சங்க இலக்கியங்களில் சமூக மதிப்புகள்

 

தமிழாய்வுத் துறைத்தலைவர்

மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி

சிவகங்கை

தற்கால ஆய்வுகளில் குறிக்கத்தகுந்தது சமூகவியல் ஆய்வாகும். சமூகவியல் ஆய்வு என்பது அறிவியல் சார்ந்த அணுகுமுறையை உடையது. ‘‘சமூகவியல் என்பது அறிவியல்களின் தரவரிசை அடுக்கமைவில் கடைசியாக வருவதாகும். அறிவியல்களின் தரவரிசை என்பது கணிதத்திலிருந்து தொடங்கி, வானியல், இயற்பியல், வேதியியல், உயிரியல் என்று அடுக்கடுக்காக உயர்ந்து இறுதியில் சமுகவியலில் முடிவதாக கோம்த் என்ற சமூகவியல் அறிஞர் கருதுகின்றார்’’.[1]சமூகவியல் என்பது அரசியல், பொருளாதாரம், வரலாறு, ஒழுக்கவியல் ஆகிய சமுக அறிவியல்களையும் சார்ந்து அமைவதாகும்.  இதன் காரணமாக சமூகவியல் அடிப்படை வாய்ந்த ஆய்வு என்பது மனிதகுலத்தைப் பற்றிய முழுமையான ஆய்வு என்று கொள்ளத்தகுந்ததாகும்.

சமுதாயம் என்பது ஒரு கூட்டமைப்பு ஆகும். இந்தக் கூட்டமைப்பில் பல சிக்கல்கள் வாய்ந்த தனித்தனி அமைப்புகள் கலந்து உறவாடும் நிலை ஏற்படும். அதனால் ஒரு சமுதாய அமைப்பு என்பது சிக்கல் வாய்ந்த அமைப்பாக இருப்பது என்பதுதான் உண்மை. இந்தச் சிக்கல் வாய்ந்த சமுதாய அமைப்பினை ஆராய, அறிந்து கொள்ள பல அறிவியல் சார்ந்த அணுகுமுறைகள் தேவைப்படும். சமுகவியல் என்பது பல்வேறு அறவியல், அறிவியல் சார்ந்த பல உட்கூறுகளைக் கொண்டதாக விளங்குவதால் சமூகவியல் ஆய்வே சமுதாயத்தை ஆராயச் சிறந்த ஆய்வுமுறையாகும்.

தமிழ் இலக்கியப் பரப்பில் சங்க காலச் சமுதாயம் என்பது செவ்வியல் சமுதாயமாக ஏற்கப்படுகின்றது. இச்சமுதாயத்தில் அரசர்கள், புலவர்கள், சான்றோர்கள், காதலர்கள், இல்லறத்தார்கள், போர்வீரர்கள் போன்ற பலரும் பங்கேற்றுள்ளனர். இவர்கள் தத்தமக்குரிய சமுதாய அறங்களுடன் வாழ்ந்துள்ளனர். மதிப்பு வாய்ந்த சமுதாய விழுமியங்களை மட்டுமே சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் பதிவு செய்துள்ளன. சங்க இலக்கியங்கள் மட்டுமே சங்ககாலச் சமுதாயத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கு உரிய முதன்மைச் சான்றுகளாக விளங்குகின்றன.

 

அகம், புறம் என்ற இரு நெறிகள் சார்ந்து சமுதாய மதிப்புகள் சங்க காலத்தில் மதிக்கப் பெற்றுள்ளன.

 

சங்ககாலச் சமுதாயத்தின் அகம் சார்ந்த மதிப்பு

அகச் சமுதாயம் என்பது ஒத்த தலைவனையும், தலைவியையும் உள்ளிட்டு அமைவதாகும். களவு வழி வந்த கற்பு, அல்லது களவு வழி வாராக் கற்பு என்ற நிலையில் காதலுக்கும் வழி வைத்து கற்பினுக்கும் அடிப்படையாய் அமைகின்ற இந்த அக அடிப்படை வாழ்வு- தலைவன் தலைவியருக்கு இடையில் அமைகின்ற ஒத்த இயைபுத் தன்மையையே பெரிதுபட பேசுகின்றது.

காதலிப்பது, காதலித்தவரையே மணப்பது, சுற்றம் ஒத்துக் கொள்ளாதபோது உடன்போவது, தலைவனுடன் வந்து அகவாழ்வினைத் தொடங்கிய பின்பு பொருளாதார அளவில் ஏற்றம் வந்தாலும், தாழ்வு வந்தாலும் அன்பினை விட்டுவிடாது ஒத்து வாழ்கின்ற அன்பு நிறை வாழ்வே அகநிலையில் மதிப்பு மிக்க வாழ்வாகக் கருதப்பட்டுள்ளது. இந்த வாழ்வினைக் கண்டு செவிலியும் நற்றாயும் தன் மகள் இனிதாக இல்லறம் நடத்துவதைக் கண்டு பெருமைப்படும் வாழ்வே அகவாழ்வில் மதிப்பு மிக்க வாழ்வாக இருந்துள்ளது.

அன்னாய் வாழி வேண்டன்னை நம் படப்பைத்

தேன் மயங்கு பாலினும் இனிய அவன் நாட்டு

உவலைக் கூவல் கீழ

மான் உண்டு எஞ்சிய கலிழி நீரே.[2]

என்ற பாடல் காதலின் உறுதிப்பாட்டை விளக்குகின்றது. தலைவி தலைவனுடன் இணைந்துத் தனிக்குடித்தனம் கொண்டு வாழ்கிறாள். இவ்வாழ்வில் பொருளாதாரப் பற்றாக்குறை சற்று உண்டு. தலைவியின் பிறந்தவீடு செல்வச் செழிப்பானது. தலைவியும் தேனும் பாலும் தந்து வளர்க்கப் பெற்றவள். தலைவிக்கு உதவி செய்ய பல தாதியரும் தோழியரும் உண்டு. அவள் அன்றாட இல்லறப்பணிகளைக் கூட விருப்பம் இருந்தால் செய்யலாம். ஆனால் அவள் தலைவன் மீது காதல் கொண்டு அவனுடன் இல்லறத்தை நடத்தச் சென்றபோது தலைவன் வீட்டில் பிறந்தவீட்டளவிற்குச் செல்வச் செழிப்பு இல்லை. பெரும்பாலான நாட்கள் தண்ணீரே உணவாக இருக்கலாம். அந்தத் தண்ணீரையும் தலைவி தூரம் பல நடந்து வந்து எடுத்துச் செல்லவேண்டும். தண்ணீரும் விலங்குகள் பல உண்ணும் தன்மையானது. தழைகள் மூடியது. எனினும் தலைவி தன் பொருளாதாரப் பின்னடைவு கருதி பிறந்தவீட்டில் கையேந்தாமலும், தன்வாழ்வு பிறந்த வீட்டு வாழ்வினை விட இனிதானது என்றும் வாழ்கிறாள். இதனைப் பார்த்து வந்த தோழி தலைவியின் அன்பு நிலைத்த வாழ்வினைச் செவிலியிடம் சொல்லி இன்புறுகிறாள்.

கலித்தொகையின் தலைவன் ‘‘ஒன்றன் கூறாடை உடுப்பாரே ஆயினும் ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை’’[3] என்று மனம் ஒன்றும் வாழ்க்கையைப் பெரிதென மதிக்கிறான். இருப்பினும் அணிந்து கொள்வதற்கு ஒரே ஆடை இருக்க அதனை ஒரு புறத்தைத் தலைவனும் , மற்றொரு புறத்தைத் தலைவியும் அணிந்து கொள்ளும் வறுமைச் சூழல் வந்தபோதும் மனம் கலந்த வாழ்க்கை இனிமையானது என்ற காதலர் ஒத்திசைவு மதிப்பு அக இலக்கியங்களின் அடிப்படை மதிப்பாக விளங்கியுள்ளது,

 

தலைவன் பரத்தையர் பிரிந்தபோது அவனை வழிப்படுத்தும் பாடல்கள் புறப்பாடலாகத் தள்ளப்பட்டிருப்பதை நோக்கும்போதும் அகப் பாடல்கள் வலியுறுத்தும் மதிப்பு அல்லது வெற்றி என்பது தலைவன் தலைவி ஆகிய இருவரும் ஒன்றாய் வாழும் அன்புநெறியே என்பது தெளிவாகின்றது.

சங்க காலச் சமுதாயத்தின் புறம் சார்ந்த மதிப்புகள்

காதல் தவிர்ந்த மற்ற மதிப்புகள் அனைத்தும் புறம் சார்ந்த மதிப்புகள் ஆகும். கொடை,வீரம், மானம் போன்ற பல்பொருள் குறித்த மதிப்புகள் புறம் சார்ந்த மதிப்புகளாகச் சங்க காலத்தில் விளங்கியுள்ளன.

‘‘ஆன்முலை அறுத்த அறன் இலோர்க்கும்

மாண்இழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்

குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்

வழுவாய் மருங்கில் கழுவாயும் உள என

நிலம்புடை பெயர்வது ஆயினும் ஒருவன்

செய்தி கொன்றார்க்கு உய்தி இல் என’’[4]

என்ற பாடலில் சங்கச் சமுதாயத்தின் நன் மதிப்புகள் உணர்த்தப் பெற்றுள்ளன.  பசுவின் பால்தரும் மடிப்பகுதியை அறுத்தல், பெண்களின் கருவைச் சிதைப்போர், பெற்றோர்க்குக் கொடுமை செய்வோர் என்ற மூவரும் மதிப்படைய முடியாது என்பதை இந்தப் பாடல் உணர்த்துகிறது. இந்த மூன்றையும் ஏற்றாலும் செய்நன்றி கொல்லுதல் என்பது மிக்கக் கொடுமையானது என்பது தெரியவருகிறது. ஆனால் தற்காலத்தில் இந்த நான்கு மதிப்பின்மைகளும் நாள்தோறும் நிமிடந்தோறும் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன என்பது வேதனைக்குரிய செய்தியாகும்.

 

சான்றோர் என்போர் மறுமையில் நன்மை கிடைக்கும் என்பதற்காக இம்மையில் நல்லன செய்யமாட்டார்கள். சான்றோர்கள் இயல்பாகவே எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி  நன்மை செய்வார்கள்.  பயன் கருதி அறம் செய்பவர்கள் அறத்தை விலை கூறிவிற்கும் வணிகர்கள் ஆவார்கள் என்பது புறநானூற்று நெறியாகும்.

‘‘இ்ம்மை செய்தது மறுமைக்கு ஆம் எனும்

அறவிலை  வணிகன் ஆய்அலன் பிறரும்

சான்றோர் சென்ற நெறியென

ஆங்கு பட்டன்று அவன்கைவன்மையே [5]

மேலும்

மனைவி, மக்கள், வேலைக்காரர்கள், அரசர், சான்றோர் அனைவரும் புகழ் பெற்ற நெறிகளில் பிறழாமல் இருந்தனர் என்பதைப் பிசிராந்தையாரின் பின்வரும் பாடல் எடுத்துரைக்கின்றது.

‘‘யாண்டுபல ஆக நரைஇல ஆகுதல்

யாங்குஆகியர் என வினவுதிர் ஆயின்

மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்

யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும்

அல்லவை செய்யான் காக்கும் அதன் தலை

ஆன்று அவிந்து அடங்கியக் கொள்கைச்

சான்றோர் பலர் யான் வாழும் ஊரே’’[6]

இப்பாடல் வழியாகச் சான்றோர் வழித்தாக சங்கச் சமுதாயம் நடந்துள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளமுடிகின்றது. சான்றோர், அரசனை வழிநடத்த, அரசன் முறைசெய்து மக்களைக் காக்கின்ற பணியைத் திறம்பட செய்கின்றான். நாடு நல்லபடி நடக்க, வீடும் நல்லபடி நடக்கத்தொடங்குகின்றது. வேலைக்காரர்கள், மக்கள், மனைவி அனைவரும் குடும்பத்தலைவனுடன் இயைந்து வாழ வாழ்க்கை மதிப்புறு வாழ்க்கையாக அமைகின்றது.

இந்த உலகம் இன்னமும் இனிமையாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் ‘‘ தமக்கு என முயலா நோன்தாள் பிறர்க்கு என முயலுநர் உண்மையானே’’ என்பதாலும், ‘‘புகழ் எனின் உயிரும் கொடுக்குவர், பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர் ’’ [7] என்ற இருதன்மைகளால்தான் என்பது புறநானூற்றின் முடிவு. அதுவே இன்னமும் எதிர்காலத்திலும் உலகம் நிலைப்பதற்கான காரணமும் ஆகும்.

உலகத்தார் எல்லோரும் போற்றுகின்ற ஒரு மதிப்பினைப் புறநானூற்றுப்புலவன் பாடுகின்றான். ‘‘ நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின் அதுதான் எல்லாரும் உவப்பது, நல்லாற்று நெறியும் அது ’’[8]

என்ற பாடலின் உலகு தழுவிய விழுமியம் தமிழன் கண்டறிந்த மிக முக்கியமான மதிப்பாகும்.

 

இவ்வகையில் அகம் சார்ந்த மதிப்பு, புறம் சார்ந்த மதிப்புகள் என்று சங்ககாலச் சமுதாயத்தின் மதிப்புகளைப் பிரித்தறிய முடிகின்றது. அகம் சார்ந்த மதிப்பு என்பது தலைவன், தலைவியின் பிரியாத அன்பு பற்றியது என்பதும், புறம் சார்ந்த மதிப்புகள் என்பது சமுதாய மக்கள் சார்ந்த மதிப்புகளாக அமைகிறது என்பதும் இக்கட்டுரை பெறப்படும் கருத்தாகும்.

 

 


[1] ஜெ.கிருஷ்ணமூர்த்தி, சமூகவியல் கோட்பாடுகள், ப. 38

[2]கபிலர், ஐங்குறுநூறு, 203

[3] பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைக்கலி, பாடல்எண். 18

[4] ஆலந்தூர்க் கிழார், புறநானூறு, பா.எ.34

[5][5] உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், புறநானூறு, பா.எ. 134

[6] பிசிராந்தையார், புறநானூறு, பா.எ. 191

[7] கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி, புறநானூறு, பா.எ.182

[8] நரிவெரூஉத் தலையார், புறநானூறு, பா.எ. 195

author

முனைவர் மு. பழனியப்பன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *