பணவிடு தூதில் பண்டைய தமிழர்களின் நாணயங்கள்

This entry is part 1 of 22 in the series 2 பெப்ருவரி 2014

 

சு.முரளீதரன்

முனைவர் பட்ட ஆய்வாளர்

தமிழாய்வுத் துறை

தேசியக் கல்லூரி

திருச்சி – 01

மதுரையைத் தலைநகராக் கொண்டு நாயக்கர்கள் ஆட்சி செலுத்திய போது, நாயக்கரின் கீழ் நின்று சேதுபதிகள் ஆட்சி புரிந்தனர். பின்னர் அடிமைத் தளையை அறுத்தெறிந்து சுகந்திரமாக சேதுபதிகள் ஆட்சி செய்ய தொடங்கினார்கள். இவர்கள் வழியில் வந்தவரான முத்து விசய ரகுநாத சேதுபதி மீது, பல பட்டடைச் சொக்கநாத கவிராயர் கி.பி 18-ம் நூற்றாண்டில் பாடியது பணவிடு தூது. இது கலிவெண்பாவினால் ஆன 369 கண்ணிகளைக் கொண்டுள்ளது. இதில் பணத்தைப் பற்றிய செய்திகள் மட்டும் 231 கண்ணிகள் குறிப்பிடப்பட்டுள்ளது மூலம் இந்நூல் பணத்தின் சிறப்பைப் பற்றி கூறவே இயற்றப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

முன்னுரை

தமிழில் உள்ள 417 சிற்றிலக்கியங்களில் மிகவும் பழமையானது தூது இலக்கியம் ஆகும். ஒருவர் தம் கருத்தையோ, தம் எண்ணத்தையோ மற்றவருக்குத் தெரிவிக்க இடையே பிறிதொருவரை அனுப்புவதே தூது ஆகும். தூதினை அகத் தூது, புறத் தூது என இரண்டாகக் கூறலாம்.

  1.      தலைவன் தலைவியிடத்தே தூது அனுப்புதலும், தலைவி தலைவினடத்தே தூது அனுப்புவதை அகத்தூது எனப்படும்.
  2.      அரசர்கள் பகைவரிடத்துத் தூது அனுப்புதலும், புலவர்கள் வள்ளல்கள், புரவலர்களிடத்துத் தூது அனுப்புவது புறத்தூது எனப்படும்.

 

 

தூது பற்றி தொல்காப்பியர்

 

ஓதல், பகையே, தூது இவை பிரிவே

–    தொ.கா.அகத் – 25

ஓதல், பகை,தூது என  பிரிவுகளைப் பற்றி குறிப்பிடுகின்றார்.

தூது விடும் பொருட்களாக இரத்தினச் சுருக்கம் பத்து பொருள்களைக் குறிப்பிடுகின்றது. அவை

          “இயம்புகின்ற காலத்து எகினம்மயில் கிள்ளை

      பயன்பெறு மேகம்பூவை பாங்கிநயந்தகுயில்

      பேதைநெஞ்சம் தென்றல் பிரமரம் ஈரைந்தும்

      தூதுரைத்து வாங்கும் தொடை

–    இரத்தினச் சுருக்கம்

      இந்த பத்து பொருள் அல்லாமல். காம மயக்கத்தால் அஃறிணை பொருள்களை தூதாக அனுப்பலாம் என்பதை தொல்காப்பியர்

      வாரா மரபின வரக் கூறுதலும்

      என்னா மரபின எனக் கூறுதலும்

      அன்னவை எல்லாம் அவற்றவற் றியல்பான்

      இன்ன என்னும் குறிப்புரை யாகும்

–    தொ.கா.எச்ச-25

அஃறிணை பொருள்களைத் தூது விடுத்தால் அவை அவரிடத்துச் சென்று செய்தியை தெரிவிப்பதில்லை என்று தெரிந்தும். அவை பேசுவது போலவும், சொல்வது போலவும் புலவர்கள் ஒரு நெறியாகக் கையாண்டு உள்ளனர்.

 

பணத்தைக் குறிப்பிடும் சொற்கள்

சொக்கநாதக் கவிராயர் பணவிடு தூதில் நம் முன்னோர்கள் அக்காலத்தில் பணத்திற்கு வழங்கி வந்த அல்லது அக்காலமக்கள் பயன்படுத்திய காசு பெயர்களான

1.பொன்

போவாரி னானொருத்தன் பொன்னரசே நின்கீர்த்தி

நாவா லுரைத்தல் நசையன்றோ – காவின்கீழ்

–    கண்ணி – 10

பொன் – நான்கு வகைப்பட்ட தங்கம்

2.தாது, அத்தம், ஆடகம்

ஒத்த வயித்தியருக்குத் தாதுவே! புலவர்க்

கத்தமே வேளம்பர்(க்) காடகமே – கத்துகடல்

–    கண்ணி – 26

தாது – கனிபொருள் (பொன் முதலியன எடுக்கும் சுரங்கம்)

அத்தம் – பொன்

ஆடகம் – சிறந்த பொன், நால்வகைப் பொன்னுள் ஒன்று,

உலோகக் கட்டி

நான்கு வகை பொன்

1.சாதரூபம், 2.கிளிச்சிறை, 3.ஆடகம், 4.சாம்பூநதம்

3.வெறுக்கை

ஓடுவரக் கீழ்மையுள்ள மோரு வழிபோய்

வீடுவிழை வோர்க்கும் வெறுக்கையே – வாடி

–    கண்ணி – 27

வெறுக்கை – செல்வம், பொன், வாழ்வின் ஆதாரமாயுள்ளது.

 

4.ஈகை

இரக்கின்றவர்க் கெல்லா யீகையே நின்னைக்

கரக்கின்ற வர்க்குவேங் கைய்யே – புரக்கின்றோர்

–    கண்ணி – 28

ஈகை – பொன், கொடை . வேங்கை –  பொன், புலி

5.சாதரூபம்

தாக்குமுடல் நீசாதத் ரூபமுநீ யாகையாற்

காக்கப் படுவதுநீ காப்போனீ – நீக்கமற

–    கண்ணி – 29

சாதரூபம் – நால்வகை பொன்களுள் ஒன்று

6.கல்யாணம், ஏமம்

வீட்டியகல் யாணமுநீ யேமமுநீ யென்பதனாற்

காட்டிய காரணனீ காரிய நீ – வாட்டமறக்

–    கண்ணி – 30

கல்யாணம் – பொன்.  ஏமம் – பொன்

 

7.மா

கண்ணப் படுமாவுங் கரணமு மாகையால்

உண்ணப் படுவதுநீ யுண்போனீ – யெண்ணியெண்ணிச்

–    கண்ணி – 31

மா – செல்வம்

 

8.நிதானம்

சீரிட்ட நின்னைத் தெளித்து நிதானமென்று

பேரிட் டவரே பெரியோர்காண் – ஊரிற்

–    கண்ணி – 32

நிதானம் – பொன்

 

9.அரி

கரியபொரு ளல்லாத காந்திப் பொருளை

அரியென் பலர்வீண ரன்றோ – பெரியநெடுங்

–    கண்ணி – 33

அரி  – பொன்

 

 

10.மாடு

கோடென்றுங் கால்வால் குளம்பென்றுங் காணாமல்

மாடென் றவர்மோழை மாடன்றோ – கூடுமுன்னே

–    கண்ணி – 34

மாடு – செல்வம், பொன்

 

11.குதிரைக் குளம்பன்

குலுக்குக் குதிரை குளம்புதலை யச்சலுக்குத்

துலுக்க ரிடர வே(சித்தம்) – பெலக்கவே

–    கண்ணி – 77

குதிரைக் குளம்பன் – குதிரைச்சின்னம் பொறித்த நாணயவகை

 

12.மோகரம்,சம்பங்கி

முல்லங்கி போல முளைக்கவைத்தா லும்முளைக்கும்

பல்லங்கி மோகரஞ்சம் பங்கிதான் – தொல்லைநாள்

–    கண்ண் – 78

மோகரம் – பத்து, பதினைந்து ரூபாய் மதிப்புள்ள ஒரு

நாணயம், குதிரை முல்லங்கி, மோகரா, சம்பங்கி

இவைகள் நாணய வகைகள்.

13.சாணான் காசு, ஈடு, தங்கக்காசு, சந்தமிக் காசு

போட்டநந்தன் றோற்காசு போல்வழங்கு சாணான்காசு

ஈட்டுதங்கக் காசுசந்த மிக்காசு – நீட்டும்

–    கண்ணி – 79

சாணான் காசு – தோலால் செய்யப்பட்ட காசு

ஈட்டு தங்கக்காசு – ஈடு எனப்படும், தங்கத்தாலான காசு

நந்தன் தோற்காசு – தோலால் செய்யப்பட்ட காசு

 

14.பெருங்காசு, கரு வெருமை நாக்கு

அரைத்தகடுக் காயற் றகடாளிட்ட பெருங்காசு

நரைத்த கருவெருமை நாக்கு – நிரைத்துத்

–    கண்ணி – 80

பொருங்காசு – தகடால் ஆன நாணயம்

 

15.பெருங்கீற்று, சன்னகீற்று

தழங்கும் பெருங்கீற்று சன்னகீற றென்ன

வழங்கும் பிரதானி மாரும் – முழுங்குபவ

–    கண்ணி – 81

பெருங்கீற்று, சன்னகீற்று – தகடால் ஆன நாணயம்

16.வராகன், மாடை

தேடும் வராகனெனுஞ் செய்யதள தர்த்தரும்பொன்

மாடையெ னுந்தம்பி மாருடனே – நாடெல்லாம்

–    கண்ணி – 85

வராகன் – மூன்றரை ரூபாய் மதிப்பு உள்ளதும், பன்றி

முத்திரை கொண்ட பொன் நாணயம்

மாடை – பத்துக் குன்றி எடையுள்ள நாணய வகை

 

 

 

17.பரிசாவெட்டு

……….ரகுநாதப்

பாரிசா வெட்டும் பருஞ்சுழி யொப்பமும்

நேரிசந் தாங்குகன நீள்மையும் – ஓருரையும்

–    கண்ணி – 97

பரிசாவெட்டு – திசை எட்டும், திசைகளில் வழங்கும் வெட்டு

(நாணய வகை).

18.வெட்டு

முன்புது மின்னலுடன் மொல்லா வெட்டுங்கழிவு

மன்புதிகழ் செப்பா டலுங்கருக்கும் – பொன்பூசுஞ்

–    கண்ணி – 98

வெட்டு – சில்லரை நாணய வகை

 

19.நாணயம், கோழி விழுங்கள், நண்டுக்கால், ஊணயம், உள்ளான்

நாணயமுங் கோழி விழுங்கலு நண்டுக்கா

லூனையமு மைக்காட்டி லுள்ளானுக் – காணயமாய்க்

–    கண்ணி – 100

நாணயம், கோழி விழுங்கல், நண்டுக்கால், உள்ளான் – சில்லரை நாணய வகைகள்.

கோழிக்காசு – இராஜராஜன் வெளியிட்டக் காசு

 

20.கீழா நெல்லிக்கொட்டை, சில்லறை

கொண்டகீ ழாநெல்லிக் கொட்டையு மெங்கும்போய்ச்

சண்டையிடுஞ் சில்லறையுந் தன்வலுவுங் – கண்டபேர்

–    கண்ணி – 101

கீழா நெல்லிக்கொட்டை  –  நாணய வகை

21.மட்டம், கம்பட்டம்

வட்டமிட்டுத் தாண்டுமொரு மட்டத்தி லேறிவந்து

செட்டிகளைத் தெட்டித் திரிவதுவுங் – கட்டழகார்

கம்பட்ட மென்னு மரமனையுங் காயுமுலைக்

கும்பிட்ட வுட்கொலுவின் கூடமுந் – தம்பிக்குப்

கண்ணி – 103,104

மட்டம் – பொன்மணியன் உறுப்பு வகை

கம்பட்டம் – நாணயம்

என முப்பத்தி ஆறு வகையான சொற்கள் பணத்தை அல்லது நாணத்தை குறிக்கும் சொற்களை பல பட்டடைச் சொக்கநாத கவிராயர் இயற்றிய பணவிடு தூது மூலம் நாம் அறிய முடிகின்றது. மேலும் பணம் என்ற சொல் அக்காலத்தில் நாணயத்தையே குறிக்கும் சொல்லாகவே இருந்துள்ளது.

 

குற்றமுள்ள நாணயம்

நாணயம் செய்முறையில் ஏற்படும் குற்றங்கள் வைத்தே கோழிவிழுங்கள், நண்டுக்கால், ஊணையம், உள்ளான், கீழாநெல்லிக் கொட்டை என்ற பெயர்கள் இடப்பட்டிருக்கக் கூடும் என அதன் பெயரைக்கொண்டு அறிய முடிகின்றது.

மதிப்பு

அதிக மதிப்பு உடைய நாயணங்களை பெருங்காசு, பெருங்கீற்று எனவும், சிறுமதிப்பு உடைய நாணயங்களை சன்னக்கீற்று, சில்லறை என சிறு மதிப்புடைய நாணய வகை என்பதை இவற்றின் பெயரமைப்பை நோக்கும் போது அறிய முடிகின்றது.

 

 

புதுமைகள்

  1. “பொன்னவா தேவா புகழ்வா ரவரகத்து

மன்னவாதூ துரைத்து வா”

– கண்ணி – 369

என்பதனால் தூது சொல்லி அனுப்புபவள் பெண் என்பது அறிய முடிகின்றது. ஆனால் இது தலைவி விடுக்கும் தூது என்று கொள்ள இடமில்லை, ஆனால்

“                                    ……….கெஞ்சத்

துடர்ந்தென் மனைபுகுந்த தோகைக்குத் தூது

நடந்தனையோ ரெல்லாரு நைந்தார்”

–    கண்ணி – 363

இக்கண்ணிகளை நோக்கும் போது, தொடர்ந்து தோழியின் மனை புகுந்த தோகை தலைவியாகவும், தலைவிக்காக இதற்கு முன் தூது சென்றவரது முயற்சிகளெல்லாம் பலிக்கவில்லை. ஆனால் பணமே! நீ சலவை முக்காடு நீக்கி முகங்காட்டி நின்றவுடன், அக்காரக்கட்டி உரைத்தாற் போல் உன்னுடன் கனிந்து உரையாடுவார். ஆகவே நீ தூது முயற்சியில் வெற்றி பெறுவாய்! சென்று தூதுரைத்து வா, எனத் தலைவி பொருட்டுத் தோழி ஒருத்தி தூது அனுப்புவதாக இந்நூலில் அமைந்து உள்ளது.

 

2.    தூது நூல்களில் பாட்டுடைத் தலைவனுக்கு தான் தசாங்கம் பாடப்படுவது மரபு. ஆனால் இன்நூலில் மலை, ஆறு, நாடு, நகர், மாலை, குதிரை, யானை, கொடி, முரசு, ஆணை என பணத்திற்கு தசாங்கம் பாடப்பட்டுள்ளது.

 

3.    பணத்தை உயர்திணையாக உருவகித்துப் பணத்திற்கு உறவு முறைகளும், அரச பதவியும் அளித்துப் பாடப்பட்டுள்ளது. மேலும் மனித வாழ்க்கையில் பணம் பெறும்  முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகின்றது.

 

4.    மருத்துவர், தர்க்கவாதிகள், பொய்ப்புலவர்கள், நிலச் சொந்தக்காரர்கள், விலை மாதர்கள், கலைக் கூத்தாடிகள், இரசவாதம் செய்பவர்கள், பேயோட்டும் மந்திரவாதிகள் என இவர்கள் “பணம் சேர்த்தல்” என்ற ஒன்றையே  குறிக்கோளாகக் கொண்டு பட்டப்பகலில் எத்தகைய இருட்டடிப்பு வேலைகளைச் செய்கிறார்கள் என்பதையும்.  பணம் சேர்க்க எத்தகைய குறுக்கு வழிகளையும் மேற்கொண்டு தங்களிடம் உள்ளதையும் இழக்கிறார்கள் என்பதையும் பணவிடு தூது என்னும் இன்நூல் புலப்படுத்துகின்றது.

 

முடிவுரை

மேலே கூறிய செய்திகள் மூலம் பண்டைய தமிழ் மக்கள் நாணயம் என ஒன்றைக் குறிக்க முப்பத்தி ஆறு பெயர்கள் இருந்ததை நோக்கும் போது தமிழ் மொழியின் மொழி வளமும், சொல் வளமும், தமிழரின் பண்பாட்டு வளர்ச்சியும், நாகரிக வளர்ச்சியும் புலனாகிறது.

இந்நாணயப் பெயர்களில் பல இன்று வழக்கொழிந்து போய் விட்டதால் அவற்றின் மதிப்போ, வடிவமோ அறிய இயலாமல் போனது நம் துர்ப்பாக்கியமே ஆகும். மேலும் அக்காலத்தில் பணம் என்ற சொல் நாணயத்தையே குறிப்பவனாகவே வழக்கில் இருந்து உள்ளது.

துணை நூற் பட்டியல்

1. தொல்காப்பியம்.

2. இருபதாம் நூற்றாண்டுச் சிற்றிலக்கியங்கள்.

3. மெய்யப்பன் தமிழ் அகராதி.

Series Navigationஜோதிர்லதா கிரிஜாவின் “மாறாத மனிதர்கள்”சூரிய மண்டலத்தில் பூமியை நெருங்கச் சுற்றித் திரியும் மூர்க்க முரண் கோள்கள் [Rogue Asteroids]வால்ட் விட்மன் வசனக் கவிதை – 60 ஆதாமின் பிள்ளைகள் – 3சீதாயணம் நாடகப் படக்கதை – 18

2 Comments

  1. ஆய்வுக் கட்டுரை அருமை. பணத்திற்கு பண்டைய தமிழர்கள் 36 பெயர்கள் இட்டு அழைத்துள்ளது வியக்க வைக்கிறது! பாராட்டுகள் சூ. முரளீதரன் அவர்களே… டாக்டர் ஜி. ஜான்சன்.

  2. Avatar Anand

    Vanakkam,

    Can i get the book or details about “அலைவாய் விறலி விடு தூது”. Kindly help.

    Thanks
    C.Anand
    9942034433

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *