வேணுமாம்மா, சகுந்தலா? அவன் மிரட்டிக் கேட்டு, நீயாவே நெக்லேசைக் கழட்டிக் குடுத்திருக்கே! அதுக்கு வேற என்ன காரணம் இருக்க முடியும்? எல்லாம் ஒரு யூகம்தான். . .”
பணியாள் குலாப் ஜாமுன்களையும் மசால் தோசைகளையும் எடுத்துவந்து மேசை மீது பரப்பிச் சென்றார்.
“சாப்பிடும்மா. சாப்பிட்டுக்கிட்டே பேசலாம். இப்ப உன் கதையைச் சொல்லு.”
நிர்மலாவின் கன்கள் கசிந்தன. “இனிப்பு சாப்பிட்டுக்கிட்டே சொல்லக்கூடிய விஷயங்கள் இல்லே, மாமா, அதெல்லாம். ரொம்பக் கசப்பான விஷயங்கள்,” என்று சொன்ன நிர்மலா கண்ணீரூடே அவரை நோக்கிப் புன்னகை செய்தாள்.
“சேச்சே! கண்ணைத் துடைச்சுக்கோம்மா. . .இன்னொண்ணும் உனக்குச் சொல்றேன். எம்புட்டுக் கசப்பான விஷயங்களா யிருந்தாலும் நீ தைரியமா – என்னை உங்கப்பாவா நினைச்சு – சொல்லலாம்மா. கமான்! கண்ட போக்கிரிகளுக்கெல்லாம் பயந்துக்கிட்டு ராத்தூக்கம் இல்லாம உடம்பைக் கெடுத்துக்கிறதை விட எல்லாத்தையும் அப்பா கிட்ட சொல்லிடும்மா. எல்லாம் சரியாயிடும்.”
நிர்மலா சொல்லத் தொடங்கினாள். மிகவும் மெதுவாகத்தான் சாப்ப்¢ட முடிந்தது. பணியாள் இரண்டு முறை எட்டிப் பார்க்கவே இரண்டு ஐஸ் கிரீம்களுக்கும் அவர் பணித்தார்.
நிர்மலா தன்னைப் பற்றி எல்லாவற்றையும் சொல்லி முடித்துவிட்டு, “இவ்வளவுதான், மாமா. இனிமே முடிவு செய்ய வேண்டிடியது நீங்களும் ரமேஷ¤ம்தான்,” என்றாள்.
“நீ இப்ப எங்கிட்ட சொன்ன விஷயமெல்லாம் இப்போதைக்கு நம்ம ரெண்டு பேரோட இருக்கட்டும். அத்தை கிட்ட மூச்சுக்கூட விடாதே. பின்னாடி சொல்லிக்கலாம். இதை ரமேஷ் கிட்ட சொல்லலாமா வேண்டாமாங்கிறதை யெல்லாம் நாம அப்புறமாப் பேசலாம். இப்ப அதைபத்தி வேற யோசிச்சுத் தலைவலியை வரவழைச்சுக்காதே. என்ன? புரிஞ்சுதா? வாழ்க்கையிலே எப்பவும் ஒண்ணு மட்டும் நாம ஞாபகம் வெச்சுக்கணும்மா. எனக்கும் சேர்த்துத்தான் சொல்றேன். உண்மையை எந்தக் காரணத்தைக் கொண்டும் நமக்கு நெருக்கமானவங்க கிட்டேருந்து மறைக்கவே கூடாது. நான் கூட ஒரு சமயம் ஒருததனுக்கு அவனோட ரகசியத்தை அவனோட பொண்டாட்டிகிட்டேருந்து மறைக்கும்படியா யோசனை சொன்னதுண்டு. அது எம்புட்டுத் தப்புன்னு இப்ப தோணுது. . . இப்ப நேரே நாம உங்கம்மாவைப் பார்க்கப் போறோம். சரியா?”
நிர்மலா பெரிதும் உணர்ச்சிவசப்பட்டு அழத் தொடங்கினாள்.
‘அய்யய்ய! கண்ணைத் துடைச்சுக்கம்மா. இது பொது இடம். ஓட்டல்!”
நிர்மலா கண்களைத் துடைத்துக்கொண்டாள். “ஆனா, அந்த நவனீதகிருஷ்ணன் என்னை மிரட்டி நெக்லேஸைப் பிடுங்கினப்ப, நான் உங்க கிட்ட எதையும் சொல்லி யிருந்திருக்க மாட்டேன்கிறதைப் புரிஞ்சுக்கிட்டிருப்பான், மாமா. எல்லாத்தையும் சொல்லி யிருந்தா, இவ ஏன் நகையைக் கழட்டிக் குடுக்கணும்னு யோசிப்பானே?”
“யோசிச்சுக்கிட்டே இருக்கட்டும். அதைப் பத்தி நாம இப்ப யோசிச்சு நம்ம மண்டையை உடைச்சுக்க வேணாம்.’
பில்லுக்கான பணத்தைக் கொடுத்தபின் இருவரும் புறப்பட்டார்கள்.
.. .. .. சிற்றுண்டி, காப்பி யருந்திய பின் எழ எத்தனித்த லூசியைச் சோமசேகரன் கையமர்த்தினார்.
‘ஒரு நிமிஷம்மா,’ என்ற சோமசேகரன் தமது மேசை இழுப்பறையிலிருந்து ஒரு சதுரப் பெட்டியை எடுத்துத் திறந்தார். ‘இந்தாம்மா!’ என்ற அவரது கையில் மினுமினுத்த தங்க அட்டிகையைப் பார்த்து ரமேஷ் திகைத்துப் போனான். லூசியின் விழிகளும் அகன்று ஒளிர்ந்தன.
‘இப்ப எதுக்கு, மாமா? கல்யாணத்தப்ப குடுங்க!’ என்றள்
சோமசேகரன் சத்தமாய்ச் சிரித்தார். ‘இன்னைக்கு நிச்சயதார்த்தம்னு நினைச்சு வாங்கிக்கம்மா!’
லூசி ரமேஷைப் பார்த்தாள்.
‘நீ சொன்னாத்தான் வங்கிப்பா போலிருக்கு, ரமேஷ்! சொல்லுப்பா.’
‘வாங்கிக்க, லூசி!.. .. எப்பப்பா வாங்கினீங்க?’
‘நீ •போன் பண்ணிப் பேசின அஞ்சாவது நிமிஷம்! உம்மிடியார் நகைக்கடை பக்கத்துலதானே?’
லூசி எழுந்து நின்று அதைப் பெற்றுக்கொண்டாள்.
‘நீ அதை லூசி கழுத்தில போடுப்பா.’
‘வேணாம்ப்பா. அவளே போட்டுப்பா.’
‘புதுசா என்ன வெக்கம்? நான் வேணா பாத் ரூமுக்குள்ள பூந்துக்கறேன். மூணு நிமிஷம் உனக்கு டைம் தர்றேன். அதுக்குள்ளே அது லூசி கழுத்தில இருக்கணும்!’ என்றவாறு சோமசேகரன் அப்படியே செய்யவும் செய்தார். அவர் தலை மறைந்ததும் அவன் அதை அவளுக்கு அணிவித்தான்.
‘உங்கப்பாவுக்கு நல்ல ரசனை!’
‘எங்கம்மாவைப் பாத்தியானா, இன்னும் நல்லாவே அவரோட ரசனை புரியும் உனக்கு. எங்கம்மாவும் நானும் பக்கத்துல பக்கத்துல நின்னா பார்க்குற எல்லாருமே அக்கா-தம்பின்னுதான் நினைப்பாங்க.’
‘நான் உங்கம்மாவைப் பார்க்கிறதுன்றதுதான் இப்போதைக்கு இல்லியே?’
சோமசேகரன் திரும்பி வந்ததன் பிறகு கொஞ்ச நேரம் பொதுவாய்ப் பேசிக்கொண்டிருந்து விட்டு இருவரும் விடை பெற்றார்கள்.
.. .. அன்றிரவு வீட்டில் அவரைத் தனியாய்ப் பார்க்க வாய்த்த போது ரமேஷ¤க்குக் கூச்சமாக இருந்தது. எனினும், தயங்கிக்கொண்டே, ‘லூசியை உங்களுக்குப் பிடிச்சிருக்காப்பா?’ என்று கேட்டான்.
‘இத பாரு, ரமேஷ்! உனக்குப் பிடிக்கணும்கிறதுதான் ரொம்ப ரொம்ப முக்கியம்.’
‘அப்படின்னா, உங்களுக்கு அவளை அவ்வளவாப் பிடிக்கல்லையாப்பா?’
‘சேச்சே! அதெல்லாம் இல்லே. நீ வாழ்க்கையிலே விரும்பினதை அடைஞ்சு சந்தோஷமா யிருக்கணும்கிறதுதான் என்னோட ஆசை. குழந்தைகளோட சந்தோஷத்துக்குக் குறுக்கே நிக்காதவங்கதான் உண்மையா அவங்களை நேசிக்கிறவங்க. மத்தவங்கல்லாம் குழந்தைகளை அடிமைகள்னும், உடைமைகள்னும் நினைக்கிறவங்க!’
‘நான் ரொம்ப அதிருஷ்டசாலிப்பா!.. .. அப்பா! நான் உங்களை ஒண்ணு கேக்கணும்.’
‘கேளு, ரமேஷ்.’
‘பாம்பேல நமக்குத் தெரிஞ்சவங்க யாருமே இல்லேன்னு லூசிகிட்ட ஏம்ப்பா பொய் சொன்னீங்க? காரணம் என்னன்னு நான் தெரிஞ்சுக்கலாமாப்பா?’
‘கல்யாணம்னு ஒண்ணு ஆகிறதுக்கு முந்தி உங்க ரெண்டு பேரோட உறவும் நம்ம சொந்தக்காரங்களுக்குத் தெரிய வேண்டாமேன்னுதான். ஏன்னா, எது ஒண்ணும் நடக்கிற வரையிலே நிச்சயமில்லேப்பா.’
ரமேஷ் சற்றே அதிர்ந்து அவரைப் பார்த்தான்.
‘உன் ஆசை கண்டிப்பா நிறைவேறும், ரமேஷ். அப்படி நடக்காம போனா அதுக்கு உங்கம்மாவோ நானோ காரணமா யிருக்க மாட்டோம். பாம்பேல இருக்கிற உன் மாமாவோட லூசி தொடர்பு ஏற்படுத்திக்கிறான்னு வச்சுக்க, அவ உன்னோட கேர்ள்ங்கிறது அவருக்குத் தெரியறதுக்கு வாய்ப்பு இருக்கு. உன் அம்மாவும் நான் அவ கிட்ட அதைப் பத்திச் சொல்றதுக்கு முந்தியே அதைத் தெரிஞ்சுக்க நேரலாம். இப்போதைக்கு அது வேணாமேன்னுதான். முதல்ல நான் உங்கம்மாவைச் சரிக்கட்டி யாகணுமே? மத்ததெல்லாம் அப்புறந்தான்’ என்று அவர் விளக்கிய பிறகு அவன் மனம் ஓரளவு சமாதானம் அடைந்தது. ஆனால், ’உண்மையை அவளிடமே சொல்லி, மாமா வீட்டருடன் தொடர்பு கொள்ள வேண்டாமென்று சொல்லிவைக்க முடியுமே? அதற்கான காரணத்தைச் சொல்லிவிட்டால், லூசி என்ன மறுக்கவா போகிறாள்? அல்லது, மாமாவிடமே ரகசியமாய் வைத்துக் கொள்ளும்படிச் சொல்லி வைக்கலாமே?’ – இந்தக் கேள்விகள் அவன் மனத்தில் எழுந்த போது, ‘இந்த அப்பா எதையோ மறைக்கிறார்’ எனும் ஐயம் அவனுள் எழுந்தது. எனினும், தன் குரங்கு மனம்தான் இல்லாத பொல்லாத கற்பனைகளைச் செய்கிறதோ என்று தன்னைத் தானே கடிந்துகொண்டு அவன் அமைதியடைய முயன்றான்.
‘அப்புறம், இன்னொண்ணு, ரமேஷ்!’
‘சொல்லுங்கப்பா.’
‘கல்யாணம் ஆகிறதுக்கு முந்தி அத்துமீறல் வேண்டாம். ப்ளெய்ன்லி – நோ செக்ஸ்! புரிஞ்சுதா? அதனால சிக்கல்கள் வரும்.’
ரமேஷ் முகம் சிவந்து போனான். ஆனால், நேரடியாக அவரைப் பார்த்தான். ‘என்னப்பா இது! என்னைப் போய் இப்படிச் சொல்லிட்டீங்களே?’ என்னும் குற்றச்சாட்டு அவனது பார்வையில் இருந்தது.
‘நீ நல்லவன்தான், ரமேஷ். ஆனா, இந்த வயசு இருக்கே, அது ரொம்பப் பொல்லாததுப்பா. லூசி வேற பாம்பே போறா. பிரியப் போறதைச் சாக்கா வெச்சு ரெண்டு பேரும் உணர்ச்சி வசப்பட்டுத் தப்புப் பண்ணிடக் கூடாதில்லே? அதுக்குத்தான் சொல்றேன். தப்பாப் புரிஞ்சுக்காதே.’
‘நான் உங்களோட மகன், அப்பா! அந்த நம்பிக்கை உங்களுக்கு இருக்கு, இல்லே?’
‘அதனாலதாம்ப்பா சொல்றேன்!’ என்று சுருக்கமாய் அவர் சொன்ன நறுக்கான பதிலால் அதிர்ந்து போன அவன் அவரை ஏறிட்டுப் பார்க்க, அவரால்தான் அவனது பார்வையைச் சந்திக்க முடியாமல் போயிற்று. மேலே எந்தக் கேள்விக்கும் இடம் கொடுத்துப் பேச்சை வளர்த்த விரும்பாதவர் போல், ‘குட் நைட், ரமேஷ்!’ என்று சொல்லிவிட்டு அவர் தம் கட்டிலில் ஒருக்களித்துப் படுத்துக்கொண்டார்.
பதிலுக்கு, ‘குட் நைட்’ சொன்ன பின் அதிர்ச்சியுடன் சில நொடிகள் நின்று கொண்டிருந்ததன் பிறகு ரமேஷ் கூடத்தில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்த சாரதாவைக் கடந்து தன்னறைக்குப் போய்ப் படுத்துக்கொண்டான். ‘அதனாலதாம்ப்பா சொல்றேன்’ எனும் சோமசேகரனின் நறுக்கான சொற்கள் அவன் செவிகளைக் குடையத் தொடங்கின. ‘அதுக்கு என்ன அர்த்தம்? அப்படின்னா, அப்பாவும் யாரையோ லவ் பண்ணினாரா? தப்பு நடந்ததால சிக்கல்ல மாட்டிக்கிட்டாரா? இல்லாட்டி, அந்தப் பொண்ணே அம்மாதானா? ஆனா அவங்களுது லவ் மேறேஜ்ன் சொன்னதே இல்லையே? அப்பா தானாவே ஒரு நாள் அதைப் பத்திச் சொன்னாத்தான் உண்டு. நானாக் கேக்க முடியாது. இவ்வளவு சொன்னவர் அதையும் ஒருநாள் சொன்னாலும் சொல்லுவார்.’
மும்பை புறப்படுவதற்கு இன்னும் ஒரு நாள் இருந்த போது, ‘ரமேஷ்! அந்தக் கடன்காரன் ஊர்லதான் இருக்கான். அதான், எங்க தெருவிலேயே இருக்கிற சொந்தக்காரப் பொறுக்கி. அதனால நீங்க இப்ப எங்க வீட்டுக்கு வரவேண்டாம். நான் கொஞ்ச நாள் கழிச்சு லீவ்ல வர்றப்ப பாத்துக்கலாம். அவனுக்குப் பொண்ணு பாத்துக்கிட்டு இருக்காங்க. கூடிய சீக்கிரம் கல்யாணம் ஆயிடும். அதுக்கு அப்புறம் என் வழிக்கு வர மாட்டான்னுதான் தோணுது.’ என்றாள் லூசி.
அன்று இருவரும் தங்களது வழக்கமான ஓட்டலுக்குப் போனார்கள். எப்போதும் எதிரெதிரேதான் உட்காருவார்கள். இன்று லூசி அவனுக்குப் பக்கத்து நாற்காலியில் அவனுக்கு மிக நெருக்கமாய் அமர்ந்தாள். அடிக்கடி பெருமூச்செறிந்தாள். தன் விரல்களை அவனுடையவற்றுடன் கோத்துக்கொண்டாள். கண்கலங்கினாள்.
இடையே, ‘நாளைக்குக் கொஞ்ச நேரம் நாம ரெண்டு பேரும் தனியாச் சந்திக்கலாமா?’ என்று அவள் ஆர்வமாய்க் கேட்ட போது அவனுக்கு வேர்க்கத் தொடங்கியது. எச்சில் கூட்டி விழுங்கினான். அவனும் ஆர்வத்துடன் அவளைக் கண்ணிமைக்காமல் பார்த்தான்.
-தொடரும்
- பிரம்ம லிபி
- பெண்ணிய உரையாடல்கள் – ஈழம், தமிழகம், புலம்பெயர் சூழல்
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் : அத்தியாயம்-17
- நியூட்டன் காலத்தில் வாழ்ந்த வானியல் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி [சீராக்கிய மீள் பதிப்பு]
- கடிதம்
- நீலமணியின்’ செகண்ட் தாட்ஸ்’
- புகழ் பெற்ற ஏழைகள் -41
- அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழிகாட்டியாக தமிழர் …..!
- நாஞ்சில்நாடன் சிறுகதைகளில் அங்கதம்
- எனது இதயத்தின் எவ்விடத்தில் நீ ஒளிந்திருந்தாய்?
- மலரினும் மெல்லியது!
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 57 ஆதாமின் பிள்ளைகள் – 3
- திண்ணையின் இலக்கியத் தடம் – 17
- வளவ. துரையனின் “சின்னசாமியின்கதை”
- இலக்கியத்தில் காலனித்துவம்: புதிய காலனித்துவத்தின் கொடூரம்
- நாணயத்தின் மறுபக்கம்
- கவிதைகள்
- தாகூரின் கீதப் பாமாலை – 97 உன் இன்னிசை எதிரொலி .. !
- ஒன்றுகூடல் ( தொடர்ச்சி )
- மருமகளின் மர்மம் -11
- ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 2
- ஜாக்கி சான் 24. தொடர் தோல்விகள்
- நீங்காத நினைவுகள் – 29
- மலைகள் பதிப்பகம் வெளியிடும் இரண்டு புத்தகங்கள்
- வைரஸ்
- திண்ணையில் எழுத்துக்கள்
- சீதாயணம் நாடகப் படக்கதை – 1 5
- மாற்றுப் படங்களும் மாற்று சிந்தனைகளும் – சென்னை புத்தக கண்காட்சியில் இன்று வெளியாகிறது
- என் புதிய வெளியீடுகள்