ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் : அத்தியாயம்-17

This entry is part 3 of 29 in the series 12 ஜனவரி 2014

ஸ்ரீ கிருஷ்ண தூது-பகுதி-1

தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் வண்ணம் ஸ்ரீ கிருஷ்ணர் அத்தினாபுரம் நோக்கி புறப்பட்டார். அவரை வழி அனுப்பும் முன்னர் பாண்டவர்களும் திரௌபதியும் நிறைய கோரிக்கைகளையும் கேள்விகளையும் முன் வைக்கின்றனர். ஸ்ரீ கிருஷ்ணர் அத்தனை கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் அளிக்கிறார். இருப்பினும் இந்த உரையாடல்களை நாம் வரலாற்று தகவல்களாக கொள்ள முடியாது. ஆனால் இந்த உரையாடல்கள் கற்பனையாக இருப்பினும் இதன் ஆசிரியர் ஸ்ரீ கிருஷ்ணர் என்பவர் யார் அவர் எடுத்த நிலை என்ன என்பதை பட்டவர்த்தனமாக்குகிறது. நான் அவற்றிலிருந்து சிலவற்றை இங்கே முன் வைக்கிறேன்.

இவர்களிடையே நடைபெறும் உரையாடல்களில் ஓர் இடத்தில் யுதிஷ்டிரன்  கேட்ட ஒரு கேள்விக்கு’ ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வாறு விடையளிக்கிறார்.” ஓ! ராஜனே! பிருமசரிய விரதம் என்பதும் அதனோடு தொடர்புடைய பிற நியமங்களும் சத்திரியனுக்கு விதிக்கப் பட்டுள்ளன. ஆனால் பிக்ஷை எடுப்பது சத்திரியனுக்கு மறுக்கப் பட்டுள்ளது. போரில் போரிட்டு வெல்வதும் மடிவதுமே சத்திரியனுக்கு அந்த இறைவனால் விதிக்கப்பட்டது. அதை செவ்வனே செய்து முடிப்பது ஒவ்வொரு சத்திரியனின் கடமை. பணிதல் என்பது ஒரு சத்திரியனுக்கு அவமானமாகக் கருதப் படுகிறது. உன் சோர்விலிருந்து நீ வெளியில் வா. யுதிஷ்டிரா! இளகிய மனம் படைத்தவனால் உரிமையுள்ளவற்றைப் பெற முடியாது. வீரத்தைக் காட்டு. எதிரிகளை அழி.”

கீதையிலும் கூட ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் இவ்வாறுதான் கூறுகிறார். இதிலிருந்து நான் எடுத்த முடிவு குறித்து ஏற்கனவே விளக்கி விட்டேன்.( அதாவது ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்தாபித்த வைணவ மதம் தனித் தன்மையான மதம்.) அதேபோல பீமன் கேட்ட கேள்விக்கும் ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வாறு விடை அளிக்கிறார்.” மனிதன் என்பவன் எப்பொழுதும் விதியை மட்டும் நம்புபவனாக இருக்கக் கூடாது.அல்லது ஒரேடியாக மனித எத்தனத்தை மட்டும் நம்புபவனாக இருக்கக் கூடாது.( மனித முயற்சியும் விதியும் சரிசமம் ). இதை நம்புபவன் தோல்வியில் துவள மாட்டான். அல்லது வெற்றியில் மமதை கொள்ள மாட்டான்.

கீதையிலும் இது போன்ற உபதேசங்கள் காணக் கிடைக்கின்றன. அர்ஜுனனின் ஒரு கேள்விக்கு ஸ்ரீ கிருஷ்ணர் விடையளிக்கும்பொழுது இவ்வாறு கூறுகிறார்.” நிலம் செழிப்பாக இருந்தாலும் மிக நன்றாக உழப் பட்டாலும், விதை நல்ல விதையாக இருப்பினும் மழை பெய்யாமல் போகும் விதியினால் நிலம் பாழாகும் அன்றோ? இதனால்தான் நம் முன்னோர்கள் வெற்றி என்பது விதியும் முயற்சியும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும்பொழுது மட்டுமே சாத்தியம் என்று நம்பினார்கள்.என் முயற்சியில் நான் கடுமையாக இருக்கலாம்,. அனால் விதியின் மீது எனக்கு கட்டுப்பாடு கிடையாது.”

மீண்டும் இந்த இடத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் தனக்கு அமானுஷ்ய சக்தி எதுவும் இல்லை என்பதைத் தெளிவு படுத்துகிறார். இது எதற்கு என்றால் மனித முயற்சிக்கு உட்பட்ட செயல்களை மட்டுமே தான் செய்து வருவதை காட்டுவதற்காக. கடவுள் தன் சக்தியை வெளிப்படுத்த நினைக்கும்பொழுது அவருக்கு ஒரு இறைப்பிரதிநிதியோ அல்லது இறைத் தூதரோ தேவை இல்லை. இறை தூதர்களுக்கு தன்னிடம் உள்ள இறைசக்தியின் காரணமாக சாமானிய மக்களிடமிருந்து விலகி நிற்கும் சங்கடங்கள் நேரிடும். அதன் பிறகு சாதாரண மனிதர்கள் அவரை பின் பற்ற முடியாமல் போகும் சிக்கல்கள் ஏற்படும்.

மற்ற அனைவரும் பேசி முடிந்த பின்பு திரௌபதி பேசத் தொடங்குகிறாள். ஒரு பெண்ணால் கேட்கக் கூடாத முரணான கேள்விகளை அவள் கண்ணனிடம் எழுப்புகிறாள். “ கொல்லப்படுவதற்கான எல்லா தகுதிகளையும் உடைய ஒருவனைக் கொல்லாமல் விடுவது எவ்வளவு பாவமோ அவ்வளவு பாவம் வீண்பழி சுமத்தப் ப[அட்ட ஒரு நிரபராதியைக் கொல்வதனால் உண்டாகும்.”

இவற்றை ஒரு பெண்ணின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் என்று நம்புவது சிறுது கடினம்தான். இதை நாம் ஏற்றுக் கொள்கிறோமோ இல்லையோ ஒப்புக் கொள்ளாத்தான் வேண்டும்.

ஏன் என்றால் திரௌபதியின் பாத்திரப் படைப்பு அத்தைகையது. ஒரு பெண்ணின் வாயிலிருந்து இத்தகையக் கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் வருவது நமக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் அவை தர்மத்தின் பக்கம் நிற்கும் வார்த்தைகள் என்பதை மறுக்க முடியாது. இது குறித்து நான் ஏற்கனவே ஜராசந்த வதத்தின்பொழுது கூறிவிட்டேன்.

திரௌபதியின் இந்த உரையாடல் ஒரு அழகான கவிதையாக சித்தரிக்கப் பட்டுள்ளது.

“ கருத்த நிறமுடைய கிருஷ்ணை அவர்கள் கூறியதைக் கேட்டதும் கொதித்தெழுந்து தனது அழகிய அரவங்கள் போல் புரளும் நீண்ட கருத்த கூந்தலை தனது கரங்களில் ஏந்தியபடி கண்களில் சோகம் கலந்த கண்ணீருடன் ஸ்ரீ கிருஷ்ணரைப்[ பார்த்து பேசத் தொடங்கினாள். ”ஓ! ஜனார்த்தனரே! கொடிய துச்சாதனன் தன் கரங்களால் என் கூந்தலைப் பற்றி இழுத்தான். நமது எதிரி சமாதானம் குறித்து பேசத் தொடங்கினால் நீங்கள் எனக்கு நேர்ந்த இந்தக் கொடுமையை நினைத்துக் கொள்ளுங்கள். பீமனும் அர்ஜுனனும் கோழையைப் போல சமாதானம் வேண்டுகிறார்கள். இதனால் எனக்கு எந்தக் கெடுதலும் இல்லை. ஏன் என்றால் இவர்கள் மறுத்தாலும் என் வயதான தந்தை என் சகோதரர்களின் உதவியுடன் எதிரிகளை எதிர்க்க சூளுரை எடுத்துக் கொண்டிருக்கிறார். பராக்கிரமசாலிகளான என் ஐந்து புதல்வர்களும் சுபத்திரையின் மைந்தன் அபிமன்யுவுடன் கை கோர்த்துக் கொண்டு பகைவர்களை அழிப்பார்கள். துச்சாதனின் கரங்கள் அவன் உடலிலிருந்து துண்டிக்கப் பட்டு தரையில் புரள்வதை பார்க்காத வரையில் என்னால் எப்படி நிம்மதியாக உறங்க முடியும்? பதின்மூன்று ஆண்டுகளாக என் மனம் கோபாக்னியால் எரிந்து கொண்டிருக்கிறது. பதின் மூன்று ஆண்டுகள் கழிந்தாலும் அந்த கோபத்தீ அணைவதாகத் தெரியவில்லை. இன்று மீண்டும் இவர்கள் சமாதானம் குறித்துப் பேசுவதை கேட்கும்பொழுது என் இதயம் சுக்கு நூறாக வெடித்து விடும்போல் உள்ளது.

பெரிய அழகிய விழிகளை உடைய திரௌபதி உடல் நடுங்க அழுதாள். வெப்பம் மிகுந்த கண்ணீர் அவள் முலைகளை நனைத்தன. நீண்ட தோள்களை உடைய வாசுதேவர் அவளை சமாதானப் படுத்தினார். “ ஓ! திரௌபதி இன்னும் சிறிது நாட்களில் கௌரவர்களின் பெண்கள் கண்ணீர் விடுவதைப் பார்க்கப் போகிறாய். தங்கள் உறவினர்களை இழந்து சோகத்தில் மூழ்கப் போகின்றனர். பாண்டவர்கள் ஐவரும் காட்டும் திசையில் நான் கௌரவர்களை அழிக்கப் போகிறேன். நான் சொல்லும் ஏற்பாட்டினை திருதராட்டிணனின் புதல்வர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அவர்கள் அழியப் போவது உறுதி. .பெரும் பனிப்புயல் வந்தாலும், பூமி இரண்டாக பிளந்தாலும், ஆகாசம் நம் மேல் சரிந்து விழுந்தாலும்கூட நான் கவலைப் பட மாட்டேன். உன் கணிப்பு தவறாது திரௌபதி. உன் கண்ணீரைத் துடைத்துக் கொள். உன் கணவர் ஐவரும் போரில் வெற்றி பெற்று பகைவர் உடல்களை இந்த மண்ணில் வெட்டி வீழ்த்தி இழந்த பூமியை மீண்டும் பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை.”

இந்த உரையானது இரத்த வெறி பிடித்த. ஒருவனின் உணர்ச்சி வெளிப்பாடோ அல்லது ஆத்திரமடைந்த ஒருவனின் சூடான வார்த்தைகளோ இல்லை. நன்கு கற்றறிந்தவரும் புத்தி கூர்மையுடையவரூமான ஒரு மனிதரின் கணிப்பில் உதிர்ந்த வார்த்தைகள். ஸ்ரீ  கிருஷ்ணருக்கு தெரியும் துரியோதனன் எந்த நிலையிலும் தன் ராஜ்ஜியத்தை பங்கு போட சம்மதிக்க மாட்டான் என்று. அவன் சமாதானத்திற்கு உடன்படவும் மாட்டான் என்றும் அவருக்குத் தெரியும். இது தெரிந்திருந்தும் சற்றும் நடைபெறப் போகாத விஷயத்திற்கு ஸ்ரீ கிருஷ்ணர் தூது செல்லக் கிளம்புவது ஏன் என்றால் எந்தச் செயல் அவசியமோ அதன் வெற்றி தோல்விகளைப் பற்றி சிந்தியாமல் அந்தச் செயலைச் செய்ய வேண்டும் என்பதை ஸ்ரீ கிருஷ்ணர் உறுதியாக நம்புவதுதான். இதன் உட்பொருள் ஒரு மனிதன் எதை செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும்: அதன் மூலம் வரும் பலன்களை எதிர்பாராமல் செய்ய வேண்டும் என்பதாகும். கீதையில் அவர் கூறியவற்றின் சாராம்சமே இதுதான். ஒரு கர்மத்தின் வெற்றி தோல்விகளைப் பற்றி சிந்திக்காமல் அந்த கர்மத்தை செய்ய வேண்டும் என்று ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறார்.

இதற்கேற்பவே தனது செயல் தோல்வியில் முடிந்தாலும் அதை பற்றி சிறிதும் கவலைப் படாமல் ஸ்ரீ கிருஷ்ணர் கௌரவர் சபை நோக்கி பயணம் மேற்கொள்கிறார்.

அந்த காலத்தில் ஒரு உயர்ந்த கனவான் நெடும் பயணம் மேற்கொண்டால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது .ஸ்ரீ கிருஷ்ணரின் தூதுப் பயணம். கார்த்திகை மாதம் ரேவதி நட்சத்திரத்தில் மைத்திரம் என்ற முகூர்த்தம்  கூடிய  நன்னாளை பயண தினமாக குறித்தார். காலையில் அந்தணர்களின் வேத கோஷங்களுடன் எழுந்தார். நித்திய ஜப தபங்களைச் செவ்வனே செய்து முடித்தார். நன்றாக நீராடி உயர்ந்த பட்டாடைகளையும் நகைகளையும் அணிந்து கொண்டார்.அக்னியையும் சூரியனையும் வணங்கினார். அந்த ஜனார்த்தனர் விருடபத்தை பின் புறத்தில் தொட்டு வணங்கினார்.. அந்தணர்களை வணங்கியபின்பு அக்னியை வலம் வந்து மங்கலப் பொருட்களை பார்வையிட்டார்.

கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் அந்தணர்களின் சாங்கியங்களை குறிப்பாக தங்களது சொந்த அபிலாஷைகள் நிறைவேற செய்யப்படும் சாங்கியங்களை சாடியிருக்கிறாரே அன்றி அந்தணர்களை தனியாக குற்றம் சாட்டியதில்லை. அவர் சமத்துவத்தை காக்கும் உன்னத மனிதர் என்பதால் அவர் அந்தக் கால நடைமுறைக்கு ஏற்ப அந்தணர்களை கவனத்துடன் கையாண்டார். அவர் காலத்திய அந்தணர்கள் நன்கு படித்தவர்களாய் , ஞானமுள்ளவர்களாய், நீதி நெறிகளின் வழி நடப்பவராய், தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்பவர்களாய் இருந்தனர். எனவே அவர்களுக்கு பிற சமூகத்தினரிடமிருந்து தேவையான மரியாதை கிடைத்தது. இந்த காரணத்தால்தான் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களுக்கு உரிய மரியாதையை அளிக்கிறார். அவர் மேற்கொண்ட தூது பயணத்தின்பொழுது ஒரு அந்தணக் கூட்டம் எதிர்பட்டது. ஸ்ரீ கிருஷ்ணர் தனது தேரிலிருந்து இறங்கி ஓடோடிச் சென்று அவர்களை நலம் விசாரிக்கிறார். அவர்கள் அத்தினாபுரம் சென்று கௌரவர்கள் சபையில் நிகழ இருக்கும் சம்பாஷணைகளை கேட்கச் செல்வது தெரிய வருகிறது. குறிப்பாக ஸ்ரீ கிருஷ்ணரின் உரையாடலை கேட்க ஆவலோடு செல்வதாக கூறுகின்றனர்.

மேற்கூறியவற்றிலிருந்து அந்த நாட்டு மக்கள் ஸ்ரீ கிருஷ்ணர் மேல் எவ்வளவு பைத்தியமாக இருந்தனர் என்பது தெரிய வருகிறது.

“ தேவகி நந்தன் செல்லும் வழிகளில் எல்லாம் குதிர்களில் தானியங்கள் நிரம்பி வழியும் மகிழ்ச்சிகரமான இல்லங்களையும் செழிப்பான கால்நடைகளையும்,பல ஊர்களையும் ராச்சியங்களையும் பார்வையிட்டபடியே சென்றார் . மனநிறைவுடனும் ஒரே சிந்தனையுடனும் அமைதியான குரு( kuru ) தேசத்து மக்கள் உபப்லாவ்யத்திலிருந்து  அத்தினாபுரம் வரை காலால் நடந்து வந்து கண்ணனை வரவேற்க சாலையின் இரு மருங்கிலும் திரண்டிருந்தனர்.

மகாத்மா வாசுதேவர் தங்களைக்க் கடந்து செல்லும்பொழுது அவரை அந்த மக்கள் இருகரம் குவித்து வணங்கினர். அந்திமாலை வருவதை அறிவிக்கும் முகமாக ஆகாயம் செவ்வண்ண நிறமாக மாறத் தொடங்கியது. பகைவர்களைக் அழிப்பவரும் மதுசூதனுருமான கேசவர் உணவு பொருட்கள் எளிதில் கிடைக்கும் இடம் ஒன்றை அடைந்தார். பகவானும் இரதத்திலிருந்து இறங்கி உடல் சுத்தி செய்து கொண்டு இரதத்தை அவிழ்த்துக் கட்டும்படி தாருகனுக்கு கட்டளையிட்டு விட்டு சந்தியாவந்தனம் செய்யச் சென்றார். தாருகனும் தேரிளிருந்து குதிரைகளை அவிழ்த்து விட்டு முறைப்படி அவைகளைப் பரிவுடன் உடலை தேய்த்து விட்டு, சேணம், பூட்டுவார் முதலியவற்றை அவிழ்த்து  அவைகளைப் புழுதியில் புரள விட்டான்.

மகாத்மாவான மதுசூதனர் உடன் வந்தவர்களை நோக்கி “ நாம் அனைவரும் யுதிஷ்டிரரின் காரியத்திற்காக இங்கே கூடாரம் அமைத்து தங்குவோம் “ என்றார். . அவர் அப்படி கூறியதும் உடன் வந்தவர்கள் மளமளவென்று கூடாரங்களை அமைத்து உணவு தயாரிக்க முற்பட்டனர். அவர்கள் தங்கியிருந்த கிராமத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களும் மதிப்புமிக்கவர்களும், நற்குலதோர்களும், பாபச்செயல்கள் புரிவதற்கு வெட்கப்படுபவர்களும், அந்தண குலத்தை தழைக்க செய்யும் சிறந்த அந்தணர்களும் மகாத்மாவும் பகைவர்களை அழிப்பவருமாகிய இருடிகேசனை முறைப்படி பணிந்து வழிபட்டனர். அனைவரும் ஸ்ரீ கிருஷ்ணரை வணங்கிய பின்பு தத்தம் இல்லங்களுக்கு வருகை புரியுமாறு ஜனார்தனரை பணிந்தனர். தாசர்ஹரும் அவர்களுடைய வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அவர்களுடன் அவர்கள் இல்லங்களில் பிரவேசித்து அவர்களுடனே திரும்பினார்.

அந்த கிராம மக்களையும் தன்னுடன் தன் கூடாரத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு சிறந்த உணவினை வழங்கி உபசரித்தார். பிறகு தானும் உண்டு அன்றைய இரவை நிம்மதியாக கழித்தார்.

மேலே சொன்னது ஒரு கனவானின் செயல்களின் தொகுப்பாகும். இங்கே ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு கடவுளாக வணங்கப் படவில்லை. ஒரு பெரிய மனிதராகவே போற்றப் படுகிறார். ஸ்ரீ கிருஷ்ணரின் நடவடிக்கைகளும் ஒரு முக்கியஸ்தரின் நடவடிக்கைகளாகவே உள்ளன.

———————————————–

Series Navigationபெண்ணிய உரையாடல்கள் – ஈழம், தமிழகம், புலம்பெயர் சூழல்நியூட்டன் காலத்தில் வாழ்ந்த வானியல் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி [சீராக்கிய மீள் பதிப்பு]
author

சத்தியப்பிரியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *